Friday, September 8, 2017

இரண்டாம் ராஜசிங்கன் காலத்தில்

சி. கே. முருகேசு

கண்டி இராசதானியை 1635 முதல் 1687 வரையில் அதை 52ஆண்டு காலம் ஆட்சி புரிந்தவன் இரண்டாம் இராஜசிங்கனாகும். போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து விரட்டியடிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டவனாகையால் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களுக்குள் அடிக்கடி தனது படைகளை அனுப்பி சேதங்களை விளைவித்தான். அதன்காரணமாக அங்கு வாழ்ந்த மக்கள் அப்பகுதியைவிட்டு வெளியேறி மத்திய மலைநாட்டை நோக்கி வந்து குடியேறலாயினர். அம்மக்கள் வசித்து வந்த பிரதேசங்கள் மக்களற்ற சூனியவெளிகளாயின. தனது ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களை நோக்கிவரும் மக்களுடன் மக்களாக எதிரிகளின் ஆட்களும் வந்துவிடக்கூடுமென்ற சந்தேகத்தின் காரணமாக கண்டி இராச்சியத்தின் சகல நுழைவாயில்களிலும் சோதனைச் சாவடிகளை மன்னன் உருவாக்கினான்.

போர்த்துக்கேயரைத் தொடர்ந்து ஒல்லாந்தருடனும் முரண்பட்டவனான இரண்டாம் இராஜசிங்கன் அவர்கள் மேற்கொண்டு வந்த கறுவா,மிளகு,பாக்கு, வாசனைத்திரவியங்கள் மற்றும் யானை வர்த்தகங்களுக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தினான். ஒல்லாந்தருடன் எவரும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவும் கூடாதென தடுத்தான். இதனாலும் வீதித்தடைகளை ஏற்படுத்தி சோதனைச் சாவடிகளை அமைக்கவேண்டிய தேவை இராஜசிங்கனுக்கு இருந்தது. இதன்மூலம் கண்டி இராசதானிக்குள் எவரும் அத்துமீறி நுழையவோ வெளியேறவோ முடியாதவாறு பலத்த பாதுகாப்பு அமைந்தது.

சின்னஞ்சிறிய குற்றத்திற்கும் கோரமான தண்டனைகளை வழங்குவதில் இம்மன்னன் குறிப்பிடத்தக்கவனாகும். வயது வித்தியாசம் பாராமல் சிறிய தவறுக்காக பாராங்கல்லை நாள் முழுவதும் சுமந்து நிற்பவர்களை இவனது ஆட்சிக்காலத்தில் சரவ சாதாரணமாக தண்டனைக் களங்களில் காணமுடிந்ததாக கூறப்படுகின்றது.

நாட்டுமக்கள் ஆட்சியைப் பற்றி கொண்டுள்ள அபிப்பிராயங்களை அறிந்து கொள்ளவும் மக்களின் குறைகளை தெரிந்து கொள்ளவும் அடிக்கடி மாறுவேடத்தில் நகர்வலம் வருவதை இம்மன்னன் வழக்கமாகக் கொண்டிருந்தான். அவ்வாறு ஒருநாள் இரவு கண்டி மந்தாரம்புரத்து வீதியில் சோதனைச் சாவடிப் பக்கமாக மாறுவேடத்தில் மன்னன் சென்றுக்கொண்டிருந்தான். சோதனைச் சாவடியில் வீதித்தடை போடப்பட்டிருந்தது. நள்ளிரவு வேளையால் அங்கு பணியில் ஈடுப்பட்டிருந்த காவலாளி அமர்ந்தவாறே நித்திரையானான். மிக முக்கிய தகவலொன்றின் பேரில் பக்கத்து ஊருக்குள் வலம்வந்து மக்களின் மனநிலையை அறிய வேண்டிய தேவை மன்னனுக்கு இருந்தது. அதனால் ஓசைப்படாமல் சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல முற்பட்டான்.

காவலாளி நித்திரைக்கலக்கத்தில் இருந்தாலும் காலடி ஓசை கேட்டு எழுந்து நின்றான். “ஏய் நில்” என கத்தினான் காவலாளி. தன் முன்னால் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் நிற்கும் உருவம் தெரிந்தது. “நள்ளிரவு நேரத்தில் இந்த பாதையில் எவரும் பயணிக்கக்கூடாது! இது அரச உத்தரவு! நீ வந்த வழியே திரும்பிப்போ! ”என்றான்.

“மிக அவசரமும் அவசியமுமாக பக்கத்து கிராமத்துக்குப் போக வேண்டியுள்ளது. தயவுசெய்து  என்னை போக விடுங்கள்”இவ்வாறு அவ்வழிப்போக்கன் கூறலானான். மிக பணிவாக பலமுறை கெஞ்சியும் காவலாளி அதனை நிராகரித்தான். பொறுமையிழந்த அம்மனிதன் தன்னைப்போக விடுமாறும் இல்லையேல் நடப்பது வேறு எனவும் அச்சுறுத்தும் தோரணையில் பேசினான்.

“இரவில் போகக்கூடாதென்பது அரச கட்டளை! அதை யாரும் மீற முடியாது. வந்த வழியே போ! ” என்றான் சேவகன் இப்போது காவலாளி தன் வசமிருக்கும் கூரிய ஈட்டியை தரையில் தட்டி கோபத்தை வெளிப்படுத்தினான்.

கெஞ்சியும் மிரட்டியும் பணியாத பணியாளை வஞ்சனையால் சம்மதிக்க வைப்பதற்கு எண்ணிய வழிப்போக்கன் இடுப்பிலிருந்து ஒரு சிறிய பையை எடுத்து நீட்டினான். நாணயங்களைக் கைலஞ்சமாகக் கொடுத்து வீதித்தடையைத் தாண்டிச் செல்ல அவன் முற்பட்டான். அதனை ஏற்க மறுத்த காவலாளி வந்த வழியே போய்விடுமாறு மீண்டும் கூறினான்.

இதனால் ஆத்திரம் கொண்ட மாறுவேட மன்னன் வீதித்தடையை அகற்றிவிட்டு முன்னோக்கி செல்ல முற்பட்டான்.

பொறுமையிழந்த சோதனைச் சாவடியின் காவலாளி தன் கையிலிருந்த கூரிய ஈட்டியை தயார் நிலையில் வைத்துக்கொண்டு அவன் முன்னால் நின்றான். “இராஜசிங்க மன்னரின் பெயரால் கூறிவைக்கின்றேன். இந்த இடத்தை விட்டு உடனே போய்விடு! தடையைக் கடக்க கனவிலும் நினைக்காதே! “என கத்தினான். அதனைப்பொருட்படுத்தாத வழிப்போக்கன் தடையைக் கடந்து தனது பயணத்தைத் தொடர்ந்தான்.

இரு கைகளாலும் ஈட்டியை இறுகப்பற்றியவாறு அதன் கூர் முனையை அவனது மார்புக்கு நேரே நீட்டிய காவலாளி “இனி ஒரு அடி எடுத்துவைத்தாலும் நீ பிணமாவாய்! “என வேல் பாய்ச்சத் தயாரானான்.

செய்வதறியாத மன்னன் தலைகுனிந்தவாறு மௌனமாக வந்த வழியே திரும்பலானான். மறுநாள் புலர்ந்தது. அரசவை சேவிதர்கள் காவலாளியை அழைத்துவந்து அரசன் முன்னால் நிறுத்தினர்.

“அறியாத்தனமாக ஏதாவது நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்தருளுங்கள் மன்னா! “என்று புலம்பினான் காவலாளி. தண்டனை வழங்குவதில் இம் மன்னனுக்கு நிகர் இவனேயெ அறிந்திருந்தமையினால் காவலாளியின் அச்சம் இரட்டிப்பாகியது. “ஏதேனும் பிழைகள் நேர்ந்திருந்தால் மன்னித்தருளுங்கள் மகாராஜா! “என சாஷ்டாங்கமாக வீழ்ந்தான்.

விசாரணையை ஆரம்பித்த அரசன் முதல் நாள் மந்தாரம்புர சோதனைச் சாவடியில் பணிபுரிந்தது பற்றி வினவினான். தாம் நகர்வலம் செல்லும் போது முக்கியமான இடத்திற்குத் தம்மைப்போக விடாது தடுத்தமை குறித்தும் தம்மைக்கொலை செய்வதற்கும் தயங்காமல் ஆயுதமேந்தியதையும் குறிப்பிட்டு குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா? வெனக் கேட்டான் அரசன். முதல்நாள் தன்னால் தடுத்து நிறுத்தப்பட்டது அரசன் என அறிந்த காவலாளியின் தலை சுற்றியது. நாவரண்டது. எதையுமே கூறமுடியாதவனாய் பேச்சிழந்தான். இப்போது அரசன் இரண்டாம் இராஜசிங்கன் பகிரங்கமாக அரசசபையில் கூறினான்! “உன்னைப்போன்ற அரச விசுவாசிகளும் நேர்மையான ஊழியர்களுமே எனக்கு தேவை! உனது கடமையுணர்ச்சியை பாராட்டுகின்றேன்!” என்றான்.

காவலாளி சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்து நின்றான். கைகால்கள் ஓடவில்லை அவனுக்கு. அரசன் தன் கழுத்திலிருந்த பெறுமதி வாய்ந்த தங்க மாலை (ரன் ஹவடி) யைக் கழற்றி காவலாளியின் கழுத்தில் அணிவித்தான். ‘ரன் ஹவடி தூர’ என்னும் கௌரவ நாமமும் சூட்டினான். இன்னும் கண்டியை அண்மித்த பல இடங்களில் அவனது சந்ததியினர் வசித்து வருகின்றார்கள். இவர்கள் ‘ரன் ஹவடிகே’என்னும் நாமத்தை தங்களின் பெயரின் முன்னால் சேர்த்துக்கொள்வதை பெருமையாக கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment