Sunday, November 27, 2016

படைப்பாளர் கோகிலா மகேந்திரனின் எண்ணப் பறவை சிறகடித்து

நேர்காணல்- மணி ஸ்ரீகாந்தன்

கலை இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட பெயர் கோகிலா மகேந்திரன். கல்வி உலகிலும், ஆக்க இலக்கிய உலகிலும் உளவளத் துறையிலும் புகழ்பெற்று விளங்குபவர். இந்த விஞ்ஞான ஆசிரியை, ஆற்றல் மிக்க அதிபரும், திறமைமிக்க கல்வி அதிகாரியும் கூட. நாடறிந்த நாவல், சிறுகதை, நாடக எழுத்தாளர், பண்பட்ட நடிகை நெறியாளர், உள்ளங்கவரும் பேச்சாளர் ஆரோக்கியமான விமர்சகர்... சொல்லிக் கொண்டே போகலாம் அத்தனை சமர்த்தர்.
பல்துறை பரிமாணங்களைக் கொண்ட இவர் தற்போதும் படைப்பிலக்கியத்தில் தொடர்ந்து ஈடுபாடுகாட்டி வருகிறார். வயதானதும் பலர் ஓய்ந்து விடுகிறார்கள். சிலர்தான் அதே வீரியத்துடன் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு விசேட ஆற்றலும் துணிச்சலும் வேண்டும். ஏனெனில் வயது செல்லச் செல்ல காலமும் பல சுமைகளைக் கொண்டு வந்து போகிற பாதையில் தடைகளையும் அயர்ச்சியையும் ஏற்படுத்தும்.

செங்கை ஆழியான், தெளிவத்தை ஜோசப் போன்ற சிலர் மட்டுமே இவற்றை ஜீரணிக்கிறார்கள். இந்தக் குறிப்பிடத்தக்க படைப்பாளர்களில் கோகிலாவும் ஒருவர். கலைத்துறையில் வெகு ஆர்வம் கொண்டிருக்கும் இவருக்கு உளவியலும் கைவரும் என்பது ஒரு ‘பிளஸ் பொயிண்ட்’

வெள்ளவத்தை ‘பஸல்ஸ்’ லேனில் அமைந்திருக்கும் அவரின் இல்லத்தில் அவரை சந்தித்தோம். அந்த கால நினைவுகள் என்றதுமே உளவியல் புரிந்த அவருக்கும் அத்தனை மகிழ்ச்சி. தமது பழைய பசுமையான நினைவுகளை மீட்டிப் பார்ப்பதென்பது அனைவருக்கும் மகிழ்ச்சியான விடயம்தானே!

தமது அந்தக்கால நினைவுகளுக்குள் நுழைகிறார் கோகிலா.

“அப்போது நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வகுப்பில் புவனசிங்கம் என்று ஒரு மாணவன் இருந்தான் பல் மிதந்த (உதடுகளுக்கு வெளியே பல் துருத்திக் கொண்டிருக்கும்) கருப்புப் பொடியன். வகுப்பில் அவனை எல்லோரும் ‘பூனை’ என்றுதான் அழைப்பார்கள். எனக்கும் அவனுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

நான் படிப்பில் சுட்டி. தேர்வில் முதலாவதாக வருவேன். அவனோ கடைசிப் பக்கத்தில் முதலாவதாக வருவான். அதனாலோ என்னவோ எனக்குப் பின்னால் இருந்து சேஷ்டைகள் செய்வான்.
மூன்று வயது குழந்தையாக.

அப்படித்தான் ஒருநாள் எனது வெள்ளை சீருடையில் மை தெளித்து விட்டான். (அது போல் பொயின்ட் பேனை வராத, மை பேனா காலம்). எனக்கு ஆத்திரமாக வந்தது. ஆனாலும் நான் வகுப்பாசிரியர்களிடம் அவனைக் காட்டிக் கொடுக்கவில்லை. ஒருநாள் புவனசிங்கத்தைப் பார்த்து ‘ஏய் பூனை! இனிமேல் என்னோடு சேட்டை விட்டால் நீ பிறகு கஷ்டப்பட வேண்டிவரும் என்று எச்சரித்தேன். அதன்பிறகு கொஞ்ச காலமாக என்னிடம் ‘பூனை’ சேட்டைவிடவில்லை.

“அடுத்த ஆண்டு நான் ஏழாம் வகுப்பிற்குச் சென்றதும் பூனையும் வந்துவிட்டான். ஏழாம் வகுப்பில் இன்னொரு ஆசிரியையின் மகன் இருந்தான். ரொம்பவும் அழகான பையன். அவன் தான் எங்கள் வகுப்பின் போய்ஸ் மொனிற்றர். நான் பெண்களுக்கான மொனிற்றர்.
அது தவிர அவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆயினும் ‘பூனை’ அவனுடனும் வேறு சில பெரிய வகுப்பு மாணவர்களுடனும் சேர்ந்துகொண்டு நான் போகுமிடமெல்லாம் என் பின்னாலேயே வந்து போய்ஸ் மொனிற்றர் பெயரைச் சொல்லிக் கூப்பிட ஆரம்பித்தான்.

சிண்டு முடிக்கிற வேலை என்பதால் என்னால் அதற்கு மேலும் பொறுமை காக்க முடியவில்லை. எனது வீட்டில் இதைச் சொல்லி அழுதேன். அப்போது எங்கள் வகுப்பாசிரியையாக இருந்தவர் திருமதி பொன்னம்பலம் டீச்சர். ரொம்பவும் கண்டிப்பானவர்.

எனது குண இயல்புகள் தெரிந்ததால் அப்பா டீச்சரின் வீட்டிற்குச் சென்று சொல்லியிருக்க வேண்டும். அடுத்த நாள் வகுப்பில் விசாரணை நடக்கும் என்று நான் பயந்து கொண்டிருந்தேன். நான் சாட்சி சொல்ல வேண்டும்! ஆனால் பொன்னம்பலம் டீச்சர் எந்த விசாரணையும் செய்யவில்லை.

என்ன மாயம் செய்தாலோ தெரியவில்லை, அன்றிலிருந்து ‘பூனை’ எனக்குத் தொல்லை தருவதை நிறுத்திவிட்டான். பிற்காலத்தில் நான் எழுதிய ‘பிறழும் நெறிகள்’ சிறுகதையின் கருப்பொருள் ‘பூனை’ என்று கொள்ளலாம்” என்று தனது பள்ளிப் பருவத்தில் வழி மறித்த பூனை பற்றி விபரித்த கோகிலா மகேந்திரனிடம் அவரின் பிறந்த ஊர் பற்றி கேட்டோம்.
கோகிலா (அமர்ந்திருப்பவர்)
பாடசாலை நண்பி கமலாவுடன்.

“காலம் குறிப்பிட்டு சொல்ல முடியாத ஆதி நாளில் எங்கள் கிராமத்தில் வாழ்ந்த ஒரு பெரியவருக்கு கண்பார்வை குறைந்து போயிற்றாம். அவர் எங்கள் ஊர் வைரவ பெருமானை மெய்யுருகி வணங்கி வர அவருக்குத் திரும்பவும் பார்வை கிடைத்ததாம் என்பது எங்கள் ஊரில் பரம்பரை பரம்பரையாக சொல்லி வரும்கதை. அதன் பிறகுதான் எங்கள் குல தெய்வத்திற்கு விழித்தீட்டி ஞான வைரவர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

விழித்தீட்டியும், ஒரே கருத்துடைய பெயர்களே என்று அப்பா சொல்லுவார். அந்த விழிச்சிட்டி கிராமத்தில் தான் நான் பிறந்தேன். யாழ்ப்பாணத்தின் வட பகுதியில் அமைந்திருந்த  சிறிய ஊர்களில் ஒன்றுதான் எங்கள் ஊர். தெல்லிப்பளை துர்கா, மகஜனாக் கல்லூரி, யூனியன் கல்லூரி, போன்றவைதான் தெல்லிப்பளையின் வி. ஐ. பி. பெயர்கள்.

அதோடு முக்கியமாக எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் ஊர் என்பதும் தெல்லிப்பளைக்கு பெருமைதான். 1990 வரையும் நான் விழிச்சிட்டியில்தான் வளர்ந்தேன்; வாழ்ந்தேன். அதன்பிறகு என் கிராமம் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினால் விழுங்கப்பட்டு விட்டதால் ‘இல்லாத’ கிராமம் ஆகிவிட்டது.

என் அப்பா செல்லையா சிவசுப்பிரமணியம் தெல்லிப்பளை சைவபிரகாச வித்தியாசாலையில் அதிபராக இருந்தார். நான் எழுதிய நகுலகிரிப் புராண உரை நூலுக்காக இலங்கை அரசின் சாகித்திய விருது பெற்றவர். பண்ணிசை, பாட்டு கீர்த்தனைகள் போன்றவற்றில் பாண்டித்தியம் பெற்றவர். தான் கற்பித்த மாணவர்களால் வெள்ளைவாத்தியார், புதுவாத்தியார் என்றும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்பட்டார்.

“அம்மா செல்லமுத்து சிவசுப்பிரமணியம் அதிகம் படிக்காதவர். ஆயினும் நல்ல விவேகி. அவர் அப்பாவை திருமணம் செய்த போது அவருக்கு 18 வயது. நான் பிறந்த போது அவருக்கு 35 வயது.

நீண்ட காலமாகக் குழந்தை இல்லை என்றாலும் கூட அவர்கள் மருத்துவ நிபுணர்கள் யாரையும் சென்று பார்த்ததில்லை. 17 வருடம் கிரீமலை நகுலேஸ்வரப் பெருமானை வணங்கியதால் கிடைத்த செல்வம் என்பதே அவர்களின் நம்பிக்கை. குடும்பத்தில் நான் மட்டுமே என்பதால் அன்பிற்கும், பாசத்திற்கும் குறைவே இல்லை. எனது அம்மம்மாவை நான் ‘இத்தா’ என்றுதான் அழைப்பேன்.
திருமண பதிவில்,பெற்றோருடன்

அவரும் எனது சின்னமாவும் (அம்மாவின் இளைய தங்கை) எம்மோடுதான் இருந்தார்கள். அப்பா பாடசாலை அதிபர் என்பதால் பொருளாதார பிரச்சினையும் இருக்கவில்லை” என்று தமது பழைய கருப்பு வெள்ளை காலத்தை ரீ- பிளே செய்த கோகிலா, மேலும் தொடர்ந்தார்.

“எங்கள் வீட்டின் தெற்கு பக்கம் ஒரு மாஞ்சோலை. அங்கு சிறகடித்து பறந்து வரும் பறவைகளோடு ஏதேதோ பாடல்களையெல்லாம் மனசுக்குள் பாடிக்கொண்டே விளையாடுவதே எனக்கு வேலை. வீட்டின் கிழக்குப்புறம் வாழைத்தோட்டமும், வெற்றிலைத் தோட்டமும் அமைந்திருந்தது.

எப்போதும் இறைத்து ஈரமாகக் கிடக்கும் வெற்றிலைக் கொடிக்கு ஆதாரமாக நடப்படும் முள் முருங்கை மரங்களின் குளிர்மை நெஞ்சை அள்ளும். வாழைத் தோட்டத்திலிருந்து கொண்டுவரப்படும் வாழைப்பூ மதிய சாப்பாட்டுக்கு உணவாகும்’ என்று சொன்னவர், அம்மா எப்படி வாழைப்பூவை அரிவார் என்பதை கண்கள் மினுமினுக்க விவரித்தார்.

“அம்மா வாழைப்பூ அரிவது ஒரு தனிக்கலை. குதிக்காலில் குந்தியிருந்து வலது முழங்கால் தெரியும்படி சேலையை இழுத்துவிட்டுக் கொள்வார். வாழைப்பூவை வலது முழங்காலோடு இடது கையில் அனைத்துப் பிடித்துக் காம்புச் செத்தகத்தை மரக்காலில் தீட்டி அரியத் தொடங்கினால் ஐந்து நிமிடத்தில் கீழே உள்ள ஓலைத் தட்டு நிரம்பி விடும். பிறகு அதற்குள் உப்புத்தூள் போட்டு கும்மிப்பிழிந்து...”
அன்னையின் வாழைப்பூ சமையலில் அவர் மனம் மூழ்கி நனைந்து போகிறது.

“அம்மாவின் சமையல் ருசி.... நினைத்தாலே நா ஊறும். இது தவிர ‘காவோலை போட்டுப் பெட்டி இழைப்பது, பாய் இழைப்பது, நீற்றுப்பெட்டி இழைப்பது போன்றவற்றில் அம்மா கெட்டிக்காரி. இவை எல்லா அம்மாவுடன் முடிந்து போய்விட்ட கலைகள்...”

“பக்கத்து வீட்டு திருமகள், முன்வீட்டுத் தேவி மச்சாள், சத்தியமூர்த்தி இவர்கள் வந்தால் வீட்டு முற்றத்தில் கிளிக்கோடு, மாபிள்அடி, கொக்கான் வெட்டு, ஊஞ்சலாட்டம் என்று விளையாட்டு அனல் பறக்கும். அம்மா தனது மேற் பார்வையின்றி என்னை வேறு விடுகளுக்கு சென்று விளையாட அனுமதிக்க மாட்டார். அப்படி நான் செல்ல விரும்பினால் தானும் வந்து விடுவார். எனவே எங்கள் வீட்டு முற்றம்தான் விளையாட்டின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இடமாகத் திகழ்ந்தது என்று கூறியவரிடம் பாலர் பருவ குறும்பு ஏதாவது ஞாபகத்தில் இருக்கிறதா என்று கேட் டோம்.
அன்றும்,இன்றும்

“பெரிதாக இல்லை ஆனால் நான் ரொம்பவும் விளையாட்டுப் பிள்ளை. எங்களது காலத்தில் முன்பள்ளி கிடையாது. நேரே அரிவரி வகுப்புக்குத்தான் போக வேண்டும். என் அயல்வீட்டில் ‘பரமேஸ்வரன் என்ற பையன். எனக்கு மச்சான் முறை. இருவருக்கும் ஒரே வயது. விழிச்சிட்டி சிவஞானம் வித்தியாசாலையில் ஆரம்ப கல்விக்காக சென்றோம். அங்கிருந்த அதிபர் சங்கரப்பிள்ளை எங்கள் உறவுக்காரர். அப்புறமென்ன, நாங்கள் இருவரும் வகுப்பு பக்கம் போவதே இல்லை.

பாடசாலை முழுவதும் ஓடி விளையாடுவோம். முடிந்தால் அதிபர் அலுவலக அறையில் ஒளிந்து பிடித்து விளையாடுவோம். இடைவேளை வந்ததும் ‘இத்தா’ கொண்டுவரும் தோடம்பழச் சாற்றை புளியடிக்கு வந்து குடிக்க வேண்டியது; திரும்பவும் விளையாடிவிட்டு வீட்டுக்கு வர வேண்டியது. என்பதாக அங்கே பொழுது கழிந்தது. அந்த வகுப்பில் ஒருநாள் கூட ஒழுங்காகப் படித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.

ஆயினும் அந்த வருட முடிவில் இரண்டு விடயங்கள் நடந்தன. பரமேஸ்வரனுக்கு காய்ச்சல் வந்து பூனாய் ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்து போனான். அதன் பின்னரேயே நான் வகுப்பில் ஒழுங்காக இருக்கத் தொடங்கினேன்.

வருட இறுதி பரீட்சையில் டபுள் புரேமோஷன் கொடுத்து இரண்டாம் வகுப்பில் தன்னை அனுமதித்தார்கள்” என்று சொல்லும் கோகிலா, தமது சந்தோஷமான அந்த நாட்களில் நடைபெற்ற துலா இறைப்பு பற்றியும் மெய் சிலிர்க்க கூறுகிறார்.

அதிகாலை வேளையில் துலா மூலமாக இறைப்பு நடக்கும். அப்பாவும் ஆசையப் புவும் சேர்ந்து இறைப்பார்கள். துலாவில் நிற்பவர் தேவார திருவாசகங்களை பன்னுடன் பாடுவார். நான் அதைக் கேட்டுக்கொண்டே வாய்க்காலில் வரும் தண்ணீர் மண்ணில் வடைசுட்டு விளையாடுவேன். பிற்காலத்தில் இப்பாடல்கள் எந்தப் பிரயத்தனமும் இன்றி எனக்கு மனப்பாடமாயின.

இறைப்பு முடிந்ததும் அப்பா குளிப்பார். அப்போது என்னையும் கூப்பிடுவார். நானும் சென்று குளிப்பேன். அப்படி நான் குளித்து முடியும் வரையும் எனக்குத் திருக்குறள் சொல்லிக் கொடுப்பார். அதை நான் திருப்பிச் சொல்ல வேண்டும். அதன் பிறகு நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது விவேகானந்த சபை நடத்திய திருக்குறள் போட்டியில் மிகக் குறைந்த வயதில் அதிகூடிய குறள்களை மனப்பாடம் செய்ததற்காக எனக்கு விஷேட பரிசு கிடைத்தது. அப்போது முதன் முதலாக எனது பெயரும், புகைப்படமும் வீரகேசரியில் வெளியாகி இருந்தது. பேப்பரை வீட்டுக்கு வாங்கி வந்த அப்பா என்னைக் கெட்டிக்காரி என்று பாராட்டினார். இது இன்றும் பசுமையாக என் நினைவில் நின்று தித்திக்கிறது”

“தரம் எட்டில் படிக்கும் போதுதான் நான் பருவமடைந்தேன். ‘பூப்பெய்துவது’ தொடர்பாக எந்த விளக்கமும் எனக்குத் தெரியாது. யாரும் சொல்லித் தரவுமில்லை. ஜூன் மாதத்தில் ஒரு காலை நேரம். எனது உடலில் ஒரு மாற்றம் நேர்ந்திருப்பதை அறிந்தேன். ஏதேனும் சிறுநீர் வருத்தமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அம்மாவிடம் சொன்னால் அவ ஆஸ்பத்திரிக்கு அழைச் சிட்டு போவா அங்கு எனக்கு ஊசி போடுவாங்க என்ற பயத்தால் அம்மாவிடம் இதை சொல்லாமல் பாடசாலைக்கு சென்றுவிட்டேன். அங்கே சென்றதும் எனது யூனிபோர்ம் பழுதடைந்துவிட்டது.

விஷயம் வித்தியாசமாகப்படவே என் சினேகிதி ‘இந்து’விடம் சொன்னேன். ‘அய்யோ கோகிலா நீங்கள் ஏஜ் அற்றேன் பண்ணிட்டீங்க’ என்றா. அப்போது ஆங்கிலப் பாடம் எடுக்க ஜெயரட்ணம் ஆசிரியர் வந்து விட்டார். அவர் வந்ததும் என்னை எழுப்பி வாசிக்க சொல்லிவிட்டார். நான் நன்றாக வாசிப்பேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு பின் ஆசனங்களில் போய்ஸ் இருக்கிறார்கள்.
திடீரென்று இந்து பக்கவாட்டில் திரும்பி வாசியுங்கள் என்று ஒரு ஐடியா சொன் னாள். அதன்படியே எழும்பி வாசித்து தப்பிவிட்டேன். பிறகு இடைவேளையின் போது என்னை ஹோம் சயன்ஸ் ரூமுக்கு அனுப்பி விட அங்கிருந்து மிஸ் சங்கரப்பிள்ளை டீச்சர் என்னை காரில் வீட்டுக்குக் கூட்டிச் சென்று வாழ்த்தி விட்டுச் சென்றா. வீட்டில் அம்மாவிடம் நல்லா பேச்சு வாங்கினேன்.

எனக்கு விழிப்புணர்வு தராதது யாருடைய பிழை” என்று கேட்கும் கோகிலா, தான் கல்விகற்ற மகாஜனா கல்லூரி பற்றி இப்படிச் சொல்கிறார்.

“மகாஜனா தான் நான் வளர்வதற்கு முக்கிய பசளை இட்ட நிலம். பேச்சு, சிறுகதை, நாடகம், கவிதை என்று எல்லாத்துறைக்கும் என்னை பயிற்றுவித்து வெற்றி பெறச் செய்த அன்னை பூமி” என்று மெய்சிலிக்கிறார் கோகிலா.

கோகிலா மகேந்திரனுக்கு பிடிக்காத விசயம் சமையல் தானாம். “எனக்கு சமைக்கப் பிடிக்காது.
இந்தப் பழக்கம் அன்றிலிருந்து இன்றுவரை நீடிக்கிறது. சமையலறைக்குள் நுழைந்தால் எப்போ இந்த வேலையை முடி த்து விட்டு வெளியே வருவேன் என்றுதான் இருக்கும்”

காதல் பற்றி கேட்டதற்கு ‘காதலித்தது ஒருவரை. அவரையே கல்யாணம் செய்து கொண்டேன் என்று முடித்துக் கொண்டார். தெல்லிப்பளை வீட்டில்தான் திருமணம் நடந்ததாம். திருமணத்திற்கு அரசியல் தலைவர்களான ஸ்ரீபாஸ் கரன், திருமதி பாஸ்கரன், மற்றும் தங்கம்மா அப்பாக்குட்டி உள்ளிட்ட பலர் வந்திருந்தார்களாம்.

எங்கள் குடும்ப சொத்துக்கள் அனைத்துமே தெல்லிப்பளைக்குள் மட்டுமே இருக்கிறது. இன்று அவற்றை எங்களால் அனுபவிக்க முடியாத நிலை என்று நினைத்து மனம் வருந்தும் கோகிலா மகேந்திரனிடமிருந்து விடை பெற்றோம்.

No comments:

Post a Comment