Sunday, February 19, 2017

தினகரன் தேனக வீதி உலா!

தினகரன், தினகரன் வாரமஞ்சரி,வண்ண வானவில் பத்திரிகைகளின் விரிவாக்கம் தொடர்பான வீதி உலா! ‘மீன் பாடும் தேன் நாடு’ என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 15,16ம் திகதிகளில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் கடந்த 15ம் திகதி மாலை 5மணியளவில் சிறப்பு அதிதிகளின் மங்கள விளக்கேற்றுதலுடன்,கலை நிகழ்ச்சி,சிறப்புரை,அதிதிகள் கௌரவிப்பு,விருது வழங்கல் என்று கோலாகலமாக தொடங்கிய நிகழ்வு,மறுநாள் காலை 7மணியிலிருந்து வீதி உலாவாக கலைக்கட்டியது.மட்டக்களப்பு பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய விரிவாக்கல் பயணம் ஏறாவூர்,வாழைச்சேனை,செங்கலடி,காத்தான்குடி,ஆரையம்பதி, துறைநீலாவணை வரை தொடர்ந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறப்புகளை தாங்கி 76பக்கங்களோடு (16-02-2017)அன்று வெளியான தினகரன் நாளிதல் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் இலவசமாக வழங்கப்பட்டது.Thursday, February 9, 2017

தமிழன் டி.வி. உரிமையாளர் கலைக்கோட்டுதயம் பேசுகிறார்.


நேர்காணல்: மணி  ஸ்ரீகாந்தன்.

(தொடர்ச்சி)
 
பெரிய தொலைக்காட்சிகள் போடாத நிகழ்ச்சிகளையும், அவங்க எதற்கெல்லாம் வாய்ப்பு தரமாட்டார்களோ அதற்கான வாய்ப்பையும் நாம் வழங்கி காசு பார்க்கிறோம். நமக்கான கொள்கைகளை பரப்புவதற்கான ஒரு தொலைக்காட்சியை நடத்தனும்ங்கிற  எண்ணத்தோடு நடாத்துகிறோம். இப்போ 14 வருடங்களாக தடங்களின்றி தமிழன் தொலைக்காட்சி பயணிக்கிறது" என்றார்.
காசி உதயம்

"இப்போ பார்த்தீங்கன்னா தந்தி தொலைக்காட்சிக்கு  ஒரு மாதத்துக்கு 65லட்சம் நஷ்டம். நியூஸ் சேனலுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு கோடி ரூபா நஷ்டம். இப்படி பெரிய தொலைக்காட்சிகளே தடுமாறி கொண்டுதான் இருக்கின்றன. வெளி விளம்பரங்களை தவிர நானே உடற்பயிற்ச்சி கருவிகளை தயாரித்து அதன் விளம்பரங்களை எனது தொலைக்காட்சியில் ஒளிபரப்பி அதன் மூலமும் வருமானத்தை பெற்றுக் கொள்கிறேன். பத்து வருடத்துக்கு முன்னாடியே எல்லா செலவுகளும் போக மாதம் 4லட்சம் ரூபா வருமானம் வந்தது.இப்படி நிறைய தொழில்களை செய்து அதன் விளம்பரங்களை டிவியில் போட்டு பணம் சம்பாதித்து இப்போ 14 வருடங்களாக இந்த டிவியை நடத்துகிறேன், தொடர்ந்தும் வெற்றிகரமாக பயணிப்பேன்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கலைக்கோட்டுதயம்.

கலைக்கோட்டுதயத்தின் தந்தை காசிஉதயம் அந்தக்காலத்திலேயே தமது சொந்த ஊரான நாகர்கோவிலை விட்டு பிழைப்புக்காக மதுரைக்கு வந்து அங்கே கண்ணய்யா அச்சகத்தில் வேலை பார்த்திருக்கிறார்.

"அப்போதான் சிலோனுக்கு போனால் நல்லா சம்பாதிக்கலாம்னு சொல்லி அப்பாவை அவருடைய நண்பர்கள் அழைச்சிட்டு போனாங்களாம். கொழும்பில் அப்பா எதிர்பார்த்து வந்த வேலை கிடைக்காததால் அவர் வேறு வேலை தேட ஆரம்பித்திருக்கிறார். அப்போதான் வீரகேசரியில் பியூன் வேலை இருப்பதாக தகவல் வர எட்டாவது வரை படித்த (அந்தக் காலத்துல பெரிய படிப்பு) அப்பா 'கடல் கடந்து வந்துவிட்டோம் கிடைக்கிற வேலையை செய்வோம்'னு களத்தில இறங்கிட்டாராம். 1934ம் ஆண்டு வீரகேசரி அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்த முதல் நாள்; பத்திரிகையின் ஆசிரியர் அப்பாவை அழைத்து மதிய உணவை அவரின் வீட்டிற்கு சென்று எடுத்து வரும்படி பணித்திருக்கிறார். அப்பாவும் அந்தக்காலத்தில் கொழும்பில் ஓடிய டிராம் வண்டியில் சென்று உணவை எடுத்து வந்து ஆசிரியரிடம் கொடுத்தாராம்.
சாப்பிட்டு முடித்த ஆசிரியர் அப்பாவிடம் தட்டை கொடுத்து 'நான் ஒரு பிராமணன். அதனால் கரண்டியால்தான் சாப்பிட்டேன். அதனால் மிச்சம் இருக்கும் சாப்பாட்டை நீ சாப்பிட்டுவிட்டு தட்டை நன்றாக கழுவி வீட்டில் கொடுத்து விடு' என்று சொன்னாராம். அப்பா மீதி சாப்பாட்டை சாப்பிடாமல் அதை வெளியே கொட்டிவிட்டு தட்டை கழுவ ஆரம்பித்தாராம். அப்போது வெளியே கொட்டிய சாப்பாட்டை சாப்பிட காக்கைகள் கூடி கத்தியதால் அலுவலகத்தினுள் இருந்த ஆசிரியர் வெளியே வந்து எட்டிப்பார்த்திருக்கிறார்.

ஆசிரியருக்கு விசயம் புரிய 'ஏன் மீதி சாப்பாட்டை நீ சாப்பிடவில்லை' என்று அவர் கேட்டதும் அப்பா 'நான் எச்சில் சோறு சாப்பிட மாட்டேன்' என்று சொன்னாராம். அப்பாவின் பதிலால் ஆடிப்போன ஆசிரியர், 'நீ படித்திருக்கிறாயா?' என்று கேட்க பாக்கட்டில் பத்திரமாக மடித்து வைத்திருந்த கல்விச் சான்றிதழை எடுத்து காட்டினாராம். அடுத்த நாளே அப்பாவுக்கு வீரகேசரியில் டெலிப்போன் ஒபரேட்டர் வேலை கிடைத்திருக்கிறது.
வீரகேசரியில் போர்மனாக இருந்தவருக்கு குழந்தை இல்லையாம் அதனால் அப்பாவை தன் குழந்தையாகவே பார்த்துக் கொண்டாராம்.

அப்பாவும் போர்மன் வேலைக்கு உதவியாக அவருக்கு உதவி செய்வாராம்.இப்படி படிப்படியாக உயர்ந்த அப்பா வீரகேசரியில் உதவி ஆசிரியர் ஆனாராம். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிலோன் டைம்ஸ் பத்திரிகையிலும் வேலை செய்திருக்கிறார். அவர் சிலோன் டைம்ஸ் பத்திரிகையில் பணியாற்றிய சமயத்தில் அந்தோணிமுத்து நாடாரோடு இணைந்து நாடார் யுவ ஐக்கிய சங்கத்தை அப்பா உருவாக்கியிருந்தார்.
1930களில் கொட்டாஞ்சேனை தபாலகத்தில்
இருந்து திருவிதாங்கூர் கோட்டாருக்கு
7 ரூபா 50 சதத்தை காசி உதயம்
அனுப்பிவைத்த மணி ஓடர்.

அப்போது கொழும்பில் இயங்கி வந்த கேஸ் கம்பனியில் வேலை பார்த்த இரண்டு ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதால், அவர்கள் அந்தோணிமுத்துவிடம் வந்து நிலமையை கூறியிருக்கிறார்கள். அதற்கு அந்தோணிமுத்து 'இது தொழிற்சங்கம் அல்ல, சாதி சங்கம். சாதிரீதியாக ஏதாவது பிரச்சினை என்றால் வாருங்கள். இதெல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது' என்று மறுக்கவே, பக்கத்திலிருந்த அப்பா 'நாம அவங்ககிட்டே சந்தா பணம் வாங்குறோம் அதனால அவங்களுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் நாமதான் உதவி செய்யனும்'னு களத்தில இறங்கி கேஸ் கம்பனி ஊழியர்களை ஒன்று திரட்டி வேலை நிறுத்தம் செய்ய, அதிர்ந்து போன கேஸ் கம்பனி நிர்வாகம் மறுபேச்சின்றி ஊழியர்களுக்கு மறுபடியும் வேலை வழங்கினார்களாம்.

அப்பாவின் களப்போராட்ட செய்திகள் காட்டுத்தீயாக கொழும்பில் பற்றிக்கொள்ள தொழிற்சங்கத்தை அடிப்படையாக கொண்டு செயற்படும் லங்கா சமசமாஜ கட்சி அப்பாவை அழைத்து அவரை கட்சியில் இணைத்துக் கொண்டார்களாம். இப்படித் திடீரென அரசியல்வாதியாகி விடுகிறார். அதோடு கேஸ்கம்பனி ஊழியர்களின் நன்மதிப்பை பெற்று அந்த தொழிற்சங்கத்தை கைப்பற்றினாராம். லங்கா சமசமாஜி கட்சி வெளியிட்ட சமதர்மம் பத்திரிகையில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு தமிழகம் திரும்பிய அப்பா இங்கேயும் தொழிற்சங்கங்களை தொடங்கி களப்போராட்டங்களை ஆரம்பித்தாராம்". காசிஉதயத்தின் நினைவுகளை மீட்டிய கலைக்கோட்டு உதயத்திடம் "கடவுள் மறுப்பாளரான நீங்கள் பெரியாரிஸ்ட்டா?" என்றோம்.
"நாங்கள் பெரியாரின் கடவுள் மறுப்பையும், பெண்ணிய  விடுதலைக்கான கொள்கையையும் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் அவர் தமிழ் மீது வைத்திருந்த கொள்கையை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். ஏனென்றால் அவர் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும் தமிழனுக்கு ஒண்ணும் தெரியாதுன்னும் சொல்லும் கருத்துடன் முரண்படுகிறோம். பெரியார் எங்களுக்கு தலைவர் கிடையாது. அவர் வெறும் வழிகாட்டி அவ்வளவுதான். அதோடு எங்களின் கன்யாகுமரி மாட்டத்தில் அய்யா வைகுந்தர் என்று ஒரு புரட்சியாளர் இருந்தாரு, அவர் 'உனக்கு நீதான் கடவுள், கண்ணாடிக்கு முன்னால நின்னு ஒண்ண பார்த்து நீ கும்பிடு'னு சொல்லுவாரு நாம அவர் வழியில கடவுள் இல்லைன்னு வந்த ஆளு. பெரியாரை நம்பி கடவுள் இல்லைன்னு வந்த ஆளு இல்லீங்க".

Monday, February 6, 2017

இருள் உலகக் கதைகள்

முத்து பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்: மணி ஸ்ரீகாந்தன்

நேரம் அதிகாலை 5மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. ராமசாமி கவுண்டர் ஒரு செம்பை எடுத்துக் கொண்டு தமது மாட்டுத் தொழுவத்திற்குள் நுழைந்தார்.

தண்ணீர் தொட்டியில் தண்ணீரை அள்ளியவர் பிறகு மாட்டின் மடியை கழுவிவிட்டு பால் கறக்க துவங்கினார்.

ராமசாமி  எவ்வளவோ முயற்சி செய்தும் பசுவின் மடியிலிருந்து ஒரு சொட்டுக்கூட பால் வரவில்லை. கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் கன்றுக்கும்  பசுவுக்கும் இடையே ரொம்ப தூரம் இருக்கும் போது எப்படி பசுவின் மடியிலிருந்த பாலை குடித்திருக்க முடியும்? ராமசாமி கவுண்டர் ரொம்பவே குழம்பிப் போய்விட்டார்.

ஆனாலும் அவரால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆறு மணிக்கெல்லாம் மிதி சைக்கிளில் பால் சேகரிக்க வரும் வீரையா,ராமசாமி வீட்டுக்கு முன்னால் நின்று பெல் அடித்ததும் வீட்டுக்கு வெளியே வந்த ராமசாமி கவுண்டர் நடந்த விசயத்தை சொல்லி நாளைக்கு கறந்து தாரேன்னு சொல்ல.. ‘ஒரு வேளை மோகினி வந்து கரந்துட்டு போயிருச்சோ' என்று  வீரையா போட்டு வைத்தார். "சும்மா போப்பா, தமாசு பண்ணாம.." என்று ராமசாமி பதிலுக்கு சொன்னார். ஆனாலும் ராமசாமிக்கு வீரையா அப்படி சொன்னது மனசுக்குள் பகீரென்றது என்னவோ உண்மை.
முத்து பூசாரி
இறக்குவனையில் உள்ள அந்த பால் சேகரிக்கும் நிலையத்துக்கு பாலை கொடுத்த வீரையா சைக்கிலை வீடு நோக்கி மிதித்தான்.

வழியில் வீரையாவின் சைக்கிளை வழிமறித்த அவன் நண்பன் குமாரு, "டேய் வீரையா, உனக்கு விசயம் தெரியுமா? நம்ம ராமசாமி வீட்டு பசு மாட்டுல உள்ள பாலை மோகினி கறந்துட்டு போயிருச்சாம். ராமசாமி சோலி உருட்டும் கிழவிகிட்டே குறி பார்த்து கண்டு புடிச்சுட்டாராம"என்று அவன் சொன்னதைக் கேட்டு, "அட நான் சும்மா தமாசுக்கு சொன்னது இப்போ நிஜமாகி காட்டுத் தீ போல பத்திக்கிச்சே!" என்று மனதுக்குள் நினைத்தப்படி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

அடுத்த நாள் காலையில் வழமைப்போலவே  பால் சேகரிக்க சைக்கிளில் வீரையா தமது பயணத்தை தொடங்கினான்.

வீடுகளில் கரந்து வைத்திருக்கும் பாலை எடுத்து சைக்கிளின் பின்னால் கட்டியிருக்கும் அலுமினிய டப்பாவில் ஊற்றினான். அன்று வழமைக்கு மாறாகவே அதிகமாக வீரையாவுக்கு பால் சேர்ந்தது.

பால் அதிகமாக டப்பாவில் சேர்ந்ததால் சைக்கிளை ரொம்பவும் நிதானமாகவே மிதித்தான். இறப்பர் மரங்கள் சூழ்ந்திருந்த அந்த தோட்டப்பகுதியில் இருள் கவ்விய ஒரு மயான அமைதி நிலவியது.

வழியில் வீழ்ந்து கிடந்த ஒரு இறப்பர் மரக்கிளை பாதையை அடைத்திருந்ததால் அதனை அகற்றுவதற்காக சைக்கிலை பாதையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு மரக்கிளையை தூக்கி மறுபக்கம் போடும் முயற்சியில் வீரையா ஈடுபட்டான்.

அப்போது ஆளை மயக்கும் ஒரு வாசனை மூக்கை துளைக்கவே முகத்தை திருப்பி சற்று அங்குமிங்கும் நோட்டம் விட்டான்.  அப்போது அவன் கண்ட காட்சி அவனை நிலைகுலைய வைத்தது.

பால் டப்பாவினுல் இருந்த பாலை ஒரு பெண் தனது நீண்ட நாக்கால் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தாள்.

தரையை தொட்டு விடும் அளவுக்கு நீண்ட தலைமயிர் வளர்த்திருந்த அவள் முகம் தெளிவில்லாமல் மங்களாகத் தெரிந்தது. அந்த காட்சியை பார்த்த வீரையா அடுத்த நிமிடமே மயங்கி பொத்தென்று தரையில் விழுந்தான்.

அப்படி விழுந்து கிடந்தவனை யாரோ பார்த்து விட்டு அலறியடித்துக் கொண்டு ஊருக்குள் போய் விசயத்தை சொல்ல ஊரே திரண்டு வந்து,அவனை குண்டுக் கட்டாக தூக்கி சென்று குறி பார்க்கும் கிழவியின் முன்னால் போட்டது. "மோகினிப் பேய் இவனுக்கு விளையாட்டு காட்டிட்டுப் போயிருக்கு. உசுரு! தப்புனதே பெரிய புண்ணியம்" என்று சொன்ன கிழவி மந்திரித்த தண்ணீரை வீரையாவின் தலையில் தெளித்தாள்.

மயக்கம் தெளிந்த வீரையா தமக்கு நடந்த விடயத்தை மெய்சிலிர்த்து தமது நண்பர்களிடம் சொன்னான்.அதன் பிறகு வீடு சென்ற அவன் உடம்பு அடித்து போட்டமாதிரி இருக்கவே அப்படியே படுத்தான். அன்றிரவு வீரையா போட்ட பேய்க் கூச்சல் கேட்டு அந்த தோட்டக் குடியிருப்பு ஆடிதான் போனது. வீரையாவை மோகினி பிடித்து ஆட்டுவதாக செய்தி பரவியதை அடுத்து அவனை குணமாக்கி விட அவனின் நண்பர்கள் துடித்தார்கள்.

பேய் ஓட்டுவதில் பிரபல பூசாரியாக விளங்கும் முத்து பூசாரியை அணுகி விடயத்தை சொல்லி பரிகார பூஜைக்கான  ஒரு நாளையும் குறித்தார்கள்.

குறிப்பிட்ட அந்த அமாவாசை நாளில் முத்து வீரையாவின் வீட்டுக்கு தமது சகாக்களோடு நுழைந்தார்.அவர் நுழைந்த அடுத்த நிமிசமே வீரையா அழத் தொடங்கினான்.

வீரையாவின் உடம்பில் அண்டியிருக்கும் தீய சக்திக்கு உயிர் பயம் வந்து விட்டது அதனால்தான் அழுகிறது என்பதை தமது ஞானக் கண்ணால் முத்து கண்டுபிடித்து விட்டார்.

தமக்கு ஒரு அடிமை சிக்கி விட்டது என்ற மகிழ்ச்சி முத்துவின் முகத்தில் பூரிப்பாக பளீச்சிட்டது. அடுத்த நிமிடமே உடுக்கை கையிலெடுத்து தாளத்தோடு பாடியவர், பரிகார மன்றில் அமர்ந்து தமது சித்து வேலையை காட்டத் தொடங்கினார்.

வீரையாவின் உடம்பில் இருந்த அந்தத் தீய சக்தியை வெளியே கொண்டுவர மந்திர உச்சாடனங்களை உச்சரிக்கத் தொடங்கினார். அப்போது வீரையாவின் உடம்பிலிருந்த தீய சக்தி பலமாக பேசத் தொடங்கியது.

"டேய் பூசாரி! உனக்கு நான் என்னடா துரோகம் செய்தேன்? ஏன்டா இப்படி என் பிழைப்புல மண்ண போடுற?" என்று அந்த தீய சக்தி கேட்க,  “நீ வந்த நோக்கத்தை சொல்லிட்டு மரியாதையா ஓடிட்டா உனக்கு நல்லது இல்லன்னா உன்ன எரிச்சு சாம்பராக்கி விடுவேன்" என்று முத்து மோகினியை எச்சரித்தார்.

முத்துவின் மிரட்டலுக்கு ஆடிப்போன அந்த தீய சக்தி "நான் தாகத்துக்குத் தண்ணீர் குடிக்கத்தான் வீரையாவோட பால் டப்பாவை திறந்தேன். அப்போது அவன் என்னை பாத்துட்டான். ஆளு பார்க்க நல்லா வாட்டசாட்டம்மா இருந்தான். அதனால் ஒரு ஈர்ப்பு வந்து அவனோட உடம்புல புகுந்துட்டேன், இது தப்பா?" என்று கேட்ட அடுத்த நிமிடமே பொறுமை இழந்த முத்து, "தப்புதான்டீ!"ன்னு விபூதியை அள்ளி அதன் முகத்தில் அடித்தார்.வந்திருப்பது மோகினிதான் என்பதை உணர்ந்து கொண்ட பூசாரி  ஒரு பெரிய கிண்ணத்தில் பாலை ஊற்றி அதை மந்திரித்த பின் அந்த மோகினியின் எதிரே வைத்தார்.
பேராசை கொண்ட மோகினி கண் இமைக்கும் நேரத்தில் அந்த பாலை நாக்கை சுழற்றி கபளீகரம் செய்த அடுத்த நொடியே சுருண்டு விழுந்தது.

தமது திட்டம் பலித்து விட்ட மகிழ்ச்சியில் வீரையாவின் உச்சி மயிரை கொத்தாகப் பிடித்து அறுத்த பூசாரி அதனை ஒரு போத்தலில் போட்டு அடைத்தார்.

"மோகினியின் கதையை இப்போதைக்கு முடித்து விட்டேன். இதற்கு பிறகு இந்த வாலிபனை மோகினி பிடிக்காமல் இருக்கனும்னா உடனே இவனுக்கு ஒரு கல்யாணத்தை கட்டி வையுங்க!" என்ற எச்சரிக்கையை கட்டளையாகச் சொல்லிய முத்து, மோகினி அடைப்பட்டு கிடக்கும் போத்தலை எடுத்துக் கொண்டு சுடுகாடு நோக்கி நடந்தார்.

Thursday, February 2, 2017

கண்டி மன்னன் நினைவு நாள்

கண்டி இராச்சியத்தை ஆண்ட கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் ஒரு தமிழ் பேசும் தெலுங்கு நாயக்கர் என்பது பலரும் அறிந்த ஒன்று.  இக் கண்டி இராச்சியம் 1739 ம் ஆண்டு தெலுங்கு நாயக்க வம்சத்தினரின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. அதன் பின்னர் நான்கு  நாயக்க மன்னர்கள் கண்டி இராச்சியத்தை அடுத்த 76 ஆண்டுகளாக 1815 ஆண்டு வரை ஆண்டனர். கண்ணுசாமி என்ற   ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனே கடைசி மன்னன்.
1815 ஆம் ஆண்டு கண்டி ராச்சியத்தின் வீழ்ச்சியின் பின்னர் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். பிறகு அவர் தமிழகத்தின் வேலூர் சிறைச்சாலையில் 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து சிறையிலேயே 1832 ஆம் ஆண்டு உயிர்துறந்தார். கண்டியில் மன்னனுடன் அவரது அரசுடன் தொடர்பு கொண்ட நாயக்க குலத்தவர் எவரும் இருக்கக்கூடாது என்பதற்காக அனைவருமே இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.இன்று அம்மன்னன் வழியில் வந்த பரம்பரையினர் பலர் தமிழகத்தில் பல இடங்களில் வாழ்ந்து வருகிறார்கள். மன்னரின் உறவினர்களால் வருடந்தோறும் நடாத்தப்படும் குருபூஜை நினைவு நாள் விழா இந்த ஆண்டும் 186வது நினைவு விழாவாக வேலூர் முத்து மண்டபத்தில் கடந்த  30-01-2017 மாலை 4மணிக்கு அனுசரிக்கப்பட்டது. இதில் மன்னரின் வாரிசுதாரர்கள்,உறவினர்கள் ஊர்வலமாக நினைவிடத்திற்கு சென்று மன்னரின் உருவபடத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். மன்னரின் 7வது வாரிசு அசோக்ராஜா குதிரையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் எஸ்எம் சில்க் மனோகரன் தலைமை தாங்கினார்.