Friday, November 11, 2016

கருப்பசாமிபுரம் பட இயக்குநர் சரண் தன்வீர் EXCLUSIVE பேட்டி

நேர்காணல்-  மணி ஸ்ரீகாந்தன்

'குறைந்த பட்ஜெட் படம் என்பது சாதகமான விஷயம்தான். பெரிய பட்ஜெட் படம் என்றால் வெற்றி பெற்றால் சரி, தோல்வி என்றால் தலையே போய்விடும். சிறிய பட்ஜெட் படத்தில் போட்ட முதலையாவது எடுத்துக் கொள்ளலாம்'

'அப்பா, அம்மா கணக்கு போன்ற படங்கள் எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி இன்றைக்கும் சரி வெற்றி பெறவே செய்யும். இவை டிரெண்ட் படங்கள் அல்ல. எல்லாக் காலத்திலும் ஜெயிக்கும் ஃபோர்முலாவை கொண்டவை'

மிழ் சினமா என்பதே பிரமாண்டமான கூத்துப்பட்டறைதான். இதில் தினமும் புதிய, புதிய படங்கள் உருவாகி வருவதோடு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றியும் வருகிறார்கள்.

புதுமுக நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர் என தினமும் வந்து போவோர் பல்லாயிரம் பேர். இவர்களில் சிலரே மக்கள் மத்தியில் நின்று ஜொலிக்கிறார்கள்.
இப்படி சினிமா கனவுகளோடு சென்னைக்கு வந்தவர்தான் இயக்குனர் சரண் தன்வீர். 'பிறந்த நாள்', 'விஜய நகரம்' உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் தற்போது 'கருப்பசாமிபுரம்' என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

"பெயரைப் பார்த்து சாமி படம்னு நினைச்சுடாதீங்க, இது வேற மாதிரியான கதை, மண்ணுக்காக போராடி உயிரைக் கொடுத்த தலைவனெல்லாம் கருப்புசாமி தான்டாங்கிறதே கதைக்கரு" என்று கலகலப்பாக பேசும் சரண் தன்வீரிடம் மேலும் சில கேள்விகளோடு நெருங்கினோம்.

இப்போது வெளியாகும் சிறிய பட்ஜெட் படங்களின் சாதக, பாதக தன்மை பற்றி கூறுவீர்களா?

"மக்களுக்கு சின்ன பட்ஜெட் பெரிய பட்ஜெட் என்பது விசயம் கிடையாது. அவங்க கொடுக்கிற நூறு, ஐம்பதுக்கு படம் நல்லா இருக்கானுதான் பார்ப்பாங்க. அவங்களுக்கு முக்கியம் நாம சொல்லுகிற கதைதான். படத்தில் நடிப்பவர் பெரிய நடிகரா, பெரிய பட்ஜெட்டா என்றெல்லாம் பார்க்க மாட்டாங்க. அதனாலதான் காக்கா முட்டை, கோலி சோடா போன்ற படங்கள் வெற்றியடைந்தன. சின்ன பட்ஜெட் என்பது ரிஸ்க் என்று நினைக்க வேண்டாம். போட்ட பணத்தையாவது எடுத்து விடலாம். நஷ்டம் வராது.
பெரிய படம்னா ரிஸ்க் அதிகம். போட்ட பணத்தை எடுக்கணும். அப்படி பணத்தை எடுக்காட்டி, அந்தத் தயாரிப்பாளருக்கு அதற்கு மேல் படம் எடுக்க முடியாது. அதோடு சிறிய பட்ஜெட் படங்கள் மூலம் புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பும் கிடைக்கிறது. மக்களும் புதிய, புதிய நடிர்களை பார்த்து ரசிக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் சிறிய பட்ஜெட் என்பது சாதகம்தான்."

தகுதி இருக்கிறதோ இல்லையோ ஏராளமானோரின் கனவு சினமாவுக்கு வந்து சாதித்துக் காட்ட வேண்டும் என்பதுதான். நீங்கள் எப்படி சினிமாவுக்கு வந்தீர்கள்?

"நான் சினமாவில் நடிக்கும் லட்சியத்துடன்தான் வந்தேன். ஊரில் கல்லூரி நாடகத்தில் நடித்திருக்கேன். நல்லா பேசவும் செய்வேன். அதனால் என் நண்பர்கள் என்னை உற்சாகப்படுத்தினார்கள். 'நீ சினமாவில் நடிக்கலாமே’ன்னு அவங்க சொன்னதால் எனக்கு ஒரு பொறி தட்டியது. அதன்படியே நடிகனாகனும் என்ற கனவில் சென்னைக்கு வந்தேன். ஆனா இங்கே வந்து பார்த்த போது, நடிகனாவதற்கு ஒரு பின்புலம் இருக்கணும். நிறைய பணம் செலவழிச்சு அதுக்கான சூழ்நிலையை உருவாக்கி களம் அமைக்கணும் என்பதை புரிஞ்சுகிட்டேன். அப்போது என்னோட ஒரே அறையில சில நண்பர்களும் தங்கியிருந்தார்கள். அவர்களில் ஒரு இயக்குனர், கேமராமேன் உள்ளிட்டோரும் அடங்குவார்கள். அவர்களில் ஒருவர் சினமா படம் இயக்கும் ஆர்வத்தில் இருந்தார்.
அவரோடு கதைக்களங்களில் நானும் ஈடுபடும்போது அவர் என்னை 'உனக்கு கதையெல்லாம் பற்றி என்ன தெரியும்? இதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது' என்று என்னை அவமானப்படுத்தும் விதமாக பேசினார். அதுக்கு பிறகு நான் என்னை தயார்படுத்த நல்ல கதைப்புத்தகங்களையும், நல்ல சினமாக்களையும் பார்த்து, என்னை வளர்த்துக்கிட்டேன். முயற்சியும், பயிற்சியும் இருந்தால் ஒரு துறையில் நாம் முன்னேறலாம் என்பதுதான் இதன் படிப்பினை. நடிகனாக வரவேண்டும் என்று வந்தவனை ஒரு இயக்குநர் அவமானப்படுத்தி என்னை இயக்குனராகவே மாற்றிவிட்டார்." சரண் தன்வீர் குறிப்பிடும் அந்த இயக்குனர் இன்று ஒரு அரசியல் கட்சிக்கு தலைவனாகவும் இருக்கிறாராம்!

கனவுகளோடு சினமாவுக்கு வருபவர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரைகள் என்ன, இப்படி வருபவர்கள் எதிர்கொள்ளக்கூடிய இருள் பக்கங்களை பகிர்ந்து கொள்வீர்களா?

"இருள் பக்கங்கள் எல்லாத் தொழில்களிலும் இருக்கு. கஷ்டப்படாம எந்தத் தொழிலையும் ஜெயிக்க முடியாது. சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும் வருகிறது. அதை நாம் பயன்படுத்த வேண்டும். அதற்கு பிறகு நாம் நினைத்த காரியம் நடைபெறும். அவ்வளவுதான். வாய்ப்பு கிடைப்பவன் வெளியே வந்து விடுகிறான். வாய்ப்பு கிடைக்காதவன் திறமை இருந்தும் உள்ளேயே இருக்கிறான். அதனால் வாய்ப்பு கிடைக்கும்போது வெளியே வந்துவிடுங்கள். பயிற்சி எடுத்து, ஜாதகம் பார்த்து நல்ல நேரத்தில்தான் வருவேன் என்று நினைக்காதீங்க. இதுதான் என்னுடைய அனுபவ படிப்பு."

இன்றைய தமிழ் சினிமாவின் டிரெண்ட் என்ன, பேயும், சிரிப்புமா அல்லது அம்மா கணக்கு, அப்பா போன்ற படங்களா, பேய் படம் வெற்றி பெறுவதன் பின்னணி என்னவாக இருக்கும்?

"இன்றைய டிரென்ட் என்பதை 'மக்கள் விரும்பும் படங்கள்' என்றுதான் சொல்ல வேண்டும். இப்போ இருபது பேய் படங்கள் தொடர்ச்சியா வந்துட்டா மக்களுக்கு கொஞ்சம் போரடிக்க தொடங்கிடும். எப்போதோ திடீரென்று ஒரு நகைச்சுவை படம் வந்தா மக்கள் அதைப் பார்க்க போயிடுவாங்க. டிரென்ட் யாரும் மாற்றுவது இல்லை. மாற்றுப்படம் வரும் போது மக்கள் அதை ரசிக்கிறார்கள். ஆனால் நாம்தான் அதை டிரென்டாக நினைத்து அதுக்குப் பிறகு ஒரே நகைச்சுவை படங்களா கொடுக்கிறோம். இப்படிதான் வழமையா நடக்குது. இதை டிரெண்டுன்னு சொல்லிக்கிறோம். அப்பா, அம்மா கணக்கு படத்துக்கெல்லாம் டிரண்ட் கிடையாது. அவை எல்லா காலத்துலேயும் ஜெயிக்கிற படங்கள். அப்பா மாதிரியான படங்கள் எம்.ஜி.ஆர் காலத்திலும், டி.ஆர். காலத்திலும் மட்டுமல்ல, இந்தக் காலத்திலும் ஜெயிக்கத்தான் செய்யும். எல்லா காலத்திலும் அப்பாவும், பசங்களும் இருக்கத்தான் செய்வார்கள். இது காலம் காலமாக நடக்கிற விசயங்கள். அதனால் அப்பாவை, டிரெண்டில் சேர்க்கக்கூடாது. அது நிரந்தரமான வெற்றி ஃபார்முலா"

நீங்கள் எவ்வாறான திரைப்படங்களை இயக்க விரும்புகிறீர்கள்?

"மக்களுக்கு பிடிக்கு படங்களை இயக்க முயற்சி செய்து வர்றேன். அதனால் அவங்களுக்கு அப்பா மாதிரியான படங்களை எடுக்க விரும்புகிறேன்."

நமது சினிமா வெளிநாட்டு படங்களை பார்த்துதான் மசாலா மாதிரியான கதைகளை ரெடி பண்ணுகிறார்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். கதை அமைப்பு பற்றி கொஞ்சம் சொல்வீர்களா?

"நீங்கள் சொல்லுகிற விசயம் இப்போ தலைகீழாக மாறிவிட்டது. இப்போ நம்ம படத்தை பார்த்துதான் வெளிநாட்டில் படம் எடுக்கிறான். உதாரணத்திற்கு ஜெக்கிஷான் நடிச்ச 'டுவின் பிரதர்ஸ்' படத்தை எடுத்துக் கொள்வோம். இது எம்.ஜி.ஆர்.நடித்த அபூர்வ சகோதரர்கள் அல்லது நீரும் நெருப்பும் படத்தின் தழுவல்தான். அப்புறம் டைட்டானிக் படம் உலகெங்கும் பிரமாண்ட வெற்றி பெற்ற படம். ஆனால் அந்த கதையின் சாராம்சம். சிவாஜி நடிச்ச வசந்த மாளிகை படத்திலிருந்து சுட்டதுதான். படத்தில் வரும் காட்சியில் நகை திருட்டு போயிருப்பதாக வாணிஸ்ரீ மீது பழி போடப்பட்டதால் அவங்க வீட்டை விட்டு வெளியே போவாங்க. அதே சீன் டைட்டானிக் படத்துலேயும் வருகிறது. நாயகன் மீது நகை திருட்டு பழி விழுந்து அவன் கப்பலிலிருந்து துரத்தப்படுகிறான். படத்தின் முக்கிய கருவே அதுதான்.

டைட்டானிக் படத்தின் இயக்குனரே ஒரு நேர்காணலின் போது டைட்டானிக் படத்திற்கான கதைக்கருவை தேடி அலைந்த போதுதான் சென்னையில் வைத்து தற்செயலாக வசந்த மாளிகை படத்தை பார்த்தாகவும் படத்தில் தன்னை பாதித்த அந்த சீனையே டைட்டானிக் படத்திற்கான கதைக் கருவாக அமைத்ததாகவும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இப்போ நிலமை அப்படி இருக்கு!

எனது விஜய நகரம் படத்துக்கு ஆங்கில சப் டைட்டில் போட்டு ரீலிஸ் பண்ணனும்னு கேட்டு இருக்கிறாங்க. மேலும் ஆங்கில படங்களை நாம் தமிழல டப் செய்து வெளியிடுவதைப் போலவே தமிழ் படங்களையும் ஆங்கிலத்துக்கு 'டப்' செய்து அமெரிக்காவில் வெளியிடும் முயற்சி நடைபெறுகிறது.
அதோட நமது இராமாயணம், மகாபாரதம், பஞ்சதந்திரக் கதைகளை எடுத்துக் கொண்டால் நம்ம கிட்டே கதைப் பஞ்சமே கிடையாது என்பதை அறியலாம். அதனால் நிறைய ஆங்கிலப் படங்களுக்கான கதைகள் நம்ம கிட்டே இருந்து சுட்டதுதான். தமிழர்கள் கதை எழுதுவதிலும், கதை சொல்வதிலும் சளைத்தவர்கள் அல்ல. ஆனாலும் சிலர் சோம்பேறித்தனமாக அந்தக் கதைகளை எழுதி அதையும் சரியா செய்யாமல் சொதப்பி விடுகிறார்கள். கதாநாயகர்களிடம் கதை சொல்லும் போது சில ஆங்கிலப் படங்களை காட்டி உங்களை இப்படி காட்டப் போறோம்னு சொல்லுறதுக்கு மட்டுமே ஆங்கில படங்கள் உதவுகின்றன"

தேவர் மகன், வேதம் புதிது, விருமாண்டி போன்ற படங்கள் உயர் சமூகத்தை சித்தரிப்பதாக எடுக்கப்பட்டவை. ஆனால் 'கபாலி' தான் கொஞ்சம் தலித் அரசியல் பேசி பெற்றி பெற்ற படம், தலித் அரசியல், வாழ்க்கையை வெற்றிப் படங்களாக இயக்குவது சாத்தியமா?

"சாத்தியம்தான். ஏனென்றால் ஜோக்கரும்; அப்படித்தானே வெற்றி பெற்றிருக்கிறது! ஜோக்கரில் பிரமாண்டமோ, பெரிய நடிகர்களோ யாருமே கிடையாது. அதற்கு முன்னாடி பாலைவன ரோஜாக்கள், நீதித் தண்டனை உள்ளிட்ட பல படங்கள் வந்து வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரு பக்கம் நடுநிலையான உண்மையைச் சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள். கே.பாலச்சந்தரின் 'தண்ணீர் தண்ணீர்' படத்தில் அவ்வளவு தைரியமாக எத்தனையோ விசயங்களை அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் கபாலி என்பது ரஜினியின் படம். அது ஒரு விதமான வியாபார தந்திர சினிமா.

படத்தின் துவக்க விழாவில் பூஜை போடுவார்கள். படத்தின் ஆரம்ப காட்சியிலும் மங்களகரமான கோவில், பூஜை அறை, கோபுரம் உள்ளிட்டவைகளை காட்டுவார்கள். உங்களுக்கும் அதில் நம்பிக்கை இருக்கிறதா?

"நல்லது நடக்கணும் என்பதுதான் விசயமே.இப்போ ஒரு பூஜை போட்டா வருபவர்களுக்கு இனிப்பு கொடுப்போம். அதுவே நல்ல விசயம்தானே! அந்த மாதிரியான நேரத்தில் பூ. பழங்கள் எல்லாம் வாங்குகிறோம். அவங்களுக்கும் ஒரு வியாபாரம் நடக்குது. பூசணிக்கா விக்கிற அந்த அம்மாவுக்கு வியாபாரம் நடந்தா அவ ஒரு வேளை சாப்பாட்டையாவது சாப்பிடுவா. சில பேரு முற்போக்குத் தனமா அது தேவையில்லை என்று சொல்றாங்க. ஆனா நாம போடுகிற பூஜையில நாலு பேருக்கு நல்லது நடக்குதுண்ணா அதை பண்ணுறதுல தப்பில்லையே!

சினிமாவில முதல் ஷொட் என்பது அப்படித்தான் நாலு பேருக்கு வியாபாரம் நடக்கிற மாதிரி வைக்கிறோம். நான் கூட எனது படங்களின் முதல் காட்சியை கிரேன் ஷொட்டில்தான் எடுப்பேன். கீழிருந்து மேலே போவது மாதிரி புதியவர்கள் உயரத்திற்கு வளரணும் என்பது எனது நம்பிக்கை."

No comments:

Post a Comment