Friday, October 20, 2017

தமிழனை காக்கும் சிங்களத்தி

மணி  ஸ்ரீகாந்தன்.

லங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான நல் உறவு நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் நாம் அறிந்து தமிழகத்துக்கும் நம் நாட்டுக்கும் இடையேயான நல்லுறவு எப்போதுமே சுமுகமாக இருந்ததாகத் நமக்கு தெரியவில்லை. இலங்கை மன்னர்கள் பாண்டிய நாட்டிலிருந்து பெண் எடுத்து இருந்தாலும். இலங்கை மீதான சோழ மன்னர்களின் படையெடுப்பும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருக்கிறது.
mani srikanthan
சிங்கள நாச்சியார் கோவில்
இலங்கையை வென்று 12,000ஆயிரம் சிங்களவர்களை சிறைப்பிடித்து வந்து,திருச்சியில் கல்லணை கட்டுவதற்கு அவர்களையும் மற்ற மன்னர்களையும் கரிகால பெருவளத்தான் ஈடுபடுத்தினான் என்பதை நமது தஞ்சை கல்வெட்டுகளும், சங்க இலக்கியங்களும் பதிவு செய்திருக்கின்றன என்பதை நாம் அறிவோம்.

இந்த சூழ்நிலையில் ஒரு சிங்களப் பெண்ணுக்கு தமிழ்நாட்டு தமிழர்கள் கோவில் கட்டி கும்பிடுகிறார்கள் என்பதை உங்களால் நினைத்துப் பார்க்கத்தான் முடிகிறதா?

ஆச்சர்யமாக இருந்தாலும் அதுதான் உண்மை. இந்த கோவில் தஞ்சை பெருநகருக்கு சற்று தள்ளி குந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரிக்கு அருகில் இருக்கிறது.
20ஏக்கர் பரப்பளவில் பெரிய காடாக ஒரு காலத்தில் இருந்தாகவும் பெண்கள் கல்லூரி கட்டப்படும்வரை அந்தப் பகுதி முழுவதும் முட்புதர்கள் மண்டிக்கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
mani srikanthan
மூலவராக சிங்கள நாச்சியார்
இது ஒரு காவல் தெய்வம் மட்டுமே, இதனை யாரும் குல தெய்வமாக கும்பிடுவது இல்லை. ஆரம்ப காலத்தில் சிங்கள நாச்சியார் கோவில் என்று அழைக்கப்பட்ட இந்தக் கோவில் செங்கலாட்சி என்று மருவி தற்போது செங்கமல நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
ஊருக்கு வெளியில் இந்தக் கோவில் இருந்த காரணத்தால் காட்டுக்கோவில் என்றும் இதனை அழைக்கிறார்கள்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தீப ஆராதனைகள் நடைபெற்றாலும், வருடத்துக்கு ஒரு முறை மாசி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை இரவு பூஜைகள் நடைபெறுகின்றன அதனை தொடர்ந்து ஐந்தாம் நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த கோவிலை அண்மித்து வாழ்பவர்கள் யாரும் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் அல்ல என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
இந்த கோவிலில் பூஜை நடத்துபவர்களை அம்பலக்காரர்கள் என்று அழைக்கிறார்கள். இவர்கள் தற்போது வடக்கு பூக்காரத்தெரு, தெற்கு பூக்காரத்தெரு பகுதிகளில் வசித்து வருகிறார்கள். வழிப்போக்காக வந்து அம்பலத்தில் தங்கியவர்களே அம்பலக்காரர்கள் ஆனார்கள் என்பதே பலரின் கருத்தாக இருந்தாலும்,
mani srikanthan
ஒரு சிங்களத்தி எப்படி வழிப்போக்காக தஞ்சைக்கு சென்றிருக்க முடியும் என்பதுதானே உங்களின் கேள்வி. பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகத்தில் கல்கியின் கூற்றின்படி,
பிற்காலத்தில் பொன்னியின் செல்வர் இராஜஇராஜ சோழனாக சிங்காதனம் ஏறியபோது அவர் பெரிதும் மதிக்கும் ஈழத்து ராணி என்று அவரால் அழைக்கப்பட்ட மந்தாகினி தேவிக்காக ஒரு கோயில் எழுப்பியதாகவும், அதனை சிங்கள நாச்சியார் கோவில் என்று அழைத்ததாகவும் பிறகு அந்த பெயர் திரிந்து ‘சிங்காச்சியார் கோயில்’ என்று ஆயிற்று என்று குறிப்பிடும் அவர்,
‘இன்றைக்கும் தஞ்சை நகரின் ஒரு பகுதியில் சிங்காச்சியார் கோவில் என்ற பெயருடன் ஒரு சிறிய சிதிலமான கோவில் இருந்து வருவதைத் தஞ்சைக்கு செல்லுகிறவர்கள் விசாரித்துத் தெரிந்துக் கொள்ளலாம்."
என்று சொல்லி அந்த பத்தியை கல்கி முடித்திருக்கிறார்.
mani srikanthan
ஆனாலும் இந்தக் கோவிலில் சோழர் கட்டடத்துக்கான எந்த சுவடுகளும் இல்லை. பொன்னியின் செல்வனின் குறிப்பைத் தவிர வேறு வரலாற்று ஆவணங்களோ கல்வெட்டுகளோ இல்லை. அதோடு மூன்றாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தின்போது, மாரவர்மன் சுந்தரப்பாண்டியன் சோழர்களை வீழ்த்தி தஞ்சையை தரைமட்டமாக்கி எரியூட்டி அழித்ததோடு கழுதை கொண்டு உழுது வரகு விதைத்தானாம். அப்போது தஞ்சை பெரிய கோவிலை தவிர வேறு எதுவும் மிஞ்சவில்லையாம். அந்த சந்தர்ப்பத்தில் இந்த சிங்கள நாச்சியார் சமாதியும் தரைமட்டமாகி இருக்கலாம் பிற்காலத்தில் வந்தவர்கள் அந்த இடத்தில் கோவில் எழுப்பியிருக்கலாம். என்றும் சொல்லப்படுகிறது.
இந்த சிங்களநாச்சி கோவிலோடு சியமளா தேவியையும் மக்கள் வழிபடுகிறார்கள்.

செவி வழி கதைகளின் படி இவர்கள் இருவரும் வாய்பேச முடியாத, காது கேளாத ஊமைச் சகோதரிகள். இவர்கள் இருவரையும் வைத்து கல்கி ஒரு அழகான கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பார்.
அதன்படி மதுராந்தக சோழனை ஒரு ஊமைப்பெண் வளர்ப்பதாகவும், அருண்மொழி தேவனை ஒரு சிங்களப் பெண் காப்பாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.
mani srikanthan
நடேசன்
“அந்த இரண்டு சிங்களப் பெண்களும் ஒரே சிங்களக் கணவனை மணந்ததாகவும் ஒரு சமயம் மன்னரை பார்க்கச் சென்ற கணவன் திரும்பிவராமல், தவித்துப் போன அவர்கள், பிறகு தமது கணவனுக்கு அரண்மனையில்  மரண தண்டனை கொடுக்கப்பட்டதாகவும் அதனால் துயரம் தாங்காத அந்த இரண்டு பெண்களும் தமது உயிரை மாய்த்துக் கொண்டார்கள் என்றும், அதன் பிறகு அந்த இடத்தில் சில அமானுஷ்யமான விசங்கள் நடக்கவே அதைப்பார்த்து பயந்த ஊர் மக்கள் அதை எல்லைக் கடவுளாக நினைத்து வழிப்பட்டதாக  ஒரு கதை இருக்கிறது” ன்னு தஞ்சாவூரில் வசிக்கும் நடேசன் என்பர் எம்மிடம் கூறினார்.
ஆரம்பகாலத்தில் இந்தக் கோவிலில் சிலைகள் எதுவும் இல்லாமல் இது ஒரு நினைவாலயமாகவே இருந்ததாகவும் பிற்காலத்தில்தான் சிலைகள் வைத்து வழிபாடு தொடங்கியதாகவும் சிலர் சொல்கிறார்கள். இப்போது இந்தக் கோவிலில் சிங்கள நாச்சியாரோடு எல்லை சாமிகளான மதுரை வீரன், கருப்புசாமி, வேதமுனி உள்ளிட்ட சில காவல் தெய்வ சிலைகளையும் பார்க்ககூடியதாக இருக்கிறது.
இந்தக் கோவில் பெரிய அளவில் வெளியே தெரியாமல் போனதிற்கு முக்கிய காரணம். ஊருக்கு ஒதுக்குப்புரமான ஒரு காட்டுக்குள் அமைந்திருந்ததுதான். அத்தோடு வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் உணவுக்கு கஷ்டப்பட்டவர்கள் வேறுவழியில்லாமல், இந்த கோவில் இருக்கும் பகுதியில் மறைந்திருந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. அடர்ந்த காடு என்பதால் பாம்புகளும் நிறைய அங்கே குடியிருந்ததாம்.
இப்போது இந்தப் பகுதியில் பெரிய ஆள்நடமாட்டம் இல்லை என்றாலும் குந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரி மாணவிகளே இந்த கோவிலில் தினமும் வழிபாடு செய்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment