Tuesday, January 31, 2017

றைகம் பொங்கல் விழா!

றைகம்,மேற்பிரிவு ஸ்ரீ குறிஞ்சி மகாமாரி அம்மன் ஆலயத்தில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 30-01-2017 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமான நிகழ்வை சிவ ஸ்ரீ பரமசிவன் சர்மா மங்கள விளக்கேற்றி ஆரம்பித்துவைத்தார்.றைகம் மேற்பிரிவு வாணி அறநெறி பாடசாலையுடன் இணைந்து, இங்கிரிய பிரதேச செயலகம்,வாழ்வின் எழுச்சி திட்டத்தின் (சமுர்த்தி) வங்கி, ஆலய அறங்காவலர் சபை உள்ளிட்ட சமூக நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கினார்கள். மாணவ மாணவிகளின் கலை கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற நிகழ்வுகளின்போது க்ளிக் செய்த படங்களை இங்கே காணலாம்.















Sunday, January 15, 2017

றைகம்,மேற்பிரிவு ஸ்ரீராமர் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா

றைகம்,மேற்பிரிவு ஸ்ரீராமர் ஆலயத்தின் வருடாந்த
தேர் திருவிழா நேற்று (14-01-2017) அன்று  நடைபெற்றது.   ஸ்ரீ குறிஞ்சி மாகாமாரி அம்மன் ஆலயத்தின் பிரதம குருக்களான சிவ ஸ்ரீ பரமசிவன் அவர்களினால்  பூஜைகள் நடாத்தப்பட்டு தேர் வீதி உலா வந்தது. அப்போது எனது கெமரா கண்களினால் சுட்டெடுத்த காட்சிகள் சிலவற்றை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

















Wednesday, January 11, 2017

ஜெயலலிதா என்ற நடிகையின் மறைவு?

என். மணிமாறன், சிலாபம்

திரை நட்சத்திரங்கள் ஒருபோதும் மறைவதில்லை. எப்போதும் ஜொலித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் சில நேரங்களில் கண்ணுக்குத் தெரிவதில்லை.

எனக்குள் சினிமா ஆர்வத்தை ஏற்படுத்திய துரோணாச்சாரியார் டைரக்டர் ஸ்ரீதர். நடிகர்களுக்கு நிகராக அவரது பெயர் ஒரு காலத்தில் ரசிகர்களை ஈர்த்தது. 'அலைகடலில் ஒரு சிறிய தோணி, கலை உலகில் எங்கள் புதிய பாணி' என்ற சித்ராலயாவின் அடையாள வாசகம் எனக்கொரு தாரக மந்திரம்.
ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை' படத்தில் அவரது 16 வயதில் அறிமுகமானவர் ஜெயலலிதா. அந்தப் படத்தில் இவருடன் ஸ்ரீகாந்த், நிர்மலா, மூர்த்தி ஆகியோரும் அறிமுகமானார்கள். இவர்கள் அனைவரும் பின்னாளில் பெரிதும் பேசப்பட்டவர்கள். அதில் ஜெயலலிதா தனது முதல் படத்திலேயே என்னைப் பெரிதும் கவர்ந்தவர். அவர் குளிக்கும் காட்சி எனது மனதை இன்னும் குளிர்விக்கிறது. அதைத் தொடர்ந்து 'ஆயிரத்தில் ஒருவன்', 'நான்', 'தனிப்பிறவி', 'சந்திரோதயம்', 'மேஜர் சந்திரகாந்த்' ஆகிய படங்களின் மூலம் எனக்குப் பிடித்தமான நடிகை ஆனார். 'அம்மா என்றால் அறிவு' என்று அவரே பாடிய பாடலும் 'ஒரு நாள் யாரோ' என்று அவர் வாயசைத்த பாடலும் நான் விரும்பிக் கேட்கும் பாடல்கள்.
ஜெயலலிதா மறையவில்லை. எனது மனதில் இன்னும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

உருவங்கள் மறையலாம் நினைவுகள் மறையுமா?


நம்மவூர் நடிகை பூஜா ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்து கொண்ட பின் வேறொருவரை திருமணம் செய்துள்ளாரே இது சரியா?
எஸ். முருகேசன், கொழும்பு
ரொம்ப ரொம்பச் சரி. திருமணம் செய்தபின் விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் அரிதாரம் பூச வரும் அமலா, ரம்பா, மீரா ஆகியோர் போலன்றி ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவரது அனுமதியுடன் நடிப்பதுதான் சரி என்று சொல்லும் பூஜா செய்வது தவறு என்று நீங்கள் சொல்வது சரியா? நீங்கள் சரி என்று சொன்னாலும்கூட தீபக் செய்தது தவறு என்று நிறையப்பேர் சொல்கிறார்கள். நிச்சயதார்த்ததின் பின்னர் அவர் நடந்து கொண்டது சரியல்ல என்பதால் பூஜா தவறை சரி செய்தார். பார்ப்போம் தீபக் அடுத்த இன்னிங்ஸில் நிலைத்து நின்று சரியாக ஆடினால் தப்பில்லை.

அண்மையில் பார்த்த சிறந்த படம் என்று எந்தப் படத்தை சிபாரிசு செய்வீர்கள்?
கவிதா, பாதுக்க

திரைக்கு வந்த உண்மைக் கதையொன்றைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள்.

2010 பொதுநலவாய போட்டிகளில் 55 கிலோ பாரப்பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற கீதா மற்றும் பபிதா என்ற இரு இந்தியப் பெண்களின் உண்மைக்கதைதான் தங்கல் என்ற ஹிந்திப் படம். தங்கல் என்றால் தமிழில் சண்டை என்று அர்த்தம்.
மகாவீர்சிங் போசாட் ஒரு தேசிய மல்யுத்த சாம்பியன். எனினும் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் சாதிக்க முடியாத வருத்தம் அவருக்கு உண்டு. தன்னால் முடியாததை தனது மகன் மூலம் சாதிக்க நினைக்கிறார். ஆனால் அவருக்குத் தொடர்ந்து பிறப்பது 4 மகள்மார். தனது மகள்மாரில் இருவரை எப்படி மல்யுத்தத்தில் வெற்றியாளர்கள் ஆக்குகிறார் என்பதுதான் கதை. ஆனால் படம் சொல்லும் சேதியோ வேறு.

பெண்கள் மீது இயலாமை என்ன சொல்லை திணிக்க நினைக்கும் இந்த சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவருக்கும் எதிராக கோடானு கோடி பெண்களின் சார்பாக நடத்தப்படும் யுத்தம் இது என்பதுதான் படம் சொல்லும் சேதி.

வெளியாகிய மூன்று நாட்களில் 100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளது தங்கல். தமிழ்நாட்டில் புதிய தமிழ்ப் படங்களின் காட்சிகளை குறைத்து தங்கல் படத்துக்கு காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அமீர்கானின் 'லகான்', ஒஸ்கர் விருது வரை சென்று மல்லுக்கட்டியது. 'தாரே ஜமீர் பர்' மனதை நெருடியது.

'தங்கல்' - இந்தியர்களைப் பொறுத்தவரை இதுதான் ஒஸ்கர்

இதைவிட ஒரு படம் சாதிக்க எதுவுமில்லை.

'தங்கல்' வெற்றி இந்திய பெண்களுக்கு சமர்ப்பணம்.

ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய படம்.

'தங்கல்' படத்தில் வருவது போல் உண்மையாகவே பொதுநலவாய மல்யுத்த போட்டியில் 58 கிலோ பாரப்பிரிவில் தங்கப்பதக்கத்தை முதல் முறையாக வென்ற 28 வயதான கீதா போகட் இவர்தான். இதே பாரப்பிரிவில் இவரது தங்கை பபிதா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Tuesday, January 10, 2017

ஞெய் றஹீமின் நினைவலைகளில் ஒரு நீச்சல்!


சந்திப்பு- மணி  ஸ்ரீகாந்தன்.

இலங்கை வானொலி நாடகத்துறையில் ஞெய் றஹீம் மறக்க முடியாத ஒரு நட்சத்திரம்.கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் வானொலி நிகழ்ச்சிகளில் தனக்கென்று ஒரு தனியிடம் பிடித்து, கோமாளிகளில் ஆயிஷாவாக வலம் வந்த அவரை, ஒரு இனிய மாலை  வேளையில் சந்தித்து பேசினோம்.

முதலாவதாக அதென்ன ‘ஞெய்’ என்று ஒரு பெயர், இதன் அர்த்தம் என்ன என்று கேட்டோம். ‘திரு, திருமதி போல பெண்களை மரியாதையாக விளிக்கும் ஒரு மலாய் சொல்லே ஞெய். றஹீம் என்பதுதான் என் பெயர். ஒரு மரியாதை சொல்லையே அப்பா எனக்கு பெயராக சூட்டிவிட்டார்.

ஆனால் இன்று இந்தப் பெயர்தான் என் அடையாள முத்திரையாகத் திகழ்கின்றது. அப்பாவுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.’ என்றவர் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவர். அதாவது இவரது பெற்றோருக்கு மொத்தம் 16 குழந்தைகள். ஏனையோர் இறந்துவிட எஞ்சியது ஐவரே!
‘துடுக்குத்தனமும், வேகமும் தான் என்னோட ப்ளஸ்.... அதுதான் இன்றைக்கும் என்னை இளமையாகவே வைத்திருக்கிறது. எனது அப்பா மலாய் மொழியை தாய்மொழியாக கொண்டவர். பொலிஸ் இன்ஸ்பெக்டராக கடமையாற்றினார். முகத்துவாரம் பொலிஸ் விடுதியில்தான் நான் பிறந்தேன்.

எனது குடும்பத்தில் நான் தான் இரண்டாவது என்னை செல்லமாக ‘செலி’ என்று கூப்பிடுவார்கள். எனது பக்கத்து வீட்டில் சுப்ரமணியம் என்ற பொலிஸ்காரர் இருந்தார் அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. எனவே நான் எப்போதும் அவங்க வீட்டுலதான் இருப்பேன்.

நான் தமிழில் தேர்ச்சிபெற அவங்கதான் காரணமும். சரஸ்வதி பூஜையன்று அரிசியில் ‘ஆ’னா எழுத வைத்தது அவங்கதான். அதன்பிறகு அப்பா திம்பிரிகஸ்யாயவிற்கு மாற்றலாகி வந்துவிட்டார். திம்பிரிகஸ்யாய ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் தான் என் ஆரம்ப கல்வியை தொடங்கினேன். அப்போது எனக்கு ஆறு வயது.

பாடகர் முத்தழகு, அந்தனி ஜீவா ஆகியோரும் அந்தப் பாடசாலையில்தான் படித்தார்கள். அன்னம்மா டீச்சர், சந்தனம் மாஸ்டர், கனகராயர் டீச்சர் ஆகியோரும் எனக்கு படிப்பித்த ஆசிரியர்கள். பொலிஸ்காரன் மகள் என்பதால் எனக்கு ஒரு மரியாதையும், கௌரவமும் சக மாணவர்களிடம் கிடைத்தது.
நிற்பவர்களில் மூன்றாவதாக அப்பா 
அமர்ந்திருப்பவர்களில் தம்பி, அக்கா, 
அம்மா, குட்டித்தம்பி, ஞெய் மற்றும் தங்கை.
அந்தப் பாடசாலையில் தினமும் எல்லோருக்கும் பால் குடிக்கக் கொடுப்பார்கள். சில பிள்ளைகள் குடிக்க மாட்டார்கள். அப்படி அவர்கள் குடிக்காத பட்சத்தில் அதை நான் வாங்கி குடித்துவிடுவேன். இப்படி தினமும் எனக்கு நாலு கப் பால் இலவசமாக கிடைக்கும். அதனால் ‘பால்பெட்டி’ என்று எனக்கு ஒரு பட்டப் பெயரும் இருந்தது.

1959ல் ஐந்தாவது படிக்கும் போது எனக்கு புலமைப் பரிசில் மெடல் கிடைத்தது. எனக்கு ரொம்பவும் சந்தோசம். அம்மா பாராட்டுவாங்க என்ற ஆசையோடு வீட்டுக்குச் சென்றேன். ஆனால் அதை அவங்க பெரிதுபடுத்தவே இல்லை! என்று சொல்லும் ஞெய், தனது அப்பா ஜுமாத் பற்றி இப்படி சொல்கிறார்.

‘என்மீது அதிக பாசம் என்றால் அது அப்பாதான். பிளாஸா, ரொக்ஸி, ஈரோஸ் பட மாளிகைகளில் புதுப் படங்களுக்கு அப்பாவுக்கு முதல் நாள் காட்சிக்கு டிக்கட் கிடைத்துவிடும். உடனே மாலை காட்சிக்கு குடும்பத்துடன் சென்று விடுவோம். படத்தில் யாராவது ஒரு நடிகை ஆடும்போது அப்பா என்னைக் காட்டி படத்தில் ஆடுறது நீதான்னு சொல்லுவார். அப்படி அப்பா சொன்னதை நான் உள்வாங்கிக் கொண்டு படத்தில் வரும் கதாநாயகியாகவே என்னை நான் நினைத்துக்கொள்வேன்.
படம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் அந்தப் படத்தில் பார்த்த பாடலை நான் பாடிக்கொண்டு ஆடுவேன். எனவே என் கலை ஆர்வத்துக்கு வித்திட்டவர் அப்பாதான். வீட்டில் அப்பா இருந்தால் எனக்கு கொண்டாட்டம்தான். அப்பா வேலை முடிந்து வந்ததும் அசதியில் படுத்துவிடுவார். நான் அப்பாவின் காலைப் பிடித்துவிடுவேன். அப்பா பிறகு எழுந்ததும். இரண்டு சதம் தருவார்.

அதை எடுத்துச் சென்று பக்கத்து கடையில் பினாட்டு வாங்கி சாப்பிடுவேன். அப்பா இன்ஸ்பெக்டராக இருந்தாலும் அப்பா ரொம்ப சாதுவான சுபாவம். அவர் அம்மாவை எதிர்த்து பேசியதை நான் கண்டதில்லை. என்னை அம்மா அடிக்கும் போது அப்பாதான் வந்து தடுப்பார். அப்போது அம்மா அடிக்கும் அடியெல்லாம் அப்பா மீதே விழும்...’ என்ற ஜெய் ரஹீமிடம் நாடக பிரவேசம் பற்றி கேட்டோம்.

‘சிஸ்டர் மேரி தெரேசா ஒருமுறை என்னை அழைத்து கிராமபோன் பெட்டியில் ‘அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்...’ என்ற பாடலைப் போட்டு ஆடச் சொன்னார். நானும் ஆடினேன்.
கோமாளிகளுடன் நமது  விருந்தினர்
அதன் பிறகு பாடசாலையில் நடந்த விழாவில் ஞானசௌந்தரி நாடகத்தில் நான் ஞானசௌந்தரியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் முதல் பிரவேசம் இதுதான். அப்போது என்னோடு படித்த சாராதாமணி, காந்திமதி, இந்திராணி ஆகியோரும் நடித்தார்கள்.

பாடசாலை வகுப்பில் சாராதமணியும், இந்திராணியும் எனது இரு பக்கத்திலும் அமர்ந்திருக்கும் நண்பிகள். இவர்கள் எல்லோரும் அப்போதே இந்தியாவிற்கு சென்றுவிட்டார்கள். இன்றுவரை அவர்களை நான் சந்தித்ததே இல்லை. ஆனால் திரைப்படங்களில் நடிக்கும் காந்திமதியை பார்க்கும் போது அவள் என்னோட படித்த காந்திமதியாக இருக்குமோ என்ற எண்ணம் ஏற்படும். ஏனென்றால் என் நண்பியின் தோற்றம் நடிகை காந்திமதியுடன் ஒத்துப்போகிறது.

‘ஒரு முறை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திலிருந்து ஒரு வேன் எங்கள் பாடசாலைக்கு வந்தது. கலை, நடிப்பில் திறமையான மாணவர்களை தேடி அவர்கள் வந்திருந்தார்கள். சரவணமுத்து மாமாதான் மாணவர்களை தேர்வு செய்தார். அதில் நான், தயாளன், இப்ராஹீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு வானொலி நிலையத்தில் வளரும் பயிர் நிகழ்ச்சியில் பங்கு பற்றச் செய்தார்கள். அப்போது அங்கே விமல் சொக்கநாதன், யோகா, இக்பால், லோகாம்பிகை ஆகியோரும் அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றினார்கள். எனக்கு முதலில் கடிதம் வாசிக்க தான் தந்தார்கள்.

இப்படித்தான் என் கலையுலக பிரவேசம் நடந்தது’ என்று சொல்லும் ஞெய் ரஹீம், தமது பாடசாலை நண்பர் இப்ராஹீம் பற்றியும் கூறுகிறார்.

‘இப்ராஹீம் ரொம்பவும் கஷ்டப்பட்டு படித்த மாணவன். அதிகாலையில் சைக்கிளில் சீனி, தேயிலை, பால் மா போன்ற பொட்டலங்களை பெட்டியில் வைத்துக் கட்டிக்கொண்டு பங்களா வீடுகளுக்குச் சென்று கொடுத்துவிட்டு சரியாக பாடசாலைக்கும் வந்துவிடுவார்.

நன்றாக படிக்கக் கூடியவன். ஆனாலும் வகுப்பில் நான் முதலாவதாகவும் இப்ராஹீம் இரண்டாவதாகவும் வருவோம். ஒரு முறை என்னிடம் வந்த இப்ராஹீம்.

‘ஒரு பெண் பிள்ளை வகுப்பில முதலாவதாக வருது... உனக்கு வரமுடியலயே... நீயெல்லாம் ஒரு ஆம்பிளையான்னு வீட்டுல திட்டுறாங்க அதனால நீங்க ஒருமுறை இரண்டாவதா வாங்களேன்’ என்று கெஞ்சினான்...’

என்று தமது பழைய நினைவுகளில் மூழ்கிப் போகும் ஞெய் ரஹீமிடம், குறும்புப் பண்ணுவீர்கள் என்று சொன்னீர்களே? என்று ஞாபகப்படுத்தினோம்.

‘கொம்பனி வீதியில் ஒரு முஸ்லிம் வாசிகசாலை இயங்கி வந்தது. அதன் பொறுப்பாளராக எனது தாத்தா இருந்தார். அதனால் விடுமுறை நாட்களில் அந்த வாசிகசாலைக்கு அம்மா என்னைக் கூட்டிச் சென்று விட்டு விடுவா. நான் அங்கு போனதும் செய்யும் முதல் வேலை அங்குள்ள பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு போய் கீழே இருக்கும் சர்பத் கடையில் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக சர்பத்தும் ஈச்சம் பழமும் வாங்கி சாப்பிட்டு விடுவேன்.
உண்ட மயக்கத்தில் அப்படியே அசந்து புத்தகம் அடுக்கி இருக்கும் மேசையின் கீழ் சுருண்டு படுத்து தூங்கிவிடுவேன். பிறகு பத்திரிகைகளைக் காணாத எனது தாத்தா என்னைத் தேடி கண்டு பிடித்து திட்டித் தீர்ப்பார். தாத்தா சாக்குப் பையில் மூட்டைக் கட்டி வீட்டுக் கூரையில் தொங்க வைத்திருக்கும் வாழைக்குலையை, ஒவ்வொரு நாளும் அவிழ்த்துப் பார்த்து பழுத்திருக்கும் பழங்களை எல்லாம் சாப்பிட்டு விடுவேன். விபரம் தெரியாத தாத்தா பிறகு ஒருநாள் கோனிப் பையிலிருக்கும் வாழைக்குலையை அவிழ்த்துப் பார்த்தால் பாதி வாழைப்பழங்கள் காணாமல் போயிருக்கும். எலி சாப்பிட்டிருக்கும் என்று சமாதானம் சொல்லிக்கொள்ள நான் ‘கப்சிப்’ என்றிருந்து விடுவேன்.

‘எனது அம்மாவின் தங்கச்சியை பட்டு மாமி என்றுதான் அழைப்பேன். அவளுக்கு பன்னிரெண்டு வயதிருக்கும் எனக்கு எட்டு வயது அவளும் நானும் கொம்பனி வீதி கடைத் தெருவில் நடந்து வரும்போது கடைகளின் வெளியே வண்ணம் பூசி சிறிய மண்பாண்டங்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதைப் பார்த்ததும் எனக்கு அதை வாங்க ஆசை வந்துவிடும். மாமியிடம் கேட்க அவளிடமும் பணம் இருக்காது. ஆனாலும் அவள் ‘வா வாங்கலாம்’ என்று என்னை அழைத்துச் செல்வாள், நான் கடை முதாளியிடம் பேசிக் கொண்டிருப்பேன். நீ உனக்குத் தேவையான மண்பாண்டங்களை எடுத்து பாவாடை சட்டையில் போட்டுக்கொள்’ என்று சொல்வாள். நானும் பட்டு மாமியின் அலோசனைப்படியே கடைக்காரருக்குத் தெரியாமல் மண்பாண்டங்களை சட்டைக்குள் மறைத்துக் கொள்வேன்.

வீட்டுக்கு வந்ததும் விடயம் தெரிந்து விடும். பிறகென்ன எனக்கும், பட்டு மாமிக்கும் அடி உதைதான். ஆனாலும் அம்மா என்னைதான் அதிகம் அடிப்பா. அம்மாவுக்கு அக்காவைத்தான் ரொம்பப் பிடிக்கும். என்னை பிடிக்காமல் போனதற்கு ஒரு காரணமும் உண்டு. நான் கொஞ்சம் வாயாடி. அம்மாவை எதிர்த்து பேசுவேன். போராடும் குணம் எனக்கு சிறு வயதிலிருந்தே வந்துவிட்டது. நான் வயதிற்கு வந்ததும். அம்மா ஒரு ஜோதிடக்காரரிடம் சென்று எனக்கு ஜாதகம் பார்த்திருக்கிறார். அந்த சோதிடரோ ‘நான் சொல் பேச்சு கேட்க மாட்டேன். வெளியே விட்டால் நான் ஓடி விடுவேன்’ என்று சொல்லியிருக்கிறார். அதன் பிறகு அம்மாவுக்கு எச்சரிக்கை உணர்வு அதிகமாகி எதற்கெடுத்தாலும் என்னைத் திட்டத் தொடங்கினா. என்னிடம் கண்டிப்பு அதிகம். வீட்டு வாசலில் நின்றாலும் ‘உள்ளே வாடி, கூத்தாடி, தேவடியா’ என்றெல்லாம் திட்டுவா.

நான் நாடகம் நடிக்கப் போவது அம்மாவுக்கு எப்போதும் பிடித்ததில்லை. அப்பாவின் அனுமதியோடுதான் நான் நடிக்கவே சென்றேன். சில நேரங்களில் அம்மா என்னை குளியலறையில் போட்டு பூட்டி விடுவா. அன்னம் தண்ணியில்லாமல் உள்ளேயே கிடக்க வேண்டும். அப்பா இரவு வந்துதான் என்னை வெளியே விடுவார். அம்மா மேல எனக்கு இப்பவும் கோபம்தான். என் ஆசைகளுக்கு தடைப்போட்டவர் அவர்தான். பெரிய பெரிய சினிமா வாய்ப்புகள் எல்லாம் அம்மாவால்தான் கைநழுவி போனது’ என்று தனது அம்மாவின் மீது கோபப்படும் ஞெய் அம்மா அப்படி செய்ததற்கு அப்போதைய சூழலும் ஒரு காரணம் என்கிறார். பெண் பிள்ளைகளை இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்ற பழைமைவாதியாக அம்மா இருந்தார். என்று அம்மாவின் பக்கத்திற்கு ஒரு நியாயத்தை சொல்லி அமைதியடைகிறார் ஞெய் றஹீம்.

அவரது காதல் அனுபவம் பற்றி விசாரித்தோம்

‘பொலிஸ்காரன் மகளை காதலிக்க பையன்களுக்கு பயம். பாடசாலையில் எந்தப் பையனும் என்னை நெருங்கவில்லை. நான் நாடகங்களில் நடித்த போது ஒரு சக நடிகர் என்னை விரும்புவதாக ஒரு கடிதத்தில் எழுதி கொடுத்தார். அந்தக் கடிதத்தை பார்த்ததும் குலைநடுங்கிப் போனேன். ஏனென்றால் அந்தக் கடிதத்தில் அம்மாவின் முகம்தான் சினிமாவில் வருவது போல வந்து வந்து போனது. அந்த பயத்திற்காகவே என்னை தேடி வந்த காதலை வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். அவரும் வெளிநாடு சென்றுவிட்டார்’

என்ற ஞெய் தனது அக்காவை திருமணம் முடிக்க வந்த பொலிஸ்காரர் பற்றியும் சொல்ல மறக்கவில்லை.
‘என் அக்காவை பெண் பார்க்க வந்த பொலிஸ்காரர் அடிக்கடி வீட்டிற்கு வருவார். இப்படி இரண்டு வருடங்கள் கழிந்தன. ஒருநாள் அக்காவையும், என்னையும் அழைத்துக் கொண்டு சினிமா பார்க்க சென்றார் அக்காவின் மாப்பிள்ளை. ஆசனங்களில் மூவரும் வரிசையாக அமர்ந்திருந்தோம். பொலிஸ்காரரின் பக்கத்தில் அக்காவும் மூன்றாவதாக நானும் அமர்ந்திருந்தோம் லைட் அணைந்து படம் ஆரம்பமாகியது. மாப்பிள்ளை தன் கையைத் தூக்கி அக்காவின் தோள் மீது போட்டு, அணைத்துக் கொண்டார். பின்னர் அவரது விரல்கள் நீண்டு அக்காவுடன் ஒட்டிக் கொண்டிருந்த என் தோளை இடித்தது. என் முதுகை தடவியது. நான் நெளிந்தேன். இதை அக்காவிடமும் சொல்ல முடியாதே! எரிச்சலுடன் பேசாமல் இருந்தேன். எப்போது படம் முடியும் என்றிருந்தது.

வீட்டுக்கு வந்ததும் நடந்தை அம்மாவிடம் சொன்னேன். அதற்கு அம்மா ‘நீ ஆட்டக்காரிதானே ஆடியிருப்ப!’ என்று திட்டியதோடு அடிக்கவும் செய்தார். நாட்கள் நகர்ந்தன. அந்த பொலிஸ்காரர் அக்காவைத் திருமணம் செய்ய தனக்கு இஷ்டம் இல்லை என்றும் தங்கையைத் தந்தால் (நான்) திருமணம் செய்யத் தயார் என்றும் வீட்டில் சொல்லியிருக்கிறார்.
ஞெய் தனது கணவன் 
குழந்தைகளுடன்

அதற்கு சம்மதிக்காத அப்பா அந்த ‘மாப்பிள்ளை’யை திட்டி துரத்திவிட்டார்’ என்று குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு அவலச் சுவையை பகிர்ந்து கொண்டார் ஞெய்.

உங்கள் கணவரை முதலில் எப்படி சந்தித்தீர்கள் என்றோம்.
‘ஒரு நாள் பின்னேரம் நான் குளித்துவிட்டு துணிகளை கொடியில் உலர்த்திக் கொண்டிருந்தேன். அப்போது விர்ரென்று வந்த ஒரு பந்து என்னருகில் விழுந்தது. இந்தப் பந்தை யார் அடித்திருப்பார்கள் என்று திரும்பினேன். எங்கள் வீட்டு மதில் தென்னை ஓலையால் வேயப்பட்டிருந்தது. அந்த கிடுகுகளை விலக்கியபடி ஒரு முகம் எட்டிப்பார்த்தது. வசீகரமான வெள்ளை நிற இளைஞன் என்னைப் பார்த்து மிரட்டலான தொனியில் ‘ஏய்! அந்த பந்தை எடுத்து போடு...’ என்று கட்டளையிட்டான்.

எனக்கு கோபம் தலைக்கேறியது. ‘அடேய் நீதானே பந்தை அடிச்சே! நீயே வந்து எடுத்துக்கடா!’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டேன். அதன் பிறகு தான் அவர் என் அப்பாவோடு வேலை பார்க்கும் பொலிஸ்காரர் என்பது தெரியவந்தது. பிறகு எமது வீட்டுக்கு பக்கத்தில் விளையாடும் போது தண்ணீர் வாங்கி குடிக்க வருவார். எனக்கென்றால் அவரைக் கண்டாலேயே பிடிப்பதில்லை. நான் ரேடியோ சிலோனுக்கு போகும்போது பஸ்டாண்டில் என்னைக் கவனிக்க ஒரு ஒற்றர் படையை நிறுத்தியிருந்தார். அதில் சமரவீர, லூயிஸ் உள்ளிட்ட சில பொலிஸ்காரர்கள் இருந்தார்கள். இவர்களுக்கு என்னை கண்கணிப்பதுதான் வேலை. எனக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனாலும் எனது குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவரைத் தான் திருமணமும் செய்துகொண்டேன்.

1969ல் தான் திருமணம் நடந்தது. திம்பிரிகஸ்யாய பொலிஸ் குவார்ட்டசில்தான் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வானொலி நாடக தயாரிப்பாளர் சானா, முத்தழகு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். திம்பிரிகஸ்ஸாய ஜெனரல் போட்டோ ஸ்டூடியோவில்தான் திருமண போட்டோ பிடித்தோம்.’

மறக்க முடியாத நபர்?

‘செல்வராஜா மாஸ்டர். அப்புறம் இப்ராஹீம், சிஸ்டர் மேரி டிரின்டி, மெட்டில்டா போன்றவர்களை குறிப்பிடலாம்.

மகிழ்ச்சியான அனுபவங்களாக எதைக் கருதுகிறீர்கள்?

‘எனது நாடகங்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் விமர்சனங்களைத்தான். ஒருமுறை தினகரனில் நான் நடித்த ‘ஏமாற்றம்’ நாடகம் பற்றிய விமர்சனத்தை அ. ந. கந்தசாமி எழுதியிருந்தார். அதில் அவளின் கண்களும் பேசுகிறது என்று என்னை குறிப்பிட்டிருந்தார். அது எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது.

தொலைந்து போனதாக நான் நினைப்பது என் இளமைக் காலத்தைத்தான். நான் ஆசை ஆசையாக டிரஸ் எடுக்கும் ராஜன் டெக்ஸ்டைல்ஸ், அதன் பக்கத்தில் இருந்த தோசை கடை என்பனவும் மறக்க முடியாதவை.

அந்த கடையில்தான் கல்கண்டு, ஆனந்தவிகடன் போன்ற சஞ்சிகைகளை இலவசமாக வாங்கி வந்து படித்துவிட்டு திருப்பி கொடுப்பேன். சொந்தமாக புத்தகம் வாங்க எனக்கு அம்மா பணம் தருவதில்லை. அந்த கடைகள் இன்று அங்கில்லை....’ என்றவரிடம் உங்களை வெறுப்படைய செய்த சம்பவம் எது என்று கேட்டோம்.
‘நான் மரிக்கார் ராமதாசுடன் ஜோடியாக நடித்த போது என்னை சிலர் இது கூடாது என்று விமர்சனம் செய்தார்கள். ஆனால் நான் அதை கணக்கில் எடுக்கவில்லை. ‘பஸ்ஸில போகும் போது நாம எத்தனையோ ஆண்கள் மீது முட்டி மோதி பயணிக்கிறோமே’ என்று பதில் சொன்னேன்’ என்றார் ஞெய்.

நீங்கள் கடந்து வந்த வாழ்க்கையை பற்றிய உங்கள் அனுபவமும் மதிப்பீடும் என்ன?

‘எனக்கு அமைந்த கணவர் என் கொள்கைகளுக்கு எதிரானவராகத்தான் இருந்தார். ஆனாலும் நான் விடவில்லை. எனது எல்லா தேவைகளையும் போராடி வென்றிருக்கிறேன்.

போராடி வாழ்வதுதான் வாழ்க்கை, போராட்டம் இல்லாத வாழ்க்கை உப்பில்லாப் பண்டம் போல... நான் வாழ்ந்த வாழக்கை போதாது என்றே தோன்றுகிறது. நான் மீண்டும் வாழ ஆசைப்படுகிறேன். கடவுள் என்முன்னாள் தோன்றினால் எனக்கு இன்னொரு முறை வாழ ஒரு வரம் தா என்று தான் கேட்பேன்’ என்று தமது இளமைக்கால அனுபவங்களை கொட்டிய ஞெய் றஹீம், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் ரசிக்கவும் அனுபவிக்கவும் தெரிந்த ஒரு பிறவிக் கலைஞர் என்பதைத் தான் அவருடனான உரையாடல் நிரூபித்தது.

வயதான காலத்திலும் இளமையான எண்ணங்களுடன் வாழும் ஒவ்வொருவரும் இரண்டாவது தடவையாகவும் வாழ ஆசைப்படுவார்கள் என்பதாகவே அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ஞெய் அப்படிப்பட்டவர்தான்.