Thursday, October 6, 2016

படைப்பாளர் பத்மா சோமகாந்தன் பேசுகிறார்.


நேர்காணல்-  மணி  ஸ்ரீகாந்தன்

இலங்கையில் வீரியம் மிக்க முற்போக்கு பெண் எழுத்தாளர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இவர்களில் முன்னணி வகிப்பவராக
பத்மா சோமகாந்தனை அடையாளப்படுத்தலாம்.
கல்வித் துறையிலும் முற்போக்கு பெண்ணிய சிந்தனையிலும் தன் காலத்தை செலவிட்டிருக்கும் பத்மா சோமகாந்தன் இப்போதும் எழுத்து, மேடைப்பேச்சு, இலக்கிய தளங்களில் தொடர் செயற்பாடு என இயங்கிக்கொண்டிருக்கிறார். இவர் கட்டுப்பெட்டியான பிராமண சமூகத்தில் பிறந்து வளர்ந்து அதன் தடைகளை உடைத்தெறிந்து முற்போக்கு சிந்தனையில் ஆழ வேரூன்றிக் கொண்டார் என்பது எளிதில் பார்ப்பதற்கு சுலபமானதாக இருக்கலாம். ஆனால் இதற்காக இவர் உறுதியான சிந்தனையுடன் பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. இப்பக்கத்தில் அவரது அன்றைய நினைவுகளைப் படிக்கும் ஒவ்வொருவரிலும்

இப் பெண்மணி, அவர் ஏற்கனவே தெரிந்தவராக இருப்பினும் கூட, விசாலித்து நிறைவார் என்பது திண்ணம்.


‘யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் தான் நான் பிறந்தேன். நாங்க வசித்த அந்த வீதிக்கு ஓட்டுமடம் வீதி என்று பெயர். அந்தப் பெயர் வருவதற்கு ஒரு காரணமும் இருந்தது. எங்கள் தாத்தா காலத்தில் அந்தத் தெருவில் நிறைய குடிசைகள் இருந்தனவாம். எங்கள் தாத்தா வீடு மட்டுமே ஓடு வேய்ந்த வீடாம். அதனால்தான் அந்தத் தெருவிற்கு ஓட்டு மடம் வீதி என்று பெயர் வந்ததாக எனது அப்பா கூறுவார். எனது அப்பா வண்ணார்பண்ணையில் பெரிய குருக்கள். அதனால் எங்கள் குடும்பத்திற்கு எங்கள் ஊரில் ஒரு ராஜ கௌரவம் இருந்தது. அம்மா பெயர் அமிர்தாம்பிகை அம்மாள். எனது பெயர் பத்மா. ஆனாலும் என்னை பாடசாலை ஆசிரியர்கள் எல்லோரும் பத்மாம்பாள் என்றுதான் அழைப்பார்கள். பொதுவாக பிராமணப் பெண்களை ‘அம்பாள்’ என்றுதான் அழைப்பார்கள். ஆனால் என்னவோ தெரியவில்லை அவர்கள் என்னை அம்பாள் என்று அழைப்பது சுத்தமாக பிடிக்கவில்லை. எனக்கு மூன்று சகோதரிகள் ஒரு அண்ணன். நான் தான் மூன்றாவது. என்னைத்தவிர மற்ற மூன்று சகோதரிகளும் நல்ல அழகு. நான் சுமரான அழகுதான்.”

என்ற பத்மா சோமகாந்தன் தனது முதல் அரிவரி பிரவேசம் பற்றி இப்படிச் சொல்கிறார்.
“யாழ். இந்துத் தமிழ் வித்தியாலயம் தான் என் தமிழுக்கு முதல் பிள்ளையார் சுழி போட்ட பாடசாலை. இப்போதும் இந்துக் கல்லூரிக்கு பக்கத்தில் அந்தப் பாடசாலை இருக்கிறது. எங்கள் வீட்டில் வேலை செய்த வேலு என்ற வேலைக்காரன் என்னை தினமும் பாடசாலைக்கு தூக்கிக்கொண்டு போவான். நான் தான் பிராமணப் பிள்ளையாச்சே! தரையில் நடக்கலாமா? இத்தனைக்கும் நாங்கள் பெரிய பணக்காரர்கள் இல்லை.

சாதியில் உயர்ந்தவர்கள் அவ்வளவுதான். அந்தப் பாடசாலையில் பெரியக்கா, சின்னக்கா என்று இரண்டு ஆசிரியைகள் படிப்பித்தார்கள். அவர்கள்தான் எனக்கு ‘அகரம்’ கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். இப்போ மாதிரி கொப்பி புத்தகம் அப்போது கிடையாது. சிலேட்டில்தான் எழுதுவோம். இங்கே இன்னுமொரு முக்கிய விடயத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். நான் படித்த அந்தப் பாடசாலையில் எனக்கு ஒரு சலுகையும் கிடைத்தது. பிராமணப் பிள்ளைகள் எவரும் தரையில் அமரக்கூடாது. எனவே எங்களுக்கு மட்டும் ஸ்பெஷலாக வாங்குகள் போடப்பட்டிருக்கும். ஏனைய பிள்ளைகள் தரையில் அமர்ந்து பாடம் கேட்க வேண்டும் என்பது நியதி.

அங்கு ஐந்தாவது வரை படித்தேன். அதற்குப் பிறகு இந்து மகளிர் கல்லூரியில் நானும் எனது சகோதரிகளும் சேர்ந்தோம்.

அதற்கு என் உறவுக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். “பெண் பிள்ளைகளுக்கு பால் மற்றும் சலவை கணக்குகளை சரிபார்க்கத் தெரிந்தால் போதும். அதற்கு மேல் படிப்பு தேவையில்லை. நீங்கள் இந்தப் பிள்ளைகளை ஆட்டத்திற்கு விடுறீங்க எந்தப் பெடியனுக்கு கடிதம் கொடுக்கப் போகுதுகளோ....” என்றெல்லாம் சொல்லி எங்கள் படிப்புக்கு தடைபோட முயற்சி செய்தார்கள். ஆனால் என் அம்மா அதற்கு சம்மதிக்கவில்லை.
சோமகாந்தன் தம்பதியினர்.
எங்களை உயர் படிப்புக்கு அனுப்பி வைத்தார். எங்களின் பிராமண சமூகத்தில் எனது அம்மா கொஞ்சம் வித்தியாசமானவர். அவர் எனக்கு கிடைத்தது ஒரு வரம் என்றுதான் சொல்லவேண்டும். இல்லையென்றால் என்னால் இந்தளவிற்காவது படித்திருக்க முடியாமல் போயிருக்கும். அம்மா பின்னேரத்தில் மகாபாரதம் இராமயணம் போன்ற நூல்களைப் படிப்பா. பலகையில் செய்யப்பட்ட ஒரு ஸ்டேன்ட்டில் மகாபாரத புத்தகத்தை வைத்து தரையில் அமர்ந்து வாசிப்பா. நானும் சகோதரிகளும் அம்மாவைச் சுற்றி அமர்ந்து அந்த கதையை கேட்போம். ரொம்பவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் அம்மா படிக்கும் கந்தபுராணம் மட்டும் எனக்குப் புரிவதில்லை.

அப்பாவை பற்றியும் சொல்லியாக வேண்டும். ஓட்டுமடம் வீதியில் ‘வீரகேசரி’ பேப்பர் வாங்கி படிப்பவர் எங்கள் அப்பாதான். என் அப்பா இறைவனுக்கு பக்கத்தில் இருந்து பணி செய்வதால் அவருக்கு ஊரில் பெரிய மரியாதை. எப்போதும் அப்பாவை பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் வந்துகொண்டே இருப்பார்கள். கொஞ்சம் உயர்ந்த சாதிக்காரர்கள் வந்தால் அவர்கள் எங்க வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொள்வார்கள். அப்பா வாங்கில் அமர்ந்திருப்பார். பஞ்சமர்கள் வந்தால் தரையில் அமரவேண்டும். அப்பா எல்லோருக்கும் ‘மோர்’ கொடுப்பார்.

கீழ் சாதிக்காரர்களுக்கென்று தனியாக பாத்திரங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும். எனது அப்பா வீடுகளுக்குச் சென்று புரோகித காரியங்கள் செய்தால் அவருக்கு குரு தட்சணையாக அரிசி, பருப்பு, காய்கறிகள், தேங்காய் என்று மூடை மூடையாக கொடுப்பார்கள். அப்பா நடந்து வர அவருக்கு பின்னால் மாட்டு வண்டியில் அந்த சன்மானப் பொருட்களை வீட்டிற்குக் கொண்டு வருவார்கள். அதனால் எங்கள் வீட்டில் எப்போதும் மூடை மூடையாக உணவுப் பொருட்கள் குவிந்து கிடக்கும் என்றார் பத்மா.

“நீங்கள் எப்படி சின்ன வயதில் குறும்புக்காரப் பெண்ணா?”

“அப்போது நான் படித்த பாடசாலையில் திருமதி முட்டுவாணி என்ற அதிபர் இருந்தா. அவ ஒருநாள் எங்கள் எல்லோரையும் அழைத்து வரிசையில் நிறுத்தி சட்டையில் ஊசிப்பின் குத்திக் கொண்டு வந்த மாணவிகளின் சட்டைப்பின் அனைத்தையும் கழட்டி எடுத்தார். அவர் எடுத்த சட்டைப் பின்கள் அனைத்தும் மலை போல் குவிந்திருந்தது. ‘இனி யாரும் சட்டைக்கு பின் குத்தக்கூடாது. பட்டன் வைத்து தைத்துக்கொண்டு தான் வரவேண்டும்’ என்று கட்டளை போட்டார். அன்று பாடசாலை முடியும் வரை சட்டையில் பின் இல்லாமல் ஒரு கையால் சட்டையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தோம். பாடசாலை முடிந்ததும் அப்படியே வீட்டுக்கு வந்தோம். அடுத்த நாள் எங்களின் சட்டை பின்களை பறிந்த முட்டுவாணியைப் பற்றி பத்திரிகையில் செய்தியும் வந்திருந்தது. இந்த சம்பவத்தை பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாது. அதேமாதிரி எங்கள் பாடசாலை வளாகத்தில் இருந்த மாமரத்தில் மாம் பிஞ்சுகளை அடித்து சாப்பிடுவதில் எங்களுக்கு கொள்ளைப் பிரியம். ஒருநாள் நாங்கள் மாம் பிஞ்சுகளை அடிப்பதை பார்த்த அதிபர் திருமதி ராவோ, எங்களைப் பிடித்து வரிசையில் நிற்க வைத்து நாங்கள் மறைத்து வைத்திருக்கும் மாம் பிஞ்சுகளை கொண்டு வந்து தருமாறு கட்டளையிட்டார். நாங்களும் மறைத்து வைத்திருந்த மாம் பிஞ்சுகளை கொண்டு வந்து கொட்டினோம். அது மலைபோல குவிந்து விட்டது. பிறகு எங்களை வெயிலில் நிற்க வைத்துவிட்டார்.”
என்று சொல்கிறார் பத்மா.
“நான் சின்னவளாக இருக்கும் போது எனது அம்மா வண்ணார்பண்ணை சிவன் கோயில்ல பிரசங்கம் கேட்கப் போகும் போது என்னையும் அழைத்துச் செல்வா.

அக்கா ஒரு சோம்பேறி. அதனால் நான் மட்டுமே அம்மாவுடன் செல்வேன். அம்மா தரும் சில்லறைகளுக்கு சிவன் கோயில் வளாகத்திலிருக்கும் கடலைக்காரனிடம் கடலை வாங்கிக் கொள்வேன்.

பிரசங்கம் கேட்டுக் கொண்டிருக்கும் அம்மாவின் மடியில் அமர்ந்து கடலையை கொறித்துக் கொண்டே நானும் பிரசங்கம் கேட்பேன். ஆனால் சிறிது நேரத்தில் அப்படியே அம்மாவின் மடியில் தூங்கிப் போய்விடுவேன். இது நெஞ்சில் பசுமையாகப் பதிந்து போன நினைவுகள். என் தமிழ் ஆர்வத் திற்கு ஆரம்ப வித்தாக அமைந்தது. அந்த பிரசங்கம்தான் என நினைக்கிறேன். அதற்குப் பிறகு தி.மு.கவின் எழுச்சி தமிழகத்தில் புரண்டு எழத் தொடங்கிய நாட்களில் அறிஞர் அண்ணாவின் பேச்சும் கலைஞரின் எழுத்தும் என்னை வெகுவாக கவர்ந்தது. என் மேடைப் பேச்சில் அண்ணாவின் பாதிப்பு ஆங்காங்கே தெரியும். அதனால் எனக்கு அண்ணாத்துரை என்ற பெயரும் உண்டு. நான் பேசுவதற்காக மேடைக்கு செல்லும்போது எல்லோரும் கை தட்டி அதோ அண்ணாத்துரை போறா என்று சொல்வார்கள். அப்போதெல்லாம் நான் வானத்தில் மிதப்பது போன்ற ஒரு உணர்வு எனக்குள் ஏற்படும். அவ்வளவு மகிழ்ச்சி!

காதல் பற்றி கேட்டோம்.

‘பிராமணப் பிள்ளைகள் ஆண்களைப் பார்ப்பதென்பதே ஆபூர்வம். ஏதோ திருமண வீடுகள் அதுவும் நெருங்கிய உறவுக்காரர்கள் வீட்டு திருமணங்களுக்கு மட்டுமே எங்களை அழைத்துச் செல்வார்கள். அப்படிச் செல்லும் போது கார் சாரதியைப் பார்ப்போம். நாங்கள் பின் சீட்டில் அமர்ந்திருக்கும் போது சாரதி முன்னால் இருக்கும் கண்ணாடி வழியே எங்களைப் பார்த்து கண்ணடிப்பான். அதற்கு பிறகு கல்யாண வீட்டிற்கு சென்றால் அம்மாவின் கட்டுப்பாட்டிலேயே ஒரு அறைக்குள் அமர்ந்திருப்போம். அப்புறம் கோயிலுக்கு சென்றால் மேளம் வாசிப்பவனையும் நாதஸ்வரக்காரனையுமே பார்ப்போம். பிராமணப் பெண்கள் சந்திக்கும் ஆண்கள் இந்த மூன்று பேர்தான். காதல் வந்தாலும் இவர்களோடுதான் வரும். நான் வெளியில் சென்று படித்ததனால்தான் நானும் தப்பினேன்.

அண்ணாவின் பேச்சையும், திராவிட நாடு பத்திரிகையும் எனக்குள் ஏற்படுத்திய தமிழார்வம் என்னையும் பேச வைத்த அந்த காலத்தில் தமிழரசு கட்சியின் மேடையில் பேசினேன். நான் பேசுகிறேன் என்றால் ஒரு கூட்டம்வரும். என் பேச்சைக் கேட்க வருகிறார்கள் என்பதை விட என்னைப் பார்க்கத்தான் அதிகமானோர் வந்தார்கள். அந்தக் காலத்தில் ஒரு பெண் பேசுகிறாள் என்பதே பெரிய விசயம். அதிலும் ஒரு பிராமணப் பெண் பேசுகிறார் என்றால் சும்மாவா! அப்படி நான் பேசிய மேடைப் பேச்சைப் பார்க்க வந்தவர்களில் ஒருவர்தான். சோமகாந்தன்.
அவர் பிராமணர்தான். ஆனால் அவரும் ஒரு முற்போக்குவாதி. அதனால் அவருக்கு என்னைப் பிடித்திருக்கிறது. பிறகு எனது அக்காவிற்கு பேசி முடிப்பதாகத்தான் ஆரம்பத்தில் கதை நடந்தது. ஆனால் அவர் மனசில நான் இருந்ததால் அவருக்கு என்னை விட முடியாமல் போய் விட்டது. எங்கள் திரு மணம் இரு வீட்டாரின் ஆசீர்வாதத்துடன் திருக்கேதீஸ்ரவத்தில் நடைபெற்றது. நானும் சோமகாந்தனும், உதயன், சுதந்திரன் உள்ளிட்ட பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். ஒரு பத்திரிகையில் அடுத்தடுத்த பக்கங்களில் எங்கள் இருவரின் படைப்புகளும் வெளியாகி இருக்கிறது.

வாழ்க்கையில் நீங்கள் தவற விட்டதாக கருதுவது?

‘என் வாழ்க்கையில் ஏற்பட்ட சில துயரச் சம்பவங்களால் என்னால் ஒரு இருபது வருடங்களாக பேனாவை தொட முடியாமல் போய் விட்டது. என் எழுத்து பயணத்தில் ஏற்பட்ட அந்த தடங்கலை நினைத்து இன்றும் வருந்துகிறேன்.

‘அப்பாவிடம் அடிவாங்கி இருக்கிறீர்களா?’

‘நிறையவே! திட்டு வாங்கியிருக்கிறேன். எங்கள் வீடுகளில் ஜன்னல், வாசல்களுக்கு திரைச்சீலை போடுவதில்லை. ஏதும் தேவைப்பட்டால் கோயிலில் பூஜையறையில் தொங்க விடப்பட்டிருக்கும் கழித்து விடப்பட்ட சுவாமி படம் பொறிக்கப்பட்ட திரைகளை அப்பா கொண்டு வந்து மாட்டி வைப்பார். ஆனால் நாங்கள் வெளியில் சென்று படித்து வந்த பிறகு நானும் எனது சகோதரிகளும் திரைச் சீலை வாங்கி வந்து வாசலில் மாட்டியிருந் தோம். அப்போது பண்டிதர் ரத்ணேஸ்வர ஐயர் ஒருமுறை எங்கள் வீட்டுக்கு அவரின் துணைவியாருடன் வந்தார். அப்போது அவர் வெளியில் அமர்ந்து எனது தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தார். அவரின் கையில் ஒரு விசிறி இருந்தது.
இளமையில்
பிறகு அம்மா அவரை சாப்பாட்டுக்கு அழைத்ததும் வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது தன் கையில் இருந்த விசிறியால் வாசலில் தொங்கி கொண்டிருந்த திரைச்சீலையை தூக்கி கதவில் போட்டு விட்டு நுழைந்தார். இதை அப்பா கவனித்து விட்டார். அப்பா ஏன் திரைச்சீலை போட வேண்டும் என்று பயங்கரமாக எங்களைத் திட்டினார். அவற்றை உடனடியாகக் கழற்ற வேண்டுமென பணித்தார். ஏனென்றால் திரைச்சீலையை சலவைக்காரன் தன் கைபடத் துவைக்கிறான் அல்லவா? மேலும் யார் யாரெல்லாமோ வீட்டிற்குள் நுழைந்திருப்பார்கள். அவர்கள் மேல் இந்த திரைச்சீலை பட்டிருக்கும் அது தன் மீது பட்டால் தீட்டாகி விடுமே என்று ரத்னேஸ்வர ஐயர் நினைத்திருக்கிறார். இந்த சம்பவம் இன்றும் என் நினைவில் அப்படியே பசுமையாக இருக்கிறது.

கொட்டகையில் அமர்ந்து சினிமா பார்த்திருக்கிறீர்களா?

‘இல்லை, ஆனால் என் போட்டோவை ஸ்லைடாக சினிமா தியோட்டர்ல காட்டியிருக்கிறார்கள். அது ஒரு நல்ல சம்பவம். வண்ணார்ப் பண்ணை சாண்டா தெருவில் நாச்சியம்மா கோயில் பக்கத்தில் வி. கே. நல்லையாவின் நடனப் பள்ளி இருந்தது. அம்மாவிடம் அனுமதி பெற்று அந்தப் பள்ளியில் பரத நாட்டியம் கற்றுக் கொள்ளச் சென்றேன். ஒருநாள் அந்தப் பள்ளிக்கு வந்த ஒரு போட்டோ கிராப்பர் என்னை ஒரு விளம்பரத்திற்கு போஸ் கொடுக்க சொன்னார். பள்ளியின் ஆசிரியரும் என்னிடம் போஸ் கொடுக்க சொல்ல நானும் பரத நாட்டியம் ஆடுவது போல போஸ் கொடுத்தேன். அதற்குப் பிறகு ஒருநாள் எனது அண்ணன் சினிமா பார்க்க போயிருக்கிறார். வெலிங்டன் தியேட்டரில் விளம்பரம் காட்டும் போது எனது போட்டோவை போட்டுக் காட்டியிருக்கிறார்கள். அதைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த அண்ணன் அம்மாவை கடுமையாக திட்டியிருக்கிறார். தியேட்டரில் எத்தனை எத்தனை ஆண்கள் இவள பார்க்கிறாங்க. இனி இவளை யார் கல்யாணம் செய்வான்? என்று திட்டித் தீர்த்தார். இதற்கு பிறகு இவள் அந்த நடனப் பள்ளிக்கும் போக கூடாது. அப்படி மீறிப் போனால் இவளின் காலை முறிப்பேன் என்று கத்தினார். இத்தோடு என் பரத நாட்டிய கனவும் சிதைந்து போனது.

யாழ்ப்பாணத்தில் நாங்கள் பார்த்த சின்ன மேளம் கச்சேரியையும் மறக்க முடியாது.

சின்ன மேளம் மல்லிகா எங்கள் ஊரில ரொம்பவும் புகழ் பெற்ற பெண். ஆடினால் புழுதி பறக்கும். கோயில் வாசலில் தான் இந்த கச்சேரி நடக்கும். அப்படி நடைபெறும் போது புழுதி பறக்க ஆடினால் தான் ஆட்டம் சூப்பர் என்று பாராட்டிப் பேசுவாங்க!’ என்று அந்தக் கால இனிக்கும் அனுபவங்களை  பகிர்ந்து கொண்ட பத்மா சோமகாந்தனிடம் வாழ்க்கையை பற்றிய உங்கள் புரிதல் என்ன என்று கேட்டோம்.

‘வாழ்க்கை சொர்க்கம்! உங்களை விளங்கி கொண்டவர்களையும் பிறரை நீங்கள் விளங்கி கொண்டவர்களாகவும் அமைந்து விட்டால் வாழ்க்கை எல்லோருக்கும் வசந்தமாக அமைந்து விடும்’ என்று தன் வாழ்க்கைக் கோட்பாட்டைக் கூறி பழைய நினைவுகளை நிறைவு செய்து கொண்டார் பத்மா சோமகாந்தன்.

(தினகரன்- ஜூலை -18- 2010)

No comments:

Post a Comment