Saturday, April 8, 2017

கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் காலத்தில்…

ண்டி இராசதானியை 1747 முதல் 1782 வரை கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் ஆட்சி செய்தான். இலங்கையின் வரலாற்றில் இம்மன்னன் பௌத்த சமயத்திற்காக ஆற்றிய அளப்பரிய பணிகள் பற்றிய சிறப்பான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. பௌத்த விகாரைகளில் காவியுரை தரித்து – துறவறம் பூணாதவர்கள் பிக்குகளாக விளங்கினர். விகாரைகளின் சொத்துக்களைக் கொண்டு தமது மனைவி பிள்ளைகளையும் உறவினர்களையும் பேணியதோடு வசதியான வாழ்க்கையை இவர்கள் மேற்கொண்டனர்.

அக்கால கட்டத்தில் திபெத் நாட்டிலிருந்து அசல் பௌத்த பிக்குமார்களை அழைத்து இங்குள்ளவர்களை முறைப்படி சடங்கு சம்பிரதாயங்களுடன் பிக்குகளாக மாற்றுவதற்கான (உப்ப சம்பதாவ) நடவடிக்கைகளை மேற்கொண்டவன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கனே. அழிவடைந்த விகாரைகளை புனரமைப்பு செய்தும் புதிய விகாரைகளை நிர்மாணித்தும் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் ஆற்றிய பணிகள் ஏராளம். பல விகாரைகளின் சுவரோவியங்களில் இம்மன்னனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளமையை இன்றும் காணலாம்.

மேற்படி சுவரோவியங்களின் மூலம் இம்மன்னனின் உருவ அமைப்பினை நாம் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. முகத்தில் அடர்ந்த தாடியுடன் கூடிய கருமையான அதிக உயரமற்ற பருத்த தோற்றமுள்ளவனாக இம்மன்னன் இருந்துள்ளதை அறிந்து கொள்ளலாம்.

இம்மன்னன் பற்றிய பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களைக் குறிப்பிடும் கதைகள் சிங்கள மக்கள் மத்தியில் பரவலாக இன்றும் உலாவி வருகின்றன.

கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் தென்னிந்திய நாயக்கர் பரம்பரையைச் சேர்ந்த பெண்ணை முறைப்படி மணம் புரிந்தான். அத்தோடு இந்நாட்டுச் சிங்கள பெண்கள் பலரை தனது அந்தப்புரத்தில் குடியமர்த்தியிருந்தான். இவர்களில் பெரும்பாலானவர்கள் அக்காலகட்டத்தில் அரண்மனைக்குப் பெண்களை ஏற்பாடு செய்து கொடுக்கும் கண்டியை அண்மித்த 'அத்தரகம' என்னும் கிராமத்து பிரபுக்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகும்.

மன்னன் குதிரைச் சவாரி மேற்கொள்வதில் பெரும் விருப்பம் கொண்டவனாக இருந்தான். ஒருநாள் இராஜசிங்கன் குதிரை மீதேறி கண்டி 'மெனிக்ஹின்ன' பிரதேசத்தினூடாக 'வளல்ல' என்னும் கிராமத்திற்குள் சென்று கொண்டிருந்தான். அவ்வேளை அந்தக் கிராமத்தின் பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்த அழகிய தோற்றம் கொண்ட ஒரு பெண் மன்னனின் பார்வையில் பட்டாள். இந்த வளல்ல கிராமமும் அரசனின் அந்தப்புரத்திற்கு அழகிய பெண்களை அனுப்பி வைக்கும் ஓர் ஊராகும். வாலிபப் பருவத்தினைக் கொண்ட கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் எவ்விதத்திலாவது இப்பெண்ணையும் அடைந்துவிட வேண்டுமென ஆவலுடன் அடிக்கடி மாறுவேடமணிந்து குதிரை மீதேறியும், கால்நடையாகவும் வளல்ல கிராமத்துக்குள் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டான்.

இவ்வாறு மாதத்திற்கு இரு தடவைகளாவது கிராமத்திற்குள் வந்துபோகும் தெரியாத நபர் பற்றி கிராமத்தவர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது. குறிப்பிட்ட இளம் பெண்களை அடிக்கடி சந்தித்துச் செல்லும் மனிதனுக்கு தக்க பாடம் புகட்ட நினைத்த சிலர், அப்பெண்ணின் வீட்டுக்குச் செல்லும் குறுக்குப் பாதையின் நடுவே குழியொன்றைத் தோண்டி அதற்குள் கூரிய கோல்களை நாட்டி இலை தழைகளால் இக்குழியை மூடி வைத்தனர்.

ஒருநாள் பொழுது சாய்ந்து இரவு கிராமத்தை ஆட்கொண்ட வேளையில் தனது கள்ளக் காதலியைச் சந்திப்பதற்காக அரசன் அப்பெண்ணின் வீட்டுக்குச் செல்லும் குறுக்குப்பாதை வழியே வந்து கொண்டிருந்தான். அவன் வரப்போகும் நேரத்தை அப்பெண் நன்கறிவாள். எனினும் இரகசிய காதலின் காரணமாக அவள் வீட்டுக்குள் அமைதியாக மன்னனை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாள்.

இருள் சூழ்ந்திருந்த படியால் குறுப்பாதையின் குறுக்கே படுகுழியொன்று இருப்பதை மன்னன் அறியவில்லை. காலோசைபடாது தடம்மீது தடம்பதித்து நடந்து வந்த மன்னன் பொய்க்குழிமீது கால் வைத்து குழிக்குள் தொப்பென வீழ்ந்தான். குழிக்குள் வைப்பட்டிருந்த கூரிய மர ஈட்டிகள் மன்னனின் உடலைப் பதம்பார்த்தன. செய்வதறியாது அபயக்குரல் எழுப்பினான் அரசன்.

உதவி கேட்டு எழுப்பப்பட்ட ஓலமறிந்த ஊர்மக்கள் குரல் வந்த திசை நோக்கி ஓடிவந்தனர். படுகுழிக்குள் விழுந்து இரத்தம் சிந்தியவாறு அவதியுறும் இளைஞனை குழியிலிருந்து மீட்டு சிகிச்சையளித்தபோது மாறு வேடமணிந்து ஊர்வலம் வந்திருப்பது தமது மன்னனென அம்மக்கள் புரிந்து கொண்டனர். உடனடியாக அரண்மனைக்கு தகவலனுப்பி பல்லக்கொன்றை கொண்டுவந்து மன்னனை கவனமாக அதில் அமர வைத்து அனுப்பி வைத்தனர். காயப்படுத்துதல், துன்புறுத்துதல் என்ற சொற்களை 'ஹதி' எனவும் சிங்களத்தில் குறிப்பிடலாம். மன்னனை துன்புறுத்தியதால் இக்கிராமம் 'ஹதி வலல்ல' என பெயர் பெற்றது. தனக்கு தண்ணடனை வழங்கிய அவ்வூர் மக்களை பழிவாங்கும் முயற்சிகளில் மன்னன் ஈடுபடவில்லை. சில மாதங்களில் மன்னன் கள்ளத்தனமாக சந்தித்த அக்காதலியை ஊரறிய ஊர்வலமாக அந்தப்புரத்திற்கு அழைத்து வந்தான் அரசன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன்.
இவ்வாறு கண்டி அரண்மனையின் அந்தப்புரம் அழகிய பெண்களால் நிரம்பியிருந்ததாக வரலாறு கூறுகிறது.

 சி.கே.முருகேசு

நன்றி. வண.நாலந்தே விமலவன்ச தேரோ எழுதிய 'உடரட்ட ஜனஸ்ருதி' என்ற நூலை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டது.

1 comment: