Monday, October 17, 2016

பெண்ணிய போராளி குட்டி ரேவதியுடன் ஒரு திறந்த உரையாடல் -4

நேர்காணல்- மணி ஸ்ரீகாந்தன்

'உண்மையாகவே களத்தில் இறங்கி பணியாற்றும் பெண்களோடு ஒப்பிடுகையில் இந்தப் பெண் படைப்பாளர்கள், ஊடகங்களில் பணியாற்றும் பெண்கள் மீதெல்லாம் எனக்கு பெரிய மரியாதை இருந்ததில்லை'

'பெண்கள் எழுந்து வந்திருக்கின்ற உயரம் சாதாரணமானதல்ல. அவர்கள் தம் மீதான ஒடுக்குமுறைகளைத் தகர்த்து அதற்கு எதிராகக் கடுமையாகப் போராடி வந்திருக்கிறார்கள்'

நீங்கள் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு பெண்ணியவாதிகளின் செயற்பாடுகள் அதாவது தமிழ்ப் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதா?

"இலக்கிய, அறிவார்ந்த தளங்களில் எனக்கு பெண்கள் மீது நிறைய மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. ஆனால் களப்பணியில் சிவகாமி அவர்களோடு வேலை செய்யும் போது அது என் வாழ்வின் பொற்காலம் போல இருந்தது. அதற்குக் காரணம், எந்த அடையாளமும் கோராமல் எந்த தன்முனைப்பும் இல்லாமல், தனக்கான அடையாளங்களை அதிகாரமாக மாற்றாமல் அவ்வளவு பெண்களும் வந்து வெயில், மழை பாராமல் வேலை செய்வார்கள். அப்படி ஒரு உழைப்பைத் தந்தார்கள். அவர்களோடு ஒப்பிடும்போது இந்தப் படைப்பாளிகள், ஊடகங்களில் பணியாற்றும் பெண்கள் மீதெல்லாம் எனக்கு பெரிய மரியாதை இருந்ததில்லை."

பெண்களை எவ்வளவுதான் படிக்க வைத்தாலும், உயர் பதவிகளை வகித்தாலும், மனைவி, குடும்பம், குழந்தை, சுற்றம் என வந்துவிட்டதும் அவளது பார்வை குறுகிப்போய் விடுகிறது அல்லவா? இந்த விசயத்தில் நீங்கள் எப்படி? என்று குட்டி ரேவதிக்கு தூண்டில் போட,

"நான் இந்த குடும்பம் போன்ற அமைப்புகளுக்கெல்லாம் ஆதரவானவள் இல்லை. இப்போதான் பெண்கள் தங்கள் குடும்பங்களிலேயே தமது உரிமையை நிலைநாட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். சொத்துரிமை எல்லாம் தமிழக பெண்களுக்குக் கிடையாது. நமது தமிழ் சமூகம் அடிப்படையான குடும்ப சொத்துரிமையைக்கூட நிலைநாட்டி விடவில்லை. இப்படி இருக்கையில் இந்த மாதிரிக் கேள்வி கேட்டால் நாம் என்ன செய்வது? எனினும் பெண்கள் பன்முக ஆளுமைகளை இப்போது எடுத்திருக்கிறார்கள். குடும்பத்தில் மனைவியாகவும் குழந்தைக்கு தாயாகவும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள். குடும்பத்துக்கு வெளியே பொதுச் சூழலில் தன் உடல், அறிவு சார்ந்த உரிமைகளை நிலைநாட்டுகிறார்கள். பொதுப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். காழ்ப்புணர்வு, வெறுப்புணர்வு கொண்ட ஆண்களோடு மோதுவதற்கும் இணக்கமான சூழலில் வேலை செய்வதற்கான தேவை இருக்கிறது. அரசியலிலும் இருக்கிறார்கள். அதாவது பெண்களின் வீச்சு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
அதனால் இப்போது இந்தமாதிரியான கேள்வி பொருத்தமானதாக எனக்குப் படவில்லை. கடந்த காலத்தோடு ஒப்பிடும்போது தமிழ்ப் பெண்கள் எழுந்து வந்திருக்கின்ற உயரம் சாதாரணமானதல்ல. அவர்கள் தம்மீதான ஒடுக்குமுறைகளைத் தகர்த்து அதற்கு எதிராகக் கடுமையாகப் போராடி வந்திருக்கிறார்கள். உண்மையிலேயே நீங்கள் உங்கள் மனைவி, அம்மா, சகோதரியை இரு கை கொண்டு அரவணைத்து அவர்களைப் போற்ற வேண்டிய காலம். இது சாதாரணமான விசயம் அல்ல. ஏனெனில் இந்திய சமூகம் என்பது பார்பனிய வெண்சரும பெண்களுக்கு அடிமையாகி அவர்கள் மீது கவர்ச்சி கொண்டு அவர்களுடைய அனைத்தையும் போற்றி வந்திருக்கிறது. ஆனால் தமிழ்ப் பெண்களுடைய உழைப்பையும் பாலியல் ஆற்றலையும், விடுதலை உணர்வையும், அவர்களுடைய பெருங் கருணையையும் இந்தச் சமூகம் கண்டுகொள்ளவே இல்லை. எனவே உண்மையிலேயே புறக்கணிக்கப்பட்டவர்கள் யார் என்றால், நம் சமூகத்து வீடுகளில் உள்ள எல்லாப் பெண்களும்தான்! நீங்கள் நினைத்திருந்தால் உங்கள் மனைவியோ, மகளோ, சகோதரியோ இந்த சமூகத்தில் பெரும் பங்கு ஆற்றக்கூடியவர்களாக மாறி இருப்பார்கள். அதற்குத் தடையாக யார் இருந்திருக்க முடியும்? கணவன் அல்லது அண்ணனாகத்தான் இருந்திருப்பார்கள். இந்தப் பெண்களுக்கு மட்டும் ஒரு வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருந்தால், போற்றப்பட்டிருந்தால் நம் சமூகத்தில் பெண்கள் பெரிய ஆளுமையாகி நமது சமூக கட்டமைப்பை மாற்றியமைத்திருப்பார்கள். இன்னும் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே நான் கருதுகிறோன்."

அரசியலுக்கு வரும் திட்டம் இருக்கிறதா?

"அப்படி இருந்தது. எனக்கு ரொம்ப பிடித்த பெண்மணி சிவகாமி அம்மாள். சமூகத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும் நீள அகலங்களையும் ஆழங்களையும் மிக அபூர்வமான தோற்றத்தில் விளக்கி புரிதல் உணர்வைக் கொடுத்தவர்தான் சிவகாமி. கடுமையாக நாங்கள் வேலை செய்தோம். ஆனால் அங்கேயும் அதிகார அமைப்பு சாதி ரீதியாகப் பார்க்கப்பட்டது. உண்மையிலேயே சிவகாமியுடன் வேலை செய்த தலித் களப் பணியாளர்களிலிருந்து என்னை தலித் அல்லாதவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு பிரிக்கப்பட்டேன். உண்மையிலேயே தலித் சமூகம் மற்றவர்களை தம்மை நோக்கி இணங்க வைக்க வேண்டும்.
தலித் சமூகம் சாதி சமூகம் இல்லையென்றால், தலித் சமூகத்தின் மீதான ஒடுக்கு முறையை நீக்க வேண்டும் என்றால், பார்ப்பனர் முதல் மற்ற சாதி இந்துக்கள் அனைவரையும் தலித்துகளுக்காக வேலை செய்ய வைக்க வேண்டும். பணிய வைக்க வேண்டும். அதுதான் தலித் முதலில் செய்ய வேண்டியது. பணிய வைக்க வேண்டாம், இணக்கத்தை முதலில் உருவாக்க வேண்டும். எனக்கு தனித் தமிழ், தனி தலித் போன்ற விடயங்களில் உடன்பாடில்லை. தலித் அல்லாத சமூகத்தில் நிறைய பெண்கள் தமது சாதிகளைத் துறந்து வர வேண்டியிருப்பதை கவனிக்க வேண்டும். அதற்குக் காரணம், அவர்கள் குடும்பங்களில் அவர்கள் சாதியே அவர்களை ஓட ஓட துரத்தியிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், பார்பனிய பெண்களும் தலித் பெண்களுக்கு இணையாகப் போராட வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். எந்தப் பார்பனிய பெண்ணும் தன்னுடைய சாதி அடையாளத்தை விட்டுட்டு வர விரும்பவில்லை. பார்ப்பன பெண்ணாக இருப்பதனால் அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகளை விட்டுக்கொடுக்க அவர்கள் விரும்புகிறார்கள் இல்லை. இப்படி எல்லா சமூகங்களிலும் நீக்கமற சாதி நிரம்பி இருக்கிறது. எனவே தலித் சமூகமும் பிரித்துப் பார்க்கும் உணர்வை கொண்டிருந்தால் அது அம்பேத்கரின் பெண்களுக்கு எதிரானது. நான் அரசியலுக்கு செல்வதாக இல்லை. கலைப்படைப்புகள் சார்ந்தது. தொடர்ந்து வேலை செய்வேன்" என்று கூறி தனது நேர்காணலை குட்டி ரேவதி நிறைவு செய்தார்.

No comments:

Post a Comment