Friday, October 7, 2016

இலங்கை தமிழ் சினிமா தூங்குகிறதே…?


எம்.ராஜன், கண்டி

தூக்கத்தில் இருந்து எழுந்து விட்டதே. திரைக்கு வர தயாராக இரண்டு படங்கள் உள்ளன. ஒன்று 'கோமாளி கிங்ஸ்' மற்றது 'வட்டி இலக்கம் 303'

'கோமாளி கிங்ஸ்' மிகுந்த பொருட் செலவில் உருவான ஒரு நகைச்சுவைப் படம். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம்தான் இலங்கை தமிழ் சினிமாவின் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்து வைக்கப் போகிறது.

எதையுமே புதுமையாகச் சொன்னால்தான் தமிழ் சினிமாவில் இப்போது எடுபடுகிறது. அந்தவகையில் வட்டிக்கு கடன் வாங்கி வட்டியைக்கூட கட்ட முடியாத ஒரு தம்பதியின் கதையை திரையில் கூறுகிறது 'வட்டி இலக்கம் 303'.

இலங்கை தமிழ் சினிமாவுக்கு இப்போது எதையும் வித்தியாசமான கண்ணோட்டத்துடன் நோக்கும் துணிவுள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தேவை.


நடிகர் ஜாக்கிஜானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறதா?

எம்.முஸம்மில், ஹெம்மாத்தகம

ஜாக்கிசானுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது அடுத்த மாதம் கிடைக்கிறது. ஹொங்கொங்கில் பிறந்த ஜாக்கி சான் 8 வயதில் இருந்து கலைத்துறையில் இருக்கிறார்.
இப்போது அவருக்கு 62 வயது. நகைச்சுவையுடன் கூடிய அதிரடி சண்டை நடிப்பினால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவர்ந்தவர் ஜாக்கிசான். ஆஸ்கார் விருது கொடுக்கப் பொருத்தமானவர்தான். ஆனால் அவரது மகன் போதைப் பழக்கத்துக்கு ஆளாகி அப்பன் பெயரைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆஸ்கார் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. தமிழகத்திலிருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதலாவது தமிழ்ப் படம் தெய்வமகன். நடிகர் திலகம் நடித்த படம். நடிப்புக்கு ஆஸ்கார் கிடைக்காவிட்டாலும் நடிப்புக்கு இலக்கணம் வகுத்து தமிழர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அவரது பாசமலரையும் கர்ணனையும், வீரபாண்டிய கட்டபொம்மனையும் எப்படி மறப்பது.

டைரக்டர் கரு பழனியப்பன், விக்னேஸ் சிவன் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்களாமே?

கவிதா, ஹேவாகம, பாதுக்க

அதிலென்ன தவறு? ஒரு படத்துக்கு கதை நாயகமாக இருந்தால் கதைக்கு ஏற்றதாக இருக்குமிடத்து எவரும் பிரதான பாத்திரத்தில் நடிக்கலாம். அப்புக்குட்டியை தெரியுமா? அவர்கூட பிரதான பாத்திரத்தில் தோன்றி ஒரு நல்ல படம் கொடுத்தாரே, மறந்து விட்டீர்களா? அதில் அவருடன் ஒரு குதிரையும் நடித்திருந்ததே! கரு பழனியப்பன் நடிகனாகிவிட்டார். விக்னேஸ் சிவன் இனிமேல்தான் ஆக வேண்டும்!
நயன்தாரா கதாநாயகியாக முக்கியத்துவம் பெறும் ஒரு படத்தை இயக்கும் விக்னேஸ் சிவன் (நயன்தாராவின் காதலர்) சூர்யாவிடம் பேசியிருக்கிறார். (நயன் கொடுத்த தைரியத்தில்தான்) பல்வேறு நிபந்தனைகளைப் போட்டு சூர்யா அவரை திருப்பி அனுப்பிவிட்டாராம். அதற்குப் பிறகுதான் விக்னேஸ் சிவனே கதாநாயகனாக நடிக்கிறார் என்ற தகவல் வந்தது. அதைக் கேட்டதும் சூர்யா விக்னேஸை அவசரமாக அழைத்து நிபந்தனைகளை புறந்தள்ளி 60 நாள் கால் சீட்டையும் கொடுத்திருக்கிறார். எனவே விக்னேஸ் சிவன் இப்போதே அரிதாரம் பூச மாட்டார்.

சூர்யாவின் 24, மாசி ஆகியவை ஓரளவு ஓடினாலும் பெரிதாகப் பேசப்படவில்லை. 36 வயதினிலே, பசங்க 2 நன்றாக ஓடினாலும் ஜோதிகாவுக்கும் டைரக்டர் பாண்டிராஜூக்கும்தான் பெயர் வந்தது. விக்னேஸ் படம் நயனுக்காக நிச்சயம் ஓடும். அதனால் தன் பெயருக்கு ஒரு 'ஹிட்' கிடைக்கும் என்பது சூர்யா கணிப்பு. அதனால்தான் விக்னேசுக்கு ஓகே சொல்லியிருக்கிறார்.

கிரிக்கெட் வீரர்களைப் பற்றி படம் எடுப்பதை விட்டு விட்டு நாட்டுக்காக உழைத்தவர்களைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்று கௌதம் கம்பீர் கூறியிருக்கிறாரே?

எம்.தானுசன், கொழும்பு

உள்ளுர் போட்டிகளில் நன்றாக விளையாடியிருந்தும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு கம்பீர் தெரிவு செய்யப்படவில்லை. இதனால்
அவர் ஆத்திரத்தில் இருக்கிறார். தோனிக்கும் அவருக்கும் ஏற்கனவே ஆகாது. தோனியைப் பற்றிய திரைப்படம் வெளியாகியிருக்கும் சமயத்தில் அவர் இப்படிக் கூறியிருக்கக்கூடாது. இருவருக்குமிடையில் உள்ள பகைமையை இது மேலும் வளர்க்கும்.

ஆனால் எனது படம் எனது புகழைப் பரப்ப எடுக்கப்படவில்லை. நினைவுகளை புதுப்பிப்பதாக அது உள்ளது என்கிறார் தோனி.

No comments:

Post a Comment