Saturday, October 14, 2017

தமிழர்களிடம் வாழும் சீன சாமி

                
மணி  ஸ்ரீகாந்தன்.

ழங்கால சடங்கு, சம்பிரதாயங்கள்  மீது எந்தளவுக்கு தமிழர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ, அந்தளவுக்கு புதிய நம்பிக்கை வரவுகளையும் அவர்கள் இருகரம் நீட்டி வரவேற்கத்தான் செய்கிறார்கள்.
சீரடி சாய்பாபா, சத்திய சாய் பாபா, நித்தியானந்தா, கல்கி அம்மா, பங்காரு அம்மா என்று எத்தனை ‘பகவான்கள்’ வந்தாலும் அவர்களை நம்மவர்கள் வரிசைக்கட்டி கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வியாபார ஸ்தலங்களிலும், வீடுகளிலும் வாஸ்த்து மீன் வளர்ப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதேபோல தொப்பையும்,தொந்தியுமாக பார்க்கவே ஆனந்தம் பொங்கும் உருவத்துடன் கடைகளின் கெஷியர் மேசையிலும் பணக்காரர்களின் வீடுகளின் வரவேற்ப்பு அறைகளிலும் நம்மை வரவேற்பதுபோல அமர்ந்திருக்கும் ‘லாப்பிங் புத்தா’ இவை இரண்டும் சாட்சாத் மேட் இன் சைனாதான்!
ஆனாலும் நம்மவர்களால் குபேர கடவுள் என்று அழைக்கப்படும் அந்த தொப்பை சாமிக்கு சீனாவில் லாப்பிங் புத்தா (சிரிக்கும் புத்தர்) என்று பெயர். எனினும் இந்து மதத்தில் குறிப்பிடப்படும் குபேரனுக்கும் சீனாவின் லாப்பிங் புத்தனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சீனாவில் சிரிக்கும் புத்தனைப்போல ஒருவர் வாழ்ந்ததாக ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையின்படி அந்த மகானின் பெயர் பூடேய். அவர் சீனாவின் லியாங் முடியாட்சிக் காலத்தில் வாழ்ந்த ஒரு பவுத்த பிக்கு.
கருணை, தயாள உள்ளம் படைத்த இந்த மகானை முக்கிய ஏழு கடவுள்களில் ஒருவாராக சீனாவின் தாவோ, மற்றும் ஜப்பானின் ஷிண்ட்டோ உள்ளிட்ட மதங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.
கிழக்காசிய மக்கள் சிரிக்கும் புத்தனை பூடேய் என்று அழைக்கிறார்கள். ஜப்பானியர்கள் ஹோடேய் என்று இந்த தொப்பை சாமியை அழைக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள் செல்வம் கொடுக்கும் குபேரன் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

சீனாவில் பல ஆண்டுகளாக வாழ்ந்த இந்த சிரிக்கும் புத்தன் அந்த மக்களிடையே பிரபலமாகுவதற்கு முக்கிய காரணம் அவரின் வானிலை அறிவிப்புகள்தான். இன்று மழை வரும் என்பதை அறிவிக்க அவர் ஈரக் காலணியை அணிந்திருப்பாராம். மரக் காலணியை அணிந்திருந்தால் அன்று வெயில் நிச்சயம் என்று அந்த நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்களாம்.அதேபோல அந்த ஊரின் பாலத்தில் அவர் குந்தியிருந்து அவர் தூங்கினாலும் அன்று மழை நிச்சயம் பெய்யுமாம்.
பூடேய் பெரும்பாலான சிறந்த கவிதைகளை படைத்து தமது மக்களுக்காக விட்டுச்சென்றிருப்பதாக சீனர்கள் சொல்கிறார்கள்.
‘பத்தாயிரம் தர்மங்கள்
எத்தனை வேறுபாடுகள்
மனம்?
அதை எப்படி வேறுபடுத்த?
மத நூல்களை தேடி என்ன பயன்?
மன அரசன் தன்னியல்புடன்
அனைத்து அறிவடுக்குகளையும் துறந்து
கற்காதிருக்கக்
கற்பவனே அறிஞன்?
என்று தியானத்தின் மூலம் மனம் மேம்படும் என்பதை பூடேய் தமது கவிதையில் இப்படி கூறியிருக்கிறார்.

சிரிக்கும் புத்தனின் கல்லறை சீனாவின் செக்கியான் மாநிலத்தின் 
இயூ-லிங் ஆலயத்தில் காணப்படுகிறதாம். அந்த ஆலயத்தில் சிரிக்கும் புத்தனை சித்தரிக்கும் பழங்கால ஓவியம் இன்றும் இருக்கிறதாம்.
சீனப் பொருட்கள் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் சிரிக்கும் புத்தன் சீன  எல்லைகளை கடந்து உங்கள் வீட்டு வரவேற்பறையிலும் ஜம்மென்று அமர்ந்திருப்பது சீனர்களுக்கு மகத்தான வெற்றிதான்.
குபேரன்

அதோடு சிரிப்பு என்பது ஒரு அருமருந்து, வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள். நம்மில் எண்ணிக்கையில், கணக்கிடமுடியாத கடவுள் பொம்மைகள் இருந்தாலும், இந்த பூடேய் போன்று ஒரு சிரிக்கும் பொம்மை நமது கடவுள் பொம்மைகளில் இல்லை. அதுவும் இப்படி ஓரு கள்ளம் கபடமில்லாத, வஞ்சகம் இல்லாத சிரிப்பை பார்ப்பது மனதுக்கு ஒரு மட்டற்ற மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.
சிரிக்கும் புத்தனின் தோற்றம் குழந்தைகளின் மனதிலும் பதிந்து விடுவதால், இனி தமிழர்களிடையே இருந்து இந்த ‘லாப்பிங்’ புத்தனை அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியாது.

பார்ப்பதற்கு மொட்டைத்தலை, சுறுக்கங்கள் விழுந்த நெற்றி பொக்கை வாய் சிரிப்பு என்பதால் மட்டும் இவருக்கு சிரிப்பு புத்தன் என்று பெயர் வந்துவிட்டதாக நீங்கள் கருதினால் அது தவறு.
அங்கியால் மூடப்படாத உருண்டையான தொப்பையும், குண்டான உருவமும் முழுத் திருப்தியை வெளிப்படுத்துகிறதாம். இவர் புத்தரின் பல அவதாரங்களின் ஒன்றான போதிசத்வ மைத்திரேய என்பதே சீனர்களின் நம்பிக்கை. போதிசத்வ மைத்திரேய என்றால் எதிர்காலத்தில் வரவுள்ள புத்தர் என்று அர்த்தம்.

 மைத்ரேய என்பது மைத்திரி என்ற  வடமொழிச் சொல்லிருந்து உருவானது மைத்திரி என்றால் கருணை, பெருந்தன்மை, நட்பு, தோழமை, நல்லெண்ணம் ஆகிய பல அர்த்தங்களை கொடுக்கிறது.
அதனால் இந்த மைத்திரியே புத்தனை மீ-லே-பூ என்றும் சீனர்கள் செல்லமாக அழைக்கிறார்கள்.
சீனாவில் ரொம்பவும் பொறுமைசாலியாக இருப்பவர்களை ‘பெருவயிறுடையவன்’ என்று அழைப்பார்கள். எனவே பூடேய்க்கு இந்தப் பெருவயிறு உருவாக அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அதோடு நமது கஷ்ட நஷ்டங்களை அவர் பெற்றுக்கொண்டு அதற்கு உபகாரமாக நமக்கு அழியாத செல்லவத்தை வாரி வழங்குவதாகவும் ஒரு நம்பிக்கை உலா வருகிறது.
குபேரன்

சிரிக்கும் புத்தனின் தொப்பையை தடவினால் செல்லவம் கிடைக்கும் என்பது ஒருபுறமிருக்க, சீனாவில் இவர் குழந்தை செல்வம் அருளுபவராகவும் திகழ்கிறார். இவரது தொப்பையை தடவும் பெண்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கிம் கிடைக்கும் என்பது சீனாவில் இன்றுவரை இருந்து வரும் பரவலான நம்பிக்கை.

உணவகங்கள், சலூன் மற்றும் கடைகளிலேயே இந்த லாப்பிங் புத்தனை அதிக நம்பிக்கையுடன் வைத்திருக்கிறார்கள் தமிழர்கள். செல்லவத்தை வாரி வழங்கும் குபேரன் இதுதான் என்பது தமிழர்களின் தப்பான எண்ணம். இந்து மதத்தில் உள்ள குபேரனுக்கும், சிரிக்கும் புத்தனுக்கும் இடையே சின்ன வித்தியாசம்தான் இருக்கிறது. நமது ஒரிஜினல் குபேரனின் தலையில் கிரீடம் இருக்கிறது. பெரிய தொப்பை வயிறு, மூடைகளுக்கு பதிலாக பெரிய பெரிய குடங்கள்,பானைகளில் செல்லவம் கொட்டிக்கிடக்கிறது.சில படங்களில் குபேரன் மகாலட்சுமியுடனும் காட்சி தருவார். அவரோடு குபேரனின் மனைவி யட்சியும் உடன் இருக்கிறார்.அண்டா குண்டாக்களில் செல்வம் கொட்டிக்கிடக்க, ஒரு தாமரையின் மீது வெள்ளை நிறத்தில் ஒரு மீன் இருக்கிறது.(அது வாஸ் மீனாக இருக்கலாம்) சிரிக்கும் புத்தனுக்கு இருக்கும் அந்த ஆனந்த சிரிப்பு மட்டும் மிஸ்ஸிங். தமிழகத்தில் சென்னை சுருட்டப்பள்ளியில் உள்ள ஈஸ்வரன் ஆலயத்தில் குபேரன் சன்னதி உள்ளது. அதோடு கீவளுர் அட்சயலிங்கேஸ்வரன் ஆலயம் உள்ளிட்ட பல இடங்களில் குபேரன் வழிபாடு உள்ளது.
குபேரனின். உருவம் வாஸ்து மீன் உள்ளிட்டவைகளை உற்று நோக்கும்போது சிரிக்கும் புத்தனின் மொடலை நம்ம ஊர்லயே சுட்டு எடுத்து சென்ற சீனர்கள் அதை நமக்கே விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
சிவபக்தனான குபேரன் தன்னுடைய சிவவழிபாட்டால் வடதிசைக்கு அதிபதியானதால் எண்திசை பாலகர்களில் ஒருவர் என்று அழைக்கப்படுகிறார். சிவபக்தியின் காரணமாக சிவபெருமான் சுவர்ண பைரவராக குபேரனுக்கு செல்வதினை நிர்வகிக்கும் பொறுப்பினை தந்தார்.
திருப்பதி ஏழுமலையானுக்கு குபேரன் கடன் கொடுத்ததாக கதையுண்டு. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை.

தேவர்களின் சிற்பியான விஸ்கர்மா குபேரனுக்காக அழகாபுரி எனும் பட்டினத்தினை படைத்துத் தந்தார். இந் தநகரம் குபேரபட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போதைய இலங்கையே பண்டைய நாளில் அழகாபுரியாக இருந்ததாக ஒரு கருத்துண்டு.

ராவணனுக்கு முன்பு குபேரனே இலங்கையின் அதிபதியாக இருந்ததாகவும் அவரிடமிருந்து இலங்கையை ராவணன் கைப்பற்றி ஆட்சி செய்ததாகவும் ஒரு கதை உண்டு.
குபேரபட்டினமான அழகாபுரியில் அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் மெத்தை, மீனாசனம் ஆகியவைகளின் மீது அமர்ந்து ஒரு கை அபயமுத்திரை, கிரீடம் முதலிய தங்க ஆபரணங்களுடன் முத்துக் குடையின் கீழ் சிம்மாசனத்தில் தனது தர்ம பத்தினியான யட்சியுடன் அமர்ந்திருக்கிறார். சிவந்த மேனியும் குள்ளமான உருவமும், பெரிய வயிறும் உடையவராக குபேரன் சித்தரிக்கப்படுகிறார்.

No comments:

Post a Comment