Saturday, October 8, 2016

நடிகர் அலெக்ஸாண்டரின் அந்த நாள் ஞாபகம்


மணி   ஸ்ரீகாந்தன்

இலங்கை சிங்கள திரையுலக வரலாற்றில் கடந்த மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக ஸ்டண்ட், வில்லன், கதாநாயகன் என பல்வேறுபட்ட வேடங்களில் வலம் வந்த ஒரே தமிழர் அலெக்ஸாண்டர் பெர்ணான்டோ. ஆரம்ப காலத்தில் விளையாட்டு வீரராகவும் திகழ்ந்த இவர் மல்யுத்த விளையாட்டில் இலங்கை சாம்பியனாகவும் திகழ்ந்து வெளிநாடுகளில் மல்யுத்த ஆட்டத்திலும் ஆடிய பெருமை கொண்டவர். நூற்றுக்கு மேற்பட்ட சிங்களப் படங்களில் ஜொலித்த அந்த நட்சத்திரத்தை  ஞாபக வீதியில்
பிரகாசிக்கச் செய்கிறோம். அலெக்ஸாண்டரின் அந்தக்கால பதிவுகள் இப்படி தொடங்குகிறது....


“அப்போது நான் சிங்கள திரையுலகில் பிரபல வில்லன் நடிகராகவும் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றினேன். அந்த நேரத்தில் தான் ஜம்பு என்றவர் எனது வீட்டிற்கு வந்து ‘தீ’ படத்தின் படப்பிடிப்பு கொழும்பில் நடக்கவுள்ளதாகவும் அதில் ஸ்டண்ட் மாஸ்டராக என்னை பணியாற்றும்படியும் கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க படக் குழுவினரை சந்தித்தேன். கொழும்பு ஜானகி ஹோட்டலில் இந்தச் சந்திப்பு நடந்தது.

நான் ரஜினியை சந்தித்தேன். நான் நடித்த படங்கள் சிலவற்றை தான் பார்த்ததாகவும் நீங்கள் எங்கள் படத்தில் பணியாற்ற வேண்டும் என்றும் ரஜினி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு தான் ஒரு சம்பவம் அங்கே நடந்தது. எனக்கு அடிக்கடி சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. நான் அமர்ந்திருந்த மேசைக்கு எதிரில் டைரக்டர் பில்லா கிருஸ்ணமூர்த்தி அமர்ந்திருந்தார். நானும் வழமைபோல சிகரெட்டை எடுத்துப் பற்றவைக்க நோ! இங்கே சிகரெட் பிடிக்கக்கூடாது” என்று கத்தினார் கிருஸ்ணமூர்த்தி. அவர் அப்படி எனக்கு கட்டளை போட்டது எனக்கு பிடிக்கவில்லை. நீ யாருய்யா என்னை சிகரெட் பிடிக்கக் கூடாது என்று சொல்வதற்கு? இது என் நாடு. நான் இங்குதான் சிகரெட் பிடிப்பேன். உனக்கு விருப்பமில்லையென்றால் இடத்தை காலி பண்ணு!’ என்று நான் கோபமாக கத்தினேன். பில்லா கிருஷ்ணமூர்த்தி எழுந்து போய்விட்டார்.
அதற்கு பிறகும் என்னால் அந்தப் படத்தில் பணியாற்ற முடியுமா என்ன? வந்து விட்டேன்” என்று தனது கடந்த கால அனுபவங்களை மீட்டும் அலெக்ஸாண்டரிடம் அவரின் பூர்வீகம் பற்றி கேட்டோம்.

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கொழும்பு கொச்சிக்கடையில் தான். அப்பா அந்தனி பெர்னாண்டோ, அம்மா லூத்மேரி பீரிஸ். படித்தது ஆரம்பத்தில் கதிரேசன் வீதியில் இருந்த புனித மரியாள் ஸ்கூலில், அதற்கு பிறகு கொச்சிக்கடை சென் அந்தனிஸ் மகா வித்தியாலயம். ஆரம்பத்தில் நான் பாடசாலை போன அந்த முதல் நாளும், அகரம் கற்பித்த ஆசிரியரும் எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஒரு சம்பவம் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. ஒரு நாள் நான் ஏதோ எழுதிக் கொண்டிருந்த போது ஒரு மாணவி எனது பென்சிலை பிடுங்கினாள். எனக்கு ஆத்திரம் வந்துவிட்டது. அவளை ஓங்கி கன்னத்தில் அறைந்தேன். அவள் மயங்கி கீழே விழுந்தாள். இந்த சம்பவத்திற்கு பிறகு அங்கே வந்த மதர் இவனை அடக்க முடியாது. இவனை ஆண்கள் பாடசாலையான மரியாள் கல்லூரிக்கு மாற்றுங்க என்று சொல்லிவிட்டார்.

பிறகு நான் மரியாளுக்கு மாற்றலாகி போனேன். அங்கே எனக்கு அன்டனி ராசைய்யா, வில்சன், ஜோர்ஜ் ரொட்ரிக்கோ உள்ளிட்ட நண்பர்கள் கிடைத்தார்கள். ஒரு நாள் எனது பகுதியைச் சேர் ந்த ஒரு சிறுவனை நான் அடிக்க, அவனும் மயக்கம் போட்டு விழுந்து விட்டான். அதைப் பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள், இவனை இப்படியே விட்டால் நாளைக்கு பெரிய ரௌடியாக வருவான். எனவே மக்கொனா சிறுவர் சீர்திருத்த சிறையில் கொண்டுபோய் விட்டு விடுங்க என்றார்கள். அதன் பிறகு என்னை கொச்சிக்கடை பொலிசுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே ஒரு பொலிஸ்காரர் எனக்கு இரண்டு அடி கொடுத்து உனக்கு இதுதான் கடைசி சந்தர்ப்பம் என்று என்னை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினார். என் குடும்பத்தில் நான் மட்டும் தான் ஆண் பிள்ளை. எனக்கு இரண்டு சகோதரிகள். நான் இரண்டாவது” என்ற அலெக்ஸாண்டர் தனது சினிமா பிரவேசம் பற்றி இப்படிக் கூறுகிறார்:
சரதியல் கே புதா’ படத்தில் மாலினியுடன்.
“நான் சினிமா நடிகனாக வருவேன் என்று ஒதுபோதும் நினைத்தும் பார்த்தது கிடையாது. அதில் எனக்கு ஆர்வமும் இருந்ததில்லை. நான் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்றுதான் இலட்சியம் கொண்டிருந்தேன். மல்யுத்தம், குத்துச் சண்டை, நீச்சல், உதைபந்தாட்டம் என்று எல்லா விளையாட்டுகளையும் விளையாடி இருக்கிறேன். உலக சோம்பேறி விளையாட்டான கிரிக்கெட்டை மட்டும் நான் விளையாடவில்லை. பதினொரு சோம்பேறிகள் ஆடும் ஆட்டத்தை பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கும் விளையாட்டு என்று பெர்னாட்ஷா சொன்னதை நான் ஏற்றுக் கொண்டதால்தான் நான் அந்த ஆட்டத்தை வெறுத்தேன். இலங்கையில் மல்யுத்தத்தில் நான் சம்பியனாக தேர்வு செய்யப்பட்ட பிறகு அவுஸ்திரேலியாவில் நடந்த கொமன்வெல்த் போட்டியில் பங்குபற்றினேன்.

அதன் பிறகு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கும் நான் தெரிவு செய்யப்பட்டேன். துரதிஷ்டவசமாமக என் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக என்னால் அந்தப் போட்டியில் பங்குபற்ற முடியாமல் போய்விட்டது. பிறகு பெங்கொக்கில் நடந்த ஏசியன் விளையாட்டுப் போட்டியிலும் பங்குபற்றி வந்தேன். அப்போது எனது நண்பரான இயக்குநர் லெனின் மொறாயஸ் ஒரு சிங்களப் படத்தில் சண்டைக் காட்சியில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் என்னை அதில் நடிக்கும் படியும் கேட்டார். ஆரம்பத்தில் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. பிறகு நண்பரின் வற்புறுத்தலால் சம்மதித்தேன்.

‘வென சொர்கயா குமட்டத’ என்ற படம் தான் நான் நடித்த முதல் படம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் படப்பிடிப்பு குழுவினரின் வேனில் என்னை வீடு வரை அழைத்து வந்து விட்டார்கள். அந்த வேன் டிரைவராக இருந்தவர்தான் இன்றைய சிங்களப் படவுலகின் பிரபல ஒளிப்பதிவாளராக இருக்கும் கபூர். நான் வேனைவிட்டு இறங்கும் போது அந்தப் படத்தின் தயாரிப்பாளர் எனது ஷேர்ட் பொக்கட்டில் ஒரு ரூபா நோட்டை திணித்துவிட்டு ‘முட்டை வாங்கிக் குடி’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவர் போனபிறகு நோட்டை எடுத்துப் பார்த்தேன். ‘பத்து ரூபா’ நான் வாங்கிய முதல் சம்பளம் அந்த பத்து ரூபா தான். அந்தப் பணத்தில் பத்து முட்டை, ஒரு நெஸ்டமோல்ட் டின், பிளேட் ஒரு பெட்டி, வாழைப்பழங்கள் ஆகியவற்றை வாங்கினேன். பத்து ரூபாயில் மிச்ச பணமும் இருந்தது. இன்று பத்து ரூபாய் ஒரு பிளேன்டி கூட குடிக்க முடியாது.
 ‘ஸ்டண்ட் நடிகராக...
அதன் பிறகு ‘ருகுணு குமாரி’ என்ற படத்தில் நான் வேலை செய்ததற்காக ஐநூறு ரூபாய் எனக்கு சம்பளம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து எம். ஜீ. ஆரின் சர்வாதிகாரி உள்ளிட்ட படங்களை இயக்கிய மஸ்தான், இலங்கையில் சில படங்களை இயக்கி வந்தார். அப்போது அவர் இயக்கிய ‘அட்டவெனி புதும’ என்ற படத்திலும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் சண்டைக் காட்சியே கிடையாது. என்னோடு ஒரு சண்டைக் காட்சியில் மோத வேண்டும் என்ற கதாநாயகனான சேனாதி ரூபசிங்கவின் விருப்பத்திற்காகவே மஸ்தான் எனக்காக ஒரு சண்டைக் காட்சியை உருவாக்கி அதில் நடிக்க வைத்தார்.

அதன் பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர, நான் சிங்கள திரையுலகில் பிரபல நடிகனானேன். சத்தீஸ்சந்ர தான் என்னை நாயகனாக்கிய இயக்குனர். அவர் இயக்கிய ‘ஸ்ரீ மதாரா’ என்ற படத்தில் தான் நான் நாயகனாக நடித்தேன். எனக்கு ஜோடியாக ஸ்ரீயானி பெரேரா நடித்தார். பிறகு யசபாலித நாணயக்கார இயக்கிய சாப்பட்டடெனி எகே ஆதர கத்தா, பசமித்ரோ, மாலினியோடு சரதியல்கே புத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்தேன். ‘பசமித்ரோ’ படத்திற்காக எனக்கு ஜனாதிபதி விருது கிடைத்தது. சரதியல்கே புத்தா படத்தில் நடித்ததற்காக இருபத்திரெண்டாயிரம் ரூபா எனக்கு சம்பளம் கிடைத்தது.

எனக்கு நாடு முழுவதும் அதிகமான ரசிகர்கள் இருந்தார்கள். ‘துஷார’ படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டம் கண்டியில் நடைபெற்றது.

விஜயகுமாரதுங்கவுடன் நானும், மாலினியும் சென்றிருந்தோம். அங்கே உண்மையை சொல்லப் போனால் ஆட்டோகிரப் வாங்க விஜயகுமார துங்கவை விட எனக்குத்தான் கூட்டம் அதிகமாக இருந்தது. அதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது’ எனது படங்களை கலண்டராக வீதியில் போட்டு விற்பனை செய்திருக்கிறார்கள். அது ஒரு காலம்...’ என்று பழையதை நினைத்து பெருமைப்படுகிறார் அலெக்ஸாண்டர்.

காதல் பற்றிக் கேட்டோம். ‘நான் இருந்த அந்த பரபரப்பில் எனக்கு காதல் கண்களில் படவில்லை. அப் போது எனக்கு பிரியமாக இருந்தவைகள் மதுவும் சிகரெட்டும் தான். சில காலங்களுக்கு பிறகு எனக்கு என் சொந்தத்திலேயே திருமணம் பேசினார்கள். ஆனால் பெண் வீட்டு ஆட்கள் நான் ஒரு சினிமாக்காரன், குடிகாரன் என்று காரணம் சொல்லி என்னை நிராகரித்தார்கள். குடிகாரன் குடும்பமாகி விட்டால் திருந்திவிடுவான் என்றேன். அவர்கள் கேட்கவில்லை. பிறகு எனக்கு தெரிந்த படத் தயாரிப்பாளரின் கார் டிரைவர் தான் எனக்கு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். நான் பெண் பார்க்க போன அந்த சம்பவம் சுவாரஸ்யமானது. நாங்கள் அந்த வீட்டிற்கு போனதும் அவர்கள் எனக்கு ஸ்வீட் கொடுத்தார்கள். நான் இதெல்லாம் எனக்கு சரிவராது நமக்கு பிடித்ததெல்லாம் சாராயம்தான் என்றேன். உடனே அந்தப் பெண்ணின் தகப்பனார் எனக்கு ஒரு சாராயப் போத்தலை தந்தார். பெண் பார்க்க போன முதல் நாளே அந்த வீட்டில் குடித்துவிட்டுத்தான் வந்தேன்.

எனது திருமணம் வத்தளையில் மணப் பெண் வீட்டில் நடந்தது. பிரபலங்கள் யாரும் வரவில்லை. நான் யாரையும் அழைக்கவும் இல்லை. எனக்கு பெண் தரமுடியாது என்று மறுத்த என் உறவுக்காரர்கள் அவர்கள் விருப்பப்படியே அந்தப் பெண்ணுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையை பார்த்து மணமுடித்து வைத்தார்கள். சில காலங்களுக்கு பிறகு நான் கேள்விப்பட்டேன் அந்த நல்ல மாப்பிள்ளை

சாராயம் குடித்தே இறந்து போனான் என்று! பார்த்தீர்களா விதியின் வலிமையை! என்று தமது வாழ்க்கை அனுபவங்களை அனுபவித்துப் பேசும் அலெக்ஸாண்டரிடம். மறக்க முடியாத நபர்கள்? என்று கேட்டோம்.

“நண்பர் விஜயகுமாரதுங்க. மனிதர்கள் இருக்கிற இடத்தில ஒரு நடிகரைத் தேடலாம். நடிகர்கள் இருக்கிற இடத்தில ஒரு மனிதனை தேடினால் அந்த மனிதர் விஜயகுமாரதுங்கவாகத்தான் இருக்க முடியும். என் திரைப்பயணத்தில் லெனின் மொறாயெஸ்சையும் மறக்க முடியாது.”

வாழ்க்கையில் தவறவிட்டதாக நீங்கள் கருதுவது?

“சம்பாதித்த பணத்தை நாசமாக்கியது...

அப்போது பணத்தை நான் கவனிக்கவில்லை. அதனால் தான் இன்று அந்தப் பணம் என்னைக் கவனிக்கவில்லை” என்றவரிடம் ஒரு அதிர்ச்சியான சம்பவம் சொல்லுங்களேன் என்றோம்.

“எனக்கு ஸ்ரீலால் என்று ஒரு நண்பர் இருந்தார். சில காலத்தின் பின் அவருடைய தொடர்புகள் இல்லாமல் போய் விட்டது. நானும் சினிமாவில் பிஸியாகி விட்டேன். ஒருநாள் செட்டித்தெருவில் இருந்து ஒரு சாராய தவறணையில் நான் குடித்துவிட்டு சண்டை போட்டேன். பிறகு அந்தக் கடையில் இருந்த தொலைபேசியை பலவந்தமாக எடுத்துக் கொண்டும் போனேன். அதன் பிறகு பொலிஸார் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரபல சினிமா நடிகர் டெலிபோன் திருடினார் என்ற செய்தியை வீரகேசரி வெளியிட்டிருந்தது.

ஒருவார சிறை வாசத்திற்கு பிறகு என்னை நீதிமன்றத்தில் நிறுத்தினார்கள். அங்கே குற்றவாளி கூண்டில் நான் நிற்க நீதிபதி ஆசனத்தில் என் பால்ய நண்பர் ஸ்ரீலால் அமர்ந்திருந்தார். வழக்கை எடுத்துக் கொண்ட நீதிபதி மூவாயிரம் ரூபாவை அடுத்த தவணையில் செலுத்திவிடும்படி கூறி என்னை விடுதலை செய்தார். ஆனால் அடுத்த தவணை வந்தபோதுதான் முதல் தவணைக்கான பணத்தை செலுத்த மறந்துபோனது ஞாபகத்துக்கு வந்தது. கடைசி ஒரு நாள் தான் இருந்தது. அப்போது என்னிடம் காசும் இல்லை. நண்பர் விஜயகுமாரதுங்கவிடம் சென்று என் நிலைமையை எடுத்துச் சொல்லி மூவாயிரம் ரூபாயை பெற்று பணத்தை செலுத்தினேன்”.

இலங்கையில் தயாரித்த தமிழ் படங்களில் நடித்திருக்கிறீர்களா?

“சில படங்களில் நடித்தேன். அதில் திறமைசாலிகளுக்கு இடம்கொடுக்கப்படவில்லை. பணம் போட்டவர்கள் கதாநாயகன் என்ற நிலைதான் இருந்தது. நல்லவேளை நான் அந்த சேற்றில் சிக்கவில்லை. இல்லையென்றால் புதைந்து காணாமல் போயிருப்பேன்.”

என்றவரிடம் இறுதியாக வாழ்க்கையைப் பற்றிய உங்கள் புரிதல் என்ன? என்று கேட்டோம்.

“என் திருமணத்தோடு என் சினிமா வாழ்க்கையும் தொலைந்து போய்விட்டது. இல்லாதவனுக்கு இல்லை என்ற வேதனை; இருக்கிறவனுக்கு போதாது என்ற கவலை.... இதுதான் வாழ்க்கை. ஏதோ நானும் வாழ்கிறேன்” என்று வாழ்க்கை பதிவுகளை முடித்துக்கொள்கிறார் அலெக்ஸாண்டர் பெர்னாண்டோ.

தினகரன்- ஜூலை-25-2010

No comments:

Post a Comment