Sunday, April 2, 2017

இருள் உலகக் கதைகள்.

தேவா பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்  மணி  ஸ்ரீகாந்தன்.

புளத்சிங்கள நகரத்தை அண்மித்திருக்கும் மல்லிகைப்பூ தோட்டம் இறப்பர் மரங்கள் சூழ்ந்து ஒரு இருண்ட கானகத்தைப் போலத்தான் இருக்கும். பெயரில்தான் மல்லிகைப்பூ இருக்கிறதே தவிர அங்கே மருந்துக்கும் மல்லிகைப்பூ செடி இல்லை. முட் செடிகள் மண்டிய கானகம்தான்!

ஒரு காலத்தில் மல்லிகைப்பூ தோட்டம் இருந்திருக்கலாம். ஆனாலும் இப்போது அந்தப் பகுதியில் நடுநிசி நேரங்களில் மல்லிகைப்பூ வாசம் காற்றில் கலந்து வருவதாக புளத்சிங்கள பிரதேசத்தில் ஒரு பேச்சு அடிப்படுகிறது. அதனால் இரவு நேரங்களில் ஊரின் ஒற்றையடி பாதையில் ஊர்க்காரர்களின் நடமாட்டம் குறைத்திருந்தது.

அன்று வழக்கத்திற்கு மாறாகவே மல்லிகைப்பூ தோட்டத்தை இருள் வேகமாக விழுங்கிக்கொண்டிருந்தது. அப்போது நேரம் மணி ஒன்பதை கடந்திருக்கும். ஊரடங்கியிருக்கும் அந்த நேரத்தில், மேட்டு லயத்து சின்ன ராசு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வேலை முடிந்து வீடு வரும் போதே சாரயத்தை குடித்துவிட்டு கொஞ்சம் போதையில் வந்திருந்த சின்னராசு அம்மா சமைத்து வைத்திருந்த சோற்றையும் கோழிக் குழம்பையும் தட்டில் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வெளியே நிற்கும் புளிய மரத்தடியில் அமர்ந்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
"ஏண்டா அடங்காதவனே இப்படி ரெண்டுங்கெட்டான் நேரத்துல வெளியே உட்கார்ந்து சாப்பிடுறீயே உனக்கு புத்தியிருக்காடா…எச்சினி ஏதாவது வந்து உன் உடம்புக்குள்ள உட்காரும்டா" என்று  சின்னராசுவின் அம்மா சரசு திட்டினாள்.

“எச்சினியா, வரட்டும் நான் அவள வச்சிக்கிறேன்”ன்னு அவன் திமிராக பதில் சொன்னான்.

“உனக்கு ரொம்பவும் குடித்திமிருடா…உங்க அப்பன் உசிரோட இருந்திருந்தா நீ இப்படி தறுதலையா சுத்துவியா..?” என்று சரசு தனது மகன் சின்னராசுவை வாயக்கு வந்தப்படி திட்டிவிட்டு வீட்டுக்குள் சென்றாள்.

சின்னராசுவின் அப்பா சந்தனம். சில வருடங்களுக்கு முன்னபாக தோட்டத்து தொழிற்சாலைக்கு இறப்பர் மரங்களை வெட்டி சாய்க்கும் போது ஒரு மரக்கிளை அவன் மண்டையில் விழுந்து அவன் அந்த இடத்திலேயே செத்துப்போனான். சரசு தோட்டத்து வேலைக்கு சென்றுவிடுவதால் சின்னராசு புளத்சிங்கள பகுதியை தனிக்காட்டு ராஜாவாக சுற்றி வருவான். கூடாத நண்பர்கள் சகவாசம் அவனை போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கியது. இப்போது அவனுக்கு தினமும் சாராயம் குடித்தால்தான் தூக்கமே வரும்!

சாராயம், பீடிக்காகவே கூலி வேலைக்கு சென்று வருவான். வீட்டில் அவனுக்கு தண்டத்துக்கு சோறுபோடுவது சரசுவின் வேலையாக போய்விட்டது. இரவில் சாப்பிடும் போது வீட்டு முற்றத்தில் இருக்கும் புளியமர அடியில் அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக்கி வைத்திருந்தான்.
தேவா பூசாரி
சின்னராசு அப்படி ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை புளியமரத்தின் ஒரு கிளையில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு கரிய உருவம் வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. மரத்திற்கு மேலே ஏதோ சத்தம் வந்ததை கேட்டு சின்னராசு மேலே பார்த்தான். அங்கே எந்த சலனமும் இல்லாமல் பூரண அமைதி நிலவியது.

கோழி எலும்பை பற்களால் கடித்து சப்புக்கொட்டினான். அப்போது அவனின் முதுகில் ஏதோ சில்லுன்னு பட்டதை உணர்ந்த அவன் சடாரென திரும்பினான். அப்போது அவன் கண்ட காட்சி இரத்தையே உறைய வைப்பதாக இருந்தது.

இரத்தச் சிகப்பாக பாம்பு மாதிரி மரத்திலிருந்து ஒரு நாக்கு நீண்டு தொங்கியது அதன் முகம் சின்னராசுவின் கண்களுக்கு மங்கலாக தெரிந்தது. அவன் இதுவரை அப்படியொரு அவலட்சணமான உருவத்தை கண்டதில்லை அவ்வளவு கோரமான உருவம்! அப்போது அந்த பகுதி முழுவதும் ஒருவித துர்நாற்றம் குபீரென்று வீச சின்னராசுவின் கைகளில் இருந்த சாப்பாட்டு தட்டு நழுவி விழ அவன் அப்படியே தரையில் மயங்கிச் சாய்ந்தான்.

வீட்டுக்கு வெளியே சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் நீண்ட நேரமாகியும் உள்ளே வராததால் சரசு மகனை பார்க்க வெளியே வந்தாள். அப்போது மகன் தரையில் விழுந்து கிடப்பதை கண்ட அவள் இப்படி அவன் விழுந்து கிடப்பது வழக்கமில்லையே என்று எண்ணி மனம் பதைபதைக்க 'அய்யோ ஓடி வாங்களேன்' என்று சத்தம் போட்டாள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து சின்னராசுவை தூக்கி வீட்டுக்குள் கொண்டு சென்று கீழே கிடத்தினார்கள். பிறகு அவனுக்கு தண்ணீர் தெளித்து எழுப்பினார்கள். மயக்கம் தெளிந்த அவன் தான் பார்த்த சம்பவத்தை விபரித்தான். அதை கேட்ட சரசுவும் கூடி நின்றவர்களும் உறைந்து போய் நின்றார்கள். அப்போதே அந்த ஊரில் இருக்கும் நல்லக்கண்ணு பூசாரியை அழைத்து வந்து சின்னராசுவுக்கு மந்திரித்து ஒரு பாதுகாப்பு கயிற்றையும் அவன் கையில் கட்டினார்கள்.

அடுத்த நாள் சின்னராசுவும் கூலி வேலைக்கு போனான். சரசு வேலை முடிந்து வீட்டுக்கு வந்து சமையல் வேலையில் ஈடுப்பட்டாள். சின்னராசுவின் வீட்டில் நிலைமை வழமைக்கு திரும்பியிருந்தது.

ஆனால் சின்னராசுவின் உடம்பில் ஏதோ ஒரு புது மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்பதை அவனின் உள் உணர்வுகள் எச்சரித்தன. அதை எதையுமே அவன் கண்டு கொண்டதாக தெரியவில்லை. வேலை முடிந்து வீடு வரும் வழியிலேயே சாராயத்தை அன்று கொஞ்சம் அதிகமாகவே வாங்கி வாயில் ஊற்றி தொண்டையை நனைத்துக் கொண்ட ராசு தெருவோர பெட்டிக் கடையில் பருப்பு வடையை வாங்கி சாப்பிட்டபடியே வீடு நோக்கி நடந்தான்.

வீட்டை நெருங்கியதும் சின்னராசுவிற்கு போதை உச்சத்தை தொட்டிருந்தது. சின்னராசு மூக்குமுட்ட குடித்து விட்டு தள்ளாடியபடியே வருவதை வீட்டுக்கு வெளியே நின்றிருந்த சரசு பார்த்துக் கொண்டிருந்தாள்.

சின்னராசு வீட்டின் வாசற்படியில் காலை வைத்ததையும் “அடியே சரசு என்னாடி பண்ணுற? சோத்தப் போடு, ஊறுகாயை கொண்டாடீ!” என்று சின்னராசு கத்தியதை கேட்டு சரசு அப்படியே ஆடிப்போனாள்.

‘எவ்வளவு குடித்தாலும் அவன் இப்படி தரக்குறைவான வார்த்தைகளால் தன்னை திட்டியதில்லையே…’ என்று சரசு ரொம்பவே குழம்பிப் போனாள்.

ஆத்திரத்தோடு அவனுக்கு சோற்றை போட்டு கொடுத்தாள். ‘இப்போ போதையில இருக்கிறவனுக்கு என்னா சொன்னாலும் புரியாது விடியட்டும் வச்சிக்குறேன்’ என்று மனதிற்குள் திட்டயபடியே பாயில் சுருண்டாள் சரசு.

வீட்டுக்கு வெளியே சாப்பிட்டுக் கொண்டிருந்த சின்னராசு ரொம்ப நேரம் கழித்து வீட்டுக்குள் நுழைந்தான். அவன் உள்ளே சென்ற சில நொடிகளில் சரசு ‘அய்யோ ஓடி வாங்களே’ன்னு வெளியே ஓடி வந்து கத்தியதை கேட்ட அயல்வர்கள் சரசுவின் வீட்டுக்கு முன்னால் கூடினர். வீட்டுக்குள்ளிருந்து வெளியே தள்ளாடியபடியே வந்து ‘அடியே சரசு நான் உன் புருஷன்டீ! எதுக்கு கத்தி ஊரைக்கூட்டுற’ என்று சின்னராசு சொன்னதை கேட்டு அக்கம் பக்கத்து இளைஞர்கள் அவனை அடிப் பின்னியெடுத்தார்கள். “உன்னோட குடித் திமிருக்கு தாயைக் கூட தெரியலையா" என்று கேட்டு அடித்தால் அவன் கீழே விழுந்து உளறிக் கொண்டிருந்தான். 

தாயிடம் தப்பாக நடக்கும் அளவுக்கு அவனை போதை மாற்றி இருப்பதை நம்ப முடியாத சின்னராசுவின் நண்பர்கள் உடனே ஊர் பூசாரிடம் சென்று குறிபார்த்த போது சின்னராசுவின் உடம்பில் ஒரு தீய சக்தி குடியிருப்பதை அவர் உறுதி செய்தார். ஆனாலும் உடம்பில் கொடூரமான கெட்ட ஆவி குடியிருப்பதால், நல்ல கை தேர்ந்த ஒரு பூசாரியை வைத்து பேயை விரட்டும்படியும் அவர் கூறிவிட்டதால் உடனடியாகவே பேயை விரட்ட சின்னராசுவின் நண்பர்கள் முடிவெடுத்தார்கள்.

அடுத்தநாளே அந்தப் பகுதியில் பிரபல பூசாரியாக விளங்கும் தேவா தனது சகாக்களோடு மல்லிகைப்பூ தோட்டத்திற்கு சென்றார்.சின்னராசுவின் வீட்டுக்குள் நுழையும் போதே அவரை உள்ளே நுழைய விடாதபடி ஏதோ ஒரு சக்தி அவரை தடுக்க தனது குல தெய்வமான முருகனை நினைத்து மந்திரத்தை உச்சரிக்க அந்த சக்தி விலகி தேவாவிற்கு வழிவிட்டது.
பரிகார பூஜை மன்றில் உடுக்கையோடு அமர்ந்தவர் ரெண்டு பாடல்களை கோபாவேசத்தோடு பாடிய மறுகனமே சின்னராசு பேயாட்டம் ஆடத்தொடங்கினான்.

சில வருடங்களுக்கு முன்னால் இறந்து போன சின்னராசுவின் தகப்பனின் ஆவிதான் அவன் உடம்பில் புகுந்து ஆடுகிறது என்பதை தேவா புரிந்துகொண்டார். தனது மனைவியின் மேல் சந்தேகம் கொண்டவனாக வாழ்ந்த சின்னராசுவின் தகப்பன், மனைவி மேல் கொண்ட பாசத்தால் அவளை கண்கானிப்பதற்காகவும், அவளுக்கு துணையாக இருப்பதற்காகவுமே சின்னராசுவின் உடம்பில் இறங்கியதாக தேவாவிடம் ஒப்புக்கொண்டான். அதனால் தேவாவிற்கும் வந்த வேலை மிகவும் எளிதாக முடிந்து விட்டது. சின்னராசுவின் தந்தைக்கு பிடித்த உணவுகளை சரசு உடனடியாக தயாரித்து கொடுக்க அவற்றை பலநாள் பட்டினி கிடந்தவன் போல சின்னராசுவின் உடம்பில் இருந்த தீய சக்தி மூக்குமுட்ட தின்று தீர்த்த அடுத்த நொடியே அசதியில் அப்படியே படுத்துக்கொண்டது, தேவா தமது மாயா ஜால மந்திர வித்தையால் அந்த தீய சக்தியை பிடித்து போத்தலில் அடைத்தார்.

அப்போதுதான் சின்னராசுவின் அம்மா  சரசுவிற்கு போன உயிர் திரும்பி வந்தமாதிரி நிம்மதி பெருமூச்சு விட்டார்.

சுடுகாட்டிற்கு சென்ற தேவா பூசாரி பரிகாரங்களை முடித்து தீய சக்தி இருக்கும் போத்தலை எரியும் நெருப்பில் போட்டார்.       

No comments:

Post a Comment