Thursday, February 9, 2017

தமிழன் டி.வி. உரிமையாளர் கலைக்கோட்டுதயம் பேசுகிறார்.


நேர்காணல்: மணி  ஸ்ரீகாந்தன்.

(தொடர்ச்சி)
 
பெரிய தொலைக்காட்சிகள் போடாத நிகழ்ச்சிகளையும், அவங்க எதற்கெல்லாம் வாய்ப்பு தரமாட்டார்களோ அதற்கான வாய்ப்பையும் நாம் வழங்கி காசு பார்க்கிறோம். நமக்கான கொள்கைகளை பரப்புவதற்கான ஒரு தொலைக்காட்சியை நடத்தனும்ங்கிற  எண்ணத்தோடு நடாத்துகிறோம். இப்போ 14 வருடங்களாக தடங்களின்றி தமிழன் தொலைக்காட்சி பயணிக்கிறது" என்றார்.
காசி உதயம்

"இப்போ பார்த்தீங்கன்னா தந்தி தொலைக்காட்சிக்கு  ஒரு மாதத்துக்கு 65லட்சம் நஷ்டம். நியூஸ் சேனலுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு கோடி ரூபா நஷ்டம். இப்படி பெரிய தொலைக்காட்சிகளே தடுமாறி கொண்டுதான் இருக்கின்றன. வெளி விளம்பரங்களை தவிர நானே உடற்பயிற்ச்சி கருவிகளை தயாரித்து அதன் விளம்பரங்களை எனது தொலைக்காட்சியில் ஒளிபரப்பி அதன் மூலமும் வருமானத்தை பெற்றுக் கொள்கிறேன். பத்து வருடத்துக்கு முன்னாடியே எல்லா செலவுகளும் போக மாதம் 4லட்சம் ரூபா வருமானம் வந்தது.இப்படி நிறைய தொழில்களை செய்து அதன் விளம்பரங்களை டிவியில் போட்டு பணம் சம்பாதித்து இப்போ 14 வருடங்களாக இந்த டிவியை நடத்துகிறேன், தொடர்ந்தும் வெற்றிகரமாக பயணிப்பேன்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கலைக்கோட்டுதயம்.

கலைக்கோட்டுதயத்தின் தந்தை காசிஉதயம் அந்தக்காலத்திலேயே தமது சொந்த ஊரான நாகர்கோவிலை விட்டு பிழைப்புக்காக மதுரைக்கு வந்து அங்கே கண்ணய்யா அச்சகத்தில் வேலை பார்த்திருக்கிறார்.

"அப்போதான் சிலோனுக்கு போனால் நல்லா சம்பாதிக்கலாம்னு சொல்லி அப்பாவை அவருடைய நண்பர்கள் அழைச்சிட்டு போனாங்களாம். கொழும்பில் அப்பா எதிர்பார்த்து வந்த வேலை கிடைக்காததால் அவர் வேறு வேலை தேட ஆரம்பித்திருக்கிறார். அப்போதான் வீரகேசரியில் பியூன் வேலை இருப்பதாக தகவல் வர எட்டாவது வரை படித்த (அந்தக் காலத்துல பெரிய படிப்பு) அப்பா 'கடல் கடந்து வந்துவிட்டோம் கிடைக்கிற வேலையை செய்வோம்'னு களத்தில இறங்கிட்டாராம். 1934ம் ஆண்டு வீரகேசரி அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்த முதல் நாள்; பத்திரிகையின் ஆசிரியர் அப்பாவை அழைத்து மதிய உணவை அவரின் வீட்டிற்கு சென்று எடுத்து வரும்படி பணித்திருக்கிறார். அப்பாவும் அந்தக்காலத்தில் கொழும்பில் ஓடிய டிராம் வண்டியில் சென்று உணவை எடுத்து வந்து ஆசிரியரிடம் கொடுத்தாராம்.
சாப்பிட்டு முடித்த ஆசிரியர் அப்பாவிடம் தட்டை கொடுத்து 'நான் ஒரு பிராமணன். அதனால் கரண்டியால்தான் சாப்பிட்டேன். அதனால் மிச்சம் இருக்கும் சாப்பாட்டை நீ சாப்பிட்டுவிட்டு தட்டை நன்றாக கழுவி வீட்டில் கொடுத்து விடு' என்று சொன்னாராம். அப்பா மீதி சாப்பாட்டை சாப்பிடாமல் அதை வெளியே கொட்டிவிட்டு தட்டை கழுவ ஆரம்பித்தாராம். அப்போது வெளியே கொட்டிய சாப்பாட்டை சாப்பிட காக்கைகள் கூடி கத்தியதால் அலுவலகத்தினுள் இருந்த ஆசிரியர் வெளியே வந்து எட்டிப்பார்த்திருக்கிறார்.

ஆசிரியருக்கு விசயம் புரிய 'ஏன் மீதி சாப்பாட்டை நீ சாப்பிடவில்லை' என்று அவர் கேட்டதும் அப்பா 'நான் எச்சில் சோறு சாப்பிட மாட்டேன்' என்று சொன்னாராம். அப்பாவின் பதிலால் ஆடிப்போன ஆசிரியர், 'நீ படித்திருக்கிறாயா?' என்று கேட்க பாக்கட்டில் பத்திரமாக மடித்து வைத்திருந்த கல்விச் சான்றிதழை எடுத்து காட்டினாராம். அடுத்த நாளே அப்பாவுக்கு வீரகேசரியில் டெலிப்போன் ஒபரேட்டர் வேலை கிடைத்திருக்கிறது.
வீரகேசரியில் போர்மனாக இருந்தவருக்கு குழந்தை இல்லையாம் அதனால் அப்பாவை தன் குழந்தையாகவே பார்த்துக் கொண்டாராம்.

அப்பாவும் போர்மன் வேலைக்கு உதவியாக அவருக்கு உதவி செய்வாராம்.இப்படி படிப்படியாக உயர்ந்த அப்பா வீரகேசரியில் உதவி ஆசிரியர் ஆனாராம். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிலோன் டைம்ஸ் பத்திரிகையிலும் வேலை செய்திருக்கிறார். அவர் சிலோன் டைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றிய சமயத்தில் அந்தோணிமுத்து நாடாரோடு இணைந்து நாடார் யுவ ஐக்கிய சங்கத்தை அப்பா உருவாக்கியிருந்தார்.
1930களில் கொட்டாஞ்சேனை தபாலகத்தில்
இருந்து திருவிதாங்கூர் கோட்டாருக்கு
7 ரூபா 50 சதத்தை காசி உதயம்
அனுப்பிவைத்த மணி ஓடர்.

அப்போது கொழும்பில் இயங்கி வந்த கேஸ் கம்பனியில் வேலை பார்த்த இரண்டு ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதால், அவர்கள் அந்தோணிமுத்துவிடம் வந்து நிலமையை கூறியிருக்கிறார்கள். அதற்கு அந்தோணிமுத்து 'இது தொழிற்சங்கம் அல்ல, சாதி சங்கம். சாதிரீதியாக ஏதாவது பிரச்சினை என்றால் வாருங்கள். இதெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது' என்று மறுக்கவே, பக்கத்திலிருந்த அப்பா 'நாம அவங்ககிட்டே சந்தா பணம் வாங்குறோம் அதனால அவங்களுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் நாமதான் உதவி செய்யனும்'னு களத்தில இறங்கி கேஸ் கம்பனி ஊழியர்களை ஒன்று திரட்டி வேலை நிறுத்தம் செய்ய, அதிர்ந்து போன கேஸ் கம்பனி நிர்வாகம் மறுபேச்சின்றி ஊழியர்களுக்கு மறுபடியும் வேலை வழங்கினார்களாம்.

அப்பாவின் களப்போராட்ட செய்திகள் காட்டுத்தீயாக கொழும்பில் பற்றிக்கொள்ள தொழிற்சங்கத்தை அடிப்படையாக கொண்டு செயற்படும் லங்கா சமசமாஜ கட்சி அப்பாவை அழைத்து அவரை கட்சியில் இணைத்துக் கொண்டார்களாம். இப்படித் திடீரென அரசியல்வாதியாகி விடுகிறார். அதோடு கேஸ்கம்பனி ஊழியர்களின் நன்மதிப்பை பெற்று அந்த தொழிற்சங்கத்தை கைப்பற்றினாராம். லங்கா சமசமாஜி கட்சி வெளியிட்ட சமதர்மம் பத்திரிகையில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு தமிழகம் திரும்பிய அப்பா இங்கேயும் தொழிற்சங்கங்களை தொடங்கி களப்போராட்டங்களை ஆரம்பித்தாராம்". காசிஉதயத்தின் நினைவுகளை மீட்டிய கலைக்கோட்டு உதயத்திடம் "கடவுள் மறுப்பாளரான நீங்கள் பெரியாரிஸ்ட்டா?" என்றோம்.
"நாங்கள் பெரியாரின் கடவுள் மறுப்பையும், பெண்ணிய  விடுதலைக்கான கொள்கையையும் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் அவர் தமிழ் மீது வைத்திருந்த கொள்கையை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். ஏனென்றால் அவர் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும் தமிழனுக்கு ஒண்ணும் தெரியாதுன்னும் சொல்லும் கருத்துடன் முரண்படுகிறோம். பெரியார் எங்களுக்கு தலைவர் கிடையாது. அவர் வெறும் வழிகாட்டி அவ்வளவுதான். அதோடு எங்களின் கன்யாகுமரி மாட்டத்தில் அய்யா வைகுந்தர் என்று ஒரு புரட்சியாளர் இருந்தாரு, அவர் 'உனக்கு நீதான் கடவுள், கண்ணாடிக்கு முன்னால நின்னு ஒண்ண பார்த்து நீ கும்பிடு'னு சொல்லுவாரு நாம அவர் வழியில கடவுள் இல்லைன்னு வந்த ஆளு. பெரியாரை நம்பி கடவுள் இல்லைன்னு வந்த ஆளு இல்லீங்க".

No comments:

Post a Comment