Saturday, April 1, 2017

பாடலாசிரியர் பிரியனுடன் ஒரு வசந்த மாலை

மணி  ஸ்ரீகாந்தன்

ட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார், யுகபாரதி என்று கோலோட்சிய  சினிமா பாடலாசிரியர்கள் பட்டியலில் இப்போது முன்னணியில் இருக்கும் இளைய தலைமுறை பாடலாசியர்தான் பிரியன்.'செதுக்கி எடுத்த சிலையைப்போல்..', 'மக்காலேயா.. மக்காலேயா..,' 'மஸ்க்காரா போட்டு மயக்குறியே..,' 'உனக்காக வருவேன்..', உள்ளிட்ட பாடல்களால் இளசுகளின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பிரியனை ஒரு வசந்த மாலை வேளையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது திரைப்பாக்கூடத்தில் சந்தித்துப் பேசினோம்.

உங்களின் பூர்வீகம் எது சென்னையா? என்று முதல் கேள்வியை தொடுத்தபோது…

“சென்னையே முதல்ல நம்ம சென்னை இல்லை.அது வேற விசயம், சென்னப்பநாயக்கர் பட்டணம் என்று கதைகளில் உருவான நகரம்தான் அது. எனது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி. பிறந்தது, படித்தது எல்லாமே அங்கேதான். எனது குடும்பம் ஒரு தொழிலாளர் குடும்பம். எனது அப்பா ராஜாராமன் கடும் உழைப்பாளி, ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த மனிதர். அம்மா மல்லிகா அவங்க இல்லத்தரசி. என்னோட உடன்பிறப்புன்னா அண்ணன் மட்டும்தான். அவரு ஐடி துறையில இருக்கார். எங்க குடும்பத்துக்கும் கலைக்கும் சம்பந்தம் கிடையாது.

எனக்கு மட்டும் வந்தது என்றுதான் சொல்லனும். ஆன்மீகம்னு சொன்னா கடவுள் கொடுத்த வரம்னு சொல்லலாம். நாத்திகம்னு சொன்னா ஒவ்வருவருக்கும் பிறவியிலேயே இருக்கக்கூடிய தனித்தன்மைன்னு சொல்லலாம்” என்றவரிடம், அப்போ நீங்கள் ஆன்மீகவாதியான்னு இடைமறித்தோம்.
"எல்லாமும்தான்" (சிரிக்கிறார்) "சிறுவயதிலிருந்தே எனக்கு பாடல்களின் மீது ஆர்வம் இருந்திருக்கும்னு நினைக்கிறேன். எனக்கு ஞாபகம் இருக்கும் நாட்களை கொஞ்சம் மீட்டிப்பார்த்தால் சின்ன வயசுல நான் கேட்ட மாரியம்மன் பாட்டுகளில காற்றாகி கனலாகி…பாடலில் நான் பரவசமாகி அந்த டியூன்னுக்கு நானே சுயமாக அதற்கு வரிகள் எழுதியிருக்கிறேன். நாலு வரி நோட்டு புத்தகத்தில் நான் எழுதியது இன்றும் எனக்கு ஞாபகத்திலிருக்கிறது. ஆனால் அந்த பதிவு பொக்கிஷங்கள் இன்று என்னிடம் இல்லை" என்று நிறுத்திவிட்டு தொடர்ந்தார் பிரியன்,
"அப்படி எழுத ஆரம்பிக்கும்போது இயல்பாகவே எனக்கு தமிழ் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதற்குப் பிறகு பள்ளிகளில் படிக்கும்போது பேச்சு போட்டி, கவிதைப் போட்டி ஆகியவற்றில் நான் பங்குப்பற்றிய பொழுதுகளில் கிடைத்த கைத்தட்டல்கள் அப்போது எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சி. அதுதான் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. அப்போதே என்னைப் பார்த்து எவனாவது ‘நீ வேஸ்ட்டுடா' என்று சொல்லியிருந்தா அப்போதே நான் காலியாகியிருப்பேன். இப்படிதான் என்னோட பயணம் தொடங்கியது. இப்போ எல்லா கவிஞர்களும் ரெண்டு கவிதை எழுதியதுமே புத்தகம் போட்டுடுவாங்க. ஆனா, எனக்கு அதில ஒரு மாற்று சிந்தனை இருந்தது. ஏன்னா புத்தகம் போட்டா ஒரு ஆயிரம் பேருல இருந்து ஐயாயிரம் பேரு வரைக்கும் போய் சேரும். அது போதாது. நான் சொல்லுகிற விசயம் பெரிய அளவுல ரீச்சாகணும் அதுக்கு என்ன பண்ணலாம்னு சிந்தித்தபோதுதான் சினிமாவில பாட்டு எழுதினா கோடிக்கணக்கான மக்களிடையே ஒரே நாளில ரீச்சாகிவிடலாம் என்று தோன்றியது. பாட்டு பிடிக்குதோ இல்லையோ கேட்டுதானே ஆகனும்! அதனால் சினிமா பாடல் எழுதுவதற்கான முயற்சியில் இறங்கினேன்.

ஆனால் வீட்டில் விரும்பவில்லை. ஏன்னா எனக்கு தமிழ் மீது ஆர்வம் இருந்ததால் அதையே படிக்கலாம்னு நினைச்சபோது அப்பா அதெல்லாம் சரிப்பட்டுவராது தொழில்முறை சார்ந்த கல்வியையே தேர்ந்தெடு என்று சொன்னாரு. அதில் தவறு இல்லை. ஒரு பெற்றோரா அவங்க செய்தது சரிதான். அதை நோக்கி படின்னு சொன்னப்போது நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். அப்புறம் நான் பி.காம் எடுத்தேன். பி.காம் படித்தாலும் நான் இருந்தது என்னவோ எம்.ஏ தமிழிலதான். நான் ஒரு கவிஞனாக இருந்ததால சமூகம் சார்ந்த கோபம் எனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதனால நான் முதலில் கல்லூரி சேர்மனாக  இருந்தேன். அதன் பிறகு திருச்சி மாவட்டம் முழுவதற்கும் கல்லூரி மாணவர் தலைவராக சமூகம் சார்ந்த பயணத்தில் இறங்கினேன்.

அதன் பிறகு கல்லூரி வாழ்க்கையை நிறைவு செய்தவுடன். நான் கல்லூரி மாணவராக செயல்பட்டதினால் என்னை அரசியல் கட்சிகளில் சேரும்படி அழைப்பு வர ஆரம்பித்தது. எனக்கு அப்போதே அதில நல்ல தெளிவு இருந்ததினால் நான் அரசியலில் இறங்க மறுத்து விட்டேன். ஆனாலும் அவர்கள் என்னை விடவில்லை எனக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள். அப்போது எனது ஆயுதத்தை வீட்டில் நான் பயன்படுத்தினேன். எனது எதிர்கால திட்டமே சென்னைக்கு போய் சினிமாவில பாட்டு எழுதுவதுதான். அதனால் அந்த நேரத்தை நான் சரியாக பயன்படுத்தினேன். ‘இங்கேயே இருந்தா நான் அரசியலில் சேர வேண்டியிருக்கும் அதனால நான் சென்னைக்கு போய் எதாவது வேலை செய்கிறேன்’ என்று அப்பாவிடம் அனுமதி கேட்டப்போது அவர் மறுப்பேதும் சொல்லாமல் வழியை திறந்துவிட்டார். 2003ம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டேன். வந்து ஒரு இரண்டு வருடம் சின்ன சின்ன வேலைகளை செய்தேன். பிறகு முழு மூச்சாக பாட்டெழுதுகிற முயற்சியில் இறங்கினேன்.

இதுல பெரிய வேடிக்கை எனக்கு சினிமா தெரியாதுங்கிறது. ரெண்டாவது, ஆனா நமக்கு சென்னையே தெரியாது என்கிறது. நாம் ஊரில இருந்து வந்தோம். சென்னையை பழகி, சினிமாவை அறிந்துகொள்ள நான் போராடிய அந்தக் காலம் மிகவும் கொடுமையானது. அந்த நாட்கள்தான் என்னை செதுக்கி புடம் போட்டன" என்று பழசை நினைத்து நிம்மதி பெருமூச்சு விட்டவரிடம் முதல் படமே தமிழ் படமா? என்று கேட்டோம்.

“முதலில் எனக்கு மொழிமாற்று படங்கள்தான் கிடைத்தன. அந்த நூலை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அதில் பயணம் செய்ய ஆரம்பித்தேன். அப்போ வெளிவந்த மொழிமாற்று படங்களுக்கு நான்தான் பாட்டு எழுதினேன். ‘பிரியன் ரொம்ப நல்லா எழுதுறாரு’ என்று நிறைய டப் படங்கள் எனக்காக வரிசைக் கட்டி நின்றன. அதிலிருந்த வட்டம் விரிகிறது. அப்போது அதிலிருந்து ஒருத்தர் நேரடி தமிழ் படம் எடுத்த போது எனக்கு வாய்ப்பு கொடுத்தார். 'ஆட்டம்' தான் எனது முதல் தமிழ்ப் படம். முதலில் ஒரு பாட்டு எழுதுவதற்குதான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நான் எழுதிய பாடல் பிடித்துவிட அந்தப் படத்தின் அனைத்து பாடல்களையும் எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கின் பிரபல இசையமைப்பாளரான ராஜ்கோட்டின் உதவியாளர் பவன் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார்.
அந்தப்படத்தின் துவக்கப் பாடலில் ஏதாவது வித்தியாசம் செய்யணும் என்று நினைச்சேன். அதன்படி, தமிழில் ஏகாரம்னு சொல்லுவாங்க. ‘ஏ’ன்னா ஏற்றத்தை குறிக்கும். அதனால அந்தப் பாட்டு முழுவதையும் ஏகாரத்தில் முடித்தேன்.

‘பதினெட்டு வயது பருவக் காற்று என்னை தீண்டியதே..

இருபது வயது மூச்சுக் காற்றில் இதயம் மேய்கிறதே…

என் பேச்செல்லாம் மடிகிறதே..' என்று ஏகாரத்தில் பாடலை முடித்திருந்தேன். கண்ணதாசனும் எம்.எஸ்.வி.யும் இணைந்து மே.. என்ற சொல்லில் ஒரு பாடலை முடித்திருந்தார்கள். நானும் முதல் முயற்சியாக முதல் தமிழ் பாட்டை ஏற்றத்தில் தொடங்கினேன். அதன்பிறகு என்னை தமிழ் திரையுலகில் அடையாளப்படுத்தியது இயக்குனர் மிஷ்கினின் சந்திப்புதான். ஒரு நாள் மிஷ்கினின் உதவி இயக்குநர் ராஜன் மாதவன் என்னிடத்தில் வந்து ‘மிஷ்கின் அஞ்சாதே படத்துக்கு ஒரு மெல்லிசை பாணியில் பாடல் கேட்கிறார் இதுவரை ஒரு மூன்று பாடலாசிரிடம் கேட்டு பார்த்துட்டாரு ஆனா சரியா உட்காரல அதனால நீங்க வாங்க போய் பார்த்துட்டு வரலாம்’ என்று சொல்ல நான் மறுத்து விட்டு ‘உங்ககிட்டே பாட்டுக்கான பல்லவியை தாரேன் அதை அவரிட்ட கொடுத்து பாருங்க பாடலாசிரியர் யாருன்னு சொல்லாதீங்க அவருக்கு வரிகள் பிடித்திருந்தா பண்ணலாம்’ என்று சொன்னேன். அவரும் நான் கொடுத்து அனுப்பிய மூன்று பல்லவிகளையும் கேட்டுப் பாhத்தார். அவருக்கு பிடித்துவிட, எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.’ மனசுக்குள் மனசுக்குள் புது மழை..’தான் அந்தப் பாட்டு என்னோட லைப்புக்கு பெரிய பிரேக் கொடுத்தது; படமும், பாட்டும் செம ஹிட்டு.

அதன்பிறகு விஜய் ஆண்டனியுடன் நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்திருக்கிறேன். இதுவரைக்கும் நானுநூறுக்கும் மேற்ப்பட்ட பாடல்களை படைத்திருக்கிறேன்” என்றவரிடம் தமிழ் பாடலாசிரியர்களில் சிலர் ஆங்கிலம் கலக்காத தனித் தமிழில் மட்டுமே பாடல் எழுதுவேன்’ என்று ஒரு எல்லை வரையரை வைத்திருக்கிறார்களே எப்படி? என்றோம்.

“அப்படினா நீங்க ஒரு இயல்பு வாழ்க்கை வாழ முடியாது. நான் பொய் சொல்ல விரும்பல. நடிக்க விரும்பல சுத்தத் தமிழில் ஒரு தமிழனை பேச சொல்லுங்க பார்ப்போம். அந்தக் கால கட்டத்தை நாங்க கடந்துட்டோம்ங்க! நாம் பேசுகிற தமிழே மணிப்பிறவாள நடைதான். எவன் சுத்தத் தமிழ் பேசுறான்? அப்படியே நீங்க ஆங்கிலம் தவிர்த்து பேசினாலும்கூட நம்ம மொழியில அறுபது சதம்தான் தமிழ் இருக்கு. மற்ற முப்பது சதவீதம் சமஸ்கிருதமும், பத்து வீதம் இந்தி, உருது உள்ளிட்ட கலவையையும் கலந்து பேசுறோம். ஆங்கிலத்தை தவிர்த்து விட்டாலே தமிழில் பேசியதாக கருதிவிட முடியாது. அப்போ புதுப்புது கண்டுபிடிப்புகளை நீங்க என்ன பண்ணுவீங்க? அப்படினா நீங்க தமிழில பேசவே முடியாது. சரி அப்போ நான் வெளியில அப்படி நடிச்சேன்னு வச்சுக்கிட்டாலும், வீட்டுக்குள்ள பொண்டாட்டி புள்ளக்கிட்டே எப்படி இருப்பேன்? அப்போ பிரியன் என்பவன் யாரு? வீட்டுக்குள்ள ஒரு பிரியன் வெளியே ஒரு பிரியனா? நான் என் மனைவியிடம் ‘இல்லாள், இன்று என்ன சமைத்தீர்கள்?’ன்னு கேட்க முடியுமா? நான் முடிந்தளவு என் மொழியை காப்பாற்ற முயற்சி செய்வேன். ஆனா அதுல இன்னொரு விசயமும் இருக்குங்க சினிமா பாடல் என்பது ஒரு டீம் வேர்க் அப்படியே நான் என் இஷ்டப்படி செய்யனும்னா நான் பாட்டு எழுத முடியாது. கவிதை புத்தகம்தான் போடணும்” என்று கொஞ்சம் கொதித்து ஆறியவரிடம்,

சினிமாவில் குறிப்பிட்ட ஒரு நடிகருக்கு பாடல் எழுதுவது ஒரு பெரிய வரம்’ என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டோம்.

“சிவாஜிக்கும், எம்.ஜி.ஆருக்கும் எழுதியிருந்தால் அப்படி நினைத்திருப்பேன்.”

நீங்கள் தத்துவ பாடலாசிரியர் அல்லது குத்து பாடலாசிரியர் என்று தனித்துவ அடையாளத்திற்காக முயற்சி செய்கிறீர்களா?

“நான் வாலி மாதிரி ஆல்ரவுண்டரா வலம் வருவதையே விரும்புகிறேன். ஆனால் எனக்கு எல்லா கவிஞர்களின் பாதிப்பும் இருக்கிறது. ஏனென்றால் கண்ணாதசன் சொல்லாததைக்கூட ஒரு கிராமத்து கவிஞன் சொல்லிவிடுவான். கண்ணதாசனும், வாலியும் யதார்த்த கவிஞர்கள். நானும் யதார்த்தமாக இருப்பதால் அவர்களை ரொம்பவும் ரசிக்கிறேன். கண்ணதாசனின் எழுத்துக்கள் என்பது தன் வாழ்விலிருந்து பிறக்கக்கூடிய யதார்த்தமான வார்த்தைகள். சொன்னது நீதானா.., நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.., சிவகாமி மகனிடம் …., என்று தனது வாழ்க்கையை பதிவு செய்துவிட்டு சென்றவர் கண்ணதாசன். வாலி என்னபவர் அந்த ஓசைக்கு நூறுக்கு நூறு சதவீதம் பொருந்துகிற பாடல்களை எழுதியவர். உதாரணத்துக்கு வலையோசை கலகலவென கவிதைகள் படிக்குது குளுகுளு தென்றல் காற்றும் வீசுது… பாடலை கேட்டாலே புரிந்து கொள்ளலாம். அதையும் தாண்டி எல்லா பாட்டையும் எழுதலாம்டான்னு கற்றுக் கொடுத்தவர் அவர்தான். நான் நல்ல கருத்தாழம் கொண்ட பாடல்களை மட்டுமே எழுதுவேன். செக்ஸ் பாடல்களை நினைத்துக்கூட பார்க்கமாட்டேன்னு  நான் உட்கார்ந்தா நான் காலியாகிடுவேன். நான் இதைதான் செய்வேன்னு பிடிவாதமா இருந்தேன்னா நம்மளால வாழ முடியாதுங்க.. எல்லாத்துலயும் நம்ம திறமையை நிரூபிக்கணும். காமம் எழுத மாட்டேன்னு சொல்லுறத நான் விரும்பல, ஏன்னா நம்ம இலக்கியத்தில் இல்லாத காமமா?

‘உயிர் தவ சிறிது காமமே பெரிது’ன்னு குறுந்தொகையில்  ஒரு பாடல் வருகிறது. உயிர் எனக்கு சிறிது காமம் மட்டுமே பெரிது, நான் செத்தாலும் பரவாயில்லை எனக்கு செக்ஸ்தான் வேணும்னு ஒரு பொண்ணு பாடுவதாக அதில் உள்ளது. இதைவிட வேறு காமம் பற்றிய பதிவை இலக்கியங்களிலிருந்து நான் சொல்லணுமா? அதனால் நான் எதையும் தவிர்க்க விரும்பவில்லை” என்று தடாலடியாக ஒரு போடு போட்டார்.
பிரியன் நடத்தி வருகிற தமிழ் திரைப்பாக்கூடம் பற்றி அவரிடம் கேட்டதற்கு, “அது என்னனோட நீண்ட கால கனவுத்திட்டம். நான் நிறைய அவமானங்களையும், துயரங்களையும் சந்தித்து பெரிய போராட்டத்துக்கு மத்தியில் இன்னைக்கு ஜெயித்திருக்கிறேன்.

அந்த நேரத்தில் எனக்கு வழி காட்டவோ எனக்கு கரங் கொடுக்கவோ யாரும் கிடையாது. அந்த விசயத்தை யோசித்து பார்த்தேன். எவ்வளவோ விசயத்துக்கு வேடந்தாங்கள் மாதிரி கட்டமைப்பு இருக்கு. சினிமாவில இசை, எடிட்டிங், கேமரா, நடிப்பு, இயக்கம் என்று எல்லாத்தையும் கற்று கொடுக்கிறார்கள். ஏன் பாடலையும் அப்படி கற்றுக்கொடுக்கலாமேன்னு தோணுச்சு. பாட்டுதான் சினிமாவுக்கு பிரதானம். ஆனால் அதை முறையாக யாரும் கற்றுக்கொடுக்க முன்வரலை. இப்போ சென்னைக்கு வெளியில கிராமங்களிருந்து என்னை மாதிரி சினிமாவுல பாட்டு எழுதணும்ங்கிற கனவுல சென்னைக்கு வர்ரவங்களுக்கு வழிகாட்டனும் என்பதே என்னோட நோக்கமே. இப்போ எந்தப் பணக்காரணும் ஏசி ரூம்ல தூங்குறவனும் பாட்டு எழுத மாட்டான். போராட்ட உணர்வு கொண்டவன், பசியில இருக்கிறவன், புரட்சியாளன் ஆகியோர்தான் பாடல் எழுத வருவான் ஆனால், அவனுக்கு பொருளாதார வசதி இருக்காது. வழிக்காட்ட ஆள் இருக்காது. அதனால அப்படியானவங்களுக்கு வழிக்காட்டி கவிஞர்களை உருவாக்குவதுதான் எனது திரைப்பாக்கூடத்தின் பணியாகும். உலகத்திலேயே பாடல் எழுதுவதற்கான முதல் கட்டமைப்பு இது மட்டுமே. இதுவரைக்கும் இதில நாலு 'பெட்ஜ்' படித்து முடித்திருக்கிறார்கள். நேர்காணல் வைத்து வருடத்திற்கு ஒரு வகுப்புக்கு முப்பது பேரை மட்டுமே தெரிவு செய்கிறோம். மாதத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வகுப்பு நடைபெறும். புத்தகங்கள் அனைத்தும் இலவசமாக வழங்குகிறோம். வகுப்புக்கான நிர்வாக செலவுக்காக மட்டுமே பணம் செலுத்த வேண்டும். கொழும்பிலிருந்து கூட வகுப்புக்கு வருவதற்கு அழைப்பு வருகிறது. இதுவரை நடைபெற்ற வகுப்புகளில் கற்றவர்களில் பதினோறு பேர் தேர்வாகி இப்போது தமிழ் சினிமாவில் பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள்” என்று தனது நேர்காணலை பிரியன் நிறைவு செய்தார்.

No comments:

Post a Comment