Wednesday, November 30, 2016

ஸ்ரீமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் தமிழகம் சென்ற மூர்த்தியின் அனுபவங்கள்

நேர்காணல்- மணி  ஸ்ரீகாந்தன்

ஸ்ரீமா, சாஸ்த்திரி ஒப்பந்தத்தின்படி தாயகம் திரும்பியவர்களின் வாழ்க்கை வளமானதாக இருக்கிறதா என்று, தமிழகத்துக்கு சென்று அவர்களின் வாழ்கையையும், பழைய நினைவுகளையும் தொடர்ச்சியாக பதிவு செய்து வெளியிட்டு வந்திருக்கிறோம்.

அப்படி நாம் சந்தித்த நம் உறவுகள் சொன்ன கதைகள் சுவாரஸ்யம் நிறைந்தவை. நேபொட கல்கடுவை தோட்டத்தில் பிறந்து வளர்ந்த மூர்த்தி தனது 21வது வயதில் தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து சென்றிருக்கிறார். தற்போது ஈரோட்டில் வசித்து வரும் அவரை ஒரு இனிய மாலை வேளையில் அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

பழைய நினைவுகள் என்றதுமே மூர்த்திக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சி "74ல் தான் அந்த மண்ணைவிட்டு வந்தோம். இன்று நினைத்தாலும் இனிக்கும் நினைவுகளாக மனசில் அப்படியே பதிந்து கிடக்கிறது" என்று நெகிழ்ந்தார்.

"குடும்பத்தில் நான் இரண்டாவது.உடன் பிறந்தவர்கள் மொத்தம் 6பேர் அம்மா, அப்பாவோடு ரொம்பவும் ஜாலியாக இருந்தோம். அதேமாதிரி எனது பெரியம்மா ரெண்டு பேரு இருந்தாங்க அவங்க இருவருக்கும் தலா ஆறு, எட்டுன்னு மொத்தம் 14 பிள்ளைங்க.  அவங்க புளத்சிங்கள தல்கஸ்கந்தை தோட்டத்துல இருந்தாங்க திருவிழா, பண்டிகைன்னு வந்துட்டா நாங்களும் குடும்பத்தோட அங்கே போயிடுவோம்.

அப்போ எங்க ஏழு பேரையும் சேர்த்து அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சின்னு மொத்தம் இருபத்தோரு பேரு. வீடே திருவிழா கூட்டம் மாதிரிதான் இருக்கும். அந்த லயத்தின் இரண்டு பக்க கடைசி வீடுகளில் என் பெரியம்மாமார் குடியிருந்தாங்க. அதனால நாங்க அங்கேயும், இங்கேயும் ஓடிட்டு இருப்போம்.

எங்க லெட்சுமி அக்கா எங்க எல்லாத்துக்கும் ரொட்டிகளை சுட்டு அடுக்கி வைத்திருக்கும். நாங்க எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். எங்க பெரியம்மா வீடு ஒரு தர்ம சத்திரம் மாதிரி. எல்லோருக்கும் எப்போதும் அங்கே உணவு இருக்கும். எங்க அண்ணன் வீமன் ஒரு கிளாரினட் கலைஞர் அவரோட வீட்டுக்கு வரும் வாத்தியக் கலைஞர்களும் பெரியம்மா வீட்டுலேயே மாதக்கணக்கில் தங்கி விடுவார்கள். அவர்களுக்கும் மூணுவேளை உணவு அங்கேதான். இப்போ ஒருத்தருக்கு மூணு வேளை உணவுக் கொடுப்பது என்பது சாதாரண விசயமில்லை ஆனா அந்தக் காலத்துல எப்படி செலவை சமாளித்தார்கள் என்று நினைக்கும் போது மலைப்பாக இருக்கிறது. கொடுக்க, கொடுக்க குறையாத அட்சய பாத்திரம் பற்றி புராணக் கதைகளில் படித்திருக்கிறேன். ஆனால் அதைப்பற்றி நினைத்துப் பார்க்கும்போது அந்த அட்சய பாத்திரம் எங்க பெரியம்மா வீட்டுல இருந்திருக்கணும்” ஆச்சர்யத்தோடு பேசும் மூர்த்தியின் முகத்தில் சோகம் படர்ந்து கொள்கிறது.

“பழைய விசயங்களை அசைப்போடு போது மனசு கனக்கிறது என்ன செய்வது”ன்னு பெருமூச்சோடு நிறுத்தியவர் தொடர்கிறார்.

"எங்கப்பா இந்தியாவுக்கு போயிடணும் என்கிற லட்சியக் கனவோடு வாழ்ந்தவர். அவரின் எதிர்பார்ப்பின்படியே ஸ்ரீமா- சாஸ்த்திரி ஒப்பந்தமும் அமுலுக்கு வந்தது. உடனே கண்டிக்கு போய் பாஸ்போர்ட் வேலைகளை முடித்து வந்த அவர், இந்தியாவுக்கு போறதுக்கான நாளையும் அறிவித்தார்.

அதன் பிறகு தாயகத்துக்கு பயணமாகும் தினத்துக்கு இருபது நாளுக்கு முன்பதாகவே நாங்க தல்கஸ்கந்த தோட்டத்துக்கு போய் எங்க பெரியம்மா வீட்டுல தங்கி விட்டோம்.அந்த இருபது நாளும் கவலையும் கண்ணீருமாகத்தான் இருந்தோம். ஒரு பெரிய தட்டுல சாப்பாட்டை போட்டு அண்ணன் தம்பிக எல்லோரும் ஒண்ணா  உட்கார்ந்து சாப்பிடுவோம். அப்போது பிரிவின் சோகம் தாங்காமல் அழுதுவிடுவோம்.

பிறகு குறித்த நாளில் பிறந்த மண்ணை பிரிந்து தாயம் திரும்ப  கொழும்பு ரயில் நிலையத்துக்கு வந்தோம்.அங்கே எங்களை வழியனுப்ப எங்கள் அண்ணன் மணி வந்திருந்தார்.ரயில் புறப்பட்டபோது ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்தது.ரயில் பெட்டியின் ஜன்னலுக்கருகில் அமர்ந்திருந்த நான் மணி அண்ணனோடு பேசிக் கொண்டிருந்தேன். ரயில் நகர்ந்தபோது சோகம் தாங்காமல்,ரயிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த அண்ணனை கட்டிப்பிடித்துக் கொண்டேன். உடனே அங்கே நின்றிருந்தவர்கள் எங்களை  விடுவித்தார்கள்.கண் இமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம் அது கொஞ்சம் தடுமாறி இருந்தாலும் எங்கள் இருவருக்கும் ஆபத்தாகியிருக்கும்.அதன் பிறகு தலைமன்னாரில் கப்பல் ஏறினோம். கப்பல் சங்கு சத்தத்தோடு புறப்பட்டபோது அழுகையும்,ஒப்பாரியும் காற்றில் கலந்தது.கப்பல் தண்ணீரில் மிதந்தது என்பதைவிட கண்ணீரில் மிதந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த சோகத்தை என்னால் வார்த்தைகளில் விபரிக்க முடியாது.

எங்கள்  சொந்த ஊரான பட்டுக்கோட்டைக்கே எங்களை அப்பா அழைத்துச் சென்றார். பசுமை தேடி தமிழகம் வந்தால் எனக்கு ஏமாற்றமே காத்திருந்தது என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது. ஏனென்றால் பசுமை சும்மா வராது நாமதான் பசுமையையும், வளமான வாழ்க்கையையும் உருவாக்க வேண்டும் கஷ்டத்தைக்கூட இஷ்டப்பட்டு ஏற்றுக் கொண்டால்தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.சுலபமாக கிடைப்பது எதுவும்  உயர்ந்த நிலையில் இருக்காது.எது கடினமாக கிடைக்கிறதோ அதுதான் வலிமையும்,மதிப்புமிக்கதாகவும் இருக்கும்.” என்றவர்,
"75,76 ஆண்டுகள் வரைதான் அப்பா உயிரோடு இருந்தார். அந்த நாட்களில் அவர் மேலதிகமாக ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் கடலை, நெல் போன்றவற்றை பயிரிட்டார். நாங்களும் அவரோடு சேர்ந்து உழைத்தோம். என் அப்பா ரொம்பவும் நேர்மையான மனிதர் ஒரு வேலையை  எடுத்தால் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அவருக்கு தச்சு தொழிலும் தெரியும். நன்றாகவே சிலம்பம் சுற்றுவார். தஞ்சை மண்ணுக்கே உரிய வீரமும், மானமும் அவர் ரத்ததில் கலந்திருந்தது.
இளமையில்...
இலங்கையில் வாழ்ந்த காலத்தில் எங்கள் எல்லோருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்பதுதான் அப்பாவின் கொள்கையாக இருந்தது. கல்விதான் எப்போதும் அழியாத சொத்து என்பதை அவர் உறுதியாக நம்பினார். அப்பா பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் எங்கள் எல்லோரையும் தோட்டத்தில் வேலை செய்ய விட்டிருப்பார். எங்களுக்கு கல்வியும், சொந்த மண்ணில் சுதந்திரமான வாழ்க்கையையும் கொடுக்க வேண்டும் என்பது அவரின் கனவு. அதை நனவாக்கியும் விட்டார்" என்று தனது அப்பாவை பற்றி பெருமிதமாக பேசுகிறார் மூர்த்தி.

"என் அம்மா பெயர் ஆச்சிக் கண்ணு அவரும் எங்களுக்காக உழைத்தவர்தான். கல்கடுவை தோட்டத்துல அவங்க ரப்பர் மரங்கள வெட்டி பால் எடுப்பாங்க அப்போ அந்த இரப்பர் காட்டுல இரத்தத்தை உறிஞ்சும் அட்டை பூச்சிகள் என் அம்மாவின் கால்களின் விரல்களுக்கிடையே கடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும். அட்டைகளை பிடித்து வீசிக்கொண்டிருந்தால், அந்த நாளுக்குரிய இருநூறு மரங்களை வெட்ட முடியாது என்பதால் அதைக் கண்டுக் கொள்ளாமல் அவர் மரங்களை வெட்டுவதை நான் பார்த்திருக்கிறேன்." தனது தாயாரைப் பற்றி மூர்த்தி சொல்லும் போதே அவரின் வார்த்தைகளில் நெகிழ்ச்சி.

தாயகம் திரும்பியதும் நான் தஞ்சை வேலை வாய்ப்பு பணியகத்தில் விண்ணப்பித்திருந்தேன். சில நாட்களுக்கு பின் ஈரோடு சேஷசாயி பேப்பர் போர்ட்டில் தொழில் பயிற்சிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி நேர்முகத் தேர்வுக்கு வரும்படி என்னை அழைத்திருந்தார்கள். அங்கு சென்று இரண்டு வருடங்களாக பொய்லர் அட்டென்டர் துறையில் இரண்டு ஆண்டுகள் முறையான பயிற்ச்சி எடுத்தேன். அந்தக் காலக்கட்டத்தில் இலங்கை அகதிகள் என்ற அடிப்படையில் எனக்கு உதவித் தொகையாக மாதம்தோறும் 98 ரூபா கிடைத்தது.

பயிற்ச்சி முடிந்த பிறகு அந்த வேலைக்கான வெற்றிடங்கள் இல்லாததால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. அதன் பிறகு பட்டுக்கோட்டைக்கு சென்ற நான் ஒரு மாதம் கழித்து ஈரோடுக்கே வந்து வேலைத் தேடும் படலத்தை தொடங்கினேன். தஞ்சை மண்ணில் விவசாய காணிகளை தவிர பிழைப்புக்காக வேறு ஏதும் இல்லாத காரணத்தால் நான் ஈரோடுலேயே எங்காவது கம்பனிகளில் வேலைக் கிடைக்குமா என்று எதிர்பார்த்து இருந்தேன். அப்போது சுகுமாரன் என்ற கான்றக்டர் வீடுகளுக்கு பெயின்ட் அடிக்கிற வேலை இருப்பதாக என்னை அழைத்தாரு ஒரு நாளைக்கு ஏழு ரூபா சம்பளம்.கிடைத்த வேலையை செய்யலாம்னு அந்த வேலைக்கு போனேன்.பள்ளிப்பாளையம்,ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சுற்றி வேலை செய்தேன்.அப்போது சேஷசாயி பேப்பர் போர்ட் நிறுவனத்துக்கு பக்கத்திலிருந்த ராயல் திரையரங்கை கட்டி முடித்து பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தார்கள்.அதில் நானும் வேலை செய்து கொண்டிருந்தேன்.அப்போது ஈரோட்டில் பொன்னி சக்கரை ஆலையும் உருவாகிக் கொண்டிருந்தது.
அங்கே வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள் என்பதை அறிந்து பொன்னி சக்கரை ஆலையின் பாய்லர் பிரிவுக்கான அதிகாரி நடராஜன் ஐயாவை அவரின் வீட்டுக்குச் சென்று பார்த்தேன்.

‘ஏன் இவ்வளவு காலதமதமாக வாரீங்க இப்போதான் ஆட்களெல்லாம் எடுத்தோம், ஆனாலும் இரண்டு வேலை வெற்றிடங்கள் இருப்பதாக அறிகிறேன்.நாளைக்கே நேர்முகத் தேர்வுக்கு  வாங்க’ன்னு சொன்னாரு.
பொன்னி சக்கரை ஆலையின் தலைமை பொறியிலாளரான ஜம்புநாதன்  தான் என்னை நேர்முகம் செய்தார். ஒரு வாரத்தில் வேலை கிடைத்தது. பிரதான பொறியிலாளர் குணசேகரனின் தலைமையில் வேலை செய்தேன்.அங்கே 30 வருடங்களாக பணியாற்றியிருக்கிறேன்.பாய்லர் பிரிவில் மூன்றாம் இடம், இரண்டாம் இடம், என்று வளர்ந்து இன்று முதல் இடத்தையும் பிடித்து விட்டேன்.
இந்த நேரத்தில் என் வாழ்க்கைக்கு ஒளி கொடுத்து பிரகாசிக்க செய்த சேஷசாயி பேப்பர் போர்ட் நிறுவனத் தலைவர் விஸ்வநாதனை நன்றியோடு நினைக்கிறேன். அதோடு எனது பணியின் ஓய்வுக்கு பிறகு எனக்கு மீண்டும் வேலை வாய்ப்பை வழங்கிய ஸ்ரீ குமரன் பேப்பர் போர்ட் நிறுவனர் பாஸ்கரன் அய்யாவையும் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள், சக பணியாளர்கள் அனைவரையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன்.
இத்தனைக்கும் நான் கற்றது ரொம்பவும் குறைவுதான். பத்தாவது வரைதான் நம்ம படிப்பு. நான் பத்தாவது வரை படித்ததே பெரிய விசயங்க என்றவர், மீணடும் கல்கடுவையின் நினைவுகளுக்கு தாவினார்.

கல்கடுவை சென் அந்தோனியார் தேவாலயத்தில் ஐந்தாம் வகுப்பு வரை கல்விக் கற்றேன்.அது ஒரு மிஷனரி பாடசாலையாக இருந்தது. நானும் எனது சகோதரர்கள் அனைவரும் அங்கேதான் கல்விக் கற்றோம்.
மூணாம் வகுப்புக்கு பிறகு நான் பாடசாலைக்கு போவதில் ரொம்பவே கள்ளத்தனம் செய்தேன்.பாடசாலைக்கு எங்க  வீட்டுல இருந்து ஒரு இரண்டு கிலோ மீட்டர் நடந்து மலையிலிருந்து இறங்கி வர வேண்டும்.
அப்படி வரும்போது நான்தான் கடைசியாக வருவேன். எனது அண்ணன்,தங்கச்சி எல்லோரும் முன்னாடி போகும் போது நான் பின்னாடி எங்காவது காட்டு செடிகளுக்குள் ஒளிந்துக் கொள்ள இடம் தேடுவேன். பாடசாலைக்கு காலை எட்டு மணிக்குள் போய் விட வேண்டும். அதனால் பின்னால் திரும்பி பார்க்கும் என் தங்கச்சிங்க ‘அண்ணே சீக்கிரம் வா!’ன்னு சொல்லி அழுவாங்க அதற்கு நான் ‘நீங்க போங்க நான் மெதுவா வாரேன்’ன்னு சொல்லுவேன். ‘இவன் இன்னைக்கு ஸ்கூலுக்கு வர மாட்டான்’ன்னு நினைக்கும் அவங்க போய் விட்டப்பிறகு நான் அங்கே நிற்கும் பெரிய மாமரத்தின் பின்னால் மறைந்துக் கொள்வேன். பிறகு அங்கே இருக்கும் பாறைகளின் மேல் ஏறி அமர்ந்து இருப்பேன்.தோட்டத்து கங்காணி வந்தா ஓடிச் சென்று காட்டுப் புதர்களில் பதுங்கி விடுவேன்.பிறகு 12 மணிக்குப் பாடசாலை முடிந்து பிள்ளைகள் வரும் போது. அவங்களோடு வீட்டில் ஆஜராகி விடுவேன்.
பிறகு விசயம் தெரிய வர நமக்கு அப்பாவிடம் அடிவிழும். ஒரு நாள் அப்படிதான் காலையில எங்கம்மா என்னை ஸ்கூலுக்குப் போக ஆயத்தமாக்கி  நேபொடையில இருந்து களுத்துறைக்கு படிக்கப் போகும் ஒரு பையனிடம் ‘இவன் நேபொடைக்கு படிக்கப் போக பயப்படுறான்,அதனால இவனை நீ களுத்துறைக்கு கூட்டிட்டுப் போ’ன்னு சொல்ல நானும் ரொம்ப மகிழ்ச்சியோடு அந்த பையனின் சைக்கிளில் ஏறி அமர்ந்து கொண்டு போனேன். போகும் போதும் அந்தப் பையனிடம் ‘அண்ணே எங்க ஸ்கூல கடக்கும் போது கொஞ்சம் வேகமா போங்க’ன்னு சொல்ல அந்த பையனும் வேகமாதான் போனான். எனது ஸ்கூலை நெருங்கிய போது எனக்கு பயமாகத்தான் இருந்தது.‘யாராவது பார்த்துவிட்டால் என்னாவது?’ அப்படி நான் நினைத்த மறு கனமே சைக்கில் எனது ஸ்கூல் வாசலில் நின்றது. அடுத்த நொடியே விசயத்தை புரிந்து கொண்ட நான் சைக்கில் பாரிலிருந்து குதித்து தலைதெறிக்க தப்பி ஓடினேன்.
நான் தப்பி ஓடும் செய்தி ஸ்கூல் வட்டாரத்தில் பரவ மூணு மாணவர்கள் என் பின்னாடியே துரத்தி வந்து என்னை குண்டுக் கட்டாக தூக்கிச் சென்றார்கள்.
ஒருநாள் பாடசாலைக்கு செல்லாமல் நான் வழியில் பாச்சா காட்டிக் கொண்டிருந்த போது, என் அண்ணன் என்னை துரத்த நான் தோட்டத்து ஒற்றையடி படிக்கட்டில் தறிக்கெட்டு ஓடி குப்புற விழுந்ததில் என் முன் பற்கள் இரண்டும் விழுந்து ரத்தம் வழிந்தது.” என்று சிலாகித்து பேசுகிறார் மூர்த்தி.

“கல்கடுவையில் படிக்கும் போது என்னோடு குழந்தைவேல் என்று ஒரு பையன் படித்தான் அவன்தான் என்னோட பெஸ்ட் பிரண்டு அந்த பையனோட பெற்றோர்கள் நேபொட டவுனில இனிப்புக் கடை வைத்திருந்தார்கள். பாடசாலை இடைவேளையின் போது அவனோட நேபொடைக்கு சைக்கில்ல போய் இனிப்பு கடையில மிக்ஸர்,சாக்லட் எல்லாத்தையும் சட்டை பாக்கட்டில் போட்டு எடுத்து வந்து ஸ்கூல்ல வச்சி சாப்பிடுவோம்.
ஐந்தாம் வகுப்புக்கு பிறகு நான் மத்துகமை சென் மேரீஸ் ஸ்கூலுக்கு சென்றேன். அங்கே ஒன்பதாம்,பத்தாம் வகுப்பு படிக்கும் போது, அழுத்கமை செல்லும் வழியில் ஸ்கூலுக்கு அருகாமையில் இருந்த அய்யன் கங்காணி வீட்டுலதான் இரண்டு வருசம் தங்கி படிச்சேன். அய்யன் கங்காணியின் மகன் கந்தபெருமாள் எங்கள் தோட்டத்துல பீல்ட் ஒபிசராக வேலைப்பார்த்தாரு. அவங்க வீட்டுக்கு பக்கத்துலயே அவங்களுக்கு சொந்தமா ஒரு முருகன் கோவில் இருந்தது. அந்தக் கோவில்ல போட்ட நாடகத்துல கூட நான் முருகன் வேசம் போட்டு இருக்கேன். அவங்க எங்க தூரத்து சொந்தக்காரங்க அதனால எங்க வீட்டுல இருந்து சாப்பாடும் கொண்டு போவோம். ஆனாலும் நாங்க லயத்துல கூலிக்காரவங்களாக இருப்பதால யாருக்கும் தெரியக் கூடாதுன்னு நைட்டுலதான் உணவு கொண்டு போவோம்.” என்றவர்,
“சென் மேரீஸ் கல்லூரியில் பத்தாவதோடு படிப்பபை நிறுத்திவிட்டு எனது அண்ணனுக்கு தெரிந்த நபர் ஒருவரின் அழைப்பை ஏற்று களுத்துறை பஸ்தரிப்பு நிலையத்துக்கு பக்கத்தில் இருந்த நியூ வேதநாயகி ஸ்டோர்ஸில் விற்பனையாளராகவும்,எழுத்தராகவும் பணியாற்றினேன்.அந்தக் கடையை நடேசன், தர்மலிங்கம் ஆகிய சகோதரர்கள் நிர்வகித்து வந்தார்கள்.அந்தக் கடைக்கு பக்கத்திலும் ஒரு யாழ்ப்பாணத்து கடை இருந்தது.
நான் வேலைப் பார்த்த கடையில் என்னோடு காந்தி ,தங்கவேல் உள்ளிட்டோர் பணியாற்றினார்கள்.வேதநாயகி கடையின் முன் பக்கத்தில் பெரிய பெட்டியில் பேரீச்சம்பழம் வைத்திருப்பார்கள்.அதோடு பெரிய, பெரிய கண்ணாடி போத்தல்களில் பிஸ்கட்டுகள் இருக்கும்.

ஒரு நாள் அதிகாலை ஐந்தரை மணியிருக்கும் நானும் எனது நண்பர்களும் குளிப்பதற்காக களுத்துறை ரயில்வே ஸ்டேசனுக்கு பின்னாடி இருக்கும் ஆற்றுக்கு குளிக்கப் போனோம்.அந்த இடத்தில்  ஆறும் கடலும் சங்கமிக்கிறது. எனது நண்பர்களான காந்தி, தங்கவேல் உள்ளிட்டோர் ஆற்றில் இறங்கி நீந்த நானும் அவர்களின் பின்னாடி இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நடந்தேன்.எனக்கு நீச்சல் தெரியாது என்கிற விசயத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை. ஆற்றின் மறுபக்கத்தில் தெரியும் கடலின் மணல் திட்டுக்கு எனது நண்பர்கள் நீந்தி சென்று விட பின்னால் சென்ற நான் திடீரென்று தண்ணீருக்குள் மூழ்கி விட்டேன். மூச்சுவிட முடியாமல் தத்தளித்து இரண்டு முறை நீருக்குள் சென்று வெளியே வந்தப்போது, தூரத்தில் இருந்த காந்தி என்னை கவனித்து விட்டான்.அடுத்த நிமிசமே அவன் பாய்ந்து என் அருகே வர உயிர் போராட்டத்தில் இருந்த எனக்கு ஏதாவது கையில் கிடைத்தால் பிடித்து விடலாம் என்றே தோன்றியது.

அருகில் வந்த காந்தியின் கைகளை நான் இறுக பற்றிக் கொள்ள காந்தியும் நீருக்குள் மூழ்கினார்.அடுத்த நொடியே சுதாகரித்துக் கொண்ட காந்தி தனது முழு பலத்தையும் பிரயோகித்து என்னிடமிருந்து விடுபட்டு என்னை  மறுபக்கத்திற்கு தள்ளிவிட்டார்.
அங்கேதான் அதிர்ஸ்ட தேவதை எனக்காக காத்திருந்தாள். என் பாதம் தரையைத்தொட என் மூக்குக்கும்,வாயிற்கும் இடையே நீர் தளம்பிக் கொண்டிருந்தது. என்னை தள்ளிவிட்ட வேகத்திலேயே காந்தியும் கரைக்குச் சென்று மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார். ‘நீ அங்கேயே இரு நான் வந்துடுறேன்’ன்னு சத்தமிட்டார். அப்போது அடித்துச் செல்லும் நீரில் என் பாதம்  பதிந்திருக்கும் மணல் சிறிது சிறிதாக கரைந்துக் கொண்டிருந்தது. திரும்பவும் நான் நீருக்குள் செல்லும் நிலை மரண பயத்தால் நான் உறைந்துப் போனேன்.அப்போது என் அருகே வந்த காந்தி என் கரங்களை பிடித்து என்னை பாதுகாப்பாக கரைக்கு இழுத்துச் சென்றார்.
அரை மணி நேரமாக நடந்த எனது மரண போராட்டத்தை பார்ப்பதற்காக கடற்கரையில் பெரிய கூட்டமே கூடியிருந்தது.
அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது.
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி இந்த மூர்த்திக்கு உயிர் கொடுத்தான் ஈழத்து காந்தி. எனது உயிர் மூச்சு உள்ளவரை காந்தியை என்னால் மறக்க முடியாது. காந்தி இப்போது எங்கே இருக்கிறாரோ?” என்று மூர்த்தி மெய்சிலிர்க்கிறார்.

“பட்டுக்கோட்டைக்கு பக்கத்திலிருக்கும் முதல்சேரி கிராமத்தை சேர்தவர்தான் என் துணைவியார் கலையரசி எனது வெற்றிகளுக்காக எப்போதும் எனக்கு துணையாக இருக்கிறார். அவர் தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவர்.எனது சகோதரர்கள்  எனக்காக அவரை பெண் கேட்டுப் போனப்போது,பெண் வீட்டார்கள் நாங்கள் சிலோன்காரர்கள் என்றதுமே மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார்களாம்.நான் எங்கே என்ன வேலை செய்கிறேன் என்பதையெல்லாம் கூட அவர்கள் விசாரித்து பார்க்கவில்லை. அதற்கெல்லாம் ஒரு சிறப்பான காரணம் சிலோன் தமிழன் என்பதுதான்.  சிலோன் தமிழன் பொய் சொல்லமாட்டான்,நேர்மையாக இருப்பான்,யாரையும் ஏமாற்ற மாட்டான் என்கிற அக்மார்க் முத்திரை நமக்கு இருக்கு! அந்த நம்பிக்கையை இன்னைக்கு வரைக்கும் நான் காப்பாற்றி வருகிறேன். எனது மகன் கௌதமும்,மகள் மைதிலியும் டிகிரி முடிச்சிட்டாங்க. எனது மகள் இளங்கலை முடிச்சிட்டு இப்போ முதுகலை படிச்சிட்டு இருக்காங்க. என்னால படிக்க முடியாததை எனது பிள்ளைகள் படிப்பதில் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி! எனது பிள்ளைகளிடம் உண்மையை பேசுங்கள்.உங்களிடம் திறமை இருக்கு நீங்களும் சாதிக்கலாம் என்று அறிவுரை  சொல்லுகிறேன். எனக்கு பிறகு நமக்கான அக்மார்க் நம்பிக்கை முத்திரையை எனது பிள்ளைகள் காப்பாற்றுவார்கள்” என்று மூர்த்தி நம்பிக்கையோடு விடைபெற்றார்.

No comments:

Post a Comment