Tuesday, March 7, 2017

நடிகர் எம்.ஏகாம்பரம் மனம் திறக்கிறார்.

நேர்காணல்: மணி  ஸ்ரீகாந்தன்.

இலங்கை நாடக வரலாற்றில் மறக்க முடியாத மனிதர் எம். ஏகாம்பரம். இளம் வயதிலேயே தந்தை, வேடமேற்று நடித்ததின் மூலம் தன் நடிப்புத் திறனை நன்கு வெளிப்படுத்திய கலைஞர் எச். எம். பி. மொஹிதீன், சி. சண்முகம், ஜீவா நாவுக்கரசர், எஸ். பொன்னுத்துரை, அந்தனி ஜீவா உள்ளிட்ட பலரின் இயக்கத்தில் நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கும் இவர் நான் உங்கள் தோழன், எங்களில் ஒருவன், நாடு போற்ற வாழ்க, அவள் ஒரு ஜீவ நதி, எனக்கென்று ஒரு உலகம் உள்ளிட்ட சில இலங்கை திரைப் படங்களிலும் ஜெய்னுலாப்தீன் மாஸ்டரின் தயாரிப்பில் வெளியான முதலாவது தொலைக்காட்சி நாடகமான ஆகாயப் பந்தலிலே நாடகத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் நம் நாட்டு கலைத்துறையில் தனி முத்திரை பதித்திருக்கிறார். தற்போது தனது எழுபத்திமூன்று வயதிலும் செட்டியார் தெருவில் நகைத் தொழில் செய்துவரும் அவரை ஞாபக வீதிக்காக சந்தித்தோம்.

சென்ட் பெனடிக்ஸ் கல்லூரியில் படிக்கு போதே என் நாடக வாழ்க்கை தொடங்கி விட்டது. அப்போது நான் நான்காவது படித்துக் கொண்டிருந்தேன். வானொலி மாமாவாக இருந்த ராமையா மாஸ்டர் தான் எனக்கு ஆசிரியராக இருந்தார். அவர் ஒருமுறை என்னை ஒரு நாடகத்தில் நடிக்கச் சொன்னார். அந்த நாடகத்தின் பெயர் எனக்கு சரியாக ஞாபகமில்லை. அதில் வில் என்ற பெயர் கொண்ட பையனாக நான் நடித்தேன். என் முதல் நாடகப் பிரவேசம் அப்போதுதான் நடந்தது. அதன் பிறகு என் பள்ளி தோழர்களான கே. வி. எஸ். மோகன், இக்னேஸியஸ் மொராயஸ் ஆகியோர் எழுதிய பல மேடை நாடகங்களில் நான் நடித்திருக்கிறேன் என்று தனது நாடக பிரவேசம் பற்றி கூறுகிறார் நாடக நடிகர் ஏகாம்பரம்.
மாந்தருள் மாணிக்கம்
நாடகத்தில்..

“பட்டக்கண்ணு ஆசாரியாரின் பேரனான நான், பிறந்தது கொட்டாஞ்சேனையில் தான். என் அப்பா பெயர் முத்தையா ஆசாரியார். அம்மா முத்தம்மா. பரம்பரையாக நாங்கள் நகைத் தொழில் செய்து வருபவர்கள். பட்டறையில் இருந்து கலைப்பட்டறைக்கு வந்தது எனக்கு மிகுந்த மகிழ்வை தருகிறது. என் ஆரம்ப கல்வியை கொட்டாஞ்சேனை சென்ட் பெனடிக்கில் தொடங்கினேன்.

எனக்கு அகரம் கற்பித்த ஆசிரியர் யார் என்பது இப்போது எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஒருவேளை ஜோன்பிள்ளை மாஸ்டராக இருக்கலாம். எனக்கு கற்பித்த ஆசிரியர்களில் தம்பையா மாஸ்டர், ராசையா மாஸ்டர் போன்றவர்களை என்னால் மறக்க முடியாது” என்று தனது பள்ளிப் பருவத்தை நினைத்து பூரித்து போகும் ஏகாம்பரம், தனது கலைத்துறை அனுபவங்களை மேலும் தொடர்ந்தார்.

“பாடசாலையை விட்டு வெளியே வந்ததும் எனது கலைப் பயணம் தொடர்ந்து பயணித்தது. அதில் சி. சண்முகம் எழுதிய அநேக நாடகங்களில் நான் நடித்திருக்கிறேன். அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் எம்மோடு நடித்தார். நாடக ஆசிரியரான சி. சண்முகத்தின் மனைவிதான் ராஜேஸ்வரி நாங்கள் நாடகம் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் அவர்களின் திருமணம் நடைபெற்றது. அந்த நாள்களில் என்னோடு நடித்த நடிகர்களில் ஒருவர்தான் தென்னிந்திய படங்களில் நகைச்சுவை நடிகராக விளங்கிய எஸ். எஸ். சந்திரன். அவரும் நானும் பல நாடகங்களில் இணைந்து நடித்திருக்கிறோம்.
ஏகாம்பரம்,மாத்தளை கார்த்திகேசு

சந்திரன் நகைச்சுவை வேடங்களில்தான் நடிப்பர். ‘ஸ்ரீமான் கைலாசம்’ என்ற நாடகத்தில் நானும் அவரும் இணைந்து நடித்தது இன்றும் என் நினைவுகளில் பசுமையாக இருக்கிறது. சந்திரன் இலங்கையில் நடித்த நாடகங்களின் புகைப்படங்கள் என்னிடம் மாத்திரமே இருக்கிறது. இந்தப் படங்கள் சந்திரனிடம் கூட இல்லை. நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒருநாள் தான் இந்தியா செல்வதாக சந்திரன் என்னிடம் கூறிவிட்டுச் சென்றார். அதன் பிறகு அவர் தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வெற்றிக்கொடி நாட்டினார். சந்திரனுக்கு இப்போது நம்மை கண்டல் அடையாளம் தெரியுமா? தமிழ் திரையுலகில் புகழின் உச்சியிலிருக்கும் ஒரு நகைச்சுவை நடிகர் நம்மை ஞாபகத்தில் வைத்திருக்க மாட்டார் என்றுதான் நினைத்தேன்.

சுமார் முப்பது வருடங்களுக்குப் பிறகு எஸ். எஸ். சந்திரன் கொழும்பில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இங்கே வந்திருந்தார். சுகததாச ஸ்டேடியத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. எனது நண்பர்கள் எல்லோரும் அந்த விழாவிற்கு சென்றார்கள். எனக்கும் ஆசையாகத்தான் இருந்தது. ஆனாலும் சந்திரனை சந்திக்கப் போய் அவர் என்னை தெரியாது என்று சொல்லி விட்டால் எனக்கு அது அவமானமாகி விடுமே என்று நினைத்து போகாமல் இருந்து விட்டேன். அடுத்த நாள் என் நண்பர்கள் சொன்ன செய்தி எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
ராஜேஸ்வரி சண்முகம், சண்முகம்,
சோமசுந்தரம்,ஏகாம்பரம்.


மேடையில் தோன்றிய எஸ். எஸ். சந்திரன் ‘நானும் இலங்கை நடிகர்களில் ஒருவன் தான். எனக்கு இங்கே நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் என் நண்பர் ஏகாம்பரம் இங்கே இருந்தால் மேடைக்கு வரவும்’ என்று என்னை அவர் அழைத்ததாக சொன்னார்கள் என் நண்பர்கள் அப்படிச் சொன்னதும் எனது கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வடிந்தது. அடடா... நாம் சந்திரனை தப்பா நினைச்சிட்டோமே! என்று வருந்தினேன். அதன் பிறகு இந்தியா சென்று சந்திரனை அவரின் இல்லத்தில் சந்தித்தேன். ஸ்ரீமான் கைலாசம் நாடகத்தில் என்னோடு நடித்த போது பார்த்த அதே சந்திரனை அன்றும் கண்டேன். ஆனந்தப்பட்டேன்’ என்று சந்திரனை பற்றி சொல்லும் ஏகாம்பரம் தன்னால் மறக்க முடியாத நண்பரான மதுரா டிராவல்ஸ் அதிபர் வி. கே. டி. பாலன் பற்றி இப்படிச் சொல்கிறார்.

‘நானும் வி. கே. டி. யும் நாடகங்களில் நடித்திருக்கிறோம். ஒரு நகைச்சுவை நாடகம் லயனல் வெண்ட் மண்டபத்தில் நடந்தது. இருவரும் அதில்தான் ஒன்றாக நடித்தோம். நான் சென்னை செல்லும் போதெல்லாம் என் உறவுக்காரர்களை பார்க்கிறேனோ இல்லையோ வி. கே. டியை பார்க்காமல் வந்ததில்லை.

அந்தளவுக்கு எங்கள் இருவருக்குமிடையில் ஒரு நட்பு இருந்து வருகிறது. நான் பாலனை பார்க்க செல்லும் போதெல்லாம் அவர் ஒரு விடயத்தை என்னிடம் சொல்வார். ‘நீங்கள் என்னை பார்க்கவரும் ஒவ்வொரு முறையும் நான் ஒவ்வொருபடி வளர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். தாங்கள் எனக்கு தரும் ஆலோசனை ஆசீர்வாதத்தின் மகிமையாக இருக்குமோ? என்று சொல்வார் என்று தனது நண்பர்களை பற்றிய இனிக்கும் அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஏகாம்பரம், மறக்க முடியாதவர்களையும் மறக்க முடியாத சம்பவத்தை இப்படிச் விபரிக்கிறார்.

எழுத்தாளர் கு. ராமச்சந்திரன் நல்லதொரு படைப்பாளி, நல்ல நடிகர். ஒருமுறை சி. சண்முகத்தின் இயக்கத்தில் மாந்தருள் மாணிக்கம் என்ற நாடகத்தில் இருவரும் நடிப்பதற்காக ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. ஒத்திகையின் போது கு. ராமச்சந்திரனுக்கு நடிப்பு சரியாக வரவில்லை என்று சி. சண்முகம் அவரை ‘ஏகாம்பரம் எப்படி தத்ரூபமாக நடிக்கிறார்! உனக்கு அப்படி நடிக்க வரவில்லையே’ என்று என்னை சுட்டிக்காட்டி ராமச்சந்திரனை திட்டினார். அதன் பிறகு நாடகம் மேடையில் அரங்கேறியது.

அதில் ஒரு காட்சியில் கு. ராமச்சந்திரன் கையில் ஒரு தடி வைத்திருப்பார். நான் அவரை எதிர்ப்பது போல ஒரு காட்சி. அப்போது என்னையா எதிர்த்து பேசுகிறாய்’ என்று சொல்லி  கு. ராமசந்திரன் என்னை அவரின் கையில் உள்ள தடியால் அடிக்க வேண்டும். ஆனால் கு. ராமச்சந்திரன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அந்த தடியால் என்னை விளாசித் தள்ளிவிட்டார். அப்படி அவர் என்னை அடித்ததில் அந்த தடியும் முறிந்து விட்டது.

மக்கள் பயங்கரமாக கரகோஷம் எழுப்பினார்கள். இதனால் ராமச்சந்திரன் என்னை அடித்தது எனக்கு பெரிதாக தெரியவில்லை. பிறகு நாடகம் முடிந்து நான் வீட்டிற்கு வந்ததும். உறவினர் ஒருவர் என்னைப் பார்த்து, ‘நீ ராமச்சந்திரனிடம் அடிவாங்கும் காட்சி மிகவும் பிரமாதமாக இருந்தது.

அந்த தடியை ஏற்கனவே உடைத்து ஒட்டி வைத்திருந்தீர்களா?’ என்று கேட்டார்.

அய்யய்யோ அப்படி ஒன்றுமில்லை. அவன் அடித்ததில் தான் தடி முறிந்தது என்று கூறிய நான் என் சட்டையை கழற்றி பார்த்த போது அதிர்ந்தேன். என் உடம்பின் பல இடங்களில் அடிவிழுந்த அடையாளங்கள் அப்படியே இருந்தன. கு. ராமச்சந்திரன் என்னை ஏன் அப்படி அடித்தாரோ தெரியவில்லை. ஒருவேளை சி. சண்முகம் கூறியதற்கு அமைய அந்த காட்சியில் தத்ரூபமாக நடிக்க முற்பட்டிருக்கலாம். இன்று வரை எனக்கு விழுந்த அடிக்கு விடை தெரியவில்லை. ஆனாலும் கு. ராமச்சந்திரனை என்னால் மறக்க முடியவில்லை. அதே போல் கலையுலகைச் சேர்ந்த கே. ஏ. ஜவாஹர், ராஜபாண்டியன், தனரத்னம், என். சோமசுந்தரம், ரொசைரோ பீரிஸ் போன்ற பல கலைஞர்களை நான் இழந்து விட்டேன் என்று கூறும் போது ஏகாம்பரத்தின்  குரல் துக்கத்தால் கனக்கிறது.

காதல் பற்றி ஏகாம்பரத்திடம் கேட்டோம்.

‘காதல் வலையில் சிக்கக் கூடாது என்பதற்காகத் தானே நாடகங்களில் அப்பா வேடம் போட்டேன்’ நாடகங்களில் நடிகனாக நடிப்பவர்களில் பெரும்பாலானோர் தன்னுடன் நடிக்கும் நாயகிகளையே மணந்து கொண்டார்கள். அப்படி ஏதும் தனக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருந்தேன். சிறுவயதிலேயே அப்பா இறந்துவிட எனது மாமாதான் எனக்கு பாதுகாவலராக இருந்தார். அவரின் கௌரவத்திற்கு எந்த கெடுத்தலும் வந்துவிடக் கூடாதே என்பதில் நான் ரொம்பவும் கவனமாக இருந்தேன் பதினெட்டாவது வயதிலேயே அப்பா வேடம்தான் போட்டேன்.
முன் வரிசையில் மூன்றாவதாக
எஸ்.எஸ்.சந்திரன் மற்றும்
நாடக நடிகர்கள்.
பிறகு வீட்டில் பார்த்த பெண்ணைதான் மணந்து கொண்டேன். எனது கல்யாணம் பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய ஆலயத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு நண்பர் தெ. ஈஸ்வரன், பி. ஏ. சுகததாச உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். பொரளை டொனால்ட் ஸ்டூடியோவில் திருமண படம் எடுத்தோம் என்ற ஏகாம்பரத்தின் ஹனிமூன் பற்றி கேட்டோம்.

அந்தக் காலத்தில் எங்கேங்க ஹனிமூன்? சினிமா தியேட்டர்ல போய் படம் பார்த்தோம். முருகன் தியேட்டரில் வெளியிட்டிருந்த ‘அறிவாளி’ படத்தை நானும் எனது மனைவியும் சென்று பார்த்தோம்’ என்று பழைய ஞாபகங்களில் மூழ்கியவரிடம்.

‘ம்... அது ஒரு காலம்’ என்று ஏங்கச் செய்யும் அனுபவம் ஏதேனும் உண்டா?’ என்று கேட்டோம்.

‘எனது நண்பரான ஒளிப்பதிவாளர் வீ. வாமதேவன் அப்போது என்னோடு தான் இருந்தார்.

அந்த நேரத்தில் அவர் ஒளிப்பதிவாளராக இருக்கவில்லை... ஒருநாள் மகா சிவராத்திரி. இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். நானும், வாமதேவனும் விடிய விடிய விழித்திருப்பது என்று முடிவு செய்து வீட்டிலேயே பேசிக் கொண்டிருந்தோம்.

அதிகாலை இரண்டு மணியிருக்கும். வாமதேவன் என்னிடம், யோகா பயிற்சி செய்வோமா என்று கேட்டார். நானும் சரி என்றேன். உடனே ஒரு பாயை விரித்து அதில் அமர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டோம்.

வாமதேவன் செய்து காட்டும் பயிற்சிகளை நான் செய்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் பாயில் படுத்து காலை மடித்து அதன் பெருவிரலை கையால் பிடித்துக் கொள்ளும்படி வாமதேவன் சொன்னார். அவர் அப்படி சொன்னதும் நான் பாயில் படுத்தேன். அந்த நொடியே நான் தூங்கி விட்டேன். சிறிது நேரத்தின் பின் வாமதேவன் என்னை தட்டி எழுப்பினார்.

என்ன தூங்கிவிட்டீங்களா?’ என்றார். அதன் பிறகு எங்கே விழிதிருப்பது? அந்த சம்பவத்தை இன்று நினைத்தாலும் சிரிப்பாகவும், இருக்கிறது. இனி அப்படியொரு நாள் திரும்ப வருமா என்று நினைக்கும் போது ஏக்கமாகவும் இருக்கிறது. அதேபோல தட்டாரத்தெரு என்று முன்பு அழைக்கப்பட்ட பண்டாரநாயக்க மாவத்தையில் எனது கலையுலக நண்பரான ஆர். விக்டர் ஒரு அறையில் தங்கியிருந்தார். அவரைக் காண நானும் எனது நண்பர்களும் செல்வோம். அங்கு சென்று அவருடன் நீண்ட நேரம் அரட்டை அடித்துவிட்டு வருவோம். அந்த இடம் இன்று அங்கு இல்லை அந்த இடத்தை கடந்து போகும் போதெல்லாம் எதையோ தொலைத்து விட்டமாதிரி உணர்வு ஏற்படும்’ என்று அந்தக் காலத்தை நினைத்து ஏங்கும் ஏகாம்பரத்திடம் வாழ்க்கையைப் பற்றிய தங்களின் புரிதல் என்ன? என்றோம்.

ஒரு சிலரை பார்த்தவுடனேயே அவர் எப்படிப்பட்டவர் என்பதை அளந்து விடலாம் ஆனால் ஒரு சிலரை புரிந்து கொள்ளவே முடியாது. எனது நண்பர்களில் சிலரை நாற்பது வருடங்களுக்கு பிறகுதான் நான் புரிந்து கொண்டேன். அப்போது எனக்கு வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இவர்கள் இப்படியா என்று நினைக்கும் போது வருத்தமாகத்தானே இருக்கும். இவர்களை அடையாளம் காட்டிக் கொள்ள எத்தனை ஆண்டுகள் பிடித்தனவே என்று என்னையே நான் நொந்து கொள்வேன் என்று ஒரு நடைமுறை வாழ்க்கை உண்மையைச் சொன்னார் ஏகாம்பரம்.

‘என் வாழ்க்கையில் எனக்கு இரண்டு அழகான பிள்ளைகள். என் வாழ்க்கையின் மிகப் பெரிய செல்வமாக நான் அவர்களை கருதுகிறேன். எனக்கு எல்லாமே அவர்கள்தான்’ என்று ஏகாம்பரம் கூறும் போது நா தழுதழுக்க கண்ணீர் துளிகள் கன்னத்தில் பட்டுத் தெறித்தன.

(தினகரன் வாரமஞ்சரி: january-31-2010)

No comments:

Post a Comment