Monday, February 6, 2017

இருள் உலகக் கதைகள்

முத்து பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்: மணி ஸ்ரீகாந்தன்

நேரம் அதிகாலை 5மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. ராமசாமி கவுண்டர் ஒரு செம்பை எடுத்துக் கொண்டு தமது மாட்டுத் தொழுவத்திற்குள் நுழைந்தார்.

தண்ணீர் தொட்டியில் தண்ணீரை அள்ளியவர் பிறகு மாட்டின் மடியை கழுவிவிட்டு பால் கறக்க துவங்கினார்.

ராமசாமி  எவ்வளவோ முயற்சி செய்தும் பசுவின் மடியிலிருந்து ஒரு சொட்டுக்கூட பால் வரவில்லை. கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் கன்றுக்கும்  பசுவுக்கும் இடையே ரொம்ப தூரம் இருக்கும் போது எப்படி பசுவின் மடியிலிருந்த பாலை குடித்திருக்க முடியும்? ராமசாமி கவுண்டர் ரொம்பவே குழம்பிப் போய்விட்டார்.

ஆனாலும் அவரால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆறு மணிக்கெல்லாம் மிதி சைக்கிளில் பால் சேகரிக்க வரும் வீரையா,ராமசாமி வீட்டுக்கு முன்னால் நின்று பெல் அடித்ததும் வீட்டுக்கு வெளியே வந்த ராமசாமி கவுண்டர் நடந்த விசயத்தை சொல்லி நாளைக்கு கறந்து தாரேன்னு சொல்ல.. ‘ஒரு வேளை மோகினி வந்து கரந்துட்டு போயிருச்சோ' என்று  வீரையா போட்டு வைத்தார். "சும்மா போப்பா, தமாசு பண்ணாம.." என்று ராமசாமி பதிலுக்கு சொன்னார். ஆனாலும் ராமசாமிக்கு வீரையா அப்படி சொன்னது மனசுக்குள் பகீரென்றது என்னவோ உண்மை.
முத்து பூசாரி
இறக்குவனையில் உள்ள அந்த பால் சேகரிக்கும் நிலையத்துக்கு பாலை கொடுத்த வீரையா சைக்கிலை வீடு நோக்கி மிதித்தான்.

வழியில் வீரையாவின் சைக்கிளை வழிமறித்த அவன் நண்பன் குமாரு, "டேய் வீரையா, உனக்கு விசயம் தெரியுமா? நம்ம ராமசாமி வீட்டு பசு மாட்டுல உள்ள பாலை மோகினி கறந்துட்டு போயிருச்சாம். ராமசாமி சோலி உருட்டும் கிழவிகிட்டே குறி பார்த்து கண்டு புடிச்சுட்டாராம"என்று அவன் சொன்னதைக் கேட்டு, "அட நான் சும்மா தமாசுக்கு சொன்னது இப்போ நிஜமாகி காட்டுத் தீ போல பத்திக்கிச்சே!" என்று மனதுக்குள் நினைத்தப்படி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அடுத்த நாள் காலையில் வழமைப்போலவே  பால் சேகரிக்க சைக்கிளில் வீரையா தமது பயணத்தை தொடங்கினான்.

வீடுகளில் கரந்து வைத்திருக்கும் பாலை எடுத்து சைக்கிளின் பின்னால் கட்டியிருக்கும் அலுமினிய டப்பாவில் ஊற்றினான். அன்று வழமைக்கு மாறாகவே அதிகமாக வீரையாவுக்கு பால் சேர்ந்தது.

பால் அதிகமாக டப்பாவில் சேர்ந்ததால் சைக்கிளை ரொம்பவும் நிதானமாகவே மிதித்தான். இறப்பர் மரங்கள் சூழ்ந்திருந்த அந்த தோட்டப்பகுதியில் இருள் கவ்விய ஒரு மயான அமைதி நிலவியது.

வழியில் வீழ்ந்து கிடந்த ஒரு இறப்பர் மரக்கிளை பாதையை அடைத்திருந்ததால் அதனை அகற்றுவதற்காக சைக்கிலை பாதையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு மரக்கிளையை தூக்கி மறுபக்கம் போடும் முயற்சியில் வீரையா ஈடுபட்டான்.

அப்போது ஆளை மயக்கும் ஒரு வாசனை மூக்கை துளைக்கவே முகத்தை திருப்பி சற்று அங்குமிங்கும் நோட்டம் விட்டான்.  அப்போது அவன் கண்ட காட்சி அவனை நிலைகுலைய வைத்தது.

பால் டப்பாவினுல் இருந்த பாலை ஒரு பெண் தனது நீண்ட நாக்கால் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தாள்.

தரையை தொட்டு விடும் அளவுக்கு நீண்ட தலைமயிர் வளர்த்திருந்த அவள் முகம் தெளிவில்லாமல் மங்களாகத் தெரிந்தது. அந்த காட்சியை பார்த்த வீரையா அடுத்த நிமிடமே மயங்கி பொத்தென்று தரையில் விழுந்தான்.

அப்படி விழுந்து கிடந்தவனை யாரோ பார்த்து விட்டு அலறியடித்துக் கொண்டு ஊருக்குள் போய் விசயத்தை சொல்ல ஊரே திரண்டு வந்து,அவனை குண்டுக் கட்டாக தூக்கி சென்று குறி பார்க்கும் கிழவியின் முன்னால் போட்டது. "மோகினிப் பேய் இவனுக்கு விளையாட்டு காட்டிட்டுப் போயிருக்கு. உசுரு! தப்புனதே பெரிய புண்ணியம்" என்று சொன்ன கிழவி மந்திரித்த தண்ணீரை வீரையாவின் தலையில் தெளித்தாள்.

மயக்கம் தெளிந்த வீரையா தமக்கு நடந்த விடயத்தை மெய்சிலிர்த்து தமது நண்பர்களிடம் சொன்னான்.அதன் பிறகு வீடு சென்ற அவன் உடம்பு அடித்து போட்டமாதிரி இருக்கவே அப்படியே படுத்தான். அன்றிரவு வீரையா போட்ட பேய்க் கூச்சல் கேட்டு அந்த தோட்டக் குடியிருப்பு ஆடிதான் போனது. வீரையாவை மோகினி பிடித்து ஆட்டுவதாக செய்தி பரவியதை அடுத்து அவனை குணமாக்கி விட அவனின் நண்பர்கள் துடித்தார்கள்.

பேய் ஓட்டுவதில் பிரபல பூசாரியாக விளங்கும் முத்து பூசாரியை அணுகி விடயத்தை சொல்லி பரிகார பூஜைக்கான  ஒரு நாளையும் குறித்தார்கள்.

குறிப்பிட்ட அந்த அமாவாசை நாளில் முத்து வீரையாவின் வீட்டுக்கு தமது சகாக்களோடு நுழைந்தார்.அவர் நுழைந்த அடுத்த நிமிசமே வீரையா அழத் தொடங்கினான்.

வீரையாவின் உடம்பில் அண்டியிருக்கும் தீய சக்திக்கு உயிர் பயம் வந்து விட்டது அதனால்தான் அழுகிறது என்பதை தமது ஞானக் கண்ணால் முத்து கண்டுபிடித்து விட்டார்.

தமக்கு ஒரு அடிமை சிக்கி விட்டது என்ற மகிழ்ச்சி முத்துவின் முகத்தில் பூரிப்பாக பளீச்சிட்டது. அடுத்த நிமிடமே உடுக்கை கையிலெடுத்து தாளத்தோடு பாடியவர், பரிகார மன்றில் அமர்ந்து தமது சித்து வேலையை காட்டத் தொடங்கினார்.

வீரையாவின் உடம்பில் இருந்த அந்தத் தீய சக்தியை வெளியே கொண்டுவர மந்திர உச்சாடனங்களை உச்சரிக்கத் தொடங்கினார். அப்போது வீரையாவின் உடம்பிலிருந்த தீய சக்தி பலமாக பேசத் தொடங்கியது.

"டேய் பூசாரி! உனக்கு நான் என்னடா துரோகம் செய்தேன்? ஏன்டா இப்படி என் பிழைப்புல மண்ண போடுற?" என்று அந்த தீய சக்தி கேட்க,  “நீ வந்த நோக்கத்தை சொல்லிட்டு மரியாதையா ஓடிட்டா உனக்கு நல்லது இல்லன்னா உன்ன எரிச்சு சாம்பராக்கி விடுவேன்" என்று முத்து மோகினியை எச்சரித்தார்.

முத்துவின் மிரட்டலுக்கு ஆடிப்போன அந்த தீய சக்தி "நான் தாகத்துக்குத் தண்ணீர் குடிக்கத்தான் வீரையாவோட பால் டப்பாவை திறந்தேன். அப்போது அவன் என்னை பாத்துட்டான். ஆளு பார்க்க நல்லா வாட்டசாட்டம்மா இருந்தான். அதனால் ஒரு ஈர்ப்பு வந்து அவனோட உடம்புல புகுந்துட்டேன், இது தப்பா?" என்று கேட்ட அடுத்த நிமிடமே பொறுமை இழந்த முத்து, "தப்புதான்டீ!"ன்னு விபூதியை அள்ளி அதன் முகத்தில் அடித்தார்.வந்திருப்பது மோகினிதான் என்பதை உணர்ந்து கொண்ட பூசாரி  ஒரு பெரிய கிண்ணத்தில் பாலை ஊற்றி அதை மந்திரித்த பின் அந்த மோகினியின் எதிரே வைத்தார்.
பேராசை கொண்ட மோகினி கண் இமைக்கும் நேரத்தில் அந்த பாலை நாக்கை சுழற்றி கபளீகரம் செய்த அடுத்த நொடியே சுருண்டு விழுந்தது.

தமது திட்டம் பலித்து விட்ட மகிழ்ச்சியில் வீரையாவின் உச்சி மயிரை கொத்தாகப் பிடித்து அறுத்த பூசாரி அதனை ஒரு போத்தலில் போட்டு அடைத்தார்.

"மோகினியின் கதையை இப்போதைக்கு முடித்து விட்டேன். இதற்கு பிறகு இந்த வாலிபனை மோகினி பிடிக்காமல் இருக்கனும்னா உடனே இவனுக்கு ஒரு கல்யாணத்தை கட்டி வையுங்க!" என்ற எச்சரிக்கையை கட்டளையாகச் சொல்லிய முத்து, மோகினி அடைப்பட்டு கிடக்கும் போத்தலை எடுத்துக் கொண்டு சுடுகாடு நோக்கி நடந்தார்.

No comments:

Post a Comment