Wednesday, November 29, 2017

விஜய் சேதுபதி படம் தயாரிக்கிறாரா?

மைக்கல் ஜெயராஜ், பதுளை

ஆம். முன்னர் 2015 இல் ஆரஞ்சு மிட்டாய்,2017 இல் மேற்கு தொடர்ச்சி மலை. சங்குதேவன் ஆகிய படங்களுடன் இப்போது ஜீங்கா என்ற படத்தையும் தயாரித்துள்ளார். இதில் ஆரஞ்சு மிட்டாய் மட்டும் திரைக்கு வந்தது. தோல்வியடைந்தது. ஜீங்கா இப்போது வெளிநாடுகளில் படமாக்கப்படுகிறது. ஜீங்காவில் வித்தியாசமான கேச அமைப்புடன் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டுள்ள விஜய் சேதுபதியையே இங்கே காண்கிறீர்கள்.

மகேஷ் பாபுவின் நேரடி தமிழ்ப்படமான ‘ஸ்பைடர்’ படுதோல்வியாமே?
எம்.இஸ்மாயில் பேருவளை
சமீபகாலத்தில் வந்த படங்களிலேயே முன்றாவது பெரும் தோல்வியை சந்தித்த படம் ‘ஸ்பைடர்’ தான்! மிகப்பெரிய தோல்விகள் பட்டியலில் ஹிரித்திக் ரோஷன் நடித்த ‘மொஹன்ஜதாரோ’ முதல் இடத்திலும் ரன்பீர் கபூர் நடித்த ‘பொம்பே வெல்வட் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் தென்னிந்திய படமான ஸ்பைடரும் உள்ளன. ஸ்பைடரின் படுதோல்விக்கான காரணம் என்னவென்று சரியாகத் தெரியவில்லை.


‘பாகுபலி, பாகுபலி 2’ சாதனை படைத்தன. அடுத்து ‘பாகுபலி 3’ வருமா?
மங்கள, கண்டி

பாகுபலி 3 வராது. தனது அடுத்த படம் மகாபாரதம் என்று ராஜமௌலி அண்மையில் கூறியிருக்கிறார். அதற்கான திரைக்கதையை அவர் இப்போது எழுதி வருகிறார். அதனை மூன்று பாகங்களாக அவர் எடுக்கப்போகிறார். 400 கோடி ரூபா செலவில் உருவாகும் அந்தப்படத்தை எடுத்து முடிக்க 5 முதல் 6 வருடங்கள் வரை செல்லும் என்று கருதுகிறார். இப்படத்தில் நடிக்க பொலிவுட் நட்சத்திரங்களான அமீர் கான், ஷாருக்கான் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அமீர்கான் கிருஷ்ணனாக நடிக்க ஆர்வம் காட்டுகிறார். ஷாருக்கான் கர்ணனாக நடிக்கக்கூடும்.

என்னிடம் ஒரு கதை இருக்கிறது. அதை திரைப்படமாக எடுக்க தயாரிப்பாளர் கிடைப்பாரா?
எஸ்.நவீனன்,வெள்ளவத்தை

உங்களைப் போல் கதை எழுதிவைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கானோர் தயாரிப்பாளரை தேடியலைந்து கொண்டிருக்கிறனர். கிடைத்தால்தானே!
அப்படியொரு தயாரிப்பாளர் கிடைத்தாலும் அவர் உங்களை சந்திக்க நேரம் ஒதுக்கவேண்டும். அவர் ஒதுக்கும் அந்த ஒரு சில நிமிடங்களில் நீங்கள் அவரை வசியப்படுத்த வேண்டும். அதாவது அவரை திருப்திப்படுத்த வேண்டும். இதற்கு உங்கள் கதையை நீங்கள் முதலில் ஒருவரியில் சொல்ல வேண்டும். இதனை TEGLINE என்று சொல்வார்கள். அதன்பின் கதைச்சுருக்கம். இதனை SYNOPSIN என்று சொல்வார்கள். அதனையடுத்து கதை முன்னோட்டம் இதில் கதை காட்சிகளாக எப்படி இருக்கும் என்பது இடம் பெறும். இதனை TREATMENT என்று சொல்வார்கள். அதற்கடுத்தது முழுமையான திரைக்கதை அதனை SCREEN PLAY என்று சொல்வார்கள். உங்கள் திரைக்கதையை சுவாரஸ்யமான கதையாக குறைந்த பட்சம் அரைமணிநேரம் தயாரிப்பாளருக்கு கதையாகச் சொல்லவேண்டும். இதற்கு சினிமாவை பற்றி தெரிந்த ஒரு இயக்குநர் உங்களிடம் இருக்கவேண்டும். தயாரிப்பாளரை தேடுமுன் அவ்வாறான ஒரு இயக்குனரை தேடியாக வேண்டும். அவரை முதலில் தேடுங்கள். அவர் மூலமாகத்தான் தயாரிப்பாளரைத் தேடவேண்டும். அழகாக கதைசொல்லி தயாரிப்பாளர் திருப்திப்படுத்திய பின்னர்தான் அவர் சரி படம் செய்யலாம் என்ற PASSWORD வெளிவரும். அடுத்து அவர் படத்தின் செலவை கேட்பார். அவர் எதிர்பார்க்கும் அளவில் அது இருந்தால்தான் மேலே செல்லலாம். அதன்பின் தயாரிப்பாளரின் ஏனைய நிபந்தனைகளை அவர் சொல்லுவார். அதற்கு நீங்கள் இணக்கம் தெரிவித்தால்தான் கதவு திறக்கும். இல்லை அத்துடன் மூடிக்கொள்ளும்.
இப்படி கதை சொல்லி தயாரிப்பாளரை கவர்ந்த இளம் இயக்குனர்கள் குறும்படம் செய்து அதனை தயாரிப்பாளரிடம் காட்டி அவரை திருப்திப்படுத்தியதும் உண்டு. முழுநீளப்படத்தையே குறும்படமாக செய்துகாட்டி தயாரிப்பாளரை திருப்திப்படுத்தியவர்களும் உண்டு. ஆனால் இந்த விடயத்தில் இப்போது புதிய டிரெண்ட் என்ன தெரியுமா? PILOTFILM இதனை முன்னோட்ட படம் என்று சொல்லாம்.
இயக்குனர் வாய்ப்பு தேடுபவர்கள், அல்லது தயாரிப்பாளர்களை தேடுபவர்கள் தாங்கள் படமாக்க நினைத்திருக்கும் கதையை தமது நண்பர்களையும், தோழிகளையும் நடிக்க வைத்து சில லட்சங்கள் செலவு நாம் கூறியவாறு முன்னோட்ட படம் தயாரிக்கிறார்கள். படத்தின் முக்கிய காட்சிகளை படத்தில் இடம்பெறுவது போலவே காட்சியமைத்து பின்னணி இசையுடன் சுமார் 20,25 நிமிடங்கள் வரை ஓடும் படமாக எடுக்கிறார்கள். முழுமையான ஒரு படத்தின் 1/6 பகுதியாக அந்தப்படம் அமைகிறது. இப்படித்தான் படம் இருக்கும். இயக்குனர் ஒளிப்பதிவாளர் திறமை ஆகியவை இதில் பளிச்சென்று தெரிந்துவிடும். அதனையடுத்து இந்த முன்னோட்ட படத்தை இணையத்தில் யுடியூப்பில் பதிவேற்றி விடுகிறார்கள். இந்த முன்னோட்ட படத்தை பார்த்துவிட்டு அதனை முழுநீளபடமாக எடுக்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட இயக்குனருடன் தொடர்பு கொள்ளலாம். அவள் (10 நிமிடங்கள்), தோட்டாக்கள் பூவாச்சு (13 நிமிடங்கள்), பிரதி (26 நிமிடங்கள்) லேகா (26 நிமிடங்கள்) ஆகிய முன்னோட்ட (PILOT) படங்கள் இப்போது இணையத்தில் கிடைக்கின்றன. இளம் இயக்குனர்கள் இப்போது தயாரிப்பாளர்களை தேடிப்போவதில்லை. அவர்களுக்கு கதை சொல்லுவதில்லை. மாறாக தயாரிப்பாளர்களை அவர்களை நோக்கி வரச்செய்கிறார்கள் சினிமாத்துறை எப்படியெல்லாம் மாறிவிட்டது பார்த்தீர்களா?

No comments:

Post a Comment