Tuesday, December 17, 2013

தமிழகத்தில் ‘விஷ்ணுபுரம்’ விருது பெறும் தெளிவத்தையுடன் சில நிமிடங்கள்…..

'பாபர் லயம், அப்பா அங்கே போன பின்னர் வாத்தியார் லயமானது'


மணி  ஸ்ரீகாந்தன்

கலாபூசணம் தெளிவத்தை ஜோசப்
மந்த நிலையில் தவழ்ந்து கொண்டிருந்த மலையக சிருஷ்டி உலகில் ஒரு சுழல் காற்றாகப் பிரவேசித்து பிரளயத்தை உருவாக்கியவர்.79 வயதிலும் சுறுசுறுப்பாக சொந்த வாழ்க்கையிலும் சரி, சிருஷ்டி உலகிலும் சரி இயங்கிக் கொண்டிருக்கும் தெளிவத்தை ஜோசப் அறுபதுகளில் அகஸ்தியர், எஸ்.பொ,இளங்கீரன் சுபைர் ஆகியோர் புத்தெழுச்சியை ஈழத்து இலக்கியப் பரப்பில் ஏற்படுத்திக் கொண்டிருந்த போது மலையகத்தில் அவ்வெழுச்சியைத் தன் சிறுகதைகள்,நாவல்கள் மூலம் ஏற்படுத்திய தெளிவத்தையார் இன்று ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில் வாழ்நாள் சாதனையாளராகவும் மூத்த முதன்மைப் படைப்பாளர்களில் ஒருவராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

‘ஓடுகிற பஸ்சில இருந்து குதித்து இறங்காதீங்க! என்றுதான் எல்லோரும் எனக்கு அட்வைஸ் செய்றாங்க. எனக்கு எழுபத்தொண்பது வயது என்று சொன்னாலும் யாரும் நம்புறாங்க இல்லை...’ என்று இளமை ததும்ப பேசுகிறார் தெளிவத்தை ஜோசப். தமது அந்தக் கால நாட்களை அசைபோடுவதில் அதிக விருப்பம் காட்டியவர் இவர். தமது அனுபவங்களை அப்பாவின் காலத்திலிருந்து தொடங்குகிறார் தெளிவத்தை. 'எனது அப்பா பெயர் சந்தன சாமிப்பிள்ளை. திருச்சி சென்ஜோசப் கல்லூரியில் படித்து ஆசிரியராக இருந்திருக்கிறார். நூறு வருடங்களுக்கு முன்னாள் திருச்சி பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் வெள்ளைக்காரர்கள் ஒரு போர்ட் வைத்திருந்தார்களாம். அதில் பதுளை ஊவா கட்டவளை தோட்டத்து பாடசாலைக்கு வாத்தியார் தேவை என்றும், மாதச் சம்பளம் 55 ரூபா என்றும் குறிப்பிட்டு தொடர்பு முகவரியும் எழுதப்பட்டிருந்ததாம். அதைப் பார்த்த எனது தந்தை, அந்த முகவரியை தேடிப்போய் விபரங்களை பெற்று இலங்கை வந்திருக்கிறார். அவரை அழைத்துச் சென்ற வெள்ளைக்கார துரை, ஒரு சிறிய பாடசாலையைக் காட்டி ‘இதுதான் நீ படித்துக்கொடுக்க வேண்டிய பள்ளிக்கூடம்’ என்று கூறியிருக்கிறார்.
 அப்பா தங்குவதற்கு இடம் கேட்க அந்த பாடசாலைக்கு கீழே உள்ள லயத்தைக் காட்டி, இப்போ இந்த லயத்தில் உள்ள கடைசி வீட்டில நீ தங்கிக்கொள்ளலாம் என்றும் கூடிய சீக்கிரமே உனக்கு தனியாக ஒரு வீடு கட்டி தருகிறோம் என்றும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு சம்மதித்த அப்பா, அந்த லயத்தில் தங்கியிருக்கிறார். பிறகு அப்பாவுக்குக் கல்யாணம் நடந்திருக்கிறது. நானும் அண்ணனும் பிறந்து இருவரும் திருமணம் முடித்து குழந்தை குட்டிகள் என்று ஆகிவிட்டது. ஆனாலும் வெள்ளைக்காரன் அப்பாவுக்கு தனியாக வீடு கட்டித் தரவேயில்லை. அப்பா அதே லயத்து வீட்டிலேயே இறந்தும் போனார்.

வெள்ளைக்காரன் வாக்கு தவற மாட்டான் என்று சொல்வார்கள். ஆனால் எனது அப்பாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் போய்விட்டான்’ என்று பெருமூச்சுவிடும் தெளிவத்தை, இன்னொரு சம்பவத்தையும் சொல்கிறார். அந்த லயத்தில் வசித்த பிச்சைமுத்து பாபர் ரொம்பவும் பெயர் போன மனுஷனாம். ‘எங்க லயத்தோட கடைசி காம்பராவில்தான் முடிவெட்டுவாரு.

இள வயதில்..
அவர் கிட்டதான் நானும் முடிவெட்டிக்குவேன். ஒருநாள் அவர் எனக்கு முடிவெட்டும் போது ஒரு விசயத்தைச் சொன்னார். ‘தம்பீ, உங்கப்பா இந்த லயத்திற்கு வருவதற்கு முன்பு இந்த லயத்தை பாபர் லயம்னுதான் சொல்லுவாங்க. உங்கப்பா எப்போது இங்கே வந்து குடியேறினாரோ அன்றிலிருந்து இந்த லயம் வாத்தியார் லயம்னு பெயர் மாற்றம் அடைந்தது என்றார் அவர். பாவம் பிச்சைமுத்து.

அவர் பெயர் பறிபோனதில் அவருக்கு கவலை இல்லாமல் இருக்குமா! இன்றைக்கும் அந்த லயம் வாத்தியார் லயம்னுதான் அழைக்கப்படுகிறது.

அந்த தோட்டத்திலேயே படித்தவர் அப்பாதான். அதனால் அவருக்கு கிடைக்கின்ற மரியாதையில் பாதி எங்களுக்கும் கிடைத்தது. அண்ணனையும் என்னையும் வாத்தியார் தம்பினுதான் கூப்பிடுவாங்க! அப்பாவை நான் ஆஞ்ஞா’ என்று தான் அழைப்பேன். தமிழ்நாட்டில் திருச்சிதான் அப்பாவின் ஊர். அங்கே அப்பாவின் சமூகத்தவர்கள் அப்பாவை ‘ஆஞ்ஞா’ என்றுதான் அழைப்பார்களாம். அதன்படியே நானும் அழைத்தேன். என்னுடன் படிக்கும் சக மாணவர்கள் என்னை ‘ஆனா’ என்று கிண்டல் செய்வார்கள் அவர்களுக்கு ‘ஆஞ்ஞா’ என்று சொல்ல வராது. ஊவா கட்டவளை கலவன் பாடசாலையில் ஐந்தாவது வரை நான் படித்தேன்.

அந்தப் பாடசாலையில் பொன்னம்பலம், முருகேசு, சின்னையா ஆகியோர் ஆசிரியர்களாக படிப்பித்தார்கள். அவர்களுக்கு நானும் எனது நண்பர்கள் சிலருமாக பட்டப் பெயர்களை சொல்லி எங்களுக்குள் அழைப்போம். பொன்னம்பலம் மாஸ்டர் நல்லவடிவான ஆளு. அதனால் அவரை ஜெமினிகணேசன் என்று அழைப்போம். சின்னையா மாஸ்டருக்கு பெயர் ஏதும் வைக்கவில்லை. ஆனால் அவரை இவருக்கு ஜெமினின்னு நெனப்பு என்று எங்களுக்குள் சொல்லிக்கொள்வோம். எனது அப்பா கருப்பு கோட்டும். வெள்ளை வேட்டியும் தான் அணிவார். ஓய்வு நேரங்களில் தோட்ட வேலை செய்வார். எங்கள் காய்கறி தோட்டத்தில் நானும் அண்ணனும் அவருக்கு ஒத்தாசையாக வேலை செய்வோம்.
திருமணமான புதிதில்..
அப்பா அன்பானவர் என்றாலும் ரொம்பவும் கண்டிப்பானவர். நானும் அண்ணனும் ஏதாவது குறும்பு செய்துவிட்டால் எங்கள் இருவரையும் வீட்டிற்கு வெளியே முழங்காலில் அமர வைத்து இருவர் கைகளிலும் இரண்டு குழவிக் கல்லை தூக்கி தந்துவிடுவார். அவர் பாடசாலை சென்று வரும் வரைக்கும் நாங்கள் முழங்கலில் அமர்ந்து குழவிக் கல்லை கையால் தூக்கி பிடித்த படியே அமர்ந்திருக்க வேண்டும்.

அந்த லயத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் நாங்கள் அப்படி இருப்பதை வேடிக்கை பார்ப்பார்கள். சிலர் எம் மீது பரிதாபப்பட்டு குழவிக் கல்லை வாங்கி வைத்து விடுவார்கள். அப்பா வரும் போது கல்லை தூக்கித் தருவார்கள். அந்தக்காட்சி நேற்று நடந்த மாதிரியே இருக்கு’ என்று பழையதை நினைத்து உள்ளம் பூரிக்கிறார்.

அவரிடம் சின்ன வயதில் நீங்கள் விளையாட்டில் எப்படி? என்று கேட்டதும்.

தெளிவத்தையாருக்கு சிரிப்பு வந்துவிட்டது.

‘அப்போது எனக்கு ஒரு பதினைந்து வயதிருக்கும். எனது அம்மாவின் ஊரான கும்பகோணம் வடகரையில் நான் படித்துக் கொண்டிருந்த காலம். எங்கள் வீட்டுக்கு முன்னால் பெரிய குளம். அதில் எருமைகளை குளிப்பாட்டுவார்கள்

நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து அங்குதான் குளிக்கப் போவேன். அந்த குளத்தின் மேட்டுப் பகுதியில் இருந்து கரணம் போட்டு குதிப்பேன். அப்புறம் எனக்கு ரொம்பவும் பிடித்த விசயம் எருமை மாட்டின் மீதேறி சவாரி போவது. அது ரொம்பவும் ஜாலியா இருக்கும்.

கும்பகோணம் வடகரை பற்றி சொல்லும் போது இன்னொரு விசயமும் ஞாபகத்திற்கு வருகிறது. எனது வீட்டுக்கு முன்னால் உள்ள குளத்தின் மறுபக்கத்தில் பிராமணர்கள் வசிக்கும் அக்ரஹாரம் இருந்தது. அந்தப் பகுதிக்கு குறிப்பாக தலித்துகள் போகக் கூடாதாம்.

இந்த விடயம் தெரியாத நானும் எனது நண்பனும் அக்ரஹாரத்துக்குள் நுழைந்துவிட்டோம். எங்களுக்கு எதிரில் வந்த ஒரு பிராமணர் எங்களைப் பார்த்ததும் அவருக்கு அசூசையாகிவிட்டது. ஆத்திரமும் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.

‘ஒத்துடா, ஒத்துடா’ என்று கத்தினார். நாங்கள் அசையவில்லை. ‘ஒத்தேன்டா மூதேவி’ என்றவர் ஏதோ பேய்பிசாசைக் கண்ட மாதிரி பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்குள் ஓடி கதவை சாத்திக்கொண்டார். என்ன ஏது என்று விளங்காமல் நாங்களும் திரும்பிவிட்டோம்.

வீட்டுக்கு வந்து நடந்ததைச் சொன்னதும் வீட்டில் அங்கெல்லாம் போகக்கூடாது என்று சொன்னார்கள். சூத்திரர்களைப் பார்த்தால் தீட்டு என்றும் பரிகாரம் செய்து குளிக்க வேண்டியிருக்கும் என்றும் என்னிடம் சொன்னார்கள். இந்தச் சமூகக் கொடுமையை பின்னாளில்தான் நான் புரிந்துகொண்டேன்.

மகளின் பிறந்த தின விழாவில்..
ஊவா கட்ட வலையில் நானும் எனது நண்பர்களும் சேர்ந்து ஒரு விபரீத விளையாட்டு விளையாடுவோம். பஸ் டயரின் வட்டமான வளைவின் உள்ளே ஒருவனை அமர வைத்து மேட்டு பகுதியிலிருந்து பள்ளத்திற்கு உருட்டி விடுவதுதான் அந்த விளையாட்டு. இப்படி ஆள் மாற்றி ஆள் டயருக்குள் அமர்ந்து உருண்டு செல்வோம்.

டயர் பயங்கரமான வேகத்தில் பாறை, மரங்களில் முட்டுபட்டு ஓடி ஓரிடத்தில் விழும் அப்படி விழும்போது நாமும் விழவேண்டும். அப்படி விழுந்தால் தலை சுற்று வந்து விடும். சிறிது நேரத்திற்கு எழும்பவே முடியாது. இந்த விளையாட்டில் சில சமயங்களில் காயம் ஏற்படுவதும் உண்டு. சொல்லுங்கள் இப்படியான வீர விளையாட்டை நீங்கள் விளையாடி இருக்கியர்களா?’ என்று எம்மை பார்த்து கேட்கிறார் ஜோசப்.   இல்லையே!

‘அந்தக் காலத்தில் சினிமா பார்க்கப் போவதென்பது ரொம்பவும் பெரிய விசயம். அதுக்கென்றே ஒரு நாளை ஒதுக்கி காலையிலேயே குளித்து புதிய ஆடை உடுத்தி தியேட்டருக்கு போக தயாராகி விடுவோம். அப்பா வாடகை கார் மூலமாக தான் எங்களை அழைத்து செல்வார். அது ஒரு இனிமையான அனுபவம். சில நாட்களில் கார்க்காரன் வருவதாக சொல்லிவிட்டு கார் பழுதாகிவிட்டதாக சொல்லி வராமல் விட்டுவிடுவான். அப்படியான சந்தர்ப்பங்களில் அழுகை அழுகையாக வரும். எதையோ இழந்துவிட்ட மாதிரி தோன்றும்.

பதுளை கிங்ஸ் தியேட்டர், அப்புறம் அனோஜா டோக்கீஸ் போன்ற தியேட்டர்களில் படம் பார்த்திருக்கிறேன். பிச்சைக்காரி, சிங்காரி உள்ளிட்ட படங்கள் பார்த்த ஞாபகம் இப்போதும் இருக்கிறது. எனக்கு பிடித்த நடிகர் டி. ஆர். மகாலிங்கம், நடிகை ஈ. வி. சரோஜா’ என்று தமது இனிமையான அந்தநாள் ஞாபகங்களில் பயணம் செய்துகொண்டிருந்த ஜோசப்பிடம், காதல் அனுபவம் எப்படி என்றோம்.

‘ஐயய்யோ! நம்மகிட்டே அதையெல்லாம் கிடையாதுங்க... என்று ஆரம்பிக்கவே எல்லோரும் சொல்லுற பதில் தான் சொல்லுங்கள் என்றோம்.

எனது அண்ணனுக்கு கொழும்பிலதான் பொண்ணு பார்த்தாங்க. அப்போதுதான் முதல் முதலாக தோட்டத்திலிருந்து நான் கொழும்பிற்கு வந்தேன். வத்தளையில் தான் பெண் வீடு. அப்போது எனக்கு ஒரு இருபது வயதிருக்கும். அந்த வீட்டில் இருந்தவர் தான் மணப்பெண்ணின் தங்கை பிலோமினா. அவளுக்கு ஒரு பத்து வயதிருக்கும். துருதுருவென்றிருப்பாள். நான் அவளுடன் தான் விளையாடுவேன். அதன் பிறகு அடிக்கடி கொழும்புக்கு வருவது பிலோமினாவுடன் விளையாடுவது என்று காலம் நகர்ந்தது. அது ஒரு வகையான காதல் என்று எனக்கு பிறகுதான் தெரிந்தது. எனக்கும் அவளுக்கும் பத்து வயது வித்தியாசம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் காதலுக்கு தெரியாதே! சுமார் பதினைந்து வருடங்கள் தொடர்ந்த காதல் கல்யாணத்தில் முடிந்தது.

1968ல் கிராண்ட்பாஸ் சென்ஜோசப் தேவாலயத்தில் பாதர் பின்டோவிண் தலைமையில் எங்கள் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு டொக்டர் பெர்னாண்டோ, தெளிவத்தை அலுவலகத்தில் வேலைபார்த்த கிளார்க் குரே, டெய்லிமிரர் கிருஸ்ணசாமி, பத்திரிகையாளர் கார்மேகம் ஆகியோர் வந்து வாழ்த்தினார்கள். மருதானை டொனால்ட் ஸ்டூடியோவில் தான் கல்யாணப் படம் பிடித்தோம்.

தெளிவத்தை அண்ணன் வீட்டில்தான் முதல் குடித்தனம். ஹனிமூன் என்று எங்கு வெளியே சென்றதாக ஞாபகம் இல்லை.

திருமணமான புதிதில நுகேகொடையில் உள்ள என் மைத்துனர் வீட்டில் தங்கினோம். அதுவும் ஹனிமூன் மாதிரிதான். பிறகு சிறிது காலத்திற்கு பிறகு வத்தளையில் வீடு எடுத்து இங்கேயே தங்கிவிட்டேன்’ என்ற ஜோசப்பிடம் ‘நீங்கள் பிறந்ததும் வளர்ந்ததும் ஊவா கட்டவளை என்றால் எப்படி தெளிவத்தை உங்கள் பெயருக்கு முன்னால் வந்தது?’ என்ற எங்கள் சந்தேகத்தைக் கேட்டோம்.

‘எனது அண்ணன் ஞானபிரகாசத்திற்கு தெளிவத்தையில் உள்ள தோட்ட அலுவலகத்தில் வேலை கிடைத்ததும். அவருக்கு சாப்பாடு சமைத்துக் கொடுப்பதற்காகத்தான் நான் தெளிவத்தைக்குச் சென்றேன். அங்கே சென்ற பிறகுதான் எனது படைப்புகளை பத்திரிகைக்கு அனுப்பினேன்.

நான் கதை சொல்லியாக மாறுவதற்கு பிரதான காரணமாக தெளிவத்தையே இருந்திருக்கிறது. நான் சினிமா படம் பார்த்து வந்த பிறகு என்னிடம் கதை கேட்க  தோட்டத்து சனங்கள் கூடிவிடுவார்கள். குறிப்பாக எனது நண்பர்கள் அவர்களுக்கு நான் வீட்டிலிருந்து வாடகை கார் பிடித்து பதுளை போய் இறங்கி ‘அனோஜா டோக்கீஸ்சில்’ டிக்கட் எடுத்து படம் பார்க்க தொடங்கியதிலிருந்து இடையில் கரண்ட் கட் ஆகியது வரையும் ஒன்றுவிடாமல் சொல்வேன். அந்த நேரத்தில் நான் சொல்லும் சினிமா கதை இப்போ உள்ள மெகாசீரியல் மாதிரி இருக்கும். ஒரு படக் கதையை முதல்நாள் இடைவேளைவரை சொல்லிவிட்டு மறுநாள் மிகுதியை சொல்லி முடிப்பேன்.

எங்க தோட்டத்தில அப்போது ஒவ்வொரு விசயத்தையும் ஆச்சரியமாகத்தான் பார்ப்பாங்க. பேசுவாங்க. நாங்க கார் பிடித்து படம் பார்க்கப் போன கதையை அந்த ஊரே புதுமையா பேசும்... எங்க தோட்டத்தில முதல் முறையாக ‘சிமிழ் விளக்கை எங்கப்பா வீட்டிற்கு கொண்டு வந்ததும் அந்த லயத்து ஆட்கள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தார்கள். அப்புறம் எங்க வீட்டிற்கு கிராமபோன் பெட்டி, ரேடியோ போன்றவை வந்தபோதும் இதே மாதிரித்தான் ஆச்சரியப்பட்டாங்க. அது ஒரு காலம்.

இப்போ மலையகம் ரொம்பவே மாறிபோச்சு. செட்டலைட், செல்போன், கம்யூட்டர் என்று வந்துவிட்டது.

ஊவா கட்டவளையில் அப்போது வி. ஐ. பி ன்னா தபால்பொடியன், ஆர்மோனியம் வாசிக்கும் கேசவன், ஊர் சந்தியில் உள்ள ஒத்தக்கடைக்காரர் ஆகியோர் தான் இந்த ஒத்தக்கடைக்கு இன்னொரு சிறப்புப் பெயர் உள்ளது. அள்ளிப்போட்டான் கடை என்போம். அதன் முதலாளி ராவுத்தர் சாமான் நிறுத்துதரும் போது கொஞ்சம் எஸ்ட்ரா வா அள்ளிப் போட்டு தருவாராம். இப்போ அந்த கடையை காணோம்’ என்று பழையதை நினைத்து உருகும் எழுத்தாளரிடம் வாழ்க்கையில் மறக்க முடியாத நபராக யாரைக் கருதுகிறீர்கள்?’ என்று கேட்டோம்.

‘கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக என்னுடனேயே பயணம் செய்யும் என் மனைவி தான்’ என்று மனைவிக்கே முதலிடம் தந்தார்.
எங்கள் அலுவலகத்தில் தெளிவத்தையுடன்….
வாழ்க்கையில் பெறுமதியான விடயமாக எதைக் கருதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு எழுத்தாளராக இருப்பதைத் தான் என்று பதில் சொன்னார். நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி என்று கேட்டபோது,

‘நாம் வாழ்ந்த வாழ்க்கை எத்தனை சின்னதாக இருந்தாலும் அந்த வாழ்க்கையில் எதிர்கொண்ட மேடு பள்ளங்களையும் கடந்து அதில் வரும் ஆனந்தம், துயரம் போன்றவற்றில் பங்கெடுத்து வாழ்வை புரிந்துகொண்டு வாழ்ந்து காட்டுவதுதான் மிகவும் இனிமையானது அர்த்தம் உள்ளது என்று கருதுகிறேன். வாழ்க்கை ஒரு முறை தான் வரும். அதை நாம் இழந்துவிடக் கூடாது. அதை நான் சரியாகவே பயன்படுத்தி திருப்தி அடைந்துள்ளேன்...’ என்றார் நிறைந்த மனதுடன்.
வாழ்க்கையில் தான் சந்தித்த அதிர்ச்சியான சம்பவம் பற்றி தெளிவத்தை இப்படிக் கூறுகிறார் :-

‘அந்த அதிர்ச்சியான சம்பவம் ஜுலை கலவரம் தான். அப்போது நான் கிராண்ட்பாஸ் ஸ்டார் பிராண்ட் டொபி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அன்றுகாலை பத்து மணியிருக்கும்.... தமிழர்களின் உயிர் உடைமைகள் சூறையாடப்படுவதாக செய்திகள் பரவின. நானும் மனேஜர் சிவராஜாவையும் தவிர வேறு யாரும் ஃபெக்டரியில் இல்லை.

மற்ற வேலையாட்கள் அனைவரும் வெளியே போய்விட்டார்கள். நாங்கள் மாத்திரம் அலுவலகத்தினுள் இருந்தோம். கொஞ்ச நேர த்தில் காடையர் கும்பல் எமது கம்பனியின் பிரதான வாயிலை உடைத்து உள்ளே நுழைந்தார்கள். எல்லோர் கையிலும் ஆயுதங்கள். அகப்பட்டால் அடித்தே கொன்றுவிடுவார்கள். நானும் மனேஜரும் ஒரு மூலையில் பதுங்கினோம். பிறகு காடையர்கள் கம்பனியின் உள்ளே சென்று பொருட்களை திருடும் வேலையில் ஈடுபட்டபோது அங்கிருந்து மெல்ல வெளியேறினோம். அப்போது ஒரு இரும்புக் கரம் என் தோளை அழுத்திப் பிடித்தது.

நான் அப்படியே வெலவெலத்துப் போனேன். ‘தமுசே ஜோசப் நேத’ என்று அந்த நபர் என்னை பார்த்து கேட்டதும் எனது ரத்தம் அப்படியே உறைந்துபோனது. பிறகுதான் அவர் கிராண்ட்பாஸ் செயின்ஸ்தான் தியேட்டரில் காவலாளியாக இருக்கிறார் என்பதும் அந்த தியேட்டரில் மனேஜராக இருந்த எழுத்தாளர் அஸ்வத்கானின் வேண்டுகோளுக்கு அமையவே அவர் எங்களை அந்த தியேட்டருக்கு அழைத்துச் செல்ல வந்திருந்தார் என்பதும் தெரியவந்தது. அவர் எங்களை தியேட்டருக்குள் வைத்துப் பூட்டி வைத்தார்.

இரண்டு இரவுகள் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு அந்த தியேட்டருக்குள்ளேயே இருந்தோம். இந்த சம்பவத்தை வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது’ என்று தான் உயிர் மீண்ட கதையை சொல்லி முடித்தார் ஜோசப்.

No comments:

Post a Comment