Tuesday, November 29, 2016

பாடகர் முத்தழகுவின் பசுமை நிறைந்த நினைவுகள்

நேர்காணல்- மணி ஸ்ரீகாந்தன்

இலங்கை மெல்லிசை பாடல் உலகில் நன்கு அறியப்பட்ட பெயர் வி. முத்தழகு. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட தமிழ், சிங்கள திரைப்பட உலகில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். ‘புதிய காற்று’ திரைப்படம் இவரை உலகத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது.‘என்னங்களாலே... இறைவன் தானே....’
‘ஒஹோ என் ஆசை ராதா....’ உள்ளிட்ட பாடல்களே இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தமது மெல்லிசை பாடல்களால் மத்திய கிழக்கு, ஐரோப்பா என உலக முழுவதும் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்திருக்கும் முத்தழகுவின் கலைப் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


"தொடர்ந்தும் பாடவேண்டும் என்கிற வெறி எனக்கு இன்னமும் இருக்கிறது. ஆனாலும் நம் நாட்டில் தமிழ் கலை படைப்பாளர்களின் பசிக்கு தீனி போட இங்கு ஆட்கள் இல்லை அதற்கான களமும் இல்லை". இலங்கையில் உருவான தமிழ் சினிமாவின் வரலாறு முடிவுற்றதாகவே நினைத்து வேதனைப்படும் முத்தழகு, தமது அந்தக்கால அனுபவங்களை இப்படி சொல்கிறார். "நான் கண்டி பேராதெனியாவில் பிறந்ததாக எனது பிறப்புச் சான்றிதழ் சொல்கிறது. ஆனால் அது எனக்கு தெரியாது. கொழும்பு பம்பலப்பிட்டியவில் வளர்ந்தது தான் எனக்கு ஞாபகம்.

பம்பலப்பிட்டி சென்மேரீஸ்சில் தான் நான் படித்தேன். சின்ன வயசிலேயே நான் கலையை காதலிக்க தொடங்கிவிட்டேன். எனது பக்கத்து வீட்டு ரேடியோவில் ஒலிபரப்பாகும் பாடல்களை ஏழு வயசிலிருந்தே கேட்டு அதை அப்படியே பாடுவேன். ‘நான் கொண்ட காதல் இவ்வாறு தான்... என்ற கண்டசாலாவின் பாடலை தொடர்ந்து பாடிக்கொண்டிருப்பேன்.

பாடசாலைக்கு சென்றாலும் பாடிக்கொண்டுதான் இருப்பேன். காலையில் சீக்கிரமாகவே பள்ளிக்கூடம் போகும் நான் தாளம் போட நல்ல சத்தம் வர கூடிய மேசை கிடைக்கிறதா என்று தட்டி, தட்டி பார்த்து அதை தேர்ந்தெடுத்து கொள்வேன்.

அப்படி ஒருநாள் காலையில் நான் மேசை தேடும்போது வகுப்பிற்குள் வந்த மரியம்பிள்ளை டீச்சர் என்னைப் பார்த்து விட்டார். பிறகென்ன பிரம்பால் விளாசி தள்ளினார். அவர் அடித்த அடியின் தழும்பு என் முதுகில் நீளமாக படிந்திருந்தது.

வீட்டிற்கு சென்றதும் அம்மாவிடம் சொன்னேன். தன் பிள்ளைக்கு இப்படி அடிச்சிட்டாங்களே என்ற வருத்தம் அம்மாவிற்கு. அந்த நொடியே என்னை அழைத்து வந்து டீச்சரிடம் நியாயம் கேட்டு விட்டு சென்றார்.

அந்த சம்பவம் நேற்று நடந்த மாதிரியே இருக்கு... என்ற முத்தழகு, எனது பாடசாலை நண்பர்களான எட்வட், எந்தனி, மீரா ஆகியோர் என்னை பாட்டுப் பாடச் சொல்லி கேட்பார்கள். நானும் பாடுவேன்.

இப்படி நான் பாட்டு பாடும் செய்தி காட்டுத்தீ மாதிரி பாடசாலை முழுவதும் பரவ எனக்கு பாடசாலை அபிவிருத்தி சங்க கூட்டத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. எனது முதல் மேடை பிரவேசம் சென்மேரிஸ்தான்.

அதன் பிறகு சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்கு பற்றினேன். சரவணமுத்து என்பவர்தான் வானொலி மாமாவாக இருந்தார். அதில், கவிதை, பாட்டு எல்லாம் பாடுவேன். அதற்கு சன்மானமாக எனக்கு எல்லுருண்டையும், தேநீரும் தருவார்கள், அதை சாப்பிட்டு விட்டு வருவேன். அதன் பிறகு எனது அண்ணனின் நண்பரான நாகலிங்கம் ‘மெண்டலின்’ வாசிப்பவர் அவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் ‘மெண்டலின்’ வாசித்தார். நான் அவருக்கு எடுபிடியாக வேலை செய்தேன்.

அவரின் மெண்டலின் பெட்டியை தூக்கிக்கொண்டு அவரின் பின்னால் செல்வேன். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அவர் மெண்டலின் வாசிக்கும்போது நானும் அவருடனே இருப்பேன். இடம் நிரப்பும் நேரங்களில் யாராவது பாட்டு பாடவேண்டும்.

அந்த நேரத்தில் யாரும் இல்லாவிட்டால் எனக்கும் வாய்ப்பு கிடைக்கும். அந்த நேரங்களை சரியாக பயன்படுத்தி அப்படியான சந்தர்ப்பத்தில் நான் பாடிய முதல்பாடல்தான் எனை ஆளும் தேவனே... என்ற பாடல். இதற்கு கே. எம். சவாஹீர் மாஸ்டர் ஆர்மோனியம் வாசித்தார்.
திருமணத்தின் போது...
பிறகு இலங்கையில் மெல்லிசை பாடுவதற்கு கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டது. நான் முதல் ஆளாக விண்ணப்பம் அனுப்பினேன். எனக்கு முதல் சந்தர்ப்பம் கிடைத்தது. மெல்லிசை பாடல்கள் இலங்கையில் ஆரம்பமாவதற்கு காரணமாக இருந்தவர் எச். எம். பி. மொஹிதீன். 1971ல் தான் எனது முதல் மெல்லிசை பாடல் ஒளிப்பதிவானது.

க. கணபதிபிள்ளை பாடல் எழுத ஆர். முத்துசாமி இசையமைத்தார். அன்னை பராசக்தி.... என்ற பாடல் தான் அது ஒரு இனிக்கும் சம்பவம்; என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமும் இதுதான்," என்று தமது பழைய நினைவுகளை மீட்டிப் பார்க்கும் முத்தழகுவிடம்.

‘இளம் வயதில் நீங்கள் எப்படி குறும்பானவரா’ என்றோம். "நான் ரொம்ப சமத்து நான் உண்டு என் வேலை உண்டு என்றுதான் இருப்பேன்.

எனக்கு ரொம்பவும் பிடித்த விசயம், வெள்ளவத்தை பாலத்தில் நின்று மீன் பிடிப்பது. அப்போதிருந்த வெள்ளவத்தை பாலம், இதுவல்ல அது ரொம்பவும் தாழ்வாக இருந்தது. ஸ்கூல் முடிந்து வந்ததும் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு வெள்ளவத்தை பாலத்திற்கு சென்று விடுவேன். அப்போ எனக்கு பதினாறு வயதிருக்கும். நைலான் நூலும் தூண்டியும் ஒரு சதம்தான்.

‘பிடிக்கும் மீன்களை வீட்டிற்கு கொண்டு சென்று பொரித்து சாப்பிடுவது ஒரு தனிச் சுவை. இதை குறும்பு பட்டியலில் சேர்க்ககூடாது, இது ஒரு விளையாட்டு" என்றவர், "நான் ஸ்போர்ட்ஸ்மேன் சிகரெட் தான் குடிப்பேன். ஒரு நாள் சிகரெட் பெட்டியொன்றை வாங்கி எனது சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். நான் அணிந்திருந்தது வெள்ளை சட்டை என்பதால் பாக்கெட்டிலிருந்த சிகரெட் பெட்டி பளிச்சென்று வெளியே தெரிந்தது. அதை கவனித்த எனது தந்தை கடுப்பாகி ‘உனக்கு இப்போ சிகரட் தாண்டா கேடு’ என்று திட்டினார்.

அதன் பிறகு எனது சிகரெட் பழக்கத்திற்கு ‘குட்பை’ சொல்லிவிட்டேன். எனது அப்பா ரொம்பவும் அன்பானவர் எனக்கு காற்சட்டை, தைக்க வெள்ளவத்தையில் டெய்லர் கடை வைத்திருந்த பொன்னம்பலத்திடம் என்னை அழைத்து சென்று அளவு கொடுத்து விட்டு வருவார்.
அம்மா, அப்பா, சகோதரருடன் 
(அமர்ந்திருப்பவர்) முத்தழகு
நான் பெரியவனாகி லும்பிளி மண்டபத்தில் சப்தஸ்வரங்கள் (தனிநபர் கச்சேரி) செய்தேன். அதற்கு வரும் எனது தந்தை இடுப்பு வேட்டி மடிப்பில் அம்மாவின் நகைகளையும், பணத்தையும் பொட்டலமாக கட்டிக்கொண்டு வந்து நிகழ்ச்சி முடியும்வரை எனக்காக காத்திருப்பார். சவுண்ட், பக்க வாத்தியகாரர்கள், மண்டபம் செலவு என்று எல்லா செலவுகளுக்கும் அப்பாதான் பணம் தருவார். எங்கே பணம் போதாமல் போய்விட்டால் அவசரத்திற்கு நகைகள் உதவுமே என்றுதான் அம்மாவின் நகைகளை எடுத்துக்கொண்டு வருவார். இப்படியான அப்பா எல்லோருக்கும் அமைவதில்லை. என்னால் அப்பாவை மறக்கவே முடியாது" என்று, கண்கலங்குகிறார் முத்தழகு.


காதல் அனுபவங்களை பற்றி கேட்டதும் "நிறைய பேர் என்னை காதலிச்சிருப்பாங்க ஆனால் நான் தான் யாரையும் காதலிக்கலை, ஏனென்றால் எனக்கு காதலிக்க நேரமில்லைன்னுதான் சொல்லனும். பாட்டு ஸ்டூடியோ, ஒலிப்பதிவுன்னு ஒரே பிஸி’ ஆனாலும் காதலில்லாமல் ஒருவன் இருந்து விடத்தான் முடியுமா, எனக்கும் காதல் வந்தது. அவள் பெயர் மேரி மொனிக்கா எனது நண்பரின் தங்கை. கொழும்பு- 10ல் தான் அவளின் வீடு இருந்தது. எனது நண்பரை பார்ப்பதற்காகத்தான் அடிக்கடி அந்த வீட்டிற்கு நான் செல்வதுண்டு. அப்போது என் கண்ணில் பட்டவள் தான் மொனிக்கா. பார்த்தவுடனே பத்திகிச்சு காதல் தான்.

அதன் பிறகு அவரின் வீட்டுக்கு சென்றால் எனக்கு ஸ்பெசலாக ‘டீ’ போட்டுத் தருவாள் அது ஒரு விதமான சுவையாக இருந்தது. பிறகு எப்படியாவது இந்த விடயத்தை அவளின் அண்ணனிடம் சொல்லி விட வேண்டுமே என்ற தவிப்பு என்னிடம் இருந்தது. ஆனாலும் நண்பரின் தங்கையை காதலிக்கும் விடயத்தை சொல்ல எனக்கு தைரியம் இல்லை.
1958ல் பாடல் பதிவிற்காக இலங்கை 
ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் 
சென்றிருந்த போது...
ஒருநாள் நானும் நண்பரும் மடுமாதா கோவிலுக்கு போயிருந்தோம். அங்கே சென்றதும் நான் மோனிகாவை காதலிக்கும் விடயம் பற்றி நண்பருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு மாதாவை வணங்கிய பிறகு நண்பரின் கையில் கொடுத்து ‘இதை படித்து பார்த்துவிட்டு உன் முடிவை சொல்லு’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டேன். அதன் பிறகென்ன மடு மாதாவின் ஆணைப்படி நண்பரின் சம்மதத்துடன் எனது வீட்டாரின் விருப்பப்படியும் திருமணம் பம்பலபிட்டி பழைய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு வேலணை வீரசிங்கம், வி.பி. கணேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். அதன் பிறகு பேங்சால் வீதியில் உள்ள ‘லங்கா போட்டோ’ ஸ்டூடியோவில் திருமண போட்டோ பிடித்தோம். ஹனிமூன் கிரீன்லைன் ஹோட்டலில் நடந்தது."
முத்தழகுவின் ஒஹோ என் ஆசை ராதா... பாடல் பற்றி கேட்டதும் முத்தழகுவிற்கு உற்சாகம் தாங்கவில்லை. "அதுவும் மறக்க முடியாத சம்பவம்தான். எனது முதல் திரைப்பட பாடல் திரையில் ஒலித்தபோது நான் உயர உயர பறப்பது போன்று ஒரு சுகம் எனக்குள் உருவானது.

இந்த பாடலுக்கான வாய்ப்பை எனக்கு வழங்கியவர் வி.பி. கணேசனின் துணைவியார்தான். எமது பாடல்களை அதிகமாக வானொலியில் கேட்டு வந்த அவர் ‘புதிய காற்று’ படத்தின் தயாரிப்பு வேலைகள் நடந்தபோது படத்தில் என்னை பாட வைத்தால் நன்றாக இருக்குமே என்று வி.பி. கணேசனிடம் கூறி இருக்கிறார். அதன் பிறகுதான் எனக்கு அழைப்பு வந்தது. நடிகர் எஸ். என். தனரெத்தினம் எனது வீட்டிற்கு வந்து என்னை அழைத்து கொண்டு போனார். கிருளரோட்டில் ‘சிலோன் ஸ்டூடியோ’ என்ற பெயரில் சினிமா படப்பிடிப்பு தளம் ஒன்று இருந்தது. (இப்போது அது அங்கு இல்லை அந்த இடத்தில் இப்போது ஒரு பெட்டறி கம்பனி இருக்கிறது) அங்குள்ள ஒலிப்பதிவு கூடத்தில் தான் பாடல் பதிவானது.
சென்னை ராஜ் டிவியில் பாடல் 
பதிவு நடைபெற்றபோது ஸ்ருதி ஜீவராஜன் 
இசைக்குழுவினருடன்

ஈழத்து ரத்தினம் எழுதிய பாடலுக்கு டி.எப். லத்தீப் இசையமைக்க நான் பாடினேன். முதல் ரெக்காடிங்கில் புதிய காற்று படத்தின் இரண்டாவது நாயகனுக்காகத்தான் பாடினேன். அந்தப் பாடலை கேட்ட வி.பி. கணேசன் தனக்கு இவரின் குரலில் ஒரு பாடல் வேண்டும் என்று கேட்க அவருக்காகவும் ஒரு பாடலை பாடினேன். மறக்க முடியாத நபர்? ‘எனது மாமா இளஞ்செழியன், இவர்தான் இலங்கை சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் முன்னோடியாக திகழ்ந்தவர். இந்தப் பட்டியலில் நான் எம். எஸ். செல்வராஜா மாஸ்டரையும் குறிப்பிடவேண்டும். அவர் இசையமைத்த பாடல்கள் தான் என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன." என்று தன்னை உச்சிக்கு ஏற்றிவிட்டவரை திரும்பி பார்க்கிறார் முத்தழகு.
முத்தழகு கடந்து வந்த வாழ்க்கையை பற்றி சில வார்த்தைகள் கேட்டோம். "இன்னமும் நான் மிதி சைக்கிளில் தான் பயணிக்கிறேன். சாதாரண வாழ்க்கைதான் ஆனால் இனிமையானது. குடும்பத்தில் முழுமையான மகிழ்ச்சி இருந்தால் ஒருவன் வாழ்க்கையில் வெற்றிபெற்று விட்டான் என்றுதான் அர்த்தம். நானும் வெற்றிபெற்றுவிட்டேன்." வாழ்க்கையில் எதையாவது தவறவிட்டிருக்கியர்களா?....
"இல்லை..." என்ற முத்தழகு கொஞ்சம் தயங்கியபடி "நான் ஒன்று சொல்வேன்...இது என் தகுதிக்கு மீறிய ஆசைதான். ஆனால் ஆசைப்பட்டுவிட்டேன். எனக்கு ஒரு தியேட்டர் கட்டி அதில் சினிமா படம் ஓட்டனும்ங்கிறது என் நீண்டகால ஆசை. கனவு என்றும் சொல்லலாம். ஆனால் இன்றுவரை அது நிறைவேறவில்லை.

என்ன செய்ய எனக்கும் வயதாகிவிட்டது. அந்த ஆசை நிறைவேறாமலே.... முடிந்துவிடும் போலிருக்கிறது" என்று பெருமூச்சுவிட்ட முத்தழகுவிடமிருந்து விடைபெற்றோம். நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் என்று ஒருவன் தேவைப்படமாட்டான் என்பது முத்தழகுவிற்கு புரிந்திருக்கும்.

No comments:

Post a Comment