Tuesday, October 18, 2016

பிரபல வர்த்தகர் எஸ்.டி.எஸ். அருளானந்தன் பேசுகிறார்….


நேர்காணல் - மணி  ஸ்ரீகாந்தன்
 
தலைநகர் கொழும்பின் தலைசிறந்த மனிதர்களில் இவருக்கும் ஒரு பெயர் இருக்கிறது. ஓசையின்றி இந்து மதப் பணிகளுடன் இந்து - பௌத்த ஒற்றுமைக்காகவும் பாடுபட்டு வருபவர். நாவுக்கு ருசியாக உணவு படைக்கும் சைவ உணவகங்களில் முதன்மை வகிக்கும் கிரீன் லன்ட்ஸ் ஹோட்டலின் உரிமையாளரும் கொழும்பு கட்டிடப் பொருள் உரிமையாளர் சங்கத் தலைவராகவும் பதவி வகிக்கும் அருளானந்தன், இலங்கையில் அமைந்திருக்கும் ஐந்து பௌத்த ஆலயங்களை நிர்வகித்து வருபவர். கதிர்காம ஆலய நிர்வாகப் பணிகளில் முக்கியஸ்தராக நின்று பணி செய்துவரும் இவர் அடக்கமானவர். சமுக சேவகர். இப்பக்கத்தின் வாயிலாக இவரை வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் நாம் பெருமை அடைகிறோம். இவர் இங்கே தன் அந்தக்கால அனுபவங்களை உங்களுக்கு சுவைபட சொல்கிறார்.

“இன்றைக்கு நான் ஒரு உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு என் தந்தையின் உழைப்புதான் முழுக் காரணம். யாழ்ப்பாணம் காங்கேசன் துறையிலிருந்து 1913ம்ஆண்டு கொழும்பிற்கு வந்த என் தந்தை ஒரு கடையில் மாதம் ஒரு ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். பின்னர் அவரின் உழைப்பின் அடையாளங்களாக உருவானவைதான் லீலா ஸ்டோர்கள், லீலா பிரஸ், மற்றும் கிரீன்லாண்ட் ஹோட்டல் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள்.

செல்லதுரை என்கிற என் அப்பாவின் பெயரை கொழும்பு வர்த்தக உலகம் என்றைக்கும் மறக்காது. அம்மாவின் பெயர் சௌபாக்கியம். அவர் தெல்லிப்பளையை வதிவிடமாகக் கொண்டவர். என் குடும்பம் ரொம்பச் ‘சிறிய’ குடும்பம். மொத்தம் பத்து ஆண் சகோதரர்கள். (அப்படிச் சொல்லும் போதே அருளானந்தம் முகத்தில் சிரிப்பு) ஒரு கிரிக்கெட் டீம் மாதிரிதான் என் அப்பாவுடன் சேர்த்தால் நாங்கள் பதினொரு பேர்!
இளமையில்

எங்களை ஒரு கிரிக்கெட் டீம் என்றே முன்னாள் அதிபர் பிரேமதாச அழைப்பார். எங்கள் குடும்ப நண்பர்களில் முக்கியமானவர் பிரேமதாச. எனது மூத்த அண்ணன்தான் சட்டத்தரணி சுந்தரலிங்கம். இரண்டாவது சட்டத்தரணி பாலேந்திரா. மூன்றாவது அண்ணனும் ஒரு டொக்டராக இருந்தவர். நாலாவதாக பிறந்த நான் அப்பாவுடன் இணைந்து வர்த்தகராகிவிட்டேன்” என்று தனது கடந்த கால வரலாற்று அத்தியாயங்களை புரட்ட தொடங்குகிறார் அருளானந்தன்.

அருளானந்தத்திடம் ஆரம்ப கல்வியைப் பற்றிக் கேட்டோம்.

“பம்பலப்பிட்டி பிள்ளையார் பாடசாலையில் தான் என் முதல் அரிவரி தொடங்கியது. அந்தப் பிள்ளையார் பாடசாலைதான் இன்று இந்துக் கல்லூரியாக உயர்ந்து நிற்கிறது. பிள்ளையார் பாடசாலை தொடங்கப்பட்ட ஆரம்பநாளிலேயே நான் பாடசாலையில் சேர்ந்துவிட்டேன். மொத்தமாகவே இருபத்தெட்டு பிள்ளைகள்தான் படித்தார்கள். அவர்களில் நானும் ஒருவன். ஆரம்பத்தில் ஐந்தாம் ஆண்டுவரை மட்டுமே அந்தப் பாடசாலையில் படிப்பிக்கப்பட்டது. அதற்குப் பிறகு இரத்மலானை இந்துக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கே சட்டத்தரணி மங்களேஸ்வரன், ஸ்ரீகனநாதன் உள்ளிட்டவர்கள் எனக்கு நண்பர்களானார்கள்.

இரத்மலானை கல்லூரில் படிக்கும் போது தான் 58 இனக் கலவரம் வந்தது. அந்தக் கலவரத்தோடு அப்பா என்னை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மஹஜனா கல்லூரிக்கு அனுப்பிவிட்டார். அதற்குப் பிறகு எனது படிப்பு மஹஜனாவில் தொடர்ந்தது.

கொழும்பிலிருந்து நான் சென்றதால் டிப்டொப்பாக  சூபோட்டு பாடசாலைக்கு வருவதை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். சில மாணவர்கள் என் சேர்ட்டை பிடித்து பார்ப்பதும் உண்டு. அப்போதெல்லாம் டியூஷன் என்ற வார்த்தையே கிடையாது.
மனைவியுடன்
பாடசாலை முடிந்த பிறகு சில ஆசிரியர்கள் ஒரு மணிநேரம் இலவசமாக படித்துக் கொடுப்பார்கள். அவர்களில் கந்தையா மாஸ்டர், முருகையா மாஸ்டர் உள்ளிட்டவர்களை என்னால் மறக்க முடியாது. அந்த ஆசிரியர்கள் படிக்கும் மாணவர்களின் குடும்ப நிலவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.

அந்தளவிற்கு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமிடையே ஒரு உறவு இருந்தது. ஆனால் இன்று அப்படி அல்ல. வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள். அவ்வளவுதான்” என்ற அருளானந்தத்திடம், படிக்கும் காலத்தில் நீங்கள் எப்படி, ரொம்பக் குறும்போ? என்று கேட்டோம். “நான் சரியான வாலு! இரத்மலானை இந்துக் கல்லூரியில் படிக்கும் போது பாடசாலை முடிந்து வீட்டிற்கு வரும் போது ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் பிரதான வீதிக்கு வரவேண்டும். அங்கு வந்துதான் ஸ்கூல் பஸ்ஸில் வீட்டுக்கு வருவோம். குறுக்கு வழியே வந்தால் பிரதான வீதியை விரைவாக அடைந்து விடலாம்.

அதற்காக பாடசாலைக்கு பக்கத்திலிருந்த சேர் ஜோன் கொத்தலாவலையின் வீட்டுத் தோட்டத்திற்குள் நுழைந்து வீதிக்கு வருவோம். அப்படி அந்தத் தோட்டத்தை கடக்கும் போது கொத்தலாவலையின் தோட்டக் காவல்காரன் எதுவும் கண்டுகொள்ள மாட்டான். ஆனால் அவனின் மகன் மோசமான ஆள்.

எங்களை முன்னால் போகவிட்டு பின்னால் கல்லால் அடிப்பான். அவனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். ஒருநாள் புத்தகப் பையோடு ஒரு கம்பையும் எடுத்துக்கொண்டு கொத்தலாவல தோட்டத்தை கடந்தோம். அப்போது தோட்டக்காரனின் மகன் எங்களை சீண்டிப் பார்க்க பின்னால் வந்தான்.
நான் சடாரென்று பிரேக்போட்டு நின்றேன். அவன், ‘என்னடா, சண்டைக்கு வர்றாயோ?’ என்றான். நான் எதுவும் பேசாமல் அடுத்த வினாடியே என் கையில் இருந்த தடியால் அவனை விளாசித் தள்ளினேன். அய்யோ, அம்மா என்று கத்திக்கொண்டு ஓட்டம் பிடித்தான் அவன். அதற்குப் பிறகு அந்த பையனை அந்தப் பக்கமே பார்க்க முடியவில்லை.

எனக்கும் என் நண்பர்களுக்கும் திருட்டு மாங்காய் அடித்து சாப்பிடுவது ரொம்பவும் பிடித்த விசயம். சிவராத்திரி இரவில வெள்ளவத்தை மாணிக்கப் பிள்ளையார் கோயிலுக்குச் செல்வோம். அந்த லோரன்ஸ் வீதியின் வழி நெடுகிலும் நிறைய மாமரங்கள் நிற்கும். அந்த மரங்களில் தொங்கும் மாங்காய்களை நோக்கி கல் எறிவோம். நாங்கள் அடிக்கும் கல் தவறி வீட்டுக் கூரைகளில் விழுந்தால் வீட்டுக்காரர்கள் “டேய் யார்ரா அவன் அர்த்த ராத்திரியில் கல் அடிக்கிறது?” என்று அலறியபடியே ஆத்திரத்துடன் ஓடி வருவார்கள். நாங்கள் தலைதெறிக்க எஸ்கேப் ஆகிவிடுவோம். அப்படி ரிஸ்க் எடுத்து திருட்டு மாங்காய் சாப்பிடுவதில் ஒரு சுவை இருக்கும். திருட்டு மாங்காய் தின்று பார்த்தவர்களுக்குத்தான் அந்த டேஸ்ட் புரியும்...” என்று சொல்லிச் சிரிக்கிறார் அருளானந்தன்.

மேலும் தனது குறும்புகளில் ஒன்றையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் :

இரத்மலானையில் படிக்கும் போது காலியாக இருக்கும் கதிரையில் பேனா மையை தெளித்து வைத்துவிட்டு யாராவது ஒரு அப்பாவி ஜீவன் வந்து உட்காராதா என்று பார்த்துக் கொண்டிருப்போம். இந்த ஆட்டத்தில் பெண்கள் தான் எங்களுக்கு பலிகடாக்கள். ஏனென்றால் வெள்ளை கவுண் போட்டிருப்பார்கள் கதிரையில் மை தெளிக்கப்பட்டிருப்பதை அறியாது அப்பாவியாக அதில் அமர்ந்துவிடுவார்கள். பிறகு எழும்பிப் போகும் போது கவுனின் பின்பக்கம் நீல மை அப்பிக் கிடக்கும். அதைப் பார்த்து ‘கொல்’லொன்று கூட்டத்தோடு சேர்ந்து சிரிப்பதில் எனக்கு ஒரு அலாதி இன்பம். இந்த குறும்புத் தனத்திற்காக என் கை விரல்களை மடக்கி அந்த விரல்களின் மேற்புறத்தில் வாத்தியார் அடிமட்டத்தால் அடித்திருக்கிறார். பாடசாலை வாத்தியார்களின் உச்சபட்ச தண்டனைகளில் இதுவும் ஒன்று. ஆனால் அன்று வாத்தியார்மார் அடித்த அடிகள் அப்போது வலித்திருந்தாலும் இன்று அவை நினைத்தாலே இனிக்கும் அனுபவங்களாகிவிட்டன....” என்று தாம் கடந்து வந்த வாழ்க்கை பயணத்தின் சுவையான பகுதிகளை அசைபோடுகிறார் அருள்.

அருளானந்தத்திடம் சிறுபராயத்தில் முகத்தில் மீசை வரைந்து கட்டபொம்மன் வேடம் போட்டிருக்கிறீர்களா? என்று கேட்டோம்.

“கட்டபொம்மன் வேடம் போட்டதில்லை. பள்ளிக்கூடத்தில் நடந்த நாடகத்தில் ராமர் வேசம் போட்டிருக்கிறேன். அதற்கு பிறகு சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்கு பற்றி இருக்கிறேன். இந்துக் கல்லூரியில் படிக்கும் போது நன்றாக பாடுவேன். எனது சங்கீத டீச்சர் அம்பிகா தாமோதரம் தான் என்னை சிறுவர் மலர் நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். அப்போது நேரடி ஒலிபரப்புதான். அந்த ஒலிபரப்பு அறையில் தேன்கூடு மாதிரி ஒரு மைக் தொங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து கொண்டு பாடலைப் பாட வேண்டும். நான் பாடிய முதல் பாடல் ஞாபகத்தில் இல்லை. சரவணமுத்து மாமாதான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது....”
பிரேமதாஸவுடன், திருமண பதிவில்

உங்கள் திருமணம் காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா?

“இரண்டும் கலந்தது தான் என் திருமணம். ஆனால், பார்க், பீச், சினிமா தியேட்டர் என்று சுற்றித் திரியும் அளவுக்கு நான் காதல் செய்யவில்லை. அதற்கு காரணம் காதலிக்க எனக்கு நேரமிருக்கவில்லை. லீலா ஸ்டோர்ஸில் இருபத்திரெண்டு வருடங்களாக வேலைபார்த்த மெனேஜர் ஓய்வு பெற அப்பாவுக்கு நம்பிக்கையான ஒரு ஆள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் நானும் எஸ். எஸ். சி. படித்து முடிக்க அப்பாவுக்கு உதவியாக வேலைசெய்ய ஆரம்பித்தேன். அதன் பிறகு எனக்கு திருமணம் பேசினார்கள். எங்கள் குடும்ப நண்பரின் மகளைத்தான் நான் திருமணம் முடித்தேன். என் மனைவியின் பெயர் அமிர்தாம்பிகை. கப்பிகாவத்தை கோயிலில் திருமணம் நடைபெற்றது. ஆர். பிரேமதாஸா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டார்கள். திருமணப் பதிவு பத்திரத்தில் பிரேமதாஸாதான் சாட்சியாக கையெழுத்திட்டார்.”

என்று தமது திருமணம் பற்றிய ஞாபகங்களை பகிர்ந்துகொண்டவரிடம்,

அது ஒரு காலம் என்று நீங்கள் நினைத்து ஏங்குவது? என்று கேட்டோம்


“எனது அம்மா பிரசவ காலத்துக்கு தனது தாய் வீடான தெல்லிப்பளைக்கு சென்று விடுவா. அம்மாவுக்கு நடந்த பத்து பிரசவங்களையும் மருத்துவிச்சி தான் பார்த்தார். அப்போது வைத்தியசாலைக்கு செல்லும் வழக்கம் மிகவும் குறைவு. அப்படி அம்மாவுக்கு பிரசவங்கள் நடக்கும் காலத்தில் நானும் கூடவே போய் விடுவேன். அப்படியான சந்தர்ப்பமொன்றில் ஒரு நாள் ஆர். பிரேமதாஸாவும் வந்திருந்தார். எனது தம்பி பிறந்தபோது அவனுக்கு ‘தேசபந்து’ என்ற பெயரை அவர்தான் வைத்தார். அந்த சந்தர்ப்பங்களில் கீரிமலை குளத்திற்கு குளிக்கப் போவோம். அந்தக் குளத்தில் குளிப்பது ஒரு சுகமான அனுபவம். இன்று நினைத்தாலும் அந்த நினைவு தென்றல் மாதிரி நெஞ்சை வருடுகிறது.

என்னதான் நமக்கு வசதி வாய்ப்புகள் வந்து, ஷவர்பாத், சுடுநீர் பாத் என்று குளித்தாலும் அந்த கீரிமலை குளத்தில் குளிக்கும் சுகம் திரும்ப கிடைக்குமா...!

கொழும்பில் புறக்கோட்டை பஸ்தரிப்பு நிலையத்தில் ஒரு பௌத்த விகாரை இருக்கிறதே அந்த இடத்தில் தான் கொழும்பு துறைமுகத்தில் இருந்து பொருட்களை ஏற்றிவரும் இரட்டை மாட்டு வண்டிகளை கட்டி வைத்திருப்பார்கள்.
அதற்கு பக்கத்தில் தான் எங்களின் லீலா ஸ்டோர்ஸ் கடை இருந்தது. புறக்கோட்டை ‘போகஹா ஹந்திய’ என அழைக்கப்படும் அரச மரத்தடி சந்தியில் ஓங்கி நிற்கும் அரச மரத்தை நாட்டியவரே என் அப்பாதான். அந்த இடத்தில் ஒரு சிறு புத்தர் சிலையும் ஒரு சின்ன உண்டிலும் இருந்தது. வருவோர் போவோர் மற்றும் வண்டிலோட்டிகள் காசுபோடுவார்கள். அப்பா பெரிய உண்டியலாக வைத்தார். மாஹோவில் உள்ள விகாரைக்கு அப்பா அடிக்கடி சென்று வருவார். பிரேமதாசவுக்கு அங்கே காணி இருந்ததும் ஒரு காரணம். இதனால் அந்த விகாரையின் நாயக்க தேரரான பலமுகெதர சோமானந்த தேரருடன் அப்பாவுக்கு நெருங்கிய உறவு ஏற்பட்டது. அங்கிருந்து அரச மரக்கன்று ஒன்றை அப்பாவும் தேரரும் தான் கொண்டு வந்து புறக்கோட்டை சந்தியில் நாட்டி நீர் வார்த்தார்கள். அந்த விகாரையில் அப்பா வழங்கிய மணி போன்ற பொருட்கள் இப்போதும் உள்ளன. அவர் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த இடம் இன்றைக்கு எப்படியோ மாறிப்போய்விட்டது.

நீங்கள் சந்திக்க ஆசைப்பட்டு முடியாமல் போன அந்த நபர் யார்?

ஒரு முறை டெல்லி சென்ற போது இந்திரா காந்தியை சந்திக்க அனுமதி கேட்டோம்.

அனுமதியும் கிடைத்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி எங்களிடம் வந்து அம்மா ரொம்பவும் பிஸி எனவே பின்னர் வாருங்கள் என்று சொல்லிவிட்டார்.

அதற்குப் பிறகு நாங்கள் கொழும்பு வந்துவிட்டோம். நான் விரும்பி சந்திக்க ஆசைப்பட்ட இந்திராகாந்தியை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை”

மறக்க முடியாத சம்பவம்?

“நான் ஒருமுறை சுவிஸ் நாட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு எனது நண்பரின் வீட்டிற்கு சென்ற போது எனது பிரிவ்கேசை காரிலேயே மறந்து வைத்துவிட்டேன். திரும்பி வரும் போது பெட்டி காரில் இருக்கிறதா என்பதைப் பார்க்க மறந்து விட்டேன். சிறிது தூரம் வந்த பிறகுதான் காரில் பெட்டி இல்லை என்பதை உணர்ந்தேன். நல்ல வேளை எனது பாஸ்போர்ட், டிக்கெட்டும் எனது பொக்கட்டில் இருந்தது. வெளிநாட்டு பணமும், சில ஆவணங்களும் தான் அந்த பிரிவ்கேசில் இருந்தன. பிறகு அங்கே இருந்த ஒரு பொலிஸ் ஸ்டேஷனில் முறைப்பாடு செய்துவிட்டு வந்தேன்.

மறுநாள் எனக்கு அந்த பொலிசில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. உங்கள் பிரிவ்கேஸ் கிடைத்துவிட்டது என்றார்கள். நான் சென்று பார்த்த போது அந்தப் பெட்டியில் எனது ஆவணங்கள் மட்டுமே இருந்தன. பணத்தைக் காணவில்லை. நான் அந்த பொலிஸ்காரர்களிடம், ‘உங்க நாட்டிலும் திருடர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறதே!’ என்றேன்.

அதற்கு அவர்கள், ‘உங்கள் பெட்டியை திருடியவர்கள், ஸ்ரீலங்கன்தான்!’ என்று போட்டார்களே ஒரு போடு! அதற்கு பிறகு எப்படி பேச முடியும்? வாயைப் பொத்திக் கொண்டு வந்துவிட்டேன்’

நீங்கள் கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“எனக்கு இப்படியொரு வாழ்க்கையை தந்த கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். வாழ்க்கை இனிமையானது. நாம் செலவிடும் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்கொண்டவையாக மாற்றினால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வசந்தம் வீசும்” என்று சொல்லி முடித்தார் அனுபவஸ்தர் அருளானந்தன்.

(தினகரன்-2010-08-15)

No comments:

Post a Comment