Monday, July 24, 2017

காமன் கூத்து- 1


மணி  ஸ்ரீகாந்தன்

மாசி மாதம் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான மாதம். இதனை மன்மத மாசம் என்று சொன்னாலும் தப்பில்லை.தமிழில் தை,மாசி மாதங்களை பின்பனிக் காலம் என்று அழைக்கிறார்கள். பின்பனிக் காலத்தில்தான் உலக காதலர் தினமும் கொண்டாடப்படுகிறது.அதோடு தமிழர்களின் காதல் கடவுளான மன்மதனுக்கு விழா எடுக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. மாசி மாதத்தின் அமாவாசைக்கு அடுத்த மூன்றாம் பிறையில் மன்மதனுக்கு கம்பம் நடும் நிகழ்வு தொடங்கி முப்பது நாட்களுக்கு காமன் கூத்து கலைக்கட்டத் தொடங்கிவிடும். 2500 வருடங்களுக்கு முன்பிருந்தே கொண்டாடப்பட்டு வரும் இந் நிகழ்வு இந்திரன் விழா,வசந்த விழா.காமன் விழா,காதல் விழா போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

பின்பனி முடிந்து இளவேனில் தொடங்கும் காலமான பங்குனி,சித்திரை மாதத்தில் இந்த விழா நிறைவு பெறுவதால்,வசந்த விழா என்ற பெயரில் அழைத்திருக்கிறார்கள். வசந்தம் என்ற சொல்லிலிருந்து தோன்றிய வாசந்த்,வாசந்தி என்ற சொற்களுக்கு குயில்,தென்றல்,இனிமை,இளமை,காதல் என்று பல அர்த்தங்கள் இருக்கிறன.

வசந்த காலம் என்பது காதலுக்குரிய மாதமாகும்.இதனைத்தான்,  “வாசந்தி பேசி மணம் புணர்ந்து” என்று திருமூலர் தனது திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார். வசந்தன் என்ற பெயரால் மன்மதன் அழைக்கப்படுவதால்.பனிக்காலத்தின் முடிவும் வசந்த காலத்தின் தொடக்கமும் மன்மதனுக்குரிய மாதமாக இன்றுவரை தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
மலையகத்திலும்,இரத்தினபுரி,களுத்துறை மாவட்ட சிறுதோட்ட பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வரும் இவ் நிகழ்வு பொருளாதார வசதிக்கேற்ப மாறுபடுகிறது.
“காமன் கூத்து கலையின் வேடங்கள்னு எண்ணிப்பார்த்தா 108 கதாபாத்திரங்கள் இருக்கு.இது இடத்துக்கு இடம் மாறுப்படுகிறது. சில இடங்களில ரதி,மதன்,வீரபத்திரன்,காளி,குறவன்,குறத்தினு ஆறு வேடங்களோட கூத்தை முடித்து விடுவார்கள். இப்போ றைகமையில முப்பத்தேழு வேடங்கள் போட்டு காமன்கூத்து நடைபெறுகிறது.” என்று சொல்லும் கூத்து பாடகர் சுப்ரமணியம் ராமர் மஸ்கெலியா லங்கா தோட்டத்தை சேர்ந்தவர்
“எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்து இன்றுவரை என்னோட பரம்பரையைச் சேர்ந்தவங்கதான் காமன் கூத்து பாடல்களை பாடி வருகிறார்கள். முறையான பயிற்சி பெற்றே இதை நான் செய்து வருகிறேன். எனக்குத் தெரிய எங்கப்பா கூத்துப் பாடல்களை பாடினார். அப்புறம் நான், அடுத்து என் மகன். கூத்து பாடல்களுக்கு என்று தனியான தாளக்கட்டு, சங்கதிகள் என்று நிறைய விசயம் இருக்கு.அவைகளை முறையாக கற்று பாடுவதே சிறப்பானதாக அமையும்.எக்காரணத்தை கொண்டும் கூத்து மரபை மீறிய சினிமா பாணியிலான பாடல்களை நாம் பாட மாட்டோம். நமக்கான பாரம்பரிய மரபுகளை சிதைக்கும் வேலையை ஒரு தூயத் தமிழன் செய்யத் துணியவும் மாட்டான்.” என்று ஒரு போடு போட்டார் ராமர்.

கடந்த மாதம் இங்கிரிய,றைகமையில் நடைபெற்ற காமன் கூத்து பெருவிழாவை பிரமாண்டமான முறையில் நடாத்தியவர்  கோயில் நிர்வாக குழுவின் தலைவர் பொன்.சரவணராஜா. “காலா காலமாக காமன் கூத்து  எங்க ஊரில நடைபெற்று வருகிறது. காலத்துக்கு காலம் நிர்வாக தலைவர்களும்; மாறி வந்திருக்கிறார்கள். என்னோட தலைமையில இது வரை ஐந்து வருடங்கள் நடைபெற்று வந்திருக்கிறது.ஆரம்பத்தில் காமன் கூத்தை நடத்தியவர்கள் மொத்தம் ஆறு வேடங்களோடுதான் விழா நடாத்தியிருக்கிறார்கள்.அதன் பிறகு வந்தவர்கள் 32வேடங்கள் போட்டார்கள். இப்போ என்னோட தலைமையில இந்த ஆண்டு வேடங்களை முப்பத்தேழாக உயர்த்தியிருக்கிறேன். அன்மையில் மஸ்கெலிய லங்கா தோட்டத்துக்கு சென்று காமன் கூத்து வரலாறு எப்படி நடைபெறுகிறது என்று பார்த்தேன்.அங்கே 108 வேடங்களுடன் வரலாற்றை முழுமையாக நடாத்தினார்கள்.
பொன்.சரவணராஜா
அதை பார்த்த எனக்கு முழுத்திருப்;தி ஏற்பட்டது. நம்ம ஊரிலேயும் அப்படியே நடத்தலாம்னு முடிவு செய்து லங்கா தோட்ட கூத்து வாத்தியார் சுப்ரமணியம் ராமரின் துணையோடு மாற்றத்திற்கான முதல் முயற்சியாக வேடங்களை அதிகமாக்கியிருக்கிறேன். இனி வரும் காலங்களில் வேடங்கள் படிப்படியாக அதிகமாக்கப்பட்டு காமன்கூத்தின் முழுமையான வரலாறுக்கான 108 கதாபாத்திரங்கள் உருவாக்கப்படும் என்று நம்புகிறேன்.நமது தமிழர் பாரம்பரிய கூத்துக் கலைகள் எத்தினையோ அழிந்து போய்விட்ட நிலையில் மிச்சம் உள்ள காமன் கூத்தின் வரலாறுகளை சுருக்கி சின்னதாக்கி அதனை அழித்துவிடாமல் அதனை மேலும் பல மடங்காக விஸ்தரித்து, பரவாலாக்கம் செய்ய வேண்டியது நமது இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது.நமது இளைஞர்கள் அனைவரும் நமது பாரம்பரிய மரபுகளை காப்பாற்றுவதற்காக நமது களப்பணிக்கு அணித்திரண்டு வரவேண்டும்.இது வெறும் கூத்துதானே என்று விளையாட்டாக இருந்து விடக்கூடாது. நமது அடையாளத்தையும்,இருப்பையும் இப்படியான கலாசார நிகழ்வுகள்தான்; நிலைநாட்டும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.” என்று மிகவும் பொறுப்போடு பேசினார் சரவணராஜா.
கூத்து பாடகர்  கந்தையா மாஸ்டருடன் கலைஞர்கள்

றைகமையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான பாரம்பரிய கூத்து விழாவுக்கு வண்ண வானவில் ஊடக அனுசரணை வழங்கியிருந்தது.
“இந்த வெள்ளைக்கார பயலுக கொண்டாடுகிற காதலர் தினத்துக்கு முன்னோடியே நம்ம காமன் கூத்துதாங்க”என்று கூத்து பார்க்க வந்த ஒரு பெருசு சொன்ன தகவலை காதில் உள்வாங்கி கொண்டு அதை அப்படியே நூல் பிடித்துக்கொண்டு சென்றோம்.
‘காதலர் தினம் நமது கலாசாரத்துக்கு சரிவராது, நமது பண்பாட்டை அது சிதைத்துவிடும்’என்று ஆர்பரிக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கு நாம் சொல்லப்போகும் செய்தி கசப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை.காதலர் தினம் மேற்கத்தேய கலாசார விழா என்றுதானே நீங்கள் இதுநாள் வரை நினைத்துக் கொண்டிருந்தீர்கள்? அப்படி நினைத்திருந்தால் அது முற்றிலும் தவறான எண்ணம். உலகிலேயே முதன் முதலாக காதலர் தினம் நமது பண்டைய தமிழகத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டிருக்கிறது.
கி.பி.3ஆம் நூற்றாண்டில் இருந்துதான் ரோமனியர்கள் காதலர் தினத்தை கொண்டாடி வந்திருக்கிறார்கள். ஆனால் தமிழர்கள் கி.மு.5ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே காதலர் தினத்தை இந்திர விழா,வசந்த விழா,காதல் விழா,காமன் விழா போன்ற பெயர்களில் கொண்டாடியிருக்கிறார்கள்.
கூத்து  களப்பணியாளர்கள்


கி.மு.3ம் நூற்றாண்டுக்கு முன் பூம்புகாரின் பெருநிலப்பரப்பை ஆட்சி செய்த சோழன் செம்பியன் பொதிகை மலையில் குடியிருந்த தமிழ் முனிவனான அகத்தியனின் கட்டளையை ஏற்று காதலர் தினத்தை கொண்டாடினான் என்று சங்க இலக்கியம் கூறுகிறது.
சோழன் செம்பியனின் காலத்தில் காவிரிபூம்பட்டிணம் பிரமாண்டமான விழாக் கோலம்பூண்டு காதல் திங்கள் என்ற பெயரில் வருடந்தோறும் இருபத்தெட்டு நாட்கள் இந்த விழாவை கொண்டாடியிருக்கிறான். இதன் ஆரம்ப நிகழ்வு மாசித் திங்கள் மூன்றாம் பிறையில் கம்பம் நாட்டி கொடியெடுத்துள்ளனர்.கம்பம் நடும் நிகழ்வை ‘கால்கோள்’ கொண்டு கொடியெடுத்ததாக சங்க இலக்கியம் கூறுகிறது.
சித்திரை விண்மீன் கூடிய நன்நாளாகிய பங்குனித் திங்கள் இருபத்தொன்பதாம் நாளில் விழாவை நிறைவு செய்திருக்கிறார்கள்.

இதனை மேலும் உறுதிப்படுத்துவது போல அகநானூறு 45,76,135,222,236,376 ஆகிய பாடல்களில் கரிகால் வளவனின் மகள் ஆட்டனந்தி, சேரனின் மகன் ஆதிமந்தியை காதலித்ததாகவும் காவிரிபூம்பட்டிணத்தில் காதல் திருவிழாவின் போது ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது காவிரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஆதிமந்தியை ஆற்றுநீர் அடித்துச் சென்றுவிட தனது காதலனை காணாது தவித்த ஆட்டனந்தி காவிரி கரையோரமாக ஆதிமந்தியை தேடிச் செல்கிறாள்.அப்படி அவள் தேடிச் சென்றபோது காமனுக்கு வில்விழா நடந்து கொண்டிருந்ததாக ஆட்டனந்தி தனது பாடலில் குறிப்பிடுகிறாள்.
காமன் கூத்துதான் காதல் விழாவாக பழங்காலத்தில் கொண்டாடப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை உங்களுக்கு சமர்பிப்பதற்காகவேதான் அகநாநூற்று பாடலில் குறிப்பிட்டிருந்த வரலாற்றை பகிர்ந்திருந்தோம்.இருந்தாலும், அந்த வரலாற்றின் முடிவையும் சொல்லிவிடுகிறோம். ஆற்றில் அடித்துச் சென்ற ஆதிமந்தியை மருதி என்பவள் காப்பாற்றுகிறாள்.பிறகு அழகில் மயங்கி தனது மனதை அவனிடம் பறிகொடுக்க இருவருக்கும் காதல் மலர்கிறது. பிறகு ஆட்டனந்தி, ஆதிமந்தியை தேடி வர உண்மையை உணர்ந்து கொண்ட மருதி ஆதிமந்தியை அவனின் காதலியான ஆட்டனந்தியிடமே ஒப்படைத்துவிட்டு துயரம் தாங்காமல் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாளாம்.

(காதல்   தொடரும்)
 

No comments:

Post a Comment