Sunday, September 10, 2017

இருள் உலகக் கதைகள்


வீரசிங்கம் பூசாரி சொன்ன பேய்க் கதை.

கேட்டு எழுதுபவர்- மணி ஸ்ரீகாந்தன்.

மத்துகமை துடுகலை தோட்டம் இருள் சூழ்ந்து வழமைக்கு மாறாக காட்சியளித்தது. ஒரு வித அச்ச உணர்வோடு அன்றைய பொழுது கழிந்து கொண்டிருந்தது. தோட்டத்தில் கங்காணியாக இருக்கும் ஆறுமுகம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து தமது மனைவி காத்தாயி அம்மாளிடம் சூடாக ஒரு தேனீரை வாங்கி தொண்டையை நனைத்துக்கொண்டான்.
மாலை மங்கிவிட்டாலே ஆறுமுகம் கங்காணியின் மூளையும் மங்கிவிடும். போதையில் உளறிpக் கொண்டிருப்பான். தோட்டத்தின் எல்லையில் விற்கப்படும் கள்ளச்சாராயத்தை குடித்துவிடும் ஆவலில் அந்த இடத்தை நோக்கி ஒற்றையடிப் பாதையில் விரைந்தான்.
சாராய நெடி காட்டுப்புதரிலிருந்து வருவதை மோப்பம் பிடித்த ஆறுமுகம், ‘நம்ம ஆளு ராலாமி இங்கேதான் இருக்கானா..?’என்று வெற்றிப் புன்னகையுடன் ராலாமியை நெருங்கினான்.

‘இங்கே பாரு ஆறுமுகம் இன்னைக்கு நீ குடிக்கப்போற கால் போத்தலுக்கும் கணக்குப் போட்டா ஆயிரத்து ஐநூறு ஆகுது, சம்பளம் போட்டவுடனே இங்கே வந்து கொடுத்திடணும், இல்ல…வீட்டுக்கு வந்து நாக்க புடுங்கிற மாதிரி கேட்பேன்’என்ற மிரட்டலுடன் ஆறுமுகத்துக்கு ராலாமி சாராயத்தை ஊற்றிக் கொடுத்தான்.
ஆவலுடன் வாங்கிய பட்டை சாராயத்தை ஒரே மூச்சில் அடித்த ஆறுமுகம், பெரிய சாதனையை செய்துவிட்ட மிதப்பில் வீடு நோக்கி நடந்தான்.
அப்போது நேரம் எட்டரை மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த பகுதி முழுவதும் இரப்பர் மரங்கள் சூழ்ந்திருந்ததால் அந்த கும்மிருட்டு தினமும் அமாவாசை இரவாகவே ஆறுமுகத்துக்கு காட்சியளிக்கும்.
ஆறுமுகத்தின் கையிலிருந்த டோர்ச் மிணுக் மிணுக்குன்னு மங்கலாக ஒளிப் பரப்ப அந்த கரடுமுரடான பாதையில் தட்டுத்தடுமாறி நடந்தான். அந்த நேரத்தில் அந்தப் பாதையில்  ஆறுமுகத்தை தவிர யாருமே இல்லை. பூரண நிசப்தம் அந்தப்பகுதி முழுவதும் குடிக்கொண்டிருந்தது. மழை வருவது மாதிரி திடீரென்று வீசிய குளிர் காற்றால் வீட்டுக்கு விரைவாக சென்றுவிட வேண்டும் என்பதில் ஆறுமுகம் வேகம் காட்டினான்.
அப்போது ஆறுமுகத்தை யாரோ பின் தொடர்வது மாதிரித் தோன்றியது.பின்னால் திரும்பிப் பார்த்தான். யாரும் வருவது மாதிரித் தெரியவில்லை. தைரியமாக கால்களை இரண்டு அடி முன்னால் வைத்தான். அப்போது அவன் பின்னால் ஏதோ மூச்சிறைக்க ஓடி வருவது மாதிரி உணர்ந்தான்.

பாதையை விட்டு விலகி வழி விட்டான். அப்போது அவன் கண்ட காட்சி அவனை குலை நடுங்கச்செய்தது. ஒரு பெரிய எறுமை மாடு ஆறுமுகத்தின் பின்னால் சுமார் பத்தடி தூரத்தில் நின்றப்படி அவனையே வெறித்துப்பார்த்தப்படி நின்றது. வெல வெலத்துப்போன ஆறுமுகம் தமது குலசாமி சுடலைமாடனை நினைத்து கண்களை மூடிக் கும்பிட்டான். கண்களை திறந்து பார்த்தப்போது, அந்த எறுமை வந்த வழியே திரும்பிப்போவதைப் பார்த்தப்போதுதான் ஆறுமுகத்துக்கு போன உயிர் திரும்பி வந்தது.
வீரசிஙகம் பூசாரி
மீண்டும் வீடு நோக்கி நடந்தான். ஊர் சந்தியில் இருக்கும் சுடுகாட்டை தைரியமாக கடந்தவனுக்கு வியர்த்துக் கொட்டியது. இப்போது ஆறுமுகத்தின் கண்ணுக்கெட்டிய தூரத்தில்தான் வீடு தென்பட்டது. ஆனாலும் ஆறுமுகத்தை ஏதோ ஒரு ஆபத்து இன்னும் பின் தொடர்ந்து வருவது மாதிரியே அவன் உணர்ந்தான். அப்போதுதான் ஆறுமுகத்துக்கு இன்னொரு ஆபத்தும் காத்திருந்தது.

ஆறுமுகம் நடந்து வரும் பாதையில் அந்த காட்டெருமை மீண்டும் வழிமறித்து நின்றுக்கொண்டிருந்தது. ஆறுமுகம் தனது கையிலிருந்த டோர்ச் வெளிச்சத்தை அந்த எருமையின் மீது பாய்ச்சினான். எருமையின் கண்கள் அக்னி குழம்புமாதிரி தெரியவே ஆறுமுகத்துக்கு உடல் சில்லிட்டுப் போனது, கையிலிருந்த டோர்ச் லைட்டை தூக்கி எதிரிலிருந்த எருமையின் மீது தூக்கி அடித்தான்.

அடுத்த நிமிசம் அந்த இடத்தில் எருமை நின்றதற்கான எந்த அறிகுறியும் தென்ப்படவில்லை. இப்போது ஆறுமுகத்துக்கு மூச்சு வாங்கத்தொடங்கியது. வழமையாக ஆறுமுகம் குடித்துவிட்டு வந்தால் அந்தப் பகுதியில் இருக்கும் வீடுகளுக்கெல்லாம் அவன் குடித்திருக்கிறான் என்பது புரிந்துவிடும். ஆறுமுகம் போதையில் பாடும் எம்.ஜி.ஆர் பாடல்கள் அதை வெளிச்சம் போட்டு காட்டிவிடும்.ஆனால் இன்று ஆறுமுகத்துக்கு போதை ஏறவில்லை. வீட்டுக்குள் வந்த ஆறுமுகம் வெளி விறாந்தையில் இருந்த திண்ணையில் காலை நீட்டிப்படுத்தான். அடுத்த நாள் அவனை குளிர்க்காச்சல் பிடித்தாட்டியது, இரவில் எதையோ பார்த்து பயந்திருப்பான் அதுதான் இப்படி வாட்டுகிறது என்று எண்ணிய அவன் மனைவி, சேரிமுத்து பூசாரியை கூட்டி வந்து அவனுக்கு விபூதி பிடித்து போடச்சொன்னாள்.
தண்ணீர் மந்திரித்து தெளித்த சேரிமுத்து பூசாரி, “கங்காணிக்கு ஏதோ கருப்பு காத்து பிடிச்சிருக்கு’ பெரிய பூசாரியை வச்சி பேய் ஓட்டினாதான் இது சரியாகும்”; என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
பூசாரியின் சொல்லை தெய்வ வாக்காக மதிக்கும் காத்தாயி அம்மாள், அந்தப்பகுதியில் பிரபல பூசாரியாக இருக்கும் வீரசிங்கம் பூசாரியை  அழைத்து வந்து ஆறுமுகத்து பேய் ஓட்டும் படலத்தை தொடங்கினாள்.
தனது சகாக்களுடன் பூஜை மன்றில் அமர்ந்த வீரசிங்கம் சுடலை மாடனை மனதில் நினைத்தப்படி உடுக்கை பலமாக அடிக்கத்தொடங்கினார். அந்தப் பகுதியே உடுக்கு சத்ததால் அதிர்ந்தது. சில நிமிடங்களில் பாயில் படுத்திருந்த ஆறுமுகம் ஆவேசம் வந்தவனாக பேயாட்டம் போடத்தொடங்கினான்.
வீரசிங்கத்தின் மந்திர உச்சாடனங்கள் விண்னைப் பிளக்க “டேய் பூசாரி! என்னை விரட்டணும்னு முடிவு பண்ணுறீயா, அது உன்னால முடியாத காரியம் ” என்று ஆறுமுகத்தின் உடம்பிலிருந்த கெட்ட சக்தி கூப்பாடு போடத்தொடங்கியது.

தீய சக்தியின் நூலை பிடித்துவிட்ட சந்தோசம் வீரசிங்கத்தின் முகத்தில் பளிச்சிட்டது. இனி நூல் பிடித்துச்சென்றால் ஆணிவேரை கண்டுபிடித்து விடலாம் என்ற உற்சாகத்தோடு உடுக்கையை இன்னும் பலமாக அடிக்கத்தொடங்கினார்.
“டேய் பூசாரி நான்தாண்டா கருப்பழகன். நான்  செத்துப்போய் நாற்பது வருசமாயிடுச்சு, மேலோகத்துக்கு போன நான் எமன்கிட்டே நாற்பது வருசமா போராடி என்ன கொன்றவனை பழித்தீர்கணும்னு திரும்பவும் பூமிக்கு வந்திருக்கேன். எனக்கு எமன் ஆறு நாளுதான் பூமியில தங்குறதுக்கு டைம் கொடுத்திருக்கிறான் அதுக்குள்ள நான் போய் ஆகணும். இன்னும் ஒரு நாள்தான் பாக்கி இருக்கு. அதுக்குள்ள இந்த சண்டாளனின் கதையை முடிச்சிட்டா நானே போயிடுவேன்” என்று அந்த தீய சக்தி சொன்ன விடங்கள் அங்கே கூடியிருந்தவர்களை திகிலடையச் செய்தது. வீரசிங்கத்துக்கு இந்த தீய சக்தியின் பேச்சு புதிதாகத் தோன்றவே கொஞ்சம் திகைத்தார். ஆனால் தன்னை சுதாகரித்துக்கொண்ட அவர் மீண்டும் தமது அதகள ஆட்டத்தை ஆரம்பித்தார்.

கருப்பழகனும், ஆறுமுகமும் அந்தக்காலத்தில் நண்பர்கள். இருவரும் ஒன்றாகவே குடித்துவிட்டு வந்து கும்மாளம் அடிப்பார்கள். ஒரு நாள் போதையில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு, அதில் தடுமாறி கீழே விழுந்த கருப்பழகன், தலையில் அடிப்பட்டு அந்த இடத்திலேயே இறந்துவிட்டான். பிறகு ஆறுமுகத்தை பொலிஸ் கைது செய்தது. பிறகு ஓர் ஆண்டுகளின் பின் ஆறுமுகம் நிரபராதி என்று நீதிமன்றம் அவனை விடுதலை செய்தது.
அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் இந்த விசயம் பழைய கதைதான்.   ஆனால் இன்று அந்த ஆத்மா ஆறுமுகத்தின் கதையை முடிக்க புறப்பட்டு வந்திருப்பது, அந்த பகுதி முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்து.
வீரசிங்கத்திற்கு இது பெரிய சவலான விடயம்தான். ஆனாலும், தமது காவல் தெய்வங்களின் துணையுடன் களத்தில் இறங்கிவிட்டவர், அந்த தீய சக்தியை பலங்கொண்ட மட்டும் தனது சாட்டையால் அடித்து அதை வீழ்தினார். பூசாரியிடம் அடிப்பட்டு வலியால் துடித்துக்கொண்டிருந்த அந்த தீய சக்தி, மீண்டும் சுதாகரிப்பதற்குள், அதன் உச்சி மயிரை கொத்தாக அறுத்து போத்தலுக்குள் அடைத்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த பேயின் கதையை முடித்த வீரசிங்கத்தை ஊர் மக்கள் பெருமிதமாக பார்த்தார்கள்.
“இனி உன் புருஷனுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.” என்று காத்தாயி அம்மாளிடம் வாக்குறுதி தந்து விட்டு வீரசிங்கம் சுடுகாட்டில் கடைசியாக செய்ய வேண்டிய பரிகார பூஜைக்காக தமது சகாக்களோடு வீறுநடை போட்டார்.
எல்லாம் சுபமாக முடிந்துவிட்ட சந்தோசத்தில் காத்தாயி அம்மாள் மனநிறைவோடு, வானத்தை நோக்கி கும்பிட்டாள். 
  

No comments:

Post a Comment