Tuesday, October 4, 2016

கலைஞர் கே.சோமசுந்தரத்தின் நினைவோ ஒரு பறவை

நேர்காணல்- மணி ஸ்ரீகாந்தன்

இலங்கை தமிழ் நாடக வரலாற்றில் இவருக்கும் ஒரு இடம் இருக்கிறது. 
இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த இவரின் கருவில் உருவான நாடகப் படைப்புகள் எழுபதுகளுக்கு பிறகு தலைநகரின் பல மேடைகளை அழங்கரித்திருக்கிறது.
நெஞ்சோடு நெஞ்சம், ஏனிந்த வாழ்வு, சிந்தனைகள் உள்ளிட்ட பல நாடகங்களுக்கு நாடக கதை வசனம் எழுதியிருக்கும் இவர் தனது அந்தக் கால அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.


கொழும்பு உயர் நீதிமன்றம் அமைந்திருக்கும் வளாகத்தில் உள்ள கடிகார கோபுரத்துக்கு கீழே செல்லும் பாதைக்கருகில் ‘சன்ரைஸ் லொண்டரி’ இருந்தது. கொழும்பு கலைஞர்களால் மறக்க முடியாத இடம் அது. எனக்கும் தான். அந்த லொண்டரிக்கு எதிரில் தான் மோகன் என்ற நடிகரும் இருந்தார். அந்த லொண்டரிக்கு எதிரில் ஒரு வீடு இருந்தது. அங்கே தான் நாடக ஒத்திகை நடைபெறும்.

குறிப்பாக நாடக ஒத்திகைகள் எல்லாம் மாலையில்தான் நடக்கும். நாடக ஒத்திகை முடிய இரவு ஒன்பது மணியாகிவிடும். அதற்கு பிறகு கலைஞர்கள் எப்போதும் சன்ரைஸ் லொண்டரியின் திண்ணையில் அமர்ந்து இரவு பதினொரு மணிவரை அரட்டை அடித்துக்கொண்டிருப்போம். கலைஞர்கள் லெனின், கலைச் செல்வன், கம்பளைதாசன், தென்னிந்திய நடிகர் எஸ். எஸ். சந்திரன், சிக்கந்தர், வி. கே. டி பாலன் உள்ளிட்ட எத்தனையோ கலைஞர்களை அந்த சன்ரைஸ் திண்ணை தாங்கி இருக்கிறது. வாழ்நாளில் மறக்கமுயாத ஒரு சுகமான அனுபவம் சன்ரைஸ் லொண்டரி என்று அந்தக் கால அனுபவங்களின் சுவடுகளை திரும்பி பார்க்கிறார் கே. சோமசுந்தரம்.
அவரின் பூர்வீகம் பற்றி கேட்டோம். அம்மா பெயர் சொர்ணம்மாள். அப்பா கல்யாணசுந்தரம். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே இதே ஜெம்பட்டா வீதியில் தான். என் பரம்பரை வீட்டில்தான் இன்றும் வசிக்கிறேன். குடும்பத்தில் மொத்தமாக ஆறு பேர். அதில் நான்தான் முதல் ஆள். எனது ஆரம்பக் கல்வியை விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தில் கற்றேன். முதல் நாள் வகுப்பிற்கு அம்மாதான் என்னை அழைத்துச் சென்றார். இரண்டு நாட்கள் வகுப்பில் அழுது கொண்டிருந்தேன். மூன்றாவது நாள் வாத்தியாருக்கு தெரியாமல் ஓடி வந்து விட்டேன்.
அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர் கே. வி. செல்லத்துரை, எனக்கு அகரம் கற்பித்தவர் சோதிநாதன் மாஸ்டர்.
சின்ன வயதில் நான் ஒரு பயந்தாங்கொள்ளி. அதனால் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் எந்த சேட்டையும் நான் செய்யவில்லை. எனது பக்கத்து வீட்டில் வசித்த தோமஸ் ஜெயபிரகாசம் தான் என் நெருங்கிய நண்பர். நானும் ஜெயபிரகாசமும் இணைந்து ‘தமிழின்பம்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினோம். அந்த இனிய நண்பர் தோமஸ் ஜெயபிரகாசம் இன்று உயிருடன் இல்லை.

கலைத்துறை பிரவேசம் பற்றி சோமு இப்படி கூறுகிறார்.
‘எனது படிப்பை ஒன்பதாவதோடு நிறுத்திக் கொண்டேன். அதற்குப் பிறகு கிடைக்கின்ற வேலைகளை செய்தேன். கலையார்வம் சின்ன வயதிலேயே எனக்குள் ஒன்றிவிட்டது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.
எனது தாய்மாமன் தம்பிராஜா ஒரு கலைஞர். இலங்கை திராவிடக் கழகத்திலும் இன்னும் பல மன்றங்களிலும் இருந்திருக்கிறார். அந்த நாட்களில் எங்கள் வீட்டில்தான் நாடக ஒத்திகைகள் நடக்கும்.
எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் எங்கள் வீட்டில் நடந்த நாடக ஒத்திகைதான் ஆசைத்தம்பியின் ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற நாடகம். அந்த நாடக ஒத்திகைதான் எனக்குள் ஒரு நாடக ஆசையை விதைத்தது. அதற்குப் பிறகு நானும் எனது நண்பன் தோமசும் நாடகங்கள் பார்க்கச் சென்றோம்.

அப்படி நாங்கள் பார்த்த நாடகங்களில் ஒன்றுதான் ஏகாம்பரம் நடித்த ‘மாந்தருள் மாணிக்கும்’ அதில் ராஜேஸ்வரி சண்முகமும் இருந்தார். அவர்கள் நடித்த ஒரு காட்சி எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. நாடகம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு நானும் எனது நண்பரும் அந்த நாடகத்தின் காட்சிகளை வீட்டில் பேசி நடித்துக் கொண்டிருந்தோம். அதைப் பார்த்த எனது மாமா தம்பிராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது.
நீயெல்லாம் நாடகம் நடிகக் கூடாது என்று அடிக்காத குறையாக மிரட்டினார். அன்று அவர் அப்படி மிரட்டியது எனக்குள் நானும் நாடகக் கலைஞனாக வேண்டும் என்ற அந்த ஆசைத் தீயை அதிகமாக்கியது. அதற்கு பிறகு கலைச்செல்வன், கம்பளைதாசன், லடிஸ் வீரமணி ஆகியோரின் நட்பு எனக்குக் கிடைத்தது.

கம்பளைதாசன் எழுதிய ‘கந்தசாமி பிள்ளை’ என்ற நாகடத்தில் ஒரு சிறிய வேடம் கிடைத்தது. அதில் நடித்தேன். அப்படியொரு காட்சியில் நான் வந்தது எனக்குக் கிடைத்த பெரிய வரம் என்று நான் நினைத்துக் கொண்டேன். கம்பளையின் நாடகத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே நான் வேறொரு நாடகத்திலும் நடித்தேன்.
அந்த நாடகத்தை தோட்டக்காரி நாயகன் பி. எஸ். கிருஷ்ணகுமார் எழுதி இயக்கியிருந்தார். ரட்ணம் வீதியில் இயங்கி வந்த இரவு பள்ளிக்கூடத்தில் நடந்த ஒரு கலைவிழாவில் தான் அந்த நாடகம் மேடையேறியது.
‘சண்டி முரளி’ என்பது அந்த நாடகத்தின்பெயர். அதற்குப் பிறகு என்னைச் சுற்றி நடந்த சில சம்பவங்களை கருவாக வைத்து ‘ஏனிந்த வாழ்வு’ என்ற நாடகத்தை எழுதினேன். அதில் சமுதாயம் நாயகி ஜெயகௌரி அஸாத், எஸ். எம். முஸ்தபா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

அதற்குப் பிறகு ‘நெஞ்சோடு நெஞ்சம்’ எஸ். ஏ. கீர்த்தி, மல்லிகா கீர்த்தி ஆகியோரும் நடித்திருந்தனர். இந்த இரண்டு நாடகங்கள் செய்த பிறகும் கூட நான் அவ்வளவாக பேசப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
என்னை கலையுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி கே. சோமசுந்தரம் என்ற என் பெயரை இந்தக் கலையுலகில் நிலைத்து நிற்கச் செய்த பெருமை கலைமாமணி வி. கே. டி. பாலனையே சாரும்.
நான் எழுதிய ‘சிந்தனைகள்’ நாடகத்தை தயாரித்து மேடையேற்றி அந்த நாடகத்தை வெற்றி பெறச் செய்த பெருமைக்குரியவர் அவர்தான். நான் எழுதிய நாடகங்களில் பல தடவை மேடையேறிய
நாடகம் ‘சிந்தனைகள்’ மட்டும்தான். இந்த நாடகத்திற்கு பிறகுதான் எனக்கு ஒரு அந்தஸ்து கிடைத்தது. எழுபத்தேழில் நடந்த நாடக விழாவில் ஜோன் டி சில்வா மண்டபத்தில்தான் ‘சிந்தனைகள்’ நாடகம் மேடையேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிலப்பிரபுவத்துவத்திற்கு எதிரான போராட்டத்தை மையக் கருவாக வைத்து தெளிவு என்ற நாடகத்தை எழுதி மேடையேற்றினேன்.... என்று தனது கலைப்பிரவேசம் பற்றி விபரித்தார் சோமு.

தான் விரும்பும் எழுத்தாளர்களாக நீர்வை பொன்னையன், இளங்கீரன், எச். எம். பி. மொஹிதீன் ஆகியோரை குறிப்பிடுகிறார் இவர்.
சோமுவின் திருமணம் பற்றி கேட்டோம்?
‘நான் ஒரு கட்ட பிரமச்சாரிங்க....
நான் விரும்பியது கிடைக்கலை. அதனால தான் இன்னும் பிரமச்சாரியாகவே வாழ்கிறேன். நான் ஒரு பெண்ணை விரும்பினேன். அவள் என்னை விரும்புகிறாளோ என்பது எனக்குத் தெரியாது. ஆனால் மனதிற்குள் ஒரு ஆசை! அவளோடு எத்தனையோ மணி நேரம் பேசியிருக்கிறேன். ஆனால் என் காதலை சொல்ல எனக்குத் தைரியம் இல்லாமல் போய்விட்டது.
ஒரு நாள் அவளே அவளின் விருப்பத்தை என்னிடம் சொன்னாள். அதாவது அவள் எனது நண்பனை விரும்புவதாகச் சொன்னபோது அதிர்ந்து போனேன்! அதற்குப் பிறகு எனக்கு எந்தப் பெண்ணையும் பிடிக்கவில்லை...’ என்று தான் திருமணத்தை வெறுத்த காரணத்தை விளக்கினார் சோமு.

தனிமையை கொடுமையானதாக கருதுகிறீர்களா?
‘சில நேரங்களில் எனக்கு விரக்தி ஏற்படத் தான் செய்கிறது. அந்த நேரங்களில் புத்தகங்களும், இலக்கிய நண்பர்களும் தான் எனக்கு ஒரே ஆறுதல்...’
வாழ்க்கையில் தவற விட்டதாக நீங்கள் கருதுவது?
‘என் குடும்பத்தினருக்கு பெரிய அளவில் நான் எந்த உதவியையும் செய்யவில்லை. என் குடும்பத்தில் நான் தான் மூத்தவன். ஆனால் என் அம்மா, தங்கை ஆகியோருக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளை நான் செய்யாமல் தவறவிட்டதை நினைத்து இன்றும் வருந்துகிறேன்’

வாழ்க்கையில் நீங்கள் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது?
‘எனது நாடகங்கள் மேடையில் நடைபெற்று முடிந்த பின் அரங்கை விட்டு நான் வெளியே வரும்போது எனக்கு கிடைக்கும் பாராட்டுகள் எனக்கு பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவை சந்தோஷமான தருணங்கள்...’ என்ற சோமுவிடம் நீங்கள் சந்திக்க ஆசைப்பட்ட வி. ஜ. பி. யார்? என்று கேட்டோம்
‘யாழ்ப்பாணத்தை சேர்ந்த காரத்திகேசு மாஸ்டர். அரசியலிலும், கல்வித் துறையிலும் பிரகாசித்த அந்த மனிதரை கேள்விப்பட்டிருந்தேன். அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன்.
சிந்தனைகள் நாடக போஸ்ட்டர்


முடியாமல் போய்விட்டது....’ என்ற சோமு மறக்க முடியாத நபராக பீட்டர் கெனமனையும் கலைத்துறையில் ஏ. சீ. எம். உசைன் பாருக்கையும் குறிப்பிடுகிறார். மறக்க முடியாத சம்பவம் பற்றி கேட்டோம்.
‘எழுபதுகளுக்கு பிறகு நாடகத் துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களில் வி. கே. டி. பாலன், டீன்குமார், மாத்தளை கார்த்திகேசு உள்ளிட்டவர்களை குறிப்பிடலாம். இவர்களில் மறக்க முடியாத நபர் என்றால் அவர் வி. கே. டி. தான்.
எழுபத்தேழில் நடந்த தேர்தலில் வி. கே. டி. செல்ல சாமியின் வெற்றிக்காக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்த அந்தக் காலங்களில் நான் பீட்டர் கெனமனுக்காக செயற்பட்டுக் கொண்டிருந்தேன். நான் பீட்டர் கெனமனுக்காக வெளியிட்டிருந்த ஒரு துண்டு பிரசுரத்தில் சிந்தனைகள் கே. சோமசுந்தரம் என்று எனது பெயரை குறிப்பிட்டிருந்தேன். நான் எழுதிய நாடகங்களில் ‘சிந்தனைகள்’ நாடகம் தான் என்னை கலையுலகில் பிரகாசிக்க வைத்தது. அதற்காகத்தான் என் பெயருக்கு முன்னால் ‘சிந்தனைகள்’ என்று குறிப்பிட்டிருந்தேன்.

ஆனாலும் அந்த நாடகத்தை தயாரித்தவர் வி. கே. டி. பாலன்தான். அதனால் என்னவோ பாலனுக்கு என் பெயருக்கு முன்னால் நான் அப்படி குறிப்பிட்டது பிடிக்கவில்லை. அதற்கு பிறகு ஒரு வாரம் கழித்து ‘சிந்தனைகள்’ நாடகம் மேடையேற்றப்பட்டது. எனக்கு ஒரு அதிர்ச்சியை வி. கே. டி. பாலன் கொடுத்திருந்தார். நாடக போஸ்டரில் எனது பெயரை அச்சிடாமல் விட்டிருந்தார்.

என் மனதிற்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் நான் பாலனிடம் எதுவும் கூறவில்லை. ஆனால் நடிகர் எஸ். ஏ. கீர்த்தி ‘ஏனய்யா நாடகத்தின் கதையை எழுதியவரின் பெயரை போஸ்டரில் அச்சிடாமல் விட்டுவிட்டீர்களே என்று பாலனிடம் கேட்டுவிட்டார் அதற்கு பாலன் பதில் கூறாமல் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டாராம். நாடகம் மேடையேற்றப்படும் அன்று ஒரு சிறிய துண்டு பிரசுரத்தை பாலன் வெளியிட்டு நாடகம் பார்க்க வருபவர்களிடம் விநியோகித்தார். அதில் என் பெயர் அச்சிடப்பட்டிருந்தது.
பிறகு பாலன் என்னிடம் வந்து போஸ்டரில் என் பெயர் அச்சிடப்படாததற்கு வருத்தம் தெரிவித்தார். அந்த சம்பவத்திற்கு பிறகு ஒரு நாள் எனது நாடகம் ஒன்று மேடையேற்றப்பிடவிருந்தது. அதே தினத்தில் வி. கே. டி. பாலனும் தென்னிந்திய நடிகர்களை வரவழைத்து கொழும்பில் ஒரு கலைநிகழ்ச்சியை மேடையேற்றவிருந்தார்.

நான் வி. கே. டியிடம் சென்று ‘நீங்கள் செய்தது உங்களுக்கே நல்லா இருக்கா? எனது நாடகம் மேடையேறும் அதே தினத்தில் நீங்கள் இந்திய கலைஞர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தினால் எனது நாடகம் பாதிக்கப்படுமே!’ என்று நான் சூடாகப் பேசினேன்.
அதற்குப் பாலன் இதே தினத்தில் தான் நிகழ்ச்சியை நடத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தினத்தை மாற்ற முடியாது என்றும் சொன்னார். எனக்கு அதில் திருப்தி இல்லை. பின்னர்,
‘சோமு! உங்கள் நாடகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு நஷ்ட ஈடாக இந்தப் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள்’ என்று ஒரு தொகை பணத்தை என்னிடம் தந்தார் என்று அந்தக்கால சம்பவங்களை நினைத்து மெய்சிலிர்த்துப் போனார் சோமு!

இளமை காலத்தில் உங்களை அண்ணாந்து பார்க்க வைத்தவர்கள் யார்?
எம். ஜீ. ஆரும், சிவாஜியும் தான்.
எம். ஜீ. ஆர் இலங்கை வந்த போது நான் பார்த்து பிரமித்த ஒரு விடயத்தையும் சொல்ல வேண்டும். எம். ஜி. ஆர். இரத்மலானை விமான நிலையத்தில் தான் விமானம் ஏறினார். நான் எனது நண்பர்களுடன் அங்கு சென்று எம். ஜி. ஆர்.
தாயகம் திரும்புவதை பார்த்தேன். விமான நிலையத்தை சுற்றிநின்ற மக்களுக்கு கையசைத்துவிட்டு அவர் புறப்பட்டு சென்ற பிறகு அங்கு கூடியிருந்த மக்கள் அப்படியே நடந்து கல்கிசை, தெஹிவளை வரையும் வந்தார்கள். வீதியில் ஆலயத் தேர் போகும் போது பின்னால் கூட்டம் நடந்து வருமே அதே போன்று நகர்ந்து வந்தது அந்தக் கூட்டம். பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அங்கே அலையாகப் புரண்டார்கள்.

இலங்கையில் ஒரு நடிகனுக்கு இவ்வளவு கூட்டம் திரண்டது என்றால் அது ‘எம். ஜி. ஆருக்கு மட்டுமே’ என்றவரிடம் இவ்வளவு காலம் வாழ்ந்த வாழ்க்கையில் நீங்கள் கண்ட உண்மைகள் எவை? என்று கேட்டோம்
‘இந்த உலகம் ரொம்பப் பெரியது அதில் நாம் அறிந்தது ரொம்பவும் குறைவுதான். உலகில் உள்ள நிறைய விசயங்களை கற்றுக்கொள்ள நாம் வாழும் காலம் போதுமானதாக இல்லை.
எனக்கு இன்னும் நீண்ட ஆயுள் வேண்டும் என்பதுதான் என் ஆசை! இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை அதை நான் அனுபவித்து விட்டேன்’ என்று கூறி முடித்தார் சோமு.

No comments:

Post a Comment