Monday, April 3, 2017

கண்டி மன்னரின் மதுரை நாயக்கர் வாரிசான அசோக்ராஜாவுடன் ஒரு நேர்காணல்

மணி ஸ்ரீகாந்தன்.

ண்டி இராச்சியத்தை ஆண்ட கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் ஒரு தமிழ் பேசும் தெலுங்கு நாயக்கர் என்பது பலரும் அறிந்த ஒன்று.  இக் கண்டி இராச்சியம் 1739 ம் ஆண்டு தெலுங்கு நாயக்க வம்சத்தினரின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. அதன் பின்னர் நான்கு  நாயக்க மன்னர்கள் கண்டி இராச்சியத்தை அடுத்த 76 ஆண்டுகளாக 1815 ஆண்டு வரை ஆண்டனர். கண்ணுசாமி என்ற   ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனே கடைசி மன்னன்.

சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்னர் கண்டியை அரசாண்ட இந்த கண்ணுசாமி நாயக்கர் வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பால் மணிமுடி இழந்து குடும்பத்தோடு கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார் என்பது வரலாறு. நாடு கடத்தப்பட்ட மன்னர் தமிழ் நாட்டின் வேலூர் நகரின் கோட்டையில் குடும்பத்தோடு பல ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டு பின்னர் அங்கேயே இறந்துபோனார். அதன் பின்னர் மன்னரின் மனைவி பிள்ளைகள் விடுதலை செய்யப்பட்டர்கள். அப்படி விடுதலை செய்யப்பட்ட மன்னரின் பரம்பரையில் வந்தவர்கள் இன்றும் தமிழகத்தில் பல இடங்களில்  வாழ்ந்து வருகிறார்கள். கால மாற்றத்தால் நம் நாட்டவர்கள் கண்டி மன்னரை மறந்து விட்டாலும் மன்னரின் வாரிசுகள் அவரை இன்று வரை நினைவில் வைத்து மன்னரின் இறந்த தினத்தை இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் குருபூஜை நிகழ்வாக வேலூரில் அமைக்கப்பட்டுள்ள மன்னரின் நினைவு இல்லமான முத்து மண்டபத்தில் நடாத்தி வருகிறார்கள்.
இந்நிகழ்வு வருடந்தோறும் ஜனவரி 30ம் திகதி  நடைபெறுகிறது. இவ்வருடம் நடைப்பெற்ற மன்னரின் 186வது வருட நினைவு தின குரு பூஜை விழா மதுரையைச் சேர்ந்த மன்னரின் வாரிசு அசோகனின் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றது. ஊர்வலங்களுக்கு தமிழகத்தில் தடை உத்தரவு இருக்கிற நிலையில் கண்டி மன்னருக்கான விழாவுக்கு வேலூர் காவலத்துறை சிறப்பு சலுகை வழங்கி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கியிருந்தனர்.முதல் தடவையாக மன்னரின் வாரிசு அசோக்ராஜா குதிரையில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டிருந்தார்.

வீரம் செறிந்த மதுரை மண்ணை வரலாற்று சிறப்புமிக்க வீரம் பொருந்திய பல மன்னர்கள் ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள்.என்பது வரலாற்றில் பாடமாக உள்ளது.அதே மண்ணில் பிறந்து நமது நாட்டின் கண்டியை ஆட்சி செய்த கடைசி மன்னனின் நேரடி வாரிசுகள் தமிழகத்தில் பல இடங்களில் வாழ்ந்து வந்தாலும் அவர்களை ஒரு இடத்தில் ஒன்று சேர்ப்பதென்பது கடினமான காரியமாக இருக்கிறதாம்.அவர்களை ஒன்றிணைக்கும் பெரும் பணியில் மன்னரின்  ஏழாவது வாரிசான வி. அசோக்ராஜா ஈடுபட்டிருக்கிறார்.

“நாங்க இப்போ ஏழு வருடங்களாக மன்னரின் குருபூஜை விழாவை நடாத்தி வருகிறோம்.இந்த நிகழ்வுகளுக்கு மன்னரின் இரத்த உறவுகளை முடிந்தவரை தேடிக் கண்டுப்பிடித்து கொண்டு வந்திருக்கிறேன்.ஆனாலும் இன்னும் பல இடங்களில் மன்னரின் உறவினர்கள் இருக்கிறார்கள் அவர்களையும் ஒண்றினைக்கும் பணியை தொடங்கியிருக்கிறேன்.மன்னரின் குருபூஜையில் கலந்து கொள்ளும் வாரிசுகள் எல்லோருமே இலங்கை அரசின் கண்டி மானியத்தை முறையாக பெற்றுவந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள்.”என்று சொல்லும் அசோக்ராஜா,
“மன்னரின் வாரிசுகள் என்று சொல்லும் சிலர் பிழையான தகவல்களை கொடுத்து விடுகிறார்கள்.ஆனால் நான் சரியான குறிப்புகளையும்,ஆவணங்களையும் வைத்திருக்கிறேன்.ஒரு தலைமுறை என்பது 30பதிலிருந்து நாற்பது வரை,எனது தாத்தா சுப்புசாமி ராஜா 1965வரை கண்டி பென்ஷன் வாங்கிட்டு இருந்திருக்கிறாரு. அதுக்கான ஆவணங்கள் என்கிட்டே இருக்கு” இலங்கை அரசு வழங்கிய மானிய ஆவணத்தில் அசோக்ராஜாவின் தாத்தாவின் பெயர் சுப்புசாமி ராஜாவின் பெயர் இருப்பதை எம்மிடம் சுட்டிக்காட்டியவர் தொடர்ந்தார். “எனது பாட்டன் சுந்தரராஜாவின் மகன்தான் சுப்புசாமிராஜா அவரின் மனைவியின் பெயர் மீனாட்சிஅம்மாள் தனது 97வயதில் அவர் இன்னும் வாழ்கிறார். அவருக்கு நான்கு மகன்கள் அவர்களில் மூத்தவர் குட்டிச்சாமிராஜா இவர் மதுரை டி.எஸ்.பியாக பணியில் இருந்திருக்கிறார்.அவருக்கு பிறகு எனது அப்பா வெங்கடசலபதிராஜா,இவர்கள் இருவரும் இப்போது உயிரோடு இல்லை.அவர்களுக்கு இளையவர்களான கிருஸ்ணராஜாவும்,பால்ராஜாவும் இப்போதும் இருக்கிறார்கள். இவர்களில் நானும் எனது சித்தப்பா பால்ராஜாவும்தான் மன்னரின் குருபூஜை நிகழ்வுகளை தொடர்ச்சியாக செய்து வருகிறோம்.என்றவர்,
 ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன் பற்றி தமக்கு தெரிந்த சில தகவல்களை எம்மோடு பகிர்ந்து கொண்டார்.

சுப்புசாமிராஜா கண்டி பென்ஷன்
வாங்கியதற்கான ஆவணம்.
“கண்ணுசாமி நாயக்கருக்கு சகோதரர்கள் யாரும் கிடையாது.ஒரே அக்கா மட்டும்தான் அம்மா பெயர் சுப்பம்மாள் வெங்கடபெருமாள்.இவங்க புதுக்கோட்டை மாவட்டம் பூலாம் பட்டியைச் சேர்ந்தவர்கள்.அதாவது நாங்கள் மதுரை திருமலை நாயக்கர் வம்சத்தை சேர்ந்த ஆண் வழி வாரிசுகள்.அதில வரும்போது ராணி மங்கம்மாள்,ராணி மீனாட்சி ஆகியோர் ஆட்சிக்கு வந்தார்கள் என்ற காலக்கட்டம் இருக்கு.அந்த நேரத்தில் ஆண் வழி வாரிசுகள்தான் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும்.ஆனால் அப்போது அப்படி நடக்கவில்லை.அந்தக் காலக்கட்டத்தில் ஆண் வாரிசுகள் ஓரங்கட்டப்பட்டு ஆண் வாரிசுகள் வெளியேற்றப்பட்டிருக்கலாம்.அப்படி மதுரையிலிருந்து வெளியேறி புதுக்கோட்டை மகாராஜாவின் பாதுகாப்பில் பூலான் பட்டியில் கண்ணுசாமி,குடும்பம் வாழ்ந்திருக்கிறது.இன்னைக்கும் அந்த ஊருல கண்டி ராஜாவுக்கு மரியாதை இருக்கு.அந்த ஊரோட பேரு விராச்சிலை.அங்குள்ள அம்மன் கோவில்ல கண்டி மன்னரின் வாரிசுகளுக்கு புதுக்கோட்டை சமஸ்த்தானத்தின் மூலமாக முதல் மரியாதை கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது.இன்று வரை அங்கே அது வழக்கத்தில் இருந்து வருகிறது.இன்று எனது மாமா அந்த மரியாதையை பெற்றுக்கொள்கிறார்.
சுப்புசாமி ராஜா
கண்ணுசாமி நாயக்கரின் பூர்வீக ஊருன்னா அது மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் வெள்ளிக்குறிச்சி.மதுரை திருமலைநாயக்கர் சம்பந்தபட்ட இரத்த உறவுகள் வாழ்ந்த இடம்.இங்கே வாரிசு போட்டிகளின் காரணத்தால் அந்த மண்ணைவிட்டு வெளியேறிய கண்ணுசாமி குடும்பம் பூலான் பட்டியில் கொஞ்சக் காலம் தங்கியிருந்துவிட்டு பிறகு ராமேஸ்வரத்திற்கு சென்றவர்கள் அங்கே ராமேஸ்வர பெரிய கோவிலில் தெய்வீக பணியில் ஈடுப்பட்டிருக்கிறார்கள்.அதன் பிறகு கண்ணுசாமியின் தந்தை இறந்துவிட கண்டியை ஆட்சி செய்த இராஜாதி ராஜசிங்கனின் மனைவியின் தம்பியான கண்ணுசாமியை கண்டிக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.” என்று தமது முப்பாட்டன்களின் பழைய வரலாற்றை
மீட்டியவரிடம்,

“நீங்கள் கண்டி ராஜாவின் நான்கு மனைவிகளில் நீங்கள் எந்த தாரத்து வாரிசுகள்” என்று கேட்டதற்கு,
“வெங்கட ராஜம்மாளும்,வெங்கடம்மாளும் மதுரைக்காரர்கள் அவர்களின் வாரிசு வழியில் வந்தவர்கள்தான் நாங்கள்.அதோடு மதுரை திருமலை நாயக்கரின் நேரடி வாரிசு எனக்கு பெரியப்பா முறை வேணுங்க.அவங்க சிவகங்கையில் ஜமீன்தாரா இருந்தாங்க.எனது அம்மாவின் தாய் மாமா.”என்றவரிடம், “கண்டி ராஜாவுக்கு விழாக்கள் எல்லாம் எடுக்குறீங்க திருமலை நாயக்கர்கள் கண்டி ராஜாவை தமது வம்சாவழியாக ஏற்றுக்கொள்கிறார்களா?”
மீனாட்சி அம்மாள்
“ஸ்ரீ விக்ரமராஜசிங்கன் என்று அவர் அழைக்கப்படுவதால் அவர் ஒரு சிங்கள மன்னனாக இருப்பாரோ என்கிற சந்தேகம் இன்னும் இங்கே இருக்கிறது. அதனை இப்படியான விழாக்களை தொடர்ந்து நடத்துவதன் மூலமும் தமிழக ஊடகங்களில் மன்னரைப்பற்றிய செய்திகளை அடிக்கடி பகிர்வதன் மூலமும் அந்த சந்தேகப் பார்வையை இல்லாதொழிக்கலாம்.”என்றார்.
“கண்டி மன்னரின் வாரிசுகளுக்கு ஆங்கிலேயர் எல்லா சலுகைகளையும் வழங்கியிருக்கிறார்கள் ஆனால் அவர்களின் வாழ்க்கை வளமானதாக அமையவில்லையே?”ன்னு கேட்டதும் அசோக்ராஜா புன்னகையோடு பதில் சொல்லத் தொடங்குகிறார்…

“1947லேயே எங்க தாத்தா சுப்புசாமி ராஜாவுக்கு ஆயிரம் ரூபா பென்ஷன் வந்திருக்குங்க!வாரிசுகளின் குழந்தைகள் எல்லோரும் கான்வென்டுலதான் படிச்சிருக்காங்க அவங்க படிப்பு,சாப்பாடுன்னு எல்லா செலவுக்கும் அரசே பணம் கட்டியிருக்கு.நாம வாங்குற பேனா,பென்சில்னு எந்தப் பொருளா இருந்தாலும் சரி அதற்கான பில்லை மட்டும் கொடுத்திட்டாலே போதும் அரசு பணத்தை கொடுத்திடுமாம்.

அப்புறம் ராமநாதபுரம் பக்கத்தில ‘சிக்கல்’ என்கிற ஊரிலையும் வெள்ளக்காரன் கொடுத்த இடம் இருந்ததா சொல்லுறாங்க.வெள்ளைக்காரன் கொடுத்த பெரிய பங்களா இன்றைக்கும் தஞ்சாவூரில ‘கண்டி ராஜா அரண்மனை’ன்னு இருக்கு ஆனா அதில நாங்க இல்லை.அதையெல்லாம் எங்க தாத்தாவுங்க வித்துட்டாங்க.இவங்களுக்கு பணத்தை சேமித்து வைக்கிற பழக்கம் இருந்ததில்லை.கிட்டத்தட்ட ஒரு தலைமுறையா அப்படியே இருந்திட்டாங்க.தினமும் ஒரு இருபது பேரு வீட்டுக்கு வந்து சாப்பிடுவாங்களாம்.ஒரு மாதிரி  பந்தாவாகவே வாழ்க்கையை ஓட்டியிருக்கிறாங்க.பத்து ரூபாவைக் கூட சோத்து வைக்கல எல்லோரும் அப்படியேதான் இருந்திருக்கிறார்கள்.ஒரு சிலர்தான் படிச்சிட்டு வேலைக்கு போயிருக்காங்க.பெரும்பாலும் இவங்க வேலைக்குப் போனதில்லை. பென்ஷன் வரும் அதை வச்சி ராஜபோகமாக வாழ்ந்திருக்கிறார்கள்.அன்மையில் கூட என்னை சந்தித்த ஒரு நண்பர், ‘உங்க தாத்தா பென்ஷன் பணம் ஆயிரம் ரூபா வாங்கும்போது, மாவட்டக் கலெக்டரோட  மாத சம்பளம் 160ரூபா.அதுதான் தமிழகத்தில் பெரிய சம்பளம்.அந்தக் காலத்திலேயே அந்தத் தொகையை விட ஐந்தாறு மடங்கு அதிகமா நீங்க பென்ஷன் வாங்கியிருக்கீங்க’ன்னு சொன்னாரு. ஆனா இதுப்பற்றி எனக்கு  கரெக்ட்டா தெரியல” என்று சொல்லும் அசோக்ராஜா வாரிசுகளுக்கான பென்ஷன் பணம் நிறுத்தப்பட்டது பற்றி ஒரு புதிய செய்தியை சொல்கிறார்.
 “1964ல்தான் பென்ஷன் பணம் நிறுத்தப்பட்டது அப்போது ஆட்சியில் இருந்த ஸ்ரீமாவோ பண்டார நாயக்க ‘நீங்க எங்க நாட்டு மன்னர்னா நீங்க இங்கேதான் இருந்திருக்கனும்.வெளிநாட்டில் இருக்கும் ஒருவருக்கு மானியத்தொகை வழங்க முடியாது அதனால முழுத்தொகையாக ஒரு ஐந்து லட்சம் தருகிறோம்,அதோடு உங்களுடனான அனைத்து தொடர்புகளும் நிறுத்தப்படும்.’னு சொல்லியிருக்காங்க இது 1962ல் நடந்ததாகவும் அப்போது மெட்ராஸ் முதல்வராக இருந்த பீ.டீ.ராஜா எனது தாத்தாவின் நண்பர் அவர் இந்த பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசோடு பேசியிருக்கிறார்.முன்னால் அமைச்சர் பீ.டீ.ஆர்.பழனிவேல் ராஜாவின் தந்தைதான் இந்த பீ.டீ.ராஜா.ஆனாலும் ஒண்ணும் பண்ண முடியல அப்போ எமது உறவுக்காரர்களில் பெண் வழி வாரிசுகளில் பலர் அந்த செட்டில்மென்டுக்கு சம்மதித்து அவர்கள் கொடுத்த முழுத்தொகையையும் வாங்கிக் கொண்டு இனி பென்ஷன் தேவையில்லைன்னு எழுதி கொடுத்துவிட்டார்களாம்.
அவர்கள் வாங்கிய தொகை இன்னைக்கு பெருமதியில் பல கோடி ஆனா என்ன பண்ணுறது தப்பு பண்ணீட்டாங்க.”என்று சொல்லும் போதே அசோக் ராஜாவின் கண்களில் ஏக்கம் தெரிகிறது.

“நம்மளோட கோரிக்கைன்னு பார்த்தீங்கன்னா கண்டியில அறுபத்து மூன்றாம் ஆண்டுவரை நடைபெற்று வந்ததாக சொல்லப்படும், மன்னரின் நினைவு நாள் விழா தொடர்ந்து நடக்கணும்.அப்புறம் நாங்க இலங்கை வந்தோம்ன்னா எங்களுக்கு மன்னரின் வாரிசு என்பதின் அடிப்படையில் வி.ஐ.பி மரியாதை கொடுக்கணும்,எங்களுக்கு நிறுத்தப்பட்ட சலுகைகளை வழங்கணும்.” என்ற கோரிக்கையோடு முடிக்கிறார்.

No comments:

Post a Comment