Monday, April 3, 2017

வீரசிங்கம் பூசாரியுடன் ஒரு திகில் நேர்காணல்

கேட்டு எழுதுபவர்: மணி  ஸ்ரீகாந்தன்.

லகம் என்னதான் நாகரீக வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தாலும் இன்னும் பேய்கள் பற்றிய பயம் மேலை நாடுகளிலும் இங்கேயும் அப்படியேதான் இருக்கிறது. என்னதான் தைரியசாலியாக இருந்தாலும் ஒரு பாழடைந்த பங்களா, ஆள் அரவமில்லாத முச்சந்தி, பாழடைந்த கிணறு போன்றவைகளை பார்க்கும்போது நம் உடம்பிற்குள் ஏற்படும் அச்ச உணர்வைத் தடுக்க முடியவில்லை. அதோடு தினமும் வெளியாகும் பேய்ப்படங்களும் நாளுக்கு நாள் பேய், ஆவிகள் பற்றிய பயத்தை அதிகரிப்பதாகவே உள்ளது. இந்த நிலையில் பேய்கள் என்றால் என்ன? உண்மையிலேயே ஒரு தீய சக்தி இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவதற்காக இங்கிரிய,றைகம் பகுதியில் இரண்டு நாட்களாக முகாமிட்டு தேடுதலை தொடங்கினோம். அப்படியான எமது தேடுதலில் சிக்கியவர்தான் வீரசிங்கம் பூசாரி றைகம் தோட்டத்தில் வீரசிங்கம் ரொம்பவும் பிரபலமான பூசாரி. தமது குலதெய்வமான கருப்புசாமியை நினைத்து மருள் வந்து ஆடும் போது கருப்பு சாமியாகவே மாறிவிடுகிறார்.பேய்கள் பற்றிய எமது சந்தேகங்களை கேட்டு, சுவரஸ்யமான பதில்களை அவரிடமிருந்து கறந்தோம்…
வீரசிங்கம் பூசாரி

“பேயை நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா?” என்று வீரசிங்கத்திற்கு கொக்கி போட்டோம்.
“ம்ம்….நான் பார்த்திருக்கிறேன். பேய்கள் மிகவும் கோரமாக இருக்கும்.அதன் உருவம் தெளிவில்லாமல்தான் இருக்கும்.பேயின் கால்கள் தரையில் நிற்காது. காட்டேரி,சுடலை மாடன் உள்ளிட்ட துர்தேவதைகளை சுடுகாட்டில்வைத்துதான் அழைப்போம்,அந்த சந்தர்பங்களில் பேய்கள் என் கண்களுக்கு தெரியும்.”ன்னு சொன்னதும், “பேய்கள் அழகான தோற்றத்தில் காட்சியளிக்குமா?”ன்னு பூசாரியை இடைமறித்தோம்.
“பேய்கள் எப்போதும் அவலட்சனமான தோற்றத்தில்தான் வரும்.அழகான தோற்றத்தில் வராது.தலைவிரி கோலத்தில், முகம் சிதைந்து, அழுகிய உடம்போடுதான் அது காட்சி தரும்” என்று அடித்து சொல்லுகிறார் வீரசிங்கம்.

“ஆவியும்,பேயும் ஒன்றா,ஆவி கொஞ்சம் மென்மையான சுபாவம் என்று சொல்லுகிறார்களே..?”னு எமது சந்தேகத்தை கேட்டப்போது. “ரெண்டையும் இருவேறாக பிரிக்க முடியாது. ஆவியும்,பேயும் ஒன்றுதான். இந்த தீய சக்திகளில் மென்மையானது,கொடூரமானது என்று வகைகள் எதுவும் இல்லை.” என்று பதில் சொல்லும் போது வீரசிங்கம் அவரை அறியாமலேயே சிரித்து விடுகிறார்.

“பூசாரிகளின் வேலைகளுக்கு  உதவி செய்யக்ககூடிய தீய சக்திகள் இருக்கிறதா?”ன்னு அடுத்த கேள்விக்கு தாவியதும் பூசாரி ஒரு நமட்டு சிரிப்போடு தொடர்ந்தார். “ அப்படி உதவி செய்கிற சக்திகளை தீய சக்திகள் என்றழைப்பது தவறு. நமக்கு உதவி செய்பவை நல்ல சக்திதானே..இப்போ பூசாரி தொழிலுக்கு வாரவங்க சும்மா மந்திரம் மட்டும் படித்துவிட்டு வந்துவிடமுடியாது. அப்படி வந்தாலும் இந்த தொழில்ல நிலைத்து நிற்க முடியாது. ஆனா நாங்க நிலைத்து நிற்பதற்கு என்னோட முன்னோர்களின் ஆத்ம சக்தி துணை நிக்குது. அதாவது மந்திர,தந்திர வித்தை தெரிந்த ஒருவர் மரணித்து விட்டால், அவரின் ஆத்மா அவரின் பரம்பரையில் வரும் ஒருவருக்கு உதவியாக இருக்கும்.இது உண்மை இதை யாராலும் மறுக்க முடியாது. இப்போ எனக்கு முப்பத்தெட்டு வயதாகிறது. எனது பரம்பரையில் நான் ஏழாவது பூசாரி. எனது பாட்டன்,முப்பாட்டன் ஆகியோர்கள் இந்தியாவில் பூசாரிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பிறகு நான் பூசாரியாக இருப்பது எனது முப்பாட்டன்களின் ஆசீர்வாதம்தான்.அவர்களின் துணையோடுதான் நான் எனது மந்திர சித்து விளையாட்டுகளை ஆடுகிறேன். எனது இந்த ஆட்டத்திற்கு ஊரு பேரு தெரியாத தீய சக்திகளின் உதவிகளை நான் எப்போதும் பெற்றுக்கொள்வதில்லை.அது ஆபத்தில் முடிந்து விடும். சனியனை சாப்பாடு வச்சு கூப்பிடுகிறமாதிரி.” என்று உடல் சிலிர்தார்.
“உங்களை மாதிரி சக்தி வாய்ந்த பூசாரிகள் தினமும்தான் பேய் ஓட்டுகிறீர்கள்.ஆனால் பேய்கள் குறைந்த மாதிரி தெரியவில்லையே..,நாளுக்கு நாள் பேய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தெரிகிறதே?”என்று பூசாரிக்கு வலை விரித்தோம்.

“ மரணங்கள் சம்பவிக்கும்போது அவைகள் துர் மரணங்களாக இருக்கிற பட்சத்தில். அவர்கள் ஆசையோடு பேய்களாக திரிவதை யாராலும் தடுக்க முடியாது. காதலர்கள் தமது வாழ்க்கையை வாழ்ந்து முடிக்காமல் தற்கொலை செய்து கொண்டாலும் அவர்களின் ஆத்மா ஆவியாக திரியும்.அதனை நிவர்த்தி செய்ய கைதேர்ந்த பூசாரிகள் அல்லது கோயில் குருக்களின் துணையோடு, இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்கான பரிகாரங்களை பிழையின்றி செய்து முடித்தால். ஆவிகளின் நடமாட்டத்தை கனிசமான அளவு குறைக்கலாம். இப்படியான பரிகார கிரியைகள் செய்யப்படாத ஆத்மாக்கள் நீண்ட காலத்துக்கு இந்த பூமியில் சுற்றிக் கொண்டிருக்கும். பேய்களை பிடித்து போத்தலில் அடைத்து,சுடலையில் புதைத்து அவைகளின் கதையை முடிப்பதுதான் காலா காலமாக செய்துவரும் முறை. அவைகளை சில பூசாரிகள். கரைப்பதும்,எரிப்பதுமாக மாற்றியதாலும் பெரும்பாலான துஷ்ட சக்திகள் தப்பிவிடுவதோடு, அவைகள் மீண்டும் ஆக்கரோசமாக நம்மை துன்புறுத்துகிறது.”என்று களத்துக்கு வரும் புதிய பூசாரிகளுக்கு செக் வைக்கிறார் வீரசிங்கம்.

“பேய்களை எல்லோராலும் பார்க்க முடியுமா?” என்று கேட்டதும், “அப்படி எல்லோராலும் பார்க்க முடியாது. பேய்களுக்கு பிடித்த கிரக பலனை உடையவர்களின் கண்களுக்கு அவைகள் தெரியும்.அதோடு கடவுளை நம்புகிறவர்கள்,மதத்தை பின்பற்றுகிறவர்களின் கண்களுக்கும் பேய்கள் சிக்கும்.” என்று பக்தி பரவசமாகவே பதிலளிக்கும் அவரிடம்
“பேய் பிசாசு என்று எதுவுமே கிடையாது, எல்லாம் பணம் பறிப்பதற்கான வேலையையே இந்த பூசாரிகள் செய்கிறார்கள்.எல்லா நோய்க்கும் மருந்துதான் தீர்வு என்று டாக்டர்கள் சொல்கிறார்களே?” என்று வீரசிங்கத்தை கட்டத்தில் சிக்க வைக்க முயற்சித்தோம்.
கேள்விக்கு, எகத்தாளமாக சிரித்த பூசாரி “எல்லா நோய்க்கும் டாக்டர்கிட்டே மருந்து கிடையாது. சில நோயாளர்களை பரிசோதிக்கும் டாக்டர்கள் ‘எந்த நோயும் கிடையாது,எல்லாம் அவன் செயல்’னு சொல்லுவதை நீங்கள் பார்த்ததில்லையா, அப்படி டாக்டர்களால் கைவிடப்படும் நோயாளர்களை நாம்தான் குணமாக்க வேண்டும். இது உலக நியதி” என்று பூசாரி சொல்லும் போதே அவரின் பேச்சில் இறுமாப்பு பளீச்சிடுகிறது.
“மந்திரங்கள் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுமா,ஒரு ஆப்பிரிக்க ஆவி நம்ம நாட்டு பிரஜையின் உடலுக்குள் இருந்தால்,அந்தப் பேயுடன் எந்த மொழியில் உரையாடுவீர்கள்.?”என்றதும்,
“மந்திரங்கள் பொதுவானதுதான்.மந்திரங்கள் எல்லாமே இந்தியாவை மையமாக கொண்டதுதான்.அதனால் அது மாறுபடாது.நான் இது வரைக்கும் சிங்கள, தமிழ் பேய்களை மட்டுமே விரட்டி இருக்கிறேன். ஆப்பிரிக்க,ஆங்கில பேய்களை விரட்டும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.அப்படி கிடைத்தால் நல்லதுதானே நமக்கான வருமானம் டொலரில் கிடைத்தால் யார்தான் வேணாம்னு சொல்லுவாங்க.! வரட்டும் பார்க்கலாம்.” என்று எதிர்பார்ப்போடு நிறுத்தினார்.

“பேய்கள் சுடுகாட்டில்தான் வாழ்கிறதா,ஏன் ஒரு அழகான வீட்டில் அதற்கு வாழ முடியாதா?”
“பேய்கள் அதிகமாக ‘பாடை மாற்றி’ என்கிற ஊர் தெருக்கோடியில் இருக்கும் முச்சந்தியில்தான் அதிகமாக இருக்கும்.அதற்கு காரணம் நாம் இறந்த பிறகு நமது பிரேதத்தை சுடலைக்கு எடுத்து செல்லும்போது நமது தலை வீட்டை பார்க்கும் வண்ணமாக எடுத்துச் சென்று, முச்சந்தியான பாடை மாற்றியில் தலையை சுடலை பக்கமாக திறுப்புவார்கள்.அதனால் நமது எல்லா விடயமும் அந்த பாடை மாற்றியோடு முடிந்து விடுகிறது.அதனால் பேய்களும் அந்த முச்சந்தியிலேயே பெரும்பாலும் தங்கிவிடுகிறது. துர் தேவதைகள் ஏசி அறைகளில் தங்க விரும்புவதில்லை.அவைகள் அழுக்கு படிந்து சிலந்தி வலை பின்னிய கட்டிடங்களிலேயே தங்குகிறது.காரணம் ஆவிகள் அமைதியை விரும்புபவை.”என்றவரிடம்,

“ஏவல்,சூனியம் என்பது உண்மையா அவைகளால் ஒருவரை கொல்ல முடியுமா?”என்று கேட்டோம்.
“நிச்சயமாக முடியும், ஆனால் நான் இதுவரை அப்படியான காரியங்களில் ஈடுபட்டதில்லை. சூனியம் செய்து அந்த மருந்தை சம்பந்தபட்ட  நபரிடம் கொண்டு சேர்க்க தேவையில்லை.மந்திர சித்து வேலைகளை செய்து அந்தப் பொருளை நீங்கள் நிற்கும் இடத்தில் புதைத்தாலே போதும்.அது நிலத்துக்கு கீழே சம்பந்தப்பட்வரின் வீட்டுக்கு அடியில் சென்று வேலையை காட்ட ஆரம்பித்து விடும்.ஏவலும் அப்படித்தான் இதெற்கெல்லாம் நிறைய மலையாள மந்திர புத்தகங்கள் இருக்கிறது. அவைகளை முறையாக கற்க வேண்டும். வாரிகை மலையின் மந்திரங்கள் என்கிற நூலில் குட்டிச்சாத்தானின் யந்திரமும்,மந்திரமும் என்கிற இரகஷிய மந்திர வித்தை இருக்கிறது அதை முறைப்படி செய்தாலே ஏவல் உங்கள் கை வசம் ஆகிவிடும்,பிறகென்ன நீங்கள் நினைக்கிற இலக்கு நோக்கி அதை அனுப்பிவிடலாம்.” என்று சொல்லும் வீரசிங்கம் நிறைய மந்திர புத்தகங்களை நம்மிடம் காட்டுகிறார்.அந்த நூல்களில் இடுப்பு வலி,பல்லு வலி,தலை வலி, ஆகியவற்றுக்கான நிவாரண மந்திரங்கள் மூலிகையோடு செய்வதற்கான வழிமுறைகள் விளக்கப்பட்டு இருக்கின்றன. “மந்திரங்களை சித்து விளையாட்டு என்று நினைத்து விடாதீர்கள்.அவைகள் மந்திரமும், மூலிகையும் கலந்த அருமருந்துகள் என்பதுதான் உண்மை.” என்ற பூசாரி மந்திர மகிமையை சொல்லி சிலாகிக்கிறார்.

“பேயை கட்டிவைத்து வேலை வாங்க முடியுமா,குறிப்பாக வீட்டு வேலைகளை கூட அவைகள் செய்து கொடுக்கும் என்று சில பூசாரிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.உண்மையா?” என்றதும்,

“இது நம்புகிற மாதிரி இல்லை. எனக்கு அப்படி பேய்கள் உதவி செய்வதாக சொன்னாலும் நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்னறால் எனக்கு உதவி செய்யவும் வீட்டு வேலை செய்யவும் ஆட்கள் இருக்கிறார்கள். மனைவி,பிள்ளைகள் என்று நான் வாழ்கிற வீட்டில் எப்படி பேயை வைத்துக்கொள்ள முடியும்.” என்ற பூசாரி ஒரு மந்திரக் கோலை என்னிடம் காட்டினார். இது கருங்காலி மரத்தில் செய்த கோல் இதற்கு எல்லா துஷ்ட ஆவிகளும் அடிப்பணியும். யானை எப்படி அங்குசத்திற்கு பயப்படுகிறதோ அதுமாதிரி.” என்றவர், ஒரு மந்திர புத்தகத்தை கையிலெடுத்து உரக்க வாசிக்க தொடங்கினார். இனி நமக்கு அங்கு வேலையில்லை என்பதை புரிந்து கொண்டு புறப்பட்டோம்.

1 comment: