Friday, March 31, 2017

நகைச்சுவை நடிகர் டொன் பொஸ்கோ நினைவுகள்.

நேர்காணல்:  மணி  ஸ்ரீகாந்தன்.

நம் நாட்டின் சிங்கள,தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகர்களில் நாகேசுக்கு நிகராக வலம் வந்த நடிகர்தான் டொன் பொஸ்கோ.
இலங்கை நாடக,சினிமா வரலாற்றில் கடந்த இரண்டு தசாப்த காலங்களுக்கு மேலாக நகைச்சுவை நடிகராக உலா வந்த டொன் பொஸ்கோ ‘எங்களில் ஒருவன்’ திரைப்படத்தில் கதாநாயகனாகவும் தனது திறமையை நிரூபித்தவர். இலங்கை தமிழ் கலையுலகில் சிரிப்பு நடிகர் என்று பெயர் பெற்றவர் இன்று உயிரோடு இல்லை என்றாலும், அவரை சந்தித்து உரையாடிய அந்த இனிமையான பழைய நினைவுகளை மீட்டிப்பார்ப்பதும் ஒரு மகிழ்ச்சிதானே…

கொச்சிக்கடை பிக்கரிங் வீதியில் நடிகர் டொன் பொஸ்கோ வசிப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து எமது தேடலை கொச்சிக்கடை பிக்கரிங் வீதியில் மேற்கொண்டோம். அந்த ஒழுங்கையின் இரண்டு புறங்களையும் நெரிசலாக ஆக்கிரமித்திருக்கும் வீடுகளைக் கடந்து உள்ளே சென்றோம். எதிர்ப்பட்ட வீடுகளில் வாழ்ந்தவர்களிடம் டொன் பொஸ்கோ பற்றி விசாரிக்க, யார் அது? என்று திருப்பிக் கேட்டார்கள். எழுபதுகளில் புகழின் உச்சத்திலிருந்த ஒரு நகைச்சுவை நடிகரை பிக்கரிங் தெருவில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை. வேதனைப்பட்டோம். சிறிது தூரம் கடந்து சென்றதும் அந்த ஒழுங்கையின் கடைசி வீட்டில் முன் நின்றிருந்த ஒரு மூதாட்டியிடம் இங்கே டொன் பொஸ்கோன்னு.... என்று நாம் அவரின் பெயரை உச்சரிக்கும் போதே ஆமா இங்கேதான் இருக்கிறாரு... நீங்க வந்த வழியிலேயே திரும்பிப் போனா இங்கிருந்து நாலாவது வீடு...’ என்று தகவல் சொன்னார்.... அப்படியே செய்ய, ஒரு வீட்டின் முன்னால் உள்ள கட்டைச் சுவரில் சாய்ந்து கொண்டு கட்டம் போட்ட சாரம் அணிந்து மேல் சட்டை அணியாமல் உடல் தளர்ந்த ஒல்லியான ஒரு மனிதர் பீடி குடித்துக் கொண்டிருந்தார்.
எங்களில் ஒருவன் படத்தில் நாயகன்
டொன் பொஸ்கோ,ஏகாம்பரம்,மணிமேகலை.
அவரிடம் இங்கே நடிகர் டொன் பொஸ்கோ வீடு எது? என்று நாம் கேட்க. நான் தான் டொன் பொஸ்கோ என்றார் அவர். அப்படி சொன்னதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது! ஒரு காலத்தில் இலங்கை தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகனாக கதாநாயகனாக உலா வந்தவர் இன்று ஆளடையாளம் தெரியாமல் கவனிப்பாரற்ற நிலையில் கலையுலகம் மறந்து போன ஒரு மனிதனாக இங்கே வாழ்கிறாரே...

வீட்டிற்குள் வாங்க என்று எம்மை அழைத்தவர், சுவரை பிடித்துக் கொண்டு முன்னே நடக்க அவரை பின் தொடர்ந்து நாமும் அந்த வீட்டினுள் சென்று அவர் காட்டிய கதிரையில் அமர்ந்தோம். ஞாபக வீதிக்காக தன்னையும் மறக்காமல் வந்து சந்தித்ததற்காக எமக்கு டொன் பொஸ்கோ நன்றி சொல்லிவிட்டு தமது அந்தக்கால அனுபவங்களை இனிக்க இனிக்க பேசினார் டொன் பொஸ்கோ.

‘ஜிந்துப்பிட்டி வைத்தியசாலையில் தான் நான் பிறந்தேன். கொச்சிக்கடைதான் என் பூர்வீக மண். என் குடும்பத்தில் நான் நாலாவது பிள்ளை. அப்பா தோமஸ் பெர்னாண்டோ, அம்மா அந்தோனியம்மாள்.

என் அப்பா மீது எனக்கு ரொம்பவும் பிரியம். அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. ஏனென்றால் அப்பா எனக்கு பூரண சுதந்திரம் தந்திருந்தார். கேட்கும் போதெல்லாம் சினிமா பார்க்க காசு தருவார். அதனால் தான் என்னவோ நான் அதிகம் படிக்கவில்லை. பாடசாலை வகுப்பில் அமர்ந்ததை விட நான் பட மாளிகையில்தான் அதிகம் நேரம் அமர்ந்திருக்கிறேன்.

கொச்சிக்கடையில் இருந்த அப்புத்தோட்ட ஸ்கூலில்தான் அரிவரி படித்தேன். அந்தப் பாடசாலைதான் இன்று சென் அந்தனீஸ் பாடசாலையாக விளங்குகிறது. அங்கே ராசையா மாஸ்டர்தான் எனக்கு ‘அ’ எழுத கற்றுக்கொடுத்தார்.

ஆறாவது வரை அப்புத்தோட்ட ஸ்கூலில் படித்தேன் என்று சொல்லலாம்.

சின்ன வயதில் அதிகமாக நான் படம் பார்த்த தியேட்டர் கெயிட்டியும், செல்லமஹாலும் தான். இன்றும் அந்த இடத்தை கடக்கும் போது கெயிட்டி படமாளிகை கதிரையில் அமர்ந்து எம். ஜி. ஆர். வாள் சண்டை போடும் போது கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் வாயில் வைத்து நான் அடிக்கும் அந்த விசில் சத்தம் இன்றும் என் காதுகளுக்குள் கேட்பது போன்ற ஒரு பிரமை எனக்கு ஏற்படுகிறது. பத்து வயதிலேயே நான் எம். ஜி. ஆரின் தீவிர ரசிகனாக மாறிவிட்டேன். அண்ணனுக்கு தெரியாமல் அவரின் சிவப்பு கலர் கைக்குட்டையை எடுத்து இடதுகை மணிக்கட்டில் எம். ஜி. ஆர். போல் கட்டிக்கொண்டு திரிந்த அந்த காலத்தை நினைத்தால் இன்றும் இனிமையாக இருக்கிறது...’ என்று அந்தக் காலத்தை நினைத்து உள்ளம் பூரிக்கும் பொஸ்கோவிடம் கலையுலக பிரவேசம் பற்றி கேட்டோம்.

‘என் குடும்பத்தில் என் பெரியம்மாவின் மகனான ரொசாரியோ பீரிஸ் ஒரு நாடகக் கலைஞர். லண்டன் கந்தையா நாடகத்தில் காசிம் காக்கா என்ற பாத்திரத்தில் நடித்ததின் மூலம் புகழ்பெற்று விளங்கினார்.

நாடகங்களில் முஸ்லிம் கதாபாத்திரத்தை முதல் தடவையாக செய்தவர் என் அண்ணன் தான். அதன் பிறகுதான் ராமதாஸ் மரிக்கார் என்ற பாத்திரத்தையும் ஜவாஹர் அபுநானா என்ற பாத்திரத்தையும் இலங்கை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தார்கள். அப்படி அவரின் நாடகங்களை பார்க்க சென்றவன் தான் நான். அப்போது நான் ஒரு நாடக கலைஞனாக வருவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. அது ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும். கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்திற்கு பக்கத்தில் எனது நண்பர் கடை வைத்திருந்தார். அவரின் பெயர் கணேஸ். மேலும் எனக்கு ஒரு நாலு நண்பர்கள் இருந்தார்கள். எங்கு சென்றாலும் நாங்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் செல்வோம். அந்தக் குழுவில் நான்தான் ரொம்பவும் குறும்பான ஆள். நகைச்சுவையாக பேசுவேன். ரோட்டில் செல்லும் இளம் பெண்களை கிண்டல் செய்வது கலாய்ப்பது போன்ற விடயங்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அப்போதுதான் ஒரு நாள் எனது நண்பர்களில் ஒருவரான செல்வராஜ் ‘எனக்குத் தெரிந்த ஒருவர் நாடகம் போடுகிறார் அதில் ஒரு நகைச்சுவை வேடம் செய்ய ஆள் தேடுகிறார்கள். நீ நடிக்கிறியா! என்று என்னிடம் கேட்டார். நானோ நான் நாடகம் நடிப்பதா நமக்கு அதெல்லாம் சரி வராதுங்க!’ என்று ஒதுங்கிக் கொண்டேன். ஆனால் அவர் விடவில்லை ‘உனக்குள் ஒரு திறமை ஒளிந்திருக்கு. அதை வெளிப்படுத்தினால் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு’ என்று எனக்கு ஆலோசனை சொல்ல, ‘சரி எல்லோரும் சொல்கிறார்களே முயற்சி செய்து பார்ப்போம்’ என்று நடிக்கச் சம்மதித்தேன்.
அலெக்ஷாண்டர் பெர்னாண்டோ,
ஏ.நெயினார்,டொன் பொஸ்கோ,
எஸ்.செல்வசேகரன்,ஜவாஹர்.
1969 நவம்பர் 14ம் திகதி கலியுக வரதன் என்ற நாடகத்தில் நகைச்சுவையான அப்பா வேடத்தில் நடித்தேன். அந்த நாடகத்தில் எஸ். டி. தங்கராஜா கதாநாயகனாக நடித்தார். நாடகத்தில் நடித்து முடிந்ததும் எல்லோரும் என்னைப் பற்றியே பேசினார்கள். டொன் பொஸ்கோ என்கிற புது ஆளோட நடிப்பு பிரமாதமாக இருக்கு என்று என்னை புகழ்ந்து பேசினார்கள். அதற்கு பிறகு தொடர்ந்து நடிக்க வேண்டும் என்கிற வெறி எனக்குள் வேர்விடத் தொடங்கியது. பிறகு தொடர்ந்து நாடகங்களில் நடித்தேன். உதயசூரியன் நாடக மன்றம், கலைவாணர் நாடக மன்றம், உள்ளிட்ட பல நாடக மன்றங்களின் நாடங்களில் நடித்தேன். சரஸ்வதி மண்டபம், லயனல் வென்ட், வை. என்.பி. என எனது நகைச்சுவை நடிப்பால் கொழும்பின் நாடக அரங்கங்கள் சிரிப்பொலியில் அதிர்ந்தன’ என்று தமது நாடகப் பிரவேசம் பற்றி விபரிக்கும் டொன் பொஸ்கோ, கலையுலகில் தாம் சந்தித்த நண்பர்களில் நினைவில் நிற்பவர்களைப் பற்றி இப்படி சொல்கிறார் :-

‘நம் நாட்டு கலைஞர்களில் ஸ்ரீசங்கர், கலைச்செல்வன், லத்தீப், கே. ஏ. ஜவஹர் உள்ளிட்டோருடன் நடித்திருந்த அந்தக் காலம் பொன்னானது மறக்க முடியாதது அதை இன்று நினைத்தாலும் இனிக்கிறது. அன்று நான் சந்தித்த இனிமையான கலைஞர்களில் வி. கே. டி. பாலனையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர் இளங்கலைஞர் மன்றம் என்ற நாடக அமைப்பை நடத்தி வந்தார்.

அவரின் பணத்திரை நாடகத்தில் தான் பாலனின் அறிமுகம் எனக்குக் கிடைத்து. நாடக தயாரிப்பு நடிப்பு என்று அவரின் கலைப் பயணம் தொடர்ந்தது. இலங்கை நாடக கலைஞர்களுக்கு ஊக்கமும், ஆர்வமும் தந்த ஒரு உன்னதமான மனிதர் வி. கே. டி. இடையில் எமது கலையுலகில் இருந்து விடைபெற்று இந்தியாவிற்கு சென்று விட்டார். சில காலத்தின்பின் இங்கே தனது திருமணத்திற்கு இலங்கை வந்திருந்தார். கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் அவரின் பதிவு திருமணம் நடைபெற்றது. அதற்கு இலங்கை கலைஞர்கள் அனைவரையும் அழைத்திருந்தார். நானும் சென்றிருந்தேன் அந்த நிகழ்வில்தான் வி. கே. டியை கடைசியாக சந்தித்தது. அதற்குப் பிறகு நான் அவரை சந்தித்ததே இல்லை. இப்போது கூட அவரின் மகள் திருமணத்திற்கு என்னை மறக்காமல் நினைவில் வைத்து அழைப்பிதழ் அனுப்பியிருக்கிறார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் அவரின் திருமணத்திற்கு சென்னை சென்று கலந்து கொள்ளும் அளவில் இந்த ஏழைக் கலைஞனுக்கு வசதி இல்லீங்களே...’ என்று எம்மை பார்த்து அவர் கேட்டபோது துக்கம் அவரின் தொண்டையை அடைத்தது.

சினிமா பிரவேசம் பற்றி கேட்டோம்.

‘அப்போ வி. பி. கணேசன், ‘புதிய காற்று’ படம் செய்து மெகா வெற்றிபெற்றிருந்த நேரம். அடுத்ததாக அவர் ‘நான் உங்கள் தோழன்’ படம் தயாரிக்கப் போவதாகவும் எனக்கு அதில் ஒரு நகைச்சுவை வேடம் இருப்பதாகவும் கூறி கலைச்செல்வன் என்னை அழைத்துச் சென்றார். அந்தப் படத்தின் கதை வசனத்தை கலைச் செல்வன் தான் எழுதினார். எஸ். வி. சந்திரன் படத்தை இயக்கினார்.

படத்தில் பண்ணையார் வேடத்தில் ஜவஹர் நடித்தார். அவரின் அடியாட்களாக கந்தா, கடம்பா, கார்த்திகேயா, மாரிமுத்து என்ற நகைச்சுவை பாத்திரங்கள். அதில் மாரிமுத்துவாக நான் நடித்தேன். அதன் படப்பிடிப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது. அப்போது நான் மீன் கடையில் வேலை பார்த்து வந்தேன். முதலாளியிடம் ஒரு கிழமையில் மட்டக்களப்பிற்கு சென்று வந்து விடுவதாக கூறி லீவுபெற்று மட்டக்களப்புக்கு சென்றேன். அங்கே படப்பிடிப்பு ஒன்றரை மாதங்கள் தொடர்ந்து நடந்தது. அதன் பிறகு கொழும்புக்கு வந்தேன். மீன் கடை வேலை பறிபோனது. நான் உங்கள் தோழனில் நடித்ததற்காக எனக்கு 300 ரூபா சம்பளம் தந்தார்கள். நான் உங்கள் தோழன் படம் செய்வதற்கு முன்பாகவே இரண்டு சிங்களப் படத்தில் நடித்திருந்தேன். அதில் ஒன்றுதான் விஜயகுமாரதுங்க நாயகனாக நடித்திருந்த ‘கீத்திகா’ அந்தப் படம் தான் பிறகு தமிழில் அனுராகமாக வெளிவந்தது.

நான் உங்கள் தோழனை தொடர்ந்து எஸ். வி. சந்திரன் இயக்கிய ‘எங்களில் ஒருவன்’ படத்தில் எனக்கு கதாநாயகன் வேடம் கிடைத்தது. கதாநாயகியாக ஒரு சிங்கள நடிகை நடித்தார். அவர் பெயர் காஞ்சனா. இதன் படப்பிடிப்பு யாழ்ப்பாணத்தில் இரண்டு மாதங்கள் நடைபெற்றது. கதாநாயகன் அந்தஸ்த்து கிடைத்ததற்கு பிறகு எனது புகழ் மேலும் அதிகரித்தது. பிறகு வி. பி. கணேசனின் நாடு போற்ற வாழ்க படத்திலும் நகைச்சுவை வேடம் கிடைத்தது. இந்திய படங்களில் ‘இரத்தத்தின் ரத்தமே’ படத்தில் நாகேசுவின் நண்பனாக நடிப்பவருக்கு டப்பிங் செய்தேன். அதன் பிறகு எனக்கு பிரைட்டன் ஹோட்டலின் உரிமையாளர் அரியரட்ணம் தயாரித்த ஜெய்சங்கர் நாயகனாக நடித்த ‘உயர்ந்தவர்கள்’ படத்தில் நடிக்க எனக்க வாய்ப்பு கிடைத்தது. படத்தில் வாகனம் திருத்தும் கடை வைத்திருக்கும் நாகேஷிடம் வேலைபார்க்கும் ஊழியனாக நான் நடித்தேன். அந்தப் படப்பிடிப்பிற்கு நடிகர் சரத்பாபு வந்திருந்தார். இதன் முதற்பட்ட படப்பிடிப்பு இரத்மலானையில் நடைபெற்றது. படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போது ஒரு செய்தி வந்து படப்பிடிப்பு குழுவினரை அதிர்ச்சியடைய செய்தது.

தமிழர்களுக்கு எதிரான கலவரம் பாணந்துறையில் இருந்து தொடங்கிவிட்டதாகவும் இன்னும் சில மணி நேரங்களில் அது கொழும்பையும் ஆக்கிரமிக்கும் என்றும் அந்தத் தகவல் சொன்னது. இதையடுத்து அவசர அவசரமாக இந்திய படப்பிடிப்பு குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு தமிழகம் செல்ல ஆயத்தமானார்கள். நானும் ஒரு வாகனத்தில் ஏறி கொச்சிக்கடைக்கு வந்தேன். அப்போது இப்பகுதியில் பல தமிழ் கடைகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன. அதன் பிறகு உயர்ந்தவர்கள் படப்பிடிப்பு நடைபெறவில்லை. படமும் வெளிவந்ததாகவும் எனக்குத் தெரியவில்லை’ என்று தமது சினிமா வாழ்க்கை பற்றி பெருமூச்சி விடுகிறார் டொன் பொஸ்கோ.

காதல் பற்றி இந்த சிரிப்பு நடிகரின் அனுபவம் எப்படி என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டோம்.

எங்களில் ஒருவன் படப்பிடிப்பில் உதவி இயக்குனர்
அன்டன் கிங்ஸ்லி,டைரக்டர் எஸ்.வி.சந்திரன்,ஏகாம்பரம்,
டொண்பொஸ்கோ,ஒளிப்பதிவாளர் செல்லதுரை,
மணிமேகலை ஆகியோர்.
‘காதல் இல்லாமல் ஒருவன் வாழ முடியுமாங்க? எனக்கும் ஒரு காதல் வந்தது. அப்போ நான் கூட்டாஞ்சோறு சமைத்து விளையாடுற வயது. நான் அப்படி விளையாடும் போது என்னுடன் என் தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் விளையாடுவாள். நானும் அவளும் அப்பாவின் வேட்டியை திரையாக கட்டி கட்டபொம்மன், சத்தியவான் சாவித்திரி போன்ற நாடகங்களை நடித்து காட்டுவோம். அது ஒரு மிகவும் பசுமையான அனுபவம். அப்போது என்னையும் அறியாமல் அவள் மீது காதல் வந்தது. அது என்ன என்பது தெரியாமலே வந்த நெருக்கம். பிறகு எனக்கு வில்லனாக ஒருவன் இடையில் வந்தான். அவன் அந்தப் பெண்ணை விரும்புவதாக என்னிடமே சொன்னான். அப்போது நான் பட்ட மன அவஸ்தையை வார்த்தையால் சொல்ல முடியாது. எனது அந்த அவஸ்தையை அவள் புரிந்துகொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். அதனால் அந்த வில்லனிடம் உன்னை எனக்குப் பிடிக்கவில்லை பொஸ்கோவைதான் எனக்கு பிடித்திருக்கிறது என்று சொல்லி என்னை மீண்டும் காதல் வானில் சிறகடிக்க செய்தாள். அதன் பிறகு ஒருநாள் புயலும் மழையும் ஒருசேர வந்து என் காதலியின் வீட்டை இடித்து தரைமட்டமாக்கிவிட்டது. அதன் பிறகு அவர்கள் வீடு மாறி எங்கேயோ போய்விட்டார்கள். அதோடு என் காதலும் புயலில் சிதைந்து போன வீடு போலவே சிதைந்து போனது. கால ஓட்டத்தில் நான் நடிகனாக உயர்ந்த பிறகும் கூட நான் அவளை சந்திக்கவில்லை. இன்று அவள் எங்கிருக்கிறாளோ தெரியவில்லை...’ என்று சொல்லும் டொன் பொஸ்கோ தனது திருமணம் பற்றி இப்படிச் சொல்கிறார்:

‘என் நண்பரின் தங்கையைத்தான் திருமணம் முடித்தேன். அவளின் பெயர் பத்மினி. எங்கள் திருமணம் பதிவுத் திருமணம். கலைஞர் ஏகாம்பரம்தான் சாட்சி கையெழுத்துப் போட்டார். மிகவும் எளிமையாக திருமணம் என் வீட்டில் நடைபெற்றது.’

வாழ்க்கையில் எதையாவது இழந்திருக்கிறீர்களா? என்று கேட்டதும்

‘எப்படி இருக்கிறேன் என்பதை என்னைப் பார்த்தாலே தெரியவில்லையா?’ என்று சோகமாகக் கேட்டார் பொஸ்கோ.

‘எனக்கு எத்தனையோ தொழில் வாய்ப்புகள் வந்தும் அதை நான் கலைக்காக உதாசீனம் செய்து விட்டேன். நகர சபையில் வேலை தருவதாக என்னை கூப்பிட்டார்கள். நாடறிந்த கலைஞன் எப்படி ரோடு கூட்டுவது என்ற தாழ்வு மனப்பான்மையில் தான் அந்த வேலையைத் துறந்தேன். அதனால் தான் இன்று கஷ்டப்படுகிறேன்’ என்று கலைக்காக வந்த வேலையை துறந்த கதையை சொன்ன டொன் பொஸ்கோ,

ம்... அது ஒரு காலம் என்று இன்றும் ஏங்கும் விடயத்தையும் குறிப்பிட்டார்.

‘கொச்சிக்கடை சென்லூசியஸ் வீதிக்கு எதிரில்தான் நான் வசித்த ஒழுங்கை இருந்தது. அந்த ஒழுங்கைக்கு எதிரில் ஒரு டீ கடை இருந்தது. நானும் எனது நண்பர்களும் வெட்டியாக கதை அடிக்கும் இடம் அதுதான். அந்த கடையின் பெயர் சாச்சா கடை.. அந்தக் கடையின் ஓரத்தில் ஒரு மின் கம்பம் இருந்தது. அதில் சாய்ந்து கொண்டுதான் நான் பட்டம் விடுவேன். பட்டத்தின் நூலை அந்த மின் கம்பத்தில்தான் கட்டி வைத்திருப்பேன். அந்த இடம் இப்போது இல்லை. சாச்சா கடை இருந்த இடத்தில் இன்று பெரிய மாடி வீடுகள் எழுப்பப்பட்டுவிட்டன’ என்று அந்தக் காலத்தை நினைத்து ஏங்கும் டொன் பொஸ்கோவிடம் வாழ்க்கையை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டோம்.

‘இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று ஒரு பழைய பாடல் சொல்வது போலத்தான் என் வாழ்க்கையும். நான் நடிகனாக ஓடித்திருந்த அந்தக் காலங்களில் என்னோடு நண்பர்களும் உறவினர்களும் ஏராளமாக இருந்தார்கள்.

என் நிலை இறங்கியதும் அவர்கள் என்னைவிட்டு விலகிச் சென்றுவிட்டார்கள்.

என் வாழ்க்கை இனிமையானது என்றும் சொல்ல முடியாது. அதே நேரத்தில் கசப்பானது என்றும் சொல்லமுடியாது. ஒரு மனிதனின் வாழ்க்கையை பணம்தான் தீர்மானிக்கிறது. பணம் வந்துவிட்டால் கூடவே மகிழ்ச்சியும் வந்து விடுகிறதே.... என்று தான் கடந்து வந்த அந்தக்கால நாட்களின் நினைவுகளிலிருந்து விடைபெற்றார் டொன் பொஸ்கோ.

(தினகரன்: 07-பெப்ரவரி-2010)

No comments:

Post a Comment