Monday, April 10, 2017

ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் காலத்தில்…

1816ஆம் ஆண்டு ஜனவரி 24ம் நாள் மாலை. அந்த அந்திவேளையில் கொழும்புவில் இன்றைய சிலிங்கோ கட்டிடம் இருக்கும் இடத்திலிருந்த  சிறையினுள் அடிபட்ட புலிபோல் அங்குமிங்குமாக உலாவிக்கொண்டிருந்தான் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன். இவன் மதுரை நாயக்க குலத்தைச் சேர்ந்த தமிழ் மன்னன். இவனது இயற்பெயர் கண்ணுசாமி.
ஒரு வருடத்துக்கு முன் அவன் வாழ்ந்த வாழ்க்கையையும் இன்றுதான் இருக்கும் நிலையினையும் நினைத்து நினைத்து அவன் எத்தனையோ நாட்கள் உறக்கமின்றிக் கழித்திருக்கிறான்.
கொழும்பு சிலிங்கோ கட்டிடத்திற்கு அருகில்
இருக்கும் கண்டி மன்னனின் நினைவுச் சின்னம்
இந்த இடத்தில்தான் மன்னன்
சிறைவைக்கப்பட்டிருந்தாராம்
புகழ்பெற்ற கண்டி ராஜதானியயை கட்டி ஆண்ட காலத்தையும், பிரித்தாளும் பிரித்தானியர் தனது அதிகாரிகளைக் கையில் போட்டுக்கொண்டு கண்டிமீது படையெடுத்து வந்ததையும் தனது பட்ட மகிஷிகளுடன் மெத மகா நுவரைக்கு தப்பியோடிய நிகழ்ச்சியையும் அங்கு மலைக்குகையொன்றினுள் மறைந்து வாழ்ந்ததையும் எஹலப்பொளையின் கையாட்கள் 1815 ஆம் ஆண்டு பெப்ரவரி 19ம் நாள் சிறைப்பிடித்த நிகழ்ச்சிகளும் அவன் சிந்தனையில் ஒன்றின் பின் ஒன்றாக ஓடி மறைந்தன. எஹலப்பொளையின் கையாளான எக்னெலிகொட தன் குரோதத்தைத் தீர்த்துக்கொள்ள தன்னைக் கயிற்றால் கட்டி வீதியில் இழுத்துச் சென்றதை நினைத்தபோது அவன் ரத்தம் கொதித்தது. இக்காட்சியைக் கண்ட ஆங்கிலேய தளபதி டொயிலி உடனடியாக என்னெலிகொடையைக் கண்டித்து தனக்குரிய ராஜ மரியாதையை அளித்ததை எண்ணி எதிரியின் சிறந்த குணத்தினையும் தன் சொந்த மக்களின் அற்ப புத்தியையும் ஒப்பிட்டுப் பெருமூச்செறிந்தான்.

எல்லாவற்றுக்கும் மேலாக இன்று இலங்கை மக்களை விட்டே அவனைக் கப்பலேற்ற வெள்ளையர் ஆட்சி துணிந்து விட்டதை எண்ணி அவன் வெதும்பினான். ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனை நாடு கடத்தும் திட்டம் மிக மிக இரகசியமாக லண்டனில் பைட் ஹோலிலுள்ள காலனி ஆட்சி அலுவலகத்தோடு தொடர்புகொண்டு ஒழுங்கு செய்யப்பட்டது. அதற்கான நாளாக 1816 ஆம் ஆண்டு ஜனவரி 24ம் நாள் என தேதியும் குறிப்பிடப்பட்டு இதனைச் செய்து முடிக்க இளம் சிவில் சேவை அதிகாரியான கிறான்விலியும் நியமிக்கப்பட்டான். இந்தச் சோக நாடகத்தின் கதா நாயகனான ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனுக்கோ இந்த ரகசியத் திட்டம் ஏற்கனவே தெரிந்திருந்தது. தெரிந்தும் என்ன பயன்? தான் இனி எக்காலத்திலும் இலங்கை திரும்ப முடியாதென்பதை உணர்ந்திருந்தான். எனவே தோல்வியையும் தனக்கே உரிய கௌரவத்துடன் ஏற்றுக்கொள்ள அவன் சித்தமானான்.
மன்னரை கட்டிவைத்திருக்கும்
எக்னெலியகொட மற்றும் மன்னருக்கு
மரியாதை செய்யும் ஆங்கில
அதிகாரிகளையும் இந்தப் படம் சித்தரிக்கிறது.
அரசன், அவனது நான்கு அரசிகள், தாயார் மற்றும் நெருங்கிய உறவினர்களான அறுபது பேரை கொழும்பிலிருந்து தென்னிந்தியாவிலுள்ள வேலூர் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டுமென்று கிறான்விலிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

சிறையிலிருந்து ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனையும் அவனது குடும்பத்தினரையும் ஏற்றிக்கொண்டு கடற்கரைக்குச் செல்ல அன்றைய கவர்னராயிருந்த சேர். றொபேர்ட் ஆறு    குதிரைகள் பூட்டிய அலங்கார வண்டியைக் கொடுத்துதவ முன்வந்தான். கைதியாக தம் பாதுகாப்பில் இருந்தாலும் அரசனுக்குரிய கௌரவம் எல்லாம் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கு அளிக்கப்பட வேண்டுமென்று அவன் கட்டளையிட்டிருந்தான்.

வில்லியம் கிறான் விலி, மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தங்கியிருந்த சிறைக்குச் சென்ற போது அவனுக்கு அங்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்சியைப் பறிகொடுத்த மன்னனைக் காண்பதற்குப் பதிலாக அங்கே தன் அரச உடுப்புகளுடன் வழக்கமான ராஜ கம்பீரத்தோடு நின்ற ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனைக் கண்டதும் அவன் ஒருகணம் அதிர்ந்தே போய்விட்டான்.
கேணல் கென் என்ற பிரிட்டிஷ் அதிகாரியும், கண்டி மாவட்ட அதிகாரியான ஜோன் சதலண்ட் என்பவனும் இருபக்கமும் இருக்க, பிரசித்தி பெற்ற கண்டியரசனின் இலங்கையை விட்டு அகலும் இறுதிப் பயணம் ஆரம்பமாகியது. அவனது பட்ட மகிஷிகள் வேறு ஒரு வண்டியில் பின்னால் சென்றார்கள். பிரயாணத்தின் ஒரு கட்டத்தில் அரசனும் அவனது பரிவாரங்களும் சென்ற குதிரை வண்டிகள் சுங்க அலுவலகத்தின் ஒரு மேல்மாடிக் கட்டடத்தைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது.
அரசனின் நாடுகடத்தலை எப்படியோ அறிந்து கொண்ட வெளிநாட்டுப் பிரயாணிகள் பலர் அக்கட்டடத்தின் மேல்மாடியில் வந்து குவிந்துவிட்டனர். இதனைக் குதிரை வண்டியிருந்தே கவனித்த ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் குதிரை வண்டிகளை உடனடியாக நிறுத்தும்படி கட்டளையிட்டதோடு மேல்மாடியிலிருக்கும் பிரயாணிகள் அத்தனைபேரும் கீழே இறங்கி வாந்தாலன்றி தன் குதிரை வண்டியை அக்கட்டடத்தின் கீழாகச் செலுத்தக் கூடாதென்று கண்டிப்பாகக் கட்டளையிட்டான்.

வில்லியம் கிறான்விலியும் ஏனைய பிரிட்டிஷ் அதிகாரிகளும் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துவிட்டனர். கைதியாக இலங்கையை விட்டே நாடு கடத்தப்படும் நிலையிலும்    ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனுடைய துணிவையும் வீரத்தையும் கண்டு அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். உடனடியாக அக்கட்டடத்தின் மேல்மாடியிலிருந்த பிரயாணிகளெல்லாரையும் கீழே இறங்கி விடும்படி உத்தரவிடப்பட்டது. இதன்பின்பே அரசனின் அனுமதியின்படி குதிரை வண்டி அக்கட்டடத்தைத் தாண்டி மேலே சென்றது.

அன்றைய நாட்களில் கொழும்பில் துறைமுகம் என்று ஒன்று இருக்கவில்லை. பெரிய கப்பல்களெல்லாம் அந்நாட்களில் நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டு படகுகள், தோணிகள் மூலமே பிரயாணிகள் கப்பலுக்குச் செல்ல வேண்டியிருந்தது. எனவே சில படகுகள் மன்னனையும் அவனது பட்டமகிஷிகளையும் ஏனைய நாயக்க வீரர்களையும் உறவினர்களையும் ஏற்றிக்கொண்டு கப்பலை நோக்கி விரைந்தன. கடற்பிரயாணத்தை மேற்கொள்ளாத அரசிகளும் அவர்களது உறவினர்களும் கப்பலைச் சென்றடைய முன்னமே மயக்கமுற்று சோர்ந்து வீழ்ந்தனர். கப்பலில் ஏறவே சோர்வுற்றிருந்த அவர்கள் ஆசனங்களில் வைத்து மேலே கப்பலுக்கு எடுக்க வேண்டியேற்பட்டது.
சிறைவைக்கப்பட்டிருந்த இடம்.
(கொழும்பு-சிலிங்கோ)
மன்னனுடன் பிரயாணஞ் செய்த பல வீரர்கள் ஏனைய கப்பல் சிப்பந்திகளின் உதவியுடனேயே கப்பலேற்றப்பட்டனர்.
ஆனால் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனோ எந்தவிதமான உதவியும் தனக்குத் தேவையில்லையென்றுகூறி, தனக்கே உரிய வீர நடையுடன் சென்று கப்பலேறினான். கப்பல் பயணத்துக்கு பரிச்சயமற்ற அவன் அன்று நடந்து கொண்டவிதம் பலரை ஆச்சரியத்திலாழ்த்தியது. கப்பல் மேல்தளத்தை அவன் அடைந்ததும் பாண்ட் வாத்தியங்கள் முழங்கின. கடற்படை கப்பல்களுக்கு மன்னர்கள் விஜயம் செய்யும்போது அளிக்கப்படும் ராஜ மரியாதைகள் அனைத்தும் அங்கே அளிக்கப்பட்டு கடற்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையும் தரப்பட்டது.

கப்பலின் மேற்தளத்தில் நின்றவாறே தூரத்தே தெரியும் தன் தாயகத்தை ஒருகணம் உற்றுநோக்கினான். அமைதியாக தன் பட்டமகிஷிகள் பின்வர கப்பலில் தனக்கொதுக்கப்பட்ட அறைக்குச் சென்ற ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் திரையை இழுத்து மூடிக்குகொண்டு அதன் பின்னே தன் உணர்ச்சிகளை அடக்கி கொண்டான். நிறைவேறாத ஆசையுடன், பின்னர் இந்திய மண்ணில் மடிந்துபோன அவனைச் சுமந்துகொண்டு, கப்பல் தனது பிரயாணத்தைத் தொடங்கியது. முடி மன்னன் ஆட்சியின் கடைசிச் சின்னமும் அக்கப்பலோடு இலங்கையை விட்டு அகன்றது.

இரா.கனகரத்தினம்
கண்டியில் இருந்து
வெளியான
'செய்தி' இதழில்
எழுதியது.
வெளியான திகதி
1-2-1969

No comments:

Post a Comment