Tuesday, September 5, 2017

இருள் உலகக் கதைகள்

வீரசிங்கம் பூசாரி சொன்ன பேய்க்கதை

கேட்டு எழுதுபவர்: மணி ஸ்ரீகாந்தன்.

விசாவலை நகரத்தை அன்மித்திருக்கும் எலிஸ்டன் தோட்டத்தின் ஒரு தலைவரான தர்மலிங்கம் லயத்தின் கடைசி அறையில் குடியிருப்பவர் அவர் வழமைப்போலவே குடித்துவிட்டு வாய்க்கு வந்த கெட்டவார்த்தைகளை கொட்டித்தீர்த்து கொண்டிருந்தார்.

அவரது மூன்று குழந்தைகளும் அவர் போட்ட பேய்க்கூச்சலுக்கு பயந்துபோய் பாயில் சுருண்டு கிடந்தார்கள்.வீட்டின் வெளிவிறாந்தையில் எரிந்து கொண்டிருந்த மண்ணெண்னை விளக்கில் எண்ணை தீர்ந்துவிட்டதால் அதுவும் அணைந்துவிட கும்மிருட்டு அந்த அறையை சூழ்ந்து கொண்டது.
தலைவர் லயத்தின் அனைத்து அறைகளுக்கும் மின்சார வசதி இருந்தும்,தர்மலிங்கத்தின் வீட்டில் மட்டும் மின்சாரம் இல்லை. தர்மலிங்கம் பெருங்குடிகாரனாக இருந்ததால் அந்த குடும்பத்தில் வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது. இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து தாமும் மற்றவர்களைப்போல வாழவேண்டும் என்கிற கனவுகளோடு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குவைத்துக்கு பணிப்பெண்னாக சென்றவள்தான் கமலா.
அவள் வெளிநாடு செல்லும்போது ‘இனி குடிக்க மாட்டேன், பிள்ளைகளையும் கவனமாக பார்த்துக்குவேன்.’ என்று கமலாவின் தலையில் கைவைத்து சத்தியம் செய்து கொடுத்து வழி அனுப்பிவைத்தவர்தான், தர்மலிங்கம். பிறகு ஒரு வாரம் மட்டும் சத்தியத்தை கடைப்பிடித்த அவர் மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்பதுபோல மீண்டும் போதையில் மிதக்க தொடங்கினார்.
வீடு கட்டுவதாக பொய் சொல்லி மாதா மாதம் கமலாவிடம் பணம் பெற்று குடியும் கூத்துமாக இருந்தார். தனக்கு செய்து கொடுத்த சத்தியத்தை கணவன் மீறமாட்டான் என்கிற நம்பிக்கையில் அவர் கேட்டபோதெல்லாம் குவைத்திலிருந்து பணம் அனுப்பினாள் அவள்.

அந்த பணத்தில் ஒரு செங்கல்லைகூட வாங்காத தர்மலிங்கம் முழுப்பணத்தையும் குடிக்காகவே செலவிட்டார். பிள்ளைகள் மூன்றையும்,தர்மலிங்கத்தின் தாய் கூலி வேலைசெய்து காப்பாற்றினாள்.
மறுநாள் விடிந்தால் கமலா நாடு திரும்பப் போகிறாள் என்ற பதட்டத்தில் வெலலெத்துப்போன தர்மலிங்கம், பிள்ளைகளுக்கு புது சட்டையெல்லாம் வாங்கிக் கொடுத்து ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் சென்றார்.  பிள்ளைகளை கண்ட கமலா ஆனந்த கண்ணீர் விட்டாள்.

பிறகு வீடு வந்து இறங்கியவளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தாம்வெளிநாடு செல்லும்போது இருந்த வீடு அப்படியே இருந்ததை கண்டதும், தம்மை தர்மலிங்கம் திட்டமிட்டு ஏமாற்றி தமது உழைப்பு அத்தனையையும் வீணாக்கி விட்டாரே என்பதை புரிந்துகொண்ட அவள் கத்தி அழுதாள்.
பிறகு தர்மலிங்கத்தோடு வாய்த்தர்க்கத்தில் இறங்கினாள். போதையில் இருந்த தர்மலிங்கம் கமலாவை சரமாரியாக தாக்கினான்.
அன்று இரவு முழுவதும் அழுதுகொண்டிருந்த கமலா நள்ளிரவை தாண்டியபோது தாம் இனி ஒரு நொடிக்கூட உயிரோடு இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தாள். தமது வீட்டு சுவரில் படமாக தொங்கிக் கொண்டிருந்த தமது மாமனாரான தர்மலிங்கத்தின் தந்தை கந்தசாமியை கையெடுத்து கும்பிட்டவள், ‘மாமா நான் வெளிநாடு போய் வரும் வரையும் நீங்க இருப்பீங்கன்னு நினைச்சு என் குடும்பத்தை விட்டுட்டு போனேன் ஆனா அதுக்குள்ள உங்களுக்கு நெஞ்சடைப்பு வந்து நீங்க இறந்துபோவீங்கன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல.நீங்க இருந்திருந்திருந்தா என் புருசனை தண்டிச்சி திருத்தியிருப்பீங்கன்னு நினைக்கிறேன். இனி ஒண்ணும் பண்ண முடியாது. அதனால என்ன மன்னிச்சுடுங்க!’ன்னு சொன்னவள் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு முன்னாலிருந்த கோப்பி தோட்டத்துக்குள் நுழைந்தாள்.
வீரசிங்கம் பூசாரி

கயிறை சுறுக்கிட்டு கட்டியவள், அதன் நுனியை மரத்தின் கிளையில் கட்டிவிட்டு மறு நுனியை தனது கழுத்தில் மாட்ட எத்தனித்தாள். அப்போது மின்னல் அடித்தது மாதிரியான ஒரு உணர்வை உணர்ந்தவள், மயக்கமுற்று தரையில் சாய்ந்தாள். பிறகு மரத்தடியில் விழுந்துகிடந்த அவளை கண்ட அக்கம் பக்கத்தார் தூக்கி வந்து வீட்டில் போட்டார்கள். ‘தூக்கு மாட்டிக்க போனவள மாரியாத்தாதான் காப்பாத்திச்சு’ன்னு ஆளாளுக்கு அள்ளிவிட, அந்தச் செய்தி எலிஸ்டன் முழுவதும் பற்றிக்கொண்டது.

இந்த சம்பவத்தால் கொஞ்சம் ஆடிப்போயிருந்த தர்மலிங்கத்துக்கு அடுத்து வந்த சில நாட்களும் திகில் நிறைந்ததாகவே அமைந்திருந்தது.
நடுநிசி நேரத்தில் முழு உறக்கத்தில் இருந்த தர்மலிங்கம் திடீரென்று கண்விழித்து பார்த்தார்.அப்போது அவர் கண்டகாட்சி அவனின் இரத்தத்தை உரையச்செய்தது. தர்மலிங்கத்தின் எதிரே தலைவிரி கோலத்துடன் அம்மிக்கல்லை தலைக்கு மேலாக உயர்த்திபிடித்தப்படி நின்றிருந்தாள் கமலா. காட்சியை பார்த்த தர்மலிங்கம், ஒரு நொடி தாமதித்தாலும் மரணம்தான் என்பதை உணர்ந்தவன் கண் இமைக்கும் நேரத்துக்குள் கட்டிலிலிருந்து புரண்டு தரையில் விழுந்தார்.

அவன் தரையில் விழுந்த அதே செக்கனில் அவள் கையிலிருந்த கல்லும் கட்டிலில் விழுந்தது. தர்மலிங்கம் கொஞ்சம் தாமதித்திருந்தாலும் அவன் தலை சிதறியிருக்கும்.
தர்மலிங்கத்தின் ஏமாத்து பித்தலாட்டத்தால் வெளிநாட்டிலிருந்து வந்த கமலா சித்தம் கலங்கி பைத்தியமாகிவிட்டாள் என்று தர்மலிங்கமும், பக்கத்து வீட்டுவாசிகளும்  நம்பத்தொடங்கினார்கள்.
நள்ளிரவு நேரத்தில் கமலா, தர்மலிங்கத்தின் கழுத்தை நெறித்து கொல்லப்பார்பதும், அவரது சாப்பாட்டில் மண்ணை வாரிப்போடுவதுமாக கமலாவின் அழிச்சாட்டியங்கள் அடுத்த வந்த ராத்திரிகளை நிம்மதியிழக்க செய்தது.

கமலாவின் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்ததால்,கமலாவின் உடம்பில் ஏதோ தீயசக்த்தி அண்டியிருப்பதை உறுதிசெய்த தர்மலிங்கமும், அவரது உறவினர்களும் கமலாவின் உடம்பில் இருக்கும் பேயை விரட்ட அந்தப்பகுதியில் பிரபல பூசாரியாக இருக்கும் வீரசிங்கத்தை நாடினார்கள்.
தனது ஞானக்கண்ணால் கமலாவின் உடம்பில் ஒரு தீயசக்தி குடி இருப்பதை உறுதிசெய்த வீரசிங்கம் ,பேய் விரட்டுவதற்கான பணியில் மும்முரமாக இறங்கினார். பூஜை மன்றில் உடுக்கையோடு அமர்ந்தவர் மந்திரங்களை உச்சாடனம் செய்தவாரே உரக்க குரலெடுத்து மாடனை அழைத்துப் பாட ஆரம்பித்தார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே கமலா பேயாட்டம் ஆட ஆரம்பித்துவிட்டாள். “டேய் பூசாரி உன் வேலையை நிறுத்துடா!!
நான் இந்த சண்டாளன் தர்மலிங்கத்தை கொன்னுட்டா அடுத்த நிமிசமே இந்த நாய் உடம்பில இருந்து நானே வெளியில போயிடுவேன்.”  என்று கமலா உரக்க சத்தம் போட்டு கத்தியதை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ந்து போனார்கள். கமலாவின் உடம்பில் வந்திருப்பது யாராக இருக்கும் என்பதை வீரசிங்கம் பூசாரி மோப்பம் பிடிக்க தொடங்கினார். அப்போது வீரசிங்கத்தின் நாசியில் பிணவாடை அடிக்கத்தொடங்கியதாம்.
அடுத்த நொடியே தனது கையிலிருந்த சாட்டையை சுழற்றி அடிக்க கமலா வீல் என்று கத்தியப்படி “டேய் என்னை அடிப்பதை நிறுத்துடா! இப்போ நான் யாருன்னு தெரியணுமா..?, நான்தான்டா..கந்தசாமி! என் தங்கச்சி மக கமலாவை இப்படி ஏமாத்தி பித்தலாட்டம் செய்த என் மகன் தர்மலிங்கத்தை கொல்லாம அவன் உடம்பை விட்டு போகமாட்டேன்!!”  என்று கமலாவின் உடம்பில் அண்டியிருக்கும் கந்தசாமியின் ஆவி சபதம்போட்டது.
அதோடு கமலா தூக்குமாட்டி தற்கொலை செய்ய முயன்றபோது கந்தசாமிதான் அவளை காப்பாற்றியதோடு பிறகு மருமகளின் பாதுகாப்பிற்காகவும், மருமகளை இந்த கதிக்கு ஆளாக்கிய தர்மலிங்கத்தை பலிவாங்கவும்  அவளது உடம்புக்குள் புகுந்ததையும் வீரசிங்கத்திடம் ஆவி ஒப்புக்கொண்டது.

உண்மை நிலையை உணர்ந்துகொண்ட வீரசிங்கம் பூசாரி,சில சித்து வேலைகளை செய்து ஆவியை தமது பிடிக்குள் கொண்டுவர பெரும்பிரயத்தனம் செய்தார். அதன் பிறகு அந்த ஆத்மாவிடம்; தர்மலிங்கத்தை உயிர் பிச்சை கேட்டு ஆவியின் காலில் மண்டியிடச்செய்து, தாம் இனி மனைவி கமலாவிற்கு எந்தத் தப்பும் செய்யமாட்டேன்,குடிக்கவும் மாட்டேன் என்று சத்தியம் செய்த பின்னரே ஆவி அந்த உடம்பை  விட்டுவெளியேற சம்மதித்தது.
அதன் பிறகு பூசாரி அந்த ஆவியை ஒரு போத்தலில் பிடித்துபோட்டு ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கும் சுடுக்காட்டில் போத்தலை குழித்தோண்டி புதைத்தார்.
இப்போது கமலாவின் குடும்பத்தில் சந்தோசம் நிலவுவதாகவும்,தர்மலிங்கம் திருந்திவிட்டதாகவும் பூசாரி சொல்கிறார்.
                

No comments:

Post a Comment