Monday, December 26, 2016

இருள் உலகக் கதைகள்
வீரசிங்கம் பூசாரி சொன்ன பேய்க் கதை

கேட்டு எழுதுபவர்- மணி  ஸ்ரீகாந்தன்

அப்போது நேரம் மாலை ஆறு மணியிருக்கும். அரபலாகந்த தோட்டம். இறப்பர் மரங்களால் சூழப்பட்டு இருள் கவ்விய ஒரு அமானுஷ்ய தோற்றத்தை உருவாக்கியிருந்தது. தலைவர் லயம் நோக்கி செல்லும் குறுக்குப் பாதையில் மூக்குமுட்ட குடித்துவிட்டு படுத்திருந்த நல்லகண்ணு 'பேயாவது, பிசாசாவது தைரியமிருந்தா என்னை தொட்டு பாருங்கடா!' ன்னு போதையில் உளறிக் கொண்டிருந்தான். அப்போது தூரத்தில் ஒரு தெரு நாய் உடம்பை படபடவென ஆட்டி உதறிவிட்டு வானத்தை பார்த்து ஊளையிட துவங்கியது. அரப்பலா கந்தையில் சில நாட்களாகவே ஏற்பட்டு வரும் அமானுஷ்ய சம்பவங்களால் மக்கள் பீதியடைந்து மாலை ஏழு மணிக்கெல்லாம் கதவுகளை சாத்திக் கொள்கின்றனர். தலைவர் லயத்து கடைசி வீட்டில் குடியிருக்கும். சின்னத்தம்பி - சரசு வீட்டில் மட்டும் சிரிப்பும், அழுகையும் ஊரின் அமைதியை சிதைத்துக் கொண்டிருந்தது. கடந்த முப்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக அந்த வீட்டில் அமானுஷ்ய விசயங்கள் நடைபெறுவதால் அந்த வீட்டை பேய் காம்பரா என்றுதான் தோட்ட மக்கள் அழைத்து வந்தார்கள்.
சின்னத்தம்பி திருமணம் முடித்த நாளிலிருந்து இன்றுவரை அவள் மனைவிக்கு பேய் விரட்டியே பணத்தையெல்லாம் செலவழித்து கடன்காரனாகிக் கிடந்தான். ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையில் அந்தக் குடும்பம் இருந்தது. இனி சரசுவின் உடம்பிலிருந்து பேயை விரட்டுவது கஷ்டம் என்று முடிவெடுத்த சின்னத்தம்பி, தனது காதல் மனைவி சரசுவுடனேயே குடும்பம் நடத்தி மூன்று பிள்ளைகளுக்கு தந்தையாகவும் மாறிவிட்டான். ஆனால் சரசுவின் உடம்பை விட்டு துஷ்ட ஆவி மட்டும் வெளியேறவே இல்லை. இப்படியான சம்பவங்களால் அரபலாகந்தை தோட்டத்தில் சின்னத்தம்பியை தெரியாதவர்களே இல்லை. பேயுடன் வாழ்க்கை நடத்துவது. சாதாரண விசயமா? ஊர் முழுக்க பரவிய இந்தக் கதை தோட்டத்தின் எல்லையை கடந்து ஏனைய தோட்டங்களுக்கும் பரவிக் கொண்டிருந்தது. களுத்துறை பகுதியில் பிரபல பூசாரியாக திகழும் வீரசிங்கத்தின் காதுகளுக்கும் சின்னத்தம்பியின் கதை தெரிய வரவே, முப்பத்தைந்து வருடங்களாக விரட்ட முடியாத பேயை விரட்ட வீரசிங்கம் முடிவெடுத்தார்.

வீரசிங்கம் பூசாரிக்கு இது சவாலான விசயமாக இருந்ததால் பணம் எதுவும் பெறாமல் இலவசமாகவே செய்து கொடுக்க முடிவெடுத்து ஒரு நாளையும் குறித்துக் கொண்டார். பின்னர் குறிப்பிட்ட நாளில் தமது சகாக்களோடு சின்னத்தம்பியின் வீட்டிற்குள் நுழைந்தார். பூசாரி வீட்டுக்குள் நுழையும் போதே அந்த வீட்டில் தீய சக்திகள் குடியிருப்பதை தனது ஞான திருஷ்டியில் வீரசிங்கம் உணர்ந்து கொண்டார். பூஜைக்கான ஏற்பாடுகள் தடாலடியாக நடந்தேறின. பரிகார மன்றில் வீரசிங்கம் அமர்ந்து மந்திரங்களை உச்சாடனம் செய்யத் தொடங்கினார்.

சின்னத்தம்பியின் மனைவியின் உடம்பில் பேய் எப்படி குடியேறியது என்பதை கண்டறியும் முயற்சியில் வீரசிங்கம் இறங்கியபோது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக நடந்த அந்தச் சம்பவம் ப்ளாஷ் ஃபேக்காக அவரின் மனக் கண்ணுக்குள் காட்சிகளாக விரியத் தொடங்கியது.

சின்னத்தம்பி திருமணம் முடித்து வந்த புதிதில் தனது மனைவி சரசுவுடன் குளிப்பதற்காக 'டோபி கானா' என்று அந்தக் காலத்தில் அழைக்கப்பட்ட வண்ணான் கால்வாய்க்கு சென்றார்கள். அப்போது நேரம் மாலை ஆறரை மணியிருக்கும். இறப்பர் மரங்களால் இருளாகக் காணப்பட்ட அந்த வண்ணான் கால்வாய் பார்ப்பதற்கே மிரட்டலாக இருந்தது. சின்னத்தம்பியோடு சரசு அந்த ஆற்றுக்குள் இறங்கினாள். அப்போது இறப்பர் மரங்களின் பின்னாலிருந்து ஒரு உருவம் தன்னை கவனிப்பதாக எண்ணிய சரசு திடுக்கிட்டு அங்கே பார்க்க, அந்த இடத்தில் அப்படி யாரும் மறைந்து இருந்ததற்கான அறிகுறிகளே தென்படவில்லை. ஆனாலும் அந்த விசயத்தை அவள் சின்னத்தம்பியிடம் சொன்னபோது 'அது மனப்பிரமை' என்று அவளை அவன் ஆறுதல் படுத்தினான். பிறகு இருவரும் தண்ணீரில் இறங்கி மூழ்கி குளித்தார்கள். ஆனாலும் சரசுவிற்கு அந்த இடம் பயத்தை உருவாக்கியிருந்தது. உடம்பிற்கு சவர்க்காரம் போட்டுக் கொண்டிருந்த அவள் பயந்த சுபாவத்தோடு அங்கும் இங்கும் நோட்டம் விட்டவாறே இருந்தாள். அப்போது சின்னத்தம்பி நீருக்குள் மூழ்கினான். அவள் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். சின்னத்தம்பி மூழ்கியிருந்த நீர்ப்பரப்புக்கு மேலே நீண்ட தலைமயிர் தலைகாட்டத் தொடங்கியது. அதைப்பார்த்த சரசுவிற்கு உடல் வெடவெடக்க கூர்ந்து பார்த்தாள். அப்போது ஒரு உருவம் கோரமான முகத்தோற்றத்தோடு நீரோடு வெளியே எழும்பியது. அந்தக் காட்சியை கண்ட அடுத்த நிமிடமே சரசு மயங்கி விழுந்தாள். 'ப்ளாஷ் ஃபேக்' காட்சிகளை மனக்கண்ணில் கண்ட வீரசிங்கம் சுயநினைவு வந்தவராக சரசுவை அட்சர கோட்டில் அமர வைத்தார்.
வீரசிங்கம் பூசாரி

முப்பத்தைந்து வருடங்களாகக் குடியிருக்கும் அந்தப் பேயை வீரசிங்கம் பூசாரி விரட்டப் போவதால் அந்த செய்தி காட்டுத் தீயாய் பரவி, ஊர் சனங்களெல்லாம் பேய் ஓட்டும் படலத்தை பார்வையிட குவிந்து விட்டார்கள். வீரசிங்கத்தின் மந்திர உச்சாடனம் வானைப் பிளந்தது. அப்போது சரசுவின் பேயாட்டமும் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. அப்போது சரசுவின் உடம்பிலிருந்து வெளிப்பட்ட ஒரு துஷ்ட ஆவி குடிப்பதற்காக சாராயம் கேட்டபோது அங்கே நின்றிருந்த ஒரு நபர் அதை எடுத்துக் கொடுத்தார். சாராயத்தை வாங்கி அதை தமது முதுக்குப் பின்னால் மறைத்துவிட்டு, பூசாரியை பார்த்து நக்கலாகச் சிரித்தது.

பூசாரி அந்த துஷ்ட ஆவியை கண்டுகொள்ளாமல் வேறு பக்கமாக திரும்பிய அடுத்த நொடியே சாராயத்தை எடுத்து லபக்கென்று வாயில் ஊற்றிவிட்டு வாயை அந்த துஷ்ட ஆவி துடைத்தது. அப்போது பூசாரி பக்கத்தில் வந்த ஒரு முதியவர், "சாமி, இது எங்க அக்கா செல்லாத்தாங்க. அவங்கதான் சாராயத்தை ஒளித்து வைத்து குடிக்கிறதுல கில்லாடிங்க. சரசுவுக்கு அத்தை உறவுங்க" என்று சொன்னார். ஆனாலும் இதைவிட வேறு ஒரு தீய சக்தியும் சரசுவின் உடம்பில் இருப்பதாக பூசாரி ஆணித்தரமாக நம்பினார்.

அதனால் பூசாரியின் மந்திர உச்சாடணங்களை அதேவேகத்தில் தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் சரசுவின் ஆட்டம் பன்மடங்காக அதிகரித்தது. அவளின் ஆட்டமும், பார்வையும் ஒரு ஆணின் தோற்றத்தையே கொடுத்தது. ஆளை வெளியே எடுத்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி பூசாரியின் முகத்தில் பூரிப்பாக பளீச்சிட்டது. அடுத்த சில நொடிகளில் சரசுவின் உடம்பிலிருந்து வெளிப்பட்ட துஷ்ட ஆவி அங்கே நின்றிருந்த ஒரு நபரை அழைத்து,

"டேய் உனக்கு நான் யாருன்னு தெரியுமே? எனக்கு பிடிச்சதைக் கொண்டு வாடா" என்று கட்டளை போட்டது. ஒரு நிமிடம் திக்குமுக்காடி நின்ற நபர் பிறகு வந்திருக்கும் ஆவி அவனுடையதாகவே இருக்கும் என்ற நம்பிக்கையில் ஓடோடிச் சென்று அங்கே நின்றிருந்த ஒரு தென்னை மரத்தில் ஏறி இளநீரை பறித்து அதை வெட்டி துஷ்ட ஆவியிடம் நீட்டினான். துஷ்ட ஆவி ஆனந்தமாக சிரித்தப்படி "முப்பத்தைந்து வருசம் ஆனாலும் எனக்கு என்ன பிடிக்கும் என்பதை நீ மறக்கல"ன்னு  சொல்ல, வந்திருப்பது சரசுவின் கணவனின் அண்ணன் நாகலிங்கம் என்பதை இளநீர் கொடுத்த நபரும் புரிந்து கொண்டு வீரசிங்கத்திடமும் விசயத்தைச் சொன்னார். இனி விடுவாரா பூசாரி? ஆட்டத்தை ஆரம்பித்தார்.

"டேய் நாகலிங்கம்! உன்னோட ஆட்டம் இனி செல்லாது. ஏன் இந்த அபலை பெண்ணை பிடித்து ஆட்டுகிறாய்? உடனே போ!!" என்று கர்ஜித்தார். அப்போது அங்கே நின்று நடக்கும் சம்பவங்களை பார்த்துக் கொண்டிருந்த சரசுவின் கணவன் சின்னத்தம்பி, அந்த இடத்தை விட்டு நழுவப் பார்த்தான். சரசுவின் உடம்பிலிருந்த நாகலிங்கத்தின் ஆவி,

"டேய் சின்னத்தம்பி! எங்கட ஓடப் பார்க்குற? நில்லுடா நாயே!!" என்று மிரட்ட, சின்னத்தம்பி உறைந்து போய் நின்றான்.

நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த நாகலிங்கம் தான் இறந்த பிறகு தனது அன்பு மனைவியையும் குழந்தையையும் தனியாக விட்டுச் செல்கிறோமே என்ற வேதனையில் ஆழ்ந்து போனான். ஒரு கட்டத்தில் திருமணமாகாமல் வீட்டில் இருக்கும் தம்பியை அழைத்து, "இனி நீதான் என் மனைவியையும், குழந்தையையும் பார்க்கணும். இவளோடு வாழ உனக்கு சம்மதமா? அப்படி சம்மதம் என்றால் எனக்கு சத்தியம் செய்து கொடு" என்றான். சின்னத்தம்பியும் அண்ணனின் சொல்லுக்கு மறுப்பேதும் சொல்லாமல் சத்தியம் செய்து கொடுக்க, அடுத்த நொடியே நாகலிங்கத்தின் உயிர் பிரிந்தது. சில மாதங்களுக்கு பிறகு சின்னத்தம்பி தனது அண்ணனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மறந்தான். அண்ணன் குடும்பத்தையே மறந்த அவன் ஊரிலேயே ஒரு பெண்ணை காதலித்து திருமணமும் செய்து கொண்டான் என்ற விடயத்தை சரசுவின் உடம்பிலிருந்து சொன்ன நாகலிங்கத்தின் ஆவி ஊரார் முன்னிலையிலேயே சொல்லிச் சொல்லி கதறி அழுதது. சின்னத்தம்பியை பழிவாங்கவே மனைவியின் உடம்பில் பல வருடங்களாக நாகலிங்கத்தின் ஆவி குடியிருப்பதை உறுதி செய்து கொண்ட பூசாரி, அதனுடன் 'டீல்' பேசினார். உணவு ஆசையைக் காட்டி அந்த ஆவியை அடிபணிய வைக்க முடியாது என்பதை புரிந்து கொண்டவர், அதனுடன் அன்பாகவே பேசி சரசுவின் உடம்பிலிருந்து போகும்படி பணித்தார். அதற்கு சம்மதிக்காத நாகலிங்கம், தாம் போவதாக இருந்தால் சரசுவின் உயிரைப் பறித்துக் கொண்டே போவேன் என்பதில் உறுதியாக இருந்தான்.
நாகலிங்கம் அன்புக்கு அடிபணியும் சுபாவம் உடையவன் என்பதை தெரிந்து கொண்ட பூசாரி, தனது கடைசி ஆயுதமாக சின்னத்தம்பியின் மூன்று பிள்ளைகளையும் அழைத்து இந்த மூன்று பேரும் சின்னத்தம்பியின் குழந்தைகள் இவர்களின் தாயின் உயிரை நீ பறித்துக் கொண்டால் இந்தப் பிள்ளைகள் அநாதையாகி விடுவார்கள் பரவாயில்லையா? என்று கேட்டதும் நாகலிங்கம் அந்த மூன்று பிள்ளைகளையும் கட்டி அணைத்தப்படி கதறி அழுதான். முடிவில் அவன் சரசுவின் உடலை விட்டு வெளியேற சம்மதிக்கவும் காலம் தாழ்த்தாமல் மின்னலாக செயல்பட்ட பூசாரி நாகலிங்கத்தை பிடித்து பூசணிக்காயில் அடக்கி அதனை சுடலைக்கு எடுத்துச் சென்று கருப்பு சேவலை வெட்டி பலியிட்டு நாகலிங்கத்தின் கதையை முடித்தார். முப்பத்தைந்து வருடங்களாக சின்னத்தம்பி குடும்பத்தை ஆட்டிப் படைத்த துஷ்ட ஆவி ஒழிந்து விட்ட பிறகு இப்போது சின்னத்தம்பியின் வீட்டில் மகிழ்ச்சியும். செல்வமும் பெருகுவதாக பூசாரி தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment