Sunday, September 10, 2017

தமிழ்நாட்டில் தியேட்டர்களின் டிக்கட் விலையை திடீரென கூட்டிவிட்டார்களாமே? இலங்கையிலும் அதேபோல் டிக்கட் விலையை கூட்டுவார்களா?


ஜானகி - இரத்தினபுரி

தமிழ்நாட்டில் சினிமா ஒருபொன் முட்டையிடும் வாத்து. பசியை கூட பொறுத்துக்கொள்வார்கள். ஆனால் சினிமா பார்க்காமல் இருப்பது அவர்களால் முடியாது. ஆனால் இலங்கையில் உள்ள சினிமா தியேட்டர்களில் குறிப்பாக கொழும்பில் உள்ள தியேட்டர்களின் டிக்கட் விலைக்கு சமமாகத்தான் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

அது சரி தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி.என்ற வரி விதிப்பால் தியேட்டர்களில் டிக்கட் விலை அதிகரித்தது. ஆனால் சினிமா பார்க்கவரும் கூட்டம் குறைந்துவிட்டது. டிக்கட் விலைக்கு புறம்பாக வாகன பார்க்கிங் கன்டீனில் உணவுப்பொருள், குடிநீர் போத்தல் ஆகியவற்றின் விலைகளும் அதிகம். இவற்றைவெளியில் இருந்து கொண்டுவர அனுமதியும் இல்லை. விலைகள் ஏற்கனவே அதிகரித்திருக்கின்றன இதனால் ரசிகர்கள் படம் பார்க்க எல்லாமாக 300,400 ரூபா வரை செலவழிக்க வேண்டியுள்ளது.

டிக்கட் விலை அதிகரித்த பின் தியேட்டர்களில் ஒரு காட்சிக்கு 25,30 பேருக்கு மேல் வருவதில்லையாம். நிறைய சினிமா ரசிகர்கள் குறிப்பாக இரவுக் காட்சிக்கு வருபவர்கள் ‘பிக்பொஸ்’ பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இதனால் தியேட்டர் பக்கம் வருகிற கூட்டமும்  வருவதில்லையாம். எஸ்.டி வரியால் டிக்கட் விலை மட்டுமல்ல சினிமா தொடர்பான அனைத்து அம்சங்களும் விலை ஏறிவிட்டன. எனவே சினிமாத்தொழில் அங்கு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

ரஜனிகாந்தும் கமல்ஹாசனும் அரசியலில் ஒன்று சேருவார்களா? 
ரஜனி ரசிகன், கொழும்பு

“நான் அரசியலுக்கு வருவது கடவுள் கையில் இருக்கிறது. ஒருவேளை அரசியலில் ஈடுப்பட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன்” என்று கூறி ரஜனி அவரது அரசியல் பிரவேசத்தை பரபரப்பாகியிருக்கிறார். இதேவேளை கமல் தமிழக அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அரசியல் வட்டாரத்தை பரபரப்பாக்கி வருகிறார். அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சியினரும் திரையுலகமும் ஆதரவு குரல் எழுப்புகின்றனர். ‘தமிழகத்தில் ‘சிஸ்டம்’ கெட்டுப் போய் இருக்கிறது என்பது இருவருமே கூறியுள்ளதால் இருவரும் அரசியல் களத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. எதற்கும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அதிகம் சம்பளம் பெறுவது தமிழ்நடிகர்களா? ஹிந்தி நடிகர்களா?
எம்.சுலைமான், அம்பாறை

முன்னணி தமிழ் நடிகர்கள் படங்களில் நடிக்கும் போது நமக்கான சம்பளத்தை மொத்தமாக வாங்கிக் கொள்வார்கள். படம் வெளியாவதற்கு முன்னர் சம்பளத்தில் பெரும்பகுதியை எப்படியும் கறந்துவிடுவார்கள். ஆனால் ஹிந்தி நடிகர்கள் குறைந்த சம்பளத்தையே கேட்பார்கள், ஆனால் படத்தின் லாபத்தில் 30,40 சதவீதத்தை அவர்களுக்கு கொடுத்துவிட வேண்டும். ஹிந்திப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாவதால் நிறைய லாபம் கிடைக்கும். இதில் 30முதல் 40சதவீதம் என்பது பெரிய தொகையாகும்.

உலகத்தில் அதிக சம்பளம் பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் சஞ்சிகை அண்மையில் வெளியிட்டது. இந்த ஆண்டு வெளிவந்த போர்ப்ஸ் இதழில் கடந்த வருடம் உலகில் அதிக சம்பளம் பெறும் 100 நடிகர்களில் மூன்று இந்திய நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். …… கடந்த வருடம் பொலிவுட் நடிகர்     சாருக்கான் 245 கோடி ரூபாவுடன் 65 ஆவது இடத்திலும் சல்மான்கான் 238 கோடி ரூபாவுடன் 71 ஆவது இடத்திலும்,2.0 படத்தில் ரஜனியுடன் நடிக்கும் அக்ஷய்குமார் 228 கோடி ரூபாவுடன் 80 ஆவது இடத்திலும் உள்ளனர்.

படத்தை ஒரேயடியாக முடித்துக்கொடுத்துவிட்டு படத்தின் வெளியீடு மற்றும் வியாபார நடவடிக்கைகளும் உதவுவதன் மூலம் படத்தின் லாபத்தின் பங்கு கேட்பதில் தவறில்லையே. ஹிந்தி நடிகர்களின் இந்த நடைமுறை ஏராளமான தயாரிப்பாளர்களுக்கும் பிடித்திருக்கிறது.

லொண்டரி கிருஸ்ணனுடன் ஒரு சந்திப்பு.மணி   ஸ்ரீகாந்தன்.

இரத்தினங்களுக்கு பெயர்போன கஹவத்தை பெருநகரம் வழமைப்போலவே காலை வேளையில் பரபரப்பாக இயங்கிகொண்டிருந்தது.நிவித்திகலை நோக்கிச்செல்லும் பழைய ரயில் பாதை சுவடில்லாமல் அழிந்துபோய் இப்போது மண் ரோடாக காட்சிதந்தது.
அந்த கல்குழி வீதியில் ஓரிரு வாகனங்கள் சோம்பேரித்தனத்துடன் அங்குமிங்கும் நகர்ந்து கொண்டிருந்தன.தெருவோர முனையில் முடங்கிக்கிடந்தது,ஒரு லொண்டரி கடை. அந்தக் காலத்திலெல்லாம் சலூனுக்கு அடுத்தபடியாக நம்மவர்கள் வெட்டிக்கதை பேசி பொழுது போக்குவது லொண்டரியில்தான்.
ஆனால் செயற்கை இழை வந்ததும் சலவைக்குத் துணி போடுபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது.தாமே துவைத்து பெட்டி போட்டுக் கொள்கிறார்கள்.

அந்த முட்டுச்சந்து லாண்டரிக்குள் எட்டிப்பார்த்தோம்.கறுத்த ஒல்லியான ஒருவர் பெட்டிப்போடப்பட்ட சில ஆடைகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தார்.
“வாங்க சேட்,களிசன் தேய்க்கணுமா?”ன்னு எடுத்த எடுப்பிலேயே விசாரித்தார்.
“சேட், களிசன் கழுவி தேய்க்கிறதா இருந்தா ஒன்றுக்கு 100 ரூபா….கழுவாம தேய்க்கிறதா இருந்தா ஒன்றுக்கு 50 ரூபாதான்” என்று விலைப்பட்டியலை இழுத்துவிட்டார், அந்த நபர்.எமக்கு பகீர் என்றது.விலைவாசி உயரும் போதெல்லாம் லொண்டரி கடைக்காரர்களும் விலையை உயாத்திவிடுவார்கள் போலிருக்கிறது.

இந்த மாதிரி விலையை உயர்த்தினால் லொண்டரி பக்கம் வெட்டிக்கதை பேசுபவர்கள் வரக்கூட அஞ்சத்தான் செய்வார்கள் என, நினைத்துக் கொண்டோம். சொன்னால் பேட்டிக்கு பங்கம் வருமோ என்ற அச்சத்தில் மனதிலேயே அணைபோட்டுக் கொண்டோம்.
பேட்டிக்காக வந்ததை அவரிடம் விளக்கினோம்.ஒரு நிபந்தனையை கேள்வியாகப் போட்டார் அவர். “நம்ம படத்தை பேப்பரில போடுவீங்களா? அப்படின்னா சரி என்று என்று ஒத்துக் கொண்டார்.
பின்னர் விரைவாக வாசலுக்கு சென்று வாயில் போட்டுக் குதப்பிக்கொண்டிருந்த வெற்றிலையை புளிச்சென வெளியே துப்பிவிட்டு வந்தார்.
“என் பேரு கிருஸ்ணன். வயது 77. எங்கப்பா ராமன் வீரசாமி அவரும் இதே தொழிலுதான். நாங்க பரம்பரையா இதே தொழிலதான் செய்து வர்றோம்.” என்று திருவாய் மலர்ந்த கிருஸ்ணனிடம், ‘ஆரம்பத்திலிருந்து லொண்டரி கடைதான் வைத்திருக்கிறீர்களா?’என்று முதல் கேள்வியை தொடுத்தோம்.

“நான் பிறந்தது “தெரணியகலையைச் சேர்ந்த உடப்பொல தோட்டம். அந்த தோட்டத்தில எங்கப்பா துணி வெளுக்குற வேலை செய்தார்.நான் படிச்சது ஐந்தாவது வரைதான். எனக்கு சின்ன வயசுல இந்த துணி வெளுக்குற வேலை புடிக்கலை.ஆனா, என்ன பண்ணுறது நான் படிச்ச படிப்புக்கு வேறு என்ன வேலைதான் கிடைக்கப்போகுது. அதனால முக சுளிப்போடு இந்த துணி வெளுக்குற வேலையை கற்றுக்கொண்டு அதையே தொழிலா செய்தேன். பொறனுவை தோட்டத்துல டோபின்னா அது நான்தான்! ஆனால் தோட்டத்துல இதை தொடர்ந்து செய்ய முடியல..ஏன்னா அந்தக்காலத்துல ஒரு வீட்டுக்கு கொடுத்த பத்து ரூபாவதான் இன்றைக்கும் கொடுக்கிறாங்க. மொத்தமா சேர்த்து சம்பளத்துக்கு ஆயிரம் ரூபா தருவாங்க.இன்னைக்கு விலைவாசிக்கு அந்த பணம் கால்தூசு மாதிரி.

நம்ம ஆளுங்க பத்து ரூபாவ கொடுத்திட்டு 30 துணிகளை கொடுத்து வெளுத்து,தேய்த்து கேப்பாங்க. அதில பாதி துணி கரித்துணியாகத்தான் இருக்கும். அவங்க கொடுக்கிற பத்து ரூபாய்க்கு எங்களை பார்க்குற இடத்தில எல்லாம் அது சரியில்லை,இது சரியில்லைன்னு குறைவேற சொல்லுவாங்க. இப்படி வெட்கம் கெட்டுப் போய் வேலை செய்யணுமானுதான் தனியே லொண்டரி கடை வைச்சேன்.தோட்டத்துல இருந்து ஒதுங்கிட்டேன்.தோட்டங்களில உள்ள எங்க சாதிக்காரங்க யாருமே இப்போ தோட்டத்துல வெளுக்கிறது இல்லை..”என்று தனது மனதில் தேங்கிக்கிடந்த  ஆதங்கத்தையெல்லாம் அயன் பெட்டியிலிருந்து வெளிப்படும் அனலைப்போல கொட்டித்தீர்த்தார்.

கிருஸ்ணனுக்கு மூன்று பெண்கள்,ஒரு மகன் எல்லோரும் திருமணம் முடித்துவிட்டார்களாம். கிருஸ்ணனுக்கு பிறகு ‘டோபி’ என்கிற சாதிப் பெயரும், சாதித் தொழிலும் மரணித்துவிடும். இப்பிள்ளைகளில் எவரும் வெளுக்க தயாரில்லையாம். நல்லதுதானே!
‘தோட்டத்தை விட்டு வெளியேறி லொண்டரி தொழில் செய்வது நன்மையளிக்கிறதா?’என்றோம்,

“ஆமாங்க நல்ல வருமானம் கிடைக்குது.இப்படியே சிங்கள கிராமங்கள் பக்கமா போனா துவைக்க நல்ல உருப்படிகள் கிடைக்கும்.ஒரு உருப்படிக்கு 50ரூபா வாங்குறேன். ஒழுங்கா காசும் கொடுக்கிறாங்க.கிடைக்கிற பணம் குடும்ப செலவுக்கு போதுமானதாக உள்ளது.தோட்டத்திலையும் வேலை செய்கிற ஒவ்வொரு நபரும் தலா நூறு ரூபா வீதம் எங்களுக்கு கொடுத்தா தோட்டத்தில டோபி வேலை செய்ய நாங்கள் தயாராதான் இருக்கோம்!
தோட்டத்தில இப்பவும் எங்களுக்கு ஆயிரம் ரூபா மாதந்தோறும் கொடுக்கிறாங்க. நாங்களும் வாங்கிட்டுதான் வர்றோம்.இதுவரை யாரும் அதை நிறுத்தல…அதை நிறுத்தாதற்கும் ஒரு காரணம் இருக்கு. தோட்டத்துல எழவு விழுந்தா ஈமச்சடங்கு நான்தானே செய்யணும். ஒரு 1000ரூபா வாங்கிட்டு செய்து கொடுப்பேன்.

சிங்கள மக்களின் செத்த வீட்டுக்கு ஈமச்சடங்கு செய்ய போனா ஒரு நாளைக்கு 4000ரூபா கொடுக்கிறாங்க. எங்களை கவுரவமாகவும் நடத்துறாங்க.ஆனா தோட்ட பகுதிகளில் எங்களை மிகவும் இழிவாக நடத்துவதில் மகிழ்ச்சியடைகிறார்கள்.
தோட்டங்களில் ஈமச்சடங்கு செய்யும்போது அவனவன் பெரியவனாட்டம் எனக்கு வேலை சொல்லுறானுங்க,நான் தூக்கிட்டு வரும் தீச்சட்டியில்  பட்டாசு போடுறானுங்க…இப்படி ஏகப்பட்ட தொந்தரவுகள்…
ஒரு செத்தவீட்டுக்கு நான் போனா அந்த பிணத்தை புதைக்கிற வரைக்கும் என் உசுரு என்கிட்டே இருக்காது.. ஈமைக்கிரியைன்னு வந்துட்டா நான் குடிக்கிறதே இல்லை. குடிச்சிட்டெல்லாம் இவனுங்ககிட்டே வேலை செய்தா நம்மையும் குழியில போட்டு மூடிடுவானுங்க…பாவி பயலுங்க!!” என்று தமிழர்கள் மீது சாபம் போட்டு முடித்தார் கிருஸ்ணன்.
அவர் அனுபவித்த இம்சைகளை எம்மிடம் விவரித்தபோது அவரிடம் எந்தக் கூச்சமும் இருக்கவில்லை.அனுபவித்து சிரித்தார்.
‘இந்த தொழிலில் ஏதாவது மறக்க முடியாத சம்பவம் ஏதாவது…?”ன்னு வைன் பண்ணினோம்.

“ஏங்க அந்தக் காலத்துல தீபாவளி,விஷேசம்னு ஏதாவது வந்துட்டா படி அரிசி வாங்க வீடு வீடாக போவோம். ஒவ்வொருத்தனும் கையில் கிடைச்ச அரிசி,பருப்பு,காசுன்னு ஏதாவது தருவானுங்க. ஒரு சிலர் எங்களை கண்டதும் கதவை அடைச்சிடுவாங்க. அதை நினைச்சா இப்பவும் வெட்கமா இருக்கு பிச்சைக்காரன் மாதிரி ஒரு பெரிய சாக்கு பையை தோளில போட்டுக்கிட்டு வீடு வீடா போக இப்போ முடியுங்களா..அதெல்லாம் ஒரு காலம்.”என்று சொல்லி சிரிக்கும் கிருஸ்ணனிடம் ‘உங்க குலசாமி எதுங்க?’என்றோம்,
“வெள்ளாவி சாமிதான் எங்க குலசாமி. எங்கப்பன், ஆயி,ஆத்தா  கும்பிட்டது இந்த சாமியைதான். நானும்  கும்பிடுறேன்.ஊரெல்லாம் சுற்றி படி அரிசி வாங்கி, அதில சோறு சமைச்சி கோழி வெட்டி படையல் போட்டு, வெள்ளாவி சாமியை கும்பிடுவோம். இப்போ கோழி வெட்டி பழிக்கொடுக்கிறதெல்லாம் கிடையாது.ஏன்னா இப்போ வெள்ளாவி அவிக்கிறதே கிடையாது.துணிக்கு போட மருந்தெல்லாம் வந்துட்டதால வெள்ளாவி மறைஞ்சி போயிடுச்சுங்க.” என்று வருத்தமாக பதிலளிக்கும் கிருஸ்ணனிடம்,
‘உங்க ஆளுங்க ஊருக்கு ஒரு குடும்பம்தான் இருக்காங்க அது ஏங்க?’ என்றோம்.

இருள் உலகக் கதைகள்


வீரசிங்கம் பூசாரி சொன்ன பேய்க் கதை.

கேட்டு எழுதுபவர்- மணி ஸ்ரீகாந்தன்.

மத்துகமை துடுகலை தோட்டம் இருள் சூழ்ந்து வழமைக்கு மாறாக காட்சியளித்தது. ஒரு வித அச்ச உணர்வோடு அன்றைய பொழுது கழிந்து கொண்டிருந்தது. தோட்டத்தில் கங்காணியாக இருக்கும் ஆறுமுகம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து தமது மனைவி காத்தாயி அம்மாளிடம் சூடாக ஒரு தேனீரை வாங்கி தொண்டையை நனைத்துக்கொண்டான்.
மாலை மங்கிவிட்டாலே ஆறுமுகம் கங்காணியின் மூளையும் மங்கிவிடும். போதையில் உளறிpக் கொண்டிருப்பான். தோட்டத்தின் எல்லையில் விற்கப்படும் கள்ளச்சாராயத்தை குடித்துவிடும் ஆவலில் அந்த இடத்தை நோக்கி ஒற்றையடிப் பாதையில் விரைந்தான்.
சாராய நெடி காட்டுப்புதரிலிருந்து வருவதை மோப்பம் பிடித்த ஆறுமுகம், ‘நம்ம ஆளு ராலாமி இங்கேதான் இருக்கானா..?’என்று வெற்றிப் புன்னகையுடன் ராலாமியை நெருங்கினான்.

‘இங்கே பாரு ஆறுமுகம் இன்னைக்கு நீ குடிக்கப்போற கால் போத்தலுக்கும் கணக்குப் போட்டா ஆயிரத்து ஐநூறு ஆகுது, சம்பளம் போட்டவுடனே இங்கே வந்து கொடுத்திடணும், இல்ல…வீட்டுக்கு வந்து நாக்க புடுங்கிற மாதிரி கேட்பேன்’என்ற மிரட்டலுடன் ஆறுமுகத்துக்கு ராலாமி சாராயத்தை ஊற்றிக் கொடுத்தான்.
ஆவலுடன் வாங்கிய பட்டை சாராயத்தை ஒரே மூச்சில் அடித்த ஆறுமுகம், பெரிய சாதனையை செய்துவிட்ட மிதப்பில் வீடு நோக்கி நடந்தான்.
அப்போது நேரம் எட்டரை மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த பகுதி முழுவதும் இரப்பர் மரங்கள் சூழ்ந்திருந்ததால் அந்த கும்மிருட்டு தினமும் அமாவாசை இரவாகவே ஆறுமுகத்துக்கு காட்சியளிக்கும்.
ஆறுமுகத்தின் கையிலிருந்த டோர்ச் மிணுக் மிணுக்குன்னு மங்கலாக ஒளிப் பரப்ப அந்த கரடுமுரடான பாதையில் தட்டுத்தடுமாறி நடந்தான். அந்த நேரத்தில் அந்தப் பாதையில்  ஆறுமுகத்தை தவிர யாருமே இல்லை. பூரண நிசப்தம் அந்தப்பகுதி முழுவதும் குடிக்கொண்டிருந்தது. மழை வருவது மாதிரி திடீரென்று வீசிய குளிர் காற்றால் வீட்டுக்கு விரைவாக சென்றுவிட வேண்டும் என்பதில் ஆறுமுகம் வேகம் காட்டினான்.
அப்போது ஆறுமுகத்தை யாரோ பின் தொடர்வது மாதிரித் தோன்றியது.பின்னால் திரும்பிப் பார்த்தான். யாரும் வருவது மாதிரித் தெரியவில்லை. தைரியமாக கால்களை இரண்டு அடி முன்னால் வைத்தான். அப்போது அவன் பின்னால் ஏதோ மூச்சிறைக்க ஓடி வருவது மாதிரி உணர்ந்தான்.

பாதையை விட்டு விலகி வழி விட்டான். அப்போது அவன் கண்ட காட்சி அவனை குலை நடுங்கச்செய்தது. ஒரு பெரிய எறுமை மாடு ஆறுமுகத்தின் பின்னால் சுமார் பத்தடி தூரத்தில் நின்றப்படி அவனையே வெறித்துப்பார்த்தப்படி நின்றது. வெல வெலத்துப்போன ஆறுமுகம் தமது குலசாமி சுடலைமாடனை நினைத்து கண்களை மூடிக் கும்பிட்டான். கண்களை திறந்து பார்த்தப்போது, அந்த எறுமை வந்த வழியே திரும்பிப்போவதைப் பார்த்தப்போதுதான் ஆறுமுகத்துக்கு போன உயிர் திரும்பி வந்தது.
வீரசிஙகம் பூசாரி
மீண்டும் வீடு நோக்கி நடந்தான். ஊர் சந்தியில் இருக்கும் சுடுகாட்டை தைரியமாக கடந்தவனுக்கு வியர்த்துக் கொட்டியது. இப்போது ஆறுமுகத்தின் கண்ணுக்கெட்டிய தூரத்தில்தான் வீடு தென்பட்டது. ஆனாலும் ஆறுமுகத்தை ஏதோ ஒரு ஆபத்து இன்னும் பின் தொடர்ந்து வருவது மாதிரியே அவன் உணர்ந்தான். அப்போதுதான் ஆறுமுகத்துக்கு இன்னொரு ஆபத்தும் காத்திருந்தது.

ஆறுமுகம் நடந்து வரும் பாதையில் அந்த காட்டெருமை மீண்டும் வழிமறித்து நின்றுக்கொண்டிருந்தது. ஆறுமுகம் தனது கையிலிருந்த டோர்ச் வெளிச்சத்தை அந்த எருமையின் மீது பாய்ச்சினான். எருமையின் கண்கள் அக்னி குழம்புமாதிரி தெரியவே ஆறுமுகத்துக்கு உடல் சில்லிட்டுப் போனது, கையிலிருந்த டோர்ச் லைட்டை தூக்கி எதிரிலிருந்த எருமையின் மீது தூக்கி அடித்தான்.

அடுத்த நிமிசம் அந்த இடத்தில் எருமை நின்றதற்கான எந்த அறிகுறியும் தென்ப்படவில்லை. இப்போது ஆறுமுகத்துக்கு மூச்சு வாங்கத்தொடங்கியது. வழமையாக ஆறுமுகம் குடித்துவிட்டு வந்தால் அந்தப் பகுதியில் இருக்கும் வீடுகளுக்கெல்லாம் அவன் குடித்திருக்கிறான் என்பது புரிந்துவிடும். ஆறுமுகம் போதையில் பாடும் எம்.ஜி.ஆர் பாடல்கள் அதை வெளிச்சம் போட்டு காட்டிவிடும்.ஆனால் இன்று ஆறுமுகத்துக்கு போதை ஏறவில்லை. வீட்டுக்குள் வந்த ஆறுமுகம் வெளி விறாந்தையில் இருந்த திண்ணையில் காலை நீட்டிப்படுத்தான். அடுத்த நாள் அவனை குளிர்க்காச்சல் பிடித்தாட்டியது, இரவில் எதையோ பார்த்து பயந்திருப்பான் அதுதான் இப்படி வாட்டுகிறது என்று எண்ணிய அவன் மனைவி, சேரிமுத்து பூசாரியை கூட்டி வந்து அவனுக்கு விபூதி பிடித்து போடச்சொன்னாள்.
தண்ணீர் மந்திரித்து தெளித்த சேரிமுத்து பூசாரி, “கங்காணிக்கு ஏதோ கருப்பு காத்து பிடிச்சிருக்கு’ பெரிய பூசாரியை வச்சி பேய் ஓட்டினாதான் இது சரியாகும்”; என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
பூசாரியின் சொல்லை தெய்வ வாக்காக மதிக்கும் காத்தாயி அம்மாள், அந்தப்பகுதியில் பிரபல பூசாரியாக இருக்கும் வீரசிங்கம் பூசாரியை  அழைத்து வந்து ஆறுமுகத்து பேய் ஓட்டும் படலத்தை தொடங்கினாள்.
தனது சகாக்களுடன் பூஜை மன்றில் அமர்ந்த வீரசிங்கம் சுடலை மாடனை மனதில் நினைத்தப்படி உடுக்கை பலமாக அடிக்கத்தொடங்கினார். அந்தப் பகுதியே உடுக்கு சத்ததால் அதிர்ந்தது. சில நிமிடங்களில் பாயில் படுத்திருந்த ஆறுமுகம் ஆவேசம் வந்தவனாக பேயாட்டம் போடத்தொடங்கினான்.
வீரசிங்கத்தின் மந்திர உச்சாடனங்கள் விண்னைப் பிளக்க “டேய் பூசாரி! என்னை விரட்டணும்னு முடிவு பண்ணுறீயா, அது உன்னால முடியாத காரியம் ” என்று ஆறுமுகத்தின் உடம்பிலிருந்த கெட்ட சக்தி கூப்பாடு போடத்தொடங்கியது.

தீய சக்தியின் நூலை பிடித்துவிட்ட சந்தோசம் வீரசிங்கத்தின் முகத்தில் பளிச்சிட்டது. இனி நூல் பிடித்துச்சென்றால் ஆணிவேரை கண்டுபிடித்து விடலாம் என்ற உற்சாகத்தோடு உடுக்கையை இன்னும் பலமாக அடிக்கத்தொடங்கினார்.

Friday, September 8, 2017

face பக்கம்


இருள் உலகக் கதைகள்

முத்து பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்: மணி ஸ்ரீகாந்தன்.


இரத்தினபுரி பிரதேசம் முழுவதும் வரலாறு காணாத பெருமழை பெய்து ஓய்ந்திருந்தது. அப்போது நேரம் இரவு ஏழரையை நெருங்கிக் கொண்டிருந்தது. “நமக்கு இந்த துப்புக்கெட்ட பைக்கினால எப்பவும் ஏழரைதான்”ன்னு ஸ்டார்ட் நின்றுபோய் மக்கர் பண்ணும் பைக்கின் கிக்கை பலங்கொண்ட மட்டும் உதைத்துக்கொண்டிருந்தான் இளையதம்பி.

மழைவிட்டு தூவானம் விடாது என்பதுபோல, சின்னத் தூரல் மழை அந்த நிசப்த்த இரவை குளிராக்கிகொண்டிருந்தது.இரத்தினபுரியிலிருந்து குருவிட்ட செல்லும் அந்தச் சின்ன தெருவில் தெருவிளக்கு இல்லாத காரணத்தால் கும்மிருட்டு சூழ்ந்து அந்த பகுதியை அமானுஷ்யம் நிறைந்த இரவாக மாற்றிக்கொண்டிருந்தது. மூடிக்கிடந்த ஒரு பெட்டிக்கடையின் ஓரத்தில் சுருண்டு படுத்துக்கிடந்த தெரு நாய் வானத்தை பார்த்து ஊளையிடத் தொடங்கியது.

இருள் கவ்விய அந்த இடத்தில் தான் மட்டும் தனியாளாக நிற்பதை உணர்ந்த இளையதம்பிக்கு உடம்பு சிலிர்க்க, ‘இனியும் இந்த இடத்தில  நிற்ககூடாது’ன்னு
இளையதம்பி பைக்கை தெரு ஓரமாக நிறுத்திவிட்டு தெரு விழியே நடக்க ஆரம்பித்தான்.
“மச்சான் பைக் ரிப்பேர் ஆகிடுச்சு குருவிட்டபோற வழியில நிறுத்தியிருக்கேன் நீ வந்து பார்த்து திருத்தி கொடுத்தா பெரிய உதவியா இருக்கும்” என்று இரத்தினபுரி டவுனில இருக்கும் தனது நண்பனுக்கு அழைப்பை போட்டுவிட்டு சட்டை  பைக்குள் போனை வைத்துவிட்டு இளையதம்பி நிமிர்ந்து பார்த்தான்.
அப்போது தெரு ஓரத்தில் இருந்த ஒரு கொமினிகேஷன் பிரகாசமான வெளிச்சத்துடன் காணப்பட்டது. தூரல் மழையும் தமது உடம்மை நனைத்து நடுங்க வைத்துக் கொண்டிருப்பதால் அந்தக் கடையின் ஓரத்தில் ஒதுங்கிய இளையதம்பி கடையின் ஓரத்தில் நின்றப்படியே கடையின் கண்ணாடி வழியே எட்டிப்பார்த்தான்.

சுமார் ஒரு முப்பது வயது மதிக்கதக்க ஒரு அழகான பெண் உள்ளே அமர்ந்திருந்தாள்.அந்தக் காட்சியை கண்டதும் இளையதம்பிக்கு ரொம்பவும் ஆச்சர்யமாக போய்விட்டது. “இந்த நேரத்தில் தனியா ஒரு பொண்ணா, ரொம்பவும் தைரியமான ஆளாதான் இருக்கனும். எதுக்கும் பேச்சுக் கொடுத்து பார்ப்போம்”னு கண்ணாடிக் கதவை உள்ளே தள்ளி திறந்தபடியே “உள்ளே வரலாமா”என்றான் அதற்கு அந்தப் பெண் வரலாம் என்பது போல புன்னகைத்தாள்.

இளையதம்பிக்கு கல்யாணம் ஆகி மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனாலும் அவன் ஒரு சபல புத்திக்காரன். இப்படியொரு சான்ஸ் கிடைத்தால் விடுவானா. “நான் வந்த வண்டி ரிப்பேர் ஆகிடுச்சு அதுதான் மழைக்கு ஒதுங்கலாமேன்னு இங்கே வந்தேன்..”என்றவன் அங்கே இருந்த கதிரையில் அமர்ந்தான். இளையதம்பி கூறிய விசயங்களை அவள் செவிமடுத்ததோடு சரி வேறு எந்த பதிலும் அவள் சொல்லவில்லை. “எல்லாப் பொண்ணுங்களும் இப்படிதான் பேசி பேசியே கரைச்சிடலாம்” ன்னு பெண்கள் விசயத்தில் ஜெகஜால கில்லாடியான இளையதம்பி காரியத்தில் இறங்கினான்.
“இந்த நேரத்துல நீங்க மட்டும் தனியா இருக்கீங்களே, பயமா இல்லீயா?”என்றான். “நானே ஒரு பிசாசு எனக்கு என்ன பயம்!”என்று அவள் வாய் திறந்தாள். ‘அப்பாடா பட்சி சிக்கிருச்சு’ன்னு நிம்மதி பெருமூச்சுவிட்ட இளையதம்பி  “ஆமா நீங்க ஒரு காதல் பிசாசு மாதிரிதான் இருக்கீங்க”ன்னு இளையதம்பி அவளுக்கு பொடி வைத்தான். “உங்க பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று இளை மீண்டும் தொடர்ந்தான்.
அப்போது அவனின் செல்போன் சிணுங்கியது. “டேய் எங்க இருக்க உன் பைக் மட்டும் தெரு ஓரத்துல கிடக்கு..சீக்கிரம் வா”ன்னு அவனின் நண்பன் அழைக்க ‘பைக்க ரிப்பேர் பண்ண நண்பன் வந்துட்டான் இனி அவன விட்டுட்டா நான் தெருவிலதான் கிடக்கணும். இந்த பட்சியை நாளைக்கு வந்து பார்த்துக்கலாம்னு எழுந்தவன்,     “நீங்க இப்போ வீட்டுக்கு கிளம்பிடுவீங்களா…அப்போ நான் நாளைக்கு உங்களை பார்க்கிறேன்”ன்னு  வெளியே வந்தான். பைக் நிறுத்தப்பட்ட இடம் நோக்கி ஓட்டமும் நடையுமாக இளையதம்பி வந்தாலும் அவன் மனம் முழுவதும் அந்த கொம்னிகேஷன் தேவதைதான் நிரம்பியிருந்தாள்.
முத்து பூசாரி
சில மணி நேரங்களில் நண்பனின் உதவியில் பைக்கை திருத்தம் செய்துவிட்டு வீடு நோக்கி புறப்பட்டான். ‘நாளைக்கு வேலையை கொஞ்சம் நேரத்தோடு முடித்துவிட்டு அந்த கொமினிகேஷன் தேவதையை எப்படியாவது பார்த்துவிட வேண்டும்’ என்று மனதிற்குள் ஒரு தீர்மாணம் போட்டான்.
அடுத்த நாள் வேலையை நேரத்தோடு முடித்துவிட்டு இரத்தினபுரியிலிருந்து குருவிட்ட செல்லும் பாதையில் அந்த கொமினிகேஷன் இருந்த இடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் இளையதம்பி பார்வையை செலுத்தினான். நேற்று மழைக்கு ஒதுங்கிய கொமினிகேஷன், அந்த அழகு தேவதை என்று எதுவும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அந்த இடத்தில் பழவருடங்களாக பூட்டப்பட்டிருக்கும் ஒரு பாழடைந்த கடை மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபரிடம் ‘இங்கே ஒரு கொமினிகேஷன் இருந்ததே..?’ன்னு கேட்க “ஐந்து வருடத்துக்கு முன்னாடி இருந்தது. அதுதான் பூட்டிக்கிடக்கு.இப்போ இல்லை”ன்னு அந்த நபர் சொன்னதைக் கேட்டு ஆடிப்போன இளையத்தம்பி நேற்று நடந்த சம்பவத்தை விபரித்தான்.
“நீங்க சொல்லுறது உண்மைதான் தம்பி இந்த இடத்தில இப்படி அமானுஷ்யமான விசயங்கள் நடக்குறதா நானும் கேள்விப்படுறேன். அந்த கொம்னிகேஷன் கடைக்காரரோட மனைவியை அந்த மனுஷனே அடிச்சு கொன்னுட்டானாம். அந்த மனுஷியோட ஆவிதான் கொலை வெறியோட சுத்திட்டு இருக்கிறதா சொல்லுறாங்க. நீங்க தப்பியது அந்த ஆண்டவன் புண்ணியம்” என்று அந்த நபர் சொல்லி முடித்தப்போது இளையதம்பிக்கு வியர்த்து கொட்டியது.

அந்த இடத்தில் நிற்கவே அவனுக்கு கை கால் உதறல் எடுத்தது. அடுத்த நிமிசமே பைக்கை ஸ்டார்ட் செய்தவன் வீடு நோக்கி சிட்டாக பறந்தான். வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவனுக்கு அங்கே ஒரு ஆபத்து காத்திருந்தது. தலைவிரி கோலமாக ஆடிக்கொண்டிருந்த அவனின் மனைவியை பக்கத்து வீட்டுக்காரர்கள். அமுக்கி பிடித்து அவளின் கைகளை கயிற்றினால் கட்டிக்கொண்டிருந்தார்கள்.
அன்று பகலிருந்தே இளையதம்பியின் மனைவிக்கு ஏதோ தீய சக்தி அண்டிவிட்டதாகவும், அவள் அங்கே இருக்கும் வீடுகளுக்கு கல் எறிவதாகவும். குற்றச்சாட்டை முன் வைத்தார்கள்.

தனது மனைவியின் இந்த மனமாற்றத்துக்கு தான்தான் காரணம் என்பதை இளையதம்பி கண்டுபிடித்து விட்டான். அந்த கொமினிகேஷன் பிசாசுதான் தன்னை பின் தொடர்ந்து வந்து தனது மனைவியின் உடம்பில் ஏறிவிட்டதாக சந்தேகம் கொண்ட இளையதம்பி தமது நண்பர்களின் துணையோடு முத்து பூசாரியை அழைத்து வந்து பேய் ஓட்டும் படலத்தை தொடங்கினான். உடுக்கை கையிலெடுத்த முத்து ஓங்கார குரலெடுத்து சுடலை மாடனை நினைத்து பாடியபோது இளையதம்பியின் மனைவி பேயாட்டம் போடத்தொடங்கினாள் “ஏன்டா நாயே உனக்கு இவ்வளவு அழகான மனைவி இருக்கும்போது, உனக்கு இன்னொன்னு கேட்குதோ..? நேத்து நீ என்ன கொம்னிகேஷன்ல பார்த்து பல் இளிக்கும்போதே புரிஞ்சிக்கிட்டேன் நீ யாருன்னு” என்று அவள் போட்ட பேய்க்கூச்சலால் கூடியிருந்தவர்கள் குலைநடுங்கிப் போனார்கள். தாம் சந்தேகப்பட்டப்படி தமது மனைவியின் உடம்புக்குள் இருப்பது அந்த அழகான ராட்சஷிதான் என்பது உறுதியாகிவிட, ‘இப்படி நாமலே பேயை வெற்றிலை பாக்கு வச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கோமே,நமக்கு இதெல்லாம் தேவையா’ன்னு இளையதம்பி மனசு நொந்துபோனான்.
“டேய் உன்ன மாதிரிதான்டா என் புருஷனும் ஒரு  சபலப் புத்திக்காரன் பொம்பளைங்கன்னா நாக்க தொங்கப்போட்டுட்டு அழைவான். அத கேட்கப்போய்தான் என்ன அடிச்சு கொன்னுட்டான். அந்த சண்டாளப் பயலை நான் சங்கறுக்கிறதுக்குள்யே பைக் ஆக்ஷிடன்ல செத்து தொலைஞ்சிட்டான். ஆனாலும் என்னோட கோபம் இன்னும் குறையல அது அப்படியேதான் பத்திக்கிட்டு இருக்கு. உன்ன மாதிரி பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணுற மனசோட சுத்துறவனுங்கள கொல்லலாம்னு ஒரு முடிவு எடுத்துதான் இப்போ களத்துல இறங்கிட்டேன். என்னோட முதல் பலி நீதான்டா!!”ன்னு அந்த துஷ்டப் பேய் கத்தியபோது இளையதம்பிக்கு உடல் சில்லிட்டுப் போனது.
“யாரையும் கொல்லுற அதிகாரம் உனக்கு கிடையாது. உன்ன நான் கொல்லுறதுக்கு முன்னாடி ஓடிப்போயிடு உனக்கு உயிர்பிச்சை தாரேன்'னு முத்து சொன்னதை கேட்டு எகத்தாளமாக சிரித்த அந்த தீய சக்தி “ டேய் பூசாரி என்னப்பத்தி உனக்குத் தெரியாது நான் நினைச்சா உன்ன தொலைச்சிடுவேன்.” என்று அந்த தீயசக்தி சொன்னப்போது முத்துவின் முகம் கோபத்தில் சிவந்தது. “உனக்கு இறக்கம் காட்டுவதே தவறு, உன் கதையை முடிக்கிறேன்.” என்றவர், மந்திரித்த தண்ணீரை அவளின் முகத்தில் அடித்தார். அப்போது அந்த தீயசக்தி தள்ளாடி நிலத்தில் சரிந்தது. அந்த பிசாசின்  தலைமயிரை கொத்தாக பிடித்து, அதன் உச்சி மயிரை கண் இமைக்கும் நேரத்திற்குள் முத்து நறுக்கென்று கத்தரித்தார். முத்துவின் சகாக்கள் தயாராக வைத்திருந்த போத்தலில் அந்த தலைமயிரை போட்டு மூடினார்கள். ‘எல்லாம் முடிந்து விட்டது. இனி இந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.’ என்று வாக்குறுதி கொடுத்த முத்து பூசாரி, தமது சகாக்களோடு பேய் அடைப்பட்டுக் கிடக்கும் போத்தலை புதைப்பதற்காக சுடுகாடு நோக்கி வீறுநடைப் போட்டார்.   

இரண்டாம் ராஜசிங்கன் காலத்தில்

சி. கே. முருகேசு

கண்டி இராசதானியை 1635 முதல் 1687 வரையில் அதை 52ஆண்டு காலம் ஆட்சி புரிந்தவன் இரண்டாம் இராஜசிங்கனாகும். போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து விரட்டியடிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டவனாகையால் அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களுக்குள் அடிக்கடி தனது படைகளை அனுப்பி சேதங்களை விளைவித்தான். அதன்காரணமாக அங்கு வாழ்ந்த மக்கள் அப்பகுதியைவிட்டு வெளியேறி மத்திய மலைநாட்டை நோக்கி வந்து குடியேறலாயினர். அம்மக்கள் வசித்து வந்த பிரதேசங்கள் மக்களற்ற சூனியவெளிகளாயின. தனது ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களை நோக்கிவரும் மக்களுடன் மக்களாக எதிரிகளின் ஆட்களும் வந்துவிடக்கூடுமென்ற சந்தேகத்தின் காரணமாக கண்டி இராச்சியத்தின் சகல நுழைவாயில்களிலும் சோதனைச் சாவடிகளை மன்னன் உருவாக்கினான்.

போர்த்துக்கேயரைத் தொடர்ந்து ஒல்லாந்தருடனும் முரண்பட்டவனான இரண்டாம் இராஜசிங்கன் அவர்கள் மேற்கொண்டு வந்த கறுவா,மிளகு,பாக்கு, வாசனைத்திரவியங்கள் மற்றும் யானை வர்த்தகங்களுக்கு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தினான். ஒல்லாந்தருடன் எவரும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவும் கூடாதென தடுத்தான். இதனாலும் வீதித்தடைகளை ஏற்படுத்தி சோதனைச் சாவடிகளை அமைக்கவேண்டிய தேவை இராஜசிங்கனுக்கு இருந்தது. இதன்மூலம் கண்டி இராசதானிக்குள் எவரும் அத்துமீறி நுழையவோ வெளியேறவோ முடியாதவாறு பலத்த பாதுகாப்பு அமைந்தது.

சின்னஞ்சிறிய குற்றத்திற்கும் கோரமான தண்டனைகளை வழங்குவதில் இம்மன்னன் குறிப்பிடத்தக்கவனாகும். வயது வித்தியாசம் பாராமல் சிறிய தவறுக்காக பாராங்கல்லை நாள் முழுவதும் சுமந்து நிற்பவர்களை இவனது ஆட்சிக்காலத்தில் சரவ சாதாரணமாக தண்டனைக் களங்களில் காணமுடிந்ததாக கூறப்படுகின்றது.

நாட்டுமக்கள் ஆட்சியைப் பற்றி கொண்டுள்ள அபிப்பிராயங்களை அறிந்து கொள்ளவும் மக்களின் குறைகளை தெரிந்து கொள்ளவும் அடிக்கடி மாறுவேடத்தில் நகர்வலம் வருவதை இம்மன்னன் வழக்கமாகக் கொண்டிருந்தான். அவ்வாறு ஒருநாள் இரவு கண்டி மந்தாரம்புரத்து வீதியில் சோதனைச் சாவடிப் பக்கமாக மாறுவேடத்தில் மன்னன் சென்றுக்கொண்டிருந்தான். சோதனைச் சாவடியில் வீதித்தடை போடப்பட்டிருந்தது. நள்ளிரவு வேளையால் அங்கு பணியில் ஈடுப்பட்டிருந்த காவலாளி அமர்ந்தவாறே நித்திரையானான். மிக முக்கிய தகவலொன்றின் பேரில் பக்கத்து ஊருக்குள் வலம்வந்து மக்களின் மனநிலையை அறிய வேண்டிய தேவை மன்னனுக்கு இருந்தது. அதனால் ஓசைப்படாமல் சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல முற்பட்டான்.

காவலாளி நித்திரைக்கலக்கத்தில் இருந்தாலும் காலடி ஓசை கேட்டு எழுந்து நின்றான். “ஏய் நில்” என கத்தினான் காவலாளி. தன் முன்னால் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் நிற்கும் உருவம் தெரிந்தது. “நள்ளிரவு நேரத்தில் இந்த பாதையில் எவரும் பயணிக்கக்கூடாது! இது அரச உத்தரவு! நீ வந்த வழியே திரும்பிப்போ! ”என்றான்.

“மிக அவசரமும் அவசியமுமாக பக்கத்து கிராமத்துக்குப் போக வேண்டியுள்ளது. தயவுசெய்து  என்னை போக விடுங்கள்”இவ்வாறு அவ்வழிப்போக்கன் கூறலானான். மிக பணிவாக பலமுறை கெஞ்சியும் காவலாளி அதனை நிராகரித்தான். பொறுமையிழந்த அம்மனிதன் தன்னைப்போக விடுமாறும் இல்லையேல் நடப்பது வேறு எனவும் அச்சுறுத்தும் தோரணையில் பேசினான்.

Thursday, September 7, 2017

காதல் நல்லது தான் ஆனால் கள்ளக்காதல்………….


நிவேதாவுக்கு இப்போது 47 வயதாகிறது. ஆனால் அவரை பார்த்தால் 35 வயது என்றுதான் யாரும் கூறுவார்கள். கோவை அரசு பள்ளியில் அவர் ஆசிரியையாக வேலை பார்த்தார். நிவேதாவுக்கும் அவரது கணவர் ரகுவுக்கும் 20 வருடங்களுக்கு முன்னரே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டார்கள். நிவேதாவுக்கும் ரகுவுக்கும் இரு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுடன்தான் நிவேதா இப்போது வசித்து வந்தார்.
இந்நிலையில் கோவையில் வசித்து வந்த தீயணைப்பு படைவீரர் இளையராஜாவுக்கும் 28 வயது நிவேதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தப்பழக்கம் பின்னர் காதலாக மாறியது. 6 வருடங்களுக்கு மேல் இந்த தொடர்ப்பு நீடித்தது.

ஒரு வருடத்துக்கு முன் இளையராஜாவுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடந்து ஒரு குழந்தையும் உள்ளது. எனினும் நிவேதாவுடன் இந்த தொடர்ப்பை இளையராஜா விடவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இளையராஜாவும் நிவேதாவும் ஒன்றாகவே சுற்றித்திரிந்தார்கள்.

நிவேதா உல்லாசமாக பொழுது போக்கும் டைப். எனவே சில காலமாகவே பேஸ்புக்கில் மூழ்கியிருந்தார் 6 மாதங்களுக்கு முன் சென்னையை சேர்ந்த கம்பியூட்டர் என்ஜினியர் கணபதி (33 வயது) என்பவருடன் நிவேதாவுக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. புகைப்படங்களை பரிமாறுவது விருப்பம் தெரிவிப்பது. அரட்டை அடிப்பது என்று நிவேதா பேஸ்புக்கிலேயே மூழ்கிக்கிடந்தார் கணபதியுடனான பேஸ்புக் நட்பினால் இளையராஜாவை மறக்கும் அளவுக்கு கணபதி – நிவேதா நட்பு சென்றது.
நிவேதா

நிவேதாவின் பேஸ்புக் காதல் விவகாரம் இளையராஜாவுக்கு தெரிய வந்ததும் அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பேஸ்புக் காதலை கைவிடுமாறு எச்சரித்தார். ஆனால், தொடர்ந்து கணபதியுடன் பேஸ்புக் காதலை தொடர்ந்தார்.

இதனையடுத்து கணபதியை நேரில் சந்தித்து நிவேதாவுடனான நட்பை கைவிடுமாறு எச்சரிக்க இளையராஜா முடிவு செய்தார். கணபதியும் திருமணமானவர்தான். அவரது மனைவி தனியார்  வங்கியொன்றில் வேலை பார்ப்பவர். இதனால் நிவேதாவுக்கு தனது மனைவி வேலை செய்யும் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறியிருந்தார். இந்த உதவிக்கு பிரதியுபகாரமாக ஒரளவு பணத்தை நிவேதா ஏற்கனவே கணபதிக்கு கொடுத்திருந்தார்.

இந்த சமயத்தில்தான் கணபதியைப் பார்க்க இளையராஜாவும் நிவேதாவும் காரில் சென்னைக்கு வந்தனர். சென்னையில் குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு வருமாறு நிவேதா கணபதிக்கு செல்போன் மூலம் செய்தி அனுப்பினார்.

"கணபதி தனக்கு கடன் ஏற்பாடு செய்து தருவதாக கூறி இருக்கிறார். அவருடன் அது பற்றி பேசிவிட்டு வருகின்றேன்" என்ற நிவேதாவிடம் கடனை மட்டும் பெற்றுக்கொண்டு அவருக்கு குட்பை சொல்லிவிட்டு வந்துவிடு என்று இளையராஜா நிவேதாவிடம் சொல்லி அனுப்பினார்.

கடன் விஷயமாக பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு கணபதியுடன் சிரித்துப்பேசி நிவேதா நெருக்கம் காட்டியது இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை. அதனையடுத்து நிவேதா கணபதியுடன் பேசிக்கொண்டே நெருக்கமாக அமர்ந்து அவருடன் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றது இளையராஜாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
தன்னுடன் காரில் வந்துவிட்டு இப்போது தன்னை விட்டுவிட்டு கணபதியுடன் பைக்கில் சென்றதால் நிவேதா மீது ஆத்திரப்பட்ட இளையராஜா காரை ஏற்றி இருவரையும் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். காரை வேகமாக ஓட்டிச் சென்று கணபதியும் நிவேதாவும் பயணம் செய்த பைக்கின் மீது இளையராஜா மோதினார். மோதியதில் கணபதியும் நிவேதாவும் கீழே விழுந்தனர். நிவேதா காருக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்தார். கணபதி தப்பினார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட நிவேதா அங்கே உயிரிழந்தார். பொலிஸ் விசாரணையில் நடந்தது விபத்து என்று கூறி இளையராஜா தப்ப முயன்றார். ஆனால் தீவிரமாக விசாரித்த போது நிவேதா மீது காரை ஏற்றி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இளையராஜாவை கைது செய்த பொலிஸார் கொலைக்கு பயன்படுத்திய காரை  பறிமுதல் செய்தனர். தந்தையை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தங்கள் தாயின் மோசமான நடத்தையை அறிந்த நிவேதாவின் பிள்ளைகள் அவரது உடலை வாங்கி அடக்கம் செய்ய மறுத்துவிட்டனர். இப்படிப்பட்ட மோசமான நடத்தை உள்ளவரை நாங்கள் அடக்கம் செய்ய மாட்டோம் என்று பொலிஸாரிடம் கூறவும் செய்தனர். பொலிஸார் அவர்களிடம் பேசி மிகுந்த சிரமத்துடன் சென்னையிலேயே நிவேதாவின் உடலை அடக்கம் செய்வதற்கு இணங்கச் செய்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தால் சடலத்தைக் கூட பார்க்க விரும்பாத,அடக்கம் செய்ய முன்வராத அளவுக்கு நிவேதா மீது அவரது குழந்தைகளுக்கு வெறுப்பு ஏற்பட்டிருந்தது.
அதேவேளை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளையராஜா கடந்த வாரம் ஒருநாள் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். சிறையின் கழிவறை ஜன்னலில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொணடுள்ளதாக கூறப்படுகிறது.

கள்ளக்காதல் அவர்களை எந்த நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பதைப் பார்த்தீர்களா?

காதல் நல்லது தான்
ஆனால் கள்ளக்காதல்………….

கந்தபுராணம் தெரிந்த தமிழனுக்கு கந்தப்பனை தெரியுமா?மணி   ஸ்ரீகாந்தன்.

‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று ஆரம்பித்து ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் மாபெரும்; படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், அய்யன் திருவள்ளுவர்.

உலகத்தின் ஒட்டுமொத்த தத்துவத்தையும் ஒரே நூலில் முப்பாலாக பிரித்து உலக அரங்குகளில் தமிழனின் பெருமையை பறைசாற்றியவர் வள்ளுவர்.
“தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால்…”

என்று குறளின் பெருமையை அக்கால புலவரான கபிலர் வியந்து பாடியிருக்கிறார். அதிகாலை நேரம், கபிலர் பசும் புல் ஒன்றைப் பார்க்கிறார்.தரையுடன் ஒட்டிக் கிடக்கும் அந்தச் சிறிய புல்லின் நுனியில் தினையின் அளவைக் காட்டிலும் குறைவான ஒரு பனித்துளியை அவர் காண்கிறார்.பனித்துளியை உற்று நோக்குகிறார்.அந்தப் பனித்துளியின் அளவுக்குள்ளே, அதனருகே ஓங்கி உயர்ந்து நிற்கும் பனைமரம் முழுவதும் தெரிகிறது!அந்தக் காட்சி கபிலரைக் கற்பனைச் சிறகடித்துப் பறக்கச் செய்கிறது! “ஆகா! ஒரு சிறு பனித்துளிக்குள்ளே பக்கத்தேயுள்ள பனைமரம் முழுவதும் தெரிகிறதே, இதே போலத்தான் குறட்பாவுக்குள்ளும் இந்த வையத்துக்கு தேவையான பெரும் பொருள் பொதிந்து கிடக்கிறது. என்று திருக்குறளுக்கான விமர்சனத்தை கபிலர் முன் வைக்கிறார்.
எல்லீஸ்

உலக பொதுமறையைத் தந்த வள்ளுவனின் வாழ்க்கை வரலாற்றை பின்னோக்கி பார்த்தால், அவரின் பிறப்பு, பிறப்பிடம் குறித்து ஆதாரப்பூர்வமான தகவல் ஏதுமில்லை.
சென்னை மயிலாப்பூரில் பிறந்ததாக ஒரு சாராரும் மதுரையில் பிறந்தாக இன்னொரு சாராரும் குறிப்பிடுகிறார்கள். அதோடு ஆதி பகவன் என்ற பெற்றோருக்கு மகனாக பிறந்தவர்தான் வள்ளுவராம்.
சென்னையை அடுத்துள்ள காவிரிபாக்கம் என்ற இடத்தை சேர்ந்த மார்க்கசெயன் என்பவர் வள்ளுவரின் கவித்துவத்தை வியந்து அவரின் புதல்வியான வாசுகியை வள்ளுவனுக்கு திருமணம் செய்து வைத்ததாக அறியப்படுகிறது.
தாம் இயற்றிய திருக்குறளை தமிழச் சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய திருவள்ளுவர் பெரிய போராட்டங்களை செய்து கடைசியில் அவ்வையாரின் உதவியுடன் மதுரையில் அரங்கேற்றியதாகவும் ஒரு கதை இருக்கிறது.

கடைச் சங்க காலமான கி.மு. 400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற மன்னனின் ஆட்சிக் காலத்தில் வள்ளுவரை பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் இருக்கிறதாம்.
சங்க கால புலவரான ஒளவையார், அதியமான், மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதன் மூலம் சங்க கால புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரை பற்றிய செய்தியை தருகிறார். ஆகையால் மாமூலனாருக்கு முன்பே ஒளவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது. மாமூலனார் கி.மு 4 ஆம் நூற்றாண்டு செய்தியை கூறுவதால், திருவள்ளுவர் கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும். என்ற கருத்தும் உள்ளது. திருவள்ளுவரின் உருவமே ஒரு கற்பனை வரைபடம்தான்.


வள்ளுவர் கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.
இதேவேளை வள்ளுவனுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவர்களை பற்றிய வரலாறு மட்டும் ஆதாரப்பூர்வமாக எப்படி கிடைத்தது, வள்ளுவனின் வரலாற்று தகவல்கள் மட்டும் எங்கே போனது! என்று தேடிப்பார்த்தால் வள்ளுவன் என்கிற இந்த பெரும் படைப்பாளியை வெளியுலகுக்கு தெரியாதப்படி திட்டமிட்டு மறைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் புலப்படுகிறது. சாதி,மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறள்களை வள்ளுவர் எழுதியிருக்கிறார்.அதனால் அவர் ஒரு புரட்சியாளர் என்பது வெட்டவெளிச்சமாகிறது. அதோடு வள்ளுவன் என்கிற சொல் தாழ்த்தப்பட்டவன் என்பதை குறிப்பதானால் திருவள்ளுவருக்கு தலித் முத்திரையும் சில ஆதிக்கவாதிகளால் குத்தப்பட்டு இருக்கிறது.
நாம் சொல்லும் கருத்து நம்ப முடியாமல் நகைப்புக்குரியதாக இருக்கிறது என்றால், அன்மையில் ஹரித்வாரில் வள்ளுவர் சிலை நிறுவப்படுவதற்கு அங்குள்ள சாமியார்கள் எதிர்ப்பு தெரிவித்து வள்ளுவனை தூக்கியெறிந்தார்கள். அவர்களின் இந்த ஆட்சேபணைக்கு காரணம் திருவள்ளுவர் தலித் என்ற பிரச்சாரம்தான்.
இந்த நவீன காலத்திலேயே வள்ளுவனுக்கு இத்தினை பிரச்சினை என்றால் இரண்டாயிரம் ஆண்டுகளாக மறைக்கப்பட்டு செல்லரித்துப்போன திருக்குறள் எப்படி தமிழர்களின் கைகளில் கிடைத்தது என்ற தகவல் உங்களுக்குத் தெரியுமா?
திருவள்ளுவர் நாணயம்

தமிழ் சமஸ்கிரதத்தில் பிறந்த மொழி அல்ல, அது திராவிடக் குடும்பத்தின் மூத்த மொழி. இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு பிறகும் தமிழ் பிற மொழிகளின் உதவியில்லாமல் தனித்து இயங்கும் என்று ஆங்கில அறிஞரான கால்டு வெல் குறிப்பிட்டிருந்தார். அவர் தமிழை ஆராய்ந்து சொன்னக் காலத்துக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆங்கில ஆய்வாளரான எல்லீஸ் என்ற அறிஞர் உலகத்துக்கு அதனை அறிவித்திருந்தார்.
இவர் தமிழ் மீது ஏற்பட்ட காதலால் தமிழ் பயின்று எல்லீஸ் என்கிற தமது பெயரை எல்லீசன் என்று மாற்றிக்கொண்டாராம். 1825ல் அறிஞர் எல்லீஸ் சென்னையில் ஒரு தமிழ்ச் சங்கம் நிறுவி பழங்கால ஓலைச் சுவடிகளை தேடிக் கண்டுபிடித்து சேமிக்கும் முயற்சியில் இறங்கினார்.

அப்போது பழங்கால ஓலைச்சுவடிகள் நூற்றுக்கணக்கில் எல்லீஸ் துரையின் கரங்களுக்கு கிடைத்தது. அவற்றில் மிகவும் மோசமாக செல்லரித்துப்போன ஓலைச்சுவடிகளை தமது வீட்டின் சமையற்காரனாக பணியாற்றிய கந்தப்பன் என்பவனிடம் கொடுத்து அவைகளை எரித்துவிடும்படி எல்லீஸ் பணித்திருக்கிறார். அதன்படியே கந்தப்பனும் ஓலைச்சுவடிகளை தீயில் போட்டு கொளுத்தியிருக்கிறான். அப்போது தன் கையில் இருந்த ஒரு கட்டு ஓலைச்சுவடியை எடுத்து படித்து பார்த்திருக்கிறான். அதிலிருந்த வார்த்தைகள் நெஞ்சத்தின் ஆழத்தை தொடுவது போல் இருந்தது. பிறகு அந்த கட்டை தீயில் போட மனமில்லாத கந்தப்பன் எல்லீசனிடம் சென்று “அய்யா இந்த ஓலைச்சுவடிகள் ஏதோ அறியக்கருத்துக்களை சொல்வதுப்போல இருக்கிறது” என்று சொல்ல அந்த ஓலைச்சுவடியை வாங்கிப் பார்த்த எல்லீசன் உடனே புலவர் தாண்டவராய முதலியார், மெனேஜர் முத்துசாமி பிள்ளை ஆகியோரிடம் கொடுத்து அந்த சுவடிகளை பரிசோதித்து 1831ல் உரை நடையுடன் அச்சிலேற்றி தமிழ் உலகுக்கு திருக்குறளை எல்லீசன் வழங்கினார்.

ஆனாலும் தீயின் வாயிற்குள் போக வேண்டிய திருக்குறளை மீட்டுத்தந்தது நமது கதாநாயகன் கந்தப்பன்தான். கந்தபுராணம் தெரிந்த எத்தனை தமிழனுக்கு இந்த கந்தப்பனை தெரியும்?
இந்த கந்தப்பன் வேறு யாருமல்ல, பகுத்தறிவாளர் அய்யா அயோத்திதாச பண்டிதரின் பாட்டன்தான்  இவர். 
ஆங்கில அறிஞரான எல்லீஸ் துரையும் தமிழுக்கு பெரும்பணியாற்றியிருக்கிறார்.
தமிழ், வடமொழி இரண்டையும் முறையாகக் கற்ற இவர் சென்னையில் வருவாய் வாரியச் செயலராக இருந்து, காணியாட்சி முறையும் வேளாண் சீர்திருத்தமும் கண்டவர். முத்துச்சாமி பிள்ளை என்பவரைக் கொண்டு வீரமாமுனிவரின் நூல்களை எல்லாம் தேடச் செய்தார். வீரமாமுனிவர் வரலாற்றைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். திருக்குறளின் முதல் 13 அதிகாரங்களுக்கு முதன்முதலில் உரையெழுதியிருக்கிறார். 1835ல் ஆளுநர் மன்றோவும் எல்லீசும் சென்னையில் தமிழ் நூல்களின் அச்சகச் சட்டம் கொண்டு வந்து பல தமிழ் நூல்களைப் பாதுகாக்க வழி செய்தனர்.

 காணொளியாக காண்பதற்கு..


தமிழ்த் தொண்டாற்றிய ஆங்கிலேரான

எல்லீஸ் மரணத்தில் மர்மம்.


இங்கிலாந்தில் பிறந்த பிரான்சிஸ் வைட் எல்லீஸ் ஒரு ஆங்கிலேயர். சிறு வயதில் இருந்தே புத்திசாலியாக விளங்கியவர். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருவாய்த் துறைச் செயலாளராக சென்னைக்கு வந்தார். எட்டு ஆண்டுகள் அந்த வேலையைச் செய்தார். அதன்பின் சென்னை கலெக்டராக பதவி உயர்வு பெற்று பத்து ஆண்டுகள் பணியாற்றினார். சென்னையின் குடிநீர் பஞ்சத்தைப் போக்குவதற்காக பல இடங்களில் கிணறுகளை தோண்டினார். அந்த கிணற்றின் அருகே தமிழில் கல்வெட்டு அமைத்தார். அதில் 'இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்குறுப்பு” என்ற நீரின் பெருமையை உணர்த்தும் திருக்குறளை பொறித்திருந்தார்.

இவருடைய பொறுப்பின் கீழ் இருந்த நாணயச்சாலையில் திருவள்ளுவர் உருவம் பதித்த 2 நாணயங்களை வெளியிட்டார். பிரிட்டிஷ் மகாராணிகளின் உருவம் மட்டுமே பதித்து வரும் அந்தக் காலக்கட்டத்தில் இது பெரும் புரட்சி. கலெக்டரான பின் அவர் பல இந்திய மொழிகளைக் கற்றார். அந்த மொழிகளில் அவருக்கு தமிழே மிகவும் பிடித்திருந்தது. 'திராவிட மொழிக் குடும்பம்' என்ற கருத்தாக்கத்தை முதலில் உருவாக்கியவர் இவர்தான்.
தமிழ் மொழியை தெரிந்து கொண்டதோடு அவர் நின்று விடவில்லை. தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். அவற்றை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். திருக்குறளுக்கு விரிவான விளக்கம் எழுதினார். அதை முழுதாக முடிக்கும் முன்னே மரணத்தைத் தழுவினார். அவருடைய திருக்குறள் விளக்கவுரை அரைகுறையாகவே அச்சிட்டு வெளியிடப்பட்டது. யாரும் சொல்லாத பல விளக்கங்களை புதுமையாக சொன்ன அறிஞர் என்று தமிழறிஞர்கள் இவரை பாராட்டினர்.

தமிழ் மீது தணியாத தாகம் கொண்ட எல்லீஸ், பண்டைய இலக்கியங்களை சேகரித்து பாதுகாக்கவும் செய்தார். குறிப்பாக வீரமாமுனிவர் எழுதிய நூல்களை சேகரிப்பதற்காக தனது சொத்துக்களின் பெரும்பகுதியை விற்று செலவு செய்தார். அப்படி அவர் தேடும்போது கிடைத்த பொக்கிஷம்தான் 'தேம்பாவணி' என்ற காவியம். இவருடைய முயற்சி இல்லையென்றால் இந்த காப்பியம் நமக்கு கிடைக்காமலே போயிருக்கும்.

தமிழரின் சிறப்புகள் பற்றி பல ஆய்வுக் குறிப்புகளை எழுதி வைத்திருந்தார். அந்தக் காலக்கட்டத்தில்தான் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரை பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. அதற்காகவே சென்னையில் இருந்து மதுரை வந்தார். தமிழோடு தொடர்பு கொண்ட பல இடங்களைப் பார்த்தார். இங்கும் ஏராளமான சுவடிகளைச் சேகரித்தார். அதன்பின் ராமநாதபுரம் சென்றார். அங்கிருந்த தாயுமானவர் சமாதியை கண்டு உருகினார். அப்போது அவர் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்தது. அது எதிரிகளால் வைக்கப்பட்டதா என்ற விவரம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக சுய உணர்வை இழந்தார். மருத்துவ வசதி இல்லாத அந்த காலத்தில் மதுரைக்கு வரும் முன்னே மரணம் அவரைத் தழுவிக்கொண்டது. மதுரையைப் பார்க்க வந்த எல்லீஸ் மீண்டும் சென்னை திரும்பவே இல்லை. இவர் தனது நூலில் கிறிஸ்துவ சமயத்தைக் குறிக்க பராபரன் என்பதற்கு மாறாக நமச்சிவாய என எழுத, இதனைக் கண்ட கிறிஸ்த்துவ சமயிகள் கிருத்துவ சமயத்தைப் பரப்புவதற்குப் பதிலாக இந்து சமயத்தைப் பரப்புகிறார் எனக்கருதி இவரைக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

சென்னையிலும் மதுரையிலும் அவர் சேகரித்து வைத்த ஓலைச் சுவடிகள் அனைத்தும் கேட்பாரற்றுக் கிடந்தன. பெரிய அறைகளில் மலை போல் குவிந்திருந்த ஓலைச் சுவடிகளை ஏலம் விட ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. அந்த சுவடிகளின் மகத்துவம் அறியாத தமிழர்கள் யாரும் அவற்றை விலை கேட்க முன்வரவில்லை. பல மாதங்கள் பயனற்றுக் கிடந்த சுவடிகளை செல்லரிக்கத் தொடங்கின. பல ஆண்டுகள் அலைந்து திரிந்து, சொத்தை விற்று, சேகரித்த பொக்கிஷங்கள் எல்லாம் சென்னையிலும் மதுரை கலெக்டர் பங்களாவிலும் பல மாதங்கள் விறகாக எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
என்று ஆங்கில அறிஞரான சேர் வோல்டர் ஸ்கொட் எழுதியுள்ளார்.
தமிழின் பெருமை உணர்ந்து, அதற்கு தொண்டாற்றிய எல்லீசின் கனவும் சுவடிகளோடு சுவடியாக எரிந்து போனது.
இந்த ஆங்கிலேயத் தமிழறிஞரை இன்றைக்கு யாருக்கும் தெரியாது. தமிழகத்தின் பெரு நகரங்களில் கே.கே.நகர், அண்ணா நகர் போல எல்லீஸ் நகரும் இருக்கிறது.சாந்தி தியேட்டருக்கு பின்புறம் திருவல்லிக்கேனியிலிருந்து அண்ணாசாலை வரையுள்ள வீதிக்கு எல்லீஸ் வீதி என்று அழைக்கப்படுகிறது. அதோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உருவாக்கிய குடியிருப்புகளுக்கு இந்த பெயரை வைத்திருக்கிறார்கள். வைத்தவர், அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.
எல்லீஸ் என்ற பெயரில் திரைப்பட இயக்குனர் ஒருவர் இருந்தார். 'சகுந்தலை' போன்ற படங்களை இயக்கியவர். எல்லீஸ் ஆர். டங்கன் என்பது அவர் பெயர். அவருடைய பெயரில் தான் இந்த நகரங்கள் அமைந்திருக்கின்றன என்பதுதான் பலரின் எண்ணம். அதுசரியல்ல.
பிரான்சிஸ் வைட் எல்லீஸ் என்னும் ஆங்கிலேயத்தமிழ் அறிஞரை யாரும் மறக்கக் கூடாது என்பதற்கு தான் எல்லீஸ் நகர் என்று தமிழக அரசு பெயர் வைத்தது. ஆனால் யார் அந்த எல்லீஸ் என்று யாருக்குமே தெரியாததுதான் வேதனையின் உச்சம்..!

காணொளி வடிவத்தில்  காண்பதற்கு..

Wednesday, September 6, 2017

இருள் உலகக் கதைகள்முத்து பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர் - மணி  ஸ்ரீகாந்தன்.

கலவத்தையை அண்மித்திருக்கும் ஒரு இறப்பர் தோட்டம். அப்போதுதான் பெருமழை பெய்து முடிந்திருந்தது. இறப்பர் மரங்கள் தாம் சேமித்து வைத்திருந்த நீர்த்துளிகளை ஒவ்வொன்றாக பூமிக்கு தாரைவார்த்து கொண்டிருந்தன. மரத்திலிருந்து விழும் நீர்த்துளிகளின் சத்தத்தை தவிர அந்த பிரதேசம் முழுவதும் நிசப்தத்தில் ஆழ்ந்திருந்தது.  வழமைக்கு மாறாக அன்று மாலை 5மணிக்கே அந்த இறப்பர் தோட்டப்பகுதியை இருள் கபளீகரம் செய்திருந்தது.

மேட்டு லயத்து பெட்டிக்கடையில் மட்டும் ஒரு குப்பி விளக்கு மங்களாக எரிந்து கொண்டிருக்க தெருக்கோடியில் படுத்துக்கிடந்த ஒரு சொறிநாய் உடம்பை படபடவென ஆட்டி சிலிர்த்து விட்டு வானத்தை பார்த்து ஊளையிடத் தொடங்கியது. அந்தப் பகுதியில் சமீபகாலமாகவே நள்ளிரவில் ஒரு குழந்தை வீல் என்று கத்துவதும், அதனைத்தொடர்ந்து ஒரு தாயின் கூக்குரலும் கூடவே சேர்ந்து கேட்பதாக ஒரு கதை உலா வருவதால் அந்த ஊரே பயத்தில் உறைந்து கிடந்தது.

அப்போது அந்த ஊரின் வழியாக நள்ளிரவில் வரும் கடைசி பஸ்சில் குமாரசாமி வந்து இறங்கினான். வெளிநாட்டுக்கு வேலைக்கு அழைத்து செல்வதாக கூறிய ஏஜண்டின் பேச்சை நம்பி ஏதோ ஒரு தீவில் அனாதரவாக விடப்பட்ட குமரேசன் ஆறு மாதங்களின் பின் அன்றுதான் அகலவத்தைக்கு திரும்புகிறான்.

கும்மிருட்டில் தட்டுத்தடுமாரி அந்த ஒற்றையடிப்பாதையில் மேட்டு லயத்தை நோக்கி நடந்தான். நிறைமாத கர்பிணியான தனது மனைவியை பக்கத்து வீட்டு ஆட்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற தைரியத்தில் வீட்டின் வறுமையை போக்குவதற்காக ஒரு வெறியோடு வெளிநாட்டுக்கு கிளம்பியது தவறுதான் என்பதை இப்போது குமரேசன் உணர்ந்து கொண்டாலும்,தவறு செய்து விட்டோமோ என்று குமரேசனின் மனது கிடந்து படபடத்துக் கொண்டிருந்தது.
முத்து  பூசாரி
“என் மனைவியை கண்டவுடன் அவளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று மனதுக்குள் ஒரு தீர்மானம் போட்டவன் வீடு நோக்கிய பயணத்தில் வேகம் காட்டினான்.

மேட்டு லயத்தின் கடைசி வீடு செல்லரித்துப் போன கதவுடன் காட்சி தந்தது.
கதவை அன்மித்தவன் கதவை தட்டத்தொடங்கினான். ‘சரசு…சரசு..’ன்னு குமரேசன் போட்ட சத்ததிற்கு ரெண்டு தெருநாய்கள்தான் அவனுக்கு பின்னால் மூச்சிரைக்க நின்றது. பலமாக தட்டியும் எந்த பதிலும் வராமல் பூரண அமைதியே நிலவுதை கண்ட குமரேசனுக்கு ஒருவித அச்சம் மேலிட கதவின் இடுக்கின் வழியாக வீட்டின் உள்ளே அவதானித்தான். எண்ணை தீர்ந்து போகும் இறுதிகட்டத்தில் எரிந்து கொண்டிருக்கும் ஒரு குப்பி விளக்கு மங்களான வெளிச்சம் தந்துகொண்டிருக்க அதன் பக்கத்தில் சரசு மடியில் குழந்தையை கிடத்தி அதற்கு பால் கொடுத்து கொண்டிருந்தாள்.
அந்தக் காட்சியை பார்த்த குமரேசனுக்கு தலைகால் புரியாத சந்தோசம். எனக்கு பிறந்தது ஆணா, பெண்ணா தெரியலையே என்ற சந்தோசத்தோடு கதவை பலங்கொண்டமட்டும் தள்ளியபோது அது படார் என்று திறந்து கொண்டது. வீட்டினுள் சென்ற குமரேசன்  தனது மனைவியின் அருகில் சென்றவன் ‘சரசு வந்துட்டேன்டீ இனி உன்ன விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன்’ன்னு சொல்லியும் சரசு குமரேசனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. மடியில் கிடக்கும் தனது குழந்தையை நோக்கியதாகவே அவளின் பார்வை இருக்கவே, குமரேசன் சரசுவின் தலையை பிடித்து தன் பக்கமாக நிமிர்த்தினான்.அப்போது குமரேசன் கண்ட அந்தக் கோரக்காட்சி அவனை நிலைகுலைய செய்தது. அழுகி தொங்கும் ஒரு கொடூரமான, இதுவரை யாரும் கண்டிராத ஒரு அவலட்சனமான முகத்தை கண்டவன் அதிர்ந்து,  கூக்குரலோடு தரையில் சாய்ந்தான்.
பக்கத்து வீட்டில் ஏதோ நடப்பதாக உணர்ந்த ஊர்வாசிகள் திரண்டு அந்த வீட்டுக்குள் நுழைந்து பார்த்தார்கள். மூர்ச்சையாகி தரையில் கிடந்த குமரேசனை தண்ணீர் தெளித்து எழுப்பி எப்போது வெளிநாட்டிலிருந்து வந்தாய், என்ன நடந்தது. என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்கள். தனக்கு நடந்த கதையை விபரித்தவன் தனது மனைவி சரசு எங்கேன்னு கேட்டான். ‘நீ எங்கே இருக்கேன்னு எங்களுக்கு தெரியாதுப்பா அதனால தகவல் சொல்ல முடியல உன் மனைவி பிரசவத்தின்போதே செத்து போயிடுச்சு!’என்று ஊர் பெரிசுகள் கோரசாக சொன்னார்கள். அதிர்ச்சியால் குமரேசன் மீண்டும் மயங்கி விழுந்தான். அவனை மீண்டும் மயக்கத்தை தெளியவைத்து அவனிடம் விசாரித்து கேட்டார்கள். அவன் வீட்டில் கண்ட காட்சியை சொன்னப்போது அந்த மேட்டு லயமே அதிர்ந்து போனது. நள்ளிரவில் கேட்கும் அமானுஷ்ய சத்தங்களுக்கு அர்த்தம் கிடைக்கவே அந்த ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பேசி எதிர்காலத்தில்  தமது பிள்ளைகளுக்கு எந்த ஒரு காத்து கருப்பும் அண்டாதிருக்க  ஒரு பெரிய மாந்திரீகரை வரவழைத்து ஊரை தீயசக்திகளிமிருந்து பாதுகாக்கும் வேலியை அமைக்க முடிவு செய்தார்கள்.
அதன்படி இரத்தினபுரியிலிருந்து முத்து பூசாரியை அழைத்து அதற்கான பூஜையை போட்டு ஊரை விட்டு பேய்களை ஓரங்கட்டும் வேலையை அவரிடம் ஒப்படைத்தார்கள்.
பேய்களுக்கு எந்தவித தயவு தாட்சண்யமும் பார்க்காத முத்து பூசாரி கண்ணில் பட்ட பேய்களை எல்லாம் தர தரவென பிடித்து போத்தலில் அடைத்து எரியும் நெரிப்பில் போட்டு அவைகளை சங்காரம் செய்து கொண்டிருந்தார்.

மேட்டு லயத்தின் நாலு திக்குகளிலும் அடைந்து கிடந்த காத்து கருப்புகளை எல்லாம் பிடித்து கழுவி சுத்தமாக்கியவர். வெற்றி புன்னகையோடு ஊர் மக்களிடமிருந்து விடைபெற்று நடந்தார். இறப்பர் தோட்டத்தின் ஒரு மூலையிலிருந்து ‘டேய் பூசாரி உன்ன சங்கறுக்காம விடமாட்டேன்டா!!’ன்னு ஒரு ஈனக்குரல் அசரீரியாக பூசாரியின் காதுகளில் விழுந்தது.

face பக்கம்

Tuesday, September 5, 2017

இருள் உலகக் கதைகள்

வீரசிங்கம் பூசாரி சொன்ன பேய்க்கதை

கேட்டு எழுதுபவர்: மணி ஸ்ரீகாந்தன்.

விசாவலை நகரத்தை அன்மித்திருக்கும் எலிஸ்டன் தோட்டத்தின் ஒரு தலைவரான தர்மலிங்கம் லயத்தின் கடைசி அறையில் குடியிருப்பவர் அவர் வழமைப்போலவே குடித்துவிட்டு வாய்க்கு வந்த கெட்டவார்த்தைகளை கொட்டித்தீர்த்து கொண்டிருந்தார்.

அவரது மூன்று குழந்தைகளும் அவர் போட்ட பேய்க்கூச்சலுக்கு பயந்துபோய் பாயில் சுருண்டு கிடந்தார்கள்.வீட்டின் வெளிவிறாந்தையில் எரிந்து கொண்டிருந்த மண்ணெண்னை விளக்கில் எண்ணை தீர்ந்துவிட்டதால் அதுவும் அணைந்துவிட கும்மிருட்டு அந்த அறையை சூழ்ந்து கொண்டது.
தலைவர் லயத்தின் அனைத்து அறைகளுக்கும் மின்சார வசதி இருந்தும்,தர்மலிங்கத்தின் வீட்டில் மட்டும் மின்சாரம் இல்லை. தர்மலிங்கம் பெருங்குடிகாரனாக இருந்ததால் அந்த குடும்பத்தில் வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது. இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து தாமும் மற்றவர்களைப்போல வாழவேண்டும் என்கிற கனவுகளோடு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குவைத்துக்கு பணிப்பெண்னாக சென்றவள்தான் கமலா.
அவள் வெளிநாடு செல்லும்போது ‘இனி குடிக்க மாட்டேன், பிள்ளைகளையும் கவனமாக பார்த்துக்குவேன்.’ என்று கமலாவின் தலையில் கைவைத்து சத்தியம் செய்து கொடுத்து வழி அனுப்பிவைத்தவர்தான், தர்மலிங்கம். பிறகு ஒரு வாரம் மட்டும் சத்தியத்தை கடைப்பிடித்த அவர் மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்பதுபோல மீண்டும் போதையில் மிதக்க தொடங்கினார்.
வீடு கட்டுவதாக பொய் சொல்லி மாதா மாதம் கமலாவிடம் பணம் பெற்று குடியும் கூத்துமாக இருந்தார். தனக்கு செய்து கொடுத்த சத்தியத்தை கணவன் மீறமாட்டான் என்கிற நம்பிக்கையில் அவர் கேட்டபோதெல்லாம் குவைத்திலிருந்து பணம் அனுப்பினாள் அவள்.

அந்த பணத்தில் ஒரு செங்கல்லைகூட வாங்காத தர்மலிங்கம் முழுப்பணத்தையும் குடிக்காகவே செலவிட்டார். பிள்ளைகள் மூன்றையும்,தர்மலிங்கத்தின் தாய் கூலி வேலைசெய்து காப்பாற்றினாள்.
மறுநாள் விடிந்தால் கமலா நாடு திரும்பப் போகிறாள் என்ற பதட்டத்தில் வெலலெத்துப்போன தர்மலிங்கம், பிள்ளைகளுக்கு புது சட்டையெல்லாம் வாங்கிக் கொடுத்து ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் சென்றார்.  பிள்ளைகளை கண்ட கமலா ஆனந்த கண்ணீர் விட்டாள்.

பிறகு வீடு வந்து இறங்கியவளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தாம்வெளிநாடு செல்லும்போது இருந்த வீடு அப்படியே இருந்ததை கண்டதும், தம்மை தர்மலிங்கம் திட்டமிட்டு ஏமாற்றி தமது உழைப்பு அத்தனையையும் வீணாக்கி விட்டாரே என்பதை புரிந்துகொண்ட அவள் கத்தி அழுதாள்.
பிறகு தர்மலிங்கத்தோடு வாய்த்தர்க்கத்தில் இறங்கினாள். போதையில் இருந்த தர்மலிங்கம் கமலாவை சரமாரியாக தாக்கினான்.
அன்று இரவு முழுவதும் அழுதுகொண்டிருந்த கமலா நள்ளிரவை தாண்டியபோது தாம் இனி ஒரு நொடிக்கூட உயிரோடு இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தாள். தமது வீட்டு சுவரில் படமாக தொங்கிக் கொண்டிருந்த தமது மாமனாரான தர்மலிங்கத்தின் தந்தை கந்தசாமியை கையெடுத்து கும்பிட்டவள், ‘மாமா நான் வெளிநாடு போய் வரும் வரையும் நீங்க இருப்பீங்கன்னு நினைச்சு என் குடும்பத்தை விட்டுட்டு போனேன் ஆனா அதுக்குள்ள உங்களுக்கு நெஞ்சடைப்பு வந்து நீங்க இறந்துபோவீங்கன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல.நீங்க இருந்திருந்திருந்தா என் புருசனை தண்டிச்சி திருத்தியிருப்பீங்கன்னு நினைக்கிறேன். இனி ஒண்ணும் பண்ண முடியாது. அதனால என்ன மன்னிச்சுடுங்க!’ன்னு சொன்னவள் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு முன்னாலிருந்த கோப்பி தோட்டத்துக்குள் நுழைந்தாள்.
வீரசிங்கம் பூசாரி

face பக்கம்


Monday, September 4, 2017

கண்டி மன்னன் நரேந்திரசிங்கன் காலத்தில்

பலாப்பழம்  களவாடிய  விகடன்

1707 முதல் 1739 வரை கண்டி ராச்சியத்தின் அரசனாக விளங்கிய ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் கண்டி இராசதானியின் கடைசிச் சிங்கள மன்னனாவான். தென்னிந்திய நாயக்கர் வம்சத்தின் ஒரே குடும்பத்தில் இருந்து மூவரை மணம் புரிந்த இம்மன்னனின் மறைவின் பின்னரே நாயக்கர்களின் ஆட்சி மலரத்தொடங்கியது. சற்று முன்கோபம் குணம் கொண்ட இவனது ஆட்சிகாலத்தில் அரண்மனையிலும், அரச சபையிலும் விகடம் பேசும் புத்திசாலித்தனமான ஒருவன் இருந்தான். தென்னிந்திய அரச சபைகளில் தென்னாலி ராமன் போன்று கண்டி அரச சபையில் இவ்விகடன் அனைவரையும் மகிழ்விப்பவனாக விளங்கினான்.

கண்டியை அண்மித்த குண்டசாலையில் அரண்மனையை அமைத்து அரசன் ஆட்சி புரியலானானன். இவனது அரண்மனையை அண்மித்தவாறு குண்டசாலை ரஜ மகா விகாரை அமைந்திருந்தது. இவ்விகாரை வளாகத்தில் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவந்து நாட்டப்பட்ட உயர்ரகத்தைச் சேர்ந்த பலாக்கன்று வளர்ந்து தேனினுமினிய சுவைதரு பழங்களை தந்துகொண்டிருந்தது. மிகப்பெரிய அளவினதாகவும் எங்குமே காணமுடியாத சுவைதருவனவாகவும் இப் பலாமரத்தின் கனிகள் அமைந்திருந்தன. இம்மரத்தின் வழிவந்த பலாமரமொன்று மேற்படி விகாரை வளாகத்தில் இன்றும் காணக்கூடியதாக இருப்பதாக கூறப்படுகின்றது.

இம்மரத்தின் காய்கள் பழுக்கும் பருவத்தை அடைந்ததும் வெள்ளைத்துணியால் பழங்களை மூடிக்கட்டி வைத்து விடுவார்கள் வேறு எவருமே இப்பழங்களை தொடவும் முடியாது. இப்பழங்கள் அரண்மனையின் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட முடியுமென பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இப்பலாமரத்தின் பின்னால் உண்மைச்சம்பவமொன்றும் பொதிந்துள்ளது.

ஒருநாள் விகாரை வளாகத்தில் பலாமரத்தின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த விகடனின் நாசித்துவாரங்களை ஆக்கிரமித்தது பழுத்த கனியொன்றில் இருந்து வெளிவந்த பலா மணம் : அவனது நாவில் நீறூறியது. மானசீகமாக பலாப்பழத்தைப் பறித்து சுளைகளைச் சுவைத்து மகிழ்ந்தவனாக மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த விகடனால் அங்கிருந்து ஒர் அடியேனும் எடுத்து வைக்க முடியவில்லை. எவ்வாறாயினும், பலாபழத்தைச் சுவைத்து தேன்வடியும் சுளைகளை ஒருகை பார்த்து விடுவதென்ற உறுதியுடன் வெள்ளைத்துணியால் மூடிக் கட்டப்பட்டிருக்கும் பலாப் பழத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்
சில விநாடிகளில் வந்ததது விரட்டுமென்ற மனஉறுதியோடு மரத்திலேறிய விகடன் இரண்டு கிளைகளுக்கு நடுவே அமர்ந்து பழத்தை மூடிக்கட்டியிருந்த வெள்ளைத்துணியை மெதுவாக அகற்றினான்.

மரத்தின் பக்கமாகவே அமர்ந்திருந்தபடியால் அவனது சர்வாங்கமும் பலாப்பழ நறுமணத்தினால் மெய்மறந்த நிலையை அடைந்தான். அவசர அவசரமாக அப்பெரிய அளவிலான பழத்தின் அரைவாசிப்பகுதியை தேன்வடிய வடிய வெட்டி எடுத்துக்கொண்டு அவன் மீண்டும் வெள்ளைத்துணியால் மிகுதியை மூடிவிட்டு கவனமாக கீழே இறங்கலானான். தோள் மீதிருக்கும் பாதிப்பழத்தை வீட்டுக்குச் எடுத்துச் செல்ல அவன் நினைத்தாலும் அதனைச் சுவைப்பதில் அவனுக்கிருந்த அவசரம் காரணமாக மரத்தின் அடியிலேயே அமர்ந்து பலாப்பழத்தின் அரைவாசிப்பகுதியையும் சுவைத்து உண்டு தீர்த்துவிட்டு வீட்டுக்குச் சென்றான்.
பலாப்பழத்தை எடுத்துச் செல்ல அரண்மனை சேவகர்கள் வந்தனர். மரத்திலேறி வெள்ளைத்துணியை நீக்கிவிட்டு பார்த்தபோது பழத்தின் கீழ்ப்பகுதி வெட்டியெடுக்கப் பட்டிருப்பதைக் கண்டு திகைப்படைந்தனர். பலாப்பழத்தின் பாதி வெட்டியெடுக்கப்பட்டிருப்பதற்கான குற்றச்சாட்டு தம்மீது சுமத்தப்படுமோவென அஞ்சிய ஊழியர்கள் உடனடியாக அரண்மனைக்கு விரைந்து நடந்த விஷயத்தை விளக்கமாகக் கூறினர்.
அரசனுக்கும் அரண்மனைக்கும் அவமானத்தை ஏற்படுத்திய சம்பவமாக இப்பலாக்கனிக் களவு எடுத்துக் கொள்ளப்பட்டது. பலாக்கனியை வெட்டியெடுத்த கள்வனை உடனடியாக கைதுசெய்யுமாறு அரச கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

விசாரணை மேற்கொண்ட புலனாய்வு பிரிவினருக்கு பலாமரத்தடியில் விகடனின் நடமாட்டம் பற்றி தகவல்கள் கிட்டின. அதனைத்தொடர்ந்து விகடனின் வீட்டை அரச சேவிதர்கள் முற்றுகையிட்டனர். பலாப்பழத்தின் நறுமணம் வந்த மூலையில் பாயில் படுத்துறங்கிக் கொண்டிருந்த விகடனைக் கண்டனர்.

கைதுசெய்வதற்கான காரணத்தையோ ஆரம்பகட்ட விசாரணையோ மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. ஏனெனில் விகடன் மேலிருந்து பழவாசம் வீசிக்கொண்டிருந்தது. எவ்வித சிரமமுமின்றி விகடனை கைது செய்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அரசன் முன்னால் கைதியாக நிறுத்தப்பட்டிருந்த விகடனைப் பார்த்து கூறத்தொடங்கினான்.

“உனக்கெதிராக மிகமோசமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. எவ்விதமான அச்சமுமின்றி அரண்மனைக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் பலாமரத்திலேறி சேலையால் மூடிக்கட்டப்பட்டிருந்த பலாப்பழத்தின் அரைவாசிப் பகுதியை வெட்டியெடுத்து கள்ளத்தனமாக புசித்திருக்கின்றாய். எனவே நீ குற்றமற்றவனென முடிவெடுப்பதற்காக ஏதாகிலும் தெரிவிக்கக்கூடிய விடயங்கள் இருந்தால் இப்போது கூறலாம்."
வெடவெடத்துப்போயிருந்த விகடனின் சர்வாங்கமும் வியர்வையினால் தொப்பையாகியிருந்தது. அரச குற்றவாளியாகியுள்ள நிலையில் தண்டனையிலிருந்து தப்பும் வாய்ப்பே இல்லாத நிலையை எண்ணி வருந்தினான். இருப்பினும் இக்குற்றச்சாட்டிலிருந்து விடுபட ஏதாவது மார்க்கத்தைத் தேட முற்பட்டான் விகடன். தன்னை குற்றமற்றவனென வெளிப்படுத்துவதற்கு உலர்ந்துபோன அவனது நா மறுத்தது. ஒருவாறு வார்த்தைகளைக் கட்டியிழுத்துக்கொண்டு அரசன் முன்னால் மன்றாடினான் தெய்வமே! என்னை மன்னித்துவிடுங்கள்” என்று புலம்பலானான்.

“நான் காலையில் அரண்மனைக்கு வரும்போது வெறும் வயிற்றுடனேயே வந்தேன். என் வெற்று வயிறு பசியைப் பொறுத்துக்கொள்ள முடியாது தவித்தது. பலாமரத்தின் அடியில் செல்லும்போது பலாப்பழத்தின் நறுமணம் பசியை மேலும் தூண்டியது.பலாப்பழத்தின் மணம் என்னை மயக்கமுறச் செய்து விட்டது. என்ன நடந்ததென்றே நானறியேன். பிரபு இந்த ஏழைக்கு கருணை காட்டுங்கள்”  எனக்கெஞ்சினான். இவன் அரண்மனைக்குச் செய்துள்ள துரோகம் மன்னிக்கக்கூடியதன்று பலாப்பழத்தை மரத்தில் வைத்தே பாதியை தின்று தீர்த்துள்ளான். அதுமட்டுமல்ல மீண்டும் அதே வெள்ளைப் புடவையால் எஞ்சிய பழத்தை மூடி வைத்துவிட்டுச் சென்றுள்ளான். இது என்னையும் எனது ஆட்சியையும் அவமதிப்பதோடு ஏமாற்றும் செயலாகும். எக்காரணம் கொண்டும் இவனை மன்னிக்க முடியாது. உடனே இவனை இழுத்துப்போய் சிரச் சேதம் செய்யுங்கள்” ஆத்திரமேலீட்டால் விகடனுக்கு மரண தண்டனை விதித்தான் மன்னன்.

விகடனோ தரையில் விழுந்து புரண்டு அழுதான்.என்னை மன்னியுங்கள் பிரபு, என இரு கை கூப்பி வேண்டினான். இவ்வாறு அழுது புலம்பிய விகடன் மீண்டும் எழுந்து நின்றான்.  தனது அழுகையை கணப்பொழுதில் நிறுத்திவிட்டு  பலமாக சிரிக்கத் தொடங்கினான். “முன்பு அழுத நீ இப்போது ஏன் சிரிக்கிறாய்?” ஆச்சிரியத்துடன் மன்னன் கேட்டார். “தெய்வத்துக்குச் சமமான எனது அரசே!நான் செய்த தவறுக்காக தாங்கள் அளித்த தீர்ப்பு குறித்து நான் கிஞ்சித்தும் அஞ்சவில்லை.ஆனால் ஒரே ஒரு பலாக்கனிக்காக ஒரு மனிதன் உயிரை சிரசசேதம் செய்வதன்மூலம் தங்களுக்கு ஏற்படும் அவமானத்தைப்பற்றி நினைத்து எனக்குள் பெருங்கவலை ஏற்பட்டது. அதனால் தான் சிரித்தேன்” தெளிவாக பதிலளித்தான் விகடன். மன்னன் ஒரு விநாடி சிந்தித்தான்.

“ம்…………….ஸ்ரீ விநாயக பெருமானின் புத்திக்கூர்மைதான் உன்னிடமும் இருக்கின்றது. உன்னைப்போல் ஒருவனை காணவே முடியாது! சரி "இவனை விடுதலை செய்யுங்கள்!" தனது தீர்ப்பை மாற்றியமைத்தான் மன்னன். சாஷ்டாங்கமாக மன்னன் முன்னால் வீழ்ந்து எழுந்த விகடன் மௌனமாக அரச சபையை விட்டு வெளியேறினான். கண்ணுக்கெட்டிய தூரம் அவன் சென்று மறைந்த பின்னர் மன்னனின் கடைவாயில் சிறிதாக புன்னகை மலர ஆரம்பித்தது.

- சி.கே.முருகேசு

சீதாவக்க ராஜசிங்கன் காலத்தில்…..