Monday, September 4, 2017

கண்டி மன்னன் நரேந்திரசிங்கன் காலத்தில்

பலாப்பழம்  களவாடிய  விகடன்

1707 முதல் 1739 வரை கண்டி ராச்சியத்தின் அரசனாக விளங்கிய ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் கண்டி இராசதானியின் கடைசிச் சிங்கள மன்னனாவான். தென்னிந்திய நாயக்கர் வம்சத்தின் ஒரே குடும்பத்தில் இருந்து மூவரை மணம் புரிந்த இம்மன்னனின் மறைவின் பின்னரே நாயக்கர்களின் ஆட்சி மலரத்தொடங்கியது. சற்று முன்கோபம் குணம் கொண்ட இவனது ஆட்சிகாலத்தில் அரண்மனையிலும், அரச சபையிலும் விகடம் பேசும் புத்திசாலித்தனமான ஒருவன் இருந்தான். தென்னிந்திய அரச சபைகளில் தென்னாலி ராமன் போன்று கண்டி அரச சபையில் இவ்விகடன் அனைவரையும் மகிழ்விப்பவனாக விளங்கினான்.

கண்டியை அண்மித்த குண்டசாலையில் அரண்மனையை அமைத்து அரசன் ஆட்சி புரியலானானன். இவனது அரண்மனையை அண்மித்தவாறு குண்டசாலை ரஜ மகா விகாரை அமைந்திருந்தது. இவ்விகாரை வளாகத்தில் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவந்து நாட்டப்பட்ட உயர்ரகத்தைச் சேர்ந்த பலாக்கன்று வளர்ந்து தேனினுமினிய சுவைதரு பழங்களை தந்துகொண்டிருந்தது. மிகப்பெரிய அளவினதாகவும் எங்குமே காணமுடியாத சுவைதருவனவாகவும் இப் பலாமரத்தின் கனிகள் அமைந்திருந்தன. இம்மரத்தின் வழிவந்த பலாமரமொன்று மேற்படி விகாரை வளாகத்தில் இன்றும் காணக்கூடியதாக இருப்பதாக கூறப்படுகின்றது.

இம்மரத்தின் காய்கள் பழுக்கும் பருவத்தை அடைந்ததும் வெள்ளைத்துணியால் பழங்களை மூடிக்கட்டி வைத்து விடுவார்கள் வேறு எவருமே இப்பழங்களை தொடவும் முடியாது. இப்பழங்கள் அரண்மனையின் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட முடியுமென பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இப்பலாமரத்தின் பின்னால் உண்மைச்சம்பவமொன்றும் பொதிந்துள்ளது.

ஒருநாள் விகாரை வளாகத்தில் பலாமரத்தின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த விகடனின் நாசித்துவாரங்களை ஆக்கிரமித்தது பழுத்த கனியொன்றில் இருந்து வெளிவந்த பலா மணம் : அவனது நாவில் நீறூறியது. மானசீகமாக பலாப்பழத்தைப் பறித்து சுளைகளைச் சுவைத்து மகிழ்ந்தவனாக மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த விகடனால் அங்கிருந்து ஒர் அடியேனும் எடுத்து வைக்க முடியவில்லை. எவ்வாறாயினும், பலாபழத்தைச் சுவைத்து தேன்வடியும் சுளைகளை ஒருகை பார்த்து விடுவதென்ற உறுதியுடன் வெள்ளைத்துணியால் மூடிக் கட்டப்பட்டிருக்கும் பலாப் பழத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்
சில விநாடிகளில் வந்ததது விரட்டுமென்ற மனஉறுதியோடு மரத்திலேறிய விகடன் இரண்டு கிளைகளுக்கு நடுவே அமர்ந்து பழத்தை மூடிக்கட்டியிருந்த வெள்ளைத்துணியை மெதுவாக அகற்றினான்.

மரத்தின் பக்கமாகவே அமர்ந்திருந்தபடியால் அவனது சர்வாங்கமும் பலாப்பழ நறுமணத்தினால் மெய்மறந்த நிலையை அடைந்தான். அவசர அவசரமாக அப்பெரிய அளவிலான பழத்தின் அரைவாசிப்பகுதியை தேன்வடிய வடிய வெட்டி எடுத்துக்கொண்டு அவன் மீண்டும் வெள்ளைத்துணியால் மிகுதியை மூடிவிட்டு கவனமாக கீழே இறங்கலானான். தோள் மீதிருக்கும் பாதிப்பழத்தை வீட்டுக்குச் எடுத்துச் செல்ல அவன் நினைத்தாலும் அதனைச் சுவைப்பதில் அவனுக்கிருந்த அவசரம் காரணமாக மரத்தின் அடியிலேயே அமர்ந்து பலாப்பழத்தின் அரைவாசிப்பகுதியையும் சுவைத்து உண்டு தீர்த்துவிட்டு வீட்டுக்குச் சென்றான்.
பலாப்பழத்தை எடுத்துச் செல்ல அரண்மனை சேவகர்கள் வந்தனர். மரத்திலேறி வெள்ளைத்துணியை நீக்கிவிட்டு பார்த்தபோது பழத்தின் கீழ்ப்பகுதி வெட்டியெடுக்கப் பட்டிருப்பதைக் கண்டு திகைப்படைந்தனர். பலாப்பழத்தின் பாதி வெட்டியெடுக்கப்பட்டிருப்பதற்கான குற்றச்சாட்டு தம்மீது சுமத்தப்படுமோவென அஞ்சிய ஊழியர்கள் உடனடியாக அரண்மனைக்கு விரைந்து நடந்த விஷயத்தை விளக்கமாகக் கூறினர்.
அரசனுக்கும் அரண்மனைக்கும் அவமானத்தை ஏற்படுத்திய சம்பவமாக இப்பலாக்கனிக் களவு எடுத்துக் கொள்ளப்பட்டது. பலாக்கனியை வெட்டியெடுத்த கள்வனை உடனடியாக கைதுசெய்யுமாறு அரச கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

விசாரணை மேற்கொண்ட புலனாய்வு பிரிவினருக்கு பலாமரத்தடியில் விகடனின் நடமாட்டம் பற்றி தகவல்கள் கிட்டின. அதனைத்தொடர்ந்து விகடனின் வீட்டை அரச சேவிதர்கள் முற்றுகையிட்டனர். பலாப்பழத்தின் நறுமணம் வந்த மூலையில் பாயில் படுத்துறங்கிக் கொண்டிருந்த விகடனைக் கண்டனர்.

கைதுசெய்வதற்கான காரணத்தையோ ஆரம்பகட்ட விசாரணையோ மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. ஏனெனில் விகடன் மேலிருந்து பழவாசம் வீசிக்கொண்டிருந்தது. எவ்வித சிரமமுமின்றி விகடனை கைது செய்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அரசன் முன்னால் கைதியாக நிறுத்தப்பட்டிருந்த விகடனைப் பார்த்து கூறத்தொடங்கினான்.

“உனக்கெதிராக மிகமோசமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. எவ்விதமான அச்சமுமின்றி அரண்மனைக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் பலாமரத்திலேறி சேலையால் மூடிக்கட்டப்பட்டிருந்த பலாப்பழத்தின் அரைவாசிப் பகுதியை வெட்டியெடுத்து கள்ளத்தனமாக புசித்திருக்கின்றாய். எனவே நீ குற்றமற்றவனென முடிவெடுப்பதற்காக ஏதாகிலும் தெரிவிக்கக்கூடிய விடயங்கள் இருந்தால் இப்போது கூறலாம்."
வெடவெடத்துப்போயிருந்த விகடனின் சர்வாங்கமும் வியர்வையினால் தொப்பையாகியிருந்தது. அரச குற்றவாளியாகியுள்ள நிலையில் தண்டனையிலிருந்து தப்பும் வாய்ப்பே இல்லாத நிலையை எண்ணி வருந்தினான். இருப்பினும் இக்குற்றச்சாட்டிலிருந்து விடுபட ஏதாவது மார்க்கத்தைத் தேட முற்பட்டான் விகடன். தன்னை குற்றமற்றவனென வெளிப்படுத்துவதற்கு உலர்ந்துபோன அவனது நா மறுத்தது. ஒருவாறு வார்த்தைகளைக் கட்டியிழுத்துக்கொண்டு அரசன் முன்னால் மன்றாடினான் தெய்வமே! என்னை மன்னித்துவிடுங்கள்” என்று புலம்பலானான்.

“நான் காலையில் அரண்மனைக்கு வரும்போது வெறும் வயிற்றுடனேயே வந்தேன். என் வெற்று வயிறு பசியைப் பொறுத்துக்கொள்ள முடியாது தவித்தது. பலாமரத்தின் அடியில் செல்லும்போது பலாப்பழத்தின் நறுமணம் பசியை மேலும் தூண்டியது.பலாப்பழத்தின் மணம் என்னை மயக்கமுறச் செய்து விட்டது. என்ன நடந்ததென்றே நானறியேன். பிரபு இந்த ஏழைக்கு கருணை காட்டுங்கள்”  எனக்கெஞ்சினான். இவன் அரண்மனைக்குச் செய்துள்ள துரோகம் மன்னிக்கக்கூடியதன்று பலாப்பழத்தை மரத்தில் வைத்தே பாதியை தின்று தீர்த்துள்ளான். அதுமட்டுமல்ல மீண்டும் அதே வெள்ளைப் புடவையால் எஞ்சிய பழத்தை மூடி வைத்துவிட்டுச் சென்றுள்ளான். இது என்னையும் எனது ஆட்சியையும் அவமதிப்பதோடு ஏமாற்றும் செயலாகும். எக்காரணம் கொண்டும் இவனை மன்னிக்க முடியாது. உடனே இவனை இழுத்துப்போய் சிரச் சேதம் செய்யுங்கள்” ஆத்திரமேலீட்டால் விகடனுக்கு மரண தண்டனை விதித்தான் மன்னன்.

விகடனோ தரையில் விழுந்து புரண்டு அழுதான்.என்னை மன்னியுங்கள் பிரபு, என இரு கை கூப்பி வேண்டினான். இவ்வாறு அழுது புலம்பிய விகடன் மீண்டும் எழுந்து நின்றான்.  தனது அழுகையை கணப்பொழுதில் நிறுத்திவிட்டு  பலமாக சிரிக்கத் தொடங்கினான். “முன்பு அழுத நீ இப்போது ஏன் சிரிக்கிறாய்?” ஆச்சிரியத்துடன் மன்னன் கேட்டார். “தெய்வத்துக்குச் சமமான எனது அரசே!நான் செய்த தவறுக்காக தாங்கள் அளித்த தீர்ப்பு குறித்து நான் கிஞ்சித்தும் அஞ்சவில்லை.ஆனால் ஒரே ஒரு பலாக்கனிக்காக ஒரு மனிதன் உயிரை சிரசசேதம் செய்வதன்மூலம் தங்களுக்கு ஏற்படும் அவமானத்தைப்பற்றி நினைத்து எனக்குள் பெருங்கவலை ஏற்பட்டது. அதனால் தான் சிரித்தேன்” தெளிவாக பதிலளித்தான் விகடன். மன்னன் ஒரு விநாடி சிந்தித்தான்.

“ம்…………….ஸ்ரீ விநாயக பெருமானின் புத்திக்கூர்மைதான் உன்னிடமும் இருக்கின்றது. உன்னைப்போல் ஒருவனை காணவே முடியாது! சரி "இவனை விடுதலை செய்யுங்கள்!" தனது தீர்ப்பை மாற்றியமைத்தான் மன்னன். சாஷ்டாங்கமாக மன்னன் முன்னால் வீழ்ந்து எழுந்த விகடன் மௌனமாக அரச சபையை விட்டு வெளியேறினான். கண்ணுக்கெட்டிய தூரம் அவன் சென்று மறைந்த பின்னர் மன்னனின் கடைவாயில் சிறிதாக புன்னகை மலர ஆரம்பித்தது.

- சி.கே.முருகேசு

No comments:

Post a Comment