Thursday, November 10, 2016

சிங்கள ரசிகர்களை மயக்கிப்போட்ட மாயா!

சந்திப்பு- மணி ஸ்ரீகாந்தன்

லகத் தரம் வாய்ந்த மாற்று சினிமாவை சிங்கள கலையுலகம் தந்திருந்தாலும், வர்த்த ரீதியான, பொழுது போக்கு படங்களை பொறுத்தவரையில், தமிழ்நாட்டு படங்களோடு ஒப்பிடும்போது, மிகவும் பின்தங்கிய நிலையில்தான் சிங்கள சினிமா இருந்து வருகிறது. ஆனால் சமீப காலத்தில் வெளியாகிய பிரவேகய, மாயா உள்ளிட்ட படங்கள் வர்த்த ரீதியில் பெரு வெற்றியைக் கொடுத்து சிங்கள சினிமாவின் வளர்ச்சியை வர்த்த ரீதியான வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. இலங்கையில் இதுவரை தயாரிக்கப்பட்ட படங்களில் பெரிய பட்ஜெட் படமாக மாயா விளங்குகிறது.
இலங்கை ரூபாயில் ஏழு கோடிக்கு முதலீடு செய்து வசூலில் பத்துக் கோடியை அள்ளியிருக்கிறார்களாம். சிங்கள திரையுலகில் இது மிகப்பெரிய வெற்றிதான். தமிழரான சதீஷ்குமார், திருமதி சதீஷ்குமாரின் தயாரிப்பில் டொனால்ட் ஜயந்தவின் இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடை போடும் மாயா பற்றி சிங்கள ரசிகர்களின் பார்வை எப்படி இருக்கிறது என்பதை இயக்குநர் டொனால்ட் ஜயந்தவிடம் கேட்டோம்.

"தியேட்டரில் விசில் அடித்து, கை தட்டி ஆரவாரம் செய்து படம் பார்ப்பதெல்லாம் தமிழ் படங்கள் பார்க்கும் போது ஏற்படும் அனுபவம். ஆனால் முதல் முறையாக சிங்கள படமான மாயாவில் அந்த ஆரவாரத்தைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போனேன். ரஞ்சன் ராமநாயக்காவை திரையில் காட்டும் போது 'இலங்கை சூப்பர் ஸ்டார்' என்று டைட்டில் போட்டு காட்டியதும் ஆரவாரமும், விசிலும் பறந்தது! அந்த வரவேற்புக்கு நாம் அந்தக் காட்சியில் செய்த தொழில்நுட்பம் சவுண் எபெக்ட் போன்றவை பெரிய பலமாக இருந்தது. சிங்களத்தில் இவை புதிய முயற்சிதான்" என்று சிலாகித்து பேசும் அவரிடம்,
சதீஷ்குமார்

பிரவேகய  பொல்லாதவனின் ரீமேக். மாயா காஞ்சனாவின் ரீமேக். சிங்களவர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி?

"வெளிநாட்டு படங்களையே சீடி வழியாக பார்த்து வந்த எங்களுக்கு இது புது மாதிரியாக ரொம்பவும் பிடித்து போய்விட்டது. தொடர்ந்து இப்படியான படங்களை எதிர்பார்க்கிறோம்" என்று தொலைபேசி வழியாகவும் நேரிலும் ரசிகர்கள் பாராட்டும் போது ரொம்பவும் பெருமையாக இருக்கிறது என்றவரிடம், சிங்கள சினிமாவின் மரபை உடைத்து தமிழ் சினிமா மரபை புகுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே? என்றோம்.

"தியேட்டருக்கு படம் பார்க்கப் போவது ஒரு பொழுது போக்குக்காகத்தானே! கவைலைகளை மறந்து கொஞ்சம் 'ரிலாக்சாக' இருந்துவிட்டு வர வேண்டும். அப்படி படம் பார்க்கப் போய் கொட்டாவி விட்டு தியேட்டரில் தூங்கி விட்டு வரலாமா? அப்படியான மரபை கொஞ்சம் உடைத்து வர்த்தக ரீதியான வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கிறோம். 'மாயா' படம் பார்த்தவர்களை கதிரையின் நுனிக்கே கொண்டு வந்து அமர வைத்து மிரட்டியிருக்கிறோம்" என்றவர், மேலும் தொடர்ந்தார்.
"சிங்களத்துக்கு ரீமேக், மொழி மாற்று படங்கள் என்பது புதியதல்ல. ஏற்கனவே நிறைய படங்கள் வெளியாகி இருக்கின்றன. மமயிரஜா, நெவத்த அமுவெமு, உள்ளிட்ட படங்கள் தமிழ் படங்களின் தழுவல்தான். அதோடு சிங்கள சினிமாவுக்கு தமிழ் சினிமாவோடு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் தமிழகத்தில் வெற்றிப் படங்களைக் கொடுத்த மஸ்தான் உள்ளிட்ட பலர் இங்கே நிறைய சிங்களப் படங்களைத் தயாரித்து, இயக்கிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த ஆரம்பகால வரலாற்றை எப்போதும் நாம் மறக்கலாகாது. நாங்கள் நிறைய விசயங்களைப் படிக்க வேண்டியுள்ளது. கற்றுக்கொள்வது தப்பில்லையே! மாயா படத்தில் எலெக்ஸ் என்ற கெமராவை தமிழகத்திலிருந்து கொண்டு வந்து பயன்படுத்தியிருக்கிறோம். அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த கெமராவை இயக்கக் கூடிய தொழில்நுட்ப கலைஞர்களை அழைத்து வந்தோம். மற்றப்படி இயக்கம் அனைத்தும் நாங்கள்தான்.

சிங்கள சினிமாக்களில் சண்டைக் காட்சிகளில் கதாநாயகன் வில்லனை அடிக்க கையை ஓங்கும் முன்பே அவன் கீழே விழுந்து விடுவான். அந்தப் போக்கை மாற்றி படங்களில் காட்டும் போலியான சண்டைகளைக் கூட நிஜம் மாதிரி காட்டியிருக்கிறோம். அதற்காக ஒரு சண்டைக் காட்சியை தமிழ் சினிமாவின் பெரிய ஸ்டண்ட் மாஸ்டரான செல்வாவை வைத்து செய்தோம். இலங்கை ரூபாயில் 90 லட்சங்களை ஒரு சண்டைக் காட்சிக்காக செல்வாவுக்குக் கொடுத்தோம். அந்தக் காட்சியை செல்வாவும் ரொம்பவே திறம்பட செய்திருந்தார். அதோடு பாடல் காட்சிகளுக்கான நடனத்தை தமிழ் சினிமாவின் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரிடம் கொடுத்துச் செய்திருக்கிறோம். புதிய முயற்சிதான்… அதில் வெற்றியும் பெற்றுவிட்டோம்."

அடுத்த படம்?

"அட்லிகுமார் இயக்கிய ராஜா ராணியை (ஆதரட்ட ஆதர) என்ற பெயரில் இயக்கியிருக்கிறேன். சில நேரம் பெயர் மாற்றப்படலாம். அடுத்த ஆண்டு படம் வெளியாகும். அதற்கு அடுத்த கட்டமாக தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற 'கும்கி' படத்தை இயக்கவிருக்கிறேன். படத்தின் கதைக்களமும், காட்சியும் இலங்கையில் படமாக்குவதற்கு ஏதுவாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். அதோடு தமிழில் வெளியான பழைய படமான 'கோமாதா குலமாதா' படத்தையும் இயக்கும் எண்ணம் இருக்கிறது. தமிழர்களைப் போலவே பசுவுக்கு சிங்களவர்கள் மத்தியில் ஒரு பக்திமயமான பார்வை உள்ளது. பசு இறைச்சி உண்பது பாவம் என்பதை அந்தப் படம் சொல்லும். அந்தக் கதையை படமாக்குவது எனது கனவு. அந்தக் கதைக்களத்தை நம் நாட்டுக்கு ஏற்றவாறு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டால் அந்தப் படம் எம்மவர்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பை பெறும்" என்கிறார் டொனால்ட் ஜயந்த.
இலங்கையில் பிரபல இயக்குனராகத் திகழும் டொனால்ட் ஜயந்த, தொடர்ச்சியாக 54 சிங்களப் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி அனுபவம் பெற்றவர். பிரவேகயதான் இவர் இயக்கிய முதல் படம். இரண்டாவது மாயா. இரண்டுமே வெற்றி பெற்றிருப்பதால் டொப் இயக்குநராகி இருக்கிறார் டொனால்ட்!

மாயாவை தமிழர்கள் பார்க்கிறார்களா? என்றோம்.

"நிச்சயமாக நிறைய தமிழ், முஸ்லீம்கள் மாயா படத்தைப் பார்க்கிறார்கள் என்ற தகவல் வருகிறது. ஆனால் அவர்கள் பார்ப்பது குறை கண்டு பிடிக்கத்தான்! காஞ்சனா மாதிரியே செய்திருக்கிறோமா இல்லை சொதப்பி விட்டோமோ என்று பல்ஸ் பார்க்கிறார்கள். எப்படியோ தமிழர்களையும் சிங்களப் படத்தைப் பார்க்க வைத்தோம் என்ற பெருமை மாயா படக்குழுவையே சாரும் என்று மகிழ்ச்சி பெருமிதத்தோடு முடித்தார் டொனால்ட்.

3 comments:

 1. இவர் இயக்கிய 'ප්‍රවේගය' திரைப்படம் பார்தேன்...ஒரு தமிழ்க்கலஞரையே முக்கியமான வில்லன் பாத்திரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்...அவரும் அருமையாக நடித்திருந்தார்...
  அருமையாக இருந்தது...
  வாழ்த்துகள்
  'මායා'(மாயா) திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருத்து பதிவிற்கும்,கூடுதல் தகவலுக்கும் நன்றி.மாயா மிகவும் சிறப்பாக இருக்கிறது. படத்தை பாருங்கள் தங்களின் கருத்தையும் பதியுங்கள்.

   Delete
 2. இவர் இயக்கிய 'ප්‍රවේගය' திரைப்படம் பார்தேன்...ஒரு தமிழ்க்கலஞரையே முக்கியமான வில்லன் பாத்திரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்...அவரும் அருமையாக நடித்திருந்தார்...
  அருமையாக இருந்தது...
  வாழ்த்துகள்
  'මායා'(மாயா) திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை.

  ReplyDelete