Friday, December 2, 2016

மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் பேசுகிறார்


நேர்காணல் - மணி ஸ்ரீகாந்தன்

கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருதூரில் 1940ம் ஆண்டு பிறந்தவர் மருதூர் ஏ. மஜீத். தமிழ் மொழி சிறப்புப் பட்டதாரியான இவர் கல்வித் துறையில் டிப்ளோமாப் பட்டமும் கல்வி நிர்வாகச் சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து கல்வி நிர்வாக சேவையில் இணைந்து கொள்வதற்கு முன் பயிற்றப்பட்ட ஆசிரியராக, அதிபராக, ஆசிரிய பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளராக கல்விப் பணிப்பாளராக சேவைசெய்து ஓய்வுபெற்ற பின்பும் ஏழு வருடங்கள் ஒப்பந்த அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாண கல்வியமைச்சில் முஸ்லிம் கலாசாரப் பணிப்பாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர்.

இவர் ஏழாம் வகுப்புப் படிக்கும் போதே தினகரன் வார மஞ்சரியில் பாலர் கழகத்தில் ‘நான் கண்ட கனவு’ எனும் கட்டுரையோடு எழுத்துப் பிரவேசம் செய்தவர். எழுத்து, பாட்டு, நாடகம், சினிமா என பல்வேறு துறைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தி இலங்கையில் பெயர் பெற்ற படைப்பாளராக திகழும் மருதூர் ஏ. மஜீத்தை ஒரு மாலைப் பொழுதில் சந்தித்து உரையாடினோம்.


துள்ளும் இளமையில்.

"கல்முனையிலிருந்து இரண்டு மைல் தூரம் சென்றால் சாய்ந்தமருது வந்து விடும். அதுதான் என் சொந்த ஊர். மெதடிஸ் மிசன் ஸ்கூலில் தான் அரிவரி படித்தேன். இப்போ மாதிரி ‘மொண்டிசூரி’ எல்லாம் அப்போ இல்லை. அந்த பாடசாலையில் படிப்பித்த வேலுப்பிள்ளை மாஸ்டர்தான் எனக்கு ஹீரோ. அவரை பார்க்கும் போது என். எஸ். கிருஷ்ணன் ஞாபகத்திற்கு வருவார். கிருஷ்ணனின் நகல்தான் வேலுப்பிள்ளை.

வேட்டி கட்டி, சால்வையை தோளில் போட்டிருப்பார் சட்டை போடமாட்டார். அவர் எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது வித்தியாசமாக இருக்கும். பாடசாலைக்கு அருகிலிருந்த வாகை மரத்தடியில் அமர்ந்துதான் பாடம் சொல்லிக் கொடுப்பார். ஒரு சிறுவர் பாடலை மையமாக வைத்து அதில் வரும் கதாபாத்திரங்களில் மாணவர்களை நடிக்க வைத்து பாடல் சொல்லி கொடுப்பார்.

உதாரணத்திற்கு, குரங்கு தொப்பி கதையில் மரத்தில் மாணவர்களை ஏற்றி கீழே ஒருவன் தொப்பிகளோடு தூங்குவது போல் நடிக்கச் சொல்லி அந்தக் காட்சியை அப்படியே செய்து காட்டுவார். உண்மையை சொல்லப் போனால் நான் ஒரு கலைஞனாக உருவானதற்கு காரணமே வேலுப்பிள்ளை மாஸ்டர்தான்.

‘பனை மரத்தை பாருங்கள்
பறவைக் கூடு தொங்குதே!
பனம் பழத்தை பறிக்கவே....’

என்று அவர் பாடும் பாடல் இன்னமும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருப்பதை உணர்கிறேன" என்று தமது குருவை நினைத்து உளம் பூரிக்கும் மருதூரிடம்,

நீங்கள் பள்ளி வாழ்க்கையில் குறும்பா? என்ற எமது வினாவிற்கு இப்படி பதில் சொன்னார். "வீட்டிலும் பள்ளியிலும் நான் ரொம்பவும் நல்ல பையன். ஞாபகத்தில் பதிவு செய்யும் படி நான் எந்த குறும்பும் செய்யவில்லை. கல்முனை ஜூனியர் பாடசாலையில் (இப்போது ‘கல்முனை சாஹிரா’ பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது) நான் படித்த போது அங்கு கர்நாடக இசை கற்பித்த ஆசிரியர் நல்ல வெள்ளையாக இருப்பார்.

அவரை ‘சோகையர்’ என்ற பட்டப் பெயரால் நாங்கள் அழைத்துக் கொள்வோம். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி வாப்பாவுக்கு தெரியாமல் அவரின் மிதிசைக்கிளை எடுத்து சைக்கிளின் பிரேமுக்குள் காலைவிட்டு சைக்கிள் ஓட்டி பழகுவேன். காலை ஆறு மணியாகும் போது சைக்கிளை இருந்த இடத்தில் அப்படியே வைத்துவிட்டு சைக்கிள் ஓடிய அச்சு தடத்தையெல்லாம் அழித்துவிடுவேன். இப்படி நான் தொடர்ந்து செய்து வந்தேன். கடைசிவரை வாப்பாவிடம் மாட்டுப்படவில்லை.
குடும்பத்தினருடன்.

சைக்கிள் ஓட்டவும் கற்றுக் கொண்டேன். எனது வாப்பா ரொம்பவும் நல்லவர், கண்டிப்பானவர். நான் எழுத்துத் துறையில் நுழைய வாப்பாவும் ஒரு காரணம் என்றும் சொல்லலாம். அப்போது எங்கள் ஊரில் வாப்பாதான் நன்றாக படித்த மனிதர். தினகரனில் தொடர்ச்சியாக வெளிவந்த சதாசிவம் கொலை வழக்கை மாலை நேரத்தில் வாப்பா வீட்டின் முற்றத்தில் அமர்ந்து வாசிப்பார்.

அதைக் கேட்க எங்கள் ஊர் சனம் திரண்டுவிடும். நானும் ஒரு ஓரத்தில் நின்று கேட்டுக்கொண்டிருப்பேன். வாப்பாவின் தமிழ் உச்சரிப்பு எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவரிடம் நான் கேட்டு எனக்குள் வளர்ந்ததுதான் ஆக்க இலக்கியம்" என்ற மருதூரார், தமது நண்பர் நைஸ் இஸ்மாயிலோடு சினிமா பார்த்த அனுபவத்தையும் மறக்க முடியாது என்கிறார்.

"கல்முனை பீச் ரெஸ்ட்கவுசுக்கு பக்கத்திலிருந்த ஹரிசன் தியேட்டரில் படம் பார்க்க செல்வோம். கையில் ஒரு ரூபாய் இருந்தால் போதும். கல்முனையில் ‘தாஜ்’ என்ற பெயரில் ஒரு தியேட்டரும் இருந்தது. சினிமா பார்க்க 55 சதம் செலவாகும் படம் முடிந்து வெளியே வந்ததும் மணமகள் புத்தகசாலையில் 15 சதம் கொடுத்து கல்கண்டு சஞ்சிகையை வாங்கிக் கொண்டு மொடர்ன் கபே கடையில் பிளேன் டி குடித்துவிட்டு வீடு வருவோம். அது ஒரு இனிப்பான அனுபவம். நான் குறிப்பிடும் அந்த தியேட்டர், புத்தகசாலை, ஹோட்டல் எல்லாம் இப்போது கல்முனையில் இல்லை. எல்லாம் மாறிவிட்டது என்று பெருமூச்சு விடுகிறார் மஜீத்.

கலையுலகில் மறக்க முடியாத அனுபவம் பற்றி கேட்டதற்கு, நடிகர் காமினி பொன்சேகாவுடன் சினிமா படப்பிடிப்பில் ஏற்பட்ட சம்பவத்தை சுவைபட இப்படி சொல்கிறார்.

நான் எழுபதுகளில் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புப் பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்த போது இலங்கை சினிமாத் துறையில் அனுபவம் மிக்க புரடியூசரான ஹமீடின் நட்புக் கிடைத்தது. வி. பி. கணேசனின் ‘நான் உங்கள் தோழன்’ படத்தில் வரும் நான் உங்கள் தோழன் பாட்டில் வரும் முஸ்லிம் பாத்திரத்தில் நடிக்க ஹமீட் சந்தர்ப்பம் ஒன்றினைப் பெற்றுத் தந்தார்.

இதனைத் தொடர்ந்து காமினி பொன்சேகா நடித்த ‘மிஸ் சாமா’ எனும் சிங்களப் படத்தில் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

இப் படத்தில் என்னிடம் ‘வர்மக்கலை படித்துக் கொண்டிருந்த ஆரோக்கியசாமி, யேசுதாஸ், மஹிந்த போன்ற எனது மாணவர்களும் கலந்துகொண்டனர்.

கதையில் காமினி பொன்சேகாவின் காதலியை எனது கோஷ்டியினர் கடத்திச் சென்றுவிடுவார்கள். எங்களை காமினி அவர்கள் துரத்திவரும் போது நான் மறைவில் இருந்து திடீரென வெளிப்பட்டு அவரைத் தாக்குவதாக ஒரு காட்சி படமாக்கப்பட இருந்தது.

படப்பிடிப்புக்கு எங்களை அழைத்துச் செல்ல எனது வீட்டிற்கு ஒரு வேனில் வந்தார் ஹமீட்.

சூட்டிங் நடந்த இடம் நீர்கொழும்பிலே ஒரு கடற்கரைப் பகுதி.

என்னையும், எனது மாணவர்களையும் ஹமீட் இயக்குனருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பளபளக்கும் காரில் கதாநாயகன் காமினி பொன்சேகா வந்து சேர்ந்தார்.

அவருக்கும் ஹமீட் என்னை பாடசாலை அதிபர் என்றும், எழுத்தாளர் கவிஞர் என்றும் வர்மக் கலை படிப்பிக்கும் ஆசிரியர் என்றும் மிகக் கூடுதலாகவே அறிமுகம் செய்து வைத்தார்.

அவரும் என்னிடம் கைகொடுத்து வரவேற்றவாறு அழைத்துச் சென்றார்.

அவர் அழைத்துச் சென்ற அறையில் காலைச் சாப்பாட்டிற்கான ஒழுங்கு இருந்தது.

பலதும் பத்தும் கலந்துரையாடியவாறு அவருடன் சேர்ந்து காலை உணவை அருந்தினேன்.

அவர் பேசும் தமிழ் கேட்க சுவையாக இருந்தது மட்டுமல்ல, அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சாப்பாட்டு ஒழுங்கு ஒரு அரசனுக்கு ஏற்பாடு செய்தது போன்று இருந்தது.

ஒரு நடிகனுக்கு இவ்வளவு கௌரவம் இருப்பதை என்னால் கற்பனைகூடப் பண்ண முடியவில்லை.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து கறுப்பு நிறச் சப்பாத்து ஒரு சோடியைக் காட்டி, சிவப்பு நிறச் சப்பாத்து வாங்க முடியாதுள்ளது என்றும் ஞாயிற்றுக்கிழமையான படியால் கடையெல்லாம் பூட்டி என்றும் சொன்னார். அதற்கு காமினி அப்படியாயின் சூட்டிங்கை பிறகொரு நாளைக்கு வைத்துக்கொள்வோம் என்றார்.

வந்தவர் சப்பாத்தோடு திரும்பிப் போய்விட்டார்.

போனவர் ஒரு மணித்தியாலத்தின் பின் சிவப்புச் சப்பாத்தோடு திரும்பி வந்தார். இவையெல்லாம் எனக்கு ஒரு கதாநாயகனுக்கு இருக்கும் பலத்தை துலாம்பரமாக எடுத்துக் காட்டி படத்துறையில் ஆசையைத் தூண்டிவிட்டது.

சாப்பாடு முடிந்ததும் ஆயாசமாக இருந்துகொண்டு கலை, இலக்கியம் பற்றியும், இலங்கையில் தமிழ் சினிமாத் துறை பற்றியும் கலந்துரையாடினோம்.

கதையோடு கதையாக நான் இலங்கை தமிழ்ச் சினிமாத் துறை பற்றி கேட்டேன். அதற்கு அவர் ‘தென் இந்திய தமிழ் சினிமாக்கள் இலங்கையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வரை, இலங்கையில் தமிழ் சினிமா வளரவே முடியாது.

இலங்கைத் தமிழர்களின் கலை கலாசாரம் கூட தனித்துவத்துடன் வளரமுடியாதிருப்பதற்கான காரணமும் தென் இந்தியச் சினிமாவால்தான் என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

மேலும் அவர் கூறும் போது ‘இலங்கையில் சிங்களச் சினிமா ஹிந்திப்பட இறக்குமதியை கட்டுப்படுத்திய பின்புதான் துரித வளர்ச்சியடைந்தது. இது இலங்கைத் தமிழ் சினிமாவுக்கும் பொருந்தும் என்றார்.

படப்பிடிப்பு ஆரம்பமாகியதும் நானும் எனது கோஷ்டியினரும் மேக்அப் போட்டுக் கொண்டு உரிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்தோம்.

ஏற்கனவே எங்களின் பாத்திரங்களுக்கான கதை கூறப்பட்டிருந்தும் மீண்டும் எங்களுக்கு ஞாபகமூட்டினார்கள். டயலொக் இல்லாத ஆக்சன் மட்டுமுள்ள நிகழ்வாக இருந்ததால் பிரச்சினையும் மிகக் குறைவாகவே இருந்தது.

காதலியை எனது கோஷ்டியினர் கடத்திச் செல்ல அதனைத் தொடர்ந்து கதாநாயகன் எங்களை துரத்தி வருகிறார்.

நான் ஒரு முடுக்கில் பதுங்கிநின்று திடீரெனப் பாய்ந்து கதாநாயகன் முகத்தில் குத்தும் கட்சியைப் படமாக்க இருந்தார்கள்.
ஆக்சன்! என்றதும் காமினி ஓடி வருகிறார்.

நான் பாய்ந்து அவர் முகத்தில் குத்தினேன். எனது குத்தின் வேகத்தையும், எனது விளையாட்டின், நுட்பத்தையும் காட்டுவதற்காக ஓங்கிப் பலமாக தட்ட முடியாதவாறு குத்தினேன். காமினி மிகக் கெட்டித்தனமாக தாக்கியதைத் தட்டித்தடுத்துவிட்டு ‘கட்’ ‘கட்’ எனக் கத்தினர்.

படப் படிப்பு நிறுத்தப்பட்டதும் என்னைப் பக்கத்திலே அழைத்து ‘அடிப்பது கெட்டித்தனமல்ல, நடிப்பதே கெட்டித்தனம். அடிப்பது போன்று நடிக்கவேண்டும்.

உங்களுக்கு வர்மம் தெரியும் என்பது எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது அதனை என்னிடம் காட்ட நீங்கள் எத்தனித்திருக்கக் கூடாது. நீங்கள் குத்தியதை நான் கவனமாகத் தடுத்திருக்காவிட்டால் முகத்தில் காயம் ஏற்பட்டிருக்கும். தடுக்கத் தெரியாத ஒரு கதாநாயகன் என்றால் இனிமேல் அடிக்க நினைக்காமல் நடிக்க நினையுங்கள் என புத்திமதி சொன்னார். கடந்த வாரம் எனது வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள எல்பிஸ்டன் தியேட்டர் முன்னால் காமினி பொன்சேகாவுக்கு சிலை நாட்டிய விழாவினை ஒரு மூலையில் நின்று பார்த்துக் கொண்டிருந்த போழுது இச் சம்பவத்தை நினைத்துப் பார்த்தேன்.

இவர் நல்ல நடிகர் மட்டுமல்ல, பண்பட்ட மனிதரும் கூட என்பதற்கு நான் சாட்சியம் கூறுவேன்.

நான் வடக்கு கிழக்கு மாகாணக் கல்வியமைச்சில் முஸ்லிம் கலாசாரப் பணிப்பாளராக இருந்தபோது காமினி பொன்சேகா வடக்கு கிழக்கு மாகாண ஆளுனராக திருகோணலையில் பதவி வகித்தார்.

அப்பொழுது, கிட்டத்தட்ட முப்பது வருடங்களின் பின் அவரைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று ஆசையேற்பட்டதும், என்னை அவருக்கு ஞாபகம் இருக்குமோ என்னவோ என்ற சந்தேகமும் வந்தது. அதுமட்டுமல்ல அவர் உயர் பதவியில் இருக்கிறார். சந்திக்க நேரகாலத்தோடு சம்மதம் பெற்றிருக்க வேண்டுமோ என்னவோ எனப் பல பிரச்சினைகள் தோன்றியது என் மனத்தினுள்ளே.

எது எப்படி இருந்தாலும் போவோம் நடப்பது நடக்கட்டும் எனத் துணிந்து அங்கு சென்றதும்,

காவலில் நின்ற பட்டாளத்தார் ஆயிரம் கேள்விகள் கேட்டுவிட்டு உள்ளே போக அனுமதித்ததும் நான் உள்ளே போய் ‘குட்மோர்னிங் சேர்’ என்றேன்.

அவரும் “குட்மோர்னிங்” என்றார்.

நான் “டுயு றிமெம்பர் மீ சேர்?” என்றதும் அவர் “ஐ குட் நொட் பட் பெமிலியர் பேஸ்” என்றார்.

நான் எழுபதுகளில் அவரோடு சூட்டிங்கில் கலந்துகொண்டதையும்,
அடிப்பதல்ல கெட்டித்தனம் நடிப்பதே கெட்டித்தனம் என அவர் கூறியதையும் ஞாபகப்படுத்தியதும் என் அருகே வந்து கைகொடுத்து வரவேற்று இருக்கை தந்து அன்போடு உபசரித்தார். இந்நிகழ்வு என் ஞாபக வீதியில் இன்றும் உலா வருகிறது."

காதல் அனுபவம் அவரிடம் கேட்டோம்,

‘அதெல்லாம் கிடையாது. உண்மையாகவே ஒரு பெண்ணைப் பார்த்தேன் பிடித்திருந்தது திருமணம் செய்து கொண்டேன். எனது வீட்டிற்கு முன்னால் உள்ள தெருவில் தான் பாடசாலைக்கு பிள்ளைகள் செல்வார்கள். அப்படி சென்றவர்களில் என் கண்ணில் பட்ட அழகான பெண்தான் ‘சாஹிரா’. அவளை பார்த்தவுடனேயே எனக்குப் பிடித்துவிட்டது.
சர்வோதயத் தலைவர் 
கலாநிதி ஆரியரட்ணவுடன்.

திருமணம் செய்தால் அவளைத் தான் திருமணம் செய்ய வேண்டும். என்று உறுதி எடுத்துக் கொண்டேன். அதன்படியே அவளின் அண்ணனிடம் விடயத்தைக் கூறி அவள் வீட்டிற்கு சென்று முறையாக பெண் பார்த்து திருமணம் செய்துகொண்டேன். திருமணம், வீட்டில்தான் பந்தல் போட்டு நடைபெற்றது. திருமணத்திற்கு எம்.பி. அஹமது, எம். எஸ். காரியப்பர் (கேட்முதலியார்) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

திருமணம் முடித்து மூன்றாவது நாள் நானும் மனைவியும் மட்டக்களப்புக்குச் சென்று ராஜேஸ்வரி தியேட்டரில் ‘காதலிக்க நேரமில்லை’ படம் பார்த்துவிட்டு வந்தோம்" என்றார் மருதூரார். இவரால் மறக்க முடியாத நபர்கள் யார்?

"சங்கீத வாத்தியார் அல்வின் தேவசகாயம், நாடக ஆசிரியர் எம். எஸ். பாலு, எம். ஐ. எம். மீராலெப்பை, கலாநிதி தனஞ்சய ராஜசிங்கம் ஆகியோர் இன்றும் என் மனதில் நிற்கும் நபர்கள் என்று நெகிழ்கிறார் மஜீத். வாழ்க்கையில் தவறவிட்ட விடயமாக எதை கருதுகிறீர்கள்?

“சுங்க திணைக்களத்தில் வேலைக்கு சேர ஒரு தேர்வு இருந்திருக்கிறது. அது எனக்கு தெரியாமல் போய்விட்டது. இல்லையென்றால் அதையும் படித்து சுங்கத் திணைக்களத்தில் வேலை செய்திருக்கலாம்; நிறைய காசும் சம்பாதித்திருக்கலாம். ஆனாலும் இப்போது நான் வாழும் வாழ்க்கை எனக்கு பூரண நிம்மதியையும், சந்தோசத்தையும் தருகிறது” என்று சொல்லும் மஜீத்திடம், நீங்கள் கடந்து வந்த வாழ்க்கை எப்படி? என்ற எமது கேள்விக்கு “அது அவனவன் வாழும் வாழ்க்கையை பொறுத்தது.

எனக்கென்றால் நான் வாழ்ந்த வாழ்க்கை திருப்தி” என்று ‘நச்’ சென்று பதில் சொன்னார். சத்யசாயிபாபாவை சந்திக்க ஆசைப்பட்டும் அது முடியாமல் போய்விட்டதை நினைத்து வருந்துகிறார் இவர்.  அப்புறம் எனக்கும் கொஞ்சம் மாயாஜால வித்தையெல்லாம் தெரியும் நேரம் இருக்கும் போது வீட்டுக்கு வாங்க செய்து காட்டுகிறேன்” என்று சொல்லி எம்மிடமிருந்து விடை பெற்றார் மருதூரார்.


தினகரன்-SUNDAY NOVEMBER 01> 2009

No comments:

Post a Comment