Wednesday, November 30, 2016

ஸ்ரீமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் தமிழகம் சென்ற மூர்த்தியின் அனுபவங்கள்

நேர்காணல்- மணி  ஸ்ரீகாந்தன்

ஸ்ரீமா, சாஸ்த்திரி ஒப்பந்தத்தின்படி தாயகம் திரும்பியவர்களின் வாழ்க்கை வளமானதாக இருக்கிறதா என்று, தமிழகத்துக்கு சென்று அவர்களின் வாழ்கையையும், பழைய நினைவுகளையும் தொடர்ச்சியாக பதிவு செய்து வெளியிட்டு வந்திருக்கிறோம்.

அப்படி நாம் சந்தித்த நம் உறவுகள் சொன்ன கதைகள் சுவாரஸ்யம் நிறைந்தவை. நேபொட கல்கடுவை தோட்டத்தில் பிறந்து வளர்ந்த மூர்த்தி தனது 21வது வயதில் தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து சென்றிருக்கிறார். தற்போது ஈரோட்டில் வசித்து வரும் அவரை ஒரு இனிய மாலை வேளையில் அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்.

பழைய நினைவுகள் என்றதுமே மூர்த்திக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சி "74ல் தான் அந்த மண்ணைவிட்டு வந்தோம். இன்று நினைத்தாலும் இனிக்கும் நினைவுகளாக மனசில் அப்படியே பதிந்து கிடக்கிறது" என்று நெகிழ்ந்தார்.

"குடும்பத்தில் நான் இரண்டாவது.உடன் பிறந்தவர்கள் மொத்தம் 6பேர் அம்மா, அப்பாவோடு ரொம்பவும் ஜாலியாக இருந்தோம். அதேமாதிரி எனது பெரியம்மா ரெண்டு பேரு இருந்தாங்க அவங்க இருவருக்கும் தலா ஆறு, எட்டுன்னு மொத்தம் 14 பிள்ளைங்க.  அவங்க புளத்சிங்கள தல்கஸ்கந்தை தோட்டத்துல இருந்தாங்க திருவிழா, பண்டிகைன்னு வந்துட்டா நாங்களும் குடும்பத்தோட அங்கே போயிடுவோம்.

அப்போ எங்க ஏழு பேரையும் சேர்த்து அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சின்னு மொத்தம் இருபத்தோரு பேரு. வீடே திருவிழா கூட்டம் மாதிரிதான் இருக்கும். அந்த லயத்தின் இரண்டு பக்க கடைசி வீடுகளில் என் பெரியம்மாமார் குடியிருந்தாங்க. அதனால நாங்க அங்கேயும், இங்கேயும் ஓடிட்டு இருப்போம்.

எங்க லெட்சுமி அக்கா எங்க எல்லாத்துக்கும் ரொட்டிகளை சுட்டு அடுக்கி வைத்திருக்கும். நாங்க எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். எங்க பெரியம்மா வீடு ஒரு தர்ம சத்திரம் மாதிரி. எல்லோருக்கும் எப்போதும் அங்கே உணவு இருக்கும். எங்க அண்ணன் வீமன் ஒரு கிளாரினட் கலைஞர் அவரோட வீட்டுக்கு வரும் வாத்தியக் கலைஞர்களும் பெரியம்மா வீட்டுலேயே மாதக்கணக்கில் தங்கி விடுவார்கள். அவர்களுக்கும் மூணுவேளை உணவு அங்கேதான். இப்போ ஒருத்தருக்கு மூணு வேளை உணவுக் கொடுப்பது என்பது சாதாரண விசயமில்லை ஆனா அந்தக் காலத்துல எப்படி செலவை சமாளித்தார்கள் என்று நினைக்கும் போது மலைப்பாக இருக்கிறது. கொடுக்க, கொடுக்க குறையாத அட்சய பாத்திரம் பற்றி புராணக் கதைகளில் படித்திருக்கிறேன். ஆனால் அதைப்பற்றி நினைத்துப் பார்க்கும்போது அந்த அட்சய பாத்திரம் எங்க பெரியம்மா வீட்டுல இருந்திருக்கணும்” ஆச்சர்யத்தோடு பேசும் மூர்த்தியின் முகத்தில் சோகம் படர்ந்து கொள்கிறது.

“பழைய விசயங்களை அசைப்போடு போது மனசு கனக்கிறது என்ன செய்வது”ன்னு பெருமூச்சோடு நிறுத்தியவர் தொடர்கிறார்.

"எங்கப்பா இந்தியாவுக்கு போயிடணும் என்கிற லட்சியக் கனவோடு வாழ்ந்தவர். அவரின் எதிர்பார்ப்பின்படியே ஸ்ரீமா- சாஸ்த்திரி ஒப்பந்தமும் அமுலுக்கு வந்தது. உடனே கண்டிக்கு போய் பாஸ்போர்ட் வேலைகளை முடித்து வந்த அவர், இந்தியாவுக்கு போறதுக்கான நாளையும் அறிவித்தார்.

அதன் பிறகு தாயகத்துக்கு பயணமாகும் தினத்துக்கு இருபது நாளுக்கு முன்பதாகவே நாங்க தல்கஸ்கந்த தோட்டத்துக்கு போய் எங்க பெரியம்மா வீட்டுல தங்கி விட்டோம்.அந்த இருபது நாளும் கவலையும் கண்ணீருமாகத்தான் இருந்தோம். ஒரு பெரிய தட்டுல சாப்பாட்டை போட்டு அண்ணன் தம்பிக எல்லோரும் ஒண்ணா  உட்கார்ந்து சாப்பிடுவோம். அப்போது பிரிவின் சோகம் தாங்காமல் அழுதுவிடுவோம்.

பிறகு குறித்த நாளில் பிறந்த மண்ணை பிரிந்து தாயம் திரும்ப  கொழும்பு ரயில் நிலையத்துக்கு வந்தோம்.அங்கே எங்களை வழியனுப்ப எங்கள் அண்ணன் மணி வந்திருந்தார்.ரயில் புறப்பட்டபோது ஒரு எதிர்பாராத சம்பவம் நடந்தது.ரயில் பெட்டியின் ஜன்னலுக்கருகில் அமர்ந்திருந்த நான் மணி அண்ணனோடு பேசிக் கொண்டிருந்தேன். ரயில் நகர்ந்தபோது சோகம் தாங்காமல்,ரயிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த அண்ணனை கட்டிப்பிடித்துக் கொண்டேன். உடனே அங்கே நின்றிருந்தவர்கள் எங்களை  விடுவித்தார்கள்.கண் இமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம் அது கொஞ்சம் தடுமாறி இருந்தாலும் எங்கள் இருவருக்கும் ஆபத்தாகியிருக்கும்.அதன் பிறகு தலைமன்னாரில் கப்பல் ஏறினோம். கப்பல் சங்கு சத்தத்தோடு புறப்பட்டபோது அழுகையும்,ஒப்பாரியும் காற்றில் கலந்தது.கப்பல் தண்ணீரில் மிதந்தது என்பதைவிட கண்ணீரில் மிதந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த சோகத்தை என்னால் வார்த்தைகளில் விபரிக்க முடியாது.

எங்கள்  சொந்த ஊரான பட்டுக்கோட்டைக்கே எங்களை அப்பா அழைத்துச் சென்றார். பசுமை தேடி தமிழகம் வந்தால் எனக்கு ஏமாற்றமே காத்திருந்தது என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது. ஏனென்றால் பசுமை சும்மா வராது நாமதான் பசுமையையும், வளமான வாழ்க்கையையும் உருவாக்க வேண்டும் கஷ்டத்தைக்கூட இஷ்டப்பட்டு ஏற்றுக் கொண்டால்தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.சுலபமாக கிடைப்பது எதுவும்  உயர்ந்த நிலையில் இருக்காது.எது கடினமாக கிடைக்கிறதோ அதுதான் வலிமையும்,மதிப்புமிக்கதாகவும் இருக்கும்.” என்றவர்,
"75,76 ஆண்டுகள் வரைதான் அப்பா உயிரோடு இருந்தார். அந்த நாட்களில் அவர் மேலதிகமாக ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் கடலை, நெல் போன்றவற்றை பயிரிட்டார். நாங்களும் அவரோடு சேர்ந்து உழைத்தோம். என் அப்பா ரொம்பவும் நேர்மையான மனிதர் ஒரு வேலையை  எடுத்தால் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அவருக்கு தச்சு தொழிலும் தெரியும். நன்றாகவே சிலம்பம் சுற்றுவார். தஞ்சை மண்ணுக்கே உரிய வீரமும், மானமும் அவர் ரத்ததில் கலந்திருந்தது.
இளமையில்...
இலங்கையில் வாழ்ந்த காலத்தில் எங்கள் எல்லோருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்பதுதான் அப்பாவின் கொள்கையாக இருந்தது. கல்விதான் எப்போதும் அழியாத சொத்து என்பதை அவர் உறுதியாக நம்பினார். அப்பா பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் எங்கள் எல்லோரையும் தோட்டத்தில் வேலை செய்ய விட்டிருப்பார். எங்களுக்கு கல்வியும், சொந்த மண்ணில் சுதந்திரமான வாழ்க்கையையும் கொடுக்க வேண்டும் என்பது அவரின் கனவு. அதை நனவாக்கியும் விட்டார்" என்று தனது அப்பாவை பற்றி பெருமிதமாக பேசுகிறார் மூர்த்தி.

"என் அம்மா பெயர் ஆச்சிக் கண்ணு அவரும் எங்களுக்காக உழைத்தவர்தான். கல்கடுவை தோட்டத்துல அவங்க ரப்பர் மரங்கள வெட்டி பால் எடுப்பாங்க அப்போ அந்த இரப்பர் காட்டுல இரத்தத்தை உறிஞ்சும் அட்டை பூச்சிகள் என் அம்மாவின் கால்களின் விரல்களுக்கிடையே கடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும். அட்டைகளை பிடித்து வீசிக்கொண்டிருந்தால், அந்த நாளுக்குரிய இருநூறு மரங்களை வெட்ட முடியாது என்பதால் அதைக் கண்டுக் கொள்ளாமல் அவர் மரங்களை வெட்டுவதை நான் பார்த்திருக்கிறேன்." தனது தாயாரைப் பற்றி மூர்த்தி சொல்லும் போதே அவரின் வார்த்தைகளில் நெகிழ்ச்சி.

தாயகம் திரும்பியதும் நான் தஞ்சை வேலை வாய்ப்பு பணியகத்தில் விண்ணப்பித்திருந்தேன். சில நாட்களுக்கு பின் ஈரோடு சேஷசாயி பேப்பர் போர்ட்டில் தொழில் பயிற்சிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி நேர்முகத் தேர்வுக்கு வரும்படி என்னை அழைத்திருந்தார்கள். அங்கு சென்று இரண்டு வருடங்களாக பொய்லர் அட்டென்டர் துறையில் இரண்டு ஆண்டுகள் முறையான பயிற்ச்சி எடுத்தேன். அந்தக் காலக்கட்டத்தில் இலங்கை அகதிகள் என்ற அடிப்படையில் எனக்கு உதவித் தொகையாக மாதம்தோறும் 98 ரூபா கிடைத்தது.

பயிற்ச்சி முடிந்த பிறகு அந்த வேலைக்கான வெற்றிடங்கள் இல்லாததால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. அதன் பிறகு பட்டுக்கோட்டைக்கு சென்ற நான் ஒரு மாதம் கழித்து ஈரோடுக்கே வந்து வேலைத் தேடும் படலத்தை தொடங்கினேன். தஞ்சை மண்ணில் விவசாய காணிகளை தவிர பிழைப்புக்காக வேறு ஏதும் இல்லாத காரணத்தால் நான் ஈரோடுலேயே எங்காவது கம்பனிகளில் வேலைக் கிடைக்குமா என்று எதிர்பார்த்து இருந்தேன். அப்போது சுகுமாரன் என்ற கான்றக்டர் வீடுகளுக்கு பெயின்ட் அடிக்கிற வேலை இருப்பதாக என்னை அழைத்தாரு ஒரு நாளைக்கு ஏழு ரூபா சம்பளம்.கிடைத்த வேலையை செய்யலாம்னு அந்த வேலைக்கு போனேன்.பள்ளிப்பாளையம்,ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சுற்றி வேலை செய்தேன்.அப்போது சேஷசாயி பேப்பர் போர்ட் நிறுவனத்துக்கு பக்கத்திலிருந்த ராயல் திரையரங்கை கட்டி முடித்து பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தார்கள்.அதில் நானும் வேலை செய்து கொண்டிருந்தேன்.அப்போது ஈரோட்டில் பொன்னி சக்கரை ஆலையும் உருவாகிக் கொண்டிருந்தது.
அங்கே வேலைக்கு ஆட்கள் எடுக்கிறார்கள் என்பதை அறிந்து பொன்னி சக்கரை ஆலையின் பாய்லர் பிரிவுக்கான அதிகாரி நடராஜன் ஐயாவை அவரின் வீட்டுக்குச் சென்று பார்த்தேன்.

‘ஏன் இவ்வளவு காலதமதமாக வாரீங்க இப்போதான் ஆட்களெல்லாம் எடுத்தோம், ஆனாலும் இரண்டு வேலை வெற்றிடங்கள் இருப்பதாக அறிகிறேன்.நாளைக்கே நேர்முகத் தேர்வுக்கு  வாங்க’ன்னு சொன்னாரு.
பொன்னி சக்கரை ஆலையின் தலைமை பொறியிலாளரான ஜம்புநாதன்  தான் என்னை நேர்முகம் செய்தார். ஒரு வாரத்தில் வேலை கிடைத்தது. பிரதான பொறியிலாளர் குணசேகரனின் தலைமையில் வேலை செய்தேன்.அங்கே 30 வருடங்களாக பணியாற்றியிருக்கிறேன்.பாய்லர் பிரிவில் மூன்றாம் இடம், இரண்டாம் இடம், என்று வளர்ந்து இன்று முதல் இடத்தையும் பிடித்து விட்டேன்.
இந்த நேரத்தில் என் வாழ்க்கைக்கு ஒளி கொடுத்து பிரகாசிக்க செய்த சேஷசாயி பேப்பர் போர்ட் நிறுவனத் தலைவர் விஸ்வநாதனை நன்றியோடு நினைக்கிறேன். அதோடு எனது பணியின் ஓய்வுக்கு பிறகு எனக்கு மீண்டும் வேலை வாய்ப்பை வழங்கிய ஸ்ரீ குமரன் பேப்பர் போர்ட் நிறுவனர் பாஸ்கரன் அய்யாவையும் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள், சக பணியாளர்கள் அனைவரையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன்.
இத்தனைக்கும் நான் கற்றது ரொம்பவும் குறைவுதான். பத்தாவது வரைதான் நம்ம படிப்பு. நான் பத்தாவது வரை படித்ததே பெரிய விசயங்க என்றவர், மீணடும் கல்கடுவையின் நினைவுகளுக்கு தாவினார்.

கல்கடுவை சென் அந்தோனியார் தேவாலயத்தில் ஐந்தாம் வகுப்பு வரை கல்விக் கற்றேன்.அது ஒரு மிஷனரி பாடசாலையாக இருந்தது. நானும் எனது சகோதரர்கள் அனைவரும் அங்கேதான் கல்விக் கற்றோம்.
மூணாம் வகுப்புக்கு பிறகு நான் பாடசாலைக்கு போவதில் ரொம்பவே கள்ளத்தனம் செய்தேன்.பாடசாலைக்கு எங்க  வீட்டுல இருந்து ஒரு இரண்டு கிலோ மீட்டர் நடந்து மலையிலிருந்து இறங்கி வர வேண்டும்.
அப்படி வரும்போது நான்தான் கடைசியாக வருவேன். எனது அண்ணன்,தங்கச்சி எல்லோரும் முன்னாடி போகும் போது நான் பின்னாடி எங்காவது காட்டு செடிகளுக்குள் ஒளிந்துக் கொள்ள இடம் தேடுவேன். பாடசாலைக்கு காலை எட்டு மணிக்குள் போய் விட வேண்டும். அதனால் பின்னால் திரும்பி பார்க்கும் என் தங்கச்சிங்க ‘அண்ணே சீக்கிரம் வா!’ன்னு சொல்லி அழுவாங்க அதற்கு நான் ‘நீங்க போங்க நான் மெதுவா வாரேன்’ன்னு சொல்லுவேன். ‘இவன் இன்னைக்கு ஸ்கூலுக்கு வர மாட்டான்’ன்னு நினைக்கும் அவங்க போய் விட்டப்பிறகு நான் அங்கே நிற்கும் பெரிய மாமரத்தின் பின்னால் மறைந்துக் கொள்வேன். பிறகு அங்கே இருக்கும் பாறைகளின் மேல் ஏறி அமர்ந்து இருப்பேன்.தோட்டத்து கங்காணி வந்தா ஓடிச் சென்று காட்டுப் புதர்களில் பதுங்கி விடுவேன்.பிறகு 12 மணிக்குப் பாடசாலை முடிந்து பிள்ளைகள் வரும் போது. அவங்களோடு வீட்டில் ஆஜராகி விடுவேன்.
பிறகு விசயம் தெரிய வர நமக்கு அப்பாவிடம் அடிவிழும். ஒரு நாள் அப்படிதான் காலையில எங்கம்மா என்னை ஸ்கூலுக்குப் போக ஆயத்தமாக்கி  நேபொடையில இருந்து களுத்துறைக்கு படிக்கப் போகும் ஒரு பையனிடம் ‘இவன் நேபொடைக்கு படிக்கப் போக பயப்படுறான்,அதனால இவனை நீ களுத்துறைக்கு கூட்டிட்டுப் போ’ன்னு சொல்ல நானும் ரொம்ப மகிழ்ச்சியோடு அந்த பையனின் சைக்கிளில் ஏறி அமர்ந்து கொண்டு போனேன். போகும் போதும் அந்தப் பையனிடம் ‘அண்ணே எங்க ஸ்கூல கடக்கும் போது கொஞ்சம் வேகமா போங்க’ன்னு சொல்ல அந்த பையனும் வேகமாதான் போனான். எனது ஸ்கூலை நெருங்கிய போது எனக்கு பயமாகத்தான் இருந்தது.‘யாராவது பார்த்துவிட்டால் என்னாவது?’ அப்படி நான் நினைத்த மறு கனமே சைக்கில் எனது ஸ்கூல் வாசலில் நின்றது. அடுத்த நொடியே விசயத்தை புரிந்து கொண்ட நான் சைக்கில் பாரிலிருந்து குதித்து தலைதெறிக்க தப்பி ஓடினேன்.
நான் தப்பி ஓடும் செய்தி ஸ்கூல் வட்டாரத்தில் பரவ மூணு மாணவர்கள் என் பின்னாடியே துரத்தி வந்து என்னை குண்டுக் கட்டாக தூக்கிச் சென்றார்கள்.
ஒருநாள் பாடசாலைக்கு செல்லாமல் நான் வழியில் பாச்சா காட்டிக் கொண்டிருந்த போது, என் அண்ணன் என்னை துரத்த நான் தோட்டத்து ஒற்றையடி படிக்கட்டில் தறிக்கெட்டு ஓடி குப்புற விழுந்ததில் என் முன் பற்கள் இரண்டும் விழுந்து ரத்தம் வழிந்தது.” என்று சிலாகித்து பேசுகிறார் மூர்த்தி.

“கல்கடுவையில் படிக்கும் போது என்னோடு குழந்தைவேல் என்று ஒரு பையன் படித்தான் அவன்தான் என்னோட பெஸ்ட் பிரண்டு அந்த பையனோட பெற்றோர்கள் நேபொட டவுனில இனிப்புக் கடை வைத்திருந்தார்கள். பாடசாலை இடைவேளையின் போது அவனோட நேபொடைக்கு சைக்கில்ல போய் இனிப்பு கடையில மிக்ஸர்,சாக்லட் எல்லாத்தையும் சட்டை பாக்கட்டில் போட்டு எடுத்து வந்து ஸ்கூல்ல வச்சி சாப்பிடுவோம்.
ஐந்தாம் வகுப்புக்கு பிறகு நான் மத்துகமை சென் மேரீஸ் ஸ்கூலுக்கு சென்றேன். அங்கே ஒன்பதாம்,பத்தாம் வகுப்பு படிக்கும் போது, அழுத்கமை செல்லும் வழியில் ஸ்கூலுக்கு அருகாமையில் இருந்த அய்யன் கங்காணி வீட்டுலதான் இரண்டு வருசம் தங்கி படிச்சேன். அய்யன் கங்காணியின் மகன் கந்தபெருமாள் எங்கள் தோட்டத்துல பீல்ட் ஒபிசராக வேலைப்பார்த்தாரு. அவங்க வீட்டுக்கு பக்கத்துலயே அவங்களுக்கு சொந்தமா ஒரு முருகன் கோவில் இருந்தது. அந்தக் கோவில்ல போட்ட நாடகத்துல கூட நான் முருகன் வேசம் போட்டு இருக்கேன். அவங்க எங்க தூரத்து சொந்தக்காரங்க அதனால எங்க வீட்டுல இருந்து சாப்பாடும் கொண்டு போவோம். ஆனாலும் நாங்க லயத்துல கூலிக்காரவங்களாக இருப்பதால யாருக்கும் தெரியக் கூடாதுன்னு நைட்டுலதான் உணவு கொண்டு போவோம்.” என்றவர்,
“சென் மேரீஸ் கல்லூரியில் பத்தாவதோடு படிப்பபை நிறுத்திவிட்டு எனது அண்ணனுக்கு தெரிந்த நபர் ஒருவரின் அழைப்பை ஏற்று களுத்துறை பஸ்தரிப்பு நிலையத்துக்கு பக்கத்தில் இருந்த நியூ வேதநாயகி ஸ்டோர்ஸில் விற்பனையாளராகவும்,எழுத்தராகவும் பணியாற்றினேன்.அந்தக் கடையை நடேசன், தர்மலிங்கம் ஆகிய சகோதரர்கள் நிர்வகித்து வந்தார்கள்.அந்தக் கடைக்கு பக்கத்திலும் ஒரு யாழ்ப்பாணத்து கடை இருந்தது.
நான் வேலைப் பார்த்த கடையில் என்னோடு காந்தி ,தங்கவேல் உள்ளிட்டோர் பணியாற்றினார்கள்.வேதநாயகி கடையின் முன் பக்கத்தில் பெரிய பெட்டியில் பேரீச்சம்பழம் வைத்திருப்பார்கள்.அதோடு பெரிய, பெரிய கண்ணாடி போத்தல்களில் பிஸ்கட்டுகள் இருக்கும்.

ஒரு நாள் அதிகாலை ஐந்தரை மணியிருக்கும் நானும் எனது நண்பர்களும் குளிப்பதற்காக களுத்துறை ரயில்வே ஸ்டேசனுக்கு பின்னாடி இருக்கும் ஆற்றுக்கு குளிக்கப் போனோம்.அந்த இடத்தில்  ஆறும் கடலும் சங்கமிக்கிறது. எனது நண்பர்களான காந்தி, தங்கவேல் உள்ளிட்டோர் ஆற்றில் இறங்கி நீந்த நானும் அவர்களின் பின்னாடி இடுப்பளவு தண்ணீரில் இறங்கி நடந்தேன்.எனக்கு நீச்சல் தெரியாது என்கிற விசயத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை. ஆற்றின் மறுபக்கத்தில் தெரியும் கடலின் மணல் திட்டுக்கு எனது நண்பர்கள் நீந்தி சென்று விட பின்னால் சென்ற நான் திடீரென்று தண்ணீருக்குள் மூழ்கி விட்டேன். மூச்சுவிட முடியாமல் தத்தளித்து இரண்டு முறை நீருக்குள் சென்று வெளியே வந்தப்போது, தூரத்தில் இருந்த காந்தி என்னை கவனித்து விட்டான்.அடுத்த நிமிசமே அவன் பாய்ந்து என் அருகே வர உயிர் போராட்டத்தில் இருந்த எனக்கு ஏதாவது கையில் கிடைத்தால் பிடித்து விடலாம் என்றே தோன்றியது.

அருகில் வந்த காந்தியின் கைகளை நான் இறுக பற்றிக் கொள்ள காந்தியும் நீருக்குள் மூழ்கினார்.அடுத்த நொடியே சுதாகரித்துக் கொண்ட காந்தி தனது முழு பலத்தையும் பிரயோகித்து என்னிடமிருந்து விடுபட்டு என்னை  மறுபக்கத்திற்கு தள்ளிவிட்டார்.
அங்கேதான் அதிர்ஸ்ட தேவதை எனக்காக காத்திருந்தாள். என் பாதம் தரையைத்தொட என் மூக்குக்கும்,வாயிற்கும் இடையே நீர் தளம்பிக் கொண்டிருந்தது. என்னை தள்ளிவிட்ட வேகத்திலேயே காந்தியும் கரைக்குச் சென்று மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார். ‘நீ அங்கேயே இரு நான் வந்துடுறேன்’ன்னு சத்தமிட்டார். அப்போது அடித்துச் செல்லும் நீரில் என் பாதம்  பதிந்திருக்கும் மணல் சிறிது சிறிதாக கரைந்துக் கொண்டிருந்தது. திரும்பவும் நான் நீருக்குள் செல்லும் நிலை மரண பயத்தால் நான் உறைந்துப் போனேன்.அப்போது என் அருகே வந்த காந்தி என் கரங்களை பிடித்து என்னை பாதுகாப்பாக கரைக்கு இழுத்துச் சென்றார்.
அரை மணி நேரமாக நடந்த எனது மரண போராட்டத்தை பார்ப்பதற்காக கடற்கரையில் பெரிய கூட்டமே கூடியிருந்தது.
அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கிறது.
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி இந்த மூர்த்திக்கு உயிர் கொடுத்தான் ஈழத்து காந்தி. எனது உயிர் மூச்சு உள்ளவரை காந்தியை என்னால் மறக்க முடியாது. காந்தி இப்போது எங்கே இருக்கிறாரோ?” என்று மூர்த்தி மெய்சிலிர்க்கிறார்.

“பட்டுக்கோட்டைக்கு பக்கத்திலிருக்கும் முதல்சேரி கிராமத்தை சேர்தவர்தான் என் துணைவியார் கலையரசி எனது வெற்றிகளுக்காக எப்போதும் எனக்கு துணையாக இருக்கிறார். அவர் தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவர்.எனது சகோதரர்கள்  எனக்காக அவரை பெண் கேட்டுப் போனப்போது,பெண் வீட்டார்கள் நாங்கள் சிலோன்காரர்கள் என்றதுமே மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார்களாம்.நான் எங்கே என்ன வேலை செய்கிறேன் என்பதையெல்லாம் கூட அவர்கள் விசாரித்து பார்க்கவில்லை. அதற்கெல்லாம் ஒரு சிறப்பான காரணம் சிலோன் தமிழன் என்பதுதான்.  சிலோன் தமிழன் பொய் சொல்லமாட்டான்,நேர்மையாக இருப்பான்,யாரையும் ஏமாற்ற மாட்டான் என்கிற அக்மார்க் முத்திரை நமக்கு இருக்கு! அந்த நம்பிக்கையை இன்னைக்கு வரைக்கும் நான் காப்பாற்றி வருகிறேன். எனது மகன் கௌதமும்,மகள் மைதிலியும் டிகிரி முடிச்சிட்டாங்க. எனது மகள் இளங்கலை முடிச்சிட்டு இப்போ முதுகலை படிச்சிட்டு இருக்காங்க. என்னால படிக்க முடியாததை எனது பிள்ளைகள் படிப்பதில் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி! எனது பிள்ளைகளிடம் உண்மையை பேசுங்கள்.உங்களிடம் திறமை இருக்கு நீங்களும் சாதிக்கலாம் என்று அறிவுரை  சொல்லுகிறேன். எனக்கு பிறகு நமக்கான அக்மார்க் நம்பிக்கை முத்திரையை எனது பிள்ளைகள் காப்பாற்றுவார்கள்” என்று மூர்த்தி நம்பிக்கையோடு விடைபெற்றார்.

தமிழன் டி.வி.உரிமையாளர் கலைக்கோட்டுதயம் மனம் திறக்கிறார்.


உரையாடியவர்:  மணி  ஸ்ரீகாந்தன்

'தமிழர்கள் சாதிகளாகவும் மதங்களாகவும் பிளவுபட்டு தீவுகளாகக் கிடக்கிறார்கள். தமிழ்நாடு என்ன தாசி வீடா வந்தவனுக்கெல்லாம் பாய் விரிப்பதற்கு? தமிழ்நாட்டைத் தமிழனே ஆள வேண்டும்'

மிழகத்தில் தினமும் புற்றீசல் போல புதிய தொலைக்காட்சி சேனல்களின் சோதனை ஒளிபரப்புகள் நடைபெற்று வருகின்றன. அவைகளில் ஒரு சில சேனல்கள்தான் சோதனைக்கு பிறகு வெளிச்சத்திற்கு வருகின்றன. அவற்றில் சில சோதனைகளோடு சமாதியாகியும் விடுகின்றன. அப்படி வந்த சில சேனல்களின் கதையும் அற்ப ஆயுளோடு முடிந்து விடுவதும் உண்டு. தமிழகத்தில் மட்டும் செய்மதி ஒளிபரப்புகள் என்று எடுத்துக் கொண்டாலே 75 சேனல்கள் இயங்குகிறதாம். இதுதவிர மாவட்ட ரீதியாக கேபள் வழியாக இயங்கும் சேனல்கள் மட்டும் நூற்றுக்கணக்கில் இருக்கும். சாதாரண ஒரு நபரால் செய்மதி ஒளிபரப்பு என்பது நினைத்தும் பார்க்க முடியாத ஒன்றுதான். ஆனால் ஒரு சாதாரண நபரால் தொடங்கப்பட்ட தமிழன் தொலைக்காட்சி இப்போது 14வது ஆண்டை பூர்த்தி செய்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. உலகத் தமிழர்களின் மனசாட்சியாக இயங்கும் இந்த தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம். இவர் 'உண்மைத் தமிழன்' என்கிற ஒரு செய்திப் பத்திரிகையையும் வெளியிட்டு வருகிறார். சென்னை விருகம்பாக்கம், அவ்வை திருநகரில் இயங்கும் தமிழன் டிவி அலுவலகத்தில் ஒரு இனிய காலை வேளையில் கலைக்கோட்டுதயத்தை சந்தித்துப் பேசினோம்.
‘நீங்கள் எப்படி இந்த துறைக்குள் வந்தீர்கள்?’ என்று நாம் ஆரம்பித்ததும்,

“நான் கல்லூரி படிப்பு முடிந்ததும் பத்திரிகையாளரானேன். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. எங்கப்பா ஒரு பத்திரிகையாளர். கொழும்பு வீரகேசரி நாளிதழில் பணியாற்றிவர். இலங்கையில் அரசியல்வாதியாகவும் இருந்திருக்கிறார். அதனால் தொட்டில் பழக்கம் எனக்கும் தொற்றிக்கொண்டது. (சிரித்துவிட்டு தொடர்ந்தார்) கன்யாகுமரியில படித்து முடித்துவிட்டு சென்னைக்கு வந்து வேலையில் சேர்ந்தேன், கொஞ்சகாலம் பத்திரிகையாளராக இருந்துவிட்டு தமிழ்தேசிய அரசியல் பணிகளில் ஈடுபடுட்டேன்.

அதன் பிறகு தமிழன் கலைக்கூடம் என்கிற நிறுவனத்தை தொடங்கி ராஜ், ராஜ் டிஜிட்டல் பிளஸ், விஜய் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளுக்கு நிகழ்ச்சிகள் தயாரித்து கொடுத்து வந்தேன். அந்த நேரத்திலேயே ராஜ் டிவிக்கு மாதந்தோறும் 13 லட்சமும், ராஜ் டிவிக்கு 5 லட்சத்தையும் வருமானமாக ஈட்டிக்கொடுத்தேன். அந்தளவுக்கு என்னிடம் வசதியும், உழைப்பும் இருந்தது. அந்த நேரத்தில் என்னை வைத்துதான் ராஜ் டிஜிட்டல் பிளஸ்சே ஓடியது. அதில் ஒளிபரப்பான இளைய தமிழகம், இது நம்ம ஊரு உள்ளிட்ட பெரும்பாளான நிகழ்ச்சிகளை விளம்பர அனுசரணைகளை பெற்று வெற்றிகரமாக நடத்தி வந்தேன்.

அப்போ ஒரு நாளைக்கு கிட்டதட்ட 5மணி நேர நிகழ்ச்சிகளை நானே தயாரித்து கொடுத்து வந்தேன். அப்போதான் என் தம்பி அவங்க தங்கச்சி பொண்ணை கூட்டிட்டு போயிட்டான். அந்தக்  கோபத்துல என்னோட நிகழ்ச்சிகளை எல்லாத்தையும் ஒரே நாளில் சடாரென்று நிறுத்தி விட்டார்கள்.
மேல் வரிசையில் முதலாவதாக நிற்பவர் ஜூப்பிற்றர் உதயம்.
அடுத்து அருணோதயம்,ஜோதி உதயம்,எவறெஸ்ட் உதயம்,சர்வோதயம்.
கீழ் வரிசையில் முதலில் இருப்பது கலைக்கோட்டுதயத்தின் தந்தை காசி உதயம்.
அடுத்து காசி உதயத்தின் துணைவியார் அன்னப்பழம்,
மடியில் இருக்கும் குழந்தை கலைக்கோட்டுதயம்.
அடுத்து நிற்பது ஆதிகேசவ உதயம்,
அமர்ந்திருப்பது அன்னப்பழத்தின் தங்கை தங்கலெட்சுமி
அடுத்து அவரது கணவர் முத்து நாடார்.
இந்த சம்பவம் 2003ல நடக்குது. 'அந்த பொண்ண கூட்டிட்டு வந்தாதான் நிகழ்ச்சி போடுவோம்'னு சொல்லிட்டாங்க. அப்போ என்கிட்ட வேலை பார்க்கிறவங்க கிட்டத்தட்ட ஒரு நூறு பேரு இருக்காங்க. எனக்கும் தெரிந்தது அந்த தொழில்தான், இந்த இக்கட்டான சூழலில் அடுத்து என்ன செய்யிறதுன்னு யோசிச்சேன். அந்தக் காலகட்டத்தில் தர்மபுரி, கிருஸ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட பதினைந்து ஊர்களில் கேபல் வழியாக லோக்கல் டிவியை தமிழன் டிவி என்கிற பெயரில் நடாத்தி வந்தேன். அதனால் எனக்கு நாமளே தனியாக ஒரு டிவி தொடங்கினால் என்னன்னு ஒரு ஐடியா தோன்றியது. எண்ணத்தை உடனே செயல்படுத்தி 2003 செப்டம்பர் 14ம் திகதி  தமிழன் தொலைக்காட்சியின் சோதனை ஒளிபரப்பை தொடங்கினேன். அதை மருத்துவர் ராமதாஸ் ஆரம்பித்து வைத்தார். அதன் பிறகு ராமதாசுக்கு ஆதரவாக எமது டிவி செயல்பட்டது" என்று தமது தொலைக்காட்சி பிரவேசம் பற்றி சிலாகித்து பேசியவரிடம்,

'நாம் அறிந்த வகையில் தமிழன் தொலைக்காட்சி ஆரம்பத்தில் திருமாவளவனுக்கு ஆதரவாகத்தானே செயல்பட்டது?' என்றோம்.

"தமிழ் நாட்டுல தொலைக்காட்சிக்கு தமிழன்னு பேரு வச்சதால இங்குள்ள பத்திரிகைகள் 'விடுதலை புலிகள் எனக்கு 18 கோடி கொடுத்து விட்டார்கள். அந்தப் பணத்தை வாங்கி கொடுத்தவர் ராமதாஸ்'னு அட்டைப்படத்தோடு செய்தியை ஒரு பத்திரிகை வெளியிட்டிருந்தது. நான் தமிழ் நாட்டுக்கு அறிமுகமானது இப்படிதான். (ஹா….ஹா…) வந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தவர் தொடர்ந்தார். அப்போ ராமதாஸ் புலிகள் ஆதரவாளராக செயல்பட்டார். அப்போ எனது டிவி ராமதாசுக்கு ஆதரவாக இருந்ததால் புலி சாயம் என் மீதும் பூசப்பட்டது. ஆனாலும் நான் அவர் சார்ந்த சமூகம் கிடையாது. அவர் வன்னியர், நான் நாடார். அதன் பிறகு என்ன நடந்தது என்றால் நான் தொலைக்காட்சி தொடங்கிய நாலு ஆண்டுகளுக்குப் பிறகு ராமதாசு என்னை பார்க்கிறாரு. 'சாதாரண ஆளான நானே ஒரு தொலைக்காட்சி தொடங்கும் போது நாமே ஒரு தொலைக்காட்சி தொடங்கினால் என்ன?' ராமதாசுக்கு ஒரு யோசனை வர மக்கள் தொலைக்காட்சியை தொடங்கினாரு.

அதன் பிறகு நான் விடுதலை சிறுத்ததைகள் கட்சியோடு இணைந்து, அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக ஆறு  ஆண்டுகள் திருமாவோடு பயணித்தேன். அந்தக் காலக்கட்டத்தில் ஈழப் போர் பற்றிய நிறைய செய்திகளை தமிழன் டிவி ஒளிபரப்பியது.

2011ம் ஆண்டு தேர்தலோடு திருமாவளவன் தி.மு.கவோடு இணைகிறார். அப்போ தி.மு.கவோடு கூட்டணியில் காங்கிரஸ்சும் இருக்கிறது. தமிழ் இன அழிப்புக்கு காங்கிரஸ்சுதான் காரணம் என்கிற கோபத்தினால் நான் திருமாவை விட்டு பிரிந்து வருகிறேன். அந்த சந்தர்பத்தில் தமிழர்களுக்காக வீர முழக்கமிட்டு கொண்டிருந்த நாம் தமிழர் சீமானோடு அந்தக் கட்சியில் இணைந்தேன். அவர் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், நான் முதன்மை ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினேன். ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு  முன்பாகவே அரசியலே வேணாம்னு ஒதுங்கிவிட்டேன். இப்போ தமிழன் டிவியில சீமான், திருமா உள்ளிட்ட தமிழ் இன ஆர்வளர்களின் செய்திகளையும், பேச்சுகளையும் நடுநிலையாக ஒளிபரப்பி வருகிறேன். அதோடு உண்மை தமிழன் என்ற அரசியல் செய்தி பத்திரிகையையும் வெளியிட்டு வருகிறேன்." என்றவர் நிறுத்திவிட்டு தொடர்ந்தார்.

"நாம ஏன் அரசியல் கருத்துக்களை மற்றவர்களுடன் இணைந்து சொல்ல வேண்டும். நாமே நேரிடையாக சொல்லலாமேன்னுதான் உண்மை தமிழனை வெளியிடுகிறேன். ஏனென்றால் தமிழர்கள் தமிழ் நாட்டில் வெற்றிப் பெறாமல் இருப்பதற்கும், திராவிடத்தை வீழ்த்த முடியாமல் இருப்பதற்கும் காரணம், தமிழனிடம் ஒற்றுமை இல்லாததே!

இவர்கள் சாதிகளாகவும், மதங்களாகவும் பிளவுப்பட்டு தீவுகளாகிக் கிடக்கிறார்கள். தமிழ்நாடென்ன தாசி வீடா வந்தவனுக்கெல்லாம் பாய் விரிக்கிறதுக்கு? தமிழனை தமிழன்தான் ஆள வேண்டும், தமிழர்கள் எல்லோரும் ஓரணியில நிற்கணும் என்பதை வலியுறுத்துவதுதான் இந்த உண்மைத் தமிழன்." தடதடக்கும் கலையின் பேச்சில் தமிழனை எழுப்பும் எழுச்சி வார்த்தைகள்…

'தமிழ் நாட்டின் மற்ற பெரிய தொலைக்காட்சிகளோடு தமிழன் டிவியால் தாக்கு பிடிக்க முடிகிறதா, கிருஸ்த்தவ மிஷனரிகளின் உதவி பணத்தில்தான் தாக்கு பிடிப்பதாகவும் ஒரு பேச்சு அடிப்படுகிறதே?'
"எனக்கு அறிவு வந்த நாளிலிருந்து நான் கடவுளை நம்புவது இல்லை.நான் இது வரை சாமி கும்பிட்டது இல்லை. நான் கலைஞர் குடும்பம் மாதிரியோ, ஜெயலலிதா குடும்பம் மாதிரியோ பெரிய பணக்காரன் கிடையாது. அந்தக் காலக்கட்டத்தில் அவங்கதான் தொலைக்காட்சி செய்தார்கள். அப்போ தமிழ் நாட்டில் மொத்தம் ஐந்து தொலைக்காட்சிகள்தான் இருந்தன. அப்போ சாதாரண ஆளான நான் தொலைக்காட்சி தொடங்குவது அவ்வளவு இலகுவான காரியமில்லை. எனக்கென்று சில கொள்கைகள் இருந்தன. ஆனால் பணத்துக்காக நான் விரும்பாத கொள்கைகளையெல்லாம் தொலைக்காட்சியில் போட்டுதான் தொடங்கணும் என்கிற நிர்பந்தம் எனக்கு இருந்தது. தினமும் காலையில சமய நிகழ்ச்சியை போட்டால் தொலைக்காட்சி நடத்துவதற்கான மொத்த பணத்தையும் அவர்கள் கொடுத்து விடுகிறார்கள். அதற்காக கிருஸ்தவர்களை மட்டும் போடவில்லை. இஸ்லாமிய நிகழ்ச்சிகளையும் போட்டேன். இதெல்லாம் பெரிய தொலைக்காட்சிகள் போடமாட்டார்கள். அதோடு வளைகுடா நாட்டிலிருந்து சங்கமம் என்கிற நிகழ்ச்சியை ஈழத்தமிழரான கலையன்பன் வழங்கி வருகிறார். அதற்காக வளைகுடா நாட்டிலிருந்து மாதம்தோறும் மூன்று லட்சம் வருமானமாக கிடைக்கிறது.

(மிகுதி அடுத்த இதழில்)

Tuesday, November 29, 2016

பாடகர் முத்தழகுவின் பசுமை நிறைந்த நினைவுகள்

நேர்காணல்- மணி ஸ்ரீகாந்தன்

இலங்கை மெல்லிசை பாடல் உலகில் நன்கு அறியப்பட்ட பெயர் வி. முத்தழகு. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட தமிழ், சிங்கள திரைப்பட உலகில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். ‘புதிய காற்று’ திரைப்படம் இவரை உலகத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது.‘என்னங்களாலே... இறைவன் தானே....’
‘ஒஹோ என் ஆசை ராதா....’ உள்ளிட்ட பாடல்களே இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தமது மெல்லிசை பாடல்களால் மத்திய கிழக்கு, ஐரோப்பா என உலக முழுவதும் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்திருக்கும் முத்தழகுவின் கலைப் பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


"தொடர்ந்தும் பாடவேண்டும் என்கிற வெறி எனக்கு இன்னமும் இருக்கிறது. ஆனாலும் நம் நாட்டில் தமிழ் கலை படைப்பாளர்களின் பசிக்கு தீனி போட இங்கு ஆட்கள் இல்லை அதற்கான களமும் இல்லை". இலங்கையில் உருவான தமிழ் சினிமாவின் வரலாறு முடிவுற்றதாகவே நினைத்து வேதனைப்படும் முத்தழகு, தமது அந்தக்கால அனுபவங்களை இப்படி சொல்கிறார். "நான் கண்டி பேராதெனியாவில் பிறந்ததாக எனது பிறப்புச் சான்றிதழ் சொல்கிறது. ஆனால் அது எனக்கு தெரியாது. கொழும்பு பம்பலப்பிட்டியவில் வளர்ந்தது தான் எனக்கு ஞாபகம்.

பம்பலப்பிட்டி சென்மேரீஸ்சில் தான் நான் படித்தேன். சின்ன வயசிலேயே நான் கலையை காதலிக்க தொடங்கிவிட்டேன். எனது பக்கத்து வீட்டு ரேடியோவில் ஒலிபரப்பாகும் பாடல்களை ஏழு வயசிலிருந்தே கேட்டு அதை அப்படியே பாடுவேன். ‘நான் கொண்ட காதல் இவ்வாறு தான்... என்ற கண்டசாலாவின் பாடலை தொடர்ந்து பாடிக்கொண்டிருப்பேன்.

பாடசாலைக்கு சென்றாலும் பாடிக்கொண்டுதான் இருப்பேன். காலையில் சீக்கிரமாகவே பள்ளிக்கூடம் போகும் நான் தாளம் போட நல்ல சத்தம் வர கூடிய மேசை கிடைக்கிறதா என்று தட்டி, தட்டி பார்த்து அதை தேர்ந்தெடுத்து கொள்வேன்.

அப்படி ஒருநாள் காலையில் நான் மேசை தேடும்போது வகுப்பிற்குள் வந்த மரியம்பிள்ளை டீச்சர் என்னைப் பார்த்து விட்டார். பிறகென்ன பிரம்பால் விளாசி தள்ளினார். அவர் அடித்த அடியின் தழும்பு என் முதுகில் நீளமாக படிந்திருந்தது.

வீட்டிற்கு சென்றதும் அம்மாவிடம் சொன்னேன். தன் பிள்ளைக்கு இப்படி அடிச்சிட்டாங்களே என்ற வருத்தம் அம்மாவிற்கு. அந்த நொடியே என்னை அழைத்து வந்து டீச்சரிடம் நியாயம் கேட்டு விட்டு சென்றார்.

அந்த சம்பவம் நேற்று நடந்த மாதிரியே இருக்கு... என்ற முத்தழகு, எனது பாடசாலை நண்பர்களான எட்வட், எந்தனி, மீரா ஆகியோர் என்னை பாட்டுப் பாடச் சொல்லி கேட்பார்கள். நானும் பாடுவேன்.

இப்படி நான் பாட்டு பாடும் செய்தி காட்டுத்தீ மாதிரி பாடசாலை முழுவதும் பரவ எனக்கு பாடசாலை அபிவிருத்தி சங்க கூட்டத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. எனது முதல் மேடை பிரவேசம் சென்மேரிஸ்தான்.

அதன் பிறகு சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்கு பற்றினேன். சரவணமுத்து என்பவர்தான் வானொலி மாமாவாக இருந்தார். அதில், கவிதை, பாட்டு எல்லாம் பாடுவேன். அதற்கு சன்மானமாக எனக்கு எல்லுருண்டையும், தேநீரும் தருவார்கள், அதை சாப்பிட்டு விட்டு வருவேன். அதன் பிறகு எனது அண்ணனின் நண்பரான நாகலிங்கம் ‘மெண்டலின்’ வாசிப்பவர் அவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் ‘மெண்டலின்’ வாசித்தார். நான் அவருக்கு எடுபிடியாக வேலை செய்தேன்.

அவரின் மெண்டலின் பெட்டியை தூக்கிக்கொண்டு அவரின் பின்னால் செல்வேன். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அவர் மெண்டலின் வாசிக்கும்போது நானும் அவருடனே இருப்பேன். இடம் நிரப்பும் நேரங்களில் யாராவது பாட்டு பாடவேண்டும்.

அந்த நேரத்தில் யாரும் இல்லாவிட்டால் எனக்கும் வாய்ப்பு கிடைக்கும். அந்த நேரங்களை சரியாக பயன்படுத்தி அப்படியான சந்தர்ப்பத்தில் நான் பாடிய முதல்பாடல்தான் எனை ஆளும் தேவனே... என்ற பாடல். இதற்கு கே. எம். சவாஹீர் மாஸ்டர் ஆர்மோனியம் வாசித்தார்.
திருமணத்தின் போது...
பிறகு இலங்கையில் மெல்லிசை பாடுவதற்கு கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டது. நான் முதல் ஆளாக விண்ணப்பம் அனுப்பினேன். எனக்கு முதல் சந்தர்ப்பம் கிடைத்தது. மெல்லிசை பாடல்கள் இலங்கையில் ஆரம்பமாவதற்கு காரணமாக இருந்தவர் எச். எம். பி. மொஹிதீன். 1971ல் தான் எனது முதல் மெல்லிசை பாடல் ஒளிப்பதிவானது.

க. கணபதிபிள்ளை பாடல் எழுத ஆர். முத்துசாமி இசையமைத்தார். அன்னை பராசக்தி.... என்ற பாடல் தான் அது ஒரு இனிக்கும் சம்பவம்; என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமும் இதுதான்," என்று தமது பழைய நினைவுகளை மீட்டிப் பார்க்கும் முத்தழகுவிடம்.

‘இளம் வயதில் நீங்கள் எப்படி குறும்பானவரா’ என்றோம். "நான் ரொம்ப சமத்து நான் உண்டு என் வேலை உண்டு என்றுதான் இருப்பேன்.

எனக்கு ரொம்பவும் பிடித்த விசயம், வெள்ளவத்தை பாலத்தில் நின்று மீன் பிடிப்பது. அப்போதிருந்த வெள்ளவத்தை பாலம், இதுவல்ல அது ரொம்பவும் தாழ்வாக இருந்தது. ஸ்கூல் முடிந்து வந்ததும் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு வெள்ளவத்தை பாலத்திற்கு சென்று விடுவேன். அப்போ எனக்கு பதினாறு வயதிருக்கும். நைலான் நூலும் தூண்டியும் ஒரு சதம்தான்.

‘பிடிக்கும் மீன்களை வீட்டிற்கு கொண்டு சென்று பொரித்து சாப்பிடுவது ஒரு தனிச் சுவை. இதை குறும்பு பட்டியலில் சேர்க்ககூடாது, இது ஒரு விளையாட்டு" என்றவர், "நான் ஸ்போர்ட்ஸ்மேன் சிகரெட் தான் குடிப்பேன். ஒரு நாள் சிகரெட் பெட்டியொன்றை வாங்கி எனது சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தேன். நான் அணிந்திருந்தது வெள்ளை சட்டை என்பதால் பாக்கெட்டிலிருந்த சிகரெட் பெட்டி பளிச்சென்று வெளியே தெரிந்தது. அதை கவனித்த எனது தந்தை கடுப்பாகி ‘உனக்கு இப்போ சிகரட் தாண்டா கேடு’ என்று திட்டினார்.

அதன் பிறகு எனது சிகரெட் பழக்கத்திற்கு ‘குட்பை’ சொல்லிவிட்டேன். எனது அப்பா ரொம்பவும் அன்பானவர் எனக்கு காற்சட்டை, தைக்க வெள்ளவத்தையில் டெய்லர் கடை வைத்திருந்த பொன்னம்பலத்திடம் என்னை அழைத்து சென்று அளவு கொடுத்து விட்டு வருவார்.
அம்மா, அப்பா, சகோதரருடன் 
(அமர்ந்திருப்பவர்) முத்தழகு
நான் பெரியவனாகி லும்பிளி மண்டபத்தில் சப்தஸ்வரங்கள் (தனிநபர் கச்சேரி) செய்தேன். அதற்கு வரும் எனது தந்தை இடுப்பு வேட்டி மடிப்பில் அம்மாவின் நகைகளையும், பணத்தையும் பொட்டலமாக கட்டிக்கொண்டு வந்து நிகழ்ச்சி முடியும்வரை எனக்காக காத்திருப்பார். சவுண்ட், பக்க வாத்தியகாரர்கள், மண்டபம் செலவு என்று எல்லா செலவுகளுக்கும் அப்பாதான் பணம் தருவார். எங்கே பணம் போதாமல் போய்விட்டால் அவசரத்திற்கு நகைகள் உதவுமே என்றுதான் அம்மாவின் நகைகளை எடுத்துக்கொண்டு வருவார். இப்படியான அப்பா எல்லோருக்கும் அமைவதில்லை. என்னால் அப்பாவை மறக்கவே முடியாது" என்று, கண்கலங்குகிறார் முத்தழகு.


காதல் அனுபவங்களை பற்றி கேட்டதும் "நிறைய பேர் என்னை காதலிச்சிருப்பாங்க ஆனால் நான் தான் யாரையும் காதலிக்கலை, ஏனென்றால் எனக்கு காதலிக்க நேரமில்லைன்னுதான் சொல்லனும். பாட்டு ஸ்டூடியோ, ஒலிப்பதிவுன்னு ஒரே பிஸி’ ஆனாலும் காதலில்லாமல் ஒருவன் இருந்து விடத்தான் முடியுமா, எனக்கும் காதல் வந்தது. அவள் பெயர் மேரி மொனிக்கா எனது நண்பரின் தங்கை. கொழும்பு- 10ல் தான் அவளின் வீடு இருந்தது. எனது நண்பரை பார்ப்பதற்காகத்தான் அடிக்கடி அந்த வீட்டிற்கு நான் செல்வதுண்டு. அப்போது என் கண்ணில் பட்டவள் தான் மொனிக்கா. பார்த்தவுடனே பத்திகிச்சு காதல் தான்.

அதன் பிறகு அவரின் வீட்டுக்கு சென்றால் எனக்கு ஸ்பெசலாக ‘டீ’ போட்டுத் தருவாள் அது ஒரு விதமான சுவையாக இருந்தது. பிறகு எப்படியாவது இந்த விடயத்தை அவளின் அண்ணனிடம் சொல்லி விட வேண்டுமே என்ற தவிப்பு என்னிடம் இருந்தது. ஆனாலும் நண்பரின் தங்கையை காதலிக்கும் விடயத்தை சொல்ல எனக்கு தைரியம் இல்லை.
1958ல் பாடல் பதிவிற்காக இலங்கை 
ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் 
சென்றிருந்த போது...
ஒருநாள் நானும் நண்பரும் மடுமாதா கோவிலுக்கு போயிருந்தோம். அங்கே சென்றதும் நான் மோனிகாவை காதலிக்கும் விடயம் பற்றி நண்பருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு மாதாவை வணங்கிய பிறகு நண்பரின் கையில் கொடுத்து ‘இதை படித்து பார்த்துவிட்டு உன் முடிவை சொல்லு’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டேன். அதன் பிறகென்ன மடு மாதாவின் ஆணைப்படி நண்பரின் சம்மதத்துடன் எனது வீட்டாரின் விருப்பப்படியும் திருமணம் பம்பலபிட்டி பழைய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு வேலணை வீரசிங்கம், வி.பி. கணேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். அதன் பிறகு பேங்சால் வீதியில் உள்ள ‘லங்கா போட்டோ’ ஸ்டூடியோவில் திருமண போட்டோ பிடித்தோம். ஹனிமூன் கிரீன்லைன் ஹோட்டலில் நடந்தது."
முத்தழகுவின் ஒஹோ என் ஆசை ராதா... பாடல் பற்றி கேட்டதும் முத்தழகுவிற்கு உற்சாகம் தாங்கவில்லை. "அதுவும் மறக்க முடியாத சம்பவம்தான். எனது முதல் திரைப்பட பாடல் திரையில் ஒலித்தபோது நான் உயர உயர பறப்பது போன்று ஒரு சுகம் எனக்குள் உருவானது.

இந்த பாடலுக்கான வாய்ப்பை எனக்கு வழங்கியவர் வி.பி. கணேசனின் துணைவியார்தான். எமது பாடல்களை அதிகமாக வானொலியில் கேட்டு வந்த அவர் ‘புதிய காற்று’ படத்தின் தயாரிப்பு வேலைகள் நடந்தபோது படத்தில் என்னை பாட வைத்தால் நன்றாக இருக்குமே என்று வி.பி. கணேசனிடம் கூறி இருக்கிறார். அதன் பிறகுதான் எனக்கு அழைப்பு வந்தது. நடிகர் எஸ். என். தனரெத்தினம் எனது வீட்டிற்கு வந்து என்னை அழைத்து கொண்டு போனார். கிருளரோட்டில் ‘சிலோன் ஸ்டூடியோ’ என்ற பெயரில் சினிமா படப்பிடிப்பு தளம் ஒன்று இருந்தது. (இப்போது அது அங்கு இல்லை அந்த இடத்தில் இப்போது ஒரு பெட்டறி கம்பனி இருக்கிறது) அங்குள்ள ஒலிப்பதிவு கூடத்தில் தான் பாடல் பதிவானது.
சென்னை ராஜ் டிவியில் பாடல் 
பதிவு நடைபெற்றபோது ஸ்ருதி ஜீவராஜன் 
இசைக்குழுவினருடன்

ஈழத்து ரத்தினம் எழுதிய பாடலுக்கு டி.எப். லத்தீப் இசையமைக்க நான் பாடினேன். முதல் ரெக்காடிங்கில் புதிய காற்று படத்தின் இரண்டாவது நாயகனுக்காகத்தான் பாடினேன். அந்தப் பாடலை கேட்ட வி.பி. கணேசன் தனக்கு இவரின் குரலில் ஒரு பாடல் வேண்டும் என்று கேட்க அவருக்காகவும் ஒரு பாடலை பாடினேன். மறக்க முடியாத நபர்? ‘எனது மாமா இளஞ்செழியன், இவர்தான் இலங்கை சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் முன்னோடியாக திகழ்ந்தவர். இந்தப் பட்டியலில் நான் எம். எஸ். செல்வராஜா மாஸ்டரையும் குறிப்பிடவேண்டும். அவர் இசையமைத்த பாடல்கள் தான் என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன." என்று தன்னை உச்சிக்கு ஏற்றிவிட்டவரை திரும்பி பார்க்கிறார் முத்தழகு.
முத்தழகு கடந்து வந்த வாழ்க்கையை பற்றி சில வார்த்தைகள் கேட்டோம். "இன்னமும் நான் மிதி சைக்கிளில் தான் பயணிக்கிறேன். சாதாரண வாழ்க்கைதான் ஆனால் இனிமையானது. குடும்பத்தில் முழுமையான மகிழ்ச்சி இருந்தால் ஒருவன் வாழ்க்கையில் வெற்றிபெற்று விட்டான் என்றுதான் அர்த்தம். நானும் வெற்றிபெற்றுவிட்டேன்." வாழ்க்கையில் எதையாவது தவறவிட்டிருக்கியர்களா?....
"இல்லை..." என்ற முத்தழகு கொஞ்சம் தயங்கியபடி "நான் ஒன்று சொல்வேன்...இது என் தகுதிக்கு மீறிய ஆசைதான். ஆனால் ஆசைப்பட்டுவிட்டேன். எனக்கு ஒரு தியேட்டர் கட்டி அதில் சினிமா படம் ஓட்டனும்ங்கிறது என் நீண்டகால ஆசை. கனவு என்றும் சொல்லலாம். ஆனால் இன்றுவரை அது நிறைவேறவில்லை.

என்ன செய்ய எனக்கும் வயதாகிவிட்டது. அந்த ஆசை நிறைவேறாமலே.... முடிந்துவிடும் போலிருக்கிறது" என்று பெருமூச்சுவிட்ட முத்தழகுவிடமிருந்து விடைபெற்றோம். நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் என்று ஒருவன் தேவைப்படமாட்டான் என்பது முத்தழகுவிற்கு புரிந்திருக்கும்.

Sunday, November 27, 2016

படைப்பாளர் கோகிலா மகேந்திரனின் எண்ணப் பறவை சிறகடித்து

நேர்காணல்- மணி ஸ்ரீகாந்தன்

கலை இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட பெயர் கோகிலா மகேந்திரன். கல்வி உலகிலும், ஆக்க இலக்கிய உலகிலும் உளவளத் துறையிலும் புகழ்பெற்று விளங்குபவர். இந்த விஞ்ஞான ஆசிரியை, ஆற்றல் மிக்க அதிபரும், திறமைமிக்க கல்வி அதிகாரியும் கூட. நாடறிந்த நாவல், சிறுகதை, நாடக எழுத்தாளர், பண்பட்ட நடிகை நெறியாளர், உள்ளங்கவரும் பேச்சாளர் ஆரோக்கியமான விமர்சகர்... சொல்லிக் கொண்டே போகலாம் அத்தனை சமர்த்தர்.
பல்துறை பரிமாணங்களைக் கொண்ட இவர் தற்போதும் படைப்பிலக்கியத்தில் தொடர்ந்து ஈடுபாடுகாட்டி வருகிறார். வயதானதும் பலர் ஓய்ந்து விடுகிறார்கள். சிலர்தான் அதே வீரியத்துடன் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு விசேட ஆற்றலும் துணிச்சலும் வேண்டும். ஏனெனில் வயது செல்லச் செல்ல காலமும் பல சுமைகளைக் கொண்டு வந்து போகிற பாதையில் தடைகளையும் அயர்ச்சியையும் ஏற்படுத்தும்.

செங்கை ஆழியான், தெளிவத்தை ஜோசப் போன்ற சிலர் மட்டுமே இவற்றை ஜீரணிக்கிறார்கள். இந்தக் குறிப்பிடத்தக்க படைப்பாளர்களில் கோகிலாவும் ஒருவர். கலைத்துறையில் வெகு ஆர்வம் கொண்டிருக்கும் இவருக்கு உளவியலும் கைவரும் என்பது ஒரு ‘பிளஸ் பொயிண்ட்’

வெள்ளவத்தை ‘பஸல்ஸ்’ லேனில் அமைந்திருக்கும் அவரின் இல்லத்தில் அவரை சந்தித்தோம். அந்த கால நினைவுகள் என்றதுமே உளவியல் புரிந்த அவருக்கும் அத்தனை மகிழ்ச்சி. தமது பழைய பசுமையான நினைவுகளை மீட்டிப் பார்ப்பதென்பது அனைவருக்கும் மகிழ்ச்சியான விடயம்தானே!

தமது அந்தக்கால நினைவுகளுக்குள் நுழைகிறார் கோகிலா.

“அப்போது நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வகுப்பில் புவனசிங்கம் என்று ஒரு மாணவன் இருந்தான் பல் மிதந்த (உதடுகளுக்கு வெளியே பல் துருத்திக் கொண்டிருக்கும்) கருப்புப் பொடியன். வகுப்பில் அவனை எல்லோரும் ‘பூனை’ என்றுதான் அழைப்பார்கள். எனக்கும் அவனுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.

நான் படிப்பில் சுட்டி. தேர்வில் முதலாவதாக வருவேன். அவனோ கடைசிப் பக்கத்தில் முதலாவதாக வருவான். அதனாலோ என்னவோ எனக்குப் பின்னால் இருந்து சேஷ்டைகள் செய்வான்.
மூன்று வயது குழந்தையாக.

அப்படித்தான் ஒருநாள் எனது வெள்ளை சீருடையில் மை தெளித்து விட்டான். (அது போல் பொயின்ட் பேனை வராத, மை பேனா காலம்). எனக்கு ஆத்திரமாக வந்தது. ஆனாலும் நான் வகுப்பாசிரியர்களிடம் அவனைக் காட்டிக் கொடுக்கவில்லை. ஒருநாள் புவனசிங்கத்தைப் பார்த்து ‘ஏய் பூனை! இனிமேல் என்னோடு சேட்டை விட்டால் நீ பிறகு கஷ்டப்பட வேண்டிவரும் என்று எச்சரித்தேன். அதன்பிறகு கொஞ்ச காலமாக என்னிடம் ‘பூனை’ சேட்டைவிடவில்லை.

“அடுத்த ஆண்டு நான் ஏழாம் வகுப்பிற்குச் சென்றதும் பூனையும் வந்துவிட்டான். ஏழாம் வகுப்பில் இன்னொரு ஆசிரியையின் மகன் இருந்தான். ரொம்பவும் அழகான பையன். அவன் தான் எங்கள் வகுப்பின் போய்ஸ் மொனிற்றர். நான் பெண்களுக்கான மொனிற்றர்.
அது தவிர அவனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆயினும் ‘பூனை’ அவனுடனும் வேறு சில பெரிய வகுப்பு மாணவர்களுடனும் சேர்ந்துகொண்டு நான் போகுமிடமெல்லாம் என் பின்னாலேயே வந்து போய்ஸ் மொனிற்றர் பெயரைச் சொல்லிக் கூப்பிட ஆரம்பித்தான்.

சிண்டு முடிக்கிற வேலை என்பதால் என்னால் அதற்கு மேலும் பொறுமை காக்க முடியவில்லை. எனது வீட்டில் இதைச் சொல்லி அழுதேன். அப்போது எங்கள் வகுப்பாசிரியையாக இருந்தவர் திருமதி பொன்னம்பலம் டீச்சர். ரொம்பவும் கண்டிப்பானவர்.

எனது குண இயல்புகள் தெரிந்ததால் அப்பா டீச்சரின் வீட்டிற்குச் சென்று சொல்லியிருக்க வேண்டும். அடுத்த நாள் வகுப்பில் விசாரணை நடக்கும் என்று நான் பயந்து கொண்டிருந்தேன். நான் சாட்சி சொல்ல வேண்டும்! ஆனால் பொன்னம்பலம் டீச்சர் எந்த விசாரணையும் செய்யவில்லை.

என்ன மாயம் செய்தாலோ தெரியவில்லை, அன்றிலிருந்து ‘பூனை’ எனக்குத் தொல்லை தருவதை நிறுத்திவிட்டான். பிற்காலத்தில் நான் எழுதிய ‘பிறழும் நெறிகள்’ சிறுகதையின் கருப்பொருள் ‘பூனை’ என்று கொள்ளலாம்” என்று தனது பள்ளிப் பருவத்தில் வழி மறித்த பூனை பற்றி விபரித்த கோகிலா மகேந்திரனிடம் அவரின் பிறந்த ஊர் பற்றி கேட்டோம்.
கோகிலா (அமர்ந்திருப்பவர்)
பாடசாலை நண்பி கமலாவுடன்.

“காலம் குறிப்பிட்டு சொல்ல முடியாத ஆதி நாளில் எங்கள் கிராமத்தில் வாழ்ந்த ஒரு பெரியவருக்கு கண்பார்வை குறைந்து போயிற்றாம். அவர் எங்கள் ஊர் வைரவ பெருமானை மெய்யுருகி வணங்கி வர அவருக்குத் திரும்பவும் பார்வை கிடைத்ததாம் என்பது எங்கள் ஊரில் பரம்பரை பரம்பரையாக சொல்லி வரும்கதை. அதன் பிறகுதான் எங்கள் குல தெய்வத்திற்கு விழித்தீட்டி ஞான வைரவர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

விழித்தீட்டியும், ஒரே கருத்துடைய பெயர்களே என்று அப்பா சொல்லுவார். அந்த விழிச்சிட்டி கிராமத்தில் தான் நான் பிறந்தேன். யாழ்ப்பாணத்தின் வட பகுதியில் அமைந்திருந்த  சிறிய ஊர்களில் ஒன்றுதான் எங்கள் ஊர். தெல்லிப்பளை துர்கா, மகஜனாக் கல்லூரி, யூனியன் கல்லூரி, போன்றவைதான் தெல்லிப்பளையின் வி. ஐ. பி. பெயர்கள்.

அதோடு முக்கியமாக எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் ஊர் என்பதும் தெல்லிப்பளைக்கு பெருமைதான். 1990 வரையும் நான் விழிச்சிட்டியில்தான் வளர்ந்தேன்; வாழ்ந்தேன். அதன்பிறகு என் கிராமம் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினால் விழுங்கப்பட்டு விட்டதால் ‘இல்லாத’ கிராமம் ஆகிவிட்டது.

என் அப்பா செல்லையா சிவசுப்பிரமணியம் தெல்லிப்பளை சைவபிரகாச வித்தியாசாலையில் அதிபராக இருந்தார். நான் எழுதிய நகுலகிரிப் புராண உரை நூலுக்காக இலங்கை அரசின் சாகித்திய விருது பெற்றவர். பண்ணிசை, பாட்டு கீர்த்தனைகள் போன்றவற்றில் பாண்டித்தியம் பெற்றவர். தான் கற்பித்த மாணவர்களால் வெள்ளைவாத்தியார், புதுவாத்தியார் என்றும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்பட்டார்.

“அம்மா செல்லமுத்து சிவசுப்பிரமணியம் அதிகம் படிக்காதவர். ஆயினும் நல்ல விவேகி. அவர் அப்பாவை திருமணம் செய்த போது அவருக்கு 18 வயது. நான் பிறந்த போது அவருக்கு 35 வயது.

நீண்ட காலமாகக் குழந்தை இல்லை என்றாலும் கூட அவர்கள் மருத்துவ நிபுணர்கள் யாரையும் சென்று பார்த்ததில்லை. 17 வருடம் கிரீமலை நகுலேஸ்வரப் பெருமானை வணங்கியதால் கிடைத்த செல்வம் என்பதே அவர்களின் நம்பிக்கை. குடும்பத்தில் நான் மட்டுமே என்பதால் அன்பிற்கும், பாசத்திற்கும் குறைவே இல்லை. எனது அம்மம்மாவை நான் ‘இத்தா’ என்றுதான் அழைப்பேன்.
திருமண பதிவில்,பெற்றோருடன்

அவரும் எனது சின்னமாவும் (அம்மாவின் இளைய தங்கை) எம்மோடுதான் இருந்தார்கள். அப்பா பாடசாலை அதிபர் என்பதால் பொருளாதார பிரச்சினையும் இருக்கவில்லை” என்று தமது பழைய கருப்பு வெள்ளை காலத்தை ரீ- பிளே செய்த கோகிலா, மேலும் தொடர்ந்தார்.

“எங்கள் வீட்டின் தெற்கு பக்கம் ஒரு மாஞ்சோலை. அங்கு சிறகடித்து பறந்து வரும் பறவைகளோடு ஏதேதோ பாடல்களையெல்லாம் மனசுக்குள் பாடிக்கொண்டே விளையாடுவதே எனக்கு வேலை. வீட்டின் கிழக்குப்புறம் வாழைத்தோட்டமும், வெற்றிலைத் தோட்டமும் அமைந்திருந்தது.

எப்போதும் இறைத்து ஈரமாகக் கிடக்கும் வெற்றிலைக் கொடிக்கு ஆதாரமாக நடப்படும் முள் முருங்கை மரங்களின் குளிர்மை நெஞ்சை அள்ளும். வாழைத் தோட்டத்திலிருந்து கொண்டுவரப்படும் வாழைப்பூ மதிய சாப்பாட்டுக்கு உணவாகும்’ என்று சொன்னவர், அம்மா எப்படி வாழைப்பூவை அரிவார் என்பதை கண்கள் மினுமினுக்க விவரித்தார்.

“அம்மா வாழைப்பூ அரிவது ஒரு தனிக்கலை. குதிக்காலில் குந்தியிருந்து வலது முழங்கால் தெரியும்படி சேலையை இழுத்துவிட்டுக் கொள்வார். வாழைப்பூவை வலது முழங்காலோடு இடது கையில் அனைத்துப் பிடித்துக் காம்புச் செத்தகத்தை மரக்காலில் தீட்டி அரியத் தொடங்கினால் ஐந்து நிமிடத்தில் கீழே உள்ள ஓலைத் தட்டு நிரம்பி விடும். பிறகு அதற்குள் உப்புத்தூள் போட்டு கும்மிப்பிழிந்து...”
அன்னையின் வாழைப்பூ சமையலில் அவர் மனம் மூழ்கி நனைந்து போகிறது.

“அம்மாவின் சமையல் ருசி.... நினைத்தாலே நா ஊறும். இது தவிர ‘காவோலை போட்டுப் பெட்டி இழைப்பது, பாய் இழைப்பது, நீற்றுப்பெட்டி இழைப்பது போன்றவற்றில் அம்மா கெட்டிக்காரி. இவை எல்லா அம்மாவுடன் முடிந்து போய்விட்ட கலைகள்...”

“பக்கத்து வீட்டு திருமகள், முன்வீட்டுத் தேவி மச்சாள், சத்தியமூர்த்தி இவர்கள் வந்தால் வீட்டு முற்றத்தில் கிளிக்கோடு, மாபிள்அடி, கொக்கான் வெட்டு, ஊஞ்சலாட்டம் என்று விளையாட்டு அனல் பறக்கும். அம்மா தனது மேற் பார்வையின்றி என்னை வேறு விடுகளுக்கு சென்று விளையாட அனுமதிக்க மாட்டார். அப்படி நான் செல்ல விரும்பினால் தானும் வந்து விடுவார். எனவே எங்கள் வீட்டு முற்றம்தான் விளையாட்டின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இடமாகத் திகழ்ந்தது என்று கூறியவரிடம் பாலர் பருவ குறும்பு ஏதாவது ஞாபகத்தில் இருக்கிறதா என்று கேட் டோம்.
அன்றும்,இன்றும்

“பெரிதாக இல்லை ஆனால் நான் ரொம்பவும் விளையாட்டுப் பிள்ளை. எங்களது காலத்தில் முன்பள்ளி கிடையாது. நேரே அரிவரி வகுப்புக்குத்தான் போக வேண்டும். என் அயல்வீட்டில் ‘பரமேஸ்வரன் என்ற பையன். எனக்கு மச்சான் முறை. இருவருக்கும் ஒரே வயது. விழிச்சிட்டி சிவஞானம் வித்தியாசாலையில் ஆரம்ப கல்விக்காக சென்றோம். அங்கிருந்த அதிபர் சங்கரப்பிள்ளை எங்கள் உறவுக்காரர். அப்புறமென்ன, நாங்கள் இருவரும் வகுப்பு பக்கம் போவதே இல்லை.

பாடசாலை முழுவதும் ஓடி விளையாடுவோம். முடிந்தால் அதிபர் அலுவலக அறையில் ஒளிந்து பிடித்து விளையாடுவோம். இடைவேளை வந்ததும் ‘இத்தா’ கொண்டுவரும் தோடம்பழச் சாற்றை புளியடிக்கு வந்து குடிக்க வேண்டியது; திரும்பவும் விளையாடிவிட்டு வீட்டுக்கு வர வேண்டியது. என்பதாக அங்கே பொழுது கழிந்தது. அந்த வகுப்பில் ஒருநாள் கூட ஒழுங்காகப் படித்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.

ஆயினும் அந்த வருட முடிவில் இரண்டு விடயங்கள் நடந்தன. பரமேஸ்வரனுக்கு காய்ச்சல் வந்து பூனாய் ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்து போனான். அதன் பின்னரேயே நான் வகுப்பில் ஒழுங்காக இருக்கத் தொடங்கினேன்.

வருட இறுதி பரீட்சையில் டபுள் புரேமோஷன் கொடுத்து இரண்டாம் வகுப்பில் தன்னை அனுமதித்தார்கள்” என்று சொல்லும் கோகிலா, தமது சந்தோஷமான அந்த நாட்களில் நடைபெற்ற துலா இறைப்பு பற்றியும் மெய் சிலிர்க்க கூறுகிறார்.

அதிகாலை வேளையில் துலா மூலமாக இறைப்பு நடக்கும். அப்பாவும் ஆசையப் புவும் சேர்ந்து இறைப்பார்கள். துலாவில் நிற்பவர் தேவார திருவாசகங்களை பன்னுடன் பாடுவார். நான் அதைக் கேட்டுக்கொண்டே வாய்க்காலில் வரும் தண்ணீர் மண்ணில் வடைசுட்டு விளையாடுவேன். பிற்காலத்தில் இப்பாடல்கள் எந்தப் பிரயத்தனமும் இன்றி எனக்கு மனப்பாடமாயின.

இறைப்பு முடிந்ததும் அப்பா குளிப்பார். அப்போது என்னையும் கூப்பிடுவார். நானும் சென்று குளிப்பேன். அப்படி நான் குளித்து முடியும் வரையும் எனக்குத் திருக்குறள் சொல்லிக் கொடுப்பார். அதை நான் திருப்பிச் சொல்ல வேண்டும். அதன் பிறகு நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது விவேகானந்த சபை நடத்திய திருக்குறள் போட்டியில் மிகக் குறைந்த வயதில் அதிகூடிய குறள்களை மனப்பாடம் செய்ததற்காக எனக்கு விஷேட பரிசு கிடைத்தது. அப்போது முதன் முதலாக எனது பெயரும், புகைப்படமும் வீரகேசரியில் வெளியாகி இருந்தது. பேப்பரை வீட்டுக்கு வாங்கி வந்த அப்பா என்னைக் கெட்டிக்காரி என்று பாராட்டினார். இது இன்றும் பசுமையாக என் நினைவில் நின்று தித்திக்கிறது”

“தரம் எட்டில் படிக்கும் போதுதான் நான் பருவமடைந்தேன். ‘பூப்பெய்துவது’ தொடர்பாக எந்த விளக்கமும் எனக்குத் தெரியாது. யாரும் சொல்லித் தரவுமில்லை. ஜூன் மாதத்தில் ஒரு காலை நேரம். எனது உடலில் ஒரு மாற்றம் நேர்ந்திருப்பதை அறிந்தேன். ஏதேனும் சிறுநீர் வருத்தமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அம்மாவிடம் சொன்னால் அவ ஆஸ்பத்திரிக்கு அழைச் சிட்டு போவா அங்கு எனக்கு ஊசி போடுவாங்க என்ற பயத்தால் அம்மாவிடம் இதை சொல்லாமல் பாடசாலைக்கு சென்றுவிட்டேன். அங்கே சென்றதும் எனது யூனிபோர்ம் பழுதடைந்துவிட்டது.

விஷயம் வித்தியாசமாகப்படவே என் சினேகிதி ‘இந்து’விடம் சொன்னேன். ‘அய்யோ கோகிலா நீங்கள் ஏஜ் அற்றேன் பண்ணிட்டீங்க’ என்றா. அப்போது ஆங்கிலப் பாடம் எடுக்க ஜெயரட்ணம் ஆசிரியர் வந்து விட்டார். அவர் வந்ததும் என்னை எழுப்பி வாசிக்க சொல்லிவிட்டார். நான் நன்றாக வாசிப்பேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு பின் ஆசனங்களில் போய்ஸ் இருக்கிறார்கள்.
திடீரென்று இந்து பக்கவாட்டில் திரும்பி வாசியுங்கள் என்று ஒரு ஐடியா சொன் னாள். அதன்படியே எழும்பி வாசித்து தப்பிவிட்டேன். பிறகு இடைவேளையின் போது என்னை ஹோம் சயன்ஸ் ரூமுக்கு அனுப்பி விட அங்கிருந்து மிஸ் சங்கரப்பிள்ளை டீச்சர் என்னை காரில் வீட்டுக்குக் கூட்டிச் சென்று வாழ்த்தி விட்டுச் சென்றா. வீட்டில் அம்மாவிடம் நல்லா பேச்சு வாங்கினேன்.

எனக்கு விழிப்புணர்வு தராதது யாருடைய பிழை” என்று கேட்கும் கோகிலா, தான் கல்விகற்ற மகாஜனா கல்லூரி பற்றி இப்படிச் சொல்கிறார்.

“மகாஜனா தான் நான் வளர்வதற்கு முக்கிய பசளை இட்ட நிலம். பேச்சு, சிறுகதை, நாடகம், கவிதை என்று எல்லாத்துறைக்கும் என்னை பயிற்றுவித்து வெற்றி பெறச் செய்த அன்னை பூமி” என்று மெய்சிலிக்கிறார் கோகிலா.

கோகிலா மகேந்திரனுக்கு பிடிக்காத விசயம் சமையல் தானாம். “எனக்கு சமைக்கப் பிடிக்காது.
இந்தப் பழக்கம் அன்றிலிருந்து இன்றுவரை நீடிக்கிறது. சமையலறைக்குள் நுழைந்தால் எப்போ இந்த வேலையை முடி த்து விட்டு வெளியே வருவேன் என்றுதான் இருக்கும்”

காதல் பற்றி கேட்டதற்கு ‘காதலித்தது ஒருவரை. அவரையே கல்யாணம் செய்து கொண்டேன் என்று முடித்துக் கொண்டார். தெல்லிப்பளை வீட்டில்தான் திருமணம் நடந்ததாம். திருமணத்திற்கு அரசியல் தலைவர்களான ஸ்ரீபாஸ் கரன், திருமதி பாஸ்கரன், மற்றும் தங்கம்மா அப்பாக்குட்டி உள்ளிட்ட பலர் வந்திருந்தார்களாம்.

எங்கள் குடும்ப சொத்துக்கள் அனைத்துமே தெல்லிப்பளைக்குள் மட்டுமே இருக்கிறது. இன்று அவற்றை எங்களால் அனுபவிக்க முடியாத நிலை என்று நினைத்து மனம் வருந்தும் கோகிலா மகேந்திரனிடமிருந்து விடை பெற்றோம்.

Friday, November 25, 2016

FACE BOOK மசாலா-14

கலாநிதி பிரதாப் ராமானுஜம் பேசுகிறார்...

நேர்காணல்- மணி ஸ்ரீகாந்தன்

இலங்கை அரச நிர்வாக சேவையாளரான பிரதாப் ராமானுஜம்தான் அமைச்சுச் செயலாளராகப் பதவி வகித்த ஒரே மலையகத் தமிழராவார்.ஓய்வு பெற்ற நிலையில் அவ் இடம் இப்போது வெற்றிடமாகவே உள்ளது.
இவரது தந்தையார் தேசிகர் ராமானுஜம் ஒரு பத்திரிகையாளராக இலங்கை வந்து தோட்டத் தொழிலாளர்களின் நலன்களுக்காக தன்னலம் கருதாது போராடி வந்ததோடு சௌமியமூர்த்தி தொண்டமானின் நம்பிக்கைக்குரிய தோழராகவும் செயற்பட்டு வந்தார்.அவர் வழியில்,அரச நிர்வாக உயர் உத்தியோகத்தர் என்ற ரீதியாக பல சேவைகளை மலையக மக்களுக்காக ஆற்றி வந்திருக்கிறார்.ஒரு தமிழ் அரச உயர் அதிகாரியாக சேவையாற்றிய பிரதாப்பின் வாழ்க்கை அனுபவங்களை தமிழ் வம்பன் வாசகர்கள் படித்து அனுபவிக்க….


“எனது பெயர் பிரதாபன். அப்பா தேசிக ராமானுஜம். அம்மா சரோஜினி. அப்பா தேசபக்தன் பத்திரிகையிலும், பிறகு வீரகேசரி பத்திரிகையிலும் பணியாற்றினார். எனது குடும்பத்தில் நான் உட்பட மொத்தம் நான்கு பேர். அதில் நான் மூன்றாவது.
இளமையில்…

நானும் எனது சகோதரர்களும் தமிழ்நாட்டில் தாம்பரத்தில்தான் பிறந்தோம். அம்மா பிரசவத்திற்கு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிடுவாள். அதனால் நான் அங்கேதான் பிறந்தேன். பிறந்து மூன்று வாரத்திற்கு பிறகு என்னை தூக்கிக் கொண்டு அம்மா இலங்கைக்கு வந்துவிட்டார். அக்காலத்தில் இந்தியாவுக்கான போக்குவரத்து மிகவும் சாதாரணமானது. இலகுவானது. கப்பலில்தான் பயணம், தாம்பரத்திற்கு இங்கேயே டிக்கட் வாங்கிவிடலாம். அதேபோல் சென்னையிலேயே கொழும்புக்கு டிக்கட் வாங்கி விடலாம். நான் பிறந்த தாம்பரத்தில் உள்ள அந்த வீடு வீதி அபிவிருத்தியின் போது இடிக்கப்பட்டுவிட்டது. இப்போது ஒரு சிறிய அறை மட்டுமே இருக்கிறது. அப்பா கண்டியில் ஒரு அச்சகம் வைத்திருந்தார். அதனால் ஆரம்பத்தில் அஸ்கிரியவில்தான் எங்கள் வீடு இருந்தது.

அதற்குப் பிறகு கந்த வீதி, காசல் வீதி, பேராதனை கட்டுக்கல என்று எமது வதிவிடம் மாறிக்கொண்டே இருந்தது.” என்று தனது பூர்வீகம் பற்றி கூறிய ராமானுஜத்திடம் முதல் பாடசாலை பிரவேசம் பற்றி கேட்டோம்.

“என்னை நாலு வயசிலேயே பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார்கள். என்னை படிக்க வைப்பதில் அதிகம் ஆர்வம் காட்டியவர் என் அம்மாதான். அண்ணனை ஒரு கையில் பிடித்துக்கொண்டும் என்னை ஒரு கையில் தூக்கிக் கொண்டும் பாடசாலைக்கு என்னை அழைத்துச் சென்ற அந்த பசுமையான நினைவுகள் அப்படியே என் நெஞ்சில் நிறைந்துள்ளன.

எங்கள் வீட்டிலிருந்து ஒரு ஐநூறு யார் தூரத்தில் தான் கண்டி திருத்துவக் கல்லூரி அமைந்திருந்து. அந்தப் பள்ளியில் எனக்கு அகரம் எழுத கற்பித்த ஆசிரியர் திருமதி ஹேஸ்டிங் என்பது ஓரளவு ஞாபகத்தில் இருக்கிறது. அங்கே என்னோடு மகாதேவன் செல்லதுரை, அஜித் சில்வா, பிரின்ஸ் நாயகம், ரஞ்சன் எதிரிசிங்க என்று எனக்கு நண்பர்கள் இருந்தார்கள்.

என் அண்ணன் படிப்பில் கெட்டிக்காரர். ஆனால் ரொம்பவும் சாதுவானவர். நான் எப்படியாவது படித்து வகுப்பில் பாஸாகிவிடுவேன். ஆனால் ரொம்பவும் சுட்டி, யார் சொல்வதையும் கேட்கமாட்டேன். எங்க வீடு பிரதான வீதியின் ஓரத்தில் தான் இருந்தது. என்னை வீட்டின் ஓரத்திலேயே விளையாடும் படி அம்மா சொல்வார். ஆனால் எனக்கு அந்த ரோட்டில் வாகனங்கள் வரும்போது அங்கும், இங்கும் மாறி மாறி ஓடுவது தான் ரொம்பவும் பிடிக்கும். ஒரு நாள் அம்மா வெளியே போகும் போது ‘ரோட்டுப் பக்கமாகச் செல்லாதே இங்கேயே இரு’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டுப் போனார்.
குழந்தையாக முதலாவதாக 
இருப்பவர்

நானும் அம்மாவின் தலை மறையும் வரை அந்த இடத்திலேயே இருந்துவிட்டு அடுத்த நிமிடமே எனது ஆட்டத்தை தொடங்கிவிட்டேன். பாதையின் அந்தப் பக்கமும் இந்த பக்கமும் நான் ஓடிக்கொண்டிருந்தேன். சில நிமிடங்களுக்கு பிறகு ஒரு கார் வர அதற்கு முன்பாக நான் பாதை மாற வேகமாக வந்த அந்தக் கார் என் மீது மோதாமலிருக்க பிரேக் போட்டதில் கார் நிலைதடுமாறி பக்கத்திலிருந்த ஒரு வீட்டின் மீது டமார் என்று மோதி நின்றது. அந்த நேரம் பார்த்து என் அம்மாவும் அங்கே வர ஆத்திரப்பட்ட அந்தக் கார்க்காரர் என்னைப் பற்றி அம்மாவிடம் புகார் சொன்னார். வெளியே போய் களைப்புடன் வந்திருந்த அம்மா, கையிலிருந்த குடை முறியும் மட்டும் என்னை அடித்தார். அந்த குடையையும் நான் அம்மாவிடம் வாங்கிய அந்த அடியையும் மறக்கவே முடியாது. பாடசாலையில் குழப்படி செய்தால் வாத்தியார் காதைப் பிடித்து ஒரு அடி உயரத்திற்கு தூக்கி கீழே வைப்பார். உயிர்போய் திரும்ப வரும்.
அப்பா,அம்மா,சகோதரர்கள் ஜெயபிரகாஷ்,மோகன் 
மற்றும் சகோதரி அருணா இரண்டாவதாக ராமானுஜம்.
பாடசாலையில் அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிப்பார்கள். வகுப்பில் அவர்கள் முதல் ஆளாக வருவார்கள். ஆனால் நான் முதல் ஆளாக வரமாட்டேன் ஆனால் பரீட்சையில் பாஸாகிவிடுவேன். எமக்கு படிப்பித்த ஆசிரியர்களில் சகாயம், ஜேக்கப் உள்ளிட்டவர்களை மறக்க முடியாது. இதில் ஜேக்கப் என்னைப் பற்றி கூறியது இன்றும் என் ஞாபகத்தில் அப்படியே இருக்கிறது. நான் பிராமண குலத்தைச் சேர்ந்தவன். பிராமண முறைப்படி நன்றாகப் படித்தவர்களை ப(கி)ட்டாச்சாரி என்றும் படிக்காதவர்களை பட்டாச்சாரி என்றும் குறிப்பிடுவார்கள். அதனால் என்னை ப(கி)ட்டாச்சாரி என்றுதான் அவர் அழைப்பார். பிறகு அந்த வாத்தியார் ஓய்வுபெற்றுவிட்டார். பிறகு நான் படித்து டிகிரி முடித்து முதல் ஆளாக தேர்வான பிறகு எனக்கு ஒரு கடிதம் வந்தது.

அதை ஆசிரியர் ஜேக்கப் எழுதியிருந்தார். அதில், நீயும் ப(கி)ட்டாச்சாரியாக ஒரு நாள் வருவாய் என்று எனக்கு அப்போதே தெரியும் என்று குறிப்பிட்டிருந்தார்."

என்று தமது பள்ளி வாழ்க்கையைப் பற்றி விபரித்தவரிடம் மேடைநாடகங்களில் நடித்திருக்கிறீர்களா என்று கேட்டோம்.
"பாடசாலையில் ஒரு நாடகம் நடித்தேன். மூன்று கைதிகளின் வாழ்க்கையைப் பற்றிய கதை. அதில் நான் ஒரு கைதியாக நடித்தேன். ஒரு காட்சியில் எனக்கு சொல்லித் தந்த வசனம் மறந்துபோய் விட்டது. எனவே என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தேன். நான் அப்படியே பயத்தில் விழி பிதுங்கி நிற்க பார்வையாளர்கள் கைதட்டி சிரித்தார்கள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, பிறகு சிறிது நேரத்தில் திரையை மூடினார்கள். அது போட்டிக்காக நடத்தப்பட்ட நாடகம் எனக்கு நடிப்பு வராததால் அது தேர்வாகவில்லை. அதற்கு பிறகு பேராதனை குறிஞ்சிக் குமரன் ஆலய கட்டுமானப் பணிக்காக ஒரு நாடகம் போட்டோம். எங்களுக்குப் படிப்பித்த ஒரு தமிழாசிரியரைப் பற்றியும் கூற வேண்டும். நவாலியூர் நா. செல்லத்துரை ஒரு நாடகப் பிரியர். எப்போதும் நாடகம் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். அவர் வகுப்புக்கு வந்துவிட்டால், சக மாணவர்கள் ‘சேர் அந்த நாடகம் எப்படி?’ என்று கேட்டால் போதும் அங்கேயே அந்த நாடக வசனத்தை பேசி நடித்தும் காட்டுவார்’" என்ற ராமானுஜத்திடம் சின்ன வயசில் சினிமா பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டோம்.
திருமணப்படம்
“நான் படித்த பாடசாலைக்கு பக்கத்தில்தான் ஓடியன் தியேட்டர் இருந்தது. பாடசாலை நாட்களில் வகுப்புக்கு கட் அடித்து விட்டு படம் பார்த்ததுதான் அதிகம். நானும் எனது நண்பர் மகாதேவனும், பாடசாலை மதில் மேல் ஏறிக்குதித்து ஓடியனில் படம் பார்த்திருக்கிறோம். நாங்கள் ஆங்கிலப் படங்களைத்தான் அதிகமாக பார்த்திருப்போம். அம்மாவுடன் தமிழ்ப் பாடங்களும் பார்க்கப் போயிருக்கிறேன். எனக்கு சிவாஜி என்றால் ரொம்ப பிடிக்கும்” என்று தன் நினைவுகளை மீட்டினார் ராமானுஜம்.

காதல் அனுபவங்கள் பற்றி ராமானுஜத்திடம் கேட்டோம்.

“படிக்கின்ற காலத்தில் எத்தனையோ பெண்களிடம் பேசி இருக்கிறேன். ஆனால் அதற்குப் பெயர் காதல் அல்ல. நான் காதல் வலையில் விழவில்லை. எத்தனையோ பெண்கள் எனக்கு கண் ஜாடை காட்டியிருக்கிறார்கள். ஆனால் நான் சிக்கவில்லை. அதற்கு ஒரு காரணமும் இருந்தது. நான் ஆசாரமான ஒரு பிராமண குலத்து பையன். அதனால் பெண்களுக்கும் என் மீது மரியாதைதான் ஏற்பட்டது. நானும் என் குலப் பெருமையை காப்பாற்ற எந்தக் காதல் வலையிலும் விழாமல் நின்றேன். ஆனாலும் என்னால் தொடர்ந்து அப்படி நிற்க முடியாமல் போய்விட்டது. இலங்கை அரசின் திட்டமிடல் அமைச்சின் உயர் அதிகாரியாக பணியாற்றிய போது அங்கே என்னோடு பணியாற்றிய ‘மேனகா’ என்ற பெண் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு வந்துவிட்டது. ஆரம்பத்தில் அது நட்பாகவே இருந்தது. பிறகு காதலாக மாறிவிட்டது. குடும்பத்தின் சம்மதத்தை பெரும்பாடு பட்டு வாங்கி எப்படியோ இரு வீட்டாரின் சம்மதத்தோடு என் திருமணம் நடைபெற்றது. கொழும்பில் எனது வீட்டில் இந்து முறைப்படி எங்கள் திருமணம் நடைபெற்றது. மணப் பெண்ணின் வீட்டில் பெளத்த பாரம்பரியப்படி ரிசப்ஷன் நடைபெற்றது. திருமணத்திற்கு செளமியமூர்த்தி தொண்டமான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். மருதானை டொனால்ட் ஸ்டூடியோவில் திருமணப் படம் பிடித்தோம்.”

மறக்கமுடியாத சம்பவம்?

“தொண்டமானின் மகன் ராமநாதனின் திருமணம் ரம்பொடையில் நடைபெற்ற போது இலங்கையில் முதல் முறையாக நாட்டிய பேரழகி கமலாவை இந்தியாவிலிருந்து வரவழைத்து திருமண வீட்டில் ஒரு பெரிய கச்சேரியை தொண்டமான் நடத்தினார். குறிப்பாக திருமண வீடுகளில் கச்சேரி நடப்பது இந்தியாவில்தான் வழமை, இலங்கையில் நடந்த திருமணத்தில் நான் பார்த்த முதல் கச்சேரியும் அதுதான். நிறைந்து வழிந்த அந்த மக்கள் கூட்டத்தின் இடையே நானும் நின்று கச்சேரியை பார்த்தேன். அப்போது எனக்கு பத்து வயதிருக்கும்.

அதற்கு பிறகு கண்டியில் நடந்த ரந்தோலி பெரஹராவில் யானைக்கு மதம் பிடித்து ஒருவரை வீதியில் போட்டு மிதித்து கொன்றது. அந்த சம்பவம் நடந்தபோது நானும் அந்தக் கூட்டத்தில் இருந்தேன். அந்த சம்பவம் 56இல் நடந்தது. அதை இன்று நினைத்தாலும் எனக்கு மயிர் கூச்செறிகிறது.” என்கிறார் ராமானுஜம்.

வாழ்க்கையில் தவறவிட்டதாக நீங்கள் கருதுவது?

“வெளிநாட்டில் போய் வேலை செய்திருக்கலாம் என்று நினைத்தேன், வாய்ப்புகள் வந்தும் அதை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை.”

மறக்க முடியாத நபர்கள்?

“அம்மா, அப்பா, ஆசிரியர்கள்...” என்றவரிடம்

கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றி உங்கள் மதிப்பீடு எவ்வாறானது? என்று கேட்டோம்.

“வாழ்க்கை அதிசயமான ஒரு பரிசு. பாதை வழியே சென்றால் எத்தனையோ விதமான மக்களை சந்திக்கிறோம். எத்தனையோ மேடுபள்ளங்களை தாண்டிச் செல்கிறோம் வாழ்க்கையும் அப்படித்தான். நல்லதும், கெட்டதும் மாறி மாறி வந்து கொண்டேதான் இருக்கும். வாழ்க்கையில் ஒன்றை இழந்துதான் இன்னொன்றை பெற வேண்டியிருக்கிறது. இறைவனின் படைப்பின் அற்புதத்தை பார்த்தீர்களா?” என்று முத்தாய்ப்பாகக் கூறி ஞாபக வீதியை கடந்து சென்றார் பிரதாப் ராமானுஜம்.

Saturday, November 19, 2016

'மனசுக்குள் மலைச்சாரலை' எப்போது பார்க்கலாம்?


அனுஜன், கொழும்பு

'மனசுக்குள் மழைச்சாரல்' குறிப்பிட்டவொரு வடக்கு திரையில் கடந்த மாதம் பொழியத் தொடங்கியது மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
தனது பாடசாலை காதலி மிதுனாவை தேடி லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வருகிறார் நாயகன் ஜெராட். குடும்ப சூழ்நிலையால் நாயகன் ஜெராட்டின் காதலை ஏற்க மறுக்கிறார் நாயகி மிதுனா. அதனால் மீண்டும் லண்டனுக்கு செல்லத் தீர்மானிக்கிறார் ஜெராட். ஆனால் எதிர்பாராமல் விபத்தொன்றில் சிக்கிவிடும் நாயகன் ஜெராட்டின் காதல் வெற்றி பெறுகிறதா? இல்லை அவர் லண்டன் செல்கிறாரா என்பதுதான் படத்தின் கிளைமெக்ஸ்

மேற்கிலும் மத்தியிலும் கிழக்கிலும் அல்லாமல் வடக்கில் மட்டும் 'மழைச்சாரல்'பொழிவது வேதனை தருவதாக உள்ளது. நாடு முழுவதும் மழைச்சாரல் பொழிந்தால்தானே மனசுக்குள் மகிழ்ச்சி பொழியும்!

'விசாரணை'யின் ஒஸ்கார் வாய்ப்புகள் எப்படி?
எம்.முஸப்பீர், வரக்காப்பொல

89 ஆவது ஒஸ்கார் விருது விழா 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 26ம் திகதி நடைபெறுகிறது. சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் இந்தியாவின் சார்பாக 'விசாரணை' போட்டியிடுகிறது.

மொத்தம் 89 நாடுகளில் இருந்து படங்கள் அனுப்பப்பட்டன. இதில் ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, கேமரூன், டூனிசியா ஆகிய நாடுகளின் படங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஒஸ்கார் வரலாற்றில் முதல் முறையாக ஏமன் நாட்டில் இருந்து ஒரு படம் தேர்வாகியுள்ளது. ‘i am nojoom.age10 & divorced’ என்பதே அப்படத்தின் பெயர்.

‘sand storm’ (இஸ்ரேல்) இஸ்ரேலின் பெண் இயக்குநர் எலைட் ஜெக்ஸர் இயக்கியிருக்கும் படம். குடும்ப கலாசாரத்துக்கும் தனது கனவுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் ஓர் அரேபிய டீன் ஏஜ் பெண்ணின் கதையைச் சொல்லும் படம் இது.
‘the salesman’ (ஈரான்) ஹீரோ ஒரு சேல்ஸ்மேன். புது வீட்டுக்குக் குடி வருகிறான். அதற்கு முன் அங்கிருந்த ஒரு பெண் பாலியல் தொழில் நடத்தி வந்தார். இதையடுத்து ஏற்படும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. 2016ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்ற படம்.
‘its only the end of the world’ (கனடா) இன்னும் சில நாட்களில் சாகப் போகும் ஒரு எழுத்தாளர் 12 ஆண்டுகளுக்குப் பின் தனது குடும்பத்தை காண வருகிறார். அங்கு ஏற்படும் அனுபவங்கள் தான் படம். கேன்ஸ் திரைப்படவிழாவில் இப்படம் கிரான்ட் ப்ரீ விருது வென்றது.

‘elee’ (பிரான்ஸ்) வீட்டில் தனியாக இருக்கும் பெண் அடையாளம் தெரியாத ஒருவரினால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறாள். அதையடுத்து நடக்கும் சம்பவங்களே படத்தின் களம்.

இவை மட்டுமன்றி ஜெர்மனியின் ‘TONY ERDMAN’ சிலியின் ‘NERUDA’ வெனிசுலாவின் ‘FROM A FAR’ பிலிப்பைன்ஸின் ‘MAROSA’ ஆகிய படங்களும் கவனத்தை ஈர்த்துள்ளன.

விசாரணை ஒஸ்கார் வெல்லும் என்கிறார் அதன் கதாசிரியர். பிப்ரவரி 26 இல் எல்லாம் தெரிந்துவிடும்!

திருட்டு வி.சி.டி. தமிழ் சினிமாவுக்கு வில்லனாக உள்ளதே?
கவிதா. பாதுக்க

திருட்டு வி.சி.டி மட்டுமா? படம் வெளியாகி அடுத்த நாளே இணையத்திலும் தரமான பிரதி வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது. திருட்டு வி.சி.டி. மற்றும் இணையத்திலும் படம் பார்ப்போரின் எண்ணிக்கை மற்றும் டிக்கட் விலையை வைத்து ஒரு படத்துக்கு இத்தனை கோடி நஷ்டம் என்று பட்டியல் போட்டிருக்கிறார்கள்.
அதன்படி உறியபடி 8 கோடி, அப்பா 11 கோடி, ரஜனி முருகன் 50 கோடி, கணிதன் 15 கோடி ரூபா என்று நஷ்டமாகும். சிறு படங்களின் கதி இதுவென்றால் கபாலி, தெறி, தேவதாளம் போன்ற படங்களுக்கு!!

இதற்குத்தான் கமலஹாசன் யோசனை சொன்னார். ஆனால் தமிழ் திரையுலகம் அதனை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்து விட்டது. இப்போது இருப்புக்கே மோசம் வரும் போல இருக்குதே.

அறிவிக்கப்பட்ட நிலையிலேயே எம்.ஜி.ஆரின் பல படங்கள் நின்றுவிட்டதாக சொல்கிறார்களே. உண்மையா?
எம்.ஜி.ஆர். பித்தன், கம்பளை

உண்மைதான். எதனால் அந்தப் படங்கள் அறிவிக்கப்பட்டதுடன் நின்று போயின என்பது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும். இத்துடன் இருக்கும் பல போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்கள் எம்.ஜி.ஆர். நடிப்பதாக வெளியானவைதான். இவை தவிர 'கங்கையிலிருந்து க்ரெம்ளின் வரை' (இந்திய ரஷ்ய கூட்டுத்தயாரிப்பு) 'சமூகமே நான் உங்களுக்கே சொந்தம்' 'புரட்சிப் பித்தன்' 'நம்மைப் பிரிக்க முடியாது' 'தந்தையும் மகனும்' 'நம்ம வாத்தியார்' ஆகிய படங்களும் ஆரம்ப நிலையிலேயே நின்றுவிட்ட எம்.ஜி.ஆர். படங்கள்தான்!

எம்.ஜி.ஆர் பட டைட்டில், சிவாஜி பட டைட்டில் என்று தேடியலையும் இந்தக் கால பசங்க இனிமேல் இந்த தலைப்புகளையும் விட்டு வைக்க மாட்டாங்க. எம்.ஜி.ஆரின் ஆசீர்வாதம் இப்படியாவது இவர்களுக்குக் கிடைத்தால் சரிதான்.