Thursday, October 20, 2016

கலகக்காரர் மல்லிகை ஜீவாவின் இனிக்கும் நினைவுகள்

நேர்காணல் - மணி  ஸ்ரீகாந்தன்

"உலக எழுத்தாளர்களில் சவரக்கடையை சர்வகலாசாலை என்று சொன்ன ஒரே எழுத்தாளன் நான் மட்டும்தான். அதுவும் ஒரு தமிழன், யாழ்ப்பாணத்தான். அந்த மண்ணில் நிலவிய தீண்டாமை என்கிற சாதி கொடுமையிலிருந்து உயிர்த்தெழுந்து உலக எழுத்தாளர்கள் பட்டியலில் என் பெயரையும் நிலை நிறுத்தியது சாதாரண விடயம் அல்ல.

அதற்கு நான் நிறைய விலை கொடுத்திருக்கிறேன். நான் ஐந்தாம் வகுப்பில் படிக்கும்போது ஆசிரியர் கரும்பலகையில் ஒரு கணக்கை எழுதினார். அந்தக் கணக்குக்கும், நான் கொப்பியில் எழுதிய கணக்கும் முரண்பட, நான் துணிச்சலாக எழும்பி ‘சேர் நீங்கள் எழுதிய கணக்கு பிழை’ என்றேன்.
நான் அப்படி சொன்னதை கேட்ட வகுப்பு மாணவர்கள் கொல் என்று சிரிக்க அந்த வாத்தியாருக்கு கோபம் வந்துவிட்டது. என்னை முறைத்து பார்த்து விட்டு சோக்கை என் கையில் கொடுத்து ‘செய் பார்ப்போம்’ என்றார். நானும் கரும்பலகையில் அந்தக் கணக்கை ஒரு நிமிடத்திலேயே சரியாக செய்து முடித்தேன்.

இதைப் பார்த்த அந்த வாத்தியாரின் பார்வையில் கணல் தெறித்தது. என்னை எரித்து விடுவது போல பார்த்தார். ‘நீயெல்லாம் ஏண்டா இங்கே வந்து எங்களை வதைக்கிறீங்க போய் சிரையுங்கடா....!’ என்றார். அவர் அப்படி சொன்னதற்கு பிறகும் என்னால் அவரிடம் படிக்க முடியுமா? அன்றோடு எனது படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். என்னை பட்டதாரியாக்கி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட என் அம்மாவின் கனவு சாதி வெறியினால் சிதைந்து போனது.

அம்மா என்னிடம் எவ்வளவோ மன்றாடியும் நான் பள்ளிக்கூடம் செல்ல மறுத்துவிட்டேன். அப்பாவுடன் சலூன் வேலைக்குச் சென்றேன். என்னை கேவலமாக பேசிய அந்த வாத்தியாரை விட நான் சாதிக்க வேண்டும் என்ற இலட்சிய தீ என்னுள் கொழுந்துவிட்டு எரிந்தது...” என்று தனது கடந்தகால அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார் டொமினிக் ஜீவா. தமது பூர்வீகம் பற்றி இப்படி கூறுகிறார்.

“யாழ்ப்பாண ரயில்வே ஸ்டேசனுக்கு முன்னால்தான் எனது வீடு. அப்பா பெயர் ஜோசப். அம்மா மரியம்மா. குடும்பத்தில் மூன்று ஆணும் ஒரு பெண்ணுமாக மொத்தம் நாலு பேர். நான் இரண்டாவது. என் அப்பா யாழ். நகரில் சலூன் கடை நடத்தி வந்தார். கடையின் பெயர் ஜோசப் சலூன்.
தமிழக கம்யூனிட்ஸ் கட்சி கல்யாண சுந்தரத்துடன்
எனக்கு ஏழு வயதாக இருக்கும்போது என் அப்பா சொந்தமாக ஒரு பஸ் வாங்கி கீரிமலைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் பஸ் சேவையொன்றை நடத்தினார். அப்பாவின் முயற்சியும் உழைப்பும் இன்று நினைத்தாலும் எனக்குள் பூரிப்பை ஏற்படுத்துகிறது” என்றவரிடம் எழுத்துலக பிரவேசம் பற்றிக் கேட்டோம்.

“இந்தத் துறை கைப் பழக்கத்தில் வருவது அல்ல. குடும்ப பாரம் பரியமோ, திறமை என்றோ குறிப்பிட முடியாது. நம்மை பாதிக்கின்ற சில விசயங்கள் அதற்கு நாம் கொடுக்கும் விலை என்பதை வைத்துதான் ஒரு எழுத்தாளன் உருவாகிறான். நான் என் வாழ்க்கையில் நிறைய விலை கொடுத்திருக்கிறேன்.

அதில் நான் சந்தித்த அவமானங்கள், வேதனைகள், தோல்விகள் போன்ற சம்பவங்களே என் நெஞ்சுக்குள் தீயாக எரிந்தது. அந்த கொதிப்பின் சுவாலைதான் எழுத்தாளன் என்கிற எனது இந்தப் பக்கம். யாழ்ப்பாண சமூகத்தின் சாதிப்பின்னல் மிகப் பயங்கரமானது.

அதிலிருந்து ஒரு தாழ்த்தப்பட்டவன் இப்படி வெளியே வருவது என்பது வரலாறு. சலூனில் வேலை செய்து கொண்டே எனது மல்லிகை வெளியீட்டை நான் மேற்கொண்டேன்.

எனது சலூன் கடையின் முன்னால் ‘மல்லிகை’ என்ற பெயரை பெரிய எழுத்தில் போர்டாக எழுதி மாட்டி வைத்திருந்தேன். மல்லிகை வெளியீட்டிற்கு பிறகு என்னை கிண்டல் செய்தவர்கள், சாதி பேசியவர்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்தார்கள்.

பத்திரிகையை அச்சிட்டு கடைகளுக்கு கொடுத்துவிட்டு மிச்சத்தை ஒரு சைக்கிளில் வைத்து கட்டிக்கொண்டு யாழ்ப்பாணத்தை சுற்றி வருவேன். பள்ளிக்கூடம், தெரிந்த நண்பர்கள் என்று மல்லிகையை அவர்களிடம் விற்பனை செய்தேன்.

அந்த விநியோகம் தான் என்னை நிலை நிறுத்தியது. வெறும் எழுத்தாளனாக இல்லாமல் பேச்சாளனாகவும் நான் இருந்தேன். இதற்கு நான் மேடையை நல்லவிதமாக பயன்படுத்திக்கொண்டேன். யாழ்ப்பாண சமூகத்தை, எழுத்தாலும் பேச்சாலும் மாற்ற பெருமுயற்சி எடுத்தோம். யாழ். மண்ணை பேனாவால் கிழித்து, நாக்கால் உழுதோம் என்று தான் சொல்லவேண்டும்.
ஓவியர் மருதுவுடன்
மேடை பேச்சு என்றவுடன் தி.மு.கவை நாம் மறந்து விட முடியாது. என் போன்றவர்களின் வளர்ச்சியில் தி.மு.கவுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. ஆனால் சில காலங்களுக்கு பிறகு அவர்களின் வேகம் பிசு பிசுத்து போய்விட்டது.

வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்துக்கொண்டு வாணவேடிக்கை காட்டியிருக்கிறார்கள். இந்த உண்மையை நாம் காலம் கடந்து தான் புரிந்துகொண்டோம்” என்ற ஜீவாவிடம், முதல் பாடசாலை பிரவேசம் பற்றிக் கேட்டோம்.

“யாழ். சென் மேரீஸ் பாடசாலைக்கு முதல் நாள் அன்று என் அண்ணனோடுதான் சென்றேன். காலை பத்தரை மணி தாண்டிய பிறகு எனக்கு சிறுநீர் வந்துவிட்டது. ஆனால் டீச்சரிடம் சொல்லப் பயமாக இருந்தது.

எவ்வளவு நேரம் தான் அடக்கி வைத்திருப்பது? கால்சட்டையோடு அடித்துவிட்டேன். பிறகு அடுத்த வகுப்பிலிருந்த என் அண்ணனை அழைத்து என்னை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அந்தப் பாடசாலையில் எனக்கு அகரம் கற்பித்த ஆசிரியர்தான் தங்கம்மா டீச்சர். அன்றிலிருந்து இன்றுவரை நான் எழுதுவதற்கு பேனாவை தொடும்போதெல்லாம் தங்கம்மா டீச்சரை நினைத்து விட்டுதான் எழுதவே தொடங்குவேன்.

நான் சாகித்திய விருது பெற்ற பின்னர் யாழ்ப்பாணம் சென்றதும் முதலில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றது தங்கம்மாவிடம் தான். அப்போது எனக்கு ஐம்பது வயதிருக்கும். தங்கம்மாவும் ரொம்பவும் வயதுபோய் இருந்தார்” என்றவரிடம் ஒரு நல்ல சம்பவம் பற்றி வினவினோம்.
சரஸ்வதி ஆசிரியர் விஜயபாஸ்கரன் 
அமர்ந்திருக்க (இ-வ) கே. டானியல், 
திருச்செல்வம், நீர்வை பொன்னையன், 
டொமினிக் ஜீவா.
“மல்லிகை தொடங்கிய அந்த நாட்களில் எனக்கு இரண்டு பிள்ளைகள். மல்லிகை மட்டுமே எனக்கு இருந்த ஒரே நம்பிக்கை. சைக்கிளில் அலைந்து திரிந்து ஒரு பத்து மல்லிகையை விற்றுவிட்டு வீட்டுக்கு வருவேன். விறாந்தையில் எனது மாமா படுத்திருப்பார். என்னைக் கண்டதும் ‘ஒ.... உழைப்பாளி வந்திட்டாரு... உழைச்சி களைச்சி வந்தவருக்கு பீங்கானை கழுவி கெதியா சாப்பாடு கொடுங்கோ’ என்று குத்தலாகக் குரல் கொடுப்பார். அவர் அப்படி சொல்வது என் இதயத்தை முள்ளால் குத்திக் கிழிக்கும் ஆனாலும் நான் அவரை எதிர்த்து பேசியதில்லை. அதற்கு ஒரு காரணமும் இருந்தது. நான் எனது மாமா மகளைதான் திருமணம் முடித்திருந்தேன். அவர் அம்மாவின் அண்ணன். எனது அம்மா பிறந்த பிறகு அம்மாவின் தாய் இறந்துவிட அவரை தூக்கி வளர்த்தவராம் அவரின் அண்ணன். அதனால் அவர் என்ன சொன்னாலும் நீ எதிர்த்து பேசக்கூடாது என்று என் தாய் என்னிடம் வாங்கிய சத்தியம். அதை மீற முடியுமா? அதனால் அவர் என்னை எப்படி எல்லாம் குத்திக் கிழித்தாலும் நான் வாய் திறப்பதில்லை. தாங்கியிருக்கிறேன். பின்னர் நான் பெயர் பெற்றவனாகி எனக்கு சாஹித்திய விருது கிடைத்ததும் நான் முதல் தடவையாக யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். ரயில் நிலையத்தில் என்னை யாழ். மேயர் வரவேற்றார். அப்போது என்னைத் திட்டிக்கொண்டிருந்த எனது மாமா அங்கே இருந்தார். மாமா என்னை மேயரிடம் காட்டி, ‘அய்யா இவர் யார் தெரியுமோ? இவர் என் மருமகன்! என் மகளைதான் கூட்டியிருக்கிறார்” என்று பெருமிதத்துடன் அறிமுகப்படுத்தினார். பார்த்தீர்களா நான் கொடுத்த விலையை!” என்று சொல்லி தனது ‘ஸ்டார்’ சிரிப்பை கொட்டினார் ஜீவா.

காதல் பற்றி கேட்டோம்.

“யாழ்ப்பாணத்தில் ஒரு சமயம் ‘கானிவேல்! நடைபெற்றது. அங்கே கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. அன்றைய நாளில் டிக்கட் எடுப்பது பெரிய கஷ்டமான காரியம். யார் கெட்டிக்காரனோ, யாருக்கு வல்லமை இருக்கிறதோ அவன் டிக்கட் வாங்கிவிடுவான். நான் இப்படியான பெருங்கூட்டத்தில் நுழைந்து டிக்கட் வாங்குவதில் கில்லாடி. எங்களுக்கு பிடித்த நாயகனின் படத்தை முதல் நாளில் முதல் காட்சியில் பார்த்துவிட வேண்டும் என்ற வெறி. புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் ஒரு படத்தின் கதையை யாரும் எங்களுக்கு முதலில் சொல்லக்கூடாது என்பது ஒரு வரையறை. அதற்காகவே முதல் காட்சியில் முதல் ஆளாக டிக்கட் எடுப்பேன். ‘அசோக்குமார்’ படத்திற்கு டிக்கட் வாங்கும்போது கவுண்டருக்குள் விட்ட கையை வெளியே எடுக்க முடியாமல் என் கை முறிந்தது. உண்மையைச் செல்லப்போனால் நான் அன்றைய கதாநாயகன்தான். இனி விசயத்திற்கு வருவோம். காணிவேலுக்கு முன்னால் ஒரு நான்கு இளம் பெண்கள் நின்று கொண்டு டிக்கட் எடுக்க முடியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள். பிறகு அதில் ஒரு பெண் என்னிடம் பணத்தைக் கொடுத்து டிக்கட் எடுத்து வரும்படி கேட்க, நானும் அந்தக் கூட்டத்தை கிழித்துக்கொண்டு உள்ளே நுழைந்து சில நிமிடங்களில் டிக்கட்டோடு வெளியே வந்தேன். பெண் கேட்ட உதவியை செய்யாதிருந்தால் இழுக்காகிவிடாதா, என்ன? டிக்கட்டை கொடுத்ததும் அந்தப் பெண் நன்றி என்று புன்னகைத்தாள். அவ்வளவுதான். நான் அந்த புன்னகையில் சிறைப்பட்டு போனேன். அதற்கு பிறகு நமது தமிழ் சினிமாவில் வரும் நாயகன் போலவே நானும் மாறினேன். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவளைப் பார்த்து விடவேண்டும் என்று என் மனது கிடந்து துடிக்கத் தொடங்கியது. யாழ்நகரில் 3ம் குறுக்குத் தெருவில் தான் அவரின் வீடு இருந்தது. என் வீட்டிலிருந்து நடந்தால் ஒரு இருபது நிமிடத்தில் அவள் வீட்டை அடைந்துவிடலாம். நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவள் வீட்டுக்கு முன்னால் உள்ள தெரு வழியாக ஒரு நாளைக்கு பத்து முறையாவது சுற்றி வருவேன். அவள் பார்த்து விட்டால் போதும், உடம்பில் மின்சாரம் பாய்ந்துவிட்ட மாதிரி ஒரு உணர்வு தோன்றி மறையும், காதலித்தவர்களுக்குத் தான் அந்த உணர்வு என்ன என்பது புரியும்.
“அவளோ சாதியில் ரொம்பவும் உயர்ந்தவள். நானோ தாழ்த்தப்பட்டவன். ஆனால் எங்கள் காதலுக்கு முன்னால் சாதி ஒரு தடையாக இருக்கவில்லை. ஒரு நாள் அவளும் நானும் வீட்டை விட்டு ஓடிப்போக முடிவு செய்தோம். அவளின் வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய கேற்டும், பின்னால் ஒரு சிறிய கேற்டும் இருக்கும். பின் கேற் பக்கம் நிறைய மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து நிற்கும். அங்கே உள்ள அந்த சிறிய கேற்டில் கையை வைத்து சாய்ந்திருக்கலாம். அங்கேதான் நானும் அவளும் மாலை நேரத்தில் சந்திப்பதுண்டு. நாங்கள் ஓடிப்போக நாளும், நேரமும் குறித்த பிறகு அன்று மாலை நான் அவளை அழைத்துச் செல்வதற்காக அந்த கேற் பக்கமாகச் சென்றேன். அந்த கேற்றை நெருங்கியதும் அவளின் பெயரை மெதுவாக உச்சரித்தேன். அதற்கு மறுமுனையில் தம்பி என்று பதில் வந்தது. நான் அப்படியே ஆடிப்போனேன். அங்கே எனது காதலியின் அம்மா நின்றுகொண்டிருந்தாள்.

‘தம்பி உன் மீது நான் கோபமில்லை. நீயும் என்னை மாதிரி ஒரு தாய் பெற்ற பிள்ளைதான். நீ இன்று என் மகளோடு போகப் போறதை நான் கேள்விப்பட்டுதான் நான் இங்கே வந்தனான். தம்பி, எனக்கு இருக்கிறதோ ஒரே பிள்ளை. நீங்கள் இப்படி ஏதாவது செய்தால் இந்த மரத்தில் நான் தூக்கில தொங்குவன். எனக்கு வேறு வழியே தெரியவில்லை. அதனால் எனக்கு நீ ஒரு சத்தியம் செய்துகொடு. இனி அவளை நீ பார்க்க கூடாது. நான் இப்படி உன்கிட்டே சத்தியம் வாங்கிய விடயத்தையும் அவளிட்ட சொல்லக்கூடாது” என்று என்னிடம் சத்தியம் வாங்கி கொண்டாள். அந்தத்தாய், நான் தான் கொடுத்த சத்தியத்தை மீறமாட்டேனே! அவளுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை இனி மீறவா முடியும்? காதலை கைவிட்டு அந்த இடத்திலிருந்து தலையை தொங்கப் போட்டுக்கொண்டு நான் வந்து விட்டேன். அதற்கு பிறகு எனக்கு யாழ்ப்பாணத்தில் இருக்கப் பிடிக்கவில்லை. விரக்தியுடன் கொழும்புக்கு வந்துவிட்டேன். அதற்கு பிறகு இன்றுவரை நான் அவளைச் சந்திக்கவில்லை. யாழ்ப்பாணத்திற்கு செல்லும் போதெல்லாம் எனக்கு பயமாக இருக்கும். எங்கே அவளை வழியில் எங்காவது பார்த்துவிடுவேனோ....! அப்படி பார்த்து விட்டால் என்ன செய்வது என்ற பயம்! அவள் தாய்க்கு நான் செய்த சத்தியத்தை விட அவளை ஏமாற்றியது எவ்வளவு பெரிய பாவம்! ‘டேய் நீ யெல்லாம் ஒரு மனிதனா கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாமல் இப்படி ஏமாற்றி போட்டாயே! என்று அவளின் கண்கள் பேசினாலே நான் குறுகிப் போய்விடுவேன். நான் எவ்வளவு சுயநலவாதி! அவள் அம்மாவின் சத்தியத்திற்காக உயிருக்குயிராக காதலித்த காதலியை மறந்துவிட்டு வந்துவிட்டேன்! அவள் அன்று எத்தனை ஆசைகளோடும், கனவுகளோடும் இருந்திருப்பாள். அவள் மனது என்ன பாடுபட்டிருக்கும். தவறு செய்துவிட்டேன்...! (இதை சொல்லும்போது ஜீவாவின் நா தழுதழுக்கிறது)

திருமணம் பற்றியும் தன் ஞாபகங்களை அவர் மீட்டினார்.

என் மனைவி பெயர் ராணி. யாழ்ப்பாணம் சென் மேரீஸ் ஆலயத்தில் எங்கள் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு எழுத்தாளர் செ. கணேசலிங்கம், கணக செந்தில் நாதன், டேனியல் உள்ளிட்ட நண்பர்கள் பலர் கலந்துகொண்டார்கள்”

பள்ளிக் காலத்தில் செய்த குறும்பு ஞாபகத்தில் இருக்கிறதா என்று கேட்டோம்.

“எங்க வீட்டு வழியே பஸ் போகும் அந்த ஒழுங்கையால நான் சில நண்பர்களுடன் பஸ்சுக்கு காத்திருப்பது போல காத்திருப்போம். பஸ் வந்ததும், நாங்கள் பஸ்சை நிறுத்துவோம். வேகமாக வந்த பஸ் பிரேக் போட்டு நின்றதும் நாங்கள் அடுத்த நொடியே அந்த ஒழுங்கையால ஓடுவோம். பஸ்காரனுக்கு விசயம் விளங்க பஸ் கண்டக்டர் எங்களை துரத்தி கொண்டு வருவான். இரவு நேரத்தில் நானும் எனது நண்பர்களும் எங்களின் உறவுக்காரர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் குசினிக்குள் திருட்டுத்தனமாக புகுந்து அங்கிருந்த உணவுகளை எல்லாம் எடுத்து சாப்பிட்டு விட்டு பீங்கானில் கரித்துன்டால் ‘பட்டினி பட்டாளம்’ என்று எழுதி வைத்து விட்டு வந்து விடுவோம். மறுநாள் காலையில் அவர்கள் வீட்டு சாப்பாடு திருட்டு போனது பற்றி ஒரே கசமுசவாக இருக்கும்” என்று தமது கடந்த கால குறும்புகளை மகிழ்ச்சியாக அவிழ்த்துவிட்டார் டொமினிக் ஜீவா.

வாழ்க்கையில் எதையாவது தவற விட்டிருக்கிறீர்களா?

“நான் தவறவிட்டதாக கருதிய எத்தனையோ விடயங்கள் எனக்கு வெற்றியைத் தந்திருக்கின்றன. அந்த வாத்தியார் என்னை அப்படி திட்டியிருக்காவிட்டால் நன்றாகப் படித்து ஒரு அரசாங்க ஊழியனாக வேலை செய்து இப்போது பென்சன் வாங்கி மூலையில் குந்தியிருப்பேன். டொமினிக் ஜீவா என்ற மனிதர் வெளிச்சத்திற்கு தெரிந்திருக்கமாட்டார். நான் காதலியை இழந்த அந்த தவிப்புதான் என்னை ஒரு புடம்போட்ட எழுத்தாளனாக்கியது என்பதையும் மறுப்பதற்கில்லை”.

அது ஒரு காலம் என்று நீங்கள் ஏங்குவது?


“நான் பள்ளிக்கூடம் போகும் வழியில் ஒரு பெரிய மாமரம் நிற்கும். அதில் காய்க்கும் மாங்காய் நல்ல ருசி. அந்த வழியை கடக்கும்போது எப்படியும் மாங்காய் மரத்திற்கு கல் எறிந்து விடுவேன். அந்த மரத்து சொந்தக்காரருக்கு ஒரு கை ஊனம். அதனால் அவரை ‘சொத்திக்கையா’ என்றுதான் அழைப்போம். நாங்கள் மாங்காய்க்கு கல் எறிவதைக் கண்டால் அந்த மனிதர் எங்களை அடிக்க துரத்துவார். அவருக்கு தண்ணி காட்டிவிட்டு நாங்கள் ஓடிவிடுவோம். அந்த மாமரம் தந்த சுவை இன்று நினைத்தாலும் நாவில் உமிழ் நீர் சுரக்க வைக்கிறது. அந்த மாமரத்தை அண்மையில் யாழ்ப்பாணம் சென்றபோது பார்த்தேன். ஓரிரு இலைகளுடன் முதுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கோலத்தில் அந்த மரத்தை பார்த்தபோது, எதையோ இழந்துவிட்ட தவிப்பு என்னுள் எழுந்தது.

ஈழத் தமிழர்களிடம் ‘தீண்டாமை’ ஒழிக்கப்பட்டுவிட்டதா?

“அங்கே தீண்டாமையுடன் பிரதேச வாதமும் இருந்தது. அவன் எங்களைவிட குறைந்தவன் என்று சொல்வதில் ஒரு ஆத்ம திருப்தி அவர்களுக்கு. ஆனால் யுத்தத்திற்கு பிறகு யாழ். தமிழர்களின் திமிர், பணக்கொழுப்பு, சாதித் தடிப்பு, நிலத்தின் மீதானா ஆதிக்கம் ஆகியவை அப்படியே மாறிப் போய்விட்டது. இன்று வயதானவர்களின் உள்மனங்களில் மட்டுமே சாதி ஒழிந்துகொண்டிருக்கிறது. வருங்கால இளைய தலைமுறை சாதியை வளர்க்காது என்பது என் நம்பிக்கை.

வாழ்க்கையை பற்றிய தங்களின் புரிதல்?

“வாழ்க்கை தேங்கிக் கிடக்கும் குட்டை அல்ல. அது ஓடும் நதி. ஒரு இடத்தில் மான், புலி, கரடி தண்ணீர் குடிக்கும். மற்றொரு இடத்தில் ஒரு மனிதன் குளித்துக்கொண்டிருப்பான். அதற்கு கொஞ்சம் கீழே சென்று பார்த்தால் ஒரு பெண் அந்த தண்ணீரை எடுத்துச் சென்று உணவு சமைத்துக்கொண்டிருப்பாள்.

இப்படி பல சம்பவங்களில் பயணம் செய்வது தான் வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் நான் வெறும் பார்வையாளன் மட்டுமல்ல இந்த வாழ்க்கைக்காக நான் நிறைய விலை கொடுத்தும் இருக்கிறேன்.”

(தினகரன்-22-08-2010)

No comments:

Post a Comment