Saturday, October 29, 2016

மாஸ்டர் சிவலிங்கத்தின் நினைவோ ஒரு பறவை

நேர்காணல்- மணி  ஸ்ரீகாந்தன்


மாஸ்டர் சிவலிங்கம் சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த பெயர். இலங்கையில் தமிழ் சிறுவர் இலக்கியத்தை ஆரம்பித்து வைத்த மூத்த கதை சொல்லி என இவரை அழைக்கலாம்.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கதை சொல்வதையே தொழிலாக கொண்டிருப்பவர் மாஸ்டர் சிவலிங்கம். ஆரம்பத்தில் சிந்தாமணி பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றிய இவர், மட்டக்களப்பு மாநகர சபையில் கதை சொல்லும் கலைஞனாகவும் கடமையாற்றி இருக்கிறார். சென்னை சந்தனு ஆர்ட்ஸ் கல்லூரியில் ஓராண்டு கார்ட்டூனும், வில்லுப்பாட்டும் படித்திருக்கிறார். இவரின் அநேக வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் மட்டக்களப்பிலும் ஏனைய பகுதிகளிலும் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இவரை நம்மவர்களிடையே அறிமுகம் செய்தது அவரின் கதை சொல்லும் பாணிதான். இப்போது நம் எல்லோராலும் பெருமையாக பேசப்படும் ‘சன் டிவியின் அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சியில் சிறப்பிக்கும் கலைஞர்கள் செய்யும் மிமிக்கிரியை இவர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார்.

எழுபத்தேழு வயதிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அசத்தல் மனிதரின் அந்தகால அசத்தும் நினைவுகளை எமக்காக இங்கிருந்து புரட்டுகிறார்.

“எங்க வீட்டுப் பக்கத்தில தான் ‘சென்மேரீஸ்’ பாடசாலை. அங்கேதான் எனக்கு அரிவரி தொடங்கியது. செல்லையா மாஸ்டர்தான் எனக்கு அகரம் கற்பித்த ஆசிரியர். முதல் நாள் பாடசாலை பிரவேசம் இன்றும் என் ஞாபகத்தில் அப்படியே பசுமையாக இருக்கிறது. புதுசட்டை அணிந்து ஸ்கூல் பையோடு சாப்பாட்டு பெட்டி, தண்ணீர் போத்தல் சகிதமாக அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு பாடசாலைக்கு சென்றேன். அங்கே வாத்தியார்கள் எல்லோரும் கையில் பிரம்பை வைத்திருந்தார்கள். அவர்களை பார்க்கவே பயமாக இருந்தது.” என்று தமது பள்ளி வாழ்க்கையின் முதல் நாள் அனுபவம் பற்றி மீட்டியவரிடம் பூர்வீகம் பற்றி கேட்டோம்.

“மட்டக்களப்பு மஞ்சள் தொடுவாய் தான் எனது பூர்வீக மண். எனது அப்பா மஞ்சள் தொடுவாயில் ரொம்பவும் பெயர் பெற்ற மனிதர். இரத்தினம் ஆசிரியர் என்றால் எல்லோருக்கும் தெரியும். அம்மா பெயர் செல்லத்தங்கம். குடும்பத்தில் மொத்தம் ஆறு பேர். நான் ஐந்தாவது” என்ற சிவலிங்கத்திடம் பள்ளிக்கால குறும்பு பற்றிக் கேட்டோம்.

“பள்ளிக்கூடத்தில் நான்தான் வாலு... ரொம்பவும் குறும்பு செய்திருக்கிறேன். பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நண்பர்களை சேர்த்துக் கொண்டு ‘பொறிக்கிடங்கு’ விளையாட்டு விளையாடப் போவேன். அது ரொம்பவும் மோசமான விளையாட்டு. வழியில் நடந்து வரும் ஆட்களை விழவைப்பதற்காக ஒரு அடி ஆழத்திற்கு குழி பறித்து வைத்து அதற்கு மேல் இலை சறுகுகளைப் போட்டு மூடிவிடுவோம். நடந்து வருவோர் அந்தக் குழியில் காலைவிட்டு நிலைதடுமாறி நிலத்தில் விழுவார்கள். அதை ஒழிந்திருந்து பார்த்து ரசிப்பதுதான் எங்கள் வேலை.

‘அந்த விளையாட்டை விளையாடக் கூடாது நீ மற்றவர்களை விழ வைத்தால் அதில் நீயே விழ வேண்டி வரும் அதனால் அந்த விளையாட்டை விட்டு விடு’ என்று அம்மா எத்தனையோ முறை என்னிடம் கூறியும் நான் அதை கேட்கவில்லை. ஒருநாள் பொறிக்கிடங்கு விளையாடுவதற்காக வழியில் பள்ளம் தோண்டி மூடிவிட்டு யாராவது வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டே பின்னால் நடந்து சென்று பற்றைக்குள் பதுங்கும் போது...

இளமையில்
அங்கே எதிர்பாராத விதமாக நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த ஒரு தெரு நாயின் வாலை மிதித்து விட்டேன். அந்த நாய் ஆவேசமாக என் மீது பாய்ந்தது. நானும் தலைதெறிக்க ஓடினேன். ஓடிய வேகத்தில் என்னையறியாமல் நான் வெட்டி வைத்திருந்த பொறிக்கிடங்கிலேயே காலை விட்டு தலைகுப்புற விழுந்தேன். என் தலையில் நல்ல அடி! அம்மா சொன்ன அறிவுரை அப்போதுதான் எனக்கு புரிந்தது. அன்றோடு பொறிக்கிடங்கு விளையாட்டை விட்டு விட்டேன்.

நாங்கள் முந்திரி மரச்சோலையில் ஒளிஞ்சிப் பிடித்து விளையாடுவோம். என் நண்பர்கள் என் கண்ணைக் கட்டிவிட நான் ஒவ்வொருத்தரையும் பிடித்துக் கொண்டிருந்தேன். இடையில் என் கையில் ஒரு பெரிய பருத்த உருவம் அகப்பட்டது. எனக்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது.

நம்ம நண்பர்களில் இவ்வளவு பெரிய உடம்பு யாருக்கும் இல்லையே.... யாராக இருக்கும் என்று யோசிப்பதற்குள் என் தலையில் இடியாக இரண்டு குட்டுகள் விழுந்தன. அய்யோ அம்மா! என்று கத்திக் கொண்டே என் கண் கட்டை அவிழ்த்துப் பார்த்தேன். என் முன்னே கோயில் குருக்கள் நின்று கொண்டிருந்தார். எனக்கு உடம்பு நடுங்கியது.

‘இவன் யாரோடபிள்ளை என்று குருக்கள் ஆத்திரத்துடன் என் நண்பர்களிடம் கேட்க அவர்களும் இவன் இரத்தினம் மாஸ்டரோட மகன் என்று சொல்ல, ஆத்திரப்பட்ட கோயில் குருக்களின் சத்தம் அடங்கியது. ஏனென்றால் எங்கள் ஊரில் என் அப்பாவுக்கு நல்ல பெயர். பிறகு அந்தக் குருக்கள் பயந்தவராக ‘தம்பி நான் உன்னை தலையில குட்டிய விடயத்தை மட்டும் உன் அப்பாவிடம் கூறிவிடாதே!’ என்று சொல்லி விட்டுப் போனார்.

அதற்கு பிறகு எனக்கு இன்று நினைத்தாலும் மயிர்கூச்செறியும் ஒரு சம்பவம் நடந்தது. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது மரத்தில் ஏறி குருவி பிடிப்பதென்றால் எனக்கு கொள்ளை பிரியம். பள்ளி நண்பர்களுக்கு குருவி பிடித்துக் கொடுப்பேன். அதிகமாக குக்குரு பாஞ்சான் குருவி தான் பிடிப்போம். ஒரு மரத்தில் குக்குரு பாஞ்சான் குருவி ஆறு குஞ்சுகள் பொறித்து இருந்ததைப் பார்த்தேன்.
திருமணக் கோலத்தில்
ஆனால் அவற்றுக்கு சிறகு முளைத்திருக்கவில்லை. அதுபற்றி என் நண்பர்களிடம் கூற அவர்களும் ஆளாளுக்கு ஒன்று என்று கேட்டார்கள். நானும் சிறகு முளைத்ததும் பிடித்துக் கொண்டு வருவதாக வாக்குறுதி கொடுத்தேன். சில நாட்களுக்குப் பின் பள்ளிக்கூடம் போகும் போது.

குக்குரு பாஞ்சான் குருவியை பிடிப்பதற்காக புத்தகத்தை மரத்தடியில் வைத்து விட்டு மரத்தில் ஏறினேன். மரத்தின் பொந்துக்குள் கையை விட்டேன். என் கையில் ஏதோ நொளு நொளு என்று பிடிபட்டது. எங்கேடா குருவியை காணோமே என்று நினைத்தவாறு கீழே இறங்கி வந்தேன்.

சிறிது தூரம் வந்த பிறகு தான் புத்தகத்தை மறந்து அந்த மரத்துக்கு கீழேயே விட்டுட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது. திரும்பவும் அந்த மரத்தை நோக்கி ஓடினேன். அங்கே சென்று புத்தகத்தை எடுத்து விட்டு அந்த மரத்தை பார்த்தேன்.

என் உடம்பெல்லாம் அதிர்ச்சியில் ஆடிப்போனது. ஏனெனில் அந்தக் குக்குரு பாஞ்சான் குஞ்சு இருந்த அந்த பொந்திலிருந்து ஒரு புடையன் பாம்பு வெளியே நெளிந்து வந்தது. அப்போதுதான் என் கையில் நொளு நொளு என்று பிடிபட்டது அந்த புடையன் பாம்புதான் என்பது புரிந்தது.

அப்படியே அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்து விட்டேன்.

சின்ன வயசிலே நான் யார் என்ன சொன்னாலும் கேட்பதில்லை. எங்கள் ஊரில இருந்த கண்ணகி அம்மன் கோயில் பக்கம் யாரும் தனியாகப் போகக்கூடாது. குறிப்பாக உரும நேரம் எனப்படும் நடுப்பகல் வேளையில் போகவே கூடாது என்று சொல்வார்கள்.

ஏனென்றால் அப்படியான நேரங்களில் சிலம்பு சத்தம் அந்த இடத்தில் கேட்பதாக ஊரில ஒரு கதையும் அடிபட்டது. எனது விளையாட்டு புத்தி அதையெல்லாம் சட்டை செய்வதில்லை. ஒரு நாள் முற்பகல் வேளையில் ஒரு காலி டின்னை எடுத்துக்கொண்டு கண்ணகி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள நாவற்பழம் மரத்தடிக்கு நாவற்பழம் பொறுக்கச் சென்றேன்.

நிலத்தில் வீழ்ந்து கிடக்கும் பழங்களை பொறுக்கி டின்னில் போட்டுக்கு கொண்டிருந்தபோது சாம்பிராணி வாசனை அடித்தது. நானும் கோயில்ல பூசாரிதான் சாமிக்கு சாம்பிராணி காட்டுகிறார் போல என்று நினைத்துக் கொண்டு நாவற் பழங்களையெல்லாம் பொறுக்கி எடுத்துக் கொண்டு நிமிர்ந்தேன். அங்கே கண்ணகி அம்மன் கோயில் வாசலில் ஒரு ஆறு, ஏழு அடி உயரமான வெள்ளை சேலை அணிந்திருந்த ஒரு பெண் தலைவிரி கோலமாக நின்று கொண்டிருந்தாள். அவளது கூந்தல் நீளமாக தரையைத் தொட்டுக் கொண்டிருந்தது.
அவள் என்னைப் பார்த்து கையசைத்து அழைத்தாள். அப்போதுதான் இந்தக் கோயில் பக்கம் இப்படியான நேரங்களில் வரக்கூடாது என்பது எனக்கு புரிந்தது. அந்தப் பெண்ணை பார்த்துக் கொண்டு ஓட எத்தணித்த போது முன்னால் இருந்த கேர்ட்டில் என் முகம் இடிபட்டு கீழே விழுந்தேன்.

பிறகு ஒருவாறு எழும்பி தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். வீட்டில் நடந்த விடயத்தை சொன்னேன். அப்போதே எனக்கு குளிர்க் காய்ச்சல் வந்து விட்டது” என்று தமது பாணியில் தனது குறும்புத் தனங்களை தொகுப்பாக கதைமாதிரி சொல்லி முடித்த மாஸ்டரிடம். கதை சொல்லும் கலைஞனாக நீங்கள் எப்படி மாறினீர்கள் என்று கேட்டோம்.

மகன்,மற்றும் துணைவியாருடன்

“நான் சிறுவனாக இருக்கும் போதே என் பாட்டியிடம் நிறைய கதை கேட்டிருக்கிறேன். என் பாட்டியின் பெயர் வள்ளிப்பிள்ளை. அவர் சொன்ன கதைகளை அப்படியே என் பாடசாலை நண்பர்களிடமும் கூறுவேன். பின்னேரங்களில் வீட்டுப் பக்கத்தில் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து கதை சொல்வேன். என் கதையை கேட்க ஒரு கூட்டமே இருக்கும்.

குதிரை ஓடுவது, மன்னரின் சிரிப்பு, என்று கதைக்குள் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குரல்களை மிமிக்கிரி செய்து சொல்வேன். நான் இப்படி கதை சொல்லும் விடயம் நான் உயர் தரம் படித்த மட்டக்களப்பு இந்துக் கல்லூரி முழுவதும் பரவ அங்கே ஆசிரியராக இருந்த புலவர்மணி பெரிய தம்பிப் பிள்ளை என்னை ஒருநாள் அழைத்தார்.

‘தம்பி நீ டாம். டூம் டூமீல் என்று கதை சொல்கிறாயே ரேடியோவில வாய்ப்பு வாங்கித் தந்தால் கதை சொல்வியா?’ என்று கேட்டார். நானும் சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்கலாம் என்றேன்.

அதன்படியே இலங்கை வானொலியிலிருந்து சைவ நற்சிந்தனை நிகழ்ச்சிக்கு புலவர் மணிக்கு கடிதம்வர அவர் என்னை கொழும்புக்கு அழைத்துச் சென்றார். சிறுவர் மலர் சரவணமுத்து மாமாவிடம் என்னை அறிமுகம் செய்து கதை சொல்ல வைத்தார். கதை சொல்ல ஆரம்பித்தேன். அவருக்கு அது பிடித்திருந்தது.

அன்றிலிருந்து ரேடியோவில் கதை சொல்ல, ஒரு கதைக்கு பத்து ரூபா தந்தார்கள். அதற்கு பிறகு சிறுவர் மலர், டி.வி. என்று எனது கதையை இலங்கை முழுவதும் வாழும் தமிழ் சிறார்களும், பெரியார்களும் கேட்டு மகிழ ஆரம்பித்தார்கள்” என்று தமது கதைப்பிரவேசம் பற்றி கூறியவரிடம் காதல் அனுபவம் பற்றிக்கேட்டோம்.

எனக்கு ரசிகைகளிடம் இருந்து நிறைய காதல் கடிதங்கள் வந்திருக்கின்றன. ஆனால் எனக்குள் இருந்த சாதிக்க வேண்டும் என்ற வெறியால் அந்தக் காதல் கடிதங்களை கிழித்துப் போட்டு விட்டேன். எனக்கு வரவிருந்த காதல் என்கிற தடைக்கல்லை நான் தாண்டியதால்தான் இன்று மாஸ்டர் சிவலிங்கமாக நான் உங்கள் முன் நிற்க முடிந்திருக்கிறது. எனது திருமணம் வீட்டில் பேசி முடித்ததுதான்.

“என் மனைவியின் பெயர் மங்கையற்கரசி இவர் பண்டிதர் பூபால பிள்ளையின் மகள். கல்லடி முருகன் கோயிலில்தான் எமது திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா ராஜதுரை, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.”

வாழ்க்கையில் தவறவிட்டதாக நீங்கள் நினைப்பது?

“வில்லுப்பாட்டு, கதை சொல்வது என்று கலைக்காக உழைந்ததினால் எனக்கு அரச உத்தியோகம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் வந்தும் நான் அதை பெற்றுக்கொள்ள முயற்சி செய்யவில்லை. நான் தவற விட்டதாக கருதுவது இதைத்தான்.”

மறக்க முடியாத நபர்கள்?

“புலவர் பெரியதம்பிப்பிள்ளை, எஸ்.டி. சிவநாயகம், செல்லையா ராசதுரை உள்ளிட்டோரை மறக்க முடியாது.”

ம்.... அது ஒரு காலம் என்று ஏங்குவது?

“என் வீட்டுப் பக்கத்தில் இருந்த முந்திரி சோலை மற்றும் நாங்கள் ஓடிப்பிடித்து விளையாடி மகிழ்ந்த அந்த பெரிய ஆலமரம் ஆகியன இருந்த சுவடே இன்று இல்லை. இன்றும் அந்த இடத்தை கடந்து போகும் போதெல்லாம் எதையோ தொலைத்துவிட்ட சோகம் என்னை சூழ்ந்து கொள்கிறது.”

நீங்கள் கடந்து வந்த வாழ்க்கையை பற்றிய புரிதல், பற்றி கூற முடியுமா?

“வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானது. அவ்வப்போது சில சோகங்கள் எட்டிப்பார்க்கத்தான் செய்யும். வாழ்க்கை என்றால் மேடு பள்ளம் இருக்கத்தான் செய்யும். எதையும் தாங்கும் இதயம் இருந்தால். வாழ்க்கையை வசந்தமாக்கி நாமும் மகிழ்ச்சியாக இருக்கலாம்” என்றார் மாஸ்டர் சிவலிங்கம்.

No comments:

Post a Comment