Wednesday, September 6, 2017

இருள் உலகக் கதைகள்முத்து பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர் - மணி  ஸ்ரீகாந்தன்.

கலவத்தையை அண்மித்திருக்கும் ஒரு இறப்பர் தோட்டம். அப்போதுதான் பெருமழை பெய்து முடிந்திருந்தது. இறப்பர் மரங்கள் தாம் சேமித்து வைத்திருந்த நீர்த்துளிகளை ஒவ்வொன்றாக பூமிக்கு தாரைவார்த்து கொண்டிருந்தன. மரத்திலிருந்து விழும் நீர்த்துளிகளின் சத்தத்தை தவிர அந்த பிரதேசம் முழுவதும் நிசப்தத்தில் ஆழ்ந்திருந்தது.  வழமைக்கு மாறாக அன்று மாலை 5மணிக்கே அந்த இறப்பர் தோட்டப்பகுதியை இருள் கபளீகரம் செய்திருந்தது.

மேட்டு லயத்து பெட்டிக்கடையில் மட்டும் ஒரு குப்பி விளக்கு மங்களாக எரிந்து கொண்டிருக்க தெருக்கோடியில் படுத்துக்கிடந்த ஒரு சொறிநாய் உடம்பை படபடவென ஆட்டி சிலிர்த்து விட்டு வானத்தை பார்த்து ஊளையிடத் தொடங்கியது. அந்தப் பகுதியில் சமீபகாலமாகவே நள்ளிரவில் ஒரு குழந்தை வீல் என்று கத்துவதும், அதனைத்தொடர்ந்து ஒரு தாயின் கூக்குரலும் கூடவே சேர்ந்து கேட்பதாக ஒரு கதை உலா வருவதால் அந்த ஊரே பயத்தில் உறைந்து கிடந்தது.

அப்போது அந்த ஊரின் வழியாக நள்ளிரவில் வரும் கடைசி பஸ்சில் குமாரசாமி வந்து இறங்கினான். வெளிநாட்டுக்கு வேலைக்கு அழைத்து செல்வதாக கூறிய ஏஜண்டின் பேச்சை நம்பி ஏதோ ஒரு தீவில் அனாதரவாக விடப்பட்ட குமரேசன் ஆறு மாதங்களின் பின் அன்றுதான் அகலவத்தைக்கு திரும்புகிறான்.

கும்மிருட்டில் தட்டுத்தடுமாரி அந்த ஒற்றையடிப்பாதையில் மேட்டு லயத்தை நோக்கி நடந்தான். நிறைமாத கர்பிணியான தனது மனைவியை பக்கத்து வீட்டு ஆட்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற தைரியத்தில் வீட்டின் வறுமையை போக்குவதற்காக ஒரு வெறியோடு வெளிநாட்டுக்கு கிளம்பியது தவறுதான் என்பதை இப்போது குமரேசன் உணர்ந்து கொண்டாலும்,தவறு செய்து விட்டோமோ என்று குமரேசனின் மனது கிடந்து படபடத்துக் கொண்டிருந்தது.
முத்து  பூசாரி
“என் மனைவியை கண்டவுடன் அவளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று மனதுக்குள் ஒரு தீர்மானம் போட்டவன் வீடு நோக்கிய பயணத்தில் வேகம் காட்டினான்.

மேட்டு லயத்தின் கடைசி வீடு செல்லரித்துப் போன கதவுடன் காட்சி தந்தது.
கதவை அன்மித்தவன் கதவை தட்டத்தொடங்கினான். ‘சரசு…சரசு..’ன்னு குமரேசன் போட்ட சத்ததிற்கு ரெண்டு தெருநாய்கள்தான் அவனுக்கு பின்னால் மூச்சிரைக்க நின்றது. பலமாக தட்டியும் எந்த பதிலும் வராமல் பூரண அமைதியே நிலவுதை கண்ட குமரேசனுக்கு ஒருவித அச்சம் மேலிட கதவின் இடுக்கின் வழியாக வீட்டின் உள்ளே அவதானித்தான். எண்ணை தீர்ந்து போகும் இறுதிகட்டத்தில் எரிந்து கொண்டிருக்கும் ஒரு குப்பி விளக்கு மங்களான வெளிச்சம் தந்துகொண்டிருக்க அதன் பக்கத்தில் சரசு மடியில் குழந்தையை கிடத்தி அதற்கு பால் கொடுத்து கொண்டிருந்தாள்.
அந்தக் காட்சியை பார்த்த குமரேசனுக்கு தலைகால் புரியாத சந்தோசம். எனக்கு பிறந்தது ஆணா, பெண்ணா தெரியலையே என்ற சந்தோசத்தோடு கதவை பலங்கொண்டமட்டும் தள்ளியபோது அது படார் என்று திறந்து கொண்டது. வீட்டினுள் சென்ற குமரேசன்  தனது மனைவியின் அருகில் சென்றவன் ‘சரசு வந்துட்டேன்டீ இனி உன்ன விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன்’ன்னு சொல்லியும் சரசு குமரேசனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. மடியில் கிடக்கும் தனது குழந்தையை நோக்கியதாகவே அவளின் பார்வை இருக்கவே, குமரேசன் சரசுவின் தலையை பிடித்து தன் பக்கமாக நிமிர்த்தினான்.அப்போது குமரேசன் கண்ட அந்தக் கோரக்காட்சி அவனை நிலைகுலைய செய்தது. அழுகி தொங்கும் ஒரு கொடூரமான, இதுவரை யாரும் கண்டிராத ஒரு அவலட்சனமான முகத்தை கண்டவன் அதிர்ந்து,  கூக்குரலோடு தரையில் சாய்ந்தான்.
பக்கத்து வீட்டில் ஏதோ நடப்பதாக உணர்ந்த ஊர்வாசிகள் திரண்டு அந்த வீட்டுக்குள் நுழைந்து பார்த்தார்கள். மூர்ச்சையாகி தரையில் கிடந்த குமரேசனை தண்ணீர் தெளித்து எழுப்பி எப்போது வெளிநாட்டிலிருந்து வந்தாய், என்ன நடந்தது. என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்கள். தனக்கு நடந்த கதையை விபரித்தவன் தனது மனைவி சரசு எங்கேன்னு கேட்டான். ‘நீ எங்கே இருக்கேன்னு எங்களுக்கு தெரியாதுப்பா அதனால தகவல் சொல்ல முடியல உன் மனைவி பிரசவத்தின்போதே செத்து போயிடுச்சு!’என்று ஊர் பெரிசுகள் கோரசாக சொன்னார்கள். அதிர்ச்சியால் குமரேசன் மீண்டும் மயங்கி விழுந்தான். அவனை மீண்டும் மயக்கத்தை தெளியவைத்து அவனிடம் விசாரித்து கேட்டார்கள். அவன் வீட்டில் கண்ட காட்சியை சொன்னப்போது அந்த மேட்டு லயமே அதிர்ந்து போனது. நள்ளிரவில் கேட்கும் அமானுஷ்ய சத்தங்களுக்கு அர்த்தம் கிடைக்கவே அந்த ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பேசி எதிர்காலத்தில்  தமது பிள்ளைகளுக்கு எந்த ஒரு காத்து கருப்பும் அண்டாதிருக்க  ஒரு பெரிய மாந்திரீகரை வரவழைத்து ஊரை தீயசக்திகளிமிருந்து பாதுகாக்கும் வேலியை அமைக்க முடிவு செய்தார்கள்.
அதன்படி இரத்தினபுரியிலிருந்து முத்து பூசாரியை அழைத்து அதற்கான பூஜையை போட்டு ஊரை விட்டு பேய்களை ஓரங்கட்டும் வேலையை அவரிடம் ஒப்படைத்தார்கள்.
பேய்களுக்கு எந்தவித தயவு தாட்சண்யமும் பார்க்காத முத்து பூசாரி கண்ணில் பட்ட பேய்களை எல்லாம் தர தரவென பிடித்து போத்தலில் அடைத்து எரியும் நெரிப்பில் போட்டு அவைகளை சங்காரம் செய்து கொண்டிருந்தார்.

மேட்டு லயத்தின் நாலு திக்குகளிலும் அடைந்து கிடந்த காத்து கருப்புகளை எல்லாம் பிடித்து கழுவி சுத்தமாக்கியவர். வெற்றி புன்னகையோடு ஊர் மக்களிடமிருந்து விடைபெற்று நடந்தார். இறப்பர் தோட்டத்தின் ஒரு மூலையிலிருந்து ‘டேய் பூசாரி உன்ன சங்கறுக்காம விடமாட்டேன்டா!!’ன்னு ஒரு ஈனக்குரல் அசரீரியாக பூசாரியின் காதுகளில் விழுந்தது.

No comments:

Post a Comment