Monday, July 24, 2017

காமன் கூத்து- 3

மணி  ஸ்ரீகாந்தன்

ரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் ரோம் நகரத்தின் கலாச்சாரமே வியாபித்திருக்கிறது. ரோம்  நாகரிகம் 2500 வருடங்கள் பழமையானது. ரோமின் பெரும்பாலான கலாசார அம்சங்களில் இந்தியாவின் பாதிப்பு இருக்கிறது. உலகிற்கு காதலர் தினத்தை ரோம் அரசுதான் அறிவித்தது.     
ரோமில் காதலர் தினம் கொண்டாடப் பட்டது கி.பி 3ம் நூற்றாண்டில் இருந்துதான். ஆனால் பண்டையத் தமிழகத்தில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு 5ம் நூற்றாண்டுக்கு முன்பே) இந்திர விழா (காதல் விழா, காமன் விழா) என்ற பெயர்களில் காதலர் தினம் கொண்டாடப்பட்டிருக்கிறது என்பதை நாம் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தோம்.
ரோமிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான வர்த்தகம் பழங்காலத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
ரோம் மன்னர் அகஸ்டஸ் காலத்தில் கி.மு 1-ம் நூற்றாண்டில் ரோமிற்கும், பண்டையத் தமிழகத்திற்கும் இடையான வர்த்தகம் துவங்கியது என்று லத்தீன் மொழியில் சேர மன்னர் (முசிறி துறைமுகம்) பாண்டிய மன்னர் பற்றிய குறிப்புகள் உள்ளன.

சாலமன் மன்னனின் வர்த்தகக் கப்பல்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கம், வெள்ளி, யானைத்தந்தம், மயில்களை ஏற்றிக்கொண்டு திரும்பியிருக்கின்றன. பைபிள் 10:22 என்று பைபிள் குறிப்பிடுகிறது. பண்டைய இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே மயில்களும் யானைத்தந்தமும் கிடைத்தன.
தமிழின் சங்க இலக்கியங்கள் பலவற்றில் ரோமானியர்கள் தமிழகத்துக்கு வர்தகம் செய்ய வந்தார்கள் என்று குறிப்புகள் கூறுகின்றன. அதில் ரோமானியர்களை யவணர்கள் என்று அழைத்திருக்கிறார்கள்.
வர்தகம் செய்ய வந்த ரோமனியர்கள் பலர் பூம்புகார் பட்டிண அரண்மனைகளில் காவல் பணியிலும் ஈடுபட்டு இருக்கிறார்கள். வர்தகம் செய்ய வந்த ரோமானியர்கள் பலருக்கு  தமிழ்மொழி பரிட்சயம் இல்லாததால் அவாகள்; சைகையால் பேசியிருக்கிறார்கள். அதனால் அவர்களை மிலேச்சர்- வாய் பேச முடியாதவர்கள் என்று மக்கள் நினைத்திருக்கிறார்கள்.
ரோமாபுரி நாட்டினராகிய யவணரின் மரக்கலங்கள் முசிறித் துறைமுகத்திற்குப் பொன்னைக் கொண்டு வந்து இறக்கி விட்டு மிளகு மூட்டைகளை ஏற்றிச் சென்றன. என்று அகநானூறு 149: 9-11 ஆகிய பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்திரன்

அந்த காலத்தில் நடைபெற்ற காமன் கூத்து விழாவான இந்திர விழாவுக்கு பிற நாடுகளைச் சேர்ந்த பலர் வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். சீன யாத்திரிகர் ‘பாஹியான்’ கி.பி.5ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்திருந்தபோது, பாடலிபுத்ரத்தில் தான் கண்ட மாபெரும் ஊர்வலத்தைப் பற்றிய குறிப்பையும், ‘மெகஸ்தனிஸ்’எனும் யாத்திரிகர் அதே பாடலிபுத்ரத்தில் தாம் கண்ட ஒரு கொண்டாட்ட ஊர்வல விழா பற்றிய குறிப்புகளையும் ஆராய்ச்சி செய்த கல்வெட்டு ஆய்வாளர் பத்மாவதி என்பவர், அந்த இரு விழாக்களிலும் புத்தத் துறவிகளும் கலந்துகொண்டதால், விழா ஊர்வலங்கள் ஏதோ ஒரு புத்த மத விழாவுடன் தொடர்புடையதாக இருக்கும் என்று கூறுகிறார்.
மேலும் காவிரி பூம்பட்டினத்தில் நடைபெற்ற இந்திர விழாக்களில் ‘சரணர்’ என்னும்  புத்தத் துறவிகளும் கலந்து கொண்டார்கள் என்ற கருத்துடன் மேற்கூறப்பட்ட கருத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் அந்த யாத்திரீகர்கள் குறிப்பிடும் பிரமாண்ட நிகழ்வுகள் இரண்டும் இந்திர விழாவாகவே இருக்க வேண்டும் என்று ஆய்வாளர் தமது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
இதற்கு ஆதாரமாக கல்வெட்டு ஆய்வாளர் வட மதுரையில் ஐந்து இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்திரனின் உருவங்களை சுட்டிக் காட்டுகிறார். பௌத்தர்கள் இந்திரனை கடவுளாக ஏற்று வழிப்பட்டு வந்திருக்கிறார்கள். இந்திர விழா புத்த மத விழாக்களுள் ஒன்றாக கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் என்றொரு கருத்தும் உள்ளது.

இதற்கு எடுத்துக் காட்டாக இலங்கையில் புத்த மதத்தினர் இந்திரனை சமன் தெய்யோ என்ற பெயரில் வழிப்பட்டு வருவதையும், இரத்தினபுரியில் இந்திரனுக்கு வரலாற்று சிறப்புமிக்க ஆலயம் (சமன் தேவாலய) இருப்பதும், விழாக்காலங்களில் பிரமாண்ட பெரஹெர ஊர்வலங்கள் நடை பெறுவதும் குறிப்பிடத்தக்கது.

கி.மு.6ம் நூற்றாண்டிலேயே, அதாவது, புத்தமதம் தோன்றிய காலத்திலேயே சோழ நாட்டில் பௌத்தம் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. அகழ்வாராச்சியின் போது 300க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகள் அங்கே கிடைத்திருப்பதால் சோழ நாட்டில் புத்த மதம் சிறப்புடன் போற்றப்பட்டு வந்திருப்பதை அறிய முடிகிறது. 
தமிழகத்துடன் ரோமப் பேரரசுக்கு நெருங்கிய வர்த்தகத் தொடர்பு இருந்திருக்கிறது என்பதற்கு, நிறைய வரலாற்று ஆதாரங்கள் இருக்கிறது. பூம்புகாரின் அரிக்கமேட்டில் கிடைத்த அகழ்வு பொருட்களில் ரோமானியர்களின் பொற்காசு, ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட பல கிடைக்கப் பெற்றுள்ளன. கி.பி.1ம் நூற்றாண்டில் தமிழகத்துக்கு வந்து வணிகம் செய்த யவனருடைய பண்டகசாலையாக அரிக்கமேடு இருந்திருக்க வேண்டும். என்று அகழ்வு ஆராச்சிகளின் மூலம் தெரியவருகிறது.

ரோமாபுரியினர் பயன்படுத்திய இரு கைப்பிடிகள் உள்ள ‘அம்பொரா’ (amphora) என்னும் மது ஜாடிகளும் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் யவனர் கொண்டு வந்த மதுபானத்தை தமிழ் அரசர்கள் அருந்தினர் என்பது புறுநானூற்றில் மதுரைக் கணக்காயனாரின் மகனான நக்கீரனார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப் புகழ்ந்து பாடும் பாட்டில் வருகிறது.
இரத்தினபுரி இந்திரன் கோயில்


‘யவனர்களால் அழகிய கலங்களில் கொண்டு வரப்பட்ட குளிர்ந்த நறுமணம் மிக்க மதுவை ஒல்லியான இடையுடைய மகளிர் பொன் கலத்தில் ஏந்தி நாள்தோறும் வழங்க குடித்து மகிழ்வாயாக.’
யவனர், நன் கலம் தந்த தண் கமழ் தேறல்
பொன் செய் புனை கலத்து ஏந்து நாளும்
ஒண் தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து
என்று புறநானூறு.56:18-20 ஆகிய பாடல்களின் மூலம் அம்பொரா மதுக் கிண்ணம் ரோமாபுரியினரால் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது என்பது வெட்டவெளிச்சமாகிறது.

அதோடு யவனர்கள் பயன்படுத்திய களிமண் விளக்குகளான பாவை விளக்கு, அகல்விளக்கு, அன்ன விளக்கு உள்ளிட்டவைகளின் உடைந்த  பாகங்களை அரிக்கமேட்டில்  தொல்பொருள் ஆராச்சியினர் கண்டுபிடித்துள்ளார்கள். சங்ககால நூலாகிய ‘நெடுநல்வாடை’யின் பாடல்களிலும் இந்த விளக்குகள் பற்றிய குறிப்பு இருக்கிறது.
ஒரு பாவை, தன் கையில் அகல் விளக்கு ஒன்றை ஏந்தி நிற்பது போன்று, யவனர்களின் கைத்திறனால் அழகுறச் செய்யப்பட்ட ‘பாவை விளக்கு’ நிறையும்படி நெய் வார்த்து, அதில் பருமனான திரியை வைத்துக் கொளுத்த, தீபம் மேல் நோக்கி எரிந்தது.
யவனர் இயற்றிய வினை மாண் பாவை
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து
பருஉத் திரி கொளீஇய குருஉத் தலைநிமிர் எரி
என்பதை நெடுநல்வாடையும், ரோமானியர் பாவை விளக்கைத் தவிர, அன்ன விளக்கையும் பயன்படுத்தினார்கள் என்பதை பெரும்பாணாற்றுப்படையில் வேள்விச் சாலையில் நடப்பட்டிருந்த வேள்வித் தூணின் மேல் வைக்கப்பட்டிருந்த யவனர்கள் செய்த அன்ன விளக்கில் எரியும்  தீபம் இரவு விடிவதற்குச் சற்று முன் தோன்றுகிற விடிவெள்ளியைப்போல் ஒளிவிட்டதாம்.
வேள்வித் தூணத்து அசைஇ யவனர்
ஓதிமவிளக்கின் உயர்மிசைக் கொண்ட
வைகுறு மீனிற் பைபயத் தோன்றும் என்று குறிப்பிடுகிறது.
எனவே ரோமானியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான வர்தக தொடர்பு மிகவும் வலுவானதாக இருந்திருக்கிறது என்பதை நமது சங்க இலக்கிய நூல்கள் பாடிச் சென்றிருக்கின்றன.
ரோமாபுரி தங்க நாணயங்கள்


எனவே நமது காதலர் தினமான காமன் கூத்து பெரு விழாவை அவர்கள் அப்படியே நகலெடுத்து ரோமுக்கு கடத்தி அதையே காதலர் தினமாக பிற்காலத்தில் அறிவித்திருக்கிறார்கள் என்று கொள்வது ஏற்புடையதே.
காமன் பண்டிகை என்பது வட இந்தியாவில் ஹோலகா, ஹோலிகா என்றும்     ஊ ளா , ஊளி என்றும் அழைக்கப்பட்டது. இவ்விழா நாளில் ஆடவரும் பெண்டிரும், குறிப்பாக இளைஞர்கள் ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக் கொண்டும், சாயப் பொடிகளை தூவிக் கொண்டும், மதுபானம் அருந்தி ஊளையிட்டுக் கொண்டும், குதித்துக்கொண்டும் சில வேளைகளில் இருபொருள்படும் கொச்சையான பாடல்களைப் பாடிக்கொண்டும் திரிவர். இதுவே தற்போது ஹோலி என்று வழங்கப்படுகிறது. கொங்கு நாட்டில் ஒலி எழுப்புகின்ற மணிகளைக் கோத்து இடுப்பில் கட்டிக்கொண்டு நடுத்தெருக்களில் ஆடிப்பாடிக்கொண்டு இவ்விழாவைக் கொண்டாடினர். உறையூரிலும் (திருச்சிராப்பள்ளி) திருவரங்கத் திலும் ஆற்றின் இடையே இருந்த மணல் திட்டுகளில் ஆடவரும் பெண்டிரும் தமக்கு விருப்பமான இணைகளுடன் சேர்ந்துகொண்டு கூடிக் களிப்பது சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காமனுக்கு அனங்கன் என்றும் பெயருண்டு. சிவன் தவம் செய்துகொண்டிருந்தபோது, அத் தவத்தைக் கலைப்பதற்காகச் சிவன்மீது காதல் உணர்வுகளை ஏற்படுத்தும் கணைகளை மன்மதன் தொடுத்தமையால் தவம் கலைந்த சிவனுடைய நெற்றிக்கண்ணின் கதிர்வீச்சுக்குக் காமன் பலியானான். அதனால் அவனுக்கு அங்கம் (உடல்) இல்லாதவன் என்று பெயர் வந்ததாக விளக்கம் கூறப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில் உருவிலி என்ற பெயரால் மன்மதன் குறிப்பிடப்பட்டுள்ளான். காதல் உணர்வு என்பது எவ்வாறு இருபாலார் மனதிலும் விதைக்கப்பட்டு வேர்பிடித்து வளர்கிறது என்பது எளிதில் கணித்துச் சொல்லமுடியாத ஒன்றாக இருப்பதாலும் இத்தகைய உணர்வுக்குக் காரணமான தெய்வத் தத்துவத்தை உருவிலி என்றும் அனங்கன் என்றும் குறிப்பிட்டிருக்கக் கூடும். உருவிலி என்பதுதான் மருவி வடநாட்டில் ஹோலியானதாகவும் ஒரு கதை இருக்கிறது.

காவிரி பூம்பட்டிணத்தை கடல் கொண்டதற்கு காதல் விழாவே காரணம் என்று கூறப்படுகிறது. இந்திரனின் ஆனைப்படி காதல் விழா தொடங்கப்பட்டதால் அது இடையில் தடைப்படக்கூடாது என்பது இந்திரனின் கட்டளை. ஆனால் கரிகாலனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த  கிள்ளிவளவன் விழாவை தொடர்ச்சியாக நடாத்தி வந்திருக்கிறான். அப்போது அவனது வாழ்க்கையில் ஒரு துயரச் சம்பவவம் நடந்தது.


கிள்ளிவளவனுக்கு நாகநாட்டு மன்னன் மகள் பீலிவளைக்கும் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை கையில் எடுத்த பீலிவளை மணிபல்லவத் தீவையும், இந்திரனால் அமைக்கப்பட்ட பீடிகையையும் வலம் வந்தாள். அங்கு ஒரு மரக்கலம் அருகே கம்பளச்செட்டி என்பவன் காத்திருந்தான்.

அவனிடம் குழந்தையை கொடுத்த பீலிவளை, ‘இந்தக் குழந்தை மன்னனின் மகன். இவனை பத்திரமாக மன்னனிடம் ஒப்படைத்துவிடு’ என்றாள். கம்பளச்செட்டியும் குழந்தையை கும்பிட்டு வாங்கியவன் துறைமுகத்தை விட்டு தன் கலத்தில் பயணத்தை தொடங்கினான். பயணம் தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு கலம் கரையை தொட்டுவிடும் தூரத்தில் இருந்தபோது அது உடைந்துவிட்டது. அதன் பிறகு கலத்திலிருந்து உயிர் தப்பிய பயணிகள் மன்னன் கிள்ளிவளவனிடம் சென்று கலம், கடலில் உடைந்து குழந்தைiயும் காணாமல் போய்விட்டது என்று கூறியதை கேட்ட மன்னன் நாக மணியை இழந்து தவித்த நாகம் போல துடித்து புரண்டான். அதன் பிறகு கரையோரத்திலும், கடலிலும் குழந்தையை தேடும் முயற்சியில் ஈடுபட்டான். மன்னருக்கு ஏற்பட்ட அவல நிலையை நினைத்து மக்களும் துயரத்தில் ஆழ்ந்துவிட இந்திர விழா நடத்துவதையே மக்களும் மறந்துவிட்டார்கள்.
விழா கொண்டாடப்படாததை பொறுத்துக் கொள்ள முடியாத மணிமேகலை தெய்வம் ‘அழகிய புகார் நகரை அலைக்கடல் இழுத்துக் கொள்ளட்டும்’ என்று சாபம் இட்டாள். அதனால் புகார் நகரம் கடலினுள் மூழ்கி அழிந்தது. என்று மணிமேகலை 25:190,200 ஆகிய பாடல்களில் பாடப்பட்டிருக்கிறது.

புகாரின் அழிவுக்கு பிறகு இந்திர விழா அடியோடு நின்றுவிட்டாலும், அதற்கு பிறகு வந்த மன்னர்களின் தலைமையில் தமிழகத்தின் பிற பகுதிகளில் விழாவை நடாத்தி இருக்கிறார்கள். இன்று நமது மலையகத்தில் ஆடப்படும் காமன் கூத்து, இந்தியாவின் வட நாட்டில் கொண்டாப்படும் ஹோலி என்பன இந்திர விழாவின் எச்சங்கள்தான். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இன்று மலையகத்தின் பலபாகங்களில் கொண்டாடப்படும் காமன்கூத்தில் தலைவனாக விளங்குபவன் இந்திரனே. காவிரி பூம்பட்டிணத் திலும் அதன் பின்னர் நடைபெற்றிருக்கக் கூடிய கருத்தரிப்பை மையமாகக்கொண்ட பண்டிகைகளின் தலைவனாகவும் இந்திரனே இருந்திருக்கிறான். அவனது அரசவையில்தான் ரம்பை, ஊர்வசி, மேனகை போன்ற பெரும் நடனமணிகள் வீற்றிருந்ததோடு தன் காமவிளையாட்டுகள் காரணமாக அடிக்கடி சாபங்களை பெறுபவனாகவும் திகழ்ந்தான். எனவே இந்திரனை கருத்தரிப்புக்கான கடவுளாகவும் பண்டைய தமிழர்கள் கருதியிருக்கக்கூடும்.
நமது முன்னோர்கள் தமிழ் பாரம்பரிய கலாசாரத்தில், காமன் விழா, வில் விழா, வில்லவன் விழா, இந்திரவிழா, பங்குனி விழா, உள்ளி விழா என்று எண்ணற்ற பெயர்களில் காமனுக்கு காதல் பெருவிழாக்களை நடத்தி தாமும் காதலில் திளைத்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

(முற்றும்)

No comments:

Post a Comment