Monday, July 24, 2017

காமன் கூத்து -2


மணி  ஸ்ரீகாந்தன்.

“பண்டைய காலத்தில் எவருமே கருத்தடை பற்றி பேசவில்லை. அவர்கள் நிறைய பிள்ளைகள் பிறக்க வேண்டும் என எதிர்பார்த்தார்கள். போர் செய்யவும் தொழில்கள் செய்யவும். களனியில் பாடுபடவும் மனிதவளம் மிக அவசியமாக இருந்ததால் கருத்தரிப்பு ஊக்குவிக்கப்பட்டது. மன்மத விழாவெடுக்க வேண்டிய அவசியமும் இருந்தது”

ண்டைய தமிழகத்தில் கொண்டாடப்பட்ட காமன் கூத்து, காதல் விழாவாக தூய காதலையும்,காதலர்களையும் போற்றிப்புகழ்ந்தது. கொண்டாடப்பட்டது.அந்த விழாவானது தமிழர் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தது.காதலும்,வீரமும் தமிழர் பண்பாடு என்பதால் தமிழர்கள் தமது மறத்தையும் காதல் அறத்தையும் இணைத்து கொண்டாடி உலகிற்கு உணர்த்தும் விழாவாக நீண்ட நெடுங்காலமாக கொண்டாடி வந்திருக்கிறார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தென் தமிழகத்தை ஆட்சிசெய்த செம்பியன் மன்னனை புறநானூற்று புலவரான மாற்றோகத்து நப்பசலையார் தமது 49வது பாடலில் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், இவன் கடைச் சங்கக் காலத்துக்கும் முற்பட்டவன் என்றும்,இவனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பரம்பரையின் முன்னோர்களில் ஒருவன் என்றும் குறிப்பிடுகிறார்.


தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் கொண்டாடிய காதல் விழாவை பற்றி இளங்கோ அடிகள்,கூறும்போது 'வெள்ளிப் பெருமலையின் வடபுறத்தில், மது ஒழுகும் மலர்களை உடைய பூம்பொழிலில், தனது காதலியுடன் அமர்ந்திருந்த காமக் கடவுளாகிய மன்மதனுக்குப் படைக்கும் விருந்தாகக் காதல் திருவிழாவை விரும்பிச் செய்வான் ஓர் விச்சாதர வீரன் என்று குறிப்பிடுகின்றார்.
இன்னொரு பாடலில் இளங்கோ
‘குணதிசையில் அமைந்துள்ள தொண்டி நகரின் அரசன், வங்கத்திரளோடு திரையாக அளிக்கும் பொருள்களாகிய, சந்தனம், வாசனைப்பொருள், கருப்பூரம் முதலிய பொருளைச் சுமந்து கொண்டு கொண்டல் என்னும் காற்று நண்பனோடு கூடல் மாநகரில் வந்து புகுந்தான். காமவேளுக்கு எடுக்கப்படும் வில்விழாவைக் காண வந்த பின்பனிக் காலம் என்னும் அரசன் எவ்விடத்துள்ளான்? என்று இளங்கோ கேட்பதாக பாடல் முடிகிறது.

இன்று மலையகப் பகுதிகளில் கொண்டாடப்படும் காமன் கூத்து விழாவின்போது வில் முதன்மையானதாக விளங்குவதோடு, விழாவின் ஆரம்பமாக மன்மதனுக்கு கரும்பு வில் படைக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது.அதன் பிறகு ரதி,மதன் கரங்களில் கரும்பு வில் கொடுக்கப்பட்டு ஆட்டம் ஆரம்பமாகும்.எனவே சங்க காலத்தில் இந்த விழா வில்விழா என்ற பெயரில் அழைக்கப்பட்டதற்கான காரணத்தை இன்றைய காமன் கூத்து பெருவிழா நமக்கு உணர்த்திவிடுகிறது.


கி.மு.3ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள் இதயத்தை குத்திக் கிழிக்கும் அம்பு, வில் உள்ளிட்டவைகளை காதலின் அடையாளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதற்கு பழைய சங்கப்பாடல்களும் நமக்கு சான்று பகிர்கின்றன.
குறிப்பாக மன்மதன் கணை என்று சொல்லப்படுகிற வில்லைப் பற்றிய குறிப்புகளில், “தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும் அன்னவோ காம நின் அம்பு?” அதாவது, காமவேளின் அம்பு இதயத்தை நோக்கி எய்யப்படுவது இதயத்தை நையச் செய்வது என்ற குறிப்பு கலித்தொகையில் (147:46-47) ஆகிய பாடல்களில் இருக்கிறது.இந்த அம்பின் செயல்பாடு என்ன? தான் விரும்புகின்ற மாற்றுப் பாலினத்தாரின் நெஞ்சில் தன்பால் காதலுணர்வினைத் தூண்டி ஏங்கச் செய்தலே இதன் செயல்பாடாகும். “தன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டவன் நெஞ்சில் காதல் அம்பினை ஏவுமாறு அதனால் அவன் மடலேறித் தன்னிடம் வரச்செய்யுமாறு காமதேவனின் கால்களைக் கட்டிக்கொண்டு கெஞ்சுவேன்” என ஒரு தலைவி புலம்புகிறாள்: ”பனையீன்ற மா ஊர்ந்து அவன் வரக் காமன் கணை இரப்பேன் கால்புல்லிக் கொண்டு” என்று கலித்தொகை 147:59-60 பாடல்களில் குறிப்பிடப்படுகிறது. மடலேறுதல் என்பது நிறைவேறாத காதலால் பித்துப்பிடித்த மனநிலையை அடைந்துவிட்ட ஆடவன் பனைமடலால் குதிரை போலச் செய்து தான் அதில் படுத்துக்கொண்டு சிறுவர்களைக் கொண்டு அந்தப் பனைமடல் குதிரையை வழக்குரைக்கும் மன்றத்துக்கு இழுத்துச் செல்லவைத்து மன்றத்துச் சான்றோர்கள் மூலம் தன் காதல் நிறைவேறுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியாகும். இத்தகைய மடலேறுதல் என்ற செயல்பாடு அதர்வண வேதத்தில் இடம்பெறுகின்ற ‘இப்பனை மடலைக் காற்று கிழித்துச் செல்வது போல நான் மனதால் பாவித்துச் செலுத்துகின்ற அம்பு அவளுடைய இதயத்தைக் கிழிக்கட்டும்” என்று குதிரை வடிவக் கடவுளர்களான அஸ்வினி தேவர்களிடம் வேண்டுகின்றார்கள். என்பதை வரலாற்று ஆய்வாளரான அறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை தமது ஆய்வில் குறிப்பிடுகிறார்.

எனவே இதயத்தை குத்திக் கிழிக்கும் அம்பும், ‘வெலனடைன் டே’ காதலர் தினத்தின் வாழ்த்து அட்டைகளில் அச்சிடப்பட்டிருக்கும் வில்லோடு இருக்கும் காதல் குழந்தையும் தமிழர்கள் கொண்டாடிய பண்டைய காமன் கூத்தின்  பாதிப்புப்புகள்தான். என்பதற்கு இதைவிட வேறு ஆதாரங்களை தேவையில்லை. கரும்பு வில்லை கையில் வைத்திருக்கும் கடவுள் என்பதால் மன்மதன் விழாவை வில்லவன் விழா என்று அழைத்திருக்கிறார்கள்.

காமன் கூத்து விழாக்களில் முக்கியமாக குழந்தை பேறு வேண்டுவதும், தமக்கான நல்ல துணைவனுக்காகவும் தடைப்படும் திருமணம் நடைபெறுவதற்கும் காதல் கடவுளான மன்மதனை இளம் பெண்கள் வேண்டி நேர்த்திகளை முன்வைக்கிறார்கள். பெரும்பாலனவர்கள் சொல்லும் கருத்தின்படி அவர்கள் முன்வைத்த நேர்த்திகள் பலன் தருகிறதாம்.
அதனால் காமன் கூத்து பெருவிழாவுக்கான மக்கள் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வருகிறது.


சங்ககாலத்தில் மன்மதனுக்கு நேர்த்திவைத்த பெண்கள்.
வினையின் காரணமாகவும் போரின் காரணமாகவும் பிரிந்திருக்கும் காதலருடன் மீண்டும் கூடி இன்பமடைய வேண்டும் என்று தங்கள் காதல்தேவனை வணங்கி, “காமன் திருநாளில், அவரும் அவருக்குத் துணையான நானும் சேர்ந்திருந்து மகிழ்ந்துகளிக்க அருள் செய்ய வேண்டும்" என்று வேண்டுகின்றனர் என்று கலித்தொகை 147:59-60 ஆகிய பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அகத்திய முனிவனின் கட்டளையை ஏற்று சோழன் செம்பியன் காதல் விழாவை நடாத்தியதாக கூறப்பட்டாலும்,

பழங்கதைகளின்படி சோழ மன்னன் தன் நகரத்தில் காதல் தெய்வத் திருவிழா கொண்டாட அருள் செய்ய வேண்டும் என்று இந்திரனை வேண்டியதாகவும், அவனின் வேண்டுகோளை ஏற்ற இந்திரன், அதற்கு சம்மதித்ததாகவும்  அந்நாள் தொடங்கி காவிரிப்பூம்பட்டினத்தில் காதல் திருவிழா நடைபெற்று வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்தை  ‘மணிமேகலை விழா காதை’ விளக்குகிறது. அவ்விழாவை பற்றிய செய்திகளை, வான்மீகியும் காளிதாசரும் தத்தம் நூல்களில் குறிப்பிடுகின்றனர். நச்சினார்க்கினியர், "மருத நிலத்திற்குத் தெய்வமாக விளங்கும் இந்திரனுக்கு, 'ஆடலும் பாடலும் ஊடலும் உணர்தலும்” உள்ளிட்ட இன்ப விளையாட்டுகள் என்கிறார். ஆகையினால், “இனிதின் நுகரும் இமையோர்க்கும் இன்குரல் எழிலிக்கும் இறைவனாகிய இந்திரனுக்கு விழவு செய்து அவர்களை சோழ மன்னரும் மக்களும் அழைத்தனர்" இதற்கு பிறகே காதல் விழா எழுச்சி பெறத்தொடங்கியிருக்கிறது.
குறிப்பாக இந்த காதல் திருவிழா, பூம்புகார்ப் பட்டினத்தில் மட்டும் கொண்டாடப் படவில்லை. தமிழ்க் கூடல் நகரமாகிய மதுரை மாநகரிலும் கொண்டாடப்பட்டது.
காதல் திருவிழாவின் போது, பங்குனித் திங்களைப் பனி அரசாளும் என்று மதுரைப் பட்டணத்தில் நிகழ்ந்த வில்விழாவைச் சிலப்பதிகாரம்
கூறுவது, குறிப்பிடத்தக்கது. புகார் நகரத்தில் திருவிழா நடைபெற்ற அதே நாளில் கூடல் மாநகரமும் விழாக் கோலம் கொண்டிருந்தது என்று அறியப்படுவதனால், காதலர் திருவிழா என்கிற இந்த காமன் கூத்து தமிழகம் முழுமைக்கும் பொதுவானது என்றே குறிப்பிட வேண்டும்.

(தொடரும்)

No comments:

Post a Comment