Monday, October 3, 2016

இருள் உலகக் கதைகள்
வீரசிங்கம் பூசாரி சொன்ன பேய்க் கதை
 
கேட்டு எழுதுபவர்- மணி ஸ்ரீகாந்தன்


த்துகமை பொல்கஹாகந்த இறப்பர் தோட்டம் இருள் சூழ்ந்து மயான அமைதியோடு காட்சியளித்தது. அப்போது நேரம் ஆறரை மணியிருக்கும். மத்துகமை நகரில் இயங்கும் இன்சூரன்ஸ் கம்பனியில் வேலை பார்க்கும் செல்லக்குட்டி. வேலை முடிந்து பைக்கில் ஏறி சிட்டாகப் பறக்கத் தொடங்கினார்.

நகரிலிருந்து பொல்கஹாகந்த தோட்டத்துக்கான கல்குழி பாதையில் பைக் தட்டுத் தடுமாறி பயணித்துக் கொண்டிருந்தது. இருள் மங்கும் அந்த நேரத்தில் வீதியின் ஓரத்தில் நின்றிருந்த ஒரு நபர் கைகளை நீட்டி லிப்ட் கேட்க 'தோட்டத்திற்கு போகிறாரு போல'னு  நினைத்த செல்லக்குட்டி, பைக்கை நிறுத்தி அந்த நபரை ஏற்றிக் கொண்டு புறப்பட்டான். அந்த நபர் ஏறி அமர்ந்த பிறகு ஏதோ பெரிய பாறங்கல்லை பின் சீட்டில் தூக்கி வைத்தது போன்ற உணர்வு செல்லக்குட்டிக்கு ஏற்படவே பின்னால் திரும்பி பார்த்தான். அந்த நபரோ  முகத்தை சாந்தமாக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

'பைக்கில்தான் ஏதோ பிரச்சினை போல அதுதான் லோடு இழுக்க கஷ்டப்படுது, பழுது பார்க்கணும்'னு நினைத்தபடியே நிதானமாக செலுத்தினான். எதிரே வந்த தோட்டத்து டிரெக்டருக்கு வழிவிட்டு வளைவில் திரும்பிய போது தோட்டத்து சுடுகாடு வழமைக்கு மாறாக இருள் சூழ்ந்து பயங்கர தோற்றத்தோடு காட்சியளித்தது. அதைப் பார்த்த செல்லக்குட்டிக்கும் மயிர் கூச்செறிய ஆக்சிலேட்டரை முறுக்கி பைக்கின் வேகத்தை அதிகரித்தான்.

அண்மையில் இறந்து போன மாரிமுத்து சுடுகாட்டில் உலாவுவதாக ஒரு கதை தோட்டத்தில் பரவியிருந்தது. அது நினைவுக்கு வந்ததும் செல்லக்குட்டிக்கு பீதி அதிகரித்தது. தினமும் வேலை முடிந்து வீடு வரும் அவனுக்கு அந்த சுடுகாட்டை கடந்து போவது நரக வேதனையாக இருந்தது. அன்று அவன் சுடுகாட்டைக் கடந்த சில நொடிகளிலேயே அவனின் முதுகுக்கு பின்னால் ஏதோ முள் குத்துவது போலிருக்க செல்லக்குட்டி முகத்தை திருப்பி பின்னால் பார்த்தான். அப்போது அவன் கண்ட காட்சி….. அவன் ரோமம் குத்திட்டு நிற்க உடல் கணத்தில் சில்லிட்டுப் போனது!

பின்னால் அமர்ந்து வந்த அந்த ஆசாமி கொடூரமான முகத் தோற்றத்தோடு செல்லக்குட்டியின் கழுத்தை நெறிக்கத் தயாராவது மாதிரி செல்லக்குட்டிக்கு பட்டது."அய்யோ….!!!"என்று செல்லக்குட்டி அலறிய போது கட்டுப்பாட்டை இழந்த சைக்கிள் படாரென்று மரத்தில் முட்டி கீழே விழுந்தது. தலையில் பலமான அடியோடு செல்லக்குட்டி மயங்கி வீழ்ந்தான்.

அடுத்த நாள் செல்லக்குட்டியை பேயடித்து சாய்த்து விட்டதாக பொல்கஹாகந்த தோட்டம் முழுவதும் செய்தி பற்றிக் கொண்டது. இந்த சம்பவத்துக்கு பிறகு பைக்கில் வரும் இளைஞர்கள் பலர் ரோட்டில் வீழ்ந்து கிடப்பது தொடர்கதையாகிப் போய் விட்டப் பிறகே அந்த ஊர்க்காரர்களுக்கு இது தீய சக்தியின் வேலைதான் என்பது புரிந்தது. பிறகு வீரசிங்கம் பூசாரியைத் தேடி வந்து பரிகாரம் கேட்டார்கள்.

பரிகாரம் கேட்க வந்தவர்கள் வாழும் பகுதியில் கோயில் இல்லை என்பதை தனது திருஷ்டியின் மூலம் கண்டுபிடித்த பூசாரி, அவர்களிடம் ஒரு சூலத்தை மந்திரித்து கொடுத்து. அந்த ஊரின் முச்சந்தியில் அதை நாட்டி பூஜை செய்யும்படியும், விரைவில் அந்த ஊருக்கு வந்து அந்த தீய சக்தியை ஒழிப்பதாகவும் வாக்குறுதி கொடுத்து அவர்களை வழியனுப்பி வைத்தார்.

வீரசிங்கம் பூசாரி
வந்தவர்களும் மகிழ்ச்சியுடனும் புதுத் தெம்புடனும் ஊர் நோக்கி புறப்பட்டார்கள். அவர்கள் பயணித்த வேன் மத்துகமை நகரிலிருந்து பொல்கஹாகந்த தோட்டத்துக்குள் நுழையும் போது நேரம் நள்ளிரவை தொட்டிருந்தது. அப்போது தான் அவர்கள் எதிர்பாராத அந்தச் சம்பவமும் நடந்தது. அவர்கள் பயணித்த வேனை ஓட்டிச் சென்ற சாரதி திடீரென பிரேக் போட்டு வாகனத்தை நிறுத்தினார். வண்டி குலுங்கியதில் அனைவரும் திடுக்கிட்டு முன் பக்கமாகப் பார்த்தனர். பெருத்த அதிரிச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.

ஏனெனில், அவர்கள் பயணித்த பாதை திடீரென்று காணாமல் போய்விட்டிருந்தது! வேன் சாரதி ஆடிப்போனார்! முதலில் கூச்சல் போட்டவர்கள் ஒருவாறு நிதானத்துக்கு வந்ததும் அவர்களில் ஒருவர் வீரசிங்கத்துக்கு அழைப்பொன்றை எடுத்தார். கண்ணெதிரே பாதை காணாமற் போன செய்தியைச் சொல்லி இதற்கு என்ன செய்யலாம்? என்று வீரசிங்கத்திடம் யோசனை கேட்டார்.

'ஒண்ணும் பயப்பட வேண்டாம் போனை ஸ்பீக்கரில் போடுங்கள்' என்று சொல்லிவிட்டு பூசாரி தமது மந்திர ஜாலத்தை செல்போன் வழியாக அனுப்பினார். மயான அமைதியாக கிடந்த அந்த காட்டுப் பகுதி பூசாரியின் மந்திர ஒலியில் அதிர்ந்தது.

பிறகு பூசாரியின் கட்டளைக்கு அமைய அவர் கொடுத்த திரி சூலத்தை ஒருவர் எடுத்துக் கொண்டு வாகனத்துக்கு முன்னால் நடக்கத் தொடங்கியதும் பாதை பளீச்சென்று தெரிய ஆரம்பித்தது. பிறகு வேனில் இருந்தவர்களும் அரோகரா கோஷத்துடன் ஊரின் முச்சந்தியை அடைந்து சூலத்தையும் ஊன்றி வைத்து விட்டு வீடுகளுக்குச் சென்றார்கள்.

ஒருவார அமைதிக்குப் பின் மீண்டும் அந்த ஊரில் அமானுஷ்யமான சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கின. அதற்குப் பிறகும் பொறுமை காத்து பலனில்லை என்பதை புரிந்து கொண்ட வீரசிங்கம், தீய சக்தியை சங்காரம் செய்ய நாள் குறித்தார்.

பொல்கஹாகந்த தோட்டத்தின் ஒரு பொது இடத்தில் பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. வீரசிங்கம் தனது சகாக்களுடன் மன்றில் அமர்ந்து மந்திரங்களை உச்சாடணம் செய்யத் தொடங்கினார். ஊரை பிடித்து ஆட்டும் அந்த தீய சக்தி வீரசிங்கத்திற்கு பூச்சாண்டி காட்டத் தொடங்கியது. விடுவாரா பூசாரி? தனது முழு பலத்தையும் பிரயோகித்து அந்த துஷ்ட சக்தியை மந்திரக்கட்டால் இறுக்கினார். அப்போது வீரசிங்கத்திற்கு சில உண்மைகள் புலப்படத் தொடங்கின. அந்த ஊரைப் பிடித்து ஆட்டும் ஆவியின் பெயர் ராமையா அவர்,
பொல்கஹாகந்த கீழ்ப்பிரிவில் வசித்து வந்தவர். அங்குள்ள ஒரு ஆலயத்தில் அறங்காவலர் குழுவில் முக்கிய பணியில் இருந்திருக்கிறார். சமய பணிகளில் முழு மனதோடு பணியாற்றி வந்த அவரின் பதவி திடீரென்று பறிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான ராமையா சில நாட்களில் இறந்து விட்டாராம். அதன் பிறகு ராமையாவின் ஆத்மா பேராசை அடங்காத ஆவியாக அவரின் வீட்டுக்குள் நுழைய அவரின் மனைவியும், பிள்ளைகளும் ராமையாவை வீட்டுக்குள் நுழைய விடாமல் மந்திரத்தால் எட்டு குச்சி அடித்து தடுத்து விட்டார்களாம். அதனால் ராமையாவின் ஆவிக்கு கோபம் அதிகமாக அது ஊரையே சுடுகாடாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறது.

உண்மைக் கதையை கேட்ட ஊர் வாசிகள் 'எப்படியாவது இந்த தீய சக்தியை ஒழித்துக் கட்டுங்க சாமி'ன்னு வீரசிங்கத்திடம் கோரிக்கை வைத்தனர். வீரசிங்கம் பேயை வதைக்கும் களத்தில் முழு வீச்சோடு இறங்கினார். முச்சந்தியிலிருந்து சுடுகாடு வரை ஓடி, ஓடி, விளையாட்டு காட்டிய துஷ்ட சக்தியை தீப் பந்தத்ததோடு பின் தொடர்ந்து போய் முதலில் அதன் கண்களை சுட்டு குருடாக்கி விட்டு அதனை தமது காலடியில் வீழ்த்தினார். மண்டியிட்ட பேய் பூசாரியிடம் உயிர்ப்பிச்சை கேட்ட போதும் வீரசிங்கம் அதற்கு கருணை காட்ட மறுத்து விட்டார்.

ஊர் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்காக நான் எதையும் செய்வேன் என்றவர் அதன் கதையை முடித்தார். இப்போது பொல்கஹாகந்த தோட்டத்தில் பூரண அமைதி நிலவுகிறதாம். இனி அந்த ஊருக்கு எந்த ஆபத்தும் வராது, என்றும் முச்சந்தியில் தான் மந்திரித்து வைத்த சூலம் ஊரை காக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் பூசாரி.

No comments:

Post a Comment