Tuesday, November 8, 2016

‘சின்ன மாமியே’ புகழ் நித்தி பேசுகிறார்...

நித்தி கனகரட்ணம் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக  இலங்கை பொப்பிசை பாடல் உலகில்  வெற்றிகரமாக ஒரு ரவுண்ட்  அடித்தவர். ‘சின்ன மாமியே   உன் சின்ன மகள் எங்கே?’ என்ற பாடல்  மூலமாக உலக தமிழர்களின் இல்லங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர். ஒரு இனிய மாலைவேளையில் நித்தி என்னிடம் மனந்திறந்து பேசியவைகளில்  சிலவற்றை  இங்கே பதிவு செய்கிறேன்.

நேர்காணல்-  மணி  ஸ்ரீகாந்தன்

“எனக்கு சின்ன வயதில் மணலில் ஆனா எழுதுவதென்றால் ரொம்பவும் பயம். ஒரு நாள் அந்த மணலில் ஒரு குண்டூசி கிடந்து என் விரலில் குத்திக் கிழித்துவிட்டது. அன்றிலிருந்து மணலில் எழுத்து வரைவது என்றாலேயே எனக்குப் பயம். தயாளம் ராஜா தான் எனக்கு ‘அ’ கரம் கற்பித்த ஆசிரியை. எனது வீடு யாழ்ப்பாணம் உரும்பிராய்.

இரண்டாம் குறுக்குத் தெருவில்தான் நாங்கள் வசித்தோம். எங்கள் வீட்டைச் சுற்றி நிறைய கிறிஸ்தவர்கள் வாழ்ந்தார்கள். எனது அப்பா பெயர் கனகரட்ணம். அம்மா ஆச்சிமுத்து” என்று தமது ஆரம்பகாலம் பற்றி சொல்லத் தொடங்கிய நித்தி கனகரட்ணம், தமது முதல் பாடசாலை பிரவேசம் என்று அந்த இனிமையான நாட்களின் நினைவுகளை அசைபோடத் தொடங்கினார்.
“வேம்படி மகளிர் கல்லூரி ஐந்தாம் ஆண்டு வரை கலவன் பாடசாலையாகவும் இயங்கி வந்தது. நான் பள்ளிக்குச் சென்ற முதல் நாள் அப்பா எனக்கு வாங்கித் தந்த மிதியடிக் கட்டை செருப்பை அணிந்து, சன்சூட் போட்டுக்கொண்டு வீதியில் அம்மாவின் கையை பிடித்துக்கொண்டு நடந்தேன். என் காலில் கிடந்த அந்த மிதியடி கட்டை டக், டக் என்று ஓசை எழுப்ப எனக்கு ஒரு இனம் புரியாத பூரிப்பு ஏற்பட்டது. எனது வகுப்பாசிரியையாக இருந்தவர் துரையப்பா டீச்சர்.

அப்போது என்னோடு ஒரே பெஞ்சில் அமர்ந்திருந்த நண்பர்களான லக்ஷ்மன், சத்தியநாயகம், சித்தார்த்தன், ஜெகநாதன், தனலால் ஆகியோர் என் நினைவில் அப்படியே இருக்கிறார்கள்....”என்ற நித்தியிடம் நீங்கள் குட்டி பையனாக இருந்தபோது செய்த குறும்பு ஏதேனும் ஞாபகத்தில் இருக்கிறதா என்று கேட்டோம்.

“இரண்டாம் வகுப்பில் படிக்கும்போது நானும் லக்ஷ்மனும் அமர்ந்திருக்க எங்களுக்கு நடுவில் வினோதினி என்ற மாணவியும் அமர்ந்திருப்பா. அப்படி அவள் எங்களுக்கு நடுவில் அமர்ந்திருப்பது எங்களுக்குப் பிடிக்காது. எனவே நாங்கள் இருவரும் அவளை நெருக்குவோம். அவள் அழுவாள். இப்போ அந்த வினோதினி டொக்டராக ஆஸ்திரேலியாவில் இருக்கிறா. அப்புறம் பாடசாலையின் பின்புறம் உள்ள மறைவில் எனது நண்பர்கள் சிகரட் பிடிப்பார்கள். அதில் சித்தார்த்தன் ‘ஆடத்’ சிகரெட்டை
கொண்டுவருவான் கொஞ்சம் விலையுயர்ந்த சிகரெட் அது. (சித்தார்தனின் அப்பா தான் யாழ். வின்சர் தியேட்டரின் உரிமையாளர்)அவன் எனக்கும் சிகரெட் தருவான். நான் பயம் காரணமாக வாங்க மறுத்து விடுவேன். பிறகு எனக்கும் அவர்கள் மாதிரி சிகரெட் பிடிக்க ஆசை வந்தது. ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு காகிதத்தில் தும்பை சுருட்டி பீடி மாதிரி செய்து குடித்துப் பார்த்தேன். நெஞ்செல்லாம் எரிந்தது.
இளமையில்

எங்கள் பாடசாலையில் டார்க்ரூம் என்று ஒரு அறை இருந்தது. அது எப்போதும் இருட்டாகவே இருக்கும். ‘பாடசாலையில் யாராவது தப்பு செய்தால் ‘அந்த டார்க் ரூமில் போட்டு மூடிவிடுவோம்....!’ என்று ஆசிரியர்கள் மிரட்டியதால் நான் அதற்கு பயந்து எனது சேட்டைகளை நிறுத்திக்கொண்டேன். எனது வீட்டுக்கு முன்னால் உள்ள வீட்டில் தர்மராஜா என்று ஒருவர் இருந்தார். அவர் நல்ல நகைச்சுவையாளர். நாடகம் மாதிரி நடித்து நகைச்சுவைக் கதைகள் சொல்வார்.

அவரோடு சேர்ந்து நாங்களும் ஆடுவோம். எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த ஆரியமலர் டீச்சர் தான் எங்களுக்கு மேக் அப் போடுவார். தர்மராஜா தியேட்டரில் வெட்டி வீசும் பிலிம் ரோல்களை எடுத்து வந்து டோர்ச் லைட் மூலம் ஒளிப்பாய்ச்சி படம் காட்டுவார். வீட்டில் கட்டிலுக்கு கீழே தான் இருட்டாக இருக்கும். அங்கேதான் படம் காட்டுவார். நாங்களும் கட்டிலுக்கு கீழே படுத்துக்கொண்டு படம் பார்ப்போம். நான் நாலு வயதுவரையும் வீட்டில் உடை அணியாமல் இருப்பேன். என் வீட்டு வாசலில் நிர்வாணமாக நான் நிற்பதை அந்த வழியாக கருப்பு குடையுடன் வரும் கிரேஸ்வடிவேலு டீச்சர் பார்த்து விட்டு இனி நீ உடுப்பு போடாமல் இருந்தால் இந்தக் குடைக்குள் போட்டு தூக்கிட்டு போய்விடுவேன் என்று மிரட்டுவார். அதனால் கிரேஸ் வடிவேலு டீச்சர் வருவதை கண்டாலே வீட்டுக்குள் ஓடி பதுங்கி விடுவேன். ஒரு நாள் கிரேஸ் வடிவேலு குடையுடன் வருவதை கண்ட நான் ஓடிச் சென்று வீட்டுக்குள் பழைய துணிகளை போட்டுவைக்கும் கூடைக்குள் பதுங்கிக் கொண்டேன். வீட்டுக்குள் வந்த கிரேஸ், எங்க போயிட்டான் குட்டிப்பையன் என்று வீடெல்லாம் தேடிப் பார்த்தார்.

அம்மாவும் கூடவே தேடிப் பார்த்தும் நான் கிடைக்கவில்லை. அம்மாவுக்கு பயம் பிடித்துவிட்டது பிறகு நான் அமர்ந்திருந்த அந்த துணிக்கூடை கொஞ்சம் ஆடவே அதில் உள்ள துணிகளை எடுத்துப் பார்த்தபோது அந்தக் கூடைக்குள் நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறேன்.

“அறுபத்தேழாம் ஆண்டில் நான் பிரபலமான பொப்பிசை பாடகராக வந்தபோது வேம்படி மகளிர் கல்லூரியில் என்னை கௌரவித்தார்கள். அப்போது நான் துணிக்கூடைக்குள் ஒளிந்த சம்பவத்தை கிரேஸ் வடிவேலு நினைவு கூர்ந்தார் என்று தமது சிறு வயது நினைவுகளில் மூழ்கிப் போன நித்தியிடம் இசைத்துறை பிரவேசம் பற்றிக் கேட்டோம்.
யாழ். ஜிம்ரீவ்ஸ் ரசிகர் மன்றத்தின்
நிகழ்வொன்றில் பாடி பரிசு பெற்ற படம்.
பரிசு வழங்குபவர் திருமதி பொன்னையா.
நடுவில் யாழ்ப்பாணத்துக்கு டிரம்ஸ்சை
அறிமுகம் செய்த கிடான் டி சில்வா.

‘யாழ். மத்திய கல்லூரியில் படிக்கும்போது எனக்குள் இசையார்வம் அதிகமாக இருந்தது. தேவதாஸ் படப் பாடல்களை நான் அதிகமாக பாடித்திரிந்துகொண்டிருந்த காலமது.

எங்கள் பள்ளியில் மிஸ் தோமஸ்தான் பியானோ வாசிக்க கற்று கொடுத்தார். ஒரு முறை யாழ். சென்ட்ரல் கல்லூரியில் நடத்த கிரிக்கெட் போட்டியைப் பார்க்கப் போனப்போது அங்கே சில சிங்கள வாலிபர்கள் கிட்டாரை இசைத்துக்கொண்டு பைலாப் பாடல்களை பாடிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அதில் ஒரு ஈர்ப்பு வந்துவிட்டது. பிறகு பாடசாலைக்கு சென்ற நானும் நண்பர் கதிரேசனும் பள்ளி வளாகத்தில் பைலாப் பாடல்களை பாடி ஆடிக்கொண்டிருந்தோம். அதைக் கவனித்த மிஸ் தோமஸ் எங்களை அழைத்து இதை நீங்கள் மேடையில் ஆடிப் பாடினால் என்ன?’ என்று கேட்க நாங்களும் சம்மதித்து பள்ளியில் நடத்த ஒரு விழாவில் பாடி ஆடினோம். எனக்குள் ஒரு பொப்பிசை பாடகன் உருவாக அந்த சம்பவம் தான் காரணமாக இருந்தது. அதற்கு பிறகு ஒரு பொப்பிசை குழுவை நான் ஆரம்பித்தேன். வேலை ஏதும் இல்லாமல் ஊரைச் சுற்றிக்கொண்டிருந்த காலம் அது. இசைக் குழுவுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று நானும் என் நண்பர்களும் யோசித்தபோது எனது நண்பர் சூரியபாலா, ‘நாங்கள் சும்மா ஊரைச் சுற்றிக் கொண்டு காலம் கடத்திக்கொண் டிருப்பதால் நாம் அனைவருமே நடைப் பிணங்கள் தான். எனவே,

(பொப் லிவிங் பொசில்ஸ்) வாழும் பிணங்கள் என்ற பெயரையே சூட்டுவோம் என்று ஐடியா தந்தார். அதையே பெயராக சூட்டினோம். இலங்கையின் முதலாவது தமிழ் பொப்பிசை பாடல்களை உருவாக்கிய பெருமை எங்களுக்கே உண்டு. அதனால்தான் பொப்பிசை பிதா என்ற சிறப்புப் பட்டமும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறும் நித்தி, தமது பொப்பிசைப் பாடல்கள் உலகமெங்கும் சக்கைப்போடு போட்ட கதையையும் பகிர்ந்து கொண்டார்.

நான் பாடிய ‘சின்ன மாமியே...’, ‘கள்ளுக் கடை பக்கம் போகாதே...’ என்ற பாடல்கள்தான் என்னை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்தது. தமிழ் நாட்டில் எம். ஜி. ஆர். முதலமைச்சராக இருந்த போது அவர் கொண்டு வந்த ‘மது ஒழிப்பு’ திட்டத்திற்கு எனது ‘கள்ளுக் கடைப் பக்கம் போகாதே...’ என்ற பாடலைத்தான் விளம்பர குறியிசைப் பாடலாக வைத்துக் கொண்டாராம். ஒருமுறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விழாவிற்கு வந்திருந்த நடிகர் ஜெய்சங்கர் எங்கள் முதலமைச்சரே பொதுமேடைகளில் உங்களின் பாடலைத்தான் ஐயா பாடுறாரு என்று என்னிடம் சொன்னார். அப்போதுதான் எம். ஜி. ஆர். மது ஒழிப்பு திட்டத்திற்கு எனது பாடலை பயன்படுத்தி வருவது எனக்குத் தெரிந்தது.

 இதை ஏன் சொல்கிறேன் என்றால், எம். ஜி. ஆர். காலத்திலிருந்து இன்று வரை எனது பாடல்களை எத்தனையோ பேர் என் அனுமதியின்றியே பயன்படுத்தி பெயர் வாங்கியிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தத்தான். சரி, பயன்படுத்தியதே பயன்படுத்தியாயிற்று, குறைந்த பட்சம் எனக்கு நன்றி என்ற ஒரு வார்த்தையைக் கூட சொல்லவில்லை என்பதுதான் எனது ஆதங்கம். அண்மையில் வெளியான பந்தயம் படத்தில் ‘சின்னமாமி’ பாடலை விஜய் அண்டனி ரீமிக்ஸ் பாடலாக மாற்றியமைத்திருக்கிறார். அதற்கு முன்பு தேவா படத்தில் மன்சூர் அலிகானும், மணிவண்ணனும் பாடுவது போல ஒரு பாடல் ‘சொல்லுங்க மருமகனே...’ என்ற எனது பாடலின் சில வரிகளை மாற்றி அந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்தார்கள் ‘கண்டேன் சீதை’யை படத்தில் விவேக் பாடும் பாடல் காட்சியில் அமெரிக்காவில் மாப்பிள்ளைன்னா பொண்ணு கேட்கிறாங்க...’ என்ற பாடல் வரும். அந்தப் பாடலை ஒரு இருபது வருடங்களுக்கு முன்பாகவே நான் லண்டனில் மாப்பிள்ளைன்னா பொண்ணு கேட்கிறாங்க... என்று எழுதிப் பாடினேன். இதையெல்லாம் எப்படிச் சொல்வது என்று புலம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அண்மையில் கலைஞர் டிவியும், மக்கள் தொலைக்காட்சியும் எனக்கு அந்த வாய்ப்பை வழங்கி என்னை மனம் திறந்து பேச வைத்தார்கள். நண்பர் ஹமீதும் கலைஞர் டி.வியின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியில் என்னை கௌரவித்ததோடு நான் பாடிய சில பாடல்களை ஒளிபரப்பி என் முகத்தை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்தார்...’ என்று தனது இசைப் பயணத்தின் சில சம்பவங்களை எம்மிடம் பகிர்ந்து கொண்ட நித்தியிடம், காதல் அனுபவங்கள் பற்றிக் கேட்டோம்.
லிவிங் ஃபொசில்ஸ் இசைக்குழு.
பின்வரிசையில் முதலாவதாக நித்தி.

’எனக்கு ரோகிணி நட்சத்திரம். அதனால் எனக்கு பெண்களுடன் அதிகளவு நட்பு இருக்கும் என்றும் பெண்களுக்கும் என்னை பிடிக்கும் என்றும் என் ஜாதகம் சொல்வதாக சோதிடர் சொன்னார். அதுவும் ஒரு வகையில் உண்மைதான். எனக்கு பன்னிரெண்டு வயதாக இருக்கும் போது எங்கள் பக்கத்து வீட்டுக்கு மலேசியாவிலிருந்து சரோ வந்திருந்தாள். அவளுக்கு பத்து வயதிருக்கும். எனக்கு அவளுடன் பேச விளையாட ரொம்ப பிடிக்கும். எங்கள் வீட்டுக்கும் சரோ இருந்த வீட்டிற்கும் இடையில் ஒரு கிடுகு வேலி இருந்தது. நான் அந்த வேலியின் மீது கையை வைத்து கொண்டு பேசுவேன். சரோ அடுத்த பக்கத்தில் நிற்பா. நான் அப்படி அந்த வேலியில் தொடர்ந்து கையை வைத்துக் கொண்டு பேசிப் பேசியே எங்கள் வீட்டு கிடுகு வேலியும் தாழ்ந்து போய்விட்டது. ஒருநாள் என் அம்மா, ‘தம்பி இனி நீ சரோவுடன் பேசக் கூடாது’ என்றாள். நான் ஏன் என்று கேட்க அம்மா அதற்கு பதில் சொல்லவில்லை. பிறகு தான் எனக்கு, அவள் பருவமடைந்து விட்ட கதை தெரிய வந்தது. அதற்குப் பிறகு நான் அவளை பார்க்கவில்லை. அவள் மலேசியா சென்று விட்டாள் என்று நினைக்கிறேன்.

பிறகு என் ரசிகைகளில் ஒருத்தி, அவள் பெயர் பத்மினி. அவள் வேறு ஒருவனை காதலித்தாள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அவர்கள் பிரிந்து விட்டார்களாம். அவள் தனது வேதனையை என்னிடம் சொல்லி அழுதாள். பெண்கள் அழுதால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. என் இதயம் கரைந்தது. முடிவில் நானே அவளை காதலிக்க முடிவு செய்தேன். ஊரறிய நான் அவளை காதலித்தேன். எனக்கு அவள் சரிப்பட்டு வரமாட்டாள் என்று என் குடும்பத்தினரும் நண்பர்களும் எவ்வளவோ சொல்லியும் நான் கேட்கவில்லை. பேராதனைப் பூங்காவை நானும் பத்மினியும் சுற்றிப் பார்க்க சென்ற போது அங்கே இருந்த ஒரு மூங்கில் மரத்தில் என் பெயரின் முதல் எழுத்தையும் அவள் பெயரின் முதல் எழுத்தையும் ஒரு இதயம் வரைந்து அதற்குள் பொறித்து வைத்தேன். இன்றும் அந்த மூங்கில் மரத்தில் அந்தப் பெயர்கள் இருக்கலாம்.


இடையில் நான் இந்தியாவிற்கு படிக்கச் சென்று இரண்டு வருடங்களை அங்கே கழித்து விட்டு வந்த போது, பத்மினி வேறு ஒருவனை காதலித்துக் கொண்டிருந்தாள். அதோடு என் காதல் முறிந்து போனது. பிறகு எனக்கு என் வீட்டில் திருமணம் பேசினார்கள். அப்போது எனது நண்பியான மஞ்சுளா என்னிடத்தில் வந்து ‘நித்தி நீ விரும்பும் பெண் எப்படி இருக்க வேண்டும்?’ என்று கேட்டாள்.

அதற்கு நான், நீண்ட கூந்தல் வளர்த்த, கூந்தல் நிறைய பூ வைத்த ஒரு தமிழ் சொட்டும் பெண் தான் எனக்கு பிடிக்கும் என்றேன். அதற்குப் பிறகு மஞ்சுளா அழைத்ததின் பேரில் மஞ்சுளா தங்கியிருந்த பம்பலப்பிட்டி மகளிர் விடுதிக்கு ஒருநாள் நான் சென்றிருந்தேன். அங்கே ஒரு காரில் வந்து இறங்கினாள் என் கற்பனை நாயகி. நீண்ட கருங்கூந்தல். தலைநிறைய பூவாக நான் எதிர்பார்த்த மாதிரியே.

என்னைப் பார்த்த அவள் என்னை பொப்பிசை பாடகனாக அடையாளம் கண்டு கொண்டாள். என்னோடு பேசினாள். என்னை டீ குடித்து விட்டு செல்லும்படியும் கேட்டுக் கொண்டாள். எனக்கு எல்லாமே கனவில் நடப்பது போல இருந்தது. இந்த சம்பவத்தை என் நண்பர்களிடம் கூற அவர்களும் அவளைப் பார்க்க வேண்டும் என்றார்கள்.

ஒருநாள் அவர்களுக்கும் அவளை அறிமுகம் செய்து வைத்தேன். மச்சான் உனக்கேற்ற ஜோடி தான்டா என்று நண்பர்கள் நற்சான்றிதழும் தந்தார்கள். அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் பேசப் பேச காதல் வளர்ந்தது. இந்த நேரத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். மஞ்சுளா எனக்காக அவளின் சொந்தத்தில் ஒரு நீண்ட கூந்தல் கொண்ட பெண்ணை பார்த்து வைத்திருக்கிறாள். ஆனால் என் மனது இந்த செல்வராணியுடன் சங்கமமாகி விட்டது. என்னோடு பேசக் கூடாது என்று செல்வராணியை மஞ்சுளா மிரட்டியதாக செல்வராணி ஒருமுறை கூறினாள். பிறகு இரு வீட்டாரின் சம்மதத்துடன் எங்கள் திருமணம் பருத்தித்துறை மெதடிஸ்த தேவாலயத்தில் நடைபெற்றது.

யாழ். ‘குகன் ஸ்டூடியோவில்’ திருமணப் போட்டோ பிடித்தோம். என் மனைவியிடம் எனக்கு மிகவும் பிடித்தது, அந்த நீண்ட கூந்தல்தான். ஆனால் இன்று அவள் நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அந்த நீண்ட கூந்தலை வெட்டிவிட்டு குறைத்துக் கொண்டாள்.

என் மனதில் நின்ற செல்வராணி என்கிற அந்தக் கூந்தல் வளர்த்த கனவுக் கதாநாயகியை இன்று நான் தொலைத்துவிட்டேன் என்று கூறி முடித்தார் நித்தி.

’செல்லம்மா பாக்கியம், தம்பையா இவர்களை என்னால் மறக்க முடியாது. இவர்கள் அனைவருமே தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தம்பையா ஒரு சலவைக்காரர். நான் எஸ். எஸ். சி. படிக்கும் போது கிளாசுக்கு இருபது ரூபா பணம் கட்ட நான் கஷ்டப்பட்ட போது எனக்கு இருபது ரூபா பணத்தை கொடுத்து உதவி செய்தவரே இந்தத் தம்பையா.

அப்புறம் பாக்கியம் அக்கா ரொம்பவும் கஷ்டத்தில் இருந்தவர். தனது மரணக்கு செலவுக்கு என ஒரு 500 ரூபாவை இவர் ஒதுக்கி வைத்திருந்தார். தன் மரணத்தின் பின்னரும் பிறருக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்ற நல்ல எண்ணம்.

அவளின் இந்த ஐநூறு ரூபா விடயம் ஊருக்கே தெரியும். நான் இந்தியாவிற்கு படிக்கப் போகும் போது என் கஷ்ட நிலையை உணர்ந்திருந்த பாக்கியம் அக்கா, எனக்கு உதவியாக இருக்குமே என்று தான் பொக்கிஷமாக வைத்திருந்த 500 ரூபாவை என்னிடம் தந்தாள். பின்னர் நான் வளர்ந்து பெரிய பாடகனான பிறகு பாக்கியம் அக்காவை சந்தித்தேன். அவளின் காலில் விழுந்து வணங்கி அவளிடம் வாங்கிய ஐநூறு ரூபாவை திருப்பிக் கொடுத்தேன். அப்போது நான் அவளை அம்மா என்று அழைத்தேன். நான் அப்படி அழைத்ததும் அவள் ரொம்பவும் நெகிழ்ந்து போனாள். அவருக்கு பிள்ளைகள் இல்லை. எனக்கு ஒரு மகன் கிடைத்து விட்டான் என்று என்னை கட்டிப் பிடித்து அழுதாள்.

செல்லம்மாவை பற்றியும் சொல்ல வேண்டும். அவளும் எனக்குத் தாய்தான். நானும் அவளிடம் பால் குடித்து இருக்கிறேன். நிமோனியா காய்ச்சலால் நான் பாதிப்புற்றிருந்த போது அவளிடம் வாங்கிய தாய்ப்பாலில் தான் மருந்து கரைத்து எனக்குக் குடிக்க கொடுத்தார்கள். நான் சிறுவனாக இருந்த போது எங்கள் வீட்டிற்கு செல்லம்மா எப்போது வந்தாலும் எனக்கு பல்லி மிட்டாய் வாங்கி வருவாள். நான் திருமணமான போது என்னை வாழ்த்த வந்த செல்லம்மா எனக்கு ஒரு பரிசையும் கொடுத்தாள். ஒரு சிறிய காகிதத்தில் சுற்றிய ஒரு பொட்டலத்தை தந்தாள். அதை நான் பிரித்துப் பார்த்த போது நான் அழுதேன். ஏன் தெரியுமா? அதில் எனக்குப் பிடித்த பல்லி மிட்டாய் இருந்தது.

எத்தனையோ பேர் பெறுமதியான பொருட்கள் எனக்கு பரிசாக தந்திருந்த போதும் செல்லம்மா தந்த அந்த பல்லி மிட்டாய்க்கு அவை ஈடாகியிருக்கவில்லை.

இச்சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்த போது அவர் உணர்ச்சி வசப்பட கண்களில் கண்ணீர் வழிந்தது.

இந்தச் செல்லம்மா, பாக்கியம், தம்பையா, நான் வாழ்ந்த யாழ்ப்பாணத்தின் இரண்டாம் குறுக்குத் தெரு என்று எல்லாவற்றையும் காலம் விழுங்கி விட்டது என்று விடை பெற்ற நித்தி கண்ணீரோடு நடக்கிறார்.

2 comments: