Tuesday, October 25, 2016

பத்திரிகையாளர் டேவிட்ராஜ் பேசுகிறார்.


நேர்காணல் - மணி ஸ்ரீகாந்தன்

இலங்கையில் மிக மூத்த பத்திரிகையாளர்களில் முதன்மையானவர் டேவிட்ராஜ். கொழும்பிலிருந்து வெளியாகும்  வீரகேசரி, தினக்குரல் உள்ளிட்ட நாளேடுகளில் பணியாற்றிய இவரின் பயணம் மிகவும் நீளமானது.சில வருடங்களுக்கு முன்பாக தினக்குரல் அலுவலகத்தில் அவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.அந்த இனிய சந்திப்பின் போது டேவிட் மனம் திறந்து பேசியவைகளில் சிலவற்றை இங்கே பதிவு செய்திருக்கிறேன். டேவிட்ராஜ் இன்று உயிரோடு இல்லையென்றாலும் அவரின் அந்தக் கால நினைவுகளை படிக்கும் போது இனிக்கிறது, நீங்களும் படித்து பாருங்களேன்…

“எனக்கு அம்மான்னா உயிர்! அம்மாவை விட்டுப்போட்டு நான் எப்போதுமே இருந்ததில்லை. என்னோட பிறந்தவங்க ஏழு பேர். அதில் நான் மூன்றாவது. நான் வேலணை மத்திய கல்லூரியில் படிக்கும் போது வாரத்திற்கு இரண்டு முறை அம்மா என்னை பார்க்க வருவா. அப்போது அம்மா வாழையிலையால எனக்காக கட்டிக்கொண்டு வரும் மத்தியான சாப்பாட்டை நினைக்கும் போதே அந்த வாசனை இப்போதும் கமகமக்கிறது.... மூக்கைத் துளைக்கிறது.

 பொரியல் குழம்பு என்று நயினா தீவுக்கே உரித்தான சாப்பாட்டின் சுவை அம்மாவின் கை மணம் அப்பப்பா.... அந்த சாப்பாட்டின் சுவையை அதற்குப் பிறகு நான் சுவைக்கவேயில்லை. ஒரு முறை அம்மா டவுனுக்கு போகும் போது என்னையும் அழைத்துச் செல்லும்படி கேட்டேன். ஆனால் அம்மா அதற்கு சம்மதிக்க வில்லை. அழுது புரண்டு பார்தேன் ஒன்றும் நடக்கவில்லை.
அம்மா அந்த தெருமுனையில் சென்று மறையும் வரை நான் அழுது கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு எனக்கு ஆத்திரம் வர வீட்டில் இருந்த பெரிய கத்தியை எடுத்து வந்து எங்கள் வீட்டிற்கு முன்னாலிருந்த வாழை மரங்களை ஆத்திரம் தீரும் மட்டும் வெட்டி வெட்டி சாய்த்தேன். பிறகு அந்த மரங்களை ரொம்ப தூரத்திற்கு இழுத்துச் சென்று போட்டுவிட்டு வந்தேன். அதன் பிறகே என் கோபம் தணிந்தது.

அதன்பிறகே நான் வாழை மரங்களை வெட்டியது பெரிய தவறு என்பது எனக்கு புரிந்தது. அம்மா அடிப்பா என்ற பயமும் எனக்கு வர வெட்டிய மரங்களின் அடிபாகத்தின் மீது மணலை அள்ளி கொட்டி மரம் இருந்த அடையாளத்தை அப்படியே மறைத்து விட்டேன். வீட்டிற்கு அம்மா வந்த பிறகு ஒன்றுமே நடவாதவாறு நான் இருந்தேன்.

வீட்டிற்கு முன்னால் நின்றிருந்த ஐந்து வாழை மரங்கள் இருந்த இடத்தை மணலால் மூடி மறைக்க முடியுமா என்ன! கோபம் கொண்ட அம்மா என் முதுகில் இரண்டு போட்டாள். முதுகு எரிந்தது.... அது ஒரு காலம்! இன்று நினைத்தாலும் சுகமாக இருக்கிறது” என்று தமது கடந்த கால நினைவுகளை மீட்டுகிறார் டேவிட்ராஜ்.

அவரின் பூர்வீகம் பற்றி இப்படிச் சொல்கிறார்.

“நயினாதீவு எனது பூர்வீக மண். அப்பா பெயர் இளையவர், அம்மா சிவகாமி. எனது இயற் பெயர் வேலாயுதம். ஆனால் டேவிட்ராஜு என்றால் தான் எல்லோருக்கும் தெரியும். எனது வீட் டிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில்தான் நயீனாதீவு சிறுவர் பாடசாலை.

பாடசாலைக்கு நடந்துதான் செல்ல வேண்டும். முதல் நாள் வகுப்பு ஞாபகத்தில் இல்லை. அங்கே எனக்கு படிப்பித்த கந்தப்பு மாஸ்டர்தான் எனக்குள் ஒளிந்திருந்த திறமைகளை கண்டுபிடித்து எனது அம்மா, அப்பாவிடம் சொன்னவர். ‘இவனிடம் நல்ல திறமை இருக்கு. இவனை நன்றாக படிக்க வைத்தால் எதிர்காலத்தில் பெரிய ஆளாக வருவான்’ என்று எனக்கு நற்சான்றிதழ் தந்தவர். இல்லையென்றால் என்னை யாருக்கும் அடங்காதவன் என்று என்னை படிக்க வைக்க முன்வந்திருக்க மாட்டார்கள். அதனால் கந்தப்பு மாஸ்டரை என்னால் மறக்க முடியாது. ஆரம்ப பாடசாலையை தொடர்ந்து நாகபூசணி வித்தியாலயம், வேலணை மத்திய கல்லூரி, அதற்கு பிறகு யாழ். ஸ்டேன்லி கல்லூரி என பள்ளி வாழ்க்கை தொடர்ந்தது. அங்கே தான் எஸ்.எஸ்.சி. படிக்கப்போனேன்.
தன் மகனுடன் டேவிட்ராஜ்
ஆனாலும் அம்மாவின் நினைவு என்னை வாட்டியது. தனிமை எனக்கு பிடிக்கவில்லை அதனால் கல்லூரிக்கு தெரியாமல் வீட்டிற்கு வந்து விட்டேன். பிறகு சில நாள் கழித்து வீட்டாரின் வற்புறுத்தலின் பேரில் கொழும்பு சினமன் கார்டனில் உள்ள அலெக்ஸாண்டர் கல்லூரிக்கு படிக்க வந்தேன்.

நயினாதீவிலிருந்து என்னை உறவினர் ஒருவர் கொழும்பிற்கு அழைத்து வந்தார். மருதானையில் புகாரி ஹோட்டலுக்கு பக்கத்தில் தங்கியிருந்து படித்தேன். எனது படிப்பு செலவிற்கு வீட்டிலிருந்து பணம் வரும்.

ஒரு நாள் எனது அப்பாவின் நண்பரான செல்லையா என்னிடம் வந்து ‘நீ இங்கே படித்துக் கொண்டிருக்கிறாய் ஆனால் ஊரில உன் அப்பா ரொம்ப கஷ்டப்படுகிறார்’ என்று சொன்னார். நான் அதிர்ந்துபோனேன். அதற்குப் பிறகு எனக்கு படிக்கப் பிடிக்கவில்லை. ஒரு நாள் நான் தங்கியிருந்த விடுதியில் இருந்த ஒரு ஆசிரியர், வீரகேசரி பேர்ப்பரில் சப் எடிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் வந்திருப்பதை என்னிடம் காட்டினார். அதற்கு ஒரு விண்ணப்பம் போட்டுவிட்டு காத்திருந்தேன். என்னை வரச்சொல்லி பதில் கடிதம் வந்தது. அதன் பிறகு வீரகேசரியில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது வெங்கட்ராம ஐயர் ஆசிரியராக இருந்தார். எனக்கு முதல் சம்பளமாக நூற்றி பதினைந்து ரூபாய் தந்தார்கள். அப்போ ஒரு ஷர்ட் பதினைந்து ரூபாய், கலிசன் இருபது ரூபாய். நான் உயர்தர படிப்பை நிறுத்தி விட்டு வீரகேசரியில் வேலைக்கு சேர்ந்த விடயம் எனது வீட்டாருக்கு தெரியாது. சில காலம் சென்று தான் அவர்களுக்கு நான் படிப்பை இடைநிறுத்தியது தெரிந்தது என்று தனது வரலாற்றின் சில பக்கங்களை எமக்காக புரட்டியவரிடம், பாடசாலை காலத்து நண்பர்களை ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டோம்.
வீரகேசரி அலுவலகத்தில்

“ஆரம்ப பாடசாலையில் ஒரே பெஞ்சில் உட்கார்ந்து படித்தவர்கள் செல்வரட்ணம், தனிநாயகம், வேலாயுதம் ஆகியோர் இன்றும் என் நினைவுகளில் இருக்கிறார்கள் என்றார்.

இளமையில் செய்த குறும்புகளில் இன்று நினைத்தாலும் இனிக்கும் சம்பவம்?

“எங்க வீட்டுப் பக்கத்திலிருந்து ஒரு மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் கோயில் திருவிழா ஒன்று நடைபெற்றது. அங்கு போவதற்கு நானும் எனது நண்பர்களும் முதல் நாளே பேசி முடிவெடுத்து விட்டோம். அதன்படி மறுநாள் இரவு ஏழு மணியளவில் அந்தக் கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வழியில் ஒரு வீட்டுக்கு பக்கத்தில் ஒரு மாட்டு வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு ஆசை வந்து விட்டது. அந்த மாட்டு வண்டியை எடுத்துக்கொண்டு நாங்களே அதை ஓட்டிக்கொண்டு கோயிலுக்கு போனால் எப்படியிருக்கும் என்று யோசித்தேன். எப்படியும் விடிவதற்கு முன்பே வந்து விடலாம் என்று யோசித்து என் யோசனையை எனது நண்பர்களிடம் சொல்ல அவர்களும் அதை ஆமோதித்தார்கள். அந்த வீட்டை எட்டிப் பார்த்தோம், ஒரே நிசப்தம். ஆட்கள் எல்லோரும் துங்கி விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம். பிறகு வண்டியில் ஏறி மாட்டை தட்டினோம், அந்த மாடு நகரவில்லை. பிறகு எனக்கு ஒரு யோசனை வர, நம்ம தமிழ் சினிமாவில் வரும் ‘ஜல்லிக்கட்டு’ காளைப் போட்டியில் மாட்டின் வாலை முறுக்குவார்கள். அதேமாதிரி நானும் மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினேன். மாடு தறிக்கெட்டு ஓடியது. ஆரம்பத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் அந்த வண்டியில் இருந்தேன். பிறகு மாடு எங்களுக்கு ஒத்துழைக்க ஆரம்பித்து விட்டது. ஏ.... ஏய் என்று வாயில் மாட்டு வண்டிக்காரர் போல சத்தம் எழுப்பி நான் வண்டியை ஓட்டிச் சென்றேன். கோயிலை அடைந்ததும் மாட்டை ஒரு ஓரமாக நிறுத்தினோம்.

என் நண்பர்களில் ஒருவன் ‘மாடு பாவம், அதை வண்டியிலிருந்து அவிழ்த்து புல் இருக்கும் இடத்தில கட்டிவிடுவோம்’ என்றான். அவனின் வேண்டுகோளை ஏற்று மாட்டை வேறிடத்தில் கட்டிவிட்டு கோயில் திருவிழாவில் கலந்தோம். நீண்ட நேரத்திற்கு பிறகு நாங்கள் வீட்டிற்கு வரத் தயாரானோம். மாட்டை அவிழ்த்து வர என் நண்பன் போனான். அவன் போன வேகத்திலேயே திரும்பிவந்தான். அய்யய்யோ மாட்டைக் காணோம் என்றான். நாங்களும் ஓடிச் சென்று பார்க்க அங்கே மாட்டைக் காணவில்லை. அந்த பகுதி முழுவதும் தேடிப்பார்த்தோம் கிடைக்கவில்லை. பிறகு வண்டியை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டோம். மறுநாள் ‘வண்டி திருட்டு’ சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த சில நாட்களில் மாட்டையும் வண்டியையும் மீட்டவர்கள் திருடிய ஆட்களையும் அடையாளம் கண்டனர்.
பிரேமதாச தம்பதியினருடன்
பாவம் என் நண்பர்கள் மாட்டிக்கொண்டார்கள். அவர்களை ஊர் பெரியவர்களிடம் அழைத்துச் சென்று தண்டனை கொடுத்திருக்கிறார்கள். என் அப்பாவிற்கு ஊரில் நல்ல பெயர் இருந்ததால் என்னை தண்டிக்காமல் விட்டு விட்டார்கள்” என்று தன் ‘ஏவன்’ குறும்பை அவிழ்த்துவிட்டார் டேவிட் ராஜ்.

காதல் பற்றி கேட்டோம்,

“எனக்கு மூன்று காதல். என் வாழ்க்கையின் இனிமையான அந்த நாட்களை மறக்க முடியாது. கடைசியாக வீரகேசரிக்காக கண்டியில் பணியாற்றிய போதுதான் எனக்குள் மூன்றாவது காதல் மலர்ந்தது. குளு குளு கண்டியின் அந்த சுகமான காதல் இன்றும் என் இதயத்திற்குள் ஜிலீர் அடிக்கிறது. இப்படி நான் போகுமிடமெல்லாம் காதலிக்கும் விடயம் என் வீட்டாருக்கு தெரியவர அவர்கள் எனக்கு கால் கட்டுப்போட நினைத்தார்கள். ஒருவனுக்கு கல்யாணம் செய்து வைப்பதை எங்கள் ஊரில் கால் கட்டு என்றுதான் சொல்வார்கள். அதன்படி என் வீட்டார்களின் சம்மதத்துடன் எனக்கு ‘கால்கட்டு’ கல்யாணம் நடந்தது. மனைவி பெயர் பெர்ணாடட். யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு தேவாலயத்தில் எங்கள் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு எனது நண்பர்களும், உறவினர்களும் கலந்து கொண்டார்கள். நான் சரியான குழப்படி என்பதால், திருமணம் செய்து கொடுத்து விட்டால் இவன் திருந்தினாலும் திருந்துவான் என்பதற்காகவே இந்தத் திருமணம் நடைபெற்றது. எப்படியோ இருந்த இவன் இப்போ இவ்வளவு தூரத்துக்கு வளர்ந்து ஆளாகி மனுஷனாகிவிட்டானே என்ற வியப்பு என் குடும்பத்தாருக்கு இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. இந்த மனித விதை எப்படி வேண்டுமானாலும் வளரும்.
அபூர்வமான புகைப்படம்: வீற்றிருப்போர்
(இ-வ)அன்னலட்சுமி,கமலா தம்பிராஜா,
ராஜகோபால் சிவபிரகாசம்,அன்றைய
வீரகேசரி ஆசிரியர் கே.வி.எஸ்.வாஸ்.
மற்றும் டேவிட் ராஜ்.
பின்வரிசை:(இ-வ)முதலாவதாக கார்மேகம்
ஐந்தாவது மித்திரன் சூரியகுமார்,ஏழாவது நடராஜா.
ம்... அது ஒரு காலம் என்று நீங்கள் ஏங்குவது?

“நயினாதீவிலிருந்த எனது வீடு, அப்புறம் நான் என் நண்பர்களோடு குளிக்கப்போகும் வள்ளிக்காடு கிணறு... அது ஒரு காலம்... திரும்பவும் வரவே வராது” என்று பதில் தந்தவரிடம் கடந்து வந்த வாழ்க்கையை பற்றிய தங்களின் புரிதல் என்னவென்று கேட்டோம்.

“வாழ்க்கை நாம் வாழும் விதத்தை பொறுத்து அமையும். அதில் வெற்றியையும், தோல்வியையும் நாம் தான் தீர்மானிக்கிறோம்.

முயற்சித்தால் முடியாதது எதுவுமே இல்லை. நான் நினைத்ததை பெரும்பாலும் வெற்றிகரமாக முடித்து இருக்கிறேன். வாழ்க்கை இனிமையானது” என்று திருதியோடு விடைபெற்றார் டேவிட் ராஜ்.

No comments:

Post a Comment