Sunday, November 13, 2016

ஆதிகேசனின் இருள் உலகம்

பேட்டி-  மணி ஸ்ரீகாந்தன்

ஹவத்தை பொரோனுவ பகுதியில் பிரபல பூசாரியாக திகழ்பவர் ஆதிகேசன். கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக பில்லி, சூனியம், பேய் விரட்டல் போன்ற அமானுஷ்ய விவகாரங்களில் வெற்றிகரமாக ஈடுபட்டு வருபவர்.

"பிசாசுக்கும் தெய்வத்துக்கும் இடையே எந்த உறவும் கிடையாது. எனக்கும் பேய்களுக்கும் இடையே உறவு ரொம்பவே பலமாகத்தான் இருக்கு!" என்று தடாலடியாகச் சொல்லி பேச்சை ஆரம்பித்தார் ஆதிகேசன்.

அவரிடம் பேய்கள் பற்றிய எமது சந்தேகங்களை கேள்விகளாக முன்வைத்தோம்.

"பேயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று டொப் கியரில் ஆரம்பித்ததுமே, "பேயை முழு உருவமாக பார்க்க முடியாது முழங்காலுக்கு கீழே எதுவும் இருக்காது. அந்தரத்தில்தான் நிற்கும். அதன் பற்கள் கறை படிந்து ரொம்பவும் அகோரமாகத் தெரியும். நகங்கள் நீண்டு வளர்ந்து சுருள் சுருளாக இருக்கும். பேயை நான் நேருக்கு நேராக நின்று பார்த்திருக்கிறேன். அது ஒரு புகை மாதிரித்தான் தெரியும். இருட்டு நிறம்" என்று படபடவெனப் பேசி ஆதிகேசன் மிரட்டினார்.
ஆதிகேசன்
"பேயை நேருக்கு நேராக பார்க்கும்போது பேய் உங்களைத் தாக்க முற்படாதா?" என்றோம்.

"சாதாரண நபரால் பேயை நேருக்கு நேராக பார்க்க முடியாது. அப்படி பார்த்தால், பேய் அந்த நபரை போட்டுத்தள்ளிவிடும். ஆனால் என்னை அதனால் ஒண்ணும் பண்ண முடியாது. பேயை மடக்கும் சக்தியை என் உடம்பிலேயே மந்திரித்து வச்சிருக்கேன்" என்று சொன்னவர் தனது வலது கையை நீட்டி,"இந்த கைக்குள்ளே மந்திரித்த தகடை வைத்து தைத்திருக்கிறேன். எல்லா பேய்களும் எனக்குத்தான் அடிமை" என்று கூறி இறுமாப்போடு ஆதிகேசன் சிரிக்கிறார். மல்லிகைப்பூ வாசம், சலங்கை சத்தம், பிணவாடை இவைகளெல்லாம் தீய சக்திகள் வருவதற்கான அறிகுறிகளா? "மல்லிகை வாசம் தெய்வங்கள் வருவதற்கான அறிகுறி. ஆனால் சலங்கை சத்தம் முனி, காளி போன்ற துர்தேவதைகளின் ஓசைகள். ஒருநாள் நானே அந்த ஓசையை உணர்ந்திருக்கிறேன். அது ஒரு அமாவாசை இரவு. அன்று இரவு வீட்டு வாசலில் அமர்ந்திருந்த நான் அப்படியே அசதியில் வீட்டு வாசற் படியிலேயே தூங்கிவிட்டேன். நீண்ட நேர தூக்கத்திற்கு பிறகு என் உடம்பில் ஏதோ சில்லென ஊர்வது மாதிரி தெரிந்தது. திடுக்கிட்டு கண்விழித்தேன். அப்போது நான் கண்ட காட்சி என்னை குலைநடுங்கச் செய்தது. அகோரமான தோற்றத்தோடு துர்நாற்றம் வீசும் குடலை மாலையாக அணிந்தபடி சோன் காளி என் நெஞ்சு மீது காலை வைத்தபடி நின்றிருந்தது. அது மாலையாக போட்டிருந்த குடலில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. பிணநாற்றத்தில் குமட்டிக் கொண்டு வந்தது. உடனே அந்த சூழ்நிலையிலிருந்து மீண்டு வர மந்திரங்களை உச்சாடனம் செய்து வழியில் படுத்ததற்காக மன்னிப்பு கேட்டேன். மன்னிப்புக் கேட்டதும் என் வேண்டுதலை மதித்து விலகியது. அந்த இடத்தை விட்டு போகும் போது சங்கிலியை இழுத்துக் கொண்டு போவது மாதிரி சத்தம் கேட்டது" என்று மெய்சிலிர்த்து சொன்னார் ஆதிகேசன்.

பேய்களில் அழகான பேய்கள் இருக்கிறதா, ஆவியும், பேயும் ஒன்றா என்று கேட்டேன்.

"ஆவியும் பேயும் ஒன்றுதான். அதோடு எச்சினி, ஏவல் பெரேத்தி என்று நிறைய வகைகள் இருக்கு. ஆனால் எல்லாம் ஒண்ணுதான். தோசை, இட்டலி, வடை என்று பட்சணம் வேறானாலும் மாவு ஒன்றுதானே" என்று தத்துவம் பேசினார் ஆதிகேசன்.

பேய்களை எல்லோராலும் பார்க்க முடியுமா, அல்லது குறிப்பிட்ட சிலரின் கண்களுக்குத்தான் அது தெரியுமா? என்பது அடுத்த கேள்வி.

"பேய்களை எல்லோராலும் பார்க்க முடியாது. பேய்களுக்குரிய ராசிகளில் பிறந்தவர்களின் கண்களுக்குத்தான் பேய் தெரியும். பேயை அங்கே பார்த்தேன். இங்கே பார்த்தேன் என்று சொல்லுகிறதெல்லாம் வெறும் கதைதான். பேயை பார்த்தவன் எவனும் உயிரோட திரும்ப முடியாது. ஆனால் சாமியைப் பார்த்தவன் இருக்கான். ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற இறப்பர் தோட்டத்தில் விறகு வெட்ட ஒரு மரத்தில ஏறினேன். ஒரு கிளையை வெட்டிக்கொண்டு இருக்கையில் அந்த மரம் அடியோடு முறிந்து விழத் தொடங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் நான் மாரி அம்மனை வேண்ட, அடுத்த நிமிசமே மாரி இறங்கி வந்து என்னை பூப்போல தூக்கி நிலத்தில் வைத்தாள். மரம் ஒரு பெரிய பாறாங்கல் மேல் விழுந்தது. என் பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் அலறியபடி ஓடிவந்தாங்க. நான் செத்துவிட்டதாக நினைத்து வந்தவங்களுக்கு ஒரே ஆச்சர்யம்!

நான் கூலாக பாறாங்கல் மேல் அமர்ந்திருந்தேன். சாமிதான் நமக்கு உதவி செய்யும் பேய் எப்போவும் உதவி செய்யாது" என்று தமக்கு நடந்த சம்பவத்தை சிலாகித்து பேசியவர், மேலே வானத்தை பார்த்து கும்பிடுகிறார்.

உலகின் பல்வேறு இடங்களில் பேய்கள் தினமும் பூசாரிகளால் ஒழித்துக்கட்டப்படுவதாக சொல்கிறார்கள். ஆனால், பேய்கள் ஒழிந்ததாக தெரியவில்லையே?

பதில் சொல்லத் தொடங்கும் போதே பூசாரி ஒரு எகத்தாள புன்னகையை வீசினார்.

"பேயை யாருமே இதுவரை ஒழித்துக் கட்டியது கிடையாது. அது எவராலும் முடியாத காரியம். பேய் என்பது ஒரு ஆத்மா. அதை யாராலும் கட்டிப்போட முடியாது. தற்காலிகமாக ஒரு உடம்பை விட்டு துரத்தலாம் அவ்வளவுதான். பேயை நிரந்தரமாக ஒழிக்க முடியாது. பேயை புதைக்கிறது, எரிக்கிறது, கரைக்கிறது எல்லாமே மாயை! அப்படி அலைகிற பேய்கள் ஊரில் நடமாடும் எல்லா மனுசனையும் பிடிப்பது இல்லை. அதுக்கெல்லாம் நேரம் காலம் என்று நிறைய விசயம் இருக்கு. இப்போது சுடுகாட்டில் கூட படுத்து தூங்கி வரலாம். தப்பில்லை. அதுக்காக நீங்க இறைச்சிக்கறி மாதிரியான எண்ணெய் உணவுகளை சாப்பிட்டுட்டு நேரங்கெட்ட நேரத்தில் போனால் நிச்சயம் பேய் பின் தொடர்ந்து வரும். வந்து உங்க வயிற்றில் உள்ள இறைச்சிக்கறியை சாப்பிடாது. அதன் வாசனையை மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொள்ளும்!! என்று இரவில் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு ஊர் சுத்தும் நபர்களுக்கு செக் வைக்கிறார் பூசாரி.

பேய்களை விரட்ட சிறு தெய்வங்களையே பூசாரிகள் துணைக்கு வைத்துக்கொள்கிறார்கள். ஏன் பெரு தெய்வங்களை துணைக்குக் கூப்பிடுவதில்லை? என்றதும்,

"உண்மையிலேயே சாமிக்கும் பேய்களுக்கும் உறவு இல்லை என்று சொல்லுவாங்க, அதனால் பேய்க்கு சமமாக உள்ள சிறு தெய்வங்களான சுடலை, முனி, காளி போன்ற தெய்வங்களை களத்தில் இறக்குவது சுலபம். அதாவது பேயுடன் சேர்ந்து சாராயம் குடித்து, பீடி குடித்து அவைகளை சங்காரம் செய்ய இலகுவாக இருக்கும். அதனாலேயே சிறு தெய்வங்களை உதவிக்கு அழைக்கிறோம்" என்று விளக்கம் சொன்னார்.

அறுபதுகளில் எல்லோராலும் பேசப்பட்ட மோகினிகளைப் பற்றிய செய்திகள் இப்போது இல்லையே, என்ன நடந்தது? என்று கேட்டோம்.

"இப்போது நாகரீகம் வளர்ந்திருச்சி… ஆனால் அந்தக்காலம் அப்படி அல்ல. ரொம்பவும் பின் தங்கிய நிலையிலேயே மக்கள் இருந்தாங்க. அந்தக்கால வீடுகளில் வாசலில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி வைத்திருப்பார்கள். நள்ளிரவில் வரும் மோகினி கண்ணாடியில் தனது உருவத்தை பார்த்துவிட்டு யாரோ நம்மைவிட அழகானவள் உள்ளே இருக்கா போல என்று நினைத்தபடி போயிடும். மோகினி என்றால் பேரழகின்னு அர்த்தம்.

ஆனா இன்னைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நாகரிக வளர்ச்சியால் மோகினியை விடவும் பேரழகான பெண்கள் இருக்கிறார்கள். அதனால் மோகினிகளுக்கு இங்கே வேலை இல்லாமல் போய்விட்டது. அந்தக் காலத்தில் உலக அழகின்னா அது மோகினிதான். ஆனா இன்னைக்கு ஐஸ்வர்யாராய் போல மோகினியையே ஜெயிக்க ஆளுருக்கு" என்று லொஜிக் பிழைக்காமல் வாய்ஜாலம் காட்டினார் ஆதிகேசவன்.
மோகினியை மடக்கி பிடிக்கும் வித்தையும் தமக்கு தெரியும் என்று கெத்து காட்டியவர் தொடர்ந்தார்:"மோகினியை நம் வசமாக்குவதற்கு பூஜை பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு அமாவாசை நள்ளிரவு வேலையில் ஒரு ஆற்றோரத்தில் தென்னம் ஓலையால் ஒரு பச்சை பந்தல் போட வேண்டும். அதற்குள் பூஜை போட்டுவிட்டு ஆடைகளை முழுவதுமாக களைந்துவிட்டு இடுப்பளவு தண்ணீரில் இறங்கி புல்லாங்குழலை எடுத்து பாடல்களை இசைக்க வேண்டும், பாடல் இசைக்கு வசமாகும் மோகினி நம் எதிரே தோன்றி ஆற்றங்கரையில் ஜல்ஜல்லென ரம்மியமாக ஆடத் தொடங்கும். அதன் ஆட்டத்தில் மயங்கும் நாம் புல்லாங்குழல் வாசிப்பதை நிறுத்தாமல் தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும். அப்படி வாசிக்கும் போது விடாமல் ஆடும் மோகினி ஒரு கட்டத்தில் ஆடி, ஆடி களைத்து நிலத்தில் வீழ்ந்து விடும். அப்படி விழும் மோகினி நம்மிடம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கும். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாம் தேவையானதை பெற்றுக்கொள்ளலாம்" என்று மோகினியை வசப்படுத்தும் வித்தையை சொல்லித் தந்தார்.

நீங்கள் அப்படி முயற்சி செய்தீர்களா? என்று ஆவலுடன் கேட்கவே,

"எனக்கு அப்படிச் செய்து மோகினியை வீழ்த்த முடியும். ஆனால் எனக்கு அளவுக்கு அதிகமாக எதுவும் தேவையில்லை. இருப்பதே போதும்!" என்று சமாளித்தவர், நீங்கள் யாரும் தயவு செய்து முயற்சிக்காதீர்கள். மோகினியை வசியமாக்க நல்ல மனோ தைரியமும், மந்திர வித்தையும் தெரிந்திருக்க வேண்டும். கரணம் தப்பினால் மரணம்தான்" என்று பயமுறுத்தினார்!

2 comments:

 1. செம்ம.!

  அடுத்த கதைக்காக வெயிட்டிங்.!

  ReplyDelete
  Replies
  1. அப்படியா..? மகிழ்ச்சி காத்திருங்கள்.

   Delete