Saturday, October 21, 2017

தமிழகத்தில் மகளிர் மட்டும் படம் பார்க்கும் பெண்களுக்கு குலுக்கல் முறையில் பட்டுச்சேலை பரிசு கொடுக்கிறார்களாமே?


ஜானகி, கொழும்பு 

மகளிர் மட்டும் படத்தை பார்க்க பெண்களை அதிக அளவில் தியேட்டருக்கு வரவழைக்க இந்த இலவச பட்டுச்சேலை திட்டத்தை அறிவித்தார்கள். தமிழ்நாட்டில் அரசாங்கம் ஏகப்பட்ட இலவசங்களை கொடுத்து ஏற்கனவே பழக்கப்படுத்தியுள்ளதால் இந்த யோசனை வந்திருக்கலாம். ஒரிண்டு நாட்களின் பின் அவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கிறது. அது என்ன தெரியுமா? பெண்கள் தனியே படம் பார்க்க வரமாட்டார்கள். தங்கள் கணவன்மார் அல்லது அப்பா, சித்தப்பா, மாமா என்று உறவுமுறை ஆண்களுடன்தான் படம் பார்க்க வருவார்கள் என்பது உறைத்ததும் ஆண்களை தியேட்டருக்கு வரவழைக்க ஏதாவது செய்ய வேண்டியதாயிற்று. எனவே ஆண்களுக்கு மட்டும் என்ற விதிமுறையோடு ஒரு போட்டியை அறிவித்திருக்கிறார்கள்.
நீங்கள் கொண்டாடும் பெண்மணியைப் பற்றி அவர்களை நீங்கள் ஏன் கொண்டாடுகிறீர்கள் என்று நான்கு வரிகளும் அந்த பெண்ணுடன் எடுத்துக்கொண்ட உங்கள் செல்பியையும் அனுப்புங்கள். அவர் உங்கள் அம்மாவாகவோ அக்காவாகவோ தங்கையாகவோ மகளாகவோ மனைவியாகவோ, காதலியாகவோ இருக்கலாம். உங்களுடன் சேர்ந்து அந்த பெண்மணியை நாங்களும் கொண்டாடுகிறோம். ஒரு பட்டுப்புடவையுடன் என்று இரண்டாவதாக அறிவித்திருத்தார்கள்.
இப்போது மூன்றாவதாக பெண்களுக்கு சமையல் போட்டி வைத்து வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தருவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் மகளிர் மட்டும் படத்தின் கருத்து சமையல் கட்டில் வாழ்க்கையை தொலைத்த பெண்கள் தங்களை சமையல் கட்டில் இருந்து மீட்டெடுத்துக் கொள்ளவேண்டும் என்று கூறுகிறது. ஆனால், பெண்களுக்கு சமையல் போட்டி நடத்துவது படத்தின் கருத்துக்கு மாறாக உள்ளது என்று பரவலாக பேசப்படுகிறது. ஆண்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் என்பதற்காக இலவச டாஸ்மாக் பாஸ் கொடுத்தால் எப்படியிருக்கும். போகப் போக இதுவும் கூட நடக்கலாம் எனவே சினிமாப் படத்துடன் சேர்ந்து இலவசம் எந்த ரூபத்தில் வந்தாலும் ஆபத்துதான். இப்போதே தடுப்பதுதான் நல்லது.

சீனாவில் இந்தியப் படங்கள் மிகவும் பிரபலமாம் ஆனால் தமிழ் மலையாள படங்கள் அங்கு ஒடுகின்றனவா?
ராகவன், நீர்கொழும்பு.
பாகுபலி 2 கடந்த மாதம் தான் சீனாவில் திரையிடப்பட்டது. இதேநேரம் ‘த்ரிஷ்யம்’ மலையாள படத்தின் ரீமேக் உரிமையை சீன நிறுவனமொன்று வாங்கியுள்ளது என்பது இப்போது கிடைத்திருக்கும் தகவல்.
மோகன்லால், மீனா நடித்த மலையாளப் படம் ‘த்ரிஷ்யம்’ , இந்தி, தெலுங்கு, தமிழில் பாநாசம் என்ற பெயரிலும் இப்போது ‘தர்ம யுத்தய’ என்ற பெயரில் சிங்களத்திலும் எடுக்கப்பட்டு இலங்கையில் ஒடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்த்த சீன நிறுவனமொன்று அப்படத்தை சீனமொழியிலும் தயாரிக்க விரும்பியுள்ளது. அதனால் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளது.

இந்திய நடிகர்கள் ஹொலிவுட் படங்களில் நடிக்கிறார்களா?
மொஹமட் இர்பான, கல்முனை

ஏன் இல்லாமல்? ஹொலிவுட் படமொன்றில் நடித்து விட்டுத்தானே அண்மையில் தனுஷ் இந்தியா திரும்பியிருக்கிறார்! தீபிகா படுகோன், பிரியங்கா சொப்ரா ஆகியோரும் ஹொலிவுட்டுக்கு போய் வந்திருக்கிறார்கள். இப்போது ஹொலிவுட் செல்லும் வாய்ப்பு பாகுபலி புகழ் ராணாவுக்கும், நடிகை எமிஜெக்சனுக்கும் கிடைத்திருக்கிறது. 1888 ஆம் ஆண்டு சௌராஷ்டிராவில் இருந்து புறப்பட்டுச் சென்ற விஜில் என்ற கப்பல் 700 பயணிகளுடன் காணாமல் போன கதையை மையப்படுத்தியுள்ள VIGIL MYSTERY OF THE PHANTOM SHIP என்ற படத்தில் நடிக்கப் போகிறார் ராணா அதேநேரம் ‘BOOGLE MAN’  என்ற படத்தில் நடிக்க எமிஜொக்சன் இப்போது ஹொலிவுட் சென்றுள்ளார்.

இருள் உலகக் கதைகள்

வீரசிங்கம் பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்: மணி ஸ்ரீகாந்தன்.

கொழும்பு பியகமை வர்தக வலயத்தில் இயங்கிவரும் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணி நிறைவடையும் வேளையை தொட்டுக்கொண்டிருந்தது. தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் இரவு பகலாக கண் விழித்து பணியாற்றியதில் தாரணி மிகவும் சோர்வடைந்து காணப்பட்டாள்.

“ரெண்டு நாளைக்கு லீவு போட்டு ரெஸ்ட் எடுக்கணும்” என்று மனதிற்குள் அடுத்த நாளுக்கான திட்டத்தை வகுத்தவள், தோள் பையை எடுத்து மாட்டிக்கொண்டு தனது நண்பிகளுடன் தங்கு விடுதியை நோக்கி நடந்தாள்.
தாரணி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவள் தொழில் நிமித்தமாக பியகமையில் தங்கி கடந்த ஒரு வருடமாக தொழில் செய்து வருகிறாள்.
ஆரம்பத்தில் தாரணி ஒரு பெரிய தங்கும் விடுதியில்தான் தங்கியிருந்தாள். ஆனால் அதில் தரப்படும் உணவு தரமற்றதாக இருந்ததினால் அவளும் இரண்டு சிங்கள தோழியரும் பியகமை பிரதேசத்தில் இருந்த ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அவர்களே சமைத்து சாப்பிட்டு வந்தார்கள்.
தாரணி கொழும்புக்கு வந்தபோது அவளுக்கு சிங்களம் பேச வராது ரொம்பவும் கஷ்டப்பட்டாள். ஆனால் இப்போது சரளமாக சிங்களம் பேசவும் பழகிவிட்டாள். அதனால் இப்போது அவளுக்கு நிறைய சிங்கள நண்பிகளும் இருந்தார்கள்.
வீரசிங்கம் பூசாரி
லீவு நாட்களில் முழுநேரத்தையும் சினிமா பார்ப்பதிலும், பேஸ்புக்கில் செட் பண்ணுவதிலுமே கழித்தாள். நயன்தாரா என்றாள் தாரணிக்கு கொள்ளைப் பிரியம். அவளின் பேஸ்புக் புரொப்பைலில் போட்டோவாக நயன்தாராதான் இருந்தாள். அதனால் அவளின் பேஸ்புக் நண்பர்களில் ஒருவன் அவளை ‘ஹாய் நயன்’ன்னு அழைக்க அவனோட ஏற்பட்ட ஒரு வித ஈர்ப்பில் காதல் வசப்பட்டு கடந்த ஐந்து மாதங்களுக்கு
மேலாக இருவரும் காதலர்களாக சுற்றித் திரிந்தார்கள். ஆனால்,  யார் கண் பட்டதோ தாரணியோடு தனக்கிருந்த தொடர்பை அவன் கைவிட, தாரணிக்கு அது பேரிடியாக அமைந்தது. அவள் தற்போது மன விரக்தியில் இருந்ததினால். ஆடைத் தொழிற்சாலையில் கிடைக்கும் நைட் வேலைகளையும் செய்து தமது உடலை வருத்திக்கொண்டாள். காதல் வலி அவளை பாடாய் படுத்தியது.

தாரணி தங்கியிருக்கும் வீடு மொத்தம் மூன்று அறைகளை கொண்டிருந்தது. அதில் ஒரு அறையில் தாரணியும் அவளின் நண்பி மாலாவும் தங்கியிருக்க அடுத்த அறையில் இரண்டு இளம் பெண்கள் தங்கியிருந்தார்கள்.
இரவு நேரங்களில் அந்த வீட்டைச் சுற்றி யாரோ நடமாடும் சத்தம் கேட்கவே அதுப்பற்றி அந்த வீட்டை வாடகைக்கு கொடுத்திருந்த வீட்டு உரிமையாளரிடம் தாரணியும் அவளின் நண்பிகளும் விசாரித்தப்போது,
“இங்கே போதைப் பொருள் பாவணையாளர்கள் இருக்கிறார்கள். எனவே அது அவர்களின் நடமாட்டமாகத்தான் இருக்கும். எனவே இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம். கதவையும் திறக்கவும் வேண்டாம்" என்று உரிமையாளர் எச்சரித்ததை தொடர்ந்து தாரணிக்கும் அவளின் நண்பிகளுக்கும் ஒரு வித அச்ச உணர்வு ஏற்பட்டது. தாரணி ரொம்பவும் தைரியமானவள். அதனால் அவள் அதை பெரிசுபடுத்தவில்லை.
அன்று வேலை முடிந்து வந்த தாரணி அசதியில் படுத்திருந்தாள். அப்போது நேரம் நள்ளிரவை தாண்டிக்கொண்டிருந்தது. வீட்டுக் கூரையில் யாரோ முணங்கும் சத்தம் மெதுவாக கேட்கத் தொடங்கியது. அப்போது தாரணி திடுக்கிட்டு விழித்துக் கொண்டாள். பக்கத்தில் படுத்திருந்த மாலா ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.
தலைமாட்டில் இருந்த போனை எடுத்து அதில் இருந்த டோர்ச் லைட்டை ஒன் செய்து அந்த வீட்டு கூரையை நோக்கி வெளிச்சத்தை பாச்சினாள். சீலிங் அடிக்கப்படாத அந்த பழைய வீட்டுக் கூரையும், கருமை நிரமாகி போயிருக்கும் கூரை ஓடும் அந்த மெல்லிய மங்கலான வெளிச்சத்தில் மிகவும் பயங்கரமாகத் தெரிந்தது.
போர்வையை முழுவதுமாக இழுத்து தலையோடு போர்த்தியவள் புரண்டு படுத்தாள். அப்போது அவளின் போர்வையில் ஏதோ ஈரமாக ஒட்டுவதை உணர்ந்தவள் மீண்டும் எழுந்து போன் டோர்ச்சை அடித்துப் பார்த்தவள் அலறினாள். அந்த போர்வையில் இரத்தம் துளிகளாக படிந்திருந்தது.
தாரணி போட்ட பேய்க் கூச்சலில் பக்கத்தில் படுத்திருந்த மாலாவும் எழுந்துவிட்டாள். அப்போது அந்த அறை முழுவதும் இரத்த வாடை சூழ்ந்து கொண்டது. தாரணியும், மாலாவும் அந்த அறையை விட்டு வெளியே ஓடிவர பக்கத்து அறைகளில் தங்யிருந்த பெண்களும் எழுந்து வந்து நடந்ததை என்னவென்று கேட்டு அவர்களிடம் இருந்த டோர்ச் லைட்டை கூரையை நோக்கி அடித்துப் பார்த்தார்கள்.

அப்போது அங்கே பூணை மாதிரி ஒரு உருவம் ஓடி மறைய “சே அது கீரிப்புள்ள என்னத்தையோ பிடிச்சிட்டு வந்து கொன்னு தின்டிருக்கு”ன்னு சக தோழிகள் சொன்னப்போதுதான் தாரணிக்கு போன உசுரு திரும்பி வந்தது.
வேறு ஒரு போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டு நிம்மதி பெருமூச்சோடு படுத்தாள். அடுத்து வந்த இரண்டு நாட்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அந்த அறையில் வெளிச்சம் அதிகமாக இருக்க நூறு வோல்ட் பல்பையும் வாங்கிப் பொருத்தினாள். ஆனாலும் அந்த ஓட்டு கூரை ரொம்பவும் உயரம் என்பதால், வெளிச்சம் கூரை வரை பாயவில்லை.

அன்று முழு பௌர்ணமி நாள். அதனால் தாரணிக்கு லீவு. இரவு பத்து மணிவரை டிவியில் படம் பார்த்துவிட்டு நித்திரைக்குச் சென்றாள். அப்போது அவளுக்கு முன்பாக படுக்கைக்கு சென்றிருந்த மாலா முழு நித்திரையில் இருந்தாள்.

சில நிமிடங்களுக்குப் பிறகு தாரணிக்கும் தூக்கம் வர அந்த அறை முழுவதும் பூரண நிசப்தம் குடிகொண்டிருந்தது.
ஆனால் அவர்கள் யாரும் அறியாத ஒரு பேராபத்து அவர்களுக்காக கூரையில் வெறித்தனமாக காத்திருந்தது.
இரத்த வாடை அந்த அறை முழுவதையும் வியாபித்திருந்தது. ஆனால் படுக்கையில் கிடந்த பெண்களுக்கு இது எதுவுமே தெரியவில்லை. அப்போது தாரணியின் நாசியில் ஏதோ வித்தியாசமான வாடை நுழைந்தபோது அவள் திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். “இந்த ரத்த வாடை….ஓ! ஒரு வேளை அந்த கீரிப்புள்ளதான் கூரை மேலே எதையோ பிடித்து தின்னுட்டு இருக்கோ”என்று தாரணி சந்தேகப்பட்டவளாய் படுக்கையிலிருந்து எழுந்தவள் போன் டோர்ச்சை எடுத்து கூரையை நோக்கி வெளிச்சத்தைப் பாய்ச்சினாள். அந்த நிமிசம் அவள் கண்டகாட்சி தாரணியின் உடலை உறைந்துப் போகச் செய்தது. கூரையில் தலைகீழாக ஒரு கோரமான உருவம் நாக்கை வெளியே நீட்டியப்படி இரத்தம் சொட்ட சொட்ட மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது.
தாரணி போட்ட அலரல் சத்தத்தை அடுத்து அந்த உருவம் மறைந்துவிட  அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து. அனைவரும் ஓடி வந்து விவரம் கேட்டார்கள். தாரணியும் அவளது நண்பிகளும் சொன்ன தகவல்கள் அந்த பிரதேச வாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அப்போது அங்கே வந்த ஒரு முதியவர் இந்த வீட்டுல ஒரு ஐம்பது வருடத்து முன்பாக ஒரு பெரிய மாந்திரீகர் இருந்தாரு. அது மட்டும்தான் எனக்கு தெரியும்ன்னு சொல்லிட்டுப் போக பயந்துப்போன பெண்கள் வீட்டு உரிமையாளரை சந்தித்து நடந்த விடயங்களை சொன்னார்கள்.
அதன் பிறகு வீட்டு உரிமையாளரின் ஏற்பாட்டில் தாரணியும் அவளின் நண்பிகளும் வேறு ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டார்கள்.
அந்த வீட்டுக்கு ஒரு பெரிய பாதுகாப்பு பூஜையை போட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பது அதன் உரிமையாளரின் நம்பிக்கை.  அதன்படி அவருக்கு தெரிந்த பெரிய பூசாரியான வீரசிங்கத்தை ஒரு நல்ல நாள் குறித்து அழைத்திருந்தார் அதன்படி வீரசிங்கமும் தமது சகாக்களோடு அந்த வீட்டினுள் நுழைந்தார். வீட்டின் படிகளில் வீரசிங்கத்தின் பாதம் பட்டதுமே அவரின் உடல் சிலிர்த்தது. ‘இதுல ஏதோ ஒரு கெட்ட சக்தி அண்டியிருக்கு’ என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

சில நிமிடங்களில் பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியானதும் வீரசிங்கம் உடுக்கையோடு களத்தில் இறங்கினார். அப்போதுதான் வீரசிங்கத்துக்கு சில உண்மைகள் புலப்படத்தொடங்கியது.
அந்த வீட்டில் ஒரு காலத்தில் வாழ்ந்த ஒரு பெரிய மாந்திரிகர் தமது தேவைகளுக்காக ஒரு இரத்தக் காட்டேரியை வளர்த்து வந்திருக்கிறார்.
அந்த காட்டேரியின் இரத்த தேவைகளை பூசாரியே பலிகளின் மூலமாக நிவர்த்தி செய்து வந்திருக்கிறார். ஆனால் திடீரென்று பூசாரிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்துவிட, அதற்கு பிறகு இரத்தக் காட்டேரி பசியால் துடித்து வந்திருக்கிறது. அதற்கு பிறகு அந்த வீட்டில் வாடகைக்கு குடியேறியவர்களும் சில நாட்ளிலேயே யாருக்கும் தெரியாமல் பயந்து ஓடிவிட, அந்த வீடு பாழடைந்து கிடந்திருக்கிறது. அதையே மீள் சுத்திகரிப்பு செய்த அதன் உரிமையாளர் தாரணிக்கு வாடகைக்கு கொடுத்திருக்கிறார்.
வீரசிங்கத்துக்கு இப்போது அனைத்து தகவல்களும் துல்லியமாக கிடைத்துவிட்டன. “சரியான நேரத்துலதான் இந்த இரத்தக்காட்டேரி காட்சி கொடுத்திருக்கு கொஞ்சம் அசந்திருந்தாலும் அது யாரையாவது கொன்னு இரத்தத்தை உறிஞ்சி குடித்திருக்கும்.” என்று அவர் சொன்னதை கேட்ட வீட்டு உரிமையாளருக்கு வியர்த்துக் கொட்டியது.
வீரசிங்கம் அந்த நாசக்கார காட்டேரிக்கு இரண்டு சேவல்களை பலிக்கொடுத்து அதை கூரையிலையே வைத்து சுட்டு பொசிக்கவிட தீர்மானித்தார். பூசாரியை சுற்றி இருந்தவர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு அவர் மட்டும் உள்ளே தீப்பந்தத்தோடு ஆடிக்கொண்டிருந்தார்.

சில நிமிடங்களில் கதவு அடைக்கப்பட்டது. சேவலகளின்; அலறல் சத்தம் ஓங்கி ஒலித்து அடங்கிப்போனது. அதன் பிறகு இதுவரை யாரும் கேட்டிராத ஒரு பயங்கரமான அலறல் சத்தம் செவிகளை பிளப்பபதுபோல ஒலித்து. அதுவும் சில நிமிடங்களில் ஓய்ந்தது. நிச்சயமாக வீரசிங்கம் அந்த இரத்தக் காட்டேரியின் கதையை முடித்துவிட்டார் என்பதை உணர்ந்த வீட்டு உரிமையாளர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
அப்போது கதவு திறந்துகொண்டது. உள்ளே இருந்து குங்கிலிய புகை குபீர்ரென்று வெளியே வர அதனைத்தொடர்ந்து வீரசிங்கம் வெற்றிக் களிப்போடு வந்தார்.
அனைத்தும் சுமுகமாக முடிந்தவிட்டதை நினைத்து மாடனுக்கு ஒரு பூஜையை போட்டுவிட்டு கிளம்பினார்.
இப்போது தாரணியும் அவளது நண்பிகளும் அந்த வீட்டில் மகிழ்ச்சியோடு வசிக்கிறார்களாம்.

Friday, October 20, 2017

தமிழனை காக்கும் சிங்களத்தி

மணி  ஸ்ரீகாந்தன்.

லங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான நல் உறவு நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் நாம் அறிந்து தமிழகத்துக்கும் நம் நாட்டுக்கும் இடையேயான நல்லுறவு எப்போதுமே சுமுகமாக இருந்ததாகத் நமக்கு தெரியவில்லை. இலங்கை மன்னர்கள் பாண்டிய நாட்டிலிருந்து பெண் எடுத்து இருந்தாலும். இலங்கை மீதான சோழ மன்னர்களின் படையெடுப்பும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருக்கிறது.
mani srikanthan
சிங்கள நாச்சியார் கோவில்
இலங்கையை வென்று 12,000ஆயிரம் சிங்களவர்களை சிறைப்பிடித்து வந்து,திருச்சியில் கல்லணை கட்டுவதற்கு அவர்களையும் மற்ற மன்னர்களையும் கரிகால பெருவளத்தான் ஈடுபடுத்தினான் என்பதை நமது தஞ்சை கல்வெட்டுகளும், சங்க இலக்கியங்களும் பதிவு செய்திருக்கின்றன என்பதை நாம் அறிவோம்.

இந்த சூழ்நிலையில் ஒரு சிங்களப் பெண்ணுக்கு தமிழ்நாட்டு தமிழர்கள் கோவில் கட்டி கும்பிடுகிறார்கள் என்பதை உங்களால் நினைத்துப் பார்க்கத்தான் முடிகிறதா?

ஆச்சர்யமாக இருந்தாலும் அதுதான் உண்மை. இந்த கோவில் தஞ்சை பெருநகருக்கு சற்று தள்ளி குந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரிக்கு அருகில் இருக்கிறது.
20ஏக்கர் பரப்பளவில் பெரிய காடாக ஒரு காலத்தில் இருந்தாகவும் பெண்கள் கல்லூரி கட்டப்படும்வரை அந்தப் பகுதி முழுவதும் முட்புதர்கள் மண்டிக்கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
mani srikanthan
மூலவராக சிங்கள நாச்சியார்
இது ஒரு காவல் தெய்வம் மட்டுமே, இதனை யாரும் குல தெய்வமாக கும்பிடுவது இல்லை. ஆரம்ப காலத்தில் சிங்கள நாச்சியார் கோவில் என்று அழைக்கப்பட்ட இந்தக் கோவில் செங்கலாட்சி என்று மருவி தற்போது செங்கமல நாச்சியார் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
ஊருக்கு வெளியில் இந்தக் கோவில் இருந்த காரணத்தால் காட்டுக்கோவில் என்றும் இதனை அழைக்கிறார்கள்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தீப ஆராதனைகள் நடைபெற்றாலும், வருடத்துக்கு ஒரு முறை மாசி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை இரவு பூஜைகள் நடைபெறுகின்றன அதனை தொடர்ந்து ஐந்தாம் நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த கோவிலை அண்மித்து வாழ்பவர்கள் யாரும் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் அல்ல என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
இந்த கோவிலில் பூஜை நடத்துபவர்களை அம்பலக்காரர்கள் என்று அழைக்கிறார்கள். இவர்கள் தற்போது வடக்கு பூக்காரத்தெரு, தெற்கு பூக்காரத்தெரு பகுதிகளில் வசித்து வருகிறார்கள். வழிப்போக்காக வந்து அம்பலத்தில் தங்கியவர்களே அம்பலக்காரர்கள் ஆனார்கள் என்பதே பலரின் கருத்தாக இருந்தாலும்,
mani srikanthan
ஒரு சிங்களத்தி எப்படி வழிப்போக்காக தஞ்சைக்கு சென்றிருக்க முடியும் என்பதுதானே உங்களின் கேள்வி. பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகத்தில் கல்கியின் கூற்றின்படி,
பிற்காலத்தில் பொன்னியின் செல்வர் இராஜஇராஜ சோழனாக சிங்காதனம் ஏறியபோது அவர் பெரிதும் மதிக்கும் ஈழத்து ராணி என்று அவரால் அழைக்கப்பட்ட மந்தாகினி தேவிக்காக ஒரு கோயில் எழுப்பியதாகவும், அதனை சிங்கள நாச்சியார் கோவில் என்று அழைத்ததாகவும் பிறகு அந்த பெயர் திரிந்து ‘சிங்காச்சியார் கோயில்’ என்று ஆயிற்று என்று குறிப்பிடும் அவர்,
‘இன்றைக்கும் தஞ்சை நகரின் ஒரு பகுதியில் சிங்காச்சியார் கோவில் என்ற பெயருடன் ஒரு சிறிய சிதிலமான கோவில் இருந்து வருவதைத் தஞ்சைக்கு செல்லுகிறவர்கள் விசாரித்துத் தெரிந்துக் கொள்ளலாம்."
என்று சொல்லி அந்த பத்தியை கல்கி முடித்திருக்கிறார்.
mani srikanthan
ஆனாலும் இந்தக் கோவிலில் சோழர் கட்டடத்துக்கான எந்த சுவடுகளும் இல்லை. பொன்னியின் செல்வனின் குறிப்பைத் தவிர வேறு வரலாற்று ஆவணங்களோ கல்வெட்டுகளோ இல்லை. அதோடு மூன்றாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தின்போது, மாரவர்மன் சுந்தரப்பாண்டியன் சோழர்களை வீழ்த்தி தஞ்சையை தரைமட்டமாக்கி எரியூட்டி அழித்ததோடு கழுதை கொண்டு உழுது வரகு விதைத்தானாம். அப்போது தஞ்சை பெரிய கோவிலை தவிர வேறு எதுவும் மிஞ்சவில்லையாம். அந்த சந்தர்ப்பத்தில் இந்த சிங்கள நாச்சியார் சமாதியும் தரைமட்டமாகி இருக்கலாம் பிற்காலத்தில் வந்தவர்கள் அந்த இடத்தில் கோவில் எழுப்பியிருக்கலாம். என்றும் சொல்லப்படுகிறது.
இந்த சிங்களநாச்சி கோவிலோடு சியமளா தேவியையும் மக்கள் வழிபடுகிறார்கள்.

செவி வழி கதைகளின் படி இவர்கள் இருவரும் வாய்பேச முடியாத, காது கேளாத ஊமைச் சகோதரிகள். இவர்கள் இருவரையும் வைத்து கல்கி ஒரு அழகான கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பார்.
அதன்படி மதுராந்தக சோழனை ஒரு ஊமைப்பெண் வளர்ப்பதாகவும், அருண்மொழி தேவனை ஒரு சிங்களப் பெண் காப்பாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.
mani srikanthan
நடேசன்
“அந்த இரண்டு சிங்களப் பெண்களும் ஒரே சிங்களக் கணவனை மணந்ததாகவும் ஒரு சமயம் மன்னரை பார்க்கச் சென்ற கணவன் திரும்பிவராமல், தவித்துப் போன அவர்கள், பிறகு தமது கணவனுக்கு அரண்மனையில்  மரண தண்டனை கொடுக்கப்பட்டதாகவும் அதனால் துயரம் தாங்காத அந்த இரண்டு பெண்களும் தமது உயிரை மாய்த்துக் கொண்டார்கள் என்றும், அதன் பிறகு அந்த இடத்தில் சில அமானுஷ்யமான விசங்கள் நடக்கவே அதைப்பார்த்து பயந்த ஊர் மக்கள் அதை எல்லைக் கடவுளாக நினைத்து வழிப்பட்டதாக  ஒரு கதை இருக்கிறது” ன்னு தஞ்சாவூரில் வசிக்கும் நடேசன் என்பர் எம்மிடம் கூறினார்.
ஆரம்பகாலத்தில் இந்தக் கோவிலில் சிலைகள் எதுவும் இல்லாமல் இது ஒரு நினைவாலயமாகவே இருந்ததாகவும் பிற்காலத்தில்தான் சிலைகள் வைத்து வழிபாடு தொடங்கியதாகவும் சிலர் சொல்கிறார்கள். இப்போது இந்தக் கோவிலில் சிங்கள நாச்சியாரோடு எல்லை சாமிகளான மதுரை வீரன், கருப்புசாமி, வேதமுனி உள்ளிட்ட சில காவல் தெய்வ சிலைகளையும் பார்க்ககூடியதாக இருக்கிறது.
இந்தக் கோவில் பெரிய அளவில் வெளியே தெரியாமல் போனதிற்கு முக்கிய காரணம். ஊருக்கு ஒதுக்குப்புரமான ஒரு காட்டுக்குள் அமைந்திருந்ததுதான். அத்தோடு வெள்ளையர்களின் ஆட்சிக்காலத்தில் உணவுக்கு கஷ்டப்பட்டவர்கள் வேறுவழியில்லாமல், இந்த கோவில் இருக்கும் பகுதியில் மறைந்திருந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. அடர்ந்த காடு என்பதால் பாம்புகளும் நிறைய அங்கே குடியிருந்ததாம்.
இப்போது இந்தப் பகுதியில் பெரிய ஆள்நடமாட்டம் இல்லை என்றாலும் குந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரி மாணவிகளே இந்த கோவிலில் தினமும் வழிபாடு செய்து வருகிறார்கள்.

face பக்கம்

Sunday, October 15, 2017

‘தரமணி’ என்ற வயது வந்தவர்களுக்கான ஒருபடம் வந்திருக்கிறதாமே? பார்த்தீர்களா?


ஜோதி கண்ணா, வெள்ளவத்தை
வயது வந்தவர்களுக்கான படம் என்றதும் எதைஎதையோ கற்பனை செய்து கொள்ளாதீர்கள். இது அந்தவகை படமல்ல. முதிர்ச்சியடைந்த ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும்போது ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி பேசும் படம். ஒவ்வொரு இளைஞனும் யுவதியும் பார்க்க வேண்டிய படம்.

ஆல்தியா ஆங்கிலோ இந்தியப் பெண்.அந்த கலாசாரப்படி உடை அணிபவள். தகவல் தொழில்நுட்பத் துறையில் 50 ஆயிரம் ரூபா சம்பளம் வாங்குகிறார். கூட இருந்தவன் இருபால் விரும்பி என்பதால் அவனைவிட்டு விலகுகிறாள். அந்த நிலையில் எந்த குறிக்கோளும் இல்லாத பிரபுநாத் என்ற இளைஞனை சந்திக்கிறாள். பிரபுநாத் சௌமியா என்ற யுவதியை விரும்புகிறான். சௌமியாவும் ஐ.டி.துறையில்தான் இருக்கிறாள். ஆனால் குறைந்த சம்பளம் பிரபுநாத் நிறைய பெண்களுடக் பழகியவன். ஆல்தியாவுக்கும், பிரபுவுக்கும் உள்ள நெருக்கம் காதலாகி மாறுகிறது. மெல்ல மெல்ல அதனையும் தாண்டுகின்றது. இந்தநிலையில் அவர்களிடையே ஏற்படும் மோதல்,ஊடல், முரண்பாடுதான் தரமணி
‘தரமணி’ ஒரு வித்தியாசமான காதல்கதைதான். ஆனால் காமம் நிறைந்த காதல்கதை.
காதலுக்கு அச்சாரமே காமம்தான். மனதில் ஏற்கனவே வரிந்துள்ள ஒரு ஆளையோ பெண்னையோ நேரில் காணும்போது அதனால் ஈர்க்கப்படுவதுதான் காதலின் ஆரம்பம். அதற்கு அடிப்படை காமம்தான். இதில் ஒருவகை குறிப்பிட்ட பெண் பேசுவதை சிரிப்பதை நடப்பதை ரசிக்கச் செய்கிறது. தூர இருந்து ரசிக்க செய்கிறது. அந்த ஆண் அல்லது பெண்னை மதிக்கச் செய்கிறது. பூஜிக்கக் செய்கின்றது. இந்தக்காதல் திருமணத்தில் இழந்தபின் காதல் முடிந்து காமம் தலைதூக்குகிறது. அதனால்தான் கணவன் மனைவிக்கிடையே மோதல்கள் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. அதேபோல் ஆணின் ஆணாதிக்கம் தலைதூக்கி பெண்ணை அடிமைப்படுத்துகிறது. வேறு வழியின்றி பெண் ஆணுக்கு கீழ்ப்படிய நேரிடுகின்றது. ஆண்களின் நிறையப்பேர் சபலம் நிறைந்தவர்கள். பெண்ணை அடக்கியாள நினைப்பவர்கள். இதைத்தான் சொல்கிறது தரமணி’


தமிழ்சினிமாவில் என்ன புதுசு?
மொஹமட் ஜிப்ரி. வாழைச்சேனை
எப்போதும்வரும் கேள்வி இன்றும் வந்திருக்கிறது. இன்று எழுதுவதற்கு இரண்டு விஷயங்கள் உள்ளன. இரண்டும் சாதனைகளைப் பற்றியது. தமிழ்சினிமாவில் சங்ககிரி ராஜ்குமார் ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
'வன்'(ONE) என்ற படத்தை எவரது உதவியையும் பயன்படுத்தாமல் தனிமனிதனாக எடுத்து முடித்திருக்கிறார் இவர். கதை எழுதுவதில் ஆரம்பித்து திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, கலை, காஸ்டியூம், ஒப்பனை, எடிட்டிங், டப்பிங், கிராபிக்ஸ், இசை என்ற அனைத்து துறைகளையும் தனி ஒருவனாகவே இவர் செய்து முடித்திருக்கிறார். அவரது சாதனையை நிரூபித்துக் காட்டுவதற்காக தான் செய்த அனைத்து வேலைகளையும் ஆரம்பம் முதல் இறுதிவரை மற்றொரு கமெராவில் பதிவு செய்திருக்கிறார்.
ஒரே நபரால் எடுக்கப்பட்ட படம் என்றாலும் நிறைய கதாபாத்திரங்கள் இந்த படத்தில் உள்ளன. அனைத்து கதாபாத்திரங்களிலும் இவர் ஒருவரே வெவ்வேறு தோற்றங்களில் நடித்திருக்கிறார். வயதான தோற்றம் உள்ளிட்ட சில கதாபாத்திரங்களை மோஷன் கெப்சர் முறையில் செய்திருக்கிறார். ஒகேனக்கல், தலக்கோணம் ஆகிய இடங்களில் அடர்ந்த காடுகளிலும் இமயமலை பிரதேசங்களிலும் தனியாக படப்பிடிப்பை நடித்தியிருக்கிறார். கிளைமேக்ஸ் காட்சி அமெரிக்காவில் எடுக்கப்பட்டுள்ளது. தனியாகவே அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியிருந்ததால் படத்தை எடுத்து முடிக்க நான்கு ஆண்டுகள் சென்றுள்ளது.
அடுத்த சாதனைகளும் வித்தியாசமாவை. நடிகர் அஜித்தின் ‘விவேகம்’ படம் கடந்த மாதம் வெளியானது அல்லவா? அதனையொட்டி அஜித் ரசிகர்கள் செய்த சில சாதனைகள் இவை:
அஜித்தின் 150 அடி உயர கட்அவுட். இது திருநெல்வேலியில் நாம் இந்துராம் திரையரங்கில் வைக்கப்பட்டது. அடுத்ததாக வட சென்னையில் உள்ள வீர சென்னை அஜித் நண்பர்கள் சார்பாக பாரத் திரையரங்கு முகப்பில் வைக்கப்பட்ட 57 கிலோ எடை கொண்ட இட்லி. இந்த இட்லியில் அஜித் உருவரம் பொறிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த நடிகருக்கும் இதுமாதிரி இட்லி வடிவத்தில் அவர்களது உருவம் பொறிக்கப்பட்டதில்லை. முதலில் அஜித் உருவம் போல ஒரு மாடல் வரைந்து அதற்கு மேல் இட்லி மாவை ஊற்றி இந்த இட்லியை செய்திருக்கிறார்கள். இட்லி வெந்த பிறகு அதன்மேல் கை வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாரத் திரையரங்க முகப்பில் இந்த இட்லி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Saturday, October 14, 2017

மூன்று வயது மகளை கொன்ற தந்தை


ராம்ஜி

வெளிநாட்டு குற்றச் செயல்களை விசாரிக்கும் இந்த நீதிமன்றத்துக்கு இன்று விசாரணைக்கு வந்திருப்பது அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் இடம்பெற்ற ஒரு கொலைச் சம்பவம்.
இன்று குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டிருப்பவரைத் தான் நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள்.

இவரது பெயர் ஜொஷீவா சலோவிச். இவரது வயது 25. பயிற்சிபெற்ற குத்துச்சண்டை வீரர்.
திருமணம் செய்துள்ள இவருக்கு 3 வயதுடைய ஒரு மகள் இருந்தாள். அவளது பெயர் பெய்லி சலோவிச். தனது மூன்று வயது மகளை கொலை செய்த குற்றத்தின் பேரில் இவர் கைதுசெய்யப்பட்டு இங்கு விசாரணை கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
தனது மூன்று வயது மகளை கொலை செய்ய அவரது தந்தையான ஜொஷீவா சலோவிக் மூஸ்சில் 14 தொலைபேசி வயர் மற்றும் தனது கரங்களை பயன்படுத்தியுள்ளார். கணிதம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கவில்லை என்ற காரணத்துக்காகவே ஜொஷீவா அவரது மகளை கொலை செய்திருக்கிறார் பார்த்தீர்களா? எவ்வளவு ஒரு அற்பமான காரணம் ஒரு கொலைக்குக் காரணமாக இருந்திருக்கிறது!

தான் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில்களை கூற முடியாத நிலையில் தனது மகள் இந்த உலகத்தில் எதிர்காலத்தில் உயிர்வாழ்வதற்கு பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று கருதியதாலேயே தனது மகளை கொலை செய்தாக ஜொஷிவா சலோவிச் பொலிஸாரிடம் காரணம் தெரிவித்திருக்கிறார். இந்த உலகத்தில் வாழ்வது என்பது மிகவும் கஷ்டமானது என்பதும் தாக்குப்பிடிக்க வேண்டுமானால் அவள் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும் என்பதும் ஜொஷீவாவின் கருத்து

கணக்கு பாடத்தில் இது, போன்று வாரத்துக்கு ஐந்து தடவைகள் ஜொஷீவா தனது மகளிடம் கேள்வி கேட்பது வழக்கமாகும் சரியான பதில் கூறாவிட்டால் அவளை அடிப்பதும் வழக்கம். ஆனால் இம்முறை பெய்லியை பலமாக தாக்கியதால் பெய்லியின் உடம்பில் சிராய்ப்பு காயங்களும், வெட்டு காயங்களும் எற்பட்டன. தலையிலும் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு பெய்லி எடுத்துச் செல்லப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தாக்குதல் நடந்த போது பெய்லியின் தாய் வீட்டின் மற்றொரு அறையில் இருந்ததாக தெரியவருகிறது. ஆனால் தனது மகள் தாக்குதலுக்குள்ளாகியதையடுத்து பொலிஸாருக்கு போன் செய்து பெய்லியை அவரது தாயார்தான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உதவியிருக்கிறார்.
இச்சம்பவத்தை படிக்கும் போது இங்கேயும் ஒரு தந்தை தன் மகன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றி பெறவில்லை என்பதால் மகனுக்கு சூடு போட்ட சம்பவம் ஞாபகம் வரலாம்.நாம் எதற்கு எடுத்தாலும் தண்டனை கொடுக்கவே முயல்கிறோம். இது பரம்பரையாக வரும் ஒரு எண்ணம். ஏனெனில் தவறு செய்தால் கடவுள் தண்டிப்பார் என்றுதான் சிறு வயதிலேயே நமக்கு சொல்லித்தரப்படுகின்றது. எங்கும், எதற்கும் தண்டனையே வழங்கப்படுகிறது. எனவே தண்டிப்பதன் மூலமே திருத்த முடியும் என்பது நம்மில் பதிந்துவிட்ட ஒன்றாக இருக்கிறது. ஆனால் தண்டிப்பதன் மூலம் மட்டுமே எவரையும் திருத்த முடியாது என்பதே உண்மை. 

இருள் உலகக் கதைகள்


வீரசிங்கம் பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்-  மணி  ஸ்ரீகாந்தன்.

நிவித்திகலையை அன்மித்து இருக்கும் அந்த இறப்பர் தோட்டத்தில் பெரிய மாடசாமி கோவிலில் அன்றிரவு கடா வெட்டப் போவதாக ஊர் முழுவதும் பேச்சு அடிப்படவே, சாமி ஆடி அருள் வாக்கு சொல்லும் முனுசாமியும் நேரத்தோடவே கிளம்பி கோயில் அமைந்திருக்கும் சுடுகாட்டு முச்சந்தியை நோக்கி நடந்தான்.

முனுசாமிக்கு நாற்பது வயதிருக்கும் ஆனாலும் சமீபத்தில்தான் திருமணம் முடித்திருந்தான். அவன் மனைவி பவானி முனுசாமி போலவே நிறைய கடவுள் பக்தி கொண்டவள். தினமும் பகல் உணவை சாப்பிடுவதற்கு முன்பாக காகத்திற்கு கொஞ்சம் சோற்றை எடுத்து இலையில் வைத்துவிட்டு சாப்பிடுவதை வழமையாக கொண்டிருந்தாள்.
அதனால் முனுசாமி பகல் நேரத்தில் காகங்கள் கூட்டமாக வீட்டு முற்றத்தில் அமர்ந்து கரைந்து கொண்டிருக்கும்.
அப்படி காகங்கள் வீட்டுக்கு முன்னால் வந்து கரைவதை முனுசாமி விரும்பவதில்லை. காகத்திற்கு சோறு வைக்கக் கூடாது என்று தினமும் மனைவியுடன் சண்டை பிடிப்பான்.
ஆனால் அவன் பேச்சை மீறும் பவானி, கணவனுக்குத் தெரியாமல் காகத்துக்கு சோறு வைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தாள்.
தனது பேச்சை மனைவி மீறுவதை பொறுக்க முடியாத முனுசாமி ஒருநாள் மனைவியை பலங்கொண்ட மட்டும் அடித்து விட்டான்.
அப்படியும் அவள் முனுசாமியின் பேச்சுக்கு அடிப்பணியவில்லை என்பதையறிந்த அவன், ஒரு நாள் காகம் சாப்பிடும் உணவில் விஷத்தை கலந்துவிட, ஐந்துக்கும் மேற்பட்ட காகங்கள் செத்து மடிந்தன பவானி துயரம் தாங்காமல் கணவனோடு சண்டை பிடித்தாள். அன்றிலிருந்து கணவனுடன் எந்த பேச்சும் தொடர்பும் இல்லாமல் இருந்தாள்.
‘கோயிலுக்கு போய் வந்த பிறகு இன்று எப்படியாவது மனைவியை சமாதானம் செய்துவிட வேண்டும்’ என்ற தீர்மானத்தோடு கோயிலை நோக்கி வேகமெடுத்து நடந்தான்.

கோயிலில் கடா வெட்டியதன் பிறகு, அருள் வாக்கு சொல்லிவிட்டு வீடு நோக்கி நடந்தான். அப்போது நேரம் நள்ளிரவு ஒரு மணியைக் கடந்திருந்தது.
அவன் வீட்டு முற்றத்தில் காலடி வைத்தபோது, தூரத்தில் ஒரு தெருநாயின் ஊளைச் சத்தம் மரண ஓலம்போல முனுசாமியின் காதுகளுக்கு கேட்டது.
அப்போது முனுசாமியின் உடல் சில்லிட்டுப் போவதை அவன் உணர்ந்தான்.
வீட்டுக்குள் நுழைந்து பார்த்தபோது அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.அவளைத் தொந்தரவு செய்யக் கூடாது, நாளைக்கு பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தவன், பாயில் சுருண்டு படுத்தான்.
முனுசாமி படுத்து சில மணிநேரங்களில் அவன் வீட்டுக் கூரையில் ஆள் நடமாட்டம்போல கேட்கவே திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான்.
“சே! ஏதாவது பூனையாக இருக்கும்”ன்னு நினைத்தவன் போர்வையை இழுத்துப் போர்த்தி படுத்தான். அப்போது அந்த பகுதி முழுவதும் நிசப்தம் ஆட்கொண்டிருந்தது. அப்போது முனுசாமியின் கழுத்தை நெறிப்பதற்காக அந்த கும்மிருட்டில் இரண்டு கரங்கள் முன்னேறி வந்து அவனின் கழுத்தை பற்றிப் பிடித்தன. ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில் இருந்தவனை ஒரு தீய சக்தி கொன்றுவிட பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தது.
வீரசிங்கம் பூசாரி
முனுசாமின் வயிற்றின் மேல் ஏறி உட்கார்ந்தபடியே அவனின் கழுத்தை அது அழுத்திக் கொண்டிருந்தது. முனுசாமிக்கு மூச்சு தினறியது, ஆனாலும் திடகாத்திரமான உடல்வாகு கொண்டிருந்த அவன் பெரும் கூச்சலிட்டு அலறியபடியே தனது முழு பலத்தையும் பிரயோகித்து அந்த தீய சக்தியை தள்ளிவிட்டான்.

மிகவும் அகோரமான தோற்றத்துடன் காணப்பட்ட அந்த தீய சக்தி அந்த வீட்டின் மூலையில் படாரென வீழ்ந்தது. கண் இமைக்கும் நேரத்துக்குள் அது அந்த இடத்தை விட்டு மறைந்துவிட அங்கே முனுசாமியின் மனைவி மூச்சடைத்து வீழ்ந்து கிடந்தாள்.
மந்திர வேலைகள் முனுசாமிக்கு கொஞ்சம் தெரியும் என்பதால் தண்ணீரை மந்திரித்து பவானியின் முகத்தில் தெளித்தான். விழித்துப் பார்த்த அவள் தன்னை யாரோ அடித்துப் போட்ட மாதிரி உடம்பு வலிப்பதாக கூறியவள் நித்திரையானாள்.

தனது மனைவியை ஏதோ தீய சக்திதான் அண்டியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட முனுசாமி. அது என்னவெல்லாம் பண்ணுமோ என்ற மன பயத்தால் ஆடிப்போனான். தீய சக்தி எதற்காக தனது வீட்டுக்குள் வந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முனுசாமி மேற்கொண்ட மந்திர வேலைகள் எதுமோ பலிக்கவில்லை.

அடுத்த நாள் நள்ளிரவும் வந்தது. ஊரே ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது முனுசாமி மட்டும் அந்த தீய சக்தியின் வரவுக்காக காத்திருந்தான் அவன் கையில் மந்திரித்து வைத்திருந்த தண்ணீர் ஒரு செம்பும் இருந்தது.
அப்போது நேரம் நள்ளிரவு பன்னிரெண்டு மணி இருக்கும். கூரையில் யாரோ நடந்து வருவதைப் போல உணர்ந்தான். ஆனாலும் முனுசாமியின் கவனமெல்லாம் பாவானி மீதே இருந்தது. சில வினாடிகளுக்குப் பிறகு பாவனியின் முகம் மாறி அது விகாரமான தோற்றத்திற்கு வருவதை அவன் கண்டதும் முனுசாமிக்கு குலை நடுங்கியது. ஆனாலும் தைரியத்தோடு கையிலிருந்த செம்பு நீரை அவள் முகத்தில் சலேரெனக் கொட்டினான். அடுத்த நொடியே அவள் முகம் இயல்பு நிலைக்கு மாறியதோடு , அவள் பற்களை நறநறன்னு கடித்தபடியே நினைவிழந்து வீழ்ந்தாள்.

‘அந்த தீய சக்தி தன்னை கொல்வதற்கு குறி வைக்கிறது’ என்பதை புரிந்து கொண்ட முனுசாமி. உடனே இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இறங்கினான். இது தான் சம்பந்தப்பட்ட விசயம் என்பதால், வேறு ஒரு வித்தைக்கார பூசாரியை வைத்துதான் அதன் கதையை முடிக்க வேண்டும் எனத் தீர்மானித்தான்.
முனுசாமியின் திட்டத்திற்கு வித்தைக்கார வீரசிங்கம் பூசாரி துணைக்கு வந்தார். அவரின் மாந்திரீக  பலத்தோடு பூஜைக்கான வேலைகள் தொடங்கப்பட்டன.
மந்திர உச்சாடணம் தொடங்கியதும் பவானி பேயாட்டம் போடத் தொடங்கினாள். இரண்டு முறைதான் வீரசிங்கம் சவுக்கையை சுழற்றியிருப்பார். அதற்குள் அத்தனை விசயங்களையும் அவர் கேட்டு முடித்திருந்தார். முனுசாமி வீட்டுக்கு பகல் சாப்பாட்டுக்கு வரும் காகங்களில் பல இறந்துபோன ஆத்துமாக்களாம், அவைகளோடு உல்லாசமாக காகத்தின் உருவத்தில் சுற்றிக்கொண்டிருந்தாம்  ஒரு எச்சினி. அந்த சுகமான வாழ்க்கையை முனுசாமி விஷம் வைத்து அழித்து விட்டதை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த எச்சினி காகமே.
முனுசாமியை கொன்று புசித்துவிட துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை வீரசிங்கம் கூறியதை கேட்டு ஊர் மக்களின் கோபம் முனுசாமியின் மீதே திரும்பியது. ‘நீ பண்ணுன ஒரு பாவ காரியம் பாரு இப்போ இந்த ஊரை அழிச்சிடும் போல இருக்கே’ என்று மக்கள் பதறினார்கள்.
‘ஒன்னும் பயப்படத் தேவையில்லை. அந்த தீய சக்தி சுதாரிப்பதற்குள், நான் வந்துட்டேன் இனி அதன் கதையை நான் முடிக்கிறேன். என்று தைரியமான வார்த்தைகளை சொன்ன வீரசிங்கம் தமது பரிகார பூஜைகளை போட்டு அந்த தீய சக்தியை பிடித்து ஒரு போத்தலில் அடைத்தார்.
அதன் பிறகுதான் முனுசாமிக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.

தமிழர்களிடம் வாழும் சீன சாமி

                
மணி  ஸ்ரீகாந்தன்.

ழங்கால சடங்கு, சம்பிரதாயங்கள்  மீது எந்தளவுக்கு தமிழர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ, அந்தளவுக்கு புதிய நம்பிக்கை வரவுகளையும் அவர்கள் இருகரம் நீட்டி வரவேற்கத்தான் செய்கிறார்கள்.
சீரடி சாய்பாபா, சத்திய சாய் பாபா, நித்தியானந்தா, கல்கி அம்மா, பங்காரு அம்மா என்று எத்தனை ‘பகவான்கள்’ வந்தாலும் அவர்களை நம்மவர்கள் வரிசைக்கட்டி கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வியாபார ஸ்தலங்களிலும், வீடுகளிலும் வாஸ்த்து மீன் வளர்ப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதேபோல தொப்பையும்,தொந்தியுமாக பார்க்கவே ஆனந்தம் பொங்கும் உருவத்துடன் கடைகளின் கெஷியர் மேசையிலும் பணக்காரர்களின் வீடுகளின் வரவேற்ப்பு அறைகளிலும் நம்மை வரவேற்பதுபோல அமர்ந்திருக்கும் ‘லாப்பிங் புத்தா’ இவை இரண்டும் சாட்சாத் மேட் இன் சைனாதான்!
ஆனாலும் நம்மவர்களால் குபேர கடவுள் என்று அழைக்கப்படும் அந்த தொப்பை சாமிக்கு சீனாவில் லாப்பிங் புத்தா (சிரிக்கும் புத்தர்) என்று பெயர். எனினும் இந்து மதத்தில் குறிப்பிடப்படும் குபேரனுக்கும் சீனாவின் லாப்பிங் புத்தனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சீனாவில் சிரிக்கும் புத்தனைப்போல ஒருவர் வாழ்ந்ததாக ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையின்படி அந்த மகானின் பெயர் பூடேய். அவர் சீனாவின் லியாங் முடியாட்சிக் காலத்தில் வாழ்ந்த ஒரு பவுத்த பிக்கு.
கருணை, தயாள உள்ளம் படைத்த இந்த மகானை முக்கிய ஏழு கடவுள்களில் ஒருவாராக சீனாவின் தாவோ, மற்றும் ஜப்பானின் ஷிண்ட்டோ உள்ளிட்ட மதங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.
கிழக்காசிய மக்கள் சிரிக்கும் புத்தனை பூடேய் என்று அழைக்கிறார்கள். ஜப்பானியர்கள் ஹோடேய் என்று இந்த தொப்பை சாமியை அழைக்கிறார்கள். ஆனால் நம்மவர்கள் செல்வம் கொடுக்கும் குபேரன் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

சீனாவில் பல ஆண்டுகளாக வாழ்ந்த இந்த சிரிக்கும் புத்தன் அந்த மக்களிடையே பிரபலமாகுவதற்கு முக்கிய காரணம் அவரின் வானிலை அறிவிப்புகள்தான். இன்று மழை வரும் என்பதை அறிவிக்க அவர் ஈரக் காலணியை அணிந்திருப்பாராம். மரக் காலணியை அணிந்திருந்தால் அன்று வெயில் நிச்சயம் என்று அந்த நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்திருந்தார்களாம்.அதேபோல அந்த ஊரின் பாலத்தில் அவர் குந்தியிருந்து அவர் தூங்கினாலும் அன்று மழை நிச்சயம் பெய்யுமாம்.
பூடேய் பெரும்பாலான சிறந்த கவிதைகளை படைத்து தமது மக்களுக்காக விட்டுச்சென்றிருப்பதாக சீனர்கள் சொல்கிறார்கள்.
‘பத்தாயிரம் தர்மங்கள்
எத்தனை வேறுபாடுகள்
மனம்?
அதை எப்படி வேறுபடுத்த?
மத நூல்களை தேடி என்ன பயன்?
மன அரசன் தன்னியல்புடன்
அனைத்து அறிவடுக்குகளையும் துறந்து
கற்காதிருக்கக்
கற்பவனே அறிஞன்?
என்று தியானத்தின் மூலம் மனம் மேம்படும் என்பதை பூடேய் தமது கவிதையில் இப்படி கூறியிருக்கிறார்.

சிரிக்கும் புத்தனின் கல்லறை சீனாவின் செக்கியான் மாநிலத்தின் 
இயூ-லிங் ஆலயத்தில் காணப்படுகிறதாம். அந்த ஆலயத்தில் சிரிக்கும் புத்தனை சித்தரிக்கும் பழங்கால ஓவியம் இன்றும் இருக்கிறதாம்.
சீனப் பொருட்கள் உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் சிரிக்கும் புத்தன் சீன  எல்லைகளை கடந்து உங்கள் வீட்டு வரவேற்பறையிலும் ஜம்மென்று அமர்ந்திருப்பது சீனர்களுக்கு மகத்தான வெற்றிதான்.
குபேரன்

அதோடு சிரிப்பு என்பது ஒரு அருமருந்து, வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள். நம்மில் எண்ணிக்கையில், கணக்கிடமுடியாத கடவுள் பொம்மைகள் இருந்தாலும், இந்த பூடேய் போன்று ஒரு சிரிக்கும் பொம்மை நமது கடவுள் பொம்மைகளில் இல்லை. அதுவும் இப்படி ஓரு கள்ளம் கபடமில்லாத, வஞ்சகம் இல்லாத சிரிப்பை பார்ப்பது மனதுக்கு ஒரு மட்டற்ற மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.
சிரிக்கும் புத்தனின் தோற்றம் குழந்தைகளின் மனதிலும் பதிந்து விடுவதால், இனி தமிழர்களிடையே இருந்து இந்த ‘லாப்பிங்’ புத்தனை அவ்வளவு எளிதில் பிரித்துவிட முடியாது.

பார்ப்பதற்கு மொட்டைத்தலை, சுறுக்கங்கள் விழுந்த நெற்றி பொக்கை வாய் சிரிப்பு என்பதால் மட்டும் இவருக்கு சிரிப்பு புத்தன் என்று பெயர் வந்துவிட்டதாக நீங்கள் கருதினால் அது தவறு.
அங்கியால் மூடப்படாத உருண்டையான தொப்பையும், குண்டான உருவமும் முழுத் திருப்தியை வெளிப்படுத்துகிறதாம். இவர் புத்தரின் பல அவதாரங்களின் ஒன்றான போதிசத்வ மைத்திரேய என்பதே சீனர்களின் நம்பிக்கை. போதிசத்வ மைத்திரேய என்றால் எதிர்காலத்தில் வரவுள்ள புத்தர் என்று அர்த்தம்.

 மைத்ரேய என்பது மைத்திரி என்ற  வடமொழிச் சொல்லிருந்து உருவானது மைத்திரி என்றால் கருணை, பெருந்தன்மை, நட்பு, தோழமை, நல்லெண்ணம் ஆகிய பல அர்த்தங்களை கொடுக்கிறது.
அதனால் இந்த மைத்திரியே புத்தனை மீ-லே-பூ என்றும் சீனர்கள் செல்லமாக அழைக்கிறார்கள்.
சீனாவில் ரொம்பவும் பொறுமைசாலியாக இருப்பவர்களை ‘பெருவயிறுடையவன்’ என்று அழைப்பார்கள். எனவே பூடேய்க்கு இந்தப் பெருவயிறு உருவாக அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அதோடு நமது கஷ்ட நஷ்டங்களை அவர் பெற்றுக்கொண்டு அதற்கு உபகாரமாக நமக்கு அழியாத செல்லவத்தை வாரி வழங்குவதாகவும் ஒரு நம்பிக்கை உலா வருகிறது.
குபேரன்

சிரிக்கும் புத்தனின் தொப்பையை தடவினால் செல்லவம் கிடைக்கும் என்பது ஒருபுறமிருக்க, சீனாவில் இவர் குழந்தை செல்வம் அருளுபவராகவும் திகழ்கிறார். இவரது தொப்பையை தடவும் பெண்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கிம் கிடைக்கும் என்பது சீனாவில் இன்றுவரை இருந்து வரும் பரவலான நம்பிக்கை.

உணவகங்கள், சலூன் மற்றும் கடைகளிலேயே இந்த லாப்பிங் புத்தனை அதிக நம்பிக்கையுடன் வைத்திருக்கிறார்கள் தமிழர்கள். செல்லவத்தை வாரி வழங்கும் குபேரன் இதுதான் என்பது தமிழர்களின் தப்பான எண்ணம். இந்து மதத்தில் உள்ள குபேரனுக்கும், சிரிக்கும் புத்தனுக்கும் இடையே சின்ன வித்தியாசம்தான் இருக்கிறது. நமது ஒரிஜினல் குபேரனின் தலையில் கிரீடம் இருக்கிறது. பெரிய தொப்பை வயிறு, மூடைகளுக்கு பதிலாக பெரிய பெரிய குடங்கள்,பானைகளில் செல்லவம் கொட்டிக்கிடக்கிறது.சில படங்களில் குபேரன் மகாலட்சுமியுடனும் காட்சி தருவார். அவரோடு குபேரனின் மனைவி யட்சியும் உடன் இருக்கிறார்.அண்டா குண்டாக்களில் செல்வம் கொட்டிக்கிடக்க, ஒரு தாமரையின் மீது வெள்ளை நிறத்தில் ஒரு மீன் இருக்கிறது.(அது வாஸ் மீனாக இருக்கலாம்) சிரிக்கும் புத்தனுக்கு இருக்கும் அந்த ஆனந்த சிரிப்பு மட்டும் மிஸ்ஸிங். தமிழகத்தில் சென்னை சுருட்டப்பள்ளியில் உள்ள ஈஸ்வரன் ஆலயத்தில் குபேரன் சன்னதி உள்ளது. அதோடு கீவளுர் அட்சயலிங்கேஸ்வரன் ஆலயம் உள்ளிட்ட பல இடங்களில் குபேரன் வழிபாடு உள்ளது.
குபேரனின். உருவம் வாஸ்து மீன் உள்ளிட்டவைகளை உற்று நோக்கும்போது சிரிக்கும் புத்தனின் மொடலை நம்ம ஊர்லயே சுட்டு எடுத்து சென்ற சீனர்கள் அதை நமக்கே விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
சிவபக்தனான குபேரன் தன்னுடைய சிவவழிபாட்டால் வடதிசைக்கு அதிபதியானதால் எண்திசை பாலகர்களில் ஒருவர் என்று அழைக்கப்படுகிறார். சிவபக்தியின் காரணமாக சிவபெருமான் சுவர்ண பைரவராக குபேரனுக்கு செல்வதினை நிர்வகிக்கும் பொறுப்பினை தந்தார்.
திருப்பதி ஏழுமலையானுக்கு குபேரன் கடன் கொடுத்ததாக கதையுண்டு. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை.

தேவர்களின் சிற்பியான விஸ்கர்மா குபேரனுக்காக அழகாபுரி எனும் பட்டினத்தினை படைத்துத் தந்தார். இந் தநகரம் குபேரபட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போதைய இலங்கையே பண்டைய நாளில் அழகாபுரியாக இருந்ததாக ஒரு கருத்துண்டு.

ராவணனுக்கு முன்பு குபேரனே இலங்கையின் அதிபதியாக இருந்ததாகவும் அவரிடமிருந்து இலங்கையை ராவணன் கைப்பற்றி ஆட்சி செய்ததாகவும் ஒரு கதை உண்டு.
குபேரபட்டினமான அழகாபுரியில் அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் மெத்தை, மீனாசனம் ஆகியவைகளின் மீது அமர்ந்து ஒரு கை அபயமுத்திரை, கிரீடம் முதலிய தங்க ஆபரணங்களுடன் முத்துக் குடையின் கீழ் சிம்மாசனத்தில் தனது தர்ம பத்தினியான யட்சியுடன் அமர்ந்திருக்கிறார். சிவந்த மேனியும் குள்ளமான உருவமும், பெரிய வயிறும் உடையவராக குபேரன் சித்தரிக்கப்படுகிறார்.