Saturday, October 14, 2017

இருள் உலகக் கதைகள்


வீரசிங்கம் பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்-  மணி  ஸ்ரீகாந்தன்.

நிவித்திகலையை அன்மித்து இருக்கும் அந்த இறப்பர் தோட்டத்தில் பெரிய மாடசாமி கோவிலில் அன்றிரவு கடா வெட்டப் போவதாக ஊர் முழுவதும் பேச்சு அடிப்படவே, சாமி ஆடி அருள் வாக்கு சொல்லும் முனுசாமியும் நேரத்தோடவே கிளம்பி கோயில் அமைந்திருக்கும் சுடுகாட்டு முச்சந்தியை நோக்கி நடந்தான்.

முனுசாமிக்கு நாற்பது வயதிருக்கும் ஆனாலும் சமீபத்தில்தான் திருமணம் முடித்திருந்தான். அவன் மனைவி பவானி முனுசாமி போலவே நிறைய கடவுள் பக்தி கொண்டவள். தினமும் பகல் உணவை சாப்பிடுவதற்கு முன்பாக காகத்திற்கு கொஞ்சம் சோற்றை எடுத்து இலையில் வைத்துவிட்டு சாப்பிடுவதை வழமையாக கொண்டிருந்தாள்.
அதனால் முனுசாமி பகல் நேரத்தில் காகங்கள் கூட்டமாக வீட்டு முற்றத்தில் அமர்ந்து கரைந்து கொண்டிருக்கும்.
அப்படி காகங்கள் வீட்டுக்கு முன்னால் வந்து கரைவதை முனுசாமி விரும்பவதில்லை. காகத்திற்கு சோறு வைக்கக் கூடாது என்று தினமும் மனைவியுடன் சண்டை பிடிப்பான்.
ஆனால் அவன் பேச்சை மீறும் பவானி, கணவனுக்குத் தெரியாமல் காகத்துக்கு சோறு வைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாள்.
தனது பேச்சை மனைவி மீறுவதை பொறுக்க முடியாத முனுசாமி ஒருநாள் மனைவியை பலங்கொண்ட மட்டும் அடித்து விட்டான்.
அப்படியும் அவள் முனுசாமியின் பேச்சுக்கு அடிப்பணியவில்லை என்பதையறிந்த அவன், ஒரு நாள் காகம் சாப்பிடும் உணவில் விஷத்தை கலந்துவிட, ஐந்துக்கும் மேற்பட்ட காகங்கள் செத்து மடிந்தன பவானி துயரம் தாங்காமல் கணவனோடு சண்டை பிடித்தாள். அன்றிலிருந்து கணவனுடன் எந்த பேச்சும் தொடர்பும் இல்லாமல் இருந்தாள்.
‘கோயிலுக்கு போய் வந்த பிறகு இன்று எப்படியாவது மனைவியை சமாதானம் செய்துவிட வேண்டும்’ என்ற தீர்மானத்தோடு கோயிலை நோக்கி வேகமெடுத்து நடந்தான்.

கோயிலில் கடா வெட்டியதன் பிறகு, அருள் வாக்கு சொல்லிவிட்டு வீடு நோக்கி நடந்தான். அப்போது நேரம் நள்ளிரவு ஒரு மணியைக் கடந்திருந்தது.
அவன் வீட்டு முற்றத்தில் காலடி வைத்தபோது, தூரத்தில் ஒரு தெருநாயின் ஊளைச் சத்தம் மரண ஓலம்போல முனுசாமியின் காதுகளுக்கு கேட்டது.
அப்போது முனுசாமியின் உடல் சில்லிட்டுப் போவதை அவன் உணர்ந்தான்.
வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.அவளைத் தொந்தரவு செய்யக் கூடாது, நாளைக்கு பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தவன், பாயில் சுருண்டு படுத்தான்.
முனுசாமி படுத்து சில மணிநேரங்களில் அவன் வீட்டுக் கூரையில் ஆள் நடமாட்டம்போல கேட்கவே திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான்.
“சே! ஏதாவது பூனையாக இருக்கும்”ன்னு நினைத்தவன் போர்வையை இழுத்துப் போர்த்தி படுத்தான். அப்போது அந்த பகுதி முழுவதும் நிசப்தம் ஆட்கொண்டிருந்தது. அப்போது முனுசாமியின் கழுத்தை நெறிப்பதற்காக அந்த கும்மிருட்டில் இரண்டு கரங்கள் முன்னேறி வந்து அவனின் கழுத்தை பற்றிப் பிடித்தன. ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில் இருந்தவனை ஒரு தீய சக்தி கொன்றுவிட பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தது.
வீரசிங்கம் பூசாரி
முனுசாமின் வயிற்றின் மேல் ஏறி உட்கார்ந்தபடியே அவனின் கழுத்தை அது அழுத்திக் கொண்டிருந்தது. முனுசாமிக்கு மூச்சு தினறியது, ஆனாலும் திடகாத்திரமான உடல்வாகு கொண்டிருந்த அவன் பெரும் கூச்சலிட்டு அலறியபடியே தனது முழு பலத்தையும் பிரயோகித்து அந்த தீய சக்தியை தள்ளிவிட்டான்.

மிகவும் அகோரமான தோற்றத்துடன் காணப்பட்ட அந்த தீய சக்தி அந்த வீட்டின் மூலையில் படாரென வீழ்ந்தது. கண் இமைக்கும் நேரத்துக்குள் அது அந்த இடத்தை விட்டு மறைந்துவிட அங்கே முனுசாமியின் மனைவி மூச்சடைத்து வீழ்ந்து கிடந்தாள்.
மந்திர வேலைகள் முனுசாமிக்கு கொஞ்சம் தெரியும் என்பதால் தண்ணீரை மந்திரித்து பவானியின் முகத்தில் தெளித்தான். விழித்துப் பார்த்த அவள் தன்னை யாரோ அடித்துப் போட்ட மாதிரி உடம்பு வலிப்பதாக கூறியவள் நித்திரையானாள்.

தனது மனைவியை ஏதோ தீய சக்திதான் அண்டியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட முனுசாமி. அது என்னவெல்லாம் பண்ணுமோ என்ற மன பயத்தால் ஆடிப்போனான். தீய சக்தி எதற்காக தனது வீட்டுக்குள் வந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முனுசாமி மேற்கொண்ட மந்திர வேலைகள் எதுமோ பலிக்கவில்லை.

அடுத்த நாள் நள்ளிரவும் வந்தது. ஊரே ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது முனுசாமி மட்டும் அந்த தீய சக்தியின் வரவுக்காக காத்திருந்தான் அவன் கையில் மந்திரித்து வைத்திருந்த தண்ணீர் ஒரு செம்பும் இருந்தது.
அப்போது நேரம் நள்ளிரவு பன்னிரெண்டு மணி இருக்கும். கூரையில் யாரோ நடந்து வருவதைப் போல உணர்ந்தான். ஆனாலும் முனுசாமியின் கவனமெல்லாம் பாவானி மீதே இருந்தது. சில வினாடிகளுக்குப் பிறகு பாவனியின் முகம் மாறி அது விகாரமான தோற்றத்திற்கு வருவதை அவன் கண்டதும் முனுசாமிக்கு குலை நடுங்கியது. ஆனாலும் தைரியத்தோடு கையிலிருந்த செம்பு நீரை அவள் முகத்தில் சலேரெனக் கொட்டினான். அடுத்த நொடியே அவள் முகம் இயல்பு நிலைக்கு மாறியதோடு , அவள் பற்களை நறநறன்னு கடித்தபடியே நினைவிழந்து வீழ்ந்தாள்.

‘அந்த தீய சக்தி தன்னை கொல்வதற்கு குறி வைக்கிறது’ என்பதை புரிந்து கொண்ட முனுசாமி. உடனே இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இறங்கினான். இது தான் சம்பந்தப்பட்ட விசயம் என்பதால், வேறு ஒரு வித்தைக்கார பூசாரியை வைத்துதான் அதன் கதையை முடிக்க வேண்டும் எனத் தீர்மானித்தான்.
முனுசாமியின் திட்டத்திற்கு வித்தைக்கார வீரசிங்கம் பூசாரி துணைக்கு வந்தார். அவரின் மாந்திரீக  பலத்தோடு பூஜைக்கான வேலைகள் தொடங்கப்பட்டன.
மந்திர உச்சாடணம் தொடங்கியதும் பவானி பேயாட்டம் போடத் தொடங்கினாள். இரண்டு முறைதான் வீரசிங்கம் சவுக்கையை சுழற்றியிருப்பார். அதற்குள் அத்தனை விசயங்களையும் அவர் கேட்டு முடித்திருந்தார். முனுசாமி வீட்டுக்கு பகல் சாப்பாட்டுக்கு வரும் காகங்களில் பல இறந்துபோன ஆத்துமாக்களாம், அவைகளோடு உல்லாசமாக காகத்தின் உருவத்தில் சுற்றிக்கொண்டிருந்தாம்  ஒரு எச்சினி. அந்த சுகமான வாழ்க்கையை முனுசாமி விஷம் வைத்து அழித்து விட்டதை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த எச்சினி காகமே.
முனுசாமியை கொன்று புசித்துவிட துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை வீரசிங்கம் கூறியதை கேட்டு ஊர் மக்களின் கோபம் முனுசாமியின் மீதே திரும்பியது. ‘நீ பண்ணுன ஒரு பாவ காரியம் பாரு இப்போ இந்த ஊரை அழிச்சிடும் போல இருக்கே’ என்று மக்கள் பதறினார்கள்.
‘ஒன்னும் பயப்படத் தேவையில்லை. அந்த தீய சக்தி சுதாரிப்பதற்குள், நான் வந்துட்டேன் இனி அதன் கதையை நான் முடிக்கிறேன். என்று தைரியமான வார்த்தைகளை சொன்ன வீரசிங்கம் தமது பரிகார பூஜைகளை போட்டு அந்த தீய சக்தியை பிடித்து ஒரு போத்தலில் அடைத்தார்.
அதன் பிறகுதான் முனுசாமிக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.

No comments:

Post a Comment