Saturday, October 15, 2016

பேராசிரியர் சோ.சந்திரசேகரத்தின் பசுமை நிறைந்த நினைவுகள்…

நேர்காணல்- மணி ஸ்ரீகாந்தன் 

கொழும்பு பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவராக வீற்றிருக்கும் பேராசிரியர் சோ.சந்திரசேகரம்,இந்நாட்டில் எத்தனையோ தமிழ் பேராசிரியர்கள் இருந்தாலும்,அவர்கள் மத்தியில் பிரகாசிக்கும் பேராசிரியராகவும், இயங்கும் பேராசிரியராகவும் விளங்கி வருபவர் இவரே என்றால் அது மிகையாகாது.
மலையகம்,பதுளையைச் சேர்ந்த சந்திரசேகரம் கல்வி தொடர்பாக பல நூல்களையும், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். உயர் பதவி வகிப்பவராக இருந்தாலும் எளிமையாகப் பழகும் தன்மை கொண்ட, மனிதம்கொண்ட இவர் இங்கே வாசகர்களுக்காக மனம் திறக்கிறார்.“காவிரி தந்த புது மணலில் களம் அமைத்து சேர, சோழ, பாண்டியர் கோபுரத்து கலசத்தில் யார் கொடி பறப்பதென்று இன்று போல் போர் தொடுத்து கொண்டிருந்த காலமது. அந்நாளில் தாய் நாடு காக்கவென்று தாவிப் பாய்ந்து வீர சொர்க்கம் புகுந்தார். தந்தை என்ற செய்தி கேட்டு தனல் கீழ் மெழுகானால் தமிழகத்து கிளியொருத்தி" என்ற கலைஞரின் ராஜா ராணி படத்தின் நீண்ட வசனத்தை மூச்சு வாங்க பேசுகிறார் சோ. சந்திரசேகரம்.
“இந்தக் கனல் தெறிக்கும் வசனங்களை நான் ஏழாவது படிக்கும்போதே எனக்கு மனப்பாடம். இதற்கெல்லாம் எனக்கு உந்து சக்தியாக இருந்தவர் நண்பர் குருசாமி. அவர் என்னோடு ஒன்றாகப் படித்தவர். பதினைந்தாவது வயதிலேயே பெரிய எழுத்தாளர்தான் இந்த குருசாமி. குருசாமியும் நானும் ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடாத்தினோம். பத்து சதத்திற்கு ஒரு கொப்பி வாங்கி அதில் சிறுகதை, சினிமா உள்ளிட்ட விடயங்களை எழுதி எங்கள் பாடசாலை மாணவர்களுக்கு ஐந்து சதத்திற்கு கொடுப்போம்.
இளமையில்.
படித்து விட்டு தரும்படி. சிலர் கொப்பியைத் திருப்பித் தரமாட்டார்கள். அதற்கு பிறகு இந்த குருசாமி அல்லி என்ற பெயரில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார் இரண்டு இதழ்கள் மட்டுமே வெளியாகின. அவரின் நாடகங்களிலும் நான் நடித்திருக்கிறேன். ‘மலர்புரி வீரா, மாணிக்க மனிதா, நீதான் சமூகத்தை மேன்படுத்த வேண்டும்! சமூகமே உனது கையில் தான் இருக்கிறது’ என்ற குருசாமியின் வசனத்தைப் பேசி நான் அவருக்கு தோழனாக நடித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் அண்ணா, கலைஞரின் திரைப்பட வசனங்கள் அடங்கிய நூல்கள் விற்பனைக்கு கிடைக்கும். அதை வாங்கி வாசித்து மனப்பாடம் செய்வது தான் எனக்கு வேலை. ஆனால் தி.மு.க வின் கொள்கைக்கு நான் எதிரானவன். அப்போது எனது தந்தை பதுளையில் ஒரு கடை வைத்திருந்தார். அதில் நிறைய இந்தியத் தமிழர்கள் வேலை செய்தார்கள். அவர்கள் எல்லோரும் அறிஞர் அண்ணாவை மிகவும் உயர்வாக பேசுவார்கள். ஆனால் நான் அதற்கு எதிராக பேசுவேன். ‘திராவிட நாடு’ சரிவராது தி.மு.க உங்களை ஏமாற்றுகிறது என்று சொல்வேன். நான் சொன்னது போலவே அறுபத்திரெண்டில் அண்ணா திராவிட நாட்டுக் கொள்கையை கைவிட்டார். நான் அப்படி தி.மு.காவை எதிர்த்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. நான் அதிகம் விரும்பி படித்தது ‘கல்கண்டு’ சஞ்சிகையைத் தான்.

அந்த சஞ்சிகையில் தி.மு.காவிற்கு எதிரான கருத்துக்கள் இடம்பெறுவது வழமை. அதேபோல் எம். ஜி. ஆருக்கு எதிராகவும் தமிழ்வாணன் எழுதி வந்தார். அதனால் நான் எம். ஜி. ஆருக்கும் எதிராகவே பேசுவேன். அப்படிப் பார்த்தால் எங்கள் மத்தியில் அதிகம் செல்வாக்கு செலுத்தியவர் தமிழ்வாணன் தான். அவரின் பெரிய புகைப்படத்தை வீட்டில் கண்ணாடி பிரேம் போட்டு மாட்டி வைத்திருந்தேன். பிறகு நான் பெரியவனானதும், நானே சுயமாக சிந்திக்கும் திறன் எனக்குள் வந்தவுடன் அந்த தமிழ்வாணனின் படத்தை தலைகீழாக மாட்டிவைத்தேன்.’ என்று தனது பழைய நினைவுகளின் சுவையான பதிவுகளை இங்கே பதிவு செய்யத் தொடங்குகிறார் பேராசிரியர் சந்திரசேகரம்.

இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே பதுளையில். அப்பாவின் பெயர் சோமசுந்தரம். தமிழ்நாட்டின் இராமநாதபுரத்திலிருந்து பதுளைக்கு வந்திருக்கிறார். சந்திரசேகரத்தின் அம்மாவின் பெயர் ருக்மணி அம்மாள். இவருக்கு மொத்தம் ஏழு சகோதரர்கள். இவர்தான் மூத்தவராவார்.

“நான் எனது ஆரம்ப கல்வியை பதுளை ஊவா கல்லூரியில் கற்றேன். அதற்கு பிறகு யாழ்ப்பாணத்தில் கற்றேன். முதல் நாள் பாடசாலை பிரவேசம் எனக்கு ஞாபகத்தில் இல்லை. பாலர் வகுப்பில் என்னோடு மகேந்திரன், நயீம் ஆகியோர் கல்வி கற்றார்கள். அவர்களுடனான எனது நட்பு அறுபது வருடங்களுக்கு பிறகும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பாடசாலைக் காலத்தில் நீங்கள் குறும்புக்காரரா?
“எனக்குள்ளும் குறும்பு இருந்தது தான். ஆனால் பாடசாலையில் அதை காட்டவில்லை. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அப்போது பாடசாலை மாணவர் மத்தியில் வயது வித்தியாசம் அதிகமாக காணப்பட்டது. எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் மீசை முளைத்தவர்களாக இருப்பார்கள். அதனால் நான் சேட்டைகள் எதுவும் செய்வதில்லை. அப்படிச் செய்தால் பெரிய மாணவர்கள் என்னை பிய்த்தெடுத்து விடுவார்கள் என்ற பயம். பெரிய மாணவர்களோடு சிறிய மாணவர்களும் படித்துக்கொண்டிருந்த காலம் அது.

ஒரு நாள் நானும் சக மாணவர்களும் பாடசாலை முடிந்து வீடு திரும்பும்போது ஒரு மாமரத்தை பார்த்துவிட்டோம். அதற்குப் பிறகு சும்மா இருக்க முடியுமா, என்ன? கல்லை எடுத்து மாங்காய்களை குறி பார்த்து அடித்துக்கொண்டிருந்தபோது தோட்டக்காரன் வந்து விட்டான். தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடினோம். அப்படி கொஞ்சம் தூரம் தான் ஓடியிருப்போம். எங்களுக்கு எதிரில் பாடசாலை அதிபர் நின்றுகொண்டிருந்தார். அவரை பார்த்ததும் சுவரில் பட்ட பந்துப் போல வந்த வழியே திரும்பி ஓட அங்கே தோட்டக்காரன் நின்றுக்கொண்டிருக்க இப்படி இரண்டு பக்கமும் நிற்கும் இருவருக்கும் தண்ணி காட்டிவிட்டு ஓட போதும் போதும்மென்றாகிவிட்டது. இன்று நினைத்தாலும் அந்த நினைவு அப்படியே பசுமையாக இருக்கிறது’ என்கிறார் பேராசிரியர்.

கொட்டகை தியேட்டரில் தரையில் அமர்ந்து படம் பார்த்திருக்கிறீர்களா....?

“ஒருமுறை தமிழ் நாட்டின் ராமநாதபுரத்தில் இருபது சதம் கொடுத்து ஒரு கொட்டகை தியேட்டரில் தரையில் அமர்ந்து சிவாஜி நடித்த பாவ மன்னிப்பு படம் பார்த்திருக்கிறேன். பதுளையிலும் சிவசக்தி சினிமா, ஸ்டார் சினிமா என்று இரண்டு கொட்டகை தியேட்டர்கள் இருந்தன. ஆனால் அங்கு அமர்வதற்கு பெஞ்ச் போட்டிருந்தார்கள். அப்போது எனக்கு சிவாஜியை ரொம்பவும் பிடிக்கும். என்னோடு பிடித்த சக மாணவர்கள். நம்பியாரும், நாகேஷ்வரராவும் தான். சிறந்த நடிகர்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். எனக்கு அவர்களை பார்த்தாலேயே பிடிக்காது.

அந்தக் காலத்தில் ஒரு சினிமாப் படம் பார்த்து விட்டால் அதில் உள்ள பாடல்களை அப்படியே பாடுவோம். தியேட்டர் வாசலில் விற்கும் பாட்டு புத்தகங்களை வாங்கி மனப் பாடம் செய்வோம். எனக்கு இன்றும் குறைந்தது நூறு பாடல்களை முழுமையாகப் பாட முடியும். பாடிக் காட்டுகிறார் பாடல்களை மறக்காமலிருக்க எனது டயறியில் ஒவ்வொரு பாடலின் முதல் அடியை மட்டும் எழுதி வைத்திருக்கிறேன். மேடையில் பேசும்போது யாராவது பாடுமாறு கேட்டால் உடனே பாடிவிடுவேன். பாடுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்’

என்ற சந்திரசேகரம் கலைஞரின் வரிகளால் உருவான பராசக்தி பாடலை மனம் உருகி பாடுகிறார்.

‘இல் வாழ்வினிலே ஒளியேற்றும் தீபன் என் இதயராணி ரூபம் ஓ.. இந்த தீபத்திலே சுடராய் திகழ்வது என் தீரன் ரூபம்...ம்...

இளம் மா மயில் கூவும் ஒ....

உனை காணும்போது நெஞ்சில் கூறிடும்

உணர்ச்சி தனையே

எழுதவோர் எழுத்தும் இல்லையே...

இல் நாளிது போல் தினம் ஆடிப் பாடியே

தேன் போல் வாழ்வோம்...’

என்ற பாடலை பாடிய பேராசிரியர்

அந்தப் பாடலில் கலைஞரின் எழுத்து அடையாளங்கள் இங்கே தெரிகிறது. பாருங்கள் என்று சில வரிகளை மீண்டும் பாடிக் காட்டுகிறார்.

‘கனியே கன்னித் தமிழே அமுதே

பனித் தூவும் மலரே நிலவே

கனிவான மொழியால் எனையே

கவர்ந்தீரே காந்தச் சிலையே.... ‘

என்று விளக்கியவரிடம் செம்மொழி பாடலை கேட்டீர்களா என்று கேட்டோம்!

சந்திரசேகரம் தம்பதிகள்

“கேட்டேன். ஆனால் கலைஞரின் எழுத்துக்களை கேட்க முடியவில்லை. இசையின் ஆக்கிரமிப்பு அதை மறைத்து விட்டது எனக்கு. ஏதோ கத்துவது போலத் தோன்றுகிறது” என்றவரிடம் காதல் அனுபவம் பற்றி கேட்டோம். ‘செய்தி’ பத்திரிகையின் ஆசிரியர் நாகலிங்கம் தான் எனது மாமா. அவரின் வீட்டிற்கு அடிக்கடி போவேன். அவரின் மகளைத் தான் திருமணமும் செய்தேன். அவளுக்கு என் மீது காதல் இருந்ததோ என்னவோ தெரியவில்லை. எனக்கு இருந்தது. அடிக்கடி அந்த வீட்டிற்கு சென்றதற்கு காரணமும் அதுதான். நான்தான் அவளை துரத்தி துரத்தி காதலித்தேன். எங்கள் திருமணம் கண்டி செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு தொண்டமான், அமஸ், இரா. சிவலிங்கம உள்ளிட்டோர் வந்திருந்தார்கள். எனது மாமா பத்திரிகையாளர் என்பதால் அவரின் அழைப்பின் பேரில் தான் அவர்கள் வந்திருந்தார்கள்.’

மறக்க முடியாத நபர்கள்?

“என்னை தெல்லிப்பழை மஹஜனா கல்லூரியில் படிக்க வைத்து என்னை ஒரு உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்ற எனது தந்தை. அப்புறம் பேராசிரியர் முத்துலிங்கம். எனது வளர்ச்சிக்கு பின்னணியில் அவரும் இருந்தார் என்பதை மறக்க முடியுமா. மஹஜனா கல்லூரியில் எனக்கு படிப்பித்த கார்த்திகேசு மாஸ்டர், மகாதேவன் உள்ளிட்டவர்களையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

ம்... அது ஒரு காலம் என்று நீங்கள் ஏங்குவது?

“பதுளையில் எங்கள் வீட்டிலிருந்து நடந்தால் பத்து நிமிடத்தில் பதுளை ஓயா ஆறு வந்துவிடும். நானும் எனது நண்பர்களும் குளிக்கபோகும் இடம் அதுதான். அதில் நானும் எனது நண்பர்களுடன் கரணம் போட்டு குதித்து நீந்தி விளையாடிய அந்தக் காலம்... இன்று நினைத்தாலும் மனசுக்குள் குளிர்ச்சியாக சிலீரடிக்கிறது. அம்மாவுடன் வெலகெதர குழாயில் குளிப்பதும் ஒரு சுகமான அனுபம் தான். அந்த குழாயில் இருந்து வேகமாக வந்து விழும் நீரில் தலையை பிடித்தால் தலைமேல் பெரிய பாரம் விழுவது போல இருக்கும். அப்போது உடுப்புக்கும், உடம்புக்கு சண்லைட் சவர்க்காரம் தான் பாவிப்போம். இன்று பதுளைக்கு போனாலும் அந்த பழைய இடங்களை பார்ப்பேன். நான் வாழ்ந்த வீடு, நீந்திய ஆறு, என்று எல்லாமே அப்படியே இருக்கிறது. ஆனால் பதுளையின் மனிதர்கள் மாறிவிட்டார்கள். அந்த பழைய மனிதர்களை காணவில்லை...” என்று பெருமூச்சு விடுகிறார் சந்திரசேகரம்.

கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றி பேராசிரியர் இப்படிக் கூறுகிறார்.

இந்த பூமியில் நாங்கள் பிறந்ததற்கான அர்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டுமா! அடுத்தவருக்கு உதவி செய்யுங்கள். அப்படி செய்யாவிட்டாலும் பரவாயில்லை அவர்களுக்கு கஷ்டத்தை கொடுக்காதீர்கள்” என்ற திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவின் இந்த சிந்தனைக்கு அமையவே நானும் வாழ்கிறேன். என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். வாழ்க்கை இன்பமானதாகவும், திருப்திகரமாகவும் அர்த்தம் உள்ளதாகவும் அமைந்திருக்கிறது என்று வாழ்க்கையின் அர்த்தத்தை விளக்கி தமது பழைய நினைவுகளிலிருந்து பேராசிரியர் விடைபெற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment