Thursday, December 15, 2016

நாடக ஆசிரியர் அஷ்ரப்கானுடன் ஒரு சந்திப்பு

mani srikanthan
நேரில் - மணி  ஸ்ரீகாந்தன்

இலங்கை வானொலி நாடக வரலாற்றில் எம். அஷ்ரப்கான் என்ற இந்தப் பெயரை அவ்வளவு இலகுவில் மறக்க முடியுமா என்ன? முஸ்லிம் சேவையில் பல வருடங்களுக்கு மேலாக ஒலிபரப்பாகி வந்த முஸ்லிம் நாடகங்களின் கதாநாயகனாக திகழ்ந்தவர் இந்த அஷ்ரப்கான். அறுபது எழுபதுகளில், வானொலியே கதி என்றிருந்தவர்கள், அவர்கள் முஸ்லிம்களோ, வேறு மதத்தினரோ, தவறாமல் இரவு எட்டரைக்கு வானொலியை முஸ்லிம் சேவைக்கு திருப்பி வைத்து விடுவார்கள். அஷ்ரப்கான் கை வண்ணத்தில் உருவான அசத்தலான நாடகங்களைக் கேட்டு ரசிக்காவிட்டால் பலருக்கு குறிப்பாகப் பெண்களுக்கு அன்றிரவு சுக சித்திரையாக இருக்காது!

‘ஒரு வீடு கோயிலாகிறது’ நாடகத்தை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியுமா... தமது அறுபத்தெட்டாவது வயதிலும் இன்னும் அதே வாலிப மிடுக்கோடு உலா வரும் அஷ்ரப் கானை சந்தித்து உரையாடிய போது தனது இளமைக் கால நினைவுகள் நாடகக் காட்சிகளை
போலவே எம் கண்முன்பாக கொண்டுவந்தார் கான்.

‘சிலாபம் தான் என் சொந்த ஊர். படித்தது, கதை எழுதியது எல்லாமே அந்த மண்ணில்தான். எனது உடன்பிறப்புகள் மொத்தம் ஆறுபேர். அதில் நான்தான் நாலாவது. சிலாபம் ரோமன் கத்தேலிக்க பாடசாலையில்தான் எனது ஆரம்ப கல்வியை கற்றேன். அந்த பாடசாலையில் எனக்கு படிப்பித்த ஆசிரியர்கள் யாரையும் எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஆனால் அவங்க கொடுத்த தண்டனையை இன்றைக்கு நினைத்தாலும் குலை நடுங்குகிறது.
அந்தப் பாடசாலையில் அதிபராக இருந்தவர் ஒரு கிறிஸ்தவ பாதிரியார். வெள்ளை அங்கி அணிந்து இடுப்பில் கறுப்பு பட்டி அணிந்திருப்பார். பாடசாலையின் ஒரு மூலையில் உள்ள கூரை சட்டத்தில் ஒரு கயிறு கட்டப்பட்டிருக்கும்.

அந்தக் கயிற்றின் நுனியில் ஒரு முடிச்சு போடப்பட்டிருக்கும். தப்பு செய்யும் மாணவர்கள் அந்தக் கயிற்றின் முடிச்சியை பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும். அப்படி தொங்கும் மாணவனை ஒருவர் தள்ளிவிட அம் மாணவர் முன்னும் பின்னுமாக ஊஞ்சலாடுவார்.
மாணவன் முன்பக்கமாக வரும்போது அங்கே நிற்கும் ஆசிரியர் பிரம்பால் போடுவார் ஒரு போடு! இப்படியே அடி தொடரும்.
சில மாணவர்கள் வலி தாங்க முடியாமல் நிலத்தில் தொப்பென்று விழுவார்கள். இது தண்டனை என்றாலும் இன்று சிந்திரவதையாகத்தான் தெரிகிறது- நானும் இதை அனுபவித்து இருக்கிறேன். அப்படி நான் வாங்கிய அடியின் தழும்பு என் முதுகில் நீண்ட காலம் இருந்தது.
அந்தப் பாடசாலையில் இன்னொரு தண்டனையும் இருந்தது. சங்கிலிகட்டை தண்டனை என்பது அதன் பெயர். அந்த தண்டனையை நான் அனுபவித்தது இல்லை.

அதிக எடைக்கொண்ட ஒரு கட்டை. அதன் ஒரு முனையில் சங்கிலி பிணைக்கப்பட்டிருக்கும். அந்தச் சங்கிலியின் மற்ற பக்கத்தில் ஒரு இரும்பு வளையம் இணைக்கப்பட்டிருக்கும். அந்த வளையத்தை தப்பு செய்யும் மாணவனின் காலில் போட்டு பூட்டி விடுவார்கள்.
முழு நாளும் அந்த மாணவன் தன் காலோடு இணைக்கப்பட்டிருக்கும் சங்கிலி கட்டையை செல்லும் இடமெல்லாம் தோளில் தூக்கி வைத்து கொண்டு திரிய வேண்டும்.
சகோதரர் அன்சாரிக்கான், 
தந்தை மஜீத்கான்  
தந்தையின் கையில் அஷ்ரப்கான் சகோதரர் 
அஸ்வத்கான் அக்கா அம்ஷா ஆரிப்

இது உச்சபட்ச தண்டனை. அப்போதெல்லாம் பாடசாலை அதிபர்களான பாதிரியார்மார்களை பார்க்கவே பயமாக இருக்கும். எப்போதும் பெரிய பிரம்புகளோடுதான் வலம் வருவார்கள். இந்த தண்டனைகள் பற்றி நான் விவரிக்கும் போது உங்களுக்கு பயமாகவும், வெறுப்பாகவும் தான் இருக்கும்.
எனக்கும் இந்தத் தண்டனைகளில் உடன்பாடு இல்லைதான். ஆனாலும் இவ்வகைத் தண்டனைகள் தான் என்னை ஒரு நல்ல பிரஜையாக உருவாக்கியது என்று இன்றும் நம்புகிறேன்’ என்கிறார் அஷ்ரப்.
சிறு வயதில் என்னென்ன குறும்புகள் செய்திருப்பீர்கள் என்று கேட்டோம்
‘என்னைப் பெரிய குறும்புக்காரன் என்று சொல்ல மாட்டேன். நான் குறும்பு செய்வதெல்லாம் என் அம்மாவிடம் தான். அம்மா மீன் கறி சமைத்து வைத்திருப்பாள். நான் அம்மாவுக்கு தெரியாமல் மீன்களின் ஒரு பக்கத்தை மட்டும் பிய்த்து சாப்பிட்டுவிட்டு மீனை புரட்டி ஒரு முழு மீன் இருப்பது போல வைத்து விடுவேன்.

சாப்பாட்டு நேரத்தில் அம்மா மீன் கறி பரிமாறும் போதுதான் மீனின் ஒரு பாதி காணாமல் போயிருப்பது தெரியவரும். அந்த வேலையை நான்தான் செய்திருப்பேன் என்பது அம்மாவுக்கு தெரியும்.
சாப்பாடு முடிந்ததும் நமக்கு தர்ம அடிதான். இப்படி அம்மாவிடம் நான் வாங்கிய அடிகள் ஏராளம். எங்கள் வீட்டுக்கு முன்னால் பெரிய குளங்கள் மூன்று இருந்தன.

அதில் ஒன்று தாமரைக்குளம். மற்ற இரண்டு குளங்களிலும் மீன் பிடிக்கலாம். எனது பிரதான பொழுது போக்கே மீன் பிடிப்பதுதான்.
அம்மாவுக்கு நான் குளத்தில் விழுந்துவிடுவேன் என்கிற பயம். அதனால் நான் குளத்திற்கு சென்றாலே எனக்கு அடிதான் விழும். அப்புறம் வீட்டில் எடுபிடியும் நான்தான் வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் கூட்டுறவு கடையில் கூப்பனுக்கு சாமான் வாங்கும் வேலையை அம்மா என்னிடம் தான் தருவார்.
மனைவி பிள்ளைகளுடன்

எத்தனையோ நாள் பாடசாலைக்கு லீவு போட்டுவிட்டு கூப்பன் சாமான் வாங்கப் போயிருக்கிறேன். அதற்காகத்தான் பாடசாலையில் கயிற்றில் தொங்கினேன்.
அப்பாவை பற்றி அதிகம் சொல்லவில்லையே என்று நினைக்க வேண்டாம். அவர் பிரிட்டிஷ் படையில் இருந்தவர். அவர் வீட்டில் இருப்பதே குறைவு.
வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு நான்தான் உதவியாளராக இருந்தேன். வீட்டுக்கு பக்கத்தில் உள்ள தெருவில் தண்ணீர் குழாய் இருக்கும். அதில்தான் நானும் தண்ணீர் பிடிக்கச் செல்வேன்.
பாடசாலை செல்வதற்கு முன்பாகவே தண்ணீரை கொண்டுவந்து வீட்டில் உள்ள பாத்திரங்களில் நிறைத்து வைத்துவிட வேண்டும்.
பெண்களைப் போலவே நானும் குடத்தை இடுப்பில் வைத்து தூக்கிக் கொண்டு வருவேன். நான் வளர்ந்து பெரியவனான பிறகும் என் இடுப்பில் குடம் தூக்கிய வடு இருந்தது.
எனது நண்பர்களுடன் முன்னேஸ்வரத்தில் உள்ள மைதானத்தில்தான் கிரிக்கெட் மெட்ச் விளையாடப் போவேன். நான் கிரிக்கெட் விளையாடச் செல்வதானால் அம்மா கொடுக்கும் ‘சோதனை’களில் நான் பாஸாக வேண்டும். அவற்றில் ஒன்றுதான் மிளகாய் அரைப்பது.
ஒரு ஐநூறு கிராம் மிளகாயை கொடுத்து இதை கல்லில் வைத்து அரைத்துக் கொடுத்துவிட்டு விளையாடப் போ! என்று அம்மா சொல்லுவார். அதை ஏற்று நானும் மிளகாய் அரைக்கத் தொடங்குவேன் சிறப்பாக செய்தும் முடிப்பேன். இன்று என்னால் நன்றாக சமைக்கவும் முடியும்.

இப்போதும் வீட்டில் நான் தான் மிளகாய் அரைக்கிறேன்; நான்தான் சமையல்காரன். அம்மா தந்த இந்த பயிற்சி என் வாழ்க்கையை இலகுவாக்க உதவி இருக்கிறது’ என்று அம்மாவின் நினைவில் மூழ்கிப் போகிறார் அஷ்ரப்கான்.

‘நான் ஆரம்ப கல்வியை சிலாபத்தில் கற்கும் போது சனூன் என்ற ஒரு பையன் இருந்தான். அவனிடம் தான் என் பிரச்சினைகளை சொல்வேன். நான் அம்மாவிடம் அடிவாங்கியது, மீன் பிடித்தது போன்றவைதான் எனது முக்கிய பிரச்சினைகள்.

பண்டிகை காலத்தில் நமக்கு உடைகள் வாங்கித் தருவதும் அம்மாதான். அவங்க எந்த ஆடை வாங்கித் தந்தாலும் அதை அணிந்துகொள்ள வேண்டும். நோன்புக்கு தைத்த ஆடையை அப்படியே கழுவி தேய்த்து வைத்துவிட்டு ஹஜ்ஜுக்கு எடுத்து அணிந்துகொள்வேன்.
பாடசாலையில் படிக்கும் போதும் நான் நன்றாக கட்டுரை எழுதுவேன். ஆனால் அதற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அப்போது அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் எழுத்துக்களின் தாக்கம் இங்கேயும் இருந்தது.
என்னோடு படித்த ஹக், இனியுனா, கபீர் ஆகியோரின் கட்டுரைகளில் அண்ணா, கலைஞரின் ஸ்டைல் இருந்தது.

அதனால் எங்களுக்கு தமிழ் ஆசிரியராக இருந்த சீவி பெரேரா மேற்குறிப்பிட்ட அந்த மூன்று பேரின் படைப்புகளை மாத்திரமே வாசித்து காட்டுவார்.
எங்களின் கட்டுரைகளை பார்வைக்கு எடுக்கவே மாட்டார். அப்போதுதான் பொன் கமலேந்திரன் என்ற தமிழாசிரியர் புதிதாக எமது வகுப்பிற்கு வந்தார்.
வழமைபோல கட்டுரைகளை அவரிடம் கொடுத்தோம். கட்டுரைகளை பார்த்த அவர் எனது கட்டுரையை கையிலெடுத்து ‘யார் இதை எழுதியது?’ என்றார். அவர் அப்படிக் கேட்டதும் எனக்கு உடம்பெல்லாம் குபீர் என்று வியர்த்துவிட்டது.
நான் தான் ஏதோ தப்பாக எழுதி விட்டேனோ என்று பயந்துவிட்டேன். ஆனால் அவரோ ‘இந்தக் கட்டுரை அருமையாக உள்ளது.
இதை அப்படியே தொடருங்கள்’ என்று தட்டிக் கொடுத்தார். அண்ணாவின் பாணியில் எழுதும் அந்த மூவரையும் கூப்பிட்டு இனி இப்படி எழுதக்கூடாது என்று திட்டினார்.

‘பொன். கமலேந்திரன், திராவிடத் தலைவர்களிடம் காட்டிய வெறுப்பைப் பார்த்தார். அவர் அண்ணாவின் கொள்கைக்கு எதிரானவராக இருந்திருப்பாரோ என எண்ணத் தோன்றுகிறது.
எது எப்படி இருந்தாலும் அவர் மூலம் எனக்கு ஒரு நன்மை நடந்தது. அவர் எனக்கு அளித்த உற்சாகம்தான் என்னை எழுத்துத் துறையில் அடியெடுத்து வைக்க காரணமாக இருந்தது’ என்றார் அஷ்ரப்கான்.
கலைஞரான இவரது காதல் அனுபவங்கள் எப்படி இருந்திருக்கும்?
‘இதைக் காதல் என்பதை விட ஒரு உணர்வு என்றுதான் சொல்ல வேண்டும். ஆண்கள் வயசுக்கு வந்துவிட்டதை அடையாளப்படுத்தும் ஒரு மன நிகழ்வு என்று கூட சொல்லலாம். எங்கள் தெரு வழியாக காலையில் ஏழு மணியளவில் ஜல் ஜல் என்ற ஓசையோடு ஒரு மாட்டு வண்டி போகும்.
அதில் மூன்று இளம் சகோதரிகள் கல்லூரிக்கு போவார்கள். அவர்கள் மூவரும் நல்ல கறுப்பு நிறம். அந்த வயதில் அவர்கள் அழகாகவே எனக்குத் தெரிந்தார்கள்.
காலையில் ‘ஜல் ஜல்’ சத்தம் கேட்டதுமே என்ன வேலை தலைக்கு மேல் இருந்தாலும் அவற்றை அப்படியே போட்டுவிட்டு வீதிக்கு ஓடிவிடுவேன். அந்த மாட்டு வண்டியில் என்னைக் கடந்து செல்லும் அந்த கறுப்பழகிகளை பார்த்துக் கொண்டே இருப்பேன். ஊர் சந்தியை தாண்டி அந்த வண்டி மறையும் மட்டும் நான் அங்கேயே நிற்பேன் என்னை மறந்து!
என்னவோ தெரியவில்லை அந்த வண்டியோடு என் மனசு போய்விட்ட மாதிரி எனக்குத் தோன்றும். இதற்குப் பெயர்தான் காதல் உணர்வு என்பது எனக்கு அப்போது தெரியாது. கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்பதாலோ என்னவோ எனக்கு அமைந்த மனைவியும் கறுப்புதான்.

‘பிறகு எனக்கு காதல் வந்தது. அப்போது எனக்கு 19 வயதிருக்கும். காலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் நான் படித்துக் கொண்டிருந்த போது களுத்துறையில் உள்ள எனது நெருங்கிய உறவினர் வீட்டுக்கு சென்று வருவேன். அந்த வீட்டில் ஒரு அழகான பெண் தங்கியிருந்தாள். அவள் என் உறவினரின் சொந்தக்கார பிள்ளையாம்.

எனக்கு அவளை பார்த்தவுடனே பிடித்துவிட்டது. கல்யாணம் முடித்தால் அவளைதான் முடிக்க வேண்டும் என்று ஆவேசமே வந்துவிட்டது. ஒருநாள் என் உறவினரிடம் நான் அவளை கல்யாணம் செய்ய ஆசைப்படுவதை சொன்னேன். அதற்கு அவர் உன் படிப்பு முடியட்டும் என்று சாந்தமாகச் சொன்னார்.

நான் என் காதல் நிறைவேறி விட்டதாக முடிவு கட்டி தலைகால் புரியாத மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றேன். அதன் பிறகு அவரின் வீட்டிற்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தேன்.
இதைக் கவனித்த என் உறவினர் என்னைக் கூப்பிட்டு ‘இனி இந்த வீட்டு வாசற்படியை நீ மிதிக்க கூடாது. அப்படி மிதித்தால் செருப்பால் அடிப்பேன்!’ என்று என்னைத் திட்டி விரட்டி விட்டார்.

அன்றோடு அந்த வீட்டுக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். என் ஒரு தலைக் காதலும் பாலானது. ஆனால் ஒரு விஷயம். அவளை நான் விரும்பியதோ என் உறவினர் என்னைத் திட்டியதோ எதுவுமே அவளுக்கு கடைசி வரைத் தெரிய வரவில்லை. அவர் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

அதன் பிறகு பெற்றோர்களின் விருப்பப்படி திருமணம் நடைபெற்றது. என் மனைவி பெயர் சௌதா உம்மா. கொள்ளுப்பிட்டியில் இருந்த சிரிகொத்தா மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது, (இப்போது இந்த மண்டபம் இல்லை) ஏ. எம். ஏ. அமஸ், எஸ். எம். கமால்தீன் உள்ளிட்ட பலர் திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.

வாழ்க்கையில் இவரால் மறக்க முடியாத நண்பர்கள் யார்?

மச்சான் எம். எச். எம். ஆரிப், கமலேந்திரன், வைரமுத்து அண்ணன் ஆகியோரைச் சொல்வேன். இவர் கொழும்பு மின்சார சபையில் வேலைசெய்தார்.
இவர் மூலம்தான் எனது படைப்புகளை தினகரனுக்கு கொடுத்து அனுப்புவேன். அதேபோல் என்னால் மறக்க முடியாதது என் வீட்டிற்கு முன்னால் இருந்த அந்தக் குளம். அதில் மீன் பிடித்தது, தாமரை பூ காயை பறித்து அவித்து சாப்பிட்டது. எல்லாவற்றையும் மறக்கவே முடியாது.
குளம் வற்றும் காலத்தில் தாமரை கிளங்கை தோண்டி எடுத்து சாப்பிட்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் பாதி நேரம் இந்த குளத்தில் தான் கழிந்திருக்கிறது.

ஆனால் இன்று அந்தக் குளம் இருந்த அடையாளமே இல்லை. குளம் இருந்த இடம் மைதானமாகவும் பஸ் நிலையமாகவும் மாறிவிட்டது.
அந்த இடத்தில் நடந்து செல்லும்போது எனக்கு அந்தக் குளம்தான் ஞாபகத்துக்கு வரும் என்று பெருமூச்சு விடும் அஷ்ரப், சிலாபத்தில் தன்னால் மறக்க முடியாத மற்றொருவரையும் குறிப்பிடுகிறார்.

‘அவர்தான் செல்லங்காக்கா. பார்வை இல்லாதவர். பள்ளிவாசலில்தான் இருப்பார். நல்ல அரசியல் ஞானம் உள்ளவர். எங்களோடு அரசியல் பற்றி விவாதிப்பார்.’
உலுக்கி எடுத்த சம்பவமாக எதைக் கருதுகிறீர்கள்?

‘லண்டனில் நிகழ்ந்த மகளின் கணவரின் அகால மரணம்!’ என்றார் அஷரப் கான். இவருக்கு மகிழ்ச்சி அளிப்பது வெளிநாட்டுப் பயணங்கள்தானாம்.
இந்த வயதில் இவர் விரும்புவது நோயற்ற வாழ்க்கையை தான்.
‘கடைசிவரை நான் எழுதிக் கொண்டே இருக்க விரும்புகிறேன். இந்த எழுதும் சக்தி என் கைவிரல்களுக்கு இருந்தால் போதும்’ என்று சொல்லும் இவர், கனவுகளுக்குத் தான் பயப்படுகின்றாராம்
சரி, இறுதியாக இவர்தான் வாழ்ந்த வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் போது வாழ்க்கையைப் பற்றிய இவரது புரிதல் என்ன?

என் வாழ்க்கைப் பயணம் சாதாரணமானதுதான். ஆனாலும் எனக்கு நிறைவை தந்திருக்கிறது- ஒரு மனிதன் சந்திக்கும் அனைத்து சுக துக்கங்களை நானும் சந்தித்திருக்கிறேன்’

No comments:

Post a Comment