Friday, September 8, 2017

இருள் உலகக் கதைகள்

முத்து பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்: மணி ஸ்ரீகாந்தன்.


இரத்தினபுரி பிரதேசம் முழுவதும் வரலாறு காணாத பெருமழை பெய்து ஓய்ந்திருந்தது. அப்போது நேரம் இரவு ஏழரையை நெருங்கிக் கொண்டிருந்தது. “நமக்கு இந்த துப்புக்கெட்ட பைக்கினால எப்பவும் ஏழரைதான்”ன்னு ஸ்டார்ட் நின்றுபோய் மக்கர் பண்ணும் பைக்கின் கிக்கை பலங்கொண்ட மட்டும் உதைத்துக்கொண்டிருந்தான் இளையதம்பி.

மழைவிட்டு தூவானம் விடாது என்பதுபோல, சின்னத் தூரல் மழை அந்த நிசப்த்த இரவை குளிராக்கிகொண்டிருந்தது.இரத்தினபுரியிலிருந்து குருவிட்ட செல்லும் அந்தச் சின்ன தெருவில் தெருவிளக்கு இல்லாத காரணத்தால் கும்மிருட்டு சூழ்ந்து அந்த பகுதியை அமானுஷ்யம் நிறைந்த இரவாக மாற்றிக்கொண்டிருந்தது. மூடிக்கிடந்த ஒரு பெட்டிக்கடையின் ஓரத்தில் சுருண்டு படுத்துக்கிடந்த தெரு நாய் வானத்தை பார்த்து ஊளையிடத் தொடங்கியது.

இருள் கவ்விய அந்த இடத்தில் தான் மட்டும் தனியாளாக நிற்பதை உணர்ந்த இளையதம்பிக்கு உடம்பு சிலிர்க்க, ‘இனியும் இந்த இடத்தில  நிற்ககூடாது’ன்னு
இளையதம்பி பைக்கை தெரு ஓரமாக நிறுத்திவிட்டு தெரு விழியே நடக்க ஆரம்பித்தான்.
“மச்சான் பைக் ரிப்பேர் ஆகிடுச்சு குருவிட்டபோற வழியில நிறுத்தியிருக்கேன் நீ வந்து பார்த்து திருத்தி கொடுத்தா பெரிய உதவியா இருக்கும்” என்று இரத்தினபுரி டவுனில இருக்கும் தனது நண்பனுக்கு அழைப்பை போட்டுவிட்டு சட்டை  பைக்குள் போனை வைத்துவிட்டு இளையதம்பி நிமிர்ந்து பார்த்தான்.
அப்போது தெரு ஓரத்தில் இருந்த ஒரு கொமினிகேஷன் பிரகாசமான வெளிச்சத்துடன் காணப்பட்டது. தூரல் மழையும் தமது உடம்மை நனைத்து நடுங்க வைத்துக் கொண்டிருப்பதால் அந்தக் கடையின் ஓரத்தில் ஒதுங்கிய இளையதம்பி கடையின் ஓரத்தில் நின்றப்படியே கடையின் கண்ணாடி வழியே எட்டிப்பார்த்தான்.

சுமார் ஒரு முப்பது வயது மதிக்கதக்க ஒரு அழகான பெண் உள்ளே அமர்ந்திருந்தாள்.அந்தக் காட்சியை கண்டதும் இளையதம்பிக்கு ரொம்பவும் ஆச்சர்யமாக போய்விட்டது. “இந்த நேரத்தில் தனியா ஒரு பொண்ணா, ரொம்பவும் தைரியமான ஆளாதான் இருக்கனும். எதுக்கும் பேச்சுக் கொடுத்து பார்ப்போம்”னு கண்ணாடிக் கதவை உள்ளே தள்ளி திறந்தபடியே “உள்ளே வரலாமா”என்றான் அதற்கு அந்தப் பெண் வரலாம் என்பது போல புன்னகைத்தாள்.

இளையதம்பிக்கு கல்யாணம் ஆகி மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனாலும் அவன் ஒரு சபல புத்திக்காரன். இப்படியொரு சான்ஸ் கிடைத்தால் விடுவானா. “நான் வந்த வண்டி ரிப்பேர் ஆகிடுச்சு அதுதான் மழைக்கு ஒதுங்கலாமேன்னு இங்கே வந்தேன்..”என்றவன் அங்கே இருந்த கதிரையில் அமர்ந்தான். இளையதம்பி கூறிய விசயங்களை அவள் செவிமடுத்ததோடு சரி வேறு எந்த பதிலும் அவள் சொல்லவில்லை. “எல்லாப் பொண்ணுங்களும் இப்படிதான் பேசி பேசியே கரைச்சிடலாம்” ன்னு பெண்கள் விசயத்தில் ஜெகஜால கில்லாடியான இளையதம்பி காரியத்தில் இறங்கினான்.
“இந்த நேரத்துல நீங்க மட்டும் தனியா இருக்கீங்களே, பயமா இல்லீயா?”என்றான். “நானே ஒரு பிசாசு எனக்கு என்ன பயம்!”என்று அவள் வாய் திறந்தாள். ‘அப்பாடா பட்சி சிக்கிருச்சு’ன்னு நிம்மதி பெருமூச்சுவிட்ட இளையதம்பி  “ஆமா நீங்க ஒரு காதல் பிசாசு மாதிரிதான் இருக்கீங்க”ன்னு இளையதம்பி அவளுக்கு பொடி வைத்தான். “உங்க பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று இளை மீண்டும் தொடர்ந்தான்.
அப்போது அவனின் செல்போன் சிணுங்கியது. “டேய் எங்க இருக்க உன் பைக் மட்டும் தெரு ஓரத்துல கிடக்கு..சீக்கிரம் வா”ன்னு அவனின் நண்பன் அழைக்க ‘பைக்க ரிப்பேர் பண்ண நண்பன் வந்துட்டான் இனி அவன விட்டுட்டா நான் தெருவிலதான் கிடக்கணும். இந்த பட்சியை நாளைக்கு வந்து பார்த்துக்கலாம்னு எழுந்தவன்,     “நீங்க இப்போ வீட்டுக்கு கிளம்பிடுவீங்களா…அப்போ நான் நாளைக்கு உங்களை பார்க்கிறேன்”ன்னு  வெளியே வந்தான். பைக் நிறுத்தப்பட்ட இடம் நோக்கி ஓட்டமும் நடையுமாக இளையதம்பி வந்தாலும் அவன் மனம் முழுவதும் அந்த கொம்னிகேஷன் தேவதைதான் நிரம்பியிருந்தாள்.
முத்து பூசாரி
சில மணி நேரங்களில் நண்பனின் உதவியில் பைக்கை திருத்தம் செய்துவிட்டு வீடு நோக்கி புறப்பட்டான். ‘நாளைக்கு வேலையை கொஞ்சம் நேரத்தோடு முடித்துவிட்டு அந்த கொமினிகேஷன் தேவதையை எப்படியாவது பார்த்துவிட வேண்டும்’ என்று மனதிற்குள் ஒரு தீர்மாணம் போட்டான்.
அடுத்த நாள் வேலையை நேரத்தோடு முடித்துவிட்டு இரத்தினபுரியிலிருந்து குருவிட்ட செல்லும் பாதையில் அந்த கொமினிகேஷன் இருந்த இடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் இளையதம்பி பார்வையை செலுத்தினான். நேற்று மழைக்கு ஒதுங்கிய கொமினிகேஷன், அந்த அழகு தேவதை என்று எதுவும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அந்த இடத்தில் பழவருடங்களாக பூட்டப்பட்டிருக்கும் ஒரு பாழடைந்த கடை மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபரிடம் ‘இங்கே ஒரு கொமினிகேஷன் இருந்ததே..?’ன்னு கேட்க “ஐந்து வருடத்துக்கு முன்னாடி இருந்தது. அதுதான் பூட்டிக்கிடக்கு.இப்போ இல்லை”ன்னு அந்த நபர் சொன்னதைக் கேட்டு ஆடிப்போன இளையத்தம்பி நேற்று நடந்த சம்பவத்தை விபரித்தான்.
“நீங்க சொல்லுறது உண்மைதான் தம்பி இந்த இடத்தில இப்படி அமானுஷ்யமான விசயங்கள் நடக்குறதா நானும் கேள்விப்படுறேன். அந்த கொம்னிகேஷன் கடைக்காரரோட மனைவியை அந்த மனுஷனே அடிச்சு கொன்னுட்டானாம். அந்த மனுஷியோட ஆவிதான் கொலை வெறியோட சுத்திட்டு இருக்கிறதா சொல்லுறாங்க. நீங்க தப்பியது அந்த ஆண்டவன் புண்ணியம்” என்று அந்த நபர் சொல்லி முடித்தப்போது இளையதம்பிக்கு வியர்த்து கொட்டியது.

அந்த இடத்தில் நிற்கவே அவனுக்கு கை கால் உதறல் எடுத்தது. அடுத்த நிமிசமே பைக்கை ஸ்டார்ட் செய்தவன் வீடு நோக்கி சிட்டாக பறந்தான். வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவனுக்கு அங்கே ஒரு ஆபத்து காத்திருந்தது. தலைவிரி கோலமாக ஆடிக்கொண்டிருந்த அவனின் மனைவியை பக்கத்து வீட்டுக்காரர்கள். அமுக்கி பிடித்து அவளின் கைகளை கயிற்றினால் கட்டிக்கொண்டிருந்தார்கள்.
அன்று பகலிருந்தே இளையதம்பியின் மனைவிக்கு ஏதோ தீய சக்தி அண்டிவிட்டதாகவும், அவள் அங்கே இருக்கும் வீடுகளுக்கு கல் எறிவதாகவும். குற்றச்சாட்டை முன் வைத்தார்கள்.

தனது மனைவியின் இந்த மனமாற்றத்துக்கு தான்தான் காரணம் என்பதை இளையதம்பி கண்டுபிடித்து விட்டான். அந்த கொமினிகேஷன் பிசாசுதான் தன்னை பின் தொடர்ந்து வந்து தனது மனைவியின் உடம்பில் ஏறிவிட்டதாக சந்தேகம் கொண்ட இளையதம்பி தமது நண்பர்களின் துணையோடு முத்து பூசாரியை அழைத்து வந்து பேய் ஓட்டும் படலத்தை தொடங்கினான். உடுக்கை கையிலெடுத்த முத்து ஓங்கார குரலெடுத்து சுடலை மாடனை நினைத்து பாடியபோது இளையதம்பியின் மனைவி பேயாட்டம் போடத்தொடங்கினாள் “ஏன்டா நாயே உனக்கு இவ்வளவு அழகான மனைவி இருக்கும்போது, உனக்கு இன்னொன்னு கேட்குதோ..? நேத்து நீ என்ன கொம்னிகேஷன்ல பார்த்து பல் இளிக்கும்போதே புரிஞ்சிக்கிட்டேன் நீ யாருன்னு” என்று அவள் போட்ட பேய்க்கூச்சலால் கூடியிருந்தவர்கள் குலைநடுங்கிப் போனார்கள். தாம் சந்தேகப்பட்டப்படி தமது மனைவியின் உடம்புக்குள் இருப்பது அந்த அழகான ராட்சஷிதான் என்பது உறுதியாகிவிட, ‘இப்படி நாமலே பேயை வெற்றிலை பாக்கு வச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கோமே,நமக்கு இதெல்லாம் தேவையா’ன்னு இளையதம்பி மனசு நொந்துபோனான்.
“டேய் உன்ன மாதிரிதான்டா என் புருஷனும் ஒரு  சபலப் புத்திக்காரன் பொம்பளைங்கன்னா நாக்க தொங்கப்போட்டுட்டு அழைவான். அத கேட்கப்போய்தான் என்ன அடிச்சு கொன்னுட்டான். அந்த சண்டாளப் பயலை நான் சங்கறுக்கிறதுக்குள்யே பைக் ஆக்ஷிடன்ல செத்து தொலைஞ்சிட்டான். ஆனாலும் என்னோட கோபம் இன்னும் குறையல அது அப்படியேதான் பத்திக்கிட்டு இருக்கு. உன்ன மாதிரி பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணுற மனசோட சுத்துறவனுங்கள கொல்லலாம்னு ஒரு முடிவு எடுத்துதான் இப்போ களத்துல இறங்கிட்டேன். என்னோட முதல் பலி நீதான்டா!!”ன்னு அந்த துஷ்டப் பேய் கத்தியபோது இளையதம்பிக்கு உடல் சில்லிட்டுப் போனது.
“யாரையும் கொல்லுற அதிகாரம் உனக்கு கிடையாது. உன்ன நான் கொல்லுறதுக்கு முன்னாடி ஓடிப்போயிடு உனக்கு உயிர்பிச்சை தாரேன்'னு முத்து சொன்னதை கேட்டு எகத்தாளமாக சிரித்த அந்த தீய சக்தி “ டேய் பூசாரி என்னப்பத்தி உனக்குத் தெரியாது நான் நினைச்சா உன்ன தொலைச்சிடுவேன்.” என்று அந்த தீயசக்தி சொன்னப்போது முத்துவின் முகம் கோபத்தில் சிவந்தது. “உனக்கு இறக்கம் காட்டுவதே தவறு, உன் கதையை முடிக்கிறேன்.” என்றவர், மந்திரித்த தண்ணீரை அவளின் முகத்தில் அடித்தார். அப்போது அந்த தீயசக்தி தள்ளாடி நிலத்தில் சரிந்தது. அந்த பிசாசின்  தலைமயிரை கொத்தாக பிடித்து, அதன் உச்சி மயிரை கண் இமைக்கும் நேரத்திற்குள் முத்து நறுக்கென்று கத்தரித்தார். முத்துவின் சகாக்கள் தயாராக வைத்திருந்த போத்தலில் அந்த தலைமயிரை போட்டு மூடினார்கள். ‘எல்லாம் முடிந்து விட்டது. இனி இந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.’ என்று வாக்குறுதி கொடுத்த முத்து பூசாரி, தமது சகாக்களோடு பேய் அடைப்பட்டுக் கிடக்கும் போத்தலை புதைப்பதற்காக சுடுகாடு நோக்கி வீறுநடைப் போட்டார்.   

No comments:

Post a Comment